Skip to content
Post Views: 3,904
என்னப்பா அவன் இவ்வளவு பேசிட்டு போறான் ரெண்டு பேரும் சிலையா நிற்கிறீங்க? தான் வீட்டிற்கு மூத்த பிள்ளையாக இருந்தும் மரியாதை இல்லையே என்ற கோபம் ஜெயராமனுக்கு.
நாங்க என்னப்பா சொல்ல? பூமாலை வார்த்தைகளின்றி தடுமாறினார்.
ம்மா…. என்னைவிட பதினோரு வயது இளையவன் பட்டாசு மாதிரி வெடித்துட்டு போறான், நான் ஊமை மாதிரி வாய் பொத்தி கேட்டு நிற்கிறேன்.ஒரு வார்த்தை எனக்கு சப்போர்ட்டா பேசலையே நீங்க ரெண்டு பேரும்! அவ்வளவு ஆதங்கம் ஜெயராமனுக்கு.
பெத்தவங்க நாங்க யார் பக்கம் பேச… நீயே சொல்லு சாமி? பாப்பாத்தி பரிதவித்துப் போனார் இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் எண்ணிப் பார்க்கவே இல்லை. அவருக்கு இந்த நிலையை சமாளிக்கவும் தெரியவில்லை.
Advertisement
ம்மா….. என் மருமகள், பேரப்பிள்ளைகளுக்கு நான் செய்து போடுறேன் உனக்கென்ன வந்ததுன்னு ஒரு வார்த்தை கேட்கலையே…. அவனை பேச வைத்ததே நீங்கதானோ…? என்னவோ அவனுக்கு மட்டும் தான் உங்க மேல அக்கறை இருக்கிற மாதிரி நாங்க எல்லாம் கொடுமைக்காரங்க மாதிரி பேசிட்டு போறான். சரவணன் தன் பங்கிற்கு கடுமையாய் குற்றம் சாட்டினான்.
சரவணா எதுக்குப்பா இதை ஒரு பிரச்சனையாய் பெருசு படுத்திகிட்டு? ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்கு ஒரு நல்ல பெயர் இருக்கு…. என்ன பேசுவது என்று தெரியாமல் பூமாலை வாய்க்கு வந்ததை மனதின் வலியை வார்த்தைகளாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்பா இதை நான் எதிர்பார்த்தேன்! நீங்க என்ன இருந்தாலும் சின்ன பிள்ளை பக்கம் தான் இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்! ஜெயராமனுக்கு உள்ளம் தகித்தது.
Advertisement
ஜெயராமா நீ மூத்தவன், நீயே புரிதல் இல்லாமல் பேசினால் நான் மத்தவங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்? பூமாலை ஓய்ந்து போனார்.
Advertisement
“நாலு பிள்ளை பெத்தவங்களுக்கு நடுத்தெருவில் சோறு”என்று ஊருக்குள்ள சொல்லுவாங்களே அது சரிதான் போல… பாப்பாத்திக்கு பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.
அத்தை சும்மா அழுது பசப்பாதீங்க.இவ்வளவு பிரச்சனைக்கும் மூல காரணம் நீங்கதான்….! தைரியமாக முகத்திற்கு எதிராக குற்றம் சாட்டினாள் சங்கீதா.
கண்ணீருடன் மூத்த மருமகளை நிமிர்ந்து பார்த்தார் பாப்பாத்தி.
Advertisement
சின்னவனுக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் தானே ஆகுது இத்தனை வருஷமா லீவுக்கு நாங்க வரது போறது இல்லையா? நீங்க எங்களுக்கு ஆசையா எதுவும் செய்யறதில்லையா?
இப்போ உங்க சின்ன மருமக வரவும் உங்களுக்கு இல்லாததை பொல்லாததை சொல்லிக்கொடுத்து புருஷனை தூண்டிவிட்டு குளிர்காயறா. எங்களை எல்லாம் விட உங்க மேல அவனுக்கு அக்கறை பொங்குதாமா?
