Skip to content
Post Views: 2,061
“இந்த இடம் அப்டி என்ன ம்மா அவசியம், சொன்னா இவன் கேக்க மாட்டானா?”
பிடிவாதமாக அமர்ந்திருந்த சகோதரனை முறைத்தான் கிரிதரன். அவனுக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கும் இதுவே கேள்வியாக ஏன் ஆதங்கமாக இருந்தது.
“பார்த்திபா இவ்வளவு நடந்த அப்பறம் எதுக்கு இன்னும் அதையே வாங்கணும்னு நிக்கிற?” ராஜேந்திரன் மகனிடம் கேட்டார்.
வீட்டில் அனைவரும் வரவேற்பறையில் இரவு உணவை முடித்து அமர்ந்திருக்க இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் பத்திரப்பதிவு என தகவல் கொடுத்தான் குடும்பத்தினருக்கு.
Advertisement
வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அவனது இந்த வேகமும் பதற தான் வைத்தது.
“ப்பா நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல இது செட் ஆகிடுச்சு. திரும்பவும் ஆரம்பத்துல இருந்து ஒரு இடத்தை புடிச்சு, கட்டடம் எடுத்து பொருளை ஷிபிட் பண்ணி… பெரிய ப்ராசஸ்.
இது டவுன்ல இடம். போக்குவரத்து, செலவுனு எல்லாமே சரியா இருக்கு. ஆடிட்டர் ஆபீஸ் இங்க வந்துடும். இப்போ இல்லனாலும் நாள பின்ன இடத்தை வேற எதுக்காவது யூஸ் பண்ணிட்டு குடவுனை வேற பக்கம் மாத்திக்குவேன். சோ எல்லாமே பிச்சர் பெர்பக்ட்டா இருக்கு”
Advertisement
அவனுக்கு அந்த ஒரு நாள் போதுமே இடத்தை கைவிட்டால் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என யோசிக்க. அதனாலே பிடியாய் நின்று காரியத்தை சாதித்துவிட்டான்.
Advertisement
“இந்த ஒரு இடம் மட்டும் ஊர்ல இல்லையே தம்பி. பணம் கொஞ்சம் முன்ன பின்ன வந்தாலும் வேற பாக்கலாமே” என்றார் அன்னை நிகழ்ந்த நிகழ்வுகளை மனதில் வைத்து.
“இந்த இடத்துக்கு என்ன ம்மா குறைச்சல்?”
“குறைச்சல் இருக்கா இல்லையானு எனக்கு தெரியல ப்பா. ஆனா மனசுக்கு ஒப்பலை. ஆரம்பத்துல இருந்து எதுவும் நினைச்ச மாதிரி நடக்கல”
Advertisement
“நேரம் காலம்ல எனக்கு பெருசா நம்பிக்கை இல்ல ம்மா. என்னோட உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு”
ராஜேந்திரன், “நம்பிக்கை வெற்றியோடு ஒரு பாகம் தான் ப்பா. அதோட நேரம் காலம் எல்லாம் சேர்ந்தா தான் ஒரு கால சக்கரம் முழுமையா சுத்தும்”
பார்த்திபன், “முன்னேற்றத்தை நோக்கி நடக்குற எந்த நேரமும் என்ன பொறுத்த வர நல்ல நேரம் தான் ப்பா”
“டேய் ரொம்ப பண்றடா. உனக்காக மட்டுமே பாக்குற, உன்னோட நல்லதை யோசிக்கிற எங்களுக்காக யோசிக்க மாட்டியா?” கிரி சகோதரன் பேசுவதில் பொறுமையற்று கேள்வி எழுப்பினான்.
“உங்களுக்காக எப்படி ண்ணா நான் யோசிக்காம இருப்பேன்?”
“நீ யோசிக்கலடா. எந்நேரமும் ஏதாவது உன்ன பத்தி யோசிச்சு பயந்துட்டே இருக்க முடியுமா நாங்க?”
“பயப்பிட அங்க என்ன பேய் பிசாசா இருக்கு?” வீட்டினரை எப்படி சமாளிக்க போவதென சற்று பயமிருந்தாலும் அவர்கள் பேச்சிற்கு மசிய கூடாதென்பதில் மட்டும் இரும்பென உறுதியாக இருந்தான்.
“இந்த பிடிவாதம் தான் டா உனக்கு எதிரியே” இத்தனை நேரம் அமைதியாக இருந்த வசந்த் சகோதரனை முறைத்தான், “அதான் எல்லாரும் சொல்றாங்கல, அங்க என்ன பிரச்சனை நடந்துச்சு எதுவும் தெரியல. அதையும் சொல்ல மாட்டிக்கிற”
“அது அவர்க்கு ஏதோ அவசர தேவை போல, அதான் அப்டி சொல்லிட்டார். பேசி சரி பண்ணியாச்சு” என்றான் பார்த்திபன் அனைவருக்கும் பொதுவாக.
எவரும் அதில் தெளியவில்லை. இன்னும் அரைமனத்தோடு தான் இருந்தனர்.
“அம்மா…” அன்னையை பார்த்திபன் அழைக்க அவரோ மருமகளை பார்த்தார்.
“என்ன ஆரபி இது?” அவர் கேள்வியில் கணவனை பார்த்து பின்னர் அவரிடம்,
“அவாளுக்கு என்ன தோணுதோ அதை பண்ணட்டுமே அத்தம்மா” அவளது பேச்சில் மொத்தமும் அதிருப்தியே குடும்பத்தினரிடம்.
“வீட்டுல எல்லாரும் சொன்னா அதுல விஷயம் இருக்குனு புரிஞ்சிட்டு பேசணும் ஆரபி, அதை விட்டு நீயும் தம்பி சொல்றதையே சொல்ற” வீட்டினர் இத்தனை கூறியும் எதுவும் பேசாதிருப்பவளை பார்த்து கமலவல்லி கண்டித்தாள்.
‘அப்டியே நான் சொல்றதை அவர் கேட்டுண்டு தான்…’ ஓரக்கண்ணால் கணவனை முறைக்கவும் தவறவில்லை மனைவி.
