Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ தண்நிழல் நான்…-28

அத்தியாயம் -28

“சுழல் கடந்திடும் பயணமதன் தழல் பகலில் ஒரு பிடி நிழல்.  இருள் புனலில் மிதவையில் ஒரு சிறு அகல் …காதல்.”

அன்று சான் பிரான்சிஸ்கோவின் அந்த மாலைப் பொழுது, வானம் ஒரு சாம்பல் நிறப் போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தது. மேகங்கள் கருத்தரித்து, எந்தக் கணமும் பிரசவிக்கக் காத்திருந்தன. பல்கலைக்கழக லேப் வாசலில் மித்ரனும் சந்தியாவும் நின்றிருந்தார்கள். மித்ரனின் ஸ்கூட்டர் இன்று ஏனோ மக்கர் செய்துகொண்டிருந்தது. பலமுறை கிக் செய்தும், அது ஒரு இருமலை மட்டும் உதிர்த்துவிட்டு மௌனமானது.



Advertisement

“என்னடா மித்ரன், இன்னைக்குப் இப்படி ஆயிடுச்சு!?” என்று சந்தியா கவலையோடு கேட்டாள்.

அப்போதுதான் லீ தன் கருப்பு நிற மோட்டார் பைக்கில் அங்கே வந்து நின்றான். ஹெல்மெட்டை நீக்கியபோது, அவனது முடி காற்றில் கலைந்து விழுந்தது. அவன் கண்களில் எப்போதும் இருக்கும் அந்த ஒருவித முரட்டுத்தனம் அப்படியே இருந்தது. மித்ரனையும் சந்தியாவையும் பார்த்தவன்,

“ஸ்கூட்டர் பிராப்ளமா?” என்று கேட்டான்.

Advertisement

“ஆமா லீ, ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. சந்தியாவை ஹாஸ்டல்ல விடணும்,”

Advertisement

லீ ஒரு நொடி யோசித்தான். பிறகு சந்தியாவைப் பார்த்து, “நான் டிராப் பண்றேன். ஏறு,” என்றான். அவனது குரலில் ஒரு உத்தரவு இருந்தது. சந்தியா தயங்கினாள். லீ-யின் அந்த ‘டெரர்’ லுக் அவளை எப்போதும் ஒருவித அச்சத்திலேயே வைத்திருந்தது. ஆனால், உள்ளுக்குள் அவனது அந்த இசை மேஜிக் அவளை ஈர்த்துக்கொண்டே இருந்தது.

“போ சந்தியா, நான் இதை மெக்கானிக் கிட்ட தள்ளிட்டுப் போறேன்,” என்று மித்ரன் சொல்ல, சந்தியா மெல்ல லீ-யின் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

பைக்கின் வேகம் அதிகரித்தது. முதல் நூறு மீட்டர் எதுவும் பேசவில்லை.. சான் பிரான்சிஸ்கோவின் சாலைகளில் குளிர்ந்த காற்று வீசியது. திடீரென மேகங்கள் உடைந்து மழை கொட்டத் தொடங்கியது. மழை இரண்டு பேரையும் நனைத்துக்கொண்டிருந்தது. காற்று முகத்தில் அடித்தது அந்தப் பனிக்கால மழை உடலை ஊசியால் குத்துவது போல இருந்தது. லீ பைக்கை இன்னும் வேகமாக ஓட்டினான். காற்றின் வேகமும், மழையின் சத்தமும் அவர்களுக்குள் ஒரு விசித்திரமான மௌனத்தை உருவாக்கின. சந்தியாவுக்கு லீ-யின் தோள்கள் மிக அருகில் இருந்தன. அந்தத் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல ஒரு ஏக்கம் அவளுக்குள் பிறந்தது, ஆனால் ‘அவன் ஒரு முரடன்’ என்ற எண்ணம் அவளைத் தடுத்தது.

Advertisement

திடீரென ஒரு வேகத்தடை. லீ அதை எதிர்பார்க்கவில்லை. பிரேக்கை அழுத்திய வேகத்தில், சந்தியா முன்னால் தள்ளினாள்.

