நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-27
அத்தியாயம் – 27
” விழும் தரையும், தகரக் கூரையும், முறியும் மரக்கிளையும், ஒயாத தவளையும் அல்ல. பெய்து ஒய்ந்த பின்னும் விரவுகிற குளிரில் மனதில் எழும் நிரவல், மழையின் குரல். அது காதல்!”
ஸ்டட்கார்ட்டிலிருந்து கிளம்பிய விமானம், மேகங்களைச் சீவிக்கொண்டு பறந்தபோது ஆதிரையின் மனமும் அதே வேகத்தில் அலைபாய்ந்தது. ஸ்டட்கார்ட் டூ பிராங்க்ஃபர்ட், அங்கிருந்து மும்பை வழியாகச் சென்னை… ஒவ்வொரு டிரான்ஸிட் நேரத்திலும் ஆதிரையின் கண்கள் கடிகார முட்களைத் தள்ள முயன்றன. மும்பை விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அந்தப் பெருநகரத்தின் இரைச்சல் அவளுக்குக் கேட்கவில்லை. அவளுக்குள் ஒலித்தது ஒன்றே ஒன்றுதான் ..”மித்ரன்!”
Advertisement
சென்னை மண்ணைத் தொட்டபோது, அந்த உஷ்ணமான காற்று அவளை அணைத்தது. ஆனால் அவளது இலக்கு இன்னும் சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது. அங்கிருந்து மதுரை நோக்கிய அந்த உள்நாட்டுப் பயணத்தின் கடைசி நிமிடங்கள். விமானம் மெல்லத் தாழ்ந்து இறங்கி, மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தைத் தொட்டது. ஆதிரையின் இதயம் அவளது கட்டுப்பாட்டை மீறித் துடித்தது.
விமான நிலையத்தின் வருகை முனையத்தின் தானியங்கி கதவுகள் மெல்லத் திறந்தன. வெளியே திரண்டிருந்த கூட்டத்தில் அவள் தன் ‘ஒற்றைத் திடத்தை’ – மித்ரனைத் தேடினாள். அங்கே… ஒரு தூணில் சாய்ந்தபடி, எப்போதும் போல அந்த வான நீலச் சட்டையில், ஆழமான மௌனத்தைச் சுமந்த கண்களுடன் மித்ரன் நின்று கொண்டிருந்தான்.
அவளைப் பார்த்ததும் மித்ரனின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது. ஆதிரைக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது. இத்தனை காலம் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருந்தாலும், அந்தத் தருணத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் முதல்முறையாகச் சந்திக்கும் புதிய காதலர்களைப் போல உணர்ந்தனர். ஆதிரையிடம் இப்போது புகார்களின் பட்டியல் இல்லை. ஏக்கங்களின் சுமை மட்டுமே இருந்தது!
Advertisement
தனது ட்ராலி பையை அப்படியே விட்டுவிட்டு, ஆதிரை ஓடிச் சென்றாள். “மித்ரன்!” என்று அவளது இதயம் கதறியது. அருகில் வந்ததும், மித்ரன் அவளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் ஒரு பாதுகாப்பு, ஒரு மன்னிப்பு இருந்தது, காதல் இருந்தது… என்னவெல்லாமோ இருந்தது!
Advertisement
இருவரும் பேசவில்லை. கண்களால் பேசிக்கொண்டனர். ஆதிரையின் கண்கள் அருவியெனக் கொட்டின. மித்ரனின் இமைகளும் நனைந்திருந்தன. அந்தப் பாறையின் அடியில் ஊற்றெடுக்கும் ஈரம் இன்று கசிந்து வெளியேறியது. அவளது தலையை வருடியபடி, அவளது கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தான்.