“நீ பண்றது சரியில்ல ஆரபி. புருசனுக்கு சப்போர்ட்டா நிக்கலாம் ஆனா அவனோட குருட்டு நம்பிக்கைல இணைக்கும் பங்குபோட்டு சரியான வழிய காட்ட மட்டும் தவற கூடாது” என்றார் மாமியாரும் மருமகளின் செயல் பிடிக்காமல்.
இப்பொழுது எதுவும் பேசாமல் ஆரபி மௌனமாய் நிற்க இதற்கு மேல் பேச விரும்பாத வீட்டினர் விட்டுவிட்டனர்.
ஆனாலும் வித்யாவுக்கு தான் மனம் ஆறவே இல்லை. இரவு மருமகள் பாலை கொடுக்கும் பொழுது கூட, “போன தடவை அவன் பிஸ்னஸ் பண்ணப்பவும் நாங்க வேணாம்னு தான் சொன்னோம். அது நம்பிக்கை இல்லாம சொல்லிட்டோம். இது அப்டி இல்லையே ம்மா.
அவனோட உழைப்புனு அவன் மேல நம்பிக்கை இருந்தாலும் ஏதோ மனசுக்கு சரியாவே படல ஆரபி” சொல்லி அனுப்பினார். அவரை விட அவளுக்கு பயம் உள்ளதே. அவனிடம் கூறினால் ஏற்றுக்கொள்வானா என்ன.
பேசி பார்க்கிறேன் என கூறியவள் அவனிடம் பேச வாயை திறந்த பொழுதே, “ப்ளீஸ்டி நீயும் ஆரமிக்காத”
நெற்றியை நீவி சலிப்பாய் கூறியவன் பால்கனி பக்கம் சென்றுவிட்டான். பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை.
உறங்கும் பூர்வி அருகே அமர்ந்து நொடிகள் சில யோசித்தவள் பிறகு கணவனை தேடி சென்றாள். இரவு வானத்தை வெறித்து நின்றான்.
மனைவி அரவத்தை உணர்ந்து, “அட்வைஸ் ஆரமிக்காத மாமி. போய் தூங்கு” என்றான் உர்ரென.
“நான் சொல்றதை அப்டியே நீங்க என் ஆத்துகார் கேட்டுண்டு தான் அடுத்த வேலை பாரு” உதட்டை சுளித்து கோவம் காட்டியவளை திரும்பி பார்த்தான்.
“என்ன பாக்குறேள், உண்மை தானே பேசிண்டு இருக்கேன். உமக்கு என்ன தோணுத்தோ அதை தான் செய்வேள், அதுல பொண்டாட்டி பேசுனா என்ன, வீட்டாள் பேசுனா உமக்கு என்ன?”
“என்னடி ரொம்ப தான் ஆத்துகாரை ஏசுர” நொடித்துக்கொண்டவள் முகத்தை திருப்ப அவள் நாடி பிடித்து தன்னை பார்க்க செய்தான்.
“நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் ஆராம்மா” வீட்டினரின் கோவத்தின் முன்பு மனம் திறக்காதவன் மனைவி காட்டிய பாவனையில் தன்னாலே அவள் முகம் பார்த்து விகசித்தான்.
அத்தனை நிம்மதி, பெரிய நம்பிக்கை அவன் கண்களில். அதனை கவனித்த மனைவிக்கு இந்த சிரிப்பை எப்பொழுதும் அவன் முகம் சொந்தமாக்கியிருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம், அவன் நம்பிக்கையை அந்த மண் தான் காக்க வேண்டும் என உளமார வேண்டுதலையும் மனதில் வைத்தாள்.
வாகாக அவனது அணைப்பினில் தானே சென்று சேர்ந்தாள்.
மனைவியின் இந்த திடீர் நெருக்கத்தில் இன்புற்றிருந்தவன் மனமும் உல்லாச கூத்தாட அவள் இடை வளைத்து கைகளில் அள்ளியவன் மெதுவாக கீழே அமர்ந்துகொள்ள, அங்கு ஆரபி வைத்திருந்த முல்லைக்கொடி அவர்களுக்கு அழகியதோர் தனிமையை கொடுத்தது.
வாகாய் கணவனின் கழுத்தின் முகம் புதைத்தவள் கூச்சத்தோடு அவனை பார்க்க, புருவம் உயர்த்தி சிரித்தான் பார்த்திபன். எனோ இவனிடம் மட்டும் உணர்வுகள் எல்லாம் தினம் தினம் பிறக்கின்றது.
புதியதோர் தொடக்கம் போல் ஒவ்வொரு நாளும் உணர வைக்கிறான், சிரிப்பால் பார்வையால் மயங்க வைக்கிறான்.
“என்னடி மாமி அமைதியா மயக்குற” ஹஸ்கி குரலில் குற்றம் சாடியவனை பார்த்து சிரித்தவள், அவன் மார்பை மறைத்திருந்த சட்டையை விளக்கி முடியடர்ந்த மார்பினில் முத்தம் வைக்க, ஜிவ்வென ஏறியது பார்த்திபனுக்கு.
“இது சரியில்ல சொல்லிட்டேன்”
“என்ன சரியில்லாததை கண்டுட்டேள்?” என்றவள் இன்னுமொரு முத்தம் அதே இடத்தினில் வைக்க,
“கண்ணு மூக்குத்திக்கு போகுது மாமி” எச்சரிக்கை வைத்த கணவனை முறைத்தாள்.
“பிச்சிடுவேன் ன்னா”
“அப்றம் ஏன் ஆசையா தூண்டுற?” குற்றம்சாட்டி இன்னும் முறைத்தான்.
“என்ன தூண்டிட்டேன். என் ஆம்படையாளை அணைச்சு ஆசையா முத்தம் வச்சேன். அது உமக்கு தப்பா படுத்தா?”
“தப்பு தான். அப்படியும் பண்ணிட்டு இப்படியும் கதை விடுறது”
“நேக்கு அது தப்பில்ல. போய்க்கோங்கோ அப்டி தப்பா பட்டா” அவன் மார்பினில் கை வைத்து ஆரபி தள்ளிவிட, அவள் தள்ளிய வேகத்தில் மீண்டும் அவளை நெஞ்சோடு அணைத்திருந்தான் பார்த்திபன்.