இது கூட்டு குடும்பம் நாலு பேருக்கும் சமமான உரிமை இந்த வீட்டில் இருக்கு அப்படிங்கிற எண்ணமே உங்க சின்ன மகனுக்கும் மருமகளுக்கும் இல்லையே நாங்க தூரமா இருந்தா அப்படியே இருந்துடுவோமா…? பேச்சை வேறு திசையில் திருப்பிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
என்ன அஞ்சலி இவங்ககிட்ட நியாயம் எதிர்பார்த்துகிட்டு… எல்லோரும் ஒன்று கூடி தான் இருக்கோம்.தீபாவுக்கு போன் பண்ணி அவ புருஷனையும் வர சொல்லு சொத்து பிரித்து விடுவோம் என்றாள் சங்கீதா.
“—————————-“
பகீர் என்று அதிர்ந்த பார்வை பார்த்தார் பாப்பாத்தி. குறைந்த பட்சம் தங்கள் மூச்சு இருக்கும் வரையாவது இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தனர் அந்த தம்பதியினர்.
சங்கீதா எதுக்குமா அவசரப்படற? பூமாலை பதறினார்.
என்னைக்கா இருந்தாலும் பிரித்து தானே ஆகணும்? அது நீங்க இருக்கும் போதே நல்ல விதமா பிரிச்சுக் கொடுத்துட்டா அண்ணன் தம்பிக்குள்ள சுமுகமா உறவு நீடிக்கும்…. தந்தை முகம் பார்க்க துணிவின்றி எங்கோ பார்த்துக் கொண்டு பேசினான் ஜெயராமன்.
சரி சொத்தை பிரிப்பதாகவே வைத்துக் கொள்வோம் உங்க பங்கை வாங்கி என்ன பண்ண போறீங்க?
வயல் என்ன பைபாசிலா இருக்கு பிளாட் போட்டு கோடி கணக்குல விற்க போகுது? கோபம் கன்னன்றது அவர் வார்த்தையில்
ஏன் நாங்க வித்து வாங்கி வாயில போட்டுக்குவோமா?இது என்ன கேள்வி?நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு போவோம்…. சிலுப்பிக் கொண்டாள் சங்கீதா.
ஜெயராமா உன் சம்சாரம் தான் புரியாமல் பேசுது உனக்கு கூடவா ஊர் நிலவரம் புரியல?
வயல் வேலை பார்க்க இப்போல்லாம் எங்க ஆள் கிடைக்குது? ஏரி வேலைக்கு போய் நோகாம சம்பாதிக்க தான் நினைக்கிறாங்க….
காலம் எவ்வளவு மாறி கிடக்குன்னு மருமகளுக்கு புரியல! கலெக்டர் வேலைக்கு கூட ஆளு கிடைச்சுடும் போல களைப்பறிக்க ஆள் கிடைக்கிறது இல்லை.
மன்னரு இல்லைனா நாம பயிர் வைக்கவே முடியாது. அவன் கூட்டாளி பசங்க தான் நாத்து விட,அண்டை வெட்ட,வரப்பு கட்ட,மருந்து அடிக்க எல்லாம் அவங்க தான் வரது. இப்போ கூட லீவு கிடைச்சா மன்னரும் வயலில் இறங்கி வேலை பார்ப்பான்.
மன்னரு இல்லைனா அந்த செல்வராசு கோனார் நிலமே நாம வாங்கியிருக்க முடியாது. எவ்வளவு போட்டி அந்த நிலம் வாங்க…. காதும் காது வைத்த மாதிரி ரகசியமா பேசி முடிச்சவன் அவன் தான்.
போலீஸ்காரன் வயலுன்னு பயந்துகிட்டு நம்ம நிலத்துக்குள்ள அத்துமீறி யாரும் நுழைய மாட்டாங்க! ஒரு ஈ காக்கா கூட நம்ம வயலுக்குள்ள நுழையாதப்படி மன்னரு கவனிக்கிறான்.
போன வாரம் கூட வேலைக்கு போற வழியில நம்ம வயலுல உரம் மூட்டைய கொண்டு போட்டுட்டு போனான். ஸ்டேஷனில் இருந்து வர வழியில் வயலை ஒரு பார்வை பார்த்துட்டு வருவான்.
குத்தகைக்கு பயிர் வைக்க இங்கே எவன் காத்து கிடக்கான்? அவனவன் சவூதியில் ஒட்டகம் மேய்க்க போனாலும் போறான், துபாயில் கட்டிட வேலைக்கு போறான் நம்ம ஊருல சேத்துல இறங்க மாட்டேங்கிறான்.