பைக் ஒரு கணம் ஆடியது. நிலைதடுமாறியது. வழுக்கும் சாலையில் பைக் ஒரு பக்கமாகச் சாய, இருவரும் கீழே விழுந்தார்கள். ஆனால் லீ-யின் சுதாரிப்பு அதிகம். அவன் சந்தியாவைத் தாங்கிப் பிடித்தபடி கீழே விழுந்தான்.

தார்ச் சாலையில் விழுந்த அந்த நொடியில், சந்தியா லீ-யின் மீது கிடந்தாள். லீ-யின் முகமும் சந்தியாவின் முகமும் மிக அருகில் இருந்தன. மழையின் துளிகள் அவர்கள் இருவருக்கும் நடுவே பாலமாக விழுந்தன. லீ அவளைப் பார்த்தான். அவள் கண்களில் இருந்த அந்த மிரட்சி… லீ-யின் இதயம் முதன்முறையாக ஒரு தாளத்தை மீறியது. அவன் கை அவளது முகத்தை வருடத் துடித்தது.

ஆனால், அடுத்த நொடியே மித்ரனின் முகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஒரு நினைவு ஒரு குளிர்ந்த தண்ணீர் வாளியைப் போல அவன் மேல கொட்டியது.

“இவள் மித்ரனின் காதலி! உனது நண்பனின் உயிர்!” – லீ-யின் மூளை அவனுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஒரு குற்ற உணர்வு அவனுள் சட்டென்று பரவியது.

அடுத்த விநாடி, அவளை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். “எழுந்திரு! ஹாஸ்டல் இதோ பக்கத்துலதான் இருக்கு. நடந்து போ!” என்று கத்தினான்.

சந்தியா அதிர்ந்து போனாள். “லீ… நான்…”

“சொன்னது புரியல? கோ! வாக்!” என்று அவளைக் கடிந்துவிட்டு, தன் பைக்கைச் சீராக்கிவிட்டு, அவளைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

அந்த டோன்..அந்த திடீர் கோல்ட்னஸ்.. அந்த ‘போ’ என்ற ஒரு வார்த்தையில் இருந்த விலகல்.

சந்தியா பைக் -லிருந்து இறங்கினாள். ஹெல்மெட்ஐ அவன் கையில் கொடுத்தாள். அவன் அவள் முகத்தை பார்க்கவில்லை.

அவளும் பார்க்கவில்லை.

நடந்தாள்..

மழையில் நனைந்தபடி நின்றிருந்த சந்தியாவின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அது மழையா கண்ணீரா என்று அவளுக்கே தெரியவில்லை.

ஹாஸ்டல் ரூம் ல் சந்தியா நனைந்த ட்ரஸ்ஸை மாற்றினாள். கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.

அழுகை வரவில்லை உடனே. ஒரு நிமிடம் நின்றாள். மித்ரனுக்கு டயல் செய்தாள்.

“டேய்.”

” ஹாஸ்டல் ரீச் ஆயிட்டியா?”

“ம்”

“லீ டிராப் பண்ணானா?”

மழையில் நடந்தது மனசில் ஓடியது. அவன் திரும்பிய கணம். அந்த பார்வை.

“…போ ன்னு சொன்னான்.”

மித்ரன் நிறுத்தினான். “என்ன?”

“என்ன பண்ணேன் மித்ரன்? நான் எந்த தப்பும் பண்ணல. திடீரென்னு…”

குரல் முறிந்தது. நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள்

மித்ரன் அதை கேட்டான். சந்தியா அழுவாள் என்று அவன் வாழ்க்கையில் சில தடவை மட்டுமே கேட்டிருந்தான்.

“சரி. நீ ரெஸ்ட் எடு. நான் பார்க்கிறேன்.”

மித்ரன் டார்ம் -க்கு நேரே வந்தான். கதவை தட்டினான். ஒரு தடவை. இரண்டு தடவை.

திறந்தது.