“கொழுப்பு கூடி போச்சு இந்த வாய்க்கு” மனைவியின் உதடு பிடித்து குறை கூறியவன் அழுத்தமாக அவளித்தலை சிறை செய்து விடுவித்தான்.
அவனது ஆழமான முத்தத்திலிருந்து மீண்டு வந்தவள், “பார்தி நேக்கு உங்க கைக்குள்ள இருக்கனும். வேற எந்த எண்ணமும் இப்போ இல்ல” என்றாள் அவனிடம் எப்படி அவன் ஆசைக்கு தடா போடுவதென தெரியாமல்.
“தெரியும் ஆராம்மா” பேதையை தோளோடு அனைத்து அவள் உச்சியில் நேசம் பதித்தான், “உனக்கும் பயம் இருக்கு தானே” என்றே கேள்வியோடு.
‘நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு’ என்பதை அவனிடம் சொல்ல தான் முடியவில்லை பெண்னால்.
“உமக்கு நான் எப்பவும் ஸ்ட்ரென்த்தா இருக்கனும் ஆசைப்படுறேன் ன்னா. நீர் எந்த முடிவு எடுத்தாலும் நல்லதே நடக்கும்னு பகவாண்ட வேண்டிண்டே உமக்கு பக்கபலமா நிப்பேன். இந்த வயசுல துணிஞ்சு செய்யாம வேற எப்போ செய்றதாம்?”
எங்கிருந்து தான் இந்த வார்திகள் தன்னுடைய நாவில் வந்து தாண்டவமாடியதென அவளுக்கே தெரியவில்லை.
பார்த்திபனுக்கு மனம் குளிர்ந்து போனது, “இது போதும் ஆராம்மா, மலையவும் அசைச்சிடுவேன்” என்றான் உவகையோடு.
“நான் இன்னும் பேசி முடிக்கலையே ன்னா” குண்டு வெடிக்க காத்திருக்கிறதென புரிந்தவன் சுதாரித்து அவள் விரல்களை தன்னோடு சிறை செய்துகொண்டான்.
“நேக்கு உண்மை மட்டும் சொல்லுங்கோ” தலை ஆட்டினான்.
“பாப்பா நகை இல்லாம மிச்ச பணம் எங்க வாங்குனேள்?”
“அதான் சொன்னேன்ல ம்மா, வசூல் பணம் எல்லாம் கறாரா பேசி வாங்கி தான் சமாளிச்சேன்”
கண்கள் சிவப்பேற கணவனை முறைத்தவள் அதே கோவத்தோடு அவனது சட்டையை கொத்தாக பற்றி, “பொய் பேசாதேள், நேக்கு சுத்தமா அது புடிக்காது”
மனைவியின் இந்த கோவம் சாதாரணம் அல்ல, ஏன் அவன் அவளது அதீத கோவத்தை பார்த்ததே இல்லை. அவனிடம் இது போல் அரட்டி பேசியது கூட இல்லை, இதுவே அவளது தீவிரத்தை கூற, உண்மையை அதற்கு மேல் அவனாலும் மறைக்க முடியவில்லை.
“கொஞ்சம் வட்டிக்கு வாங்கியிருக்கேன் ஆராம்மா” பிடித்திருந்த அவன் சட்டையை அதே கோவத்தோடு தள்ளிவிட்டாள்.
“எதுவுமே நேக்கு தெரிய கூடாது. உமக்கு என்ன தோணுத்தோ அதை யாரோட உபன்யாசமும் கேக்காம செஞ்சிட்டே இருப்பேள். எங்களுக்கு வேலையே நீங்க செய்றதை கை கட்டி ஓரமா நின்னு வேடிக்கை பாத்துண்டே உம்மை பாராட்டி கை தட்டணும். அப்டி தானே?”
“என்ன மாமி இப்டி எல்லாம் பேசுற? உன் சொல் பேச்சு நான் கேக்காம இருந்துருக்கேனா?”
அவள் நாடி பிடிக்க வந்த அவன் கையை தட்டிவிட்டு, “என்ன கேட்டுட்டேள் இது வர?” என்றாள் முறைப்போடு.
அவனிடம் பாதி இல்லை, நாள் நேரம் பார்க்க கூறியிருந்தார். வேறு? எதுவும் இல்லை. அவ்வளவு பெரிதாக முடிவெடுக்க எதுவும் நிகழந்துவிடவில்லை. பூர்வி சார்ந்த விஷயங்களை அவளை கேட்காமல் செய்தது இல்லை. ஆனால் அவள் இப்பொழுது கேள்வி வைத்தது அவள் தொழில் ஆயிற்றே.
“சரி ன்னா, நீங்க உங்க ஆபீஸ், உங்க இஷ்டம்னு இருக்கேள். உமக்கு என்ன தோணுதோ செஞ்சிட்டேள். தப்பில்ல, நானும் புரிஞ்சிட்டேன். ஆனா இந்த பணம் விஷயத்துல நேக்கு ரொம்ப ஏமாற்றம் தான்”
“ஆரபி…”
“இல்ல வேணாம்னு தானே முடிவு பண்ணிட்டேள், அதுக்கு நீங்க என்ன விளக்கம் குடுத்தாலும் நேக்கு மனசு ஒத்துக்காது. நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லனு நினைச்சின்டேன், இனி அப்டி இருக்க கூடாது. புத்திக்கு லஸன் எடுத்துண்டே இருக்கனும் போல, மனசு அதிகமா நேசிக்கிறவாகிட்ட இருந்தும் ஏமாற்றங்கள் வரும் அதையும் ஏத்துக்க பழகுனு”
ஒரு ஒத்துக்கம் இருவருக்கும் இடையே உருவானது போல் தோன்ற உடனே மனைவியின் மடியில் படுத்து அவள் வயிற்றோடு முகம் புதைத்து கட்டிக்கொண்டான். விளக்கம் கொடுக்க பிடிக்கவில்லை. தோன்றவும் இல்லை.
