Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 5.2

ஆரபி, “உங்கள தலையிட சொல்லல அபிப்ராயத்தை சொல்லுங்கோ. அதை தான் அவாளும் எதிர் பாக்குறா”

நெற்றியை நீவினான் பொறுமையாக, “அப்டினா தான் நானே செஞ்சிடுவேனேடி, அவங்க அந்த பணத்துல எனக்கும் பங்கு குடுக்க ஆசைப்படுறாங்க. அதுனால தான் நான் ஒதுங்கி போறேன்” “ஏன் நீங்களும் பிடிவாதம் பிடிக்கிறேள்”

“பிடிவாதம்னு ஏன் நீ நினைக்கிற, விட்டு குடுக்குறேனு வை. கிரி அண்ணன் வருமானத்தை அதிகப்படுத்தணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு இந்த பணம் தேவைப்படும்.

வசந்த் இப்ப தான் சொந்த கால்ல நிக்கிறான். அவங்களுக்கு தேவைப்படுது இந்த பணம். நமக்கு ஒண்ணுக்கு ரெண்டு வருமானம் வருது இனி வாடகையும் இல்ல. அதுக்கு தேவை இருக்குறவங்க வச்சுக்கலாமே”



Advertisement

ஆரபி, “நேக்கு ஒண்ணுமில்ல ன்னா நீங்க சம்பாதிக்கிற பணமே போதும். அது ஆயிரம் இருந்தாலும் சரி லட்சமா இருந்தாலும் நேக்கு சந்தோசம் தான். பெரியவா ஆசைன்னு ஒன்னு இருக்குமே அத தான் சொல்ல வர்றேன்”

பார்த்திபன், “எனக்கு வேணாம்டி”

“ஏன் ன்னா இன்னும் நீங்க அந்த நாளை நினைச்சு கோவமா இருக்கேளா”

Advertisement

மனைவியை முறைத்து அமைதியாக நின்றான் பார்த்திபன், “இல்ல கேக்குறேன் கோவிச்சுக்காதேள்” கணவன் தோள் சாய்ந்து அவன் கையேடு கை வளைத்து நின்றாள்.

Advertisement

பார்த்திபன் தொழில் துவங்க எண்ணிய நேரம் வீட்டில் ஏதேனும் உதவி கிடைக்காதா என்ற தவிப்பும் அதில் கிடைத்த ஏமாற்றமும் வருத்தமாய் ஆரபியை தான் வந்தடைந்தது.

அந்த நாட்களில் குடும்பத்தினரை மட்டுமே நம்பியிருந்தவன் அசாத்திய நம்பிக்கையை மௌனமாய் உடைத்தவர்களை சார்ந்து இனி ஒரு நாளும் இருக்க கூடாதென்ற உறுதி ஆழமாய் வேரூன்றியது பார்த்திபனுக்கு.

விளையாட்டு எண்ணம், அசட்டையாக குணம் கொண்டிருந்த பார்த்திபன் அதன் பிறகு முழுவதுமாய் மாறி தன்னையே மெருகேற்றி கொண்டான். அந்த கணம் தொட்டு எவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு வைப்பதில்லை, தன்னால் முடிந்தால் மட்டும் செய்வான், இல்லையெனில் தூரம் நின்றிடுவான்.

Advertisement

அன்று மகனிடம் எதற்கு முடியாதென்று கூறினோம் என்று பெரியவர்கள் வருந்தாதே நாள் இல்லை. அன்று தங்களை விட்டு ஒதுங்கியவன் தான். இன்று வரை தினமும் அன்பாய் பேசினாலும் ஒரு விலகல் அவனிடம். எதற்கும் அவர்களிடம் உதவியென்று வந்து நிற்க மாட்டான்.

அபிப்ராயம் கேட்பான், தான் எடுத்த முடிவை பற்றி பேசுவான் அதில் பெரியவர்களின் கருத்தை கேட்டு அதன் படி செய்வான். ஏன் வீட்டிற்கு தேவையான பணத்தை சகோதரர்களை எதிர்பாராமல் தானே முன்னிருந்து செய்திடுவான்.

அனைத்து வகையிலும் வீட்டினரை தேங்கிட விடாமல் இழுத்து செல்ல பழகியிருந்தான். வசந்த் வீட்டில் வேலை இல்லாமல் இருந்த நேரம் சகோதரனாய் கிரி தவறினாலும் பார்த்திபன் சகோதரனுக்கு உதவி அவனையும் முன்னேற்றியிருந்தான்.