மித்ரன் அவளது கையை இறுகப் பற்றிக்கொண்டான். அந்தப் பிடியில் ஒருபோதும் தளராத உறுதி இருந்தது. மதுரை வீதிகளில் கார் கடந்தபோது, அந்த மண்ணின் வாசம் ஆதிரைக்கு ஒரு புதிய தெம்பைத் தந்தது. மித்ரனின் வீட்டிற்குள் நுழைந்ததும், “அம்மா!” என்ற குரலோடு கண்மணி ஓடி வந்தாள்.
ஆதிரை அப்படியே மண்டியிட்டுத் தன் மகளைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது பிஞ்சு முகமெங்கும் முத்தங்களை மழையாகப் பொழிந்தாள். “கண்மணி… சமத்துப் பிள்ளையா இருந்தியாடா?” என்று கேட்க, கண்மணி அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு “நிச்சயமா!” என்று தலையாட்டினாள்.
Advertisement
அப்போதுதான் அங்கே கவின் ஓடி வந்தான். கவினின் முகத்தைப் பார்த்த ஆதிரை ஒரு நொடி சிலையாக நின்றாள். அந்தப் பிஞ்சு முகத்தில் சந்தியாவின் சிரிப்பு, லீயின் தீர்க்கம், பேராசிரியரின் மேதைமை என மூவருமே தெரிவதைப் போல அவளுக்குத் தோன்றியது. ஆதிரை அவனை இழுத்து அணைத்து, அவனது நெற்றியில் ஒரு நீண்ட முத்தமிட்டாள். அது ஒரு தாயின் முத்தம்.
ஜெர்மனி பயணத்தைப் பற்றி அனைவரும் ஆவலாகக் கேட்க, ஆதிரை தான் கொண்டு வந்திருந்த பெட்டிகளைத் திறந்தாள். ஸ்டட்கார்ட்டின் புகழ்பெற்ற சாக்லேட்டுகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.
பேராசிரியர் தாத்தா தன் பேரனுக்காகக் கொடுத்தனுப்பிய அந்தப் பெரிய பெட்டியை கவினிடம் கொடுத்தாள். அதில் ஒரு அழகான மரத்தாலான ரயில் பெட்டியும், பழைய கிட்டார் ஒன்றும் இருந்தன. லீ ஒரு காலத்தில் வாசித்த கிட்டார் அது… மித்ரனின் கண்கள் பளபளத்தது… அதை மெல்ல நீவிப் பார்த்தான்..கவின் அதைப் பார்த்து வியந்து போனான். கண்மணிக்குத் தாத்தா ஒரு அழகான பட்டுப்பாவாடை மாதிரியான ஜெர்மன் நாட்டுப் பாரம்பரிய உடையைப் பரிசளித்திருந்தார்.
“இதெல்லாம் அந்தத் தாத்தா உங்களுக்காகவே பார்த்துப் பார்த்து வாங்கியது,” என்று ஆதிரை சொல்லும்போது, அவளது கண்கள் மித்ரனைத் தழுவின. மித்ரன் அந்தப் பெட்டிகளைப் பார்த்தபோது, தனது கடந்த காலம் இப்போது கசப்பாக இல்லாமல், ஒரு இனிமையான நினைவாக மாறுவதை உணர்ந்தான்.
நிறைய நிறைய சாக்லேட்டுகள்… அங்கே ஒரு அட்டையும் இருந்தது. அதில், “என் செல்லப் பேரனுக்கும் பேத்திக்கும் முத்தங்கள்…” என்று எழுதியிருந்தது.
“சீக்கிரம் உங்களை வந்து பார்ப்பேன்” – என்ற அந்த வரிகளைப் பார்த்ததும் மித்ரனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ஆதிரை பேராசிரியரிடம் தீர்க்கமாகப் பேசி, அவரை இந்தியாவிற்கே வரக் கூறி அவரிடம் சம்மதம் வாங்கியிருந்தாள்.