மன்னரு ஒத்துழைச்சு தான் நாம இவ்வளவு நிலம் வாங்குனோம். பரம்பரை சொத்து ஒன்னேகால் ஏக்கர் தான். இன்னைக்கு பத்து ஏக்கர் சொத்து சும்மா வந்துடலை. நீங்க ஹாஸ்டலில் படித்து வெளியூருக்கு வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டீங்க!
அவன் படிக்கிற காலத்தில் இருந்தே என்னோட சேத்துல இறங்கி மண்ணை பிசைந்தவன். வெய்யிலு மழைன்னு பார்க்காம மாடா உழைத்தவன்.
என்கிட்ட ராத்திரியே பேசிட்டான். அண்ணனுங்க சொத்து கேட்டா பிரித்து கொடுத்துடுங்க! என்னைக்கா இருந்தாலும் பிரித்து தானே ஆகணும்? கூட குறைச்சல்ன்னு சண்டை சச்சரவு வேண்டாம். மனஸ்தாபம் இல்லாம நீங்களா பார்த்து யாருக்கு என்னனு எழுதி கொடுத்துடுங்க! எங்கே கையெழுத்து போடணும்னு சொல்லுங்க நான் வந்து போடறேன்னு சொல்லிட்டான்.
யாரும் எதுவும் பேசவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
குச்சி (மரவள்ளி )போட்ட பணமும்,நெல்லு வித்த பணமும் கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன் இன்னும் கொஞ்சம் உருட்டி புரட்டி முரளி செட்டியார் நிலம் வாங்கலாம்னு யோசனை இருக்கு.
ஒரு குடும்பமா ஒன்னா பாடுபட்டு ஒத்துமையா வாழ்ந்தா தான் இன்னும் கொஞ்சம் காணி பூமி சேர்க்க முடியும்! அப்புறம் உங்க இஷ்டம்.
மன்னரு அடிக்கடி சொல்வான் அண்ணன் தம்பி நாலு பேர் இருக்கோம். ஆளுக்கு நாலு ஏக்கர் நிலம் கூட இல்லைன்னா ஊருக்குள்ள என்ன மரியாதை?
அவன் ஆசைப்படி யோசனைப்படி தான் ஒவ்வொரு நிலமா வாங்கிட்டு வரேன். இன்னும் வாங்குவேன். சாகும் போது தலையில் தூக்கிட்டு போக போறதில்லை உங்களுக்காக தான் இந்த பாடு!
அதெல்லாம் வேண்டாம் பிரிச்சுகிட்டு தான் போவேன்னா நாளைக்கே ரெஜிஸ்டர் ஆபிஸ் போகலாம் என்றார்.
வேண்டாம் என்பதாய் சங்கீதா கணவனுக்கு ஜாடை காட்டினாள்.
அய்யோ ஒத்துக்காதீங்க என்பது போல அஞ்சலி அவசரமாய் நயனபாஷை புரிந்தாள் கணவனுடன்.
ப்பா இப்போ என்ன நடந்து போச்சு இவ்வளவு இமோஷன் ஆகறீங்க? பெரியவங்க உங்களுக்கு தெரியாததா? குடும்பத்துல அப்படி இப்படி உரசல் வந்தா நீங்க தான் அதட்டி மிரட்டி நல்ல வழி காட்டணும்! அடித்தானே பல்டி சரவணன்.
அப்பா எல்லாரும் வந்திருக்கோம் குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு வருவோம் என்று செண்டிமெண்ட் பிட்டை சீரியஸாய் போட்டான் ஜெயராமன்.
பாப்பாத்தி கணவரை மெச்சிக் கொண்டார் மனுஷன் இப்படி பாயிண்ட் பாயிண்டாய் பேசி இன்று தானே பார்க்கிறார
மன்னர் என்ன பேச சொல்லிவிட்டு போனானோ அச்சரம் பிசகாமல் அப்படியே பேசி அலற விடுட்டாரே பூமாலை.
“————————“
சரவணா காரியம் தான் பெருசு, வீரியம் பெருசில்ல…. எப்போவாது வரோம் போறோம் எதுக்கு இந்த பயலை பகைச்சுக்கணும்?
