சாயந்திரம் வரேன்னு சொன்னீங்க இன்னும் காணோம் எங்கே வந்துட்டு இருக்கீங்க? என்றார் நவமணி.
இருக்கும் கோபத்தில் காச் மூச் என்று கத்தி விடப்போகிறோம் என்ற பயம் சுபிக்கு. ஒரு நிமிடம் ஆழ மூச்சு எடுத்து தன்னை நிதானித்துக் கொண்டவள்,
Advertisement
அவருக்கு ஏதோ அவசர வேலையாம் அதுதான் இன்னைக்கு வர முடியலை என்றாள்.
அப்படியா….சரி மா, நைட்ல எங்க வந்து கஷ்டப்படுவீங்களோனு தான் போன் பண்ணினேன். உங்க அப்பா வேற ஒரே புலம்பல்… பிள்ளைய காணோம்… பைக்ல இவ்வளவு தூரம் வரணுமான்னு.
உனக்கு பிடிக்குமேனு அடை மாவு அரைத்து அவியல் எல்லாம் செய்து வைத்தேன் என்றார் ஆசையாய்.
இன்னும் கொஞ்சம் கலங்கியது அவளுக்கு.
சாப்பிட்டியா? என்றார்
ம்ம்ம்ம் என்றாள்.
உங்க அண்ணி நீ வரேன்னு குதூகலாமா காத்திருக்கா…. என்றார் பெருமையாய்.
சாரிம்மா என்றாள் சலிப்புடன்.
“———————“
மணி எட்டரை ஆகப்போகுது இந்த பொண்ணு என்ன பண்ணுது? பாப்பாத்தி தயக்கமாய் கதவை தட்டினார்.
முனுமுனுப்புடன் கதவை திறந்தவளின் முகம் பார்த்து கொஞ்சம் சங்கடமாகிவிட்டது மாமியாருக்கு.
வாம்மா சாப்பிடலாம் என்றார் அக்கறையாக…
எனக்கு பசி இல்லை நீங்க சாப்பிடுங்க என்றாள் முகத்தை வேறு புறம் திருப்பி…
அது எப்படி பசிக்காம போகும்? நீ மதியமே ஒழுங்கா சாப்பிடலை ஒரு தோசையாவது சாப்பிடும்மா பரிவுடன் அழைத்தார்.
அத்தை எனக்கு நிஜமாவே பசி இல்லை அவர் வந்த உடனே சாப்பிட்டுக்கிறேன் நீங்க சாப்பிட்டு போய் படுங்க என்றாள்.
அவன் எந்நேரத்துக்கு வருவானோ…. அவனை எதிர்பார்த்து வயித்தை காயப்போடாதேன்னு தினமும் சொல்றேன் கேட்க மாட்டேங்கிற…. உரிமையாய் திட்டி விட்டுப் போனார் பாப்பாத்தி.
“——————-“
என்ன அவசரமான வேலையாக கூட இருக்கட்டும்… இத்தனை முறை அழைத்து இருக்கிறேனே அவங்க அம்மாவும் அழைத்தாங்களே….. போனை எடுத்துப் பார்க்கக் கூடவா நேரம் இருக்காது? எவ்வளவு அலட்சியம்.
தனக்கு பிடித்ததாக சமைத்து வைத்து காத்திருந்த அம்மாவை எண்ணி, தன் வரவை ஆவலாய் எதிர்பார்க்கும் அண்ணியை எண்ணி அழுகையாய் வந்தது சுபிக்கு.
பொண்டாட்டி என்றால் அவ்வளவு இளப்பமா? சொன்னால் சொன்ன சொல்லை நிறைவேற்ற வேண்டாமா?
நானா கேட்டேன் ஊருக்கு போகணும்னு சும்மா இருந்த என்னை உசுப்பி ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இப்படி ஏமாத்திட்டாரே….. ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.
வீட்டில் இருக்கும் பொண்டாட்டி தானே என்ற அலட்சியம் தானே இப்படி நடக்க வைக்குது….? நாமும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் மனைவியாக இருந்தால் ஒரு வேலை மரியாதை கிடைக்குமோ…. எதை எதையோ எண்ணி தானாக புலம்பி அவளாகவே தன்னை மட்டம் என்று எடுத்துக் கொண்டாள்.