“எதுவுமே சொல்ல கூடாதுனு இருக்கேள்”
சற்று முன்பு அவனை சுட்டது சிறு வார்த்தை தான், அதனால் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ என உணர்ந்தவள் உடனே அவனுக்காக மனம் இறங்கினாள்.
“விட்ரலாமே மாமி, தேவையில்லாத சிந்தனை எல்லாம் வருது” அவன் தலை கோதி சமாதானம் கூறினாள்.
*****
அந்த வாரமே ஒரு நாளில் பத்திர பதிவு நடந்தது. வீட்டினரை இருவரும் அழைத்து சென்றிருக்க, தாமோதரன் வந்து நின்றார். அவருக்கு நிற்கவே பிடிக்கவில்லை.
அதிலும் பார்த்திபன், விஷ்ணு இருவரும் உப்பு சப்பில்லாத காரணத்தை வைத்து அவரை தலைமை தங்குவது போல் முன் நிறுத்தியே இடத்தை தங்கள் பெயரில் சட்டப்படி பதிவு செய்திருந்தனர்.
எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்ய நினைத்தது, தாமோதரனின் தலையீட்டால் கொஞ்சம் ஆரவாரத்தோடு தான் நடந்து முடிந்தது. ஆரபிக்கு தாமோதரன் முக பாவனையும், கணவனின் இந்த திடீர் அதீத உரிமையில் சந்தேகம் தான் பிறந்தது.
அன்றிரவு பார்த்திபன் வீட்டினருக்கு தடபுடலாக விருந்தை வைத்தான் அனைவரையும் கடைக்கு அழைத்து சென்று.
நிம்மதியான மனநிலையோடு இரவு மெத்தையை அடைந்தவனிடம், “அந்த தாத்தாவ உங்களுக்கு புடிக்காது நினைச்சேன் ன்னா, என்ன திடீர்னு இவ்ளோ உரிமை?”
“இப்பயும் புடிக்காது தான், ஆனா விஷ்ணுகு ரொம்ப வேண்டப்பட்டவர். விட்டு எதையும் செய்ய முடியாதுல” என்றுவிட்டான்.
“எதையோ மறைக்குறேள்” என குறை கூறி அவள் முகம் காட்டி படுத்துவிட, மனைவியை தன்னை நோக்கி இழுத்து வந்தவன் அவளை அணைத்து உறங்கி போனான்.
பார்த்திபன் விஷ்ணு இருவரும் கடையை மேம்படுத்த துவங்கினர். அவர்களுக்கு ஏற்றார் போல் குடவுனில் இருந்த சிறிய அலுவலக அரை இன்னும் சற்று விரிவுபடுத்தப்பட்டது.
பொருட்களை சேமிக்கும் சேமிப்பு கிடங்குகளை வகை வகையாக பிரித்து வைத்து, போதாதற்கு தனியாக ஒரு இடத்தினை உருவாக்கும் பணிகள் துவங்கவிருந்தது.
அநாயாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க, முதலில் இரண்டு நாட்கள் வராமல் குற்றஉணர்ச்சியில் இருந்தவள் இடம் பார்த்திபன் விஷ்ணு பெயருக்கு மாறி வேலைகள் துவங்கியதை கேள்விப்பட்டு கையை கூட பொருட்படுத்தாமல் வந்துவிட்டாள்.
அவள் இருக்கும் நேரம் விஷ்ணுவும், அவன் இருக்கும் நேரம் இவளும் நிற்பதில்லை. ஆளுக்கு ஒரு பக்கம் சுற்றி வர துவங்கினர். அதுவும் நல்லதாக தான் பட்டது பார்த்திபனுக்கு.
நடந்த அக்கப்போரில் விஷ்ணுவின் திருமணம் தள்ளிக்கொண்டே போக ஏற்பாட்டை துவங்க தானே முன் வந்து விஷ்ணுவின் பெற்றோரிடம் பேசினான்.
“இவன் தான் ப்பா கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லிட்டான்” என்றார் அவன் அன்னை.
“என்னடா இது?” பார்த்திபன் நண்பனிடம் முறைப்போடு கேட்க, “இவ்ளோ பிரச்சனை வச்சு பேச விருப்பமில்லைடா. இனி வேணும்னா பாக்கலாம்” என்றான்.
“பேசுங்க ம்மா. இவனும் வயசாகுது, கல்யாணம் பண்ணி வச்சா தான் பொறுமை வரும் கோவம் குறையும்” என்றான் பார்த்திபன்.
“எப்படி நீ மாறின மாதிரியா?” நக்கலாக விஷ்ணு கேட்க வந்த வெட்கத்தை அடக்கி நண்பனை அடித்தான் வலிக்காமல்.
“நான் பொண்ணு வீட்டுல பேசுறேன் ப்பா. என்னோட அப்பாக்கு இந்த வாரத்துல திதி வருது அதை முடிச்சிட்டு நேர்ல பேசிட்டு நாள் குறிச்சிடலாம்” என்றார் விஷ்ணுவின் தந்தை.
சரி என சில பொதுவான பேச்சுகளோடு வீட்டிற்கு வந்தவன் வசந்தின் திருமணம் பற்றியும் பேசினான்.
“இன்னைக்கு நாள் நல்லா இருக்கே பேசிடலாமாங்க?” வித்யா கணவனிடம் கேட்க, நேரத்தை பார்த்தனர். நான்கு என காட்டியது.
வீட்டினர் முடிவெடுத்து ஆறு மணிக்கு அங்கு வருவதாக பெண் வீட்டாரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. ஆர்வம் மிகுதியாக பல நாட்கள் பிறகு வீட்டில் திருமணம் என குடும்பமே குதூகலமானது.
இளையவள் மேக வண்ண நிறத்தில் அழகிய பிராக் ஒன்றை அணிந்து பிதுங்கிய உதடோடு வந்து பெரியம்மாவிடம் தலையை காட்டினாள். கமலவல்லிக்கு சிரிப்பு வந்தது.
“அக்கா அவளுக்கு நான் துருவ்க்கு டிரஸ் பண்ணி விடுறது கோவம் அதான் உங்ககிட்ட வந்துட்டா” என்றாள் ஆரபி மாடியிலிருந்து தகவல் கூறி.
