Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக 💞28

மனம் ஒரு மாதிரி அலைபுற்று இருந்தது. கதிர் வீட்டுக்கு சென்றான்.

என்னடா போலீசு…. ஒரு நாளும் இல்லாத திருநாளா இருக்கு? நண்பனை ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டான்.

எரும ஓவரா சீன் போடாத… முந்தா நாளு தான் பார்த்தோம்.

பார்த்தோம்டா  குளத்து மீன் குத்தகை பேச கோயில் மண்டபத்தில் நடந்த கூட்டத்துல பார்த்தோம். எவ்வளவு நாளைக்கு பிறகு வீட்டுக்கு வந்திருக்க…. அடியே பாக்யா கிங்கு வந்திருக்காண்டி உள்நோக்கி குரல் கொடுத்தான்.



Advertisement

குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தவள் அண்ணே வாங்க என்று குழந்தையுடன் வந்துவிட்டாள்.

ஆதவா மாமாட்ட வாங்க…. குழந்தையை வாங்க கை நீட்டினான்.

அவன் காக்கி உடுப்பை கண்ட குழந்தை உதட்டை பிதுக்கி அழுதது.

Advertisement

டேய் காக்கி,என் புள்ளைய பயமுறுத்துற…. நண்பனை கேலிசெய்தவன் குழந்தையை வாங்கி கொண்டான்.

Advertisement

பாக்யா போய் காபி போடு!

டேய் நைட்டு எட்டு மணிக்கு என்ன காபி? வேண்டாம்மா நீ போய் ரெஸ்ட் எடு!

சரி டிபன் அப்போ நம்ம வீட்டுல தான் என்றான் கதிர்.

Advertisement

டேய் சும்மா உன்கூட பேசலாம்னு வந்தேன். ஏன்டா இவ்வளவு அக்கப்போர்…. உரிமையாய் நண்பனை கடிந்து கொண்டான்.

பாக்யா பிள்ளையை பிடி! மனைவியிடம் குழந்தையை கொடுத்தவன் கிங்கு வாடா வெளியில் போயிட்டு வருவோம் என்று கிளம்பினான்.

கங்கை முத்து மாரியம்மன் கோயில் குளத்தின் படிக்கட்டில் மங்கிய சோடியம் விளக்கின் ஒளியில் நண்பர்கள் இருவரும் அமர்ந்தனர்.

சொல்லுடா கிங்கு ஏன் ஃபேஸ் டல்லடிக்குது? சரியாய் கண்டு கொண்டான்.

அதெல்லாம் ஒண்ணுமில்லடா…. தலையை கோதிக் கொண்டான்.

இல்லையே இது ஆருயிர் நண்பன் கிங்கு இல்லையே…

தங்கச்சி அம்மா வீட்டுக்கு போயிருச்சா?

ம்ம்ம்ம்ம் நான் தான் கொண்டுப்போய் விட்டுட்டு வந்தேன்.

என்னடா சொல்ற?

சண்டை போட்டுட்டு போயிடுச்சா? பதட்டமாகி விட்டான் கதிர்.

நேற்று நடந்தது அனைத்தும் சொன்னான்.

என்ன இருந்தாலும் அடிச்சிருக்க கூடாது மன்னரு. எங்களுக்கெல்லாம் புத்தி சொல்வியேடா…. பாவம் உன் அடியை தாங்குற அளவுக்கு அந்த பொண்ணுக்கு தெம்பு இருக்கா?  இதெல்லாம் சரி இல்லடா சொல்லிட்டேன்.

நண்பனுக்கு பதில் சொல்ல இயலாமல் முகம் கசங்கி அமர்ந்திருந்தான்.

அண்ணிங்க யாரோ….. அவங்க என்னை புரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ என்னை கட்டினவ தானே…. இவளுக்கு ஏன்டா மண்டையில் எதுவும் உரைக்கல. யாரு என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையா இவ? படிச்சவ தானே சுய புத்தி வேண்டாம்?

நான் பொறுப்பிலாம இருக்கேனா? ஊதாரியா இருக்கேனா? அம்மா வீட்டில் போய் அதை வாங்கிட்டு வா இதை வாங்கிட்டு வான்னு கொடுமைப்படுத்துறேனா? எங்க வீட்டுல மாமியார் கொடுமை இருக்கா ?அவளை எப்படி எல்லாம் வச்சி வாழணும்னு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா?

எனக்காக ஆயிரம் ரூபாயில் சட்டை கூட வாங்க மாட்டேன். அவளுக்குன்னு பார்த்து தான் கார் வாங்கினேன். அவ்வளவு ஆசையா சர்பிரைஸா காரை கொண்டு வந்து நிறுத்தினா கரகாட்டகாரன் காருன்னு சொல்றான்னா அவளுக்கு எவ்வளவு எகத்தாலம் இருக்கும்?