“——————“
மீண்டும் வந்து சாப்பிட அழைத்தார் பாப்பாத்தி.
புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவள் கடுப்புடன் மூடி வைத்துவிட்டு…. அத்தை ப்ளீஸ் நான் சாப்பிட்டுக்கிறேன் நீங்க போய் படுங்க என்றாள் ஒருவித சங்கடத்துடன்.
ஒரு சில நேரம் ராத்திரிக்கு வராம கூட போயிடுவான். அதுக்காக சாப்பிட்டாம இருந்துடாதம்மா.
சரிங்கத்த என்றாள் இறுகிய குரலில்.
ராத்திரிக்கு வர முடியலைன்னா போன் பண்ணி சொல்லிடுவானே… தானாக பேசிக் கொண்டே போனார் பாப்பாத்தி.
என்னை கண்டா அவ்வளவு பிடிக்குது உங்க புள்ளைக்காரனுக்கு…. ஏன் போன் பண்ணி சொல்ல போறாரு? உள்ளுக்குள் கொதித்து போனாள்.
நேரே சமையலறைக்குள் நுழைந்தவள் தோசை மாவு, சட்னியை எல்லாம் எடுத்து பிரிட்ஜுக்குள் வைத்து மூடிவிட்டு ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள்.
பசிக்காமல் இல்லை…. சாப்பிட தான் பிடிக்கவில்லை.வயிறு பிரட்டி கொர கொரவென்று சத்தமிட்டது. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் குடித்தவள் அமைதியாய் வந்து படுத்துக் கொண்டாள்.
“————————-“
பதினொன்றே கால் மணிக்கு வந்தான்.
மனைவி உறங்குகிறாள் என்பதால் ஓசையின்றி உள்ளே வந்தவன் விளக்கு போடாமல் மெல்ல குளியலறை புகுந்து குளித்து உடைமாற்றி வந்து படுத்தான்.
பயங்கர பசி அவனுக்கு…. எழுந்து போய் சாப்பிடும் அளவிற்கு தெம்பில்லை. அவ்வளவு அசதி… மதியமும் சாப்பிடவில்லை. டேபிலில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மடக்கில் குடித்தவன் அயர்ந்து கண்மூடிவிட்டான்.
அவன் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் அவன் தர்மபத்தினி. பின்னே…. அவள் உறங்கினால் தானே….?
அவன் உள்ளே நுழையும்போதே கண்டு கொண்டாள். உறங்குவது போல் பாசாங்குடன் கண்களை அழுத்தமாய் மூடிக்கொண்டாள்.
அவன் படுத்தவுடன் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் அவ்வளவு சீக்கிரம் உறக்கம் தழுவவில்லை.
மூஞ்சிய பாரு… பெரிய கலெக்டர் இவரு! ரொம்ப பிஸி… எவ்வளவு சீன்…. பொருமிதள்ளினாள்.
“——————-‘
காலையில் ஐந்தரைக்கு அவள் எழுந்து விட்டாள். கடுமையான தலைவலி. இரவு சரியாக உறங்கவில்லை அல்லவா?
ம்ம்ம்ம் என்றவள் அவர் அசைவம் ரொம்ப விரும்ப மாட்டார் என்றாள்.
சரி நேரமா வந்து சேருங்க என்றாள் தேவிகா.
“——————-“
குறும்பூர் போக நேரம் இருக்காது திருச்சி போயிட்டு வந்துடுவோம் என்றான்.
பதில் பேசாது அமைதியாக கிளம்பினாள்.
பைக்கில் கள்ளக்குறிச்சி வந்து அங்கு ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சிக்கு பஸ் பிடித்தனர்.
பேருந்து பயணத்தில் கூட அவள் மௌனமாகவே வந்தாள்.
சுப்பு சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ற! என் சூழ்நிலை உனக்கு புரியலையா?
“புரிந்து கொள்ளேன் ப்ளீஸ்” என்ற மன்றாடல் அந்த குரலில் இருந்தது.
வேதாளம் மரம் இறங்கவில்லை.