லீ கிதாரோடு உட்கார்ந்திருந்தான். வாசிக்கவில்லை. வெறுமனே பிடித்திருந்தான். ஏதோ யோசிக்கும் ஆள் மாதிரி.

“என்ன ஆச்சு லீ?” என்று மித்ரன் கேட்டான். நேரடியாக. அந்த கேள்வி ஒரு அம்பு போல நேரடியாக அவன் மீது பாய்ந்தது.

“என்ன?”

“சந்தியாவை மழையில விட்டுட்டே.”

லீ மெல்ல அந்த கிதாரை கீழே வைத்தான். நிதானமாக எழுந்தான். “ஹாஸ்டல் நியர்பை தானே.”

“அது விஷயம் இல்ல லீ. ஏன்னு கேக்குறேன்.”

“கேக்காதே மித்ரன்.”

“கேப்பேன் .. நான் கேப்பேன். என் ப்ரெண்ட்டை அப்படியே மழையில விட்டுட்ட!” “இஸ் திஸ் யுவர் வே??”

உண்மையைச் சொல்லிவிடலாமா அல்லது மௌனமாகவே கடந்து போய்விடலாமா என்ற அந்தப் போராட்டம் அவனது தாடை எலும்புகள் இறுகுவதில் தெரிந்தது.

ஐ வாஸ் பெர்ப்ளெக்ஸ்டு”

“எதுக்கு?”

லீ ஒரு கணம் மித்ரனை பார்த்தான். பிறகு அந்த கனமான வார்த்தைகளை மெதுவாக, ஒவ்வொரு சொல்லையும் கஷ்டப்பட்டுப் பிரசவிப்பது போல கூறினான்.

“அவ உன்னோட காதலி…”

காலமே உறைந்து போனது போன்ற அந்த நொடியில், மித்ரன் ஒரு கணம் சிலையைப் போல நின்றான்.

ஒரு கணம் திகைத்தான்.

பிறகு சிரித்தான். சத்தமாகச் சிரித்தான். அந்த டார்ம் அதிரும் அளவிற்கு அவன் சிரித்த அந்தச் சிரிப்பில் லீ குழம்பிப்போனான்.

“என்னடா சிரிக்கிற?”

“லீ!” மித்ரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் தோளைப் பற்றினான். “நாங்க சேம் பிளேஸ்ல இருந்து வந்தோம். சேம் பிஎச்டி பேட்ச் , அதுக்காக நாங்க கப்பிள் ஆகிடமாட்டோம் இல்லையா?”லீ கண்கள் விரியப் பார்த்தான். “வாட்?”

மித்ரனின் கண்கள் இப்போது உண்மையான தெளிவுடன் மின்னின. “நாங்க வெறும் நண்பர்கள். வி ஆர் ப்ரெண்ட்ஸ் , பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் , மோர் தேன் எ பேமிலி ஆனா, அவ என் காதலி கிடையாதுடா மச்சான்!”

“ஆமா! எனக்குன்னு ஒருத்தி இந்தியாவில இருக்கா. ஐ ஹேவ் மை கேர்ள், இதோ பாரு…” என்று தன் மொபைலை எடுத்து உயிரோட்டமாய் சிரித்துக் கொண்டிருந்த ஆதிரையின் புகைப்படத்தைக் காட்டினான்.

லீ அப்படியே உறைந்து நின்றான். அவன் கண்கள் அந்தப் புகைப்படத்திற்கும் மித்ரனுக்கும் இடையே ஊசலாடின. பின்னர் மெதுவாகப் போனை மித்ரனிடம் நீட்டினான்.

அடுத்த நொடி, லீ மித்ரனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டான். அது ஒரு சாதாரணக் அணைப்பு அல்ல, இத்தனை காலம் தனக்குள்ளே பூட்டி வைத்திருந்த குற்ற உணர்வும், வலியும், இப்போது கிடைத்த விடுதலையும் கலந்த ஒரு இறுக்கமான அணைப்பு.