அன்னை கூறியது கேட்டு குட்டிக்கு இன்னும் அழுகை வந்தது. உடனே கமலவல்லி அவளை தன்னுடைய மடிக்கு மெதுவாக கிடத்தி கன்னத்தை துடைத்தாள்.
“அண்ணா வரட்டும்டா, அடி பிச்சிடலாம். நீங்க அழுகாதீங்க” என்றாள்.
“நானு… நானு முடி… முடி சீவல” என்றாள் மழலை.
“சரி வாங்க பெரிம்மா சீவிவிடுறேன்” இவள் எழ போக வசந்த் வந்துவிட்டான்.
“அண்ணி நீங்க இருங்க. நான் பாத்துக்குறேன்” என்றவன் மாடி படியில் பாதி ஏறி, “டிரஸ் ஓகேவா?” கமல் சூப்பர் என சைகை செய்ய, அவள் முன்னிருந்த கவரை காட்டி, “அப்போ அதுல ஐஸ் கிரீம் வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க” என்றான்.
“அப்போ நல்லா இல்லனா ஐஸ்கிரீம் வந்திருக்காதோ” ஆமாம் என தலை அசைத்தவனுக்கு இங்கிருந்து மேல முறைப்பு பறந்தது.
சிரிப்போடு மேலே வந்தவன் காதில் ஆரபி துருவ் பேச்சுவார்த்தை கேட்டது.
“அப்போ இந்த சித்தி நம்ம வீட்டுக்கு வருவார்களா?”
“ம்ம். வேகமா வந்துடுவாங்க” என்றாள் ஆரபி.
“அப்போ… அப்போ அவங்களும் எனக்கு சாக்லேட்ஸ் வாங்கி தருவாங்களா?”
“நிறையா வாங்கி தருவாங்க உங்க சித்தப்பா கூட சேர்ந்து” சிரியவனுக்கு முகம் பிரகாசமானது. பார்த்திபன் அவனது சிகையை சரி செய்ய சமத்தாக சித்தப்பாவிடம் நின்றான் துருவ்.
“டை வேணுமா துருவ்?”
“வேணாம் சித்தப்பா” பார்த்திபனின் குரலை கேட்கவும் ஆரபிக்கு உற்சாகம் பிறக்க உடனே சித்தப்பனின் கைகளில் இருந்து துள்ளி அவர்கள் அறைக்குள் ஓடினாள், அவளை தொடர்ந்து வசந்த்தும்.
“ப்பா ப்பா… தூக்குன்ன” இரண்டு கைகளையும் விரித்து குழந்தை கேட்க அவளை கைகளில் எடுத்த தந்தையிடம், “மாமி நானுக்கு தலை சீவி விதல” என குறைபட்டது குழந்தை.
ஆறவி மௌனமாய் மகளின் புகாரை கேட்டு சிரிக்க, “அம்மா பிஸியா இருந்துருப்பாங்கடா. வாங்க அப்பா சீவி விடுறேன்” மகளின் சிகையை கச்சிதமாக ஆரபி போல சரி செய்தவன் திரும்பி சகோதரனை பார்த்தான்.
“வசந்த், அந்த கபோர்டுல ஒரு புது ஷர்ட் இருக்கு, அதை மாத்து” “டேய் இதுவே நல்லா தான் இருக்கு” என்றான் வசந்த் மாற்ற விருப்பமில்லாமல்.
அதை மாற்றினால் அடுத்து காற்சட்டையையும் மாற்ற வேண்டும் என நினைத்து.
“இல்ல தம்பி அவா சொல்ற சட்டையை போட்டு பாருங்களேன், இந்த பாண்ட்க்கும் பொருத்தமா இருக்கும். லைட் கலர்ஸ் போட்டா முகம் ப்லசண்டா இருக்கும்” இருவரும் கூற சென்று மாற்றி வந்தவனுக்கு நிஜமாகவே அழகாக தெரிந்தது.
“பூர்வி நீயும் சித்தப்பாவும் சேம் கலர்டா” பார்த்திபன் எடுத்து கொடுக்க குழந்தை சிரிப்போடு சித்தப்பனை பார்த்தது.
“வசந்த், நீ சரி சொன்னதால தான் பொண்ணு வீட்டுல வர்றோம்னு சொல்லிருக்கேன். அங்க போய் மாத்தி பேச மாட்டனு நம்புறேன்” வசந்த் அமைதியாக குழந்தையை தூக்கி வெளியேறிவிட்டான்.
பெண் பார்க்கும் படலமும் இனிதே நடந்தது. இரு பக்கமும் பிடித்துவிட பூ வைக்க தேதி பார்த்தனர்.
“வர்ற சண்டே நல்ல நாளா இருக்கு, அன்னைக்கு பூ வச்சிடலாமா?”
ராஜேந்திரன் கேட்க மனைவியோடு கலந்து அந்த பெண்ணின் தந்தையும் சரி என்றனர். வீட்டிற்கு திரும்பும் பொழுது வித்தியாவிற்கு அத்தனை மகிழ்ச்சி.
“ரொம்ப நல்ல இடமா இருக்காங்க பார்த்திபா. நல்ல வேலை நீ இந்த இடத்தை பாத்த” என்றார் அன்னை.
“உங்க சின்ன மகன், அதையும் வேணாம்னு தானே சொன்னார். நல்ல வேலை பெரிய கொழுந்தன் பிடிவாதத்துல நல்லதே நடந்துடுச்சு” என்றாள் கமலவல்லி.
“ம்ம் அதான் அவன் சொன்னா சரியா இருக்கும்னு நாங்களும் பிடிவாதமா நின்னுட்டோம். எல்லாரும் நல்ல குணமா இருக்காங்க, பொண்ணு ரொம்ப அமைதி போல. பாவம் இவன்கிட்ட வந்து மாட்டிக்கிச்சு” என்றார் அன்னை கிண்டலாக.
“அப்டி ஒன்னும் கஷ்டப்பட்டு என்கிட்ட யாரும் மாட்ட வேணாம், இப்ப கூட ஒன்னுமில்ல வேணாம்னு சொல்லிடுங்க” கோவமாக வசந்த் முகத்தை தூக்கி வைத்தான்.