“அப்படியா? அவர் இந்தியா வரச் சம்மதிச்சுட்டாரா?” என மித்ரன் நம்பமுடியாமல் கேட்க, “யெஸ்!” என்றாள் ஆதிரை பெருமிதம் பொங்கும் புன்னகையுடன்.
“அவரோட தனிமைக்கு இதுதான் மருந்தும்னு நான் அவருக்குப் புரிய வச்சேன்,” என்று அவள் சொல்ல, மித்ரன் அவளது கைகளை நன்றியோடு அழுத்திக் கொண்டான். ஒரு மாபெரும் முதியவரின் வாழ்வில் ஒளியேற்றிய திருப்தி அவர்கள் இருவர் முகத்திலும் மின்னியது.
அன்று அந்த வீடு முழுவதும் ஒரு அமைதியான மகிழ்ச்சி நிலவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான குடும்பமாக அவர்கள் அமர்ந்து உணவு உண்டனர். ஆதிரையும் மித்ரனும் உணவருந்தும்போது அடிக்கடி கண்களால் சந்தித்துக் கொண்டனர்.
ஆதிரை தன் கணவனைப் பார்த்தாள். மித்ரனும் அவளைப் பார்த்தான். ஆதிரை இப்போது இன்னும் முதிர்ச்சியாக, ஒரு தெளிந்த நீரோடையாகத் தெரிந்தாள். தன் மௌனத்தைப் புரிந்துகொண்ட அவளது அந்தப் பார்வையே அவனுக்குப் பெரிய மருந்தாக இருந்தது.
ஆதிரை கொண்டு வந்த ஜெர்மன் சாக்லேட்டுகளின் சுவையில் கவினும் கண்மணியும் திளைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அத்தை அந்த ‘அணுகுண்டை’ வீசினார்.( நமக்கு அது sweet bomb…haha)
“மித்ரன், ஆதிரை… நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். ஆதிரை ஜெர்மனியில இருந்து வந்த சந்தோஷத்துல, நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் ஒரு விசேஷ பூஜை பண்ணிட்டு வரணும்னு நேத்து ராத்திரி வேண்டிக்கிட்டேன். அதுவும் இல்லாம, கவினையும் கண்மணியையும் கூட்டிட்டு அப்படியே என் தம்பி வீட்டுக்கு பக்கத்து ஊர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் கோவிலில் திருவிழா விசேஷத்துக்காகப் போய் தங்கிட்டு வரலாம்னு இருக்கேன்.”
“நம்ம கண்மணி குட்டி நம்ம ஊர் சித்திரைத் திருவிழா பார்க்கல்லைல… இதைக் கண்டிப்பா பார்க்கணும் பிள்ளைங்க,” என்று அழுத்திச் சொன்னார்.
மித்ரன் ஆச்சரியமாகப் பார்த்தான். “இப்போ எதுக்கு மா… ஆதிரை இப்பதானே வந்திருக்கா?”
அத்தை ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன் அவனைப் பார்த்தார். “அதான்டா நானும் சொல்றேன். அவ இப்பதான் வந்திருக்கா, ரொம்பக் களைப்பா இருப்பா. இந்த ரெண்டு வால்களையும் வச்சுக்கிட்டு அவளால ஒரு நிமிஷம் கூட ஓய்வு எடுக்க முடியாது. அதனால நான் இவங்களை ஒரு ரெண்டு நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன். ஆதிரை மெதுவா பேக்கிங் எல்லாம் பிரிச்சு, நல்லாத் தூங்கி எழட்டும். நீயும் அவளுக்கு ஒத்தாசையா இரு,” என்றார் அத்தை.
“பசங்களா நீங்க போறீங்களாடா?” என ஆதிரை கேட்க, “அதெல்லாம் நேத்தே பசங்கள்கிட்ட சொல்லிட்டேன்மா… நீ வேணா கேட்டுப் பாரு,” என்றார் அத்தை. கண்மணி “அம்மா ஜஸ்ட் ரெண்டு நாள் நாங்க ஓடி வந்துடுவோம்” என, பின் என்ன… அத்தையின் தம்பி அனுப்பிய வண்டியும் வர, வீட்டினில் இவர்கள் இருவர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.
