Skip to content
Post Views: 98
அத்தியாயம் – 6
நிலவழகியின் அடுத்த நாள் காலை உண்மையில் அழகாக விடிந்திருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பின் அவளின் பிரியமான எழிலன் அனுப்பிய காலை வணக்கமே அதற்கு காரணம். இப்போதும் அவர்களின் பேராசிரியர் குழுவிற்கு தான் அனுப்பியிருந்தான். ஆனாலும் நிலாவிற்கு அவனின் நம்பரில் இருந்து மெசேஜ் என்பதே உற்சாகமாக இருந்தது.
அந்த உற்சாகத்துடன் தயாராகி வெளியே வர, “காலை வணக்கம் அம்மா” என்றபடி வந்தாள் நிலாவின் ஐந்து வயது செல்ல மகள் மஞ்சரி என்ற மஞ்சு.
“காலை வணக்கம் மஞ்சு குட்டி” எனத் தூக்கி முத்தமிட்டாள் நிலா.
Advertisement
பின்னோடு “குட் மார்னிங் செல்லக் குட்டி” என்ற நிலவனின் குரல் கேட்டது.
“குட் மார்னிங் மாமா” எனக் குரல் மட்டும் கொடுத்தவள், முகத்தைக் காமிக்கவில்லை.
“ஏன் மஞ்சு குட்டி மாமாவைப் பார்க்க மாட்டீங்களா?”
Advertisement
“நோ. மஞ்சு மாமா கூட டூ, சண்டை.” என்றாள்.
Advertisement
“ஓ. அப்போ குட் மார்னிங் சொன்னீங்க”
“யாரும் விஷ் பண்ணினா, நாமளும் பதிலுக்கு விஷ் பண்ணனும்னு அப்பா சொல்லிருக்காங்க. வேறே பேச மாட்டா மஞ்சு” என மீண்டும் பதில் கூறினாள் மஞ்சு.
“என்ன தான் நாங்க பார்த்து பார்த்து வளர்த்தாலும், அவங்களை மாதிரியே தான் பிள்ளையும் வளருது” என முணுமுணுத்தான் நிலவன். சத்தமாகப் பேசினால் மேலும் குழந்தையின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே.
Advertisement
நிலா “நல்லது தானே சொல்லிக் கொடுத்திருக்காங்க” என மெதுவாகக் கூற, நிலவன் “குழந்தையே தேவலை. நீ அதுக்கு மேலே இருக்க” என்றான்.
பின் “மஞ்சு குட்டிக்கு மாமா மேலே என்ன கோபம்?” எனக் கேட்டான் நிலவன்.
“மூன் வரும்போது மாமா வரவே இல்லை. நான் மாமா காணோம் தேடினேன்” என மழலையில் கூறியது குழந்தை.
வீட்டில் எல்லாரும் நிலவழகியை நிலா என்று அழைப்பதால், வானில் தோன்றும் நிலாவையும், நிலவழகியையும் குழந்தை குழப்பிக் கொண்டது. அதனால் இரவு நிலவை மூன் என்றும், நிலா என்றால் அம்மா என்றும் மஞ்சுவிற்கு பழக்கி இருந்தனர்.
“அடடா. மாமா மூன் வந்த பின்னாடி ரொம்ப நேரம் கழிச்சு தான் வந்தேன். நான் மஞ்சு குட்டியப் பார்த்த போது, அவளோட கிட்டி பொம்மை கூடத் தூங்கிட்டு இருந்தாளே. கிட்டியும் உஷ். மஞ்சு தூங்கறா சொன்னாளா, அதான் மாமாவும் தூங்கப் போயிட்டேன்.”
“ஓகே. அப்போ மஞ்சு மாமா கூட நோ டூ, சண்டை.” என்றபடி நிலவனின் மேல் தாவினாள் மஞ்சு.
“மஞ்சு, மாமா ஆபீஸ் போகணும். டிரஸ் கசக்காதே” என்றாள் நிலா.
“குட்டியை எதுவும் சொல்லாதே நிலா. டிரஸ் கசங்கினா, வேறே மாத்திக்கறேன்.” என்றான் நிலவன்.
நிலா ஏதோ சொல்ல வர, அதற்குள் அவளின் அன்னை, தந்தையும் வந்துவிட, சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டாள்.
தாத்தாவைப் பார்த்த மஞ்சு “காலை வணக்கம், குட் மார்னிங் தாத்தா, பாட்டி” என்றாள்.
மஞ்சு பொதுவாக தமிழில் தான் காலை வணக்கம் கூறுவாள். அப்படித் தான் எழிலனும், அவனின் பெற்றோர்களும் பழக்கி இருந்தனர். நிலவன் மட்டுமே ஏட்டிக்குப் போட்டியாக குட் மார்னிங் என்பான். முதலில் குழந்தை தடுமாறினாலும், நிலா தான் மாமாவும் காலை வணக்கம் தான் கூறுகிறார் எனப் பொறுமையாகக் குழந்தைக்குப் புரிய வைத்தாள். அதற்கு பின் புதிதாகக் கற்றுக் கொள்ளும் எல்லா வார்த்தைகளும் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் பேசக் கற்றுக் கொண்டாள் மஞ்சு.