அதுக்கு கொண்டு போய் ஊரில் விட்டுட்டு வந்துட்டியா?

என்கிட்ட தான் எகிறுவா…. அக்காங்க வந்திருக்காங்கன்னு இழுத்து போட்டு வேலை செய்துட்டு கிடக்குறா…. அவங்க இவளை ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டேங்கிறாங்க. மனசுக்கு கஷ்டமா இருக்குடா. அன்புக்கு அடிபணியலாம் தப்பு இல்ல,ஆணவத்துக்கு அடிபணிய கூடாது.

அவங்க என்னவோ இங்கிலாந்து ராயல் பேமிலி போலவும் இவ என்னவோ அவங்களுக்கு சேவகம் செய்யும் அடிமை போலவும்…. எனக்கு பிடிக்கலைடா…. ஒரே வீட்டு மருமகளா அவளை பார்க்கல அவங்க.

கிங்கு நீ கிடைக்க சுப்ரஜா கொடுத்து வச்சிருக்கணும் மாப்ள.

இருந்தாலும் உங்க பெரிய அண்ணிக்கு தான்கிற அகம்பாவம் அதிகம்.

பேச வேண்டியதை எல்லாம் அவங்க பேசிட்டு புஷனுக்கு போனை போட்டு ஒப்பாரி வச்சிருப்பாங்க…. அது தான் உங்க அண்ணன் வராரு.

வரட்டுமே…. கழுத்துக்கு தூக்கு கயிறா வந்துடும்!

மன்னரு இவ்வளவு நாள் இருந்தது போல சுமுகமா இருடா! உனக்கு நான் சொல்ல ஒண்ணுமில்ல.

பார்ப்போம்…. என்ன தான் நடக்கும்னு!

அண்ணனுங்க முக்கியம் தான் இல்லைனு சொல்லலை.இனி கூடி பிறக்க போறதில்லை. இந்த ஜென்மத்தில் பிறந்த பிறப்பு ஒத்துமையா இருக்கணும்னு அம்மா சொல்வாங்க!

நான் எந்த உறவையும் உதறிட்டு போற ஆளு இல்லை. அதுக்காக அடிமையா வாய் பொத்தி நிற்கவும் என்னால முடியாது.

பொறுமையா பேசுடா! எதுவா இருந்தாலும் சுப்ரஜா தலை தான் உருளும்.

அது கரெக்ட் தான்!

சரி கதிரு நேரமாச்சு கிளம்பலாம்.

“———————“

சப்பாத்தி போட்டிருக்கேன் குளிச்சுட்டு வாப்பா என்றாரு பாப்பாத்தி.

நீங்க சீமந்தத்துக்கு ஊருக்கு போகலையா?

இல்ல… அது….

நான் சாப்பிட்டு வந்துட்டேன் நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டு படுங்க! உள்ளே போய் விட்டான். அவரை மாற்றிவிட முடியுமா என்ன?

குளித்து உடைமாற்றி கட்டிலில் விழுந்தவன் வெகுவாய் மனைவியை தேடினான்.

ஏனோ அந்த அறை விகாரமாய் தோன்றியது. உருளும் போது புரளும் போது ஒருக்களிக்கும் போது அவள் வளையல் எழுப்பும் ஒலி அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.  உறக்கத்தில் கூட மெல்லிதாய் அவள் கொலுசு கிண்கிணி இசைக்கும்.

ஒரு நாளே சமாளிக்க முடியலையே…. கவிஞர் வைரமுத்து சொன்னது சத்தியமான் உண்மை. “பெண் எப்போதும் சுகமான துன்பம்”

இந்த சுப்பு பொண்ணு என்ன பண்ணினா என்ன? ஆயுள் கைதி ஆக்கிட்டாளே….. கரார் போலீசை காமெடி போலிஸ் ஆகிட்டாளே….மீசையை திருகி சிரித்துக்கொண்டான்.

மனைவி அழைப்பாள் என்று எதிர்பார்த்தான்.

அவள் கல்யாணம் ஆனதையே மறந்துவிட்டாள் போலும்…. அம்மா வீட்டோடு ஐக்கியமாகி விட்டால் போல…

இருக்கும் மனநிலையில் அவனுக்கும் பேச தோன்றவில்லை. நாம் ஒன்று பேச போய் அவள் ஒன்று புரிந்து கொண்டு…. எதற்கு வம்பு! கவிழ்ந்து படுத்து விட்டான்.