திடீரென்று அந்தப் பெரிய வீடு நிசப்தமானது. சுவர்களின் கடிகாரத் துடிப்பு கூட இப்போது சத்தமாகத் தெரிந்தது. ஆதிரையும் மித்ரனும் ஹாலில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.
“மித்ரன் என்னை எங்கேயாவது தூரமா… உயரமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்களேன்…”
மித்ரன் ஆதிரையின் கண்களைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு புதிய தேடல் இருந்தது. ஸ்டட்கார்ட் கோபுர உச்சியில் அவள் கண்ட அந்தத் தெளிவு, இப்போது அவளை இன்னும் உயரமான, அமைதியான ஓரிடத்திற்கு அழைத்துச் செல்லத் தூண்டியது.
“நிச்சயமா ஆதிரை… உனக்கு இப்போ தேவைப்படுறது இந்த உலகத்தோட இரைச்சல் இல்லாத ஒரு அமைதி. வா, நாம போவோம்,” என்றான் மித்ரன்.
அவர்கள் , மலைகளின் இளவரசி, கொடைக்கானல்யைத் தேடிப் பயணமானார்கள்.
மதுரையிலிருந்து கிளம்பிய கார், வத்தலகுண்டு கடந்து மலைப்பாதையில் ஏறத் தொடங்கியபோது, காற்றின் தட்பவெப்பம் மாறத் தொடங்கியது. ஜன்னல் வழியே நுழைந்த அந்த ஈரமான மேகங்கள் ஆதிரையின் முகத்தைத் தழுவின.
“மித்ரன்… இதோ இந்தப் பனிமூட்டம், அப்படியே ஜெர்மனியை ஞாபகப்படுத்துது. ஆனா அங்க நான் தனிமையில இருந்தேன், இப்போ நீங்க கூட இருக்கீங்க.” என்றாள் ஆதிரை அவன் தோளில் சாய்ந்தபடி.
அவர்கள் தங்கியிருந்தது ஒரு தனிமையான காட்டேஜ். சுற்றிலும் யூகலிப்டஸ் மரங்களின் வாசம். இரவில் நெருப்பு மூட்டி, அதன் வெளிச்சத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர். மித்ரனின் தோளில் சாய்ந்திருந்தாள் ஆதிரை. மித்ரனின் கைகள் அவளது தோளைச் சுற்றி ஒரு கவசமாக இருந்தன.
ஆதிரை மெல்லத் தலை நிமிர்ந்து மித்ரனின் கண்களைப் பார்த்தாள். “மித்ரன், நமக்கிடையில ஒரு மூணு விஷயம் பாக்கி இருக்கு…”
மித்ரன் மெலிதாகச் சிரித்தான். “ஆஹா.. மை குயின்! இன்னும் கண்டிஷன்ஸ் தீரலையாடி என் செல்லப் பொண்டாட்டி?
“இல்லை.. இது கண்டிஷன் இல்லை, கணக்கு! Number 1, ஒண்ணு நீங்க எனக்குக் காட்டணும்! number 2 இன்னொன்னு நீங்க எனக்குச் சொல்லணும்! number 3 மூணாவது நான் உங்களுக்கு ஒண்ணு சொல்லணும்.”
மித்ரன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, “சரி சொல்லுடா.. முதல்ல நான் என்ன காட்டணும்?” நான் என் நெஞ்சைப் பிளந்து அனுமார் மாதிரி உள்ள யாரு இருக்கான்னு காட்டவா… என்ன?” என்று மித்ரன் ஆதிரையை ஆழமாகப் பார்த்து, அவன் கைகளைத் தன் மார்பில் வைத்துக் கேட்டான்.