இதைக் கண்டு நிலாவின் பெற்றோர் இருவருக்கும் தங்கள் பேத்தி இந்த வயதில் இத்தனைப் புத்திசாலியாக இருக்கிறாள் என்ற பெருமிதம் நிறைய இருந்தது.
குழந்தையிடம் “காலை வணக்கம்டா செல்லக் குட்டிமா. இன்னிக்குக் காலையிலேயே மாமா கூட சண்டையா?” எனக் கேட்டார் நிலாவின் தாத்தா அதியமான்.
“நா மாமா கூட நோ டூ, நோ சண்டை சொல்லிட்டேனே” என்றாள் மஞ்சு.
“சமத்துக் குட்டி. சரி வா பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்” என அழைத்தார் அவளின் பாட்டி தேன்மொழி.
“ஓகே. பாட்டி இன்னிக்கு பிரேக்பாஸ்ட் ஆல் டன் பண்ணுவா மஞ்சு. எனக்கு சாக்கி வேணும்”
நிலா “மஞ்சு, டெய்லி சாக்கி நோ.” எனக் கூற, அதியமான் இடைப் புகுந்தார்.
“நிலாமா, ஒரு சின்ன பீஸ் தானே. ஒண்ணும் பண்ணாது. டோன்ட் வொர்ரி” என்றார்.
நிலா “அப்பா சாக்லேட் நல்லது இல்லைனு நிறைய வீடியோஸ் பார்க்கறேன். அதான்” என மெதுவாகத் தயங்கிக் கூறினாள்.
உடனே நிலவன் “ஃபேக் வீடியோஸ் நிறைய வருது நிலா. வியூஸ்காக எல்லாருமே பொய் சொல்றாங்க. அதை அப்படியே நம்பணும்னு இல்லை. சரியா” என்றான்.
நிலா “ம். சரி” எனக் கூறிவிட்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றாள்.
நிலாவின் மனதில் லேசாகப் பயம் வந்தது. தன்னைப் போல தன் மகளும் வெளி உலகம் தெரியாமல் தான் வளர்கிறாளோ எனத் தோன்றியது. ஆனால் தன் அண்ணனைக் கேட்கும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவில்லை.
நிலா எப்போதும் அப்படிதான். குடும்பம் தான் அவளின் பலம், பலவீனம் இரண்டுமே. நிலா கேட்கும் எதுவும் அவளுக்குக் கிடைக்கும். கேட்காததும் கிடைக்கும். அத்தனைப் பாசமானவர்கள் நிலாவின் குடும்பத்தினர்.
அதிலும் நிலவன், எல்லோரையும் விட அதிகமாகவே அவளுக்குச் செய்வான். பள்ளிக்குச் செல்லும்போதும், அவனோடு சென்று விட்டுத் திரும்பி விடுவாள். நிலவன் நான்கு வயது பெரியவன் என்ற போதிலும், தன் வயதை ஒத்தவர்களோடு விளையாடச் செல்வது என்றாலும், நிலாவைப் பத்திரமாக வீட்டில் விட்ட பின் தான் செல்வான்.
நிலவனின் இந்த அதிகப்படியான அக்கறை தான் நிலவழகியின் வாழ்க்கையில் பல சங்கடங்களைக் கொடுத்தது. ஆனால் அவனின் நோக்கத்தில் தவறு என யாராலும் கூற முடியாது. அதை அவனே உணர்ந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
நிலவன் அப்படி உணர்ந்த தருணங்களும் உண்டு. அதனால் தான் நிலாவின் வாழ்க்கையில் தலையிட்ட அளவு, மஞ்சுவிடம் தன் எண்ணங்களை நிலவனால் அப்படியே காண்பிக்க முடியவில்லை.
மஞ்சு தன் தந்தையோடு பேச வேண்டும் என்று கேட்டதற்காக ஸ்மார்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்திருந்தான் மருமகளுக்கு.
ஒருமுறை மஞ்சு எழிலனைக் காணச் சென்றிருந்த போது, அவனின் மாணவர்கள் சிலரை எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் எழிலனைக் கண்டதும் காலை வணக்கம் எனக் கூற, மஞ்சு அப்படினா என்ன எனக் கேட்டாள். அவர்கள் தமிழ் படிக்கும் மாணவர்கள். அந்தப் பழக்கத்தில் தமிழில் வாழ்த்தினர்.