ஸாரி ஃபோன் அட்டன் பண்ணி பேசற அளவிற்கு நேற்று சூழ்நிலை இல்லை. அரசியல்வாதி பொண்ணு சூசைட் அட்டம்ட்.
அவள் ம்ம்ம்ம்ம்ம் சொல்ல கூட இல்லை.
அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை. மன்னருக்கு மனம் சுணங்கி போய்விட்டது. இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்? நேற்று இல்லை என்றால் இன்று அழைத்து போகிறேன் அவ்வளவு தானே… இது என்ன பிடிவாதம். சொல்வதை புரிந்து கொள்ள தெரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறுபிள்ளை இல்லையே..
இந்த பிடிவாதம் அவனுக்கு பிடிக்கவில்லை.
அரேஞ்ச்டு மேரேஜில் முதல் படிநிலையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் தானே…
இதோ ஒரு மாதம் ஆகப்போகிறது திருமணம் முடிந்து…. எந்த செயலிலும் என் விருப்பத்திற்கு அவளை வளைக்கவில்லையே… அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறேனே…
என்னடா இது வாழ்க்கை என்று நிறைய பேர் புலம்ப கேட்டிருக்கிறான். இன்று தானே புலம்பும் நிலை வந்துவிடுமோ என்று பயந்தான்.
அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை.
இன்னும் அசதி மிச்சம் இருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் உறங்கிவிட்டான்.
இவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு அவளுக்கு கோபம் இன்னும் இருந்தது.
“—————————-“
இரண்டே முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய பயணம் டிரைவரின் உருட்டலில் மூன்று மணி நேரம் ஆகி விட்டிருந்தது.
மணி ஒன்றரை ஆகியிருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி பேருந்து நிலையத்தை ஒட்டிய ஜூஸ் செண்டரில் கிரேப் ஜூஸ் வாங்கி கொடுத்தான். பசியில் அவள் சோர்ந்திருப்பது புரிந்து தான் ஜூஸ் வாங்கி கொடுத்தான்.
அவள் பக்கத்தில் இருக்கும் பழமுதிர் சோலையை பார்த்துக் கொண்டிருக்க புரிந்து கொண்ட மன்னர் அந்த கடையில் பழம் வாங்கினான்.
அக்கா மகள் லக்க்ஷனாவிற்கு எதுவும் வாங்கவில்லையே என்று யோசித்தாள்.
எதுவும் வாங்க வேண்டுமா என்று அவனும் கேட்கவில்லை.
தேவிகா ஃபோன் செய்திருந்தாள் தன் கணவரை CBS அனுப்புகிறேன் என்று.
வேண்டாம் பஸ் பிடித்து வந்துவிடுகிறோம் என்றான்.
மினி பஸ் பிடித்து ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ள தில்லை நகர் சென்றடைந்தனர்.
அங்கு தென்னூர் ரோட்டில் இறங்கிய உடனே அங்குள்ள புகழ் பெற்ற மஹாவீர் ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு காரம் கேக் என்று நிறைய வாங்கினான்.
அம்மா வீட்டுக்கு போகும் போது ஸ்னாக்ஸ் வாங்கினப்போ அவ்வளவு முறைச்சாரு….. இப்போ இவ்வளவு வாங்குறாரு. உதட்டை பிதுக்கினாள்.
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி சந்நிதி தெருவில் உள்ள தேவிகாவின் வீட்டிற்குள் நுழையும் போது மணி 2.30 தாண்டி விட்டது.
வாங்க வாங்க என்று இன்முகமாய் வரவேற்றனர் தேவிகாவும் அவள் கணவர் சௌந்தர் ராஜனும். சித்தி என்று பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள் லக்க்ஷனா.
வாங்க என்று உரக்க அழைத்தார் தேவிகாவின் மாமியார் பர்வதம்.
பசியோட இருப்பீங்க வாங்க முதல்ல சாப்பிடுங்க என்று அழைத்தாள் தேவிகா.
சாதம், சாம்பார், ரசம் பொரியல், கூடுதலாக இறால் தொக்கும் முட்டை ஆம்லெட்டும் செய்திருந்தாள்.