ஆதிரை அவன் நெஞ்சில் செல்லமாக ஒரு குத்து விட்டாள்.
அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். “இல்ல.. நீங்க சந்தியாகிட்ட என்னைப் பத்தியெல்லாம் சொல்லி வச்சிருக்கீங்க, அதெல்லாம் சரி. ஆனா நீங்க யு.எஸ் (US) போறப்போ நாம ஒண்ணும் பெருசா பேசிக்கல, பழகலையே… நான் தான உங்க பின்னாடி உருகி உருகி சுத்திட்டு இருந்தேன்.. நீங்க அம்போனு ‘முடிச்சுட்டு வா, காத்திருக்கேன்’னு மட்டும் தானே பேசினீங்க? அப்படி இருக்கும்போது நீங்க சந்தியாகிட்ட என் போட்டோவை எப்படிக் காமிச்சீங்க? அதுவும் என்னோட எந்த போட்டோ அது?”
மித்ரன் ஒரு கணம் மௌனமானான். அந்த மௌனத்தில் ஒரு நீண்ட தேடலும், சொல்லப்படாத காதலும் இருந்தன. அவன் மெல்லத் தன் அலைபேசியை எடுத்தான். அதன் கேலரியில் ஒரு பழைய ஃபோல்டரைத் திறந்தான்.
அதில் ஒரு புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆதிரை ஒரு நொடி மூச்சடைத்துப் போனாள்.
அது ஒரு பொன் மாலை நேரம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் அந்த நீண்ட சாலை. ஓரங்களில் வரிசையாக நிற்கும் பன்னீர் மரங்கள். ஆதிரை வெண்ணிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செந்நிறப் பூக்கள் சிதறி விடப்பட்டது போல அச்சுப் பதித்திருந்த சுடிதார் அணிந்திருந்தாள், தன் சைக்கிள் முன் கூடையில் அந்த வெண்ணிறப் பன்னீர் பூக்களை நிரப்பி வைத்திருந்தாள். அவள் பின்னணியில் அந்தி வானத்தின் நீல நிறத்திற்குத் துணையாக ஒரு மெல்லிய நிலவு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஹேய்… இதை எப்போ எடுத்தீங்க?” என்று ஆதிரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் கூவினாள். “அன்னைக்கு ரோடை விலைக்கு வாங்கிட்டீங்களான்னு நீங்க என்கிட்ட வம்பு பண்ணின அதே நாள் இல்ல இது?”
மித்ரன் குறும்பாகச் சிரித்தான். “அன்னைக்கு உன்னை முதன்முதலா பார்த்தப்பவே விழுந்துட்டேன்டீ… உன் பின்னாடி இருந்த அந்த நிலவெல்லாம் அவுட் ஆஃப் போகஸ்ஆகிடுச்சு தெரியுமா? என் கேமராவுக்கும் கண்ணுக்கும் நீ மட்டும்தான் போகஸ்ல இருந்த!”
ஆதிரை அவன் கைகளைத் தட்டிவிட்டுச் சிரித்தாள். “ஹேய்… சும்மா கதை விடாதீங்க! எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, , நீங்க வந்து வம்பு இழுத்தீங்க!”
மித்ரன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். “அது வம்பு இல்லை ஆதிரை… அது ஒரு வசீகரம். அந்தப் பன்னீர் பூக்களோட வாசம் உன் மேல வீசுனப்போ, இந்த மித்ரன் மொத்தமா காணாம போயிட்டான். அன்னைக்குக் காலேஜ் முடிஞ்சு எல்லாரும் கிளம்பின அப்புறம், நீ அந்த நிலவோட நிழல்ல நின்ன அந்த ஒரு நிமிஷம்… என் வாழ்க்கையில நான் பார்த்த மிக அழகான காட்சி அதுதான். அதை என் போன்ல மட்டும் இல்ல, என் மனசுலயும் அப்பவே ‘சேவ்’ பண்ணிட்டேன்.”