“——————-“

மாமனார் மாமியார் இருவரையும் பிலுபிலுவென பிடித்துக்கொண்டனர் இரு மருமகள்களும்.

எப்படி எங்களை பேசலாம்? யார் கொடுத்த தைரியம்? எங்களுக்கு இங்கே என்ன மரியாதை?என் புருஷனை தவிட்டுக்கா வாங்கினீங்க? அவன் பேசி நாங்க கேட்டுக்கணுமா? சங்கீதா விடுவதாய் இல்லை.

ம்மா… நீ ஒன்னு சொல்லி அவன் ஒன்னு சொல்லி…. பேச்சு கொஞ்சம் தடிச்சு போச்சு! அவன் எங்கேயும் உங்களை தரக்குறைவா பேசல… வீட்டுக்கு மூத்த மருமகள் நீ தானே அனுசரித்து அரவணைக்கணும்! பூமாலை பக்குவமாய் பேச முயன்றார்.

ரொம்ப தான் பெரிய மருமகளுக்கு மரியாதை வாழுது  இங்கே…. அப்பட்டமாய் அலுத்துக் கொண்டாள்.

ஆனா ஒன்னு உங்க சின்ன மகனுக்கு அநியாயத்துக்கு முட்டுக் கொடுக்கறீங்க மாமா…. எரிச்சல்பட்டாள் அஞ்சலி.

கூட்டு குடும்பத்தில் அப்பப்போ சலசலப்பு வந்து போகுறது இயல்பு தான். நாங்க அண்ணன் தம்பிங்க அப்படி தான் இருந்தோம்.

மாமா ஐந்து வயசுல தான் அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளின்னு சொல்வாங்க தானே!

இவர்கள் இதை விட்டபோவதில்லை என்று புரிந்து விட்டது பூமாலைக்கு.

“——————–“

அதிகாலையில் வாக்கிங் போக எழும்போதே  பார்த்து விட்டான் அண்ணன்கள் கார் அணிவகுத்து நின்றதை.

கண்டு கொள்ளாமல் வாக்கிங் சென்றுவந்தான்.

இந்த மனுஷன் தூங்குறதை பார்த்தியா? அவன் கிளம்பி வேலைக்கு போயிடுவானே… சங்கீதா காண்டாகி போனாள்.

பாவம் பெங்களூருவில் இருந்து ட்ரைவ் பண்ணி வந்த அசதியில் ஜெயராமன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஏங்க…. ஏங்க… பிடித்து உலுக்கி எழுப்பி உட்கார வைத்தாள்.

என்ன சங்கி? தூக்கத்தில் கண்ணை திறக்வே முடியவில்லை அவனால்.

என்ன நொண்ண சங்கி! எதுக்கு வந்தீங்கன்னு ஞாபகம் இருக்கா? மணி ஏழு ஆகுது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் கிளம்பி போயிடுவான்.

போகட்டுமே நைட் வீட்டுக்கு தானே வருவான்…. அப்போ பேசிக்கலாம் புரண்டு படுத்தான்

ஏதே…. அவளுக்கு வந்ததே கோபம். எனக்கு அப்போவே தெரியும் நீங்க எல்லாம் கூட்டு களவாணிங்க.

என்னடி உன் பிரச்னை? கண் இமைகளை பிரிக்கவே முடியவில்லை அவனால்.

இப்போ வரபோறீங்களா இல்லையா? அவள் அதட்டலில் நொந்து கொண்டான்.

அங்கே சரவணனின் நிலையும் அதுதான். ஜெயராமனாவது ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று அனுமதி வாங்கி வந்திருக்கிறான். சரவணன் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.

அப்படியே எழுந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம்? சிடுசிடுத்தாள் அஞ்சலி.

என்ன பேசணும்னு நீயே சொல்லிட்டா அப்படியே மனப்பாடமா பேசிடுவேன் என்றான் கொட்டாவி விட்டபடி.

கொழுப்பு தானே…. பல்லை கடித்தாள்.

உண்மையை தானே சொன்னேன்?என்னமோ பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து பிளான் போட்டுட்டீங்க நடத்துங்க…. சிவந்த விழிகளுடன் முகச்சுளிப்போடு எழுந்து சென்றான்.

ஒருவழியாக மன்னர் சாப்பிட வரும்போது அண்ணன்மார்கள் இருவரும் ஆஜர் ஆகிவிட்டனர்.

வாங்கண்ணே என்றான் பொதுவாய்.

ம்ம்ம்ம் என்ற ஜெயராமன். நல்லா இருக்கியா மன்னரு என்றான்.

ம்ம்ம்ம் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? இயல்பாகவே நலம் விசாரித்தான்.

சுப்ரஜா நல்லா இருக்கா?

