Skip to content
Post Views: 2,091
காரினை அடைந்த பார்த்திபன் கைபேசியை எடுத்து விஷ்ணுவின் எண்ணிற்கு அழைத்த பிறகே நண்பனின் நிலை உரைத்தது. அப்படியே ஸ்டேரிங் வீலில் தலை வைத்து படுத்தவன் கண்ணில் அவனையும் மீறி இரு துளி கண்ணீர். ஒரு கையே இழந்தது போல் நம்பிக்கை வடிந்தது.
தலை உயர்த்தி முன்னிருந்த கண்ணாடி வழியே பின்னிருக்கையை பார்க்க, சகோதரனின் வேதனையை அங்கு கொட்டியிருந்த ரத்த வெள்ளம் வாகனத்தை உயிர்ப்பிக்க செய்தது.
அவன் மனம் துடித்த துடிப்பிற்கு நேர்மாறாக வாகனம் சாலையில் ஊர்ந்தது. இடையிலே மாமனாரிடம் அழைப்பு வந்தது வசந்த் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக.
சிக்கிய மூச்சு நிதானமாக வெளியேறி நிம்மதியாக காற்று வாங்க முடிந்தது. செல்லும் வழியெங்கும் சிந்தனை தான்.
Advertisement
தாமோதரன் அவர் வீட்டில் தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் சென்றவனை ஏமாற்றாமல் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார். முன்னே வரிசைகட்டி நின்றது இரண்டு மதுபாட்டில்கள்.
இவனுக்காகவே காத்திருப்பது போல் பார்த்திபனை பார்த்ததும், “வா வா… உனக்காக தான் காத்திருந்தேன்”
காலால் ஒரு நாற்காலியை அவனை நோக்கி தள்ளி அமர கூறினார். மறுப்பு கூறாமல் அமர்ந்தான் அவர் நீட்டிய மதுவை ஒரு பார்வையில் நிராகரித்து.
Advertisement
“கேள்விப்பட்டேன் இந்த பழக்கம் எதுவும் இல்லையாமே, அவ்ளோ நல்லவனாடா நீங்க?”
Advertisement
பார்த்திபனிடம் அமைதியே நீடிக்க தாமோதரன் மீண்டும் தொடர்ந்தார், “இந்த வீடு கட்டி நாப்பது வருஷம் மேல ஆச்சு. ஒரு நாள் கூட இப்டி… இவ்ளோ அமைதியா இருந்தது இல்லடா” வீட்டை சுற்றிய தாமோதரன் கண்கள் இறுதியில் அந்த மதுவில் வந்து நிற்க, அவர் வயதிற்கு சற்று வேகமாகவே குடித்தார்.
“எந்நேரமும் என் மக கால் நிக்காம சுத்துன வீடு இன்னைக்கு ஒளியே இல்லாம சுடுகாடு மாதிரி இருக்கு” சிவந்த கண்களோடு பார்த்திபனை வஞ்சகத்தோடு சுட்டது அவர் கண்கள்.
“எதையும் மறைச்சு மன்னிச்சிடுவேன்டா ஆனா என் பேரனை வச்சு என் மகளை என்கிட்ட இருந்து பிரிச்சிங்க பாரு…”
Advertisement
பலமாக தலை அசைத்து, “மறக்க மாட்டேன். அம்மாவா என்ன பாத்துக்குட்ட பொண்ண ஒரே நாள்ல பொய் சொல்லி… உயிரையே குடைஞ்சிட்டீங்கடா” உண்மையான வலியின் சாயல் அவர் கண்ணில்.
“அதுக்கு தான் என் உயிரை பிரிச்சவனுங்களோட உயிரை எடுக்கணும்னு ஒரே வெறி… ஆனா அந்த சந்தோசத்தை கூட ரொம்ப நேரம் அனுபவிக்க விடலடா நீங்க”
எத்தனை மிருகத்தனமான இதயம்… உயிரின் மதிப்பு ஐந்தே மணி நேரத்தில் தவித்தவனுக்கு தான் தெரியும். சுலபமாய் வருத்தப்படுகிறானே இந்த அற்ப பிறவி.
“உங்களால எனக்கு எப்பவும் தீண்ட செலவு தான்டா. பாரு”
தூரத்தில் இருந்த இருக்கையில் மாலைகள் தொங்கின, “உனக்கும் அவனுக்கும் வாங்கி வச்சேன். சரி ஒருத்தன் தப்பிச்சா இன்னொருத்தனுக்கு ரெண்டையும் போடணும்னு நினைச்சேன் கிர…”
கண்ணாடி சில்கள் நொறுங்கும் சத்தம் அவ்விடத்தையே நிற்க, நாற்காலியிலிருந்து எழுந்து நின்ற பார்த்திபன் கையில் பாதி உடைந்த பாட்டில். மீதி தாமோதரனின் சிரத்தை உடைத்து சில்லு சில்லாக தரையில் சிதறி கிடந்தது.