“ம்மா, விடுங்க. கல்யாணம் ஆனா எல்லாமே மாறும்” என்றான் பார்த்திபனும்.
வீட்டிற்கு வந்ததுமே வசந்த் கோவமாக பைக்கை எடுத்து செல்ல, “இதென்ன இவனுக்கு இன்னைக்கு இப்டி கோவம் வருது. நான் எப்பவும் போல தானே சொன்னேன்” என்றார் வித்யா புலம்பியவாறே.
“விடுங்க ம்மா, அவனுக்கு அந்த சைவ சாப்பாடு சாப்பிட்டது திருப்தி இல்ல, அதான் இதை சாக்கா வச்சு போய் ஏதாவது சாப்பிட்டு வருவான்” என்றான் கிரி சகோதரனை நன்கு அறிந்தவனாய்.
“சரி தான், எல்லாரும் உக்காருங்க ஒன்னு பேசணும்” வித்யா அழைக்க குழந்தைகள் விளையாட்டிக்கொண்டிருக்க பெரியவர்கள் வரவேற்பறையில் அமர்ந்தனர்.
“வர்றப்ப பொண்ணோட அப்பாகிட்ட கல்யாணத்தை பத்தி பேசுனேன். அவங்களுக்கு எப்ப வச்சுக்காட்டாலும் பிரச்சனை இல்லனு சொன்னாங்க. நமக்கு தான் பெரிய மருமக டெலிவரி தேதி நினைச்சு கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு”
“என்ன பத்தி யோசிக்காதிங்க மாமா, உங்களுக்கு எப்ப வசதியா இருக்கோ அப்போவே வச்சுக்கலாம்” என்றாள் கமலவல்லி வேகமாக.
“இல்ல ம்மா, உனக்கு மாசம் ஏழாச்சு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வச்சா உனக்கு வசதியா இருக்கும். இல்லனா ரொம்ப அசதி தட்டிடும் அப்டி இல்லையா குழந்தையே பொறந்திடும். அதான் மாமா பேசுனார்”
“சரி தான் ப்பா, இப்போவே அவளால ரொம்ப பிரியா இருக்க முடியல” என்றான் கிரியும்.
“அதான் ப்பா, இந்த மாசத்துல வச்சுக்கலாமானு உங்ககிட்டையும் கேக்குறேன்” என்றார் மூன்று மகன்களிடமும்.
அப்பொழுது தான் வந்திருந்த வசந்த் தன்னுடைய ஷூவை கழட்டியபடியே இவர்கள் பேசுவதையும் கேட்டான்.
“பண்ணிடலாம் ப்பா” கிரி கூற, பார்த்திபனும் தலையை ஆட்டினான்.
கமலவல்லி, “கல்யாண செலவுக்கு என்ன பண்றது மாமா?”
வித்யா, “போஸ்ட் ஆபீஸ் பணம் வருத்துல ம்மா”
கமலவல்லி, “ஓ அப்போ வசந்த் தம்பி பங்குல இருந்து பண்றதா அத்தை?”
குழந்தைகளுக்காக வாங்கியிருந்த தின்பண்டங்களை ஆரபியிடம் ஒப்படைத்த வசந்த், “ரொம்ப நல்லா இருக்கு அண்ணி. வீட்டுல உங்க ரெண்டு பேர் கல்யாணம் வீட்டு பொது காசுல நடக்கணும், என் கல்யாணம் என் பங்கு காசுலயா?” அண்ணியிடம் நக்கலாக கேட்டான்.
“உங்களுக்கு உங்க பங்கு அப்டியே வரணும்னா இன்னொரு வழியும் இருக்கு. இத்தனை நாள் உங்க சம்பாத்தியம் வீட்டுக்கு வந்தது இல்லையே, எல்லாம் உங்க கைவசம் தான? அப்போ அந்த பணத்தை கூட எடுத்துக்கலாம்” என்றாள் கமலவல்லி துடுக்காக.
“கமல்…” கணவனை சட்டையே செய்யவில்லை அவள்.
“என்ன அண்ணி குத்தி காட்டுறிங்களா?” காட்டமாக அவரை பார்த்தன் வசந்த்.
“நான் எதுக்கு வசந்த் குத்தி காட்ட போறேன், வீட்டுல எல்லாரோட பங்கும் வந்துடுச்சு, இன்னைக்கு வர உங்க பங்கு கொஞ்சமும் இல்லையேன்னு நிஜத்தை சொன்னேன்”
வசந்தின் கோவத்தை உணர்ந்து பார்த்திபன், “அண்ணி, அவன் சின்ன பையன். இப்போ என்ன நானே கல்யாண செலவை பாத்துக்குறேன். டேய் வசந்த் அண்ணிகிட்ட இப்டி பேசாத” சகோதரனை அடக்கினான்.
அவனோ இன்னும் திமிறினான், “யாரோட காசும் எனக்கு வேணாம்”
பார்த்திபனின் உதவியை பொருட்டாய் கூட மதிக்கவில்லை இளையவன். பெற்றோர் மேல் கோவம் வந்தது, “ம்மா நீங்க ரெண்டு பேர் என்ன ஒரு வார்த்தை கூட பேச மாட்டிக்கிறீங்க?”
“கமல் பேசுறதுலையும் நியாயம் இருக்குலடா. ஒரு நாள் வந்து காசை கைல குடுத்துருக்கியா. எவ்ளோ சம்பளம்னு கூட தொரை சொன்னது இல்ல. உன் அண்ணனுகளுக்கு கல்யாணம் பண்ணது அவனுங்க சம்பாதிச்சு உன் அம்மாகிட்ட குடுத்த காசுல.
தாலி செயின் மட்டும் தான் எங்க காசுல செஞ்சது. இப்போ பெருசா சரிக்கு சரியா நின்னு கேள்வி மட்டும் கேக்குறவன் அண்ணினு கூட பாக்காம” என்றார் ராஜேந்திரன் மகனை மொத்தமாய் அடக்கி.