அறையில் அமைதி நிலவியது. லீயால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அந்த அணைப்பே ஆயிரம் கதைகளைச் சொன்னது. “சந்தியாவைக் காதலிக்க எனக்கு உரிமை இருக்கிறது” என்கிற நிம்மதி ஒருபுறம், “இத்தனை காலம் என் நண்பனைத் தவறாக நினைத்துவிட்டேனே” என்கிற வருத்தம் மறுபுறம் என அவன் மனம் அலைபாய்ந்தது.

அவனது அந்த ‘மிஸ்கன்செப்ஷன்’ ஒரு நொடியில் உடைந்து நொறுங்கியது.

“ஐ லவ் ஹர் டா மச்சான்,” என்று சொன்னான். குரல் தாழ்ந்திருந்தது.

மித்ரன் அவனை பார்த்தான். அந்த மொமண்ட் -ல் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர்  வெறும் ஒரு நொடியில்  முழுமையாக புரிந்துகொண்டார்கள்.

“அவ …”

நீ போய் சார்ட் அவுட் பண்ணு.”

“எப்படி?”

“அதுக்கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன். நீயே ஃபிகர் அவுட் பண்ணு.”

அங்கிருந்து தொடங்கியது அந்த விளையாட்டு. அடுத்த ஒரு வாரம் லேப்பில் சூழலே மாறிப்போனது. லீ இப்போது அந்தப் பழைய ‘டெரர்’ மென்டர் கிடையாது. அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான், அவனது அதட்டல்கள் மறைந்திருந்தன. அவன் சந்தியாவைப் பார்க்கும் போதெல்லாம் கண்களால் ஒரு மெல்லிய கவிதை பேசினான். அது அவளுக்குப் புரிந்தும் புரியாத ஒரு மொழியில் இருந்தது.

சந்தியா ஒரு நீண்ட ரிசர்ச் பேப்பரை டைப் பண்ணிட்டு இருந்தா. லீ அதை செக் பண்ணிட்டு தரணும். லீ, “என்ன  டைப்படிச்சிருக்க நீ?”னு பேப்பரை வாங்கி.. இல்லை… பிடுங்கினான்.

அந்தப் பேப்பரைத் திருப்பித் தரும்போது, அங்கங்க சிவப்பு மையில ரவுண்டு பண்ணியிருந்தான். சந்தியா பயந்து போய் எடுத்துப் பார்த்தா, அந்த வட்டங்களை ஒண்ணா சேர்த்தா, ஒரு வாக்கியம் வந்தது: “YOU LOOK PRETTY WHEN YOU BLUSH” (நீ வெட்கப்படும்போது ரொம்ப அழகா இருக்க!)

சந்தியா அப்படியே உறைஞ்சு போயிட்டா. லீ தூரத்துல நின்னு ஒரு ஸ்டைலான போஸ்ல காபி குடிச்சுட்டு அவளையே பார்த்துட்டு இருந்தான்.

அடுத்த நாள் காலையில் லேப்பிற்குள் நுழைந்த லீ, நேராக மித்ரன் மற்றும் சந்தியாவிடம் வந்தான். அவன் கையில் இரண்டு பெரிய சாக்லேட் பார்கள் இருந்தன..

“இந்தா…” என்று சந்தியாவிடம் ஒன்றை நீட்டினான்.

சந்தியா அந்தச் சாக்லேட்டை வாங்க மித்ரன் குறுக்கிட்டு, “ஏன்டா, அவளுக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா?” என்று கேட்க, லீ அவனுக்கும் இன்னொன்றைக் கொடுத்தான்.

சந்தியா உடனே மித்ரன் சாக்லேட்டை பிடுங்கி அந்தப் பேப்பரைப் பிரித்து ஒரு பெரிய துண்டை வாயில் போட்டுக் கொண்டாள். லீ அதைப் பார்த்துவிட்டு பதறிப்போய், “ஹேய்! ரெண்டையும் ஒண்ணாச் சாப்பிடுற? உன் டயட் என்னாகுறது?” என

சந்தியா தன் வாயில் இருந்த சாக்லேட்டைச் சுவைத்தபடியே, அலட்சியமாகத் தோளைக் குலுக்கி, “ஐ டோன்ட் கேர்!” என

அதைக் கேட்ட லீ, அவளை ஆழமாகப் பார்த்து, உருகி வழியும் குரலில்… “பட் ஐ கேர்…” (But I care…) என்று மென்மையாகச் சொன்னான். சந்தியா ஙே… என விழித்தாள்.