இதயமே இல்லாத மிருகத்திடம் என்ன பேச வேண்டும்? பேசினாலும் கேட்கும் ரகமா தாமோதரன்?
அந்த மனிதனிடம் பேச கூட புடிக்கவில்லை பார்த்திபனுக்கு. இருந்த ஆத்திரத்தை மொத்தமாய் கையில் கிடைத்ததை வைத்து சற்று தணித்தான். இன்னும் வெறி ஆறவில்லை.
தலை எல்லாம் உதிரம் வழிய வலியில் அரற்றி கீழே விழுந்த மனிதனை பார்த்து சிறிதும் இறக்கம் இல்லாமல் நிதானமாக மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, “மேல சொல்லு” என்றான் தெனாவெட்டாக.
பேசும் நிலையிலா அந்த மனிதன் இருந்தான்? வயது முதிர்ச்சியில் சிறு அடி பட்டாலே உயிர் வலி போக, உயிரே போகும் அடி வாங்கி ரத்தம் சொட்ட போதை முற்றிலும் நீங்கி துடித்துக்கொண்டிருந்தார் தாமோதரன்.
மகள் வீட்டை விட்டு போன நாளில் இருந்து சுற்றி இருந்த பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக அகற்றிவிட்டார் ஒரு விரக்த்தியில். அது இன்று பார்த்திபனுக்கு சாதகமாகி போனது.
எவர் இருந்தாலும் இதே தான் நடந்திருக்கும் என்பது வேறு கதை. அப்பொழுது நிதானம் இல்லாமல் ஒரே அடியில் கோவத்தை காட்டியிருக்க வேண்டும், இப்பொழுது நிதானமாக அவர் துடிப்பதை பார்த்துக்கொண்டே இளைப்பாறலாம்.
அந்த மனிதரோ அவனை விட பிடிவாதக்காரன் என்பதை வழியில் சிரித்துக்கொண்டே, “நான் இதோட நிறுத்திட்டேன்னு நினைச்ச… ஆஆஆ…”
வலியில் முனகியவர் கண்களில் வழிந்த ரத்தத்தை துடைத்தவாறே, “இன்னைக்கு உயிர் போகல, இன்னொரு நாள் குறைஞ்சது ஒரு உயிர் போகு…”
தாமோதரன் அமர்ந்திருந்த நாற்காலியின் காலை பிடித்து பார்த்திபன் இழுத்த வேகத்தில் நாற்காலி உடைந்து உடன் தாமோதரனும் தாறுமாறான அடியோடு விழுந்தார்.
அவர் தவிப்பது துடிப்பது, வலியில் அரற்றுவது இவை எல்லாம் பார்க்கும் பொழுது மனிதனாக பரிதவித்திருக்க வேண்டும் இல்லையேல் பாவப்பட்டவது முகத்தை திருப்பியிருக்க வேண்டும், இங்கு பார்த்திபன் ரசித்து பார்த்தான்.
மனதிலிருந்த மனிதநேயம் மாண்டு, மிருகம் பிறப்பெடுத்தது போல் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. கீழே விழுந்த தாமோதரன் கை ஊன்றி எழுந்து அமர பார்க்க முடியவில்லை அவரால்.
மெலிதாக கூட கையில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை, உடைந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அப்படியே மீண்டும் தரையிலே உடைந்த துண்டுகளுடன் படுத்துக்கொண்டார்.
கண் கண்ணாடி உடைந்து ஒரு பக்க பார்வை முற்றிலும் மங்கலாக, அதனை தூக்கி எறிந்தார். தாளாத வலி உடல் எங்கும். ஐந்து நிமிடம் தேவைப்பட்டது சற்று நிதானத்திற்கு வர.
தண்ணீர் தேடி நாவாது கெஞ்ச, உயிரே போனாலும் எதிரில் அமர்த்திருப்பவனிடம் கேட்க சிந்தை உடன்படவில்லை. விடாப்பிடியாக தலையை திருப்பி பார்த்திபனை பார்த்தவர் சுருங்கிய முகத்தோடு,
“அடுத்த தடவ உன் குழந்தைல ஒன்னு…” அவர் கூறியதை கேட்டவன் வாய் விட்டு சத்தமாக சிரிக்க தாமோதரன் விழிகள் வஞ்சத்தில் நிறைந்திருந்தது.
“செய்ய மாட்டேன்னு… மாட்டேன்னு நினைக்கிறியா? கண்டிப்பா…” என்றவர் வாங்கிய அடுத்த அடி இனி அவரை வாழ்நாளில் எழவே செய்யப்போவதில்லை என அறிந்திருக்கவில்லை.
உடைந்த மர துண்டு ஒன்றை எடுத்தவன் மொத்த பலத்தையும் உபயோகித்து முதுகிலே அடிக்க, நிச்சயம் உடைந்திருக்கும் என்பது அவர் துடித்த துடிப்பிலே தெரிந்தது.