தந்தை ஒரு முறை வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து முதுகில் பலத்த அடியோடு மருத்துவமனையில் இருந்த நேரம் கிரியால் அதிக பணத்தை புரட்ட முடியவில்லை, எதையும் யோசிக்காமல் தானே முழு பணத்தையும் செலுத்தி இது நாள் வரை அதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ப

ணத்தில் அதிக சிக்கனம் காட்டும் கிரிக்கும் சகோதரன் செயல் வசதியாகி போனது, அந்த பேச்சை இதுவரை எடுத்ததில்லை அவனும்.

“நான் அவங்க மேல கோவப்பட என்ன இருக்கு. எந்த விசயத்துல வேணாலும் நான் முன்னாடி நின்னு ஹெல்ப் பண்ணுவேன். பணம்னு வந்துட்டா இந்த தூரம் தான் எனக்கு புடிச்சிருக்கு” மனைவி கொடுத்த பாலை அருந்தினான் அவளிடமிருந்து பார்வையை அகற்றி.

“தப்பான முடிவு எடுத்தா என்ன பெண்ணுவேள்?”

தான் பாதி குடித்து மீதியை மனைவி மறுக்க மறுக்க குடிக்க வைத்தவன், “அப்போ தப்புனு மட்டும் சொல்லுவேன். என் குடும்பத்தை எப்பவும் சிக்கல்ல விட மாட்டேன்” மனைவியை கைகளில் அள்ளி படுக்கையில் விட்டவன் மகளின் மறுபக்கம் தானும் சென்று படுத்துகொண்டான்.

தந்தையை உணர்ந்த பூர்வி, “ப்பா” என்ற முனகளோடு வசமாக தந்தையின் கைகளில் அடைக்கலம் தேடிட, சிரிப்போடு மகளை மார்பினில் ஏந்திக்கொண்டான் அன்பு தகப்பன்.

வாரம் ஒன்று கடந்திருந்தது, பெரியவர்கள் புதல்வர்களை வைத்து பேசி முடிவிற்கு வருவோம் என எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ஒருவர் இருந்தால் மற்றொருவர் இருப்பதில்லை.

நொந்துபோனார் வித்யா.

***

மற்றொரு பக்கம் விஷ்ணு சீற்றமாய் தங்களது ஆடிட்டர் அலுவலகம் வந்தான். காலையிலிருந்து நண்பனை காணாது அவனுக்கு பார்த்திபன் அழைப்பு விடுத்தும் எடுக்கவில்லை.

இப்பொழுது அறைக் கதவு உடையுமளவு அறைந்து உள்ளே வந்தவன் பார்த்திபனுக்கு எதிரில் அமர அந்த குளிரிந்த அறையின் குளிரும் அவன் சினத்தை குறைக்கவில்லை.

ஒரு லிட்டர் தண்ணீர் முழுவதையும் பருகியவன், “என்னடா அப்டி பாக்குற?” கோவமாக நண்பனிடம் ஏறினான். பார்த்திபன் பதில் மொழியவில்லை, நண்பனை பற்றி தான் அவனுக்கு தெரியுமே தான் இப்பொழுது ஏதாவது பேசினால் அதற்கும் ஆடுவான்.

“என்ன நினைச்சிட்டு இருக்கானுங்க, என்னமோ எனக்கு ஆடிட்டிங் தெரியாத மாதிரி நீ தப்பு பண்ணிருக்க நீ தப்பு பன்னிருக்கனு ஆளாளுக்கு சுத்தி நிக்கிறானுங்க. அப்டியே சுர்ருன்னு ஏறுது தலைக்கு” பார்த்திபன் நண்பனின் புலம்பலில் சிரிப்பை அடக்கி அவனை பார்த்தான்.

கோவையின் புகழ்பெற்ற ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நேர்ந்த ஒரு கணக்கு குளறுபடிக்கு பதில் தெரிவிக்க சென்றிருந்த விஷ்ணுவின் ரத்த அழுத்தத்தை ஏகத்திற்கும் ஏற வைத்திருந்தனர் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு.

இயல்பிலே பொறுமை அதிகமில்லாத விஷ்ணுவின் நிலையை மாற்றி நிதானத்திற்கு அவனை அழைத்து வரவே இப்பொழுதெல்லாம் பார்த்திபன் வெளி வேலைகளின் பொறுப்பை அவனிடம் கொடுத்தது.