மேலும், “இப்பவும் அதையே செய்யலாம். தாலி செயின் பதினோரு பவுன் நாங்க போடுவோம். அது இல்லாம அஞ்சு பவுன் விலைவாசி ஏறுனதால உனக்கு சுமை வைக்க கூடாதுனு நாங்களே எதாவது ஒரு மாலையோ, நெக்லஸ் எடுத்து போடுறோம். ஆனா கல்யாணத்துக்கு ஆகுற செலவை நீ தான் பாக்கணும்”
“பெத்த புள்ளைக்கிடயே இவ்ளோ கறாரா இருந்து நான் பாத்தது இல்ல ப்பா. இப்படியா கணக்கு பாப்பிங்க?” நக்கலான சிரிப்போடு பெற்றோரை முறைத்தான் வசந்த்.
“கணக்கு பாக்குறது இல்ல வசந்த். எங்ககிட்ட இருக்க பணமும் அவ்ளோ தானேடா. உனக்காக பாத்து மத்தவங்களுக்கு என்னால காசை குறைச்சு தர முடியுமா? இப்பயே கமல் கேட்டுடா, இதுக்கு பிறகும் குடுத்தா உனக்கு நல்லா இருக்குமா சொல்லு?”
பொறுமையாக எடுத்து கூற பார்த்தார் வித்யா. ஆனால் வசந்த் முகம் கடினமாகவே இருந்தது. சித்தப்பாவின் முகம் பார்த்து குழந்தைகள் அருகில் சென்றால் கூட அவர்களை அணுகவில்லை அவன்.
“ன்னா, நம்ம பாத்துக்கலாம். சண்டையை முடிச்சு வைங்களேன்” ஆரபி கணவன் காதில் மெல்ல கடித்தாள்.
“அவன் புரிஞ்சுக்க மாட்டிக்கிறான் ஆராம்மா”
“புரிய வைங்கோ” கட்டளையாக கூறி மனைவி அகன்றாள்.
“அத்தை எனக்கு தோணுச்சு கேட்டேன். சரி இதுவே எனக்கு ரெண்டாவது வளைகாப்பு சிறப்பா பண்ணுங்கனு நான் கேட்டா அதுக்கும் இந்த பணத்துல இருந்து எடுத்துக்கலாமா? இல்ல பார்த்திபன் தம்பி கடைக்கு தேவைனு தான் கேக்கலாமா?”
பெரியவர்கள் அவள் பக்கம் நியாயம் இருப்பதால் அமைதியாக இருக்க வசந்த்திடம் மீண்டும் வந்தாள்,
“ஆளுக்கு ஒரு பங்குனு இப்டியே கை வச்சிட்டே போனா மிச்சம் ஒன்னும் மிஞ்சாது”
கிரிக்கும் பணம் தேவைப்பட்டது. ஏதாவது சொத்து வாங்கிப்போடலாம் என நினைக்கிறான். அதுவும் கமலவல்லி தந்தை ஊரில் இரண்டு ஏக்கருக்கு ஒரு நிலம் வருகிறதாம்.
அவள் பெற்றோர் வீட்டிற்கு அருகிலே. இப்பொழுது இல்லை என்றாலும் பின்னர் உதவலாம் என எண்ணம் மனைவி மூலம் கணவனுக்கும் பரவியிருந்தது.
வசந்தோ அன்னையை பல்லை கடித்து பார்த்திருந்தான். அவன் கோவத்தை முழுதாய் அவர் மேல் இறக்கி வைக்க முடியவில்லை, அதனால் பெரியவன் மேல் திருப்பினான்.
“என்ன ஏன்டா பாக்குற. சரி நீ சொல்லு. இத்தனை நாள் சம்பளத்தை என்ன பண்ண?”
“என் பைக்க்கு என்ன நீங்க யாருமே பணம் குடுத்தீங்க? நானே வாங்குனது”
“அதுக்கு உன்னோட மூணு மாசம் சம்பளம் போதும் வசந்த், மிச்சத்தை என்ன பண்ண?” வாய் திறக்கவில்லை வசந்த்.
“ண்ணா விடுங்க. நல்ல விஷயம் பேசிட்டு வந்துருக்கோம் அதுக்குள்ள ஏன் ம்மா அவன் மனசை நோகடிக்கணும்?” பேச்சுவார்த்தையை நிறுத்த பார்த்தான் பார்த்திபன்.
“இதுக்கு தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன்”
இதற்கும் சலித்துக்கொண்டு பேசியவனை, “வசந்த், தம்பி” என சகோதரர்களும் பெற்றோரும் அதட்டினர்.
“இது என்னடா பேச்சு ஒரு பொண்ணை உறுதி பண்ணிட்டு வந்ததும். பிரச்சனை வந்தா அதை எப்படி சமாளிக்கணும்னு பாக்கணும். அதை விட்டு இப்படியா கூறுகெட்ட தனமா யோசிப்பாங்க?
அஞ்சு ஆறு லட்சத்துக்கே இந்த திணறு திணறுற, கல்யாணம் ஆகிட்டா செலவு எவ்வளவு இருக்கு, பொறுப்பு எத்தனை இருக்கு. உன் காசை வச்சு தான் இந்த வீடு முன்னேறணும்னு இல்ல.
எதுக்கு வீட்டுல காசை குடுக்க சொல்றது, இப்ப அம்மாகிட்ட குடுத்தா தான் நாளைக்கு வீட்டுக்கு உன்ன நம்பி வர்ற பொண்ணுகிட்ட குடுக்க தோணும். அந்த பொண்ணுக்கும் வீடு வரவு செலவு தெரிய வரும். இது புரிஞ்சுக்காம அவங்கள என்னமோ எதிரி மாதிரி பாக்குற, பேசுற. தொலைச்சிடுவேன்”
பார்த்திபன் அதட்டியதில் மொத்த வீடும் அமைதியாகிவிட்டது. சிறுவர்கள் ஆரபி நோக்கி ஓடி அவளை கட்டிக்கொண்டனர்.
“நீங்க என்ன ப்பா யாரோ மாதிரி அவன்கிட்ட பேசுறீங்க? நகை கம்மியா போட்டு அவன் செலவுக்கு மிச்சம் பணம் குடுங்க. அதுக்கு மேல அவன் சாமர்த்தியம் குடும்பத்தை பாக்குறது.