ஆத்திரம் மட்டுப்பட்டு பார்த்திபன் அவரையே பார்த்து நிற்க, வீட்டின் கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிய பார்த்திபன், அங்கு தந்தையின் நிலையை வாயில் கை வைத்து கண்ணீரோடு நின்ற அநாயாவின் அன்னையை கண்டான்.
அவர் அதிர்ச்சி, அமைதி பார்த்து, “காலம் எல்லாம் ஜெயில்க்கு போனாலும் எனக்கு கவலை இல்ல” என்றான் அவர் தந்தை மேல் உள்ள பாசத்தில் எதுவும் செய்வார் என்கிற நம்பிக்கையில்.
பார்த்திபன் எண்ணி வந்ததும் இதற்க்கு தான். காலெல்லாம் சிறைவாசம் ஆனாலும் பரவாயில்லை, தாமோதரன் இறுதி காலத்தை அணுஅணுவாய் துடித்து உயிரை விட வேண்டும் என நினைத்தான்.
வந்த காரியம் நல்ல முறையில் நடக்க அவர் உயிருக்கு சேதாரம் இல்லாமல் தான் ஒவ்வொரு அடியையும் கொடுத்தான். நிம்மதியாக இருந்தது, அமைதியாக மூச்சு விட முடிந்தது.
நண்பனும் சகோதரனும் அடிபட்டு உயிருக்கு போராடி வந்ததற்கு அவனால் முடிந்தது என நினைத்தான். மிருகம் செய்யும் செயல் தான். இருந்தும் மனிதநேயத்தை காட்டும் மனிதன் அல்லவே தாமோதரன்.
“நீங்க இல்லனா நான் கொன்னுருப்பேன்” என்றார் அனாயா அன்னை பார்வையை தந்தையிடமிருந்து எடுக்காமல்.
பார்த்திபன் அவரை பார்க்க, “போலீஸ் கேஸ் ஆகாம பாத்துக்குறேன், நீ போப்பா… நான் அவரை ஹாஸ்பிடல் சேர்த்துட்டு வர்றேன்… என்ன தான் இருந்தாலும் அவருக்கு பொறந்துட்டேனே” என்றார் உணர்வுகள் துடைத்த குரலில்.
பார்த்திபன் சில நொடிகள் பிறகு ஆம்புலன்ஸ் அழைத்து வந்திருந்தான்.
“இல்ல நீங்க…”
“உங்கள தனியா விட்டுட்டு போக முடியாது” என்றவன் மயக்கத்திலிருந்த தாமோதரனை பார்த்து, “மனசாட்சியை புதைச்சு வச்சு தான் வந்தேன், ஒரேடியா கொன்னுடலை” என்றான்.
மருத்துவமனை அழைத்து சென்றவர்கள் வெளியே அமர்ந்திருக்க மருத்துவர் வந்து, “இனி அவரால நடக்க முடியாது. பாக் போன் ஒடஞ்சிடுச்சு. ஆபரேட் பண்ணாலும் யூஸ் இல்ல அவர் வயசுக்கு” என்றுவிட்டார்.
ஓய்ந்து வெறித்த சுவற்றை பார்த்து அமர்ந்திருந்த அனாயாவின் அன்னை அருகே சென்று அமர்ந்த பார்த்திபன் அவர் கையை பற்ற அதிர்ந்து அவனை தவிப்போடு பார்த்தார்.
“உங்க பையனா நினைச்சுக்கோங்க” என கூற பெருகி வந்த கேவலை பார்த்திபன் கை பிடித்து கண்ணீரால் மன்னிப்பு கோரினார்.
பார்க்கவே சங்கடமாக தான் இருந்தது, ஆறுதல் கூறவும் முடியவில்லை, மன்னிப்பு கேட்கவும் முடியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்று கூட பார்த்திபனால் அறிந்துகொள்ள முடியாத நிலை. ஆதரவு கரத்தை மட்டுமே நீட்டினான்.
வேதனையின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் ஆணின் மனம் எளிமையாக மூடி திடமாகிவிடும். ஆனால் பெண்ணின் மனது இறகை போல அல்லவா, சிறு ரகசியத்தை கூட பாதுகாக்க தெரியாத அந்த சிறு இதயத்திற்கு வேதனை எத்தனை சுமையை கொடுக்கும்?
அதுவும் இவரின் நிலை சற்று அதிகப்படி தான். தந்தை, கணவன் எவரும் சரியில்லாமல் கொடுத்தது வாழ்க்கை, அந்த வேதனையை மகளிடம் மகனிடம் கூட கூற முடியவில்லை.
எத்தனை கொடுமையான வாழ்க்கை? தோள் சாய துணை இல்லாமல் அல்லாடுபவர் நிலை புரிந்தும் தனியே விட முடியவில்லை.
தோள் கொடுத்தான். மகன் அன்னைக்கு கொடுக்கும் ஆறுதலை அமைதியாலே கொடுத்தான்.
*****
error: Content is protected !!