“போறேன் ஆனா செட் ஆகலனா நீ தான் மறுபடியும் போகணும்” என்ற நிபந்தனையோடு சென்றவன் பல செட் ஆகாத வேலைகளை பார்த்தும் இனி பார்க்க மாட்டேன் என கூறவில்லை.

“கிருகனுங்க. டாக்குமெண்ட்ல எல்லாம் ஒழுங்கா காட்டுனா தான கணக்கு சரியா வரும். இவனுங்க டாக்ஸ் கம்மியா கட்ட நம்ம உயிரை வாங்குறானுங்க”

“வேலை மிச்சம் தானே விஷ்ணு சில டாக்குமெண்ட்ஸ் அவாய்ட் பண்ணிடலாம். இதுக்கு ஏன்டா கோவம் உனக்கு?”

“அத விட வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எது எதுனு தெளிவான ஐடியா இருந்தா பரவால்ல. அவனுங்க குழப்பத்தை என்ன வச்சு சரி செஞ்சுக்குறானுங்க.

இவனுங்க எப்படிடா பிஸ்னஸ் பண்ணி கிழிக்கிறானுங்களோ. பக்கத்து கடைல இருந்து ஆடிட் பைல் பண்ண சொல்லி குடுத்தார்ல என்னாச்சு?”

அங்கிருந்த அலமாரியிலிருந்த ஒரு கோப்பை தேடி எடுத்தவன், “பரவல்லையே முடிச்சாச்சே. யார் கணக்கு பாத்தது?”

“நான் தான்டா”

“அதானே பாத்தேன், நம்ம ஆளுங்களாவது வேலைய வேகமா பாக்குறதாவது. இந்த ராஜன் சோம்பேறி எல்லாம் எதுக்குடா அனுப்ப விட மாட்டிக்கிற, ஒக்காந்து பெஞ்ச்ச தான் தேய்கிறாய்ங்க, அந்த ஆள்கிட்ட குடுத்த வேலைய உன்கிட்ட தள்ளிவிட்டானா?”

“விஷ்ணு டேய் வயசுக்கு மரியாதை குடுடா. ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல அதிகமா ஹெல்ப் பண்ணவர். சரி நீ இப்டி வா”

நண்பனை அருகில் அமர்த்தினான். விஷ்ணுவுக்கு பாதி புரிந்துப்போனது தன்னை விசாரிக்க தான் இந்த வேலை என்று.

“நீ எத கேக்க போறன்னு தெரியும். அந்த பொண்ண பத்தி அக்கு வேறு ஆணி வேறா விசாரிச்சேன். புரோக்கர் மாதிரி எவனோ ஒருத்தன் அவளோட அப்பனுக்கு வேலை பாத்துருக்கான்”

பார்த்திபனுக்கு புரியவில்லை, “புரோக்கர்னா… இந்த மாதிரி வேலை பாக்க கூட புரோக்கர் இருக்கானுங்களா?”

“இன்னும் எந்த காலத்துலடா இருக்க நீ? பொண்ணு பாக்க, இடம் விக்க மட்டும் தான் புரோக்கர் இருப்பாங்களா. இப்போல்லாம் ஒருத்தனோட குடிய கெடுக்க தான் அதிகமான புரோக்கர்ஸ் இருக்கானுங்க. கொலை பண்ண புரோக்கர், குழந்தை கடத்த, திருட, திருட்டு பொருள் விக்க வாங்க அதை இடம் மாத்தி வைக்கனு ஒன்னு ஒண்ணுக்கும் ஆள். ஒரு மினி டார்க் மார்க்கெட் உள்ள போற மாதிரி”

பார்த்திபனுக்கு விழிகள் கூர்மையானது, “டார்க் மார்க்கெட்ல இருக்குறவனோட நமக்கு என்னடா பகை இருக்க போகுது? இது அவ்ளோ பெரிய பிரச்சனை இல்ல. எவனோ தொழில் பகைல பண்ண மாதிரி தான் இருக்கு” தாடை தடவி யோசித்தான் பார்த்திபன்.

“சந்தேகமே வேணாம். அது தான். வெளிய விஷயம் தெரிஞ்சா நம்ம பேர் கேட்டு போகும்னு தான் ரோட்டுல நின்னு சண்டை போட்டது. இப்போ என்னன்னா அந்த பொண்ணோட அப்பன் அவளோட அப்பனானே சந்தேகம் எனக்கு” என்றான் விஷ்ணு.

“ம். இவ்ளோ தூரம் இறங்கி வந்தவனுங்க இதுக்கும் சலிச்சவனுங்களா இருக்க மாட்டானுங்க. யார் ஏவுனதுனு விசாரிக்க முடியல?”