இப்டி எடுத்தோம் கவுத்தோம்னு பேசுனா நாளைக்கு ஒரு பிரச்சனைனு வந்தா நம்ம குடும்பம் இருக்குனு அவனுக்கு எப்படி நம்பிக்கை வரும்? டேய் போய் எதையும் யோசிக்காம தூங்கு. செலவை சுருக்கி கல்யாண ஏற்பாடு பண்ணிக்கலாம், நான் இருக்கேன்”
பெற்றோர் இருவருக்கும் மனதினில் பெருத்த அடி. பார்த்திபன் வார்த்தைகளின் தாக்கம். ஏதோ அவன் அவன் கவலையை அந்த ஒரு வாக்கியத்தில் இறக்கி வைத்தது போல் குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுத்தது பெரியவர்களுக்கு.
“துருவ் ஓடு தூங்கு, பூர்வி வாடா” மகளையும் அழைத்து அவர்கள் அறைக்கு சென்றுவிட வீட்டின் நிசப்த்தம் ஒவ்வொருவரையும் வரிசையாக அவரவர் அறைக்குள் அனுப்பியது.
ஞாயாயிற்று கிழமை அன்று. வசந்த் பூஜாவின் பூ வைக்கும் விழா இனிதே துவங்கியது.
இது முழுக்க முழுக்க பெண் வீட்டினரின் செலவாக இருந்தாலும், மேடை அலங்காரம், மண்டப அலங்காரம் போன்றவற்றை வசந்த் விருப்பப்படி கேட்டு ஆரபி வடிவமைத்து கொடுக்க, பார்த்திபன் விஷ்ணுவின் மேற்பார்வையில் அலங்காரம் வந்த மொத்த கூட்டத்தின் கவனத்தையும் பெண் மாப்பிள்ளை தாண்டி ஈர்த்தது.
வேலை அதிகம் இல்லாததால் பார்த்திபன் பார்வை மொத்தமும் அவன் மனையாள் மேல் தான். வைன் நிற பட்டு புடவையில் பார்த்திபனை மொத்தமாய் கொள்ளையடித்தாள் அங்கும் இங்கும் அலைந்து.
மகள் கையை விட்டு அகலாமல் இருக்க, இது பார்த்திபனுக்கு போதுமானதாக இருந்தது. குழந்தைக்கு இது எங்கே, அது எங்கே என பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவளை நாடி சென்றிடும் அந்த தந்தை மகள் காம்போ.
“பார்த்து படுத்தாதேள், கமல் அக்கா கூட கவனிச்சு கிண்டல் பண்ணுறா. எல்லாமே உம்மை கைல தான் ஒப்படைச்சிட்டேனே” சிணுங்கினாள் பார்த்திபனின் மாமி.
அது அவனுக்கு இன்னும் போதையூட்டியது, “மாமி, அப்டியே நைசா கிட்சன் பின் பக்கம் வர்றியா, ஒரே ஒரு தடவ இறுக்கி அணைச்சு உம்மா குடுத்து அனுப்பி வச்சிடுறேன், அள்ளுறடி பொண்டாட்டி”
குஜாலாக இருந்தது பார்த்திபன் குரல். அவன் பேசவும் பொது இடமென்று பாராமல் பார்த்திபன் கையில் பட்டென அடித்தவள் முறைப்போடு, “பாப்பா முன்னாடி என்ன பேசிண்டு இருக்கேள்”
குழந்தையோ குச்சிமிட்டாயை வாயிலிருந்து எடுத்து அன்னை அடித்த இடத்தில் தந்தைக்கு தடவி கொடுத்து, “ம்மா அப்பா நோ”
தந்தையை அடிக்க கூடாதென கையை காட்டி கூறிய சீட்டு ஆரபியின் புடவையில் இனிப்பினால் எச்சில் வழிந்த வாயை துடைத்தாள்.
“கொழுப்புடி உனக்கு” மகளுக்கும் அதே செல்ல அடி விழுந்தது,
“கொஞ்ச கெஞ்ச அப்பா, இந்த மாதிரி நோக்கு சேவகம் செய்ய நானா?” என்றாலும் இடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையை எடுத்து நன்றாக வாயை துடைத்தாள்.
“அட்லீஸ்ட் அந்த கர்சீப் எடுக்க ஆவது என்ன விட்ருக்கலாம்” ஏமாற்றமாய் பார்த்தான் மனைவியை. அவளுக்கோ அவனது இந்த அதீத கவனிப்பு முகத்தை சிவக்க செய்தது.
“பார்த்தி, ப்ளீஸ். ரொம்ப சங்கடமா இருக்கு. ஏன் இப்டி அல்சாட்டியம் பன்றேள்” அவனோ இதழ் பிரியா சிரிப்போடு, “சரி போ” என அனுப்பி வைத்தான்.
நிகழ்வுகள் அடுத்தடுத்து அழகாக நகர விருந்தினர்களை கவனிக்க டைனிங் சென்றுவிட்டான் பார்த்திபன்.
பந்தி ஆரம்பிக்க தயாரா என பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அழைப்பு வந்தது. அவன் குடவுன் அருகில் டீ கடை வைத்திருப்பவர் தான். எடுத்தவன்,
“அண்ணே வந்துட்டீங்களா, இல்ல அட்ரஸ் சொல்லனுமா மண்டபத்துக்கு?”
“தம்பி, விஷ்ணு தம்பி நம்பர் இருந்தா தாங்களேன்” என்றார் அவர். குரலே சரியில்லை.
“என்னாச்சு ண்ணே, ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க ஒடனே வர்றேன்” என்றான் உதவ முன்வந்து.
“இல்ல ய்யா, விஷ்ணு இருக்கானா குடேன்” அவருக்கு வீட்டில் விசேஷம் ஒன்றை இவன் வைத்திருக்க அந்த செய்தியை அவனிடம் கூட மனம் வரவில்லை.
“அண்ணே சொல்லுங்க” என்றான் அதிகாரமாய்.
வேறுவழியில்லை, இவன் விடவும் மாட்டான் என தெரிய, “உன் கடை இந்த தீ புடிச்சு எரியிது தம்பி”
error: Content is protected !!