ஆதிரை அவன் மார்பில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் சாய்ந்துகொண்டாள். “ம்ம்… ஒரு கண்டிஷன் தாண்டியாச்சு. அடுத்தது நீங்க எனக்குச் சொல்ல வேண்டிய விஷயம்… சொல்லுங்க மித்ரன்… சந்தியா லீயை அந்தப் பார்ல கிட்டார்ம் கையுமா பார்த்த உடனே இம்ப்ரஸ் ஆகிட்டாங்கன்னு சொன்னீங்க. ஆனா, அவங்களுக்குள்ள எப்போ காதல் முகிழ்ந்துச்சு? அதை நீங்க தான் சொல்லணும்…”
மித்ரன் ஒரு கணம் அமைதியானான். அவனது இதழ்களில் ஒரு மெல்லிய, அழகான இளநகை அரும்பியது. அவன் பார்வையைத் தூரத்தில் தெரிந்த அந்தப் பனிமலைகளின் மீது படரவிட்டான்.
“அவங்க லவ்வை என் வாயால நீ கேட்கணுமா?” என்று அவன் ஒருவிதக் குறும்புடன் கேட்க, ஆதிரை “ம்ம்…” என்று தலையசைத்து அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“அப்போ நீ எனக்கு முதல்ல ஒரு இச்சு தா…” என மித்ரன் கண் சிமிட்ட, ஆதிரை வெட்கத்தில் சிவந்தாள். இருந்தாலும், மெல்ல அவன் அருகே நகர்ந்து அவனது கன்னத்தில் இதமாக ஒரு முத்தம் பதித்தாள்.
மித்ரன் குறும்பாகத் தன் கன்னத்தைத் தடவிக்கொண்டே, “பத்தாதுடீ… கதை சொல்லிட்டு வச்சுக்கிறேன் இரு!”
“அன்னைக்கு பார் (Bar)-க்கு அப்புறம், சரியா ரெண்டு நாள் கழிச்சு நானும் சந்தியாவும் அந்த ஸ்பெஷல் சில்ட்ரன் ஹோம் க்கு போனோம்…”
ஆதிரை நிமிர்ந்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். “யெஸ்… டாக்டர் கவினோட ஸ்கூல். அங்கே சந்தியா பார்த்தது அந்தப் பார்ல இருந்த ஆக்ரோஷமான லீயை இல்லை. அங்கிருந்தது வேறொரு லீ! அந்த வெண்மையான முகத்துல வியர்வை வழிய வழிய அந்தச் சாம்பல் நிறக் கண்களைச் சிமிட்டி சிமிட்டி, அவன் அந்த கிட்டாரோடு உரையாடிட்டுருந்தான், ஒவ்வொரு தந்தியை அவன் மீட்டும்போதும் மென்மையா, தெய்வீகமா அங்கே இசை வழிந்தோடியது.
” அந்தப் பிள்ளைகளோட உலகத்துல, லீ அவங்களுல ஒருத்தனா இருந்தான். அவனோட அந்த கிட்டார் இசை அன்னைக்கு ஒரு மருந்தா மாறி அந்தப் பிஞ்சு மனசுகளை ஆற்றுப்படுத்திட்டு இருந்தது. அதைப் பார்த்த உடனே சந்தியா டோட்டல் பிளாட்! அவளுக்குள்ள லீயைப் பத்தின பிம்பம் அடியோடு மாறிடுச்சு. “ஐ அம் கம்ப்ளீட்லி, சோலம்லி ஆல் யுவர்ஸ்” னு, அவள் தன் இதயத்தை மொத்தமாக அவனிடம் பறி கொடுத்திட்டா.”
“ஆனா லீ சார்… அவர் வேற சிந்தனையில இருந்தார்,” என்று மித்ரன் அந்த கதை சொல்லத் துவங்கினான்.