விஷ்ணு, “இல்ல பண்ணிடலாம். கொஞ்சம் நம்பிக்கையான ஆள் இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன்”

பார்த்திபன், “இதுல எதுக்குடா நம்பிக்கையான ஆள் தேவை, நம்மள பத்தி வெளிய சொல்லிடுவானுங்களேனு பயப்புடுறீயா?தெரியட்டுமே”

விஷ்ணு, “டேய் உன்ன விட முன்னாடி நான் தான் சண்டைக்கு நிப்பேன். ஆனா இங்க அவன் சுதாரிக்க கூடாது. அன்னைக்கு ஆபீஸ் முன்னாடி நின்னு பிரச்சனை நடந்தப்போ உன் மனசு எவ்வளவு குமுறுருக்கும்னு எனக்கு தெரியும்.

அதை விட அவனை கதற வைக்கணும். அசிங்கப்படணும் அவன். அதுக்கு அவன் அவன் முதுகுல குத்துனா தான் எனக்கு நிம்மதி. நீ ஆடிட்டிங் வேலைய மட்டும் பாரு மத்த எல்லாம் நான் பாத்துக்குவேன்” என்றான் விஷ்ணு தீர்க்கமாக கண்களில் கனலோடு.

பார்த்திபனால் எதுவும் பேச முடியவில்லை. அன்று அவன் மனதினில் கொண்ட கோவம், ஆற்றாமை அனைத்தையும் அமைதி என்னும் போர்வையில் மூடி வைத்து தவித்தது தனக்கு மட்டுமே தெரியும் என நினைத்திருக்க நண்பன் தன்னை அறிந்ததை புரியாமல் போனான்.

“பண்ணலாம். அதுக்காக அடிதடினு போக கூடாது விஷ்ணு”

விஷ்ணு, “வாத்தியாரே நீ சொன்னா நான் செய்வேன். அதுக்காக உன்ன, நம்மள அசிங்கப்படுத்துனவனுக்கு மரியாதையை குடுக்க முடியாது”

நண்பனை முறைத்தான் பார்த்திபன், என்ன கூறியும் பிடிவாதமாக நிற்கும் இவன் செயல் பல நேரங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் பயம் தான் பார்த்திபனுக்கு. பிடித்த வைக்க முடியாத காளையாக தான் சீறுவான். இன்று அவன் கண்களில் இருக்கும் அந்த உறுதி என்ன கூறியும் மாறாதென்பது மற்றும் பார்த்திபனுக்கு தெரிந்தது.

“சரி என்னமோ பண்ணு, ஆனா என்கிட்டே சொல்லணும்”

விஷ்ணு, “உன்கிட்ட நான் எதுக்குடா சொல்லணும். என் கைல விசயத்தை குடுத்துட்ட இனி நீ இதுக்குள்ள வர கூடாது”

“நான் வருவேன். நீ இனிமேல் இதுல தனியா ஏதாவது பண்ணது தெரிஞ்சது தொலைச்சிடுவேன்”

விஷ்ணுவை பார்த்திபன் அதட்டிக்கொண்டிருந்த பொழுதே பார்த்திபனின் கைபேசி இசைக்க நண்பனை அமைதி காக்க கூறி எடுத்து பேசினான். அழைத்தது ஸ்ரீனிவாசன் தான்.

“சொல்லுடா” என்றான் இருக்கையில் சாய்ந்தமர்ந்து.

“அத்திம்பேர்…” குரலில் சிறு தயக்கம் சிரியவனிடம்.

“என்ன ஸ்ரீனி?”

“எங்க இருக்கேள்?”

“ஆபீஸ்ல தான். என்ன ஏன்டா?”

“உங்க உதவி தேவை வர்றேளா கொஞ்சம்?” உடனே எழுந்த பார்த்திபன் விஷ்ணுவின் தோள் தட்டி உடன் வருமாறு சைகை செய்தான்.

பார்த்திபன் முகத்தில் இருந்த அவசரத்தை உணர்ந்த விஷ்ணு தன்னுடைய காரின் சாவியை எடுத்து வெளியே நடக்க, “உன் ஆஃபீஸ்க்கா”

“இல்.. இல்ல அத்திம்பேர் போலீஸ் ஸ்டேஷன்” என்றான் ஸ்ரீனிவாசன் அதீத தயக்கத்தோடு.

How is the chapter?

Comment please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!