நல்லா இருக்கா…அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா…. பேசிக் கொண்டே தட்டில் இட்டலியை அவனே வைத்துக்கொண்டான்.

எதுக்கு வந்திருக்கேன்னு கேட்க மாட்டியா? என்றான் ஜெயராமன்.

அதெப்படிண்ணே நான் கேட்க முடியும்? உன் வீடு,உன் அப்பா அம்மாவை பார்க்க நீ வந்திருக்க! உனக்கு ஆயிரம் அலுவல் இருக்கலாம்… நாகரிகம் இல்லாம நான் கேட்க முடியுமா?

எப்படி பேசுறான் பாரு என்றான் சரவணன்.

எப்படி பேசறேன் என்றான் நிமிர்ந்து பார்த்து.

அண்ணிங்களுக்கு மரியாதை கொடுத்து பேசணும்னு தெரியாதா உனக்கு? பொம்பளைங்கட்ட உனக்கு என்ன வம்பு அசிங்கமா?

என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையேண்ணே நீ! இன்னும் இரு இட்டலி வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டான்.

உனக்கு தெரியாதா?

தெரியாம தானே கேட்கறேன்.

உனக்கு மட்டும் இது உரிமையான வீடு இல்லை மன்னர்,ஜெயராமன் குரல் உயர்த்தினான்.

நான் எப்போ சொன்னேன் என்னோட வீடுன்னு?

அம்மா உன்னை மட்டும் பெறல… அவங்க நம்ம நாலு பேருக்கும் பொது.

ஆனா என் பொண்டாட்டி உங்க பொண்டாட்டிகளுக்கு வேலை செய்ய பொது இல்லை.

இதெல்லாம் ஒரு பிரச்னையா? சரவணன் கடுகடுத்தான்.

அதை தான் நானும் கேட்கிறேன் இதெல்லாம் ஒரு பிரச்னையா? இதுக்கா லீவ் போட்டுட்டு வந்தீங்க?

மன்னரு உன் பேச்சு சரியில்லை ஜெயராமனுக்கு கோபம் கூடியது.

நான் இப்படி தான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்! நீங்க உங்க பாதையில் போறீங்க நான் என் பாதையில் போறேன்.  எனக்கு அட்வைஸ் தேவைப்பட்டா கண்டிப்பா அண்ணிங்களை கேட்கறேன்.

கண்ணாடியும் ஜொலிக்கும் வைரமும் ஜொலிக்கும் ரெண்டும் ஒன்னாகிடாது. உங்க லைஃப் ஸ்டைல் வேற…. என்னோட வருமானம் வாழ்க்கை தரம் வேற…. தயவு செய்து புரிஞ்சுக்கோங்க! உங்க பெருமையை என் பொண்டாட்டிகிட்ட சொல்லி அவளுக்கு ஆசையை தூண்டி எங்களுக்குள்ள சலசலப்பு வந்து ஏண்ணே இதெல்லாம்?

நான் உங்களை விட சின்னவன் தான் ஆனா உங்க தம்பி. அதே மாதிரி தான் என் பொண்டாட்டி அண்ணிங்களை விட சின்னவ தான் ஆனா உங்க மனைவி மாதிரி அவளும் இந்த வீட்டு மருமகள் தான்.

இருபத்து மூனு வயசு என் பொண்டாட்டியே பாவம்னு சொல்றேன், அறுபது வயசு அம்மா அதைவிட பாவம். ஒரு வாரமா மாத்திரை இல்லாம அவங்க தூங்குறது இல்லை. கை கால் குடைச்சல் இடுப்பு வலி. அவ்வளவு வேலை செய்றாங்க.

இது நம்ம குடும்பம்,நாம எல்லாரும் ஒன்னு. எல்லாரும் சேர்ந்து வேலை பாப்போம். ஒன்னா சந்தோஷமா பத்து நாள் தங்கிட்டு போவோம்னு நினைச்சா பிரச்னையே வராது.

என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போனது உங்க பொண்டாட்டிக்கு அவ்வளவு எரியுது.

சொந்த அக்கா தங்கச்சியா இருந்தாலும் ஓரகத்தி தான். இந்த காலத்தில் யாரும் யாருக்கும் எடுபிடி இல்லை.

எனக்கு வேலைக்கு நேரமாகுது நான் கிளம்புறேன்.

இதுக்கு என்ன முடிவு? சரவணன் கேட்டான்.

நீங்களே சொல்லுங்க! சாயந்திரம் வந்து கேட்டுக்கறேன்.

இவ்வளவு பேச்சுக்கும் பெத்தவர்கள் வாயை திறக்காமல் ஓரமாய் நின்று கொண்டனர்.

“———————–“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!