எழிலன் குழந்தைக்குப் புரிய வைத்தான். அன்றிலிருந்து மஞ்சுவிற்கு காலை வணக்கம் சொல்லும் பழக்கம் வந்தது. வீட்டில் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள் குழந்தை. ஒரு நாள் அப்பாக்கும் நான் சொல்லணும்னு கேட்கவே, இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தான் நிலவன்.
அதில் மஞ்சு தன் அப்பாவிடம் காலை வணக்கமும், இரவு வணக்கமும் தினமும் கூறி வருகிறாள். மற்ற நேரங்களில் தாத்தா, பாட்டி மொபைல் மூலம் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கிறாள்.
ஐந்து வயது குழந்தைக்கு அது தேவையில்லை என நிலா கூற, அதில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களை எடுத்துக் கூறியதோடு, மஞ்சு தன் தந்தையோடு பேசுவதற்காக, மற்ற யாரும் அவரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இந்த வாட்ச்சை குழந்தைக்குக் கொடுத்திருந்தான் நிலவன்.
நிலா மட்டுமல்ல, மஞ்சுவின் தந்தையும் இந்த வாட்ச் எல்லாம் தேவையில்லை என நேரடியாக நிலவனிடமே கூடக் கூறினான். ஆனால் நிலவன் தன் மருமகளுக்கு நான் வாங்கித் தருகிறேன். அதில் யாரும் தலையிடத் தேவையில்லை என எடுத்தெறிந்து பேசி விட்டான்.
ஐந்து வயது மஞ்சுவிற்கு தன்னுடையதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள இருக்கும் திறமை இருபத்தி ஏழு வயதாகும் நிலாவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிலாவும் அமைதியான சுபாவம் உடையவள். அத்தனை எளிதில் யாருடனும் பழக மாட்டாள். அதற்காக எல்லோரோடும் சண்டையும் போட மாட்டாள். அவளிடம் வந்து பேசுபவர்களுக்கு பதில் கூறுவாள். அதற்கு மேல் நெருங்கியது இல்லை.
தற்போது ஆதிரா மட்டுமே நெருங்கிய தோழி என்ற வட்டத்திற்குள் இருக்கிறாள். அதுவும் கல்லூரி பேருந்தில் செல்லும்போது ஏற்பட்ட நெருக்கம் தான். அதனால் தான் அந்த வம்பர் மகா சபையில் கூட நிலாவை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை.
அன்றைய காலை உணவு நிலாவின் வீட்டில் குழந்தையின் மழலைப் பேச்சால் எல்லோருக்குமே உற்சாகமாகக் கழிந்தது.
காலை உணவு முடிந்த பின், நிலாவின் அன்னை தேன்மொழி தன் பேத்தியை அவளின் நர்ஸரிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
மஞ்சு பள்ளிக்குக் கிளம்பிய பின் தன் தந்தையிடம் திரும்பிய நிலவன் “அப்பா, நிலா சொல்றது கரெக்ட் தான். இப்போ எல்லாம் ஒயிட் சுகர் கன்டன்ட் ஃபுட் எதுவும் அட்வைஸபிள் இல்லைனு டாக்டர்ஸ் சொல்றாங்க. மஞ்சுக்கு சாக்லேட் அவாய்ட் பண்ணுங்க” என்றான்.
“வீட்டில் செய்யற கேன்டி தானே நிலவன். மற்றபடியும் இம்போர்டட் சாக்லேட் தானே கொடுக்கறோம்.”
“அப்பா. சுகர் வேண்டாம்னா கேளுங்க. பதிலா கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய்னு வெல்லம் சேர்த்துக் கொடுத்துப் பழகுங்க.”
“நீ இப்போ தானே நிலாக்கு அது எல்லாம் ஃபேக்னு சொன்ன. இப்போ நீயே இப்படிப் பேசற”
“நிலா சின்னதா குழந்தைக்கு ஏதும் வந்தா கூட பயப்படுவா. அதான் தைரியத்திற்கு அப்படிச் சொன்னேன். அதோட நிலா கிட்டே நமக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா மஞ்சு நம்ம பொறுப்பில் இருந்தாலும், அவங்க வீட்டு வாரிசு தான். அதில் சின்ன தப்பு நடந்தாலும், அவங்களுக்கு நாம பதில் சொல்லணும். அதனால் ரெண்டு மடங்கு கவனமா இருக்கத் தான் இது எல்லாம் சொல்றேன்” என்றான் நிலவன்.
“சரிப்பா. அம்மா கிட்டே சொல்லி வைக்கிறேன்” என்றான் அதியமான்.
இதுதான் நிலவன். அவனுக்குச் சரி என்று தோன்றுவதை எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்துவிடுவான். அதே சமயம் அவன் வேண்டாம் என்று நினைத்து விட்டால் அதையும் சாதித்து விடுவான். வளைந்துக் கொடுப்பது அவன் வரலாற்றில் கிடையாது.
-தொடரும் –
error: Content is protected !!