நீ சொல்றது தான் சரி. அவன் இல்லாம இங்கே என்ன நடக்கும்? அம்மா அப்பாவை யார் வச்சு பார்த்துக்க முடியும்? உன் வீட்டிலேயும்,என் வீட்டிலேயும் விருந்தாளியா கூட சேர்த்துக்க மாட்டாங்க.
அவன் இங்கே இருக்க வரைக்கும்,கூட்டு குடும்பமா இருக்க வரைக்கும் நமக்கு நிம்மதி என்றான் சரவணன்.
ஆமா சரவணா அப்பாவும் சரி அம்மாவும் சரி நமக்கு சேர்த்து வைக்க தான் பார்ப்பாங்க. அவங்க என்னைக்கும் ஓரவஞ்சனை செய்ததில்லை. இனி நாமும் அவங்க மேல அக்கறை காட்டணும்! நாம அம்மா அப்பாவை வந்து அடிக்கடி பார்த்துட்டு போகணும். அவங்க ஆசைப்படறதை வாங்கி கொடுக்கணும் என்றான் ஜெயராமன்.
ஆமாண்ணா நமக்கு கடைசியில் பிறந்தவன் எப்படி எல்லாத்தையும் இழுத்துபிடிக்கிறான். அவன் அளவுக்கு இல்லைனாலும் நாமளும் அம்மா அப்பா நலனில் அக்கறையா இருக்கணும் என்றான் சரவணன்.
என் பொண்டாட்டி குனிஞ்சு நிமிர மாட்டா…. பெரிய மகாராணின்னு நினைப்பு. இங்கே ஓவரா அதிகாரம் பண்ணி மன்னருகிட்ட வாங்கி கட்டியிருக்கா. ஒரு வகையில் எனக்கு சந்தோஷம் தான்.
என் பொண்டாட்டி மட்டும் என்னவாம்….? வீட்டு வேலைக்கு ரெண்டு வேலைக்காரம்மா வச்சிருக்காண்ணா…. அவளுக்கு அவ்வளவு சொகுசு.
அம்மா பாவம்டா எவ்வளவு வலி வேதனை இருந்தாலும் நமக்கு சொல்றதே இல்லை… கரகரத்தது ஜெயராமன் குரல்.
அப்பா மட்டும்? இது வேணும் அதுவேணும்னு அவரும் கேட்டதே இல்லை. நம்ம சந்தோஷம் தான் அவங்க சந்தோஷம்.
ஜெயராமா மன்னரு ஜாதகம் ராஜ ராஜ சோழன் ஜாதகம் போலன்னு கணிக்கும் போதே ஜோசியர் சொன்னாரு. அவனுக்கு பூமியோகம் அமோகமா இருக்குமாம்.
அவனோட சேர்ந்தே இருக்கிறது தான் நமக்கு நல்லது. நிறைய படிச்சு பெரிய வேலையில் இருக்கிற நம்மை விட அவன் புத்திசாலிதாண்டா!உண்மையை விளம்பினான் ஜெயராமன். அதை ஆமோதித்து தலை அசைத்தான் சரவணன்.
“———————–“
மன்னர் வீட்டுக்கு வரும்போது வீடே நிசப்தமாய் இருந்தது.
சாப்பாடு எடுத்து வைக்கவா? என்றார் பாப்பாத்தி.
சரி என்றவன் குளித்து உடைமாற்றி வந்தமர்ந்தான்.
சுட சுட சம்பா ரவை உப்புமா தேங்காய் சட்னி எடுத்து வைத்தார்.
அமைதியாய் சாப்பிடத் தொடங்கினான்.
ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்ப்போடு பார்த்தார். அவன் தான் ஜித்தனுக்கு ஜித்தன் ஆச்சே…
பொறுக்க முடியாமல் அவரே ஆரம்பித்தார்….. நடந்தவற்றை அவர் சொல்ல அவன் கேட்டுக் கொண்டான். எந்தவித கருத்தும் சொல்லவில்லை. அவனுக்கு தெரியுமே இவர்கள் இப்படியான மனிதர்கள் என்று!
நீ என்னப்பா நினைக்கிற? ஆவலாய் கேட்டார்.