மித்ரன் அந்த நினைவுகளில் மூழ்கிச் சிரித்தான். “அவங்க ரெண்டு பேரோட அந்த ‘லவ் விளையாட்டு’ ஆரம்பிச்சப்போ, அங்க நான் ஒரு கபாப்ல எலும்பு மாதிரி இருப்பேன்னு எனக்கே புரிஞ்சுது ஆதிரை”.. இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை கிடைக்கட்டும்னு முடிவு பண்ணேன். அடுத்த ரெண்டு நாளைக்கு நான் லேப்பிற்கு வர்றதையே தவித்தேன்.

“நான் இல்லாத அந்த இரண்டு நாள்ல லேப்ல சம்பவம் நடந்திருந்தது….” என்று மித்ரன் குறும்பாக  சிரிப்பை உதிர்த்தான். அந்த ரகசியத்தைச் சொல்லத் துவங்கினான்.

லேப்பில் இரவு நேரம். மித்ரன் அங்கே இல்லை. அமைதியான அந்தச் சூழலில் கணினித் திரையின் வெளிச்சம் மட்டும் அவர்கள் முகத்தில் படர்ந்திருந்தது.

லீ மெல்ல அவள் அருகில் வந்து குனிந்து, திரையைச் சுட்டிக்காட்டினான். “சந்தியா, இந்த கிராஃப் பார். இங்கே பீக் (Peak) எங்க வருது?” என்று கேட்டான்.

“இங்கே.” என்றாள் சந்தியா, திரையில் அந்த ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டி.

“ஏன்?”

“மாய்ஸ்சர் ஸ்பைக் (Moisture spike). மழை வருவதற்கு முன்னால் மண் ரியாக்ட் பண்றது.”

“அதை நீ எப்படி கண்டுபிடிச்சே?”

“டேட்டா பார்த்தேன்.”

” டேட்டா எல்லாரும் பார்க்குறாங்க. ஆனால் இந்த pattern-ஐ நீ மட்டும் கண்டுபிடிச்சே. ஏன்?”

சந்தியா யோசித்தாள். “நான்… மழை வருவதற்கு முன்னால் மண்ணுக்கு என்ன ஆகும்னு ஃபீல் பண்ண முயற்சிச்சேன். ஃபீல்டுல போய் உட்கார்ந்து கையால மண்ணைத் தொட்டேன். அந்த டெக்ஸ்சர் மாறுது மழைக்கு முன்னால்.

“அப்போ… நீ டேட்டாவை மட்டும் பார்க்கல… அந்த மண்ணோட உணர்வையும் பார்த்திருக்க,” என்றான் லீ மெதுவாக. அவனது இந்த வார்த்தைகள் சந்தியாவின் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தின.

“இந்த pattern-க்கு ஒரு பேரு வேணும். மழை வருவதற்கு முன்னால் மண் தயாரா ஆகுது. காத்திருக்கறது மாதிரி.” என்று சந்தியா அந்த கிராஃபையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

லீ மெதுவாக சொன்னான். “ஆன்டிசிபேஷன் சைக்கிள் (Anticipation Cycle.)”

“அது… அது நல்லா இருக்கே.”…..

அந்த வார்த்தை அந்த லேப் அறைக்குள் ஒரு மந்திரம் போல ஒலித்தது.

“ஆன்டிசிபேஷன்… எதிர்பார்ப்பு,” என்று சந்தியா முணுமுணுத்தாள்.

அறையில் ஒரு கணம் நேரம் நின்றது. அந்த இதமான காற்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, அவளது கூந்தலை மெல்லக் கலைத்தது. அந்தச் சிறு காற்றுக்கே சந்தியா தன் கண்களைச் சுருக்கி, முகம் சிவக்க நின்றிருந்தாள். அருகில் இருந்த லீ, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல அவளருகே வந்தான். அவள் முகத்தில் விழுந்த அந்த ஒற்றைக் கூந்தல் இழையைத் தன் விரல்களால் மிக மென்மையாக ஒதுக்கிவிட்டான். அந்த அமைதியான லேப் அறைக்குள், லீயின் வார்த்தைகள் ஒரு நீண்ட மௌனத்தை உடைத்தன. லீ, அந்தச் சாம்பல் நிறக் கண்களில் தீராத காதலோடு அவளைப் பார்த்து,

“சான்டி, நான் உன்னோட மண்மாதிரி. உன் ஆன்டிசிபேஷன் சைக்கிள் மாதிரி. ஒரு வார்த்தை மட்டும் சொல். மழை வருமா வராதா..?”

அவன் நிறுத்தினான். அவனது கண்கள் சந்தியாவின் முகத்தில் படிந்திருந்த குழப்பத்தையும் தவிப்பையும் அளவிட்டன. மீண்டும் தொடர்ந்தான், அவனது குரல் இப்போது இன்னும் ஆழமாக, ஒரு பிரார்த்தனை போல ஒலித்தது ” மழை வருமா வராதா..?”

“ஒரே ஒரு வார்த்தை. மண்ணுக்கு மழை வருமானு தெரியணும். என்னோட ஆன்டிசிபேஷன் சைக்கிள் முடியணும்.”

அவன் எதை எதிர்பார்க்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவளது மௌனம் ஒரு சம்மதமா அல்லது தயக்கமா என்று அவன் தவித்த அந்த ஒரு நொடி…

பின் அங்கே மழை வந்தது.

அன்று இரவு மித்ரன் கால் வர …

“என்ன ஆச்சு லேப்-ல?”

“பேப்பர் எழுதினோம்,” என்றாள் சந்தியா. அவள் குரலில் ஒரு புதிய தெளிவு தெரிந்தது.

“அப்ஸ்ட்ராக்ட் முடிஞ்சதா?”

சந்தியா ஒரு கணம் நிறுத்தினாள். அந்த லேப் அறையில் நடந்த அந்த உணர்ச்சிகரமான மாற்றங்கள் அவள் கண்முன் வந்து போயின. “ஆமா. முடிஞ்சது.”

“குட் . டைட்டில் என்ன வச்சீங்க?”

“ஆண்டிசிபேஷன் சைக்கிள் .

“நைஸ் ..வேற?” – மித்ரன் இன்னும் எதையோ எதிர்பார்க்கிறான் என்பது அவள் மௌனத்திலேயே தெரிந்தது.

நீண்ட மௌனம். பிறகு சந்தியா சொன்னாள், “நாளைக்கு வா. நேரடியா சொல்றேன்.”

மித்ரன் போனை வைத்தான். ஒரு நொடி யோசனையோடு நின்றான். பிறகு, ஒரு மெசேஜ் ..

“மழை வந்தது… முழுக்கா நனைஞ்சிட்டோம்…”

அன்னைக்கு என் மனநிலை எப்படி கட்டுக்கடங்காத கடலைப் போல இருந்துச்சு தெரியுமா… லீ மற்றும் சந்தியாவின் வாழ்வில் ஒரு தெளிவு பிறந்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த நொடி, ‘ஹோ’னு இருந்துச்சு. ஒரு பெரிய பாரம் குறைந்த நிம்மதியா அல்லது சொல்ல முடியாத ஒரு ஏகாந்தமா என்று தெரியல.

ஆனால் அன்று, அந்த நொடில, என் மனசுல “ஆதிரைக்கிட்ட போகணும்… ஆதிரைக்கிட்ட போகணும்…” போகணும்னு சாரல் அடிச்சுட்டே இருந்தது. எனக்கு உன்னைத் தேடுச்சுடீ…!”

“இப்போ எனக்கு நீ வேணும்…” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!