ம்ம்மா இது பூமாலை குடும்பம். இந்த குடும்பத்துக்கு தலைவி நீங்க. உங்க காலம் வரைக்கும் அது அப்படியே தொடரணும்! அந்த பெருமையோட வாழறதை தான் நான் என்னைக்கும் விரும்புவேன்.
நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க கத்துக்கோங்க! உட்கார்ந்து பழகிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க! உங்களுக்கு ஒரு நாளைக்கு சும்மா இருக்க முடியல.
மருமகளுங்களை கொடுமை படுத்த சொல்லலை…. அதை கொஞ்சம் செய்,இதை இப்படி செய்யுனு பெரியவங்களா கூடவேயிருந்து பக்குவமா நீங்க சொல்லலாம். உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
மகனின் பேச்சில் அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. தன் பிள்ளைக்கு தன் மீது எவ்வளவு அக்கறை! நெகிழ்ந்து போனார்.
பெரியவன் குல தெய்வம் கோயிலுக்கு போகலாம்னு சொன்னான்.
நீ நாளைக்கு சுபியை கூட்டிட்டு வரியா?
சரிம்மா பார்க்கலாம் என்றான்.
அத்தை தீபா வரலையாம்… அவ வரக்கூடாதாம். அஞ்சலி தகவல் சொல்லிவிட்டு போனாள்.
அதை காதில் வாங்கிக் கொண்டு தனதறைக்கு சென்றவனின் கண்களில் சட்டென்று தென்பட்டது திறந்திருந்த கபோர்டில் ஆரஞ்சு நிற விஷ்பர் அல்ட்ரா.
சுப்ரஜா பனிரெண்டாம் தேதிக்குள் தவறாமல் மாதவிலக்காகி விடுவாள். இன்னும் நாப்கின் பாக்கெட் பிரிக்கப்படாமல் இருந்தது.
ஏன்?
இன்று தேதி இருபத்தேழு. முந்தா நாள் ஊருக்கு போகும் வரை அவளுக்கு மாதவிலக்கு வரவில்லை என்றால்…. அவனுக்குள் ஓடிய கணக்கு இன்ப அதிர்வை நரம்புகள் வழியாக மீட்டி உடல் சிலிர்த்து குலுங்கி நின்றது.
சட்டென்று நாற்காலியில் சரிந்து அமர்ந்தான். முகத்தை மூடிக் கொண்டான். பூரிப்பில் லப் டப் டப் லப்பாக மாறி துடித்தது. ஏதோ நெஞ்சை அழுத்தியது. ஏன் கண்கள் கசிகிறது? புரியவில்லை அவனுக்கு அதீத இன்பம் கொடுத்த நெகிழ்வாக இருக்கலாம்.
மிகப்பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி விட்ட பூரிப்புடன் சுவற்றில் மாட்டியிருந்த தங்களின் திருமண புகைப்படத்தை பார்த்தவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
இருவர் மூவராகிவிட்டோமோ!
போனை கையில் எடுத்து விட்டான்.
அப்படி இல்லை நான் தலைக்கு ஊற்றிக் கொண்டேன் என்று அவள் சொல்லிவிட்டால்? ஆனால் அவளுக்கு சரியான சைக்கிள் தானே…? உறுதிப்பட தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என்று மனதிற்கு பூட்டு போட்டுக் கொண்டான்.
ஆனால் அவன் மனம் அடித்துக் கூறியது நீ அப்பா ஆகபோகிறாய்.
எப்பொழுது விடியும் மனைவியை போய் பார்ப்போம் என்று மனம் தவியாய் தவித்தது.
“————————“
வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. காலை உணவை உண்டு கொண்டிருந்தான்.
என்ன மன்னரு அம்மா சொன்னாங்களா? எதுவும் நடவாதது போல் பேசினான் ஜெயராமன்.
ம்ம்ம்ம் சொன்னாங்க என்றான்.
தேவையில்லாம சங்கடம் வந்துடுச்சு அதையே பிடிச்சு தொங்கிட்டு நின்னா உறவுகள் முறிந்து போகும். நீரடிச்சு நீர் விலகாது.
அம்மாக்கு ஹெல்ப் பண்ணனும்னு என் பொண்டாட்டிக்கு சொல்லியிருக்கேன்.
உள்ளே சங்கீதா மதிய சமையலுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அஞ்சலி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான் மன்னர்.
error: Content is protected !!