Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 7.2

“அப்பா ஷேர் பண்ணணும் சொல்லிருக்கேன்ல? ஸ்நாக்ஸ் எடுத்துட்டு அண்ணா கூட ஷேர் பண்ணுங்க. அப்பா, அம்மாவை கூட்டிட்டு வர்றேன்.”

மகள் பதார்த்தங்கள் அடங்கிய பையை எடுத்து வெளியே ஓட, மனைவி அருகில் வந்து அமர்ந்தான் பார்த்திபன்.

“மாமா எதுவோ உன்கிட்ட சொல்லிருக்கார். என்கிட்ட ஷேர் பண்ணிக்கிற விஷயமா இருந்தா சொல்லுவியா ஆராமா?”

இந்த நிலையிலும் மனைவிக்கும் அவள் தந்தைக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைக் கூட, அவள் அனுமதியோடு மொழிய கேட்பவன் மேல் பித்தாய் காதல் கொண்டிருப்பது அவள் தவறில்லையே…?!



Advertisement

கேவலோடு கணவன் மேல் விழுந்தவள் அவன் கழுத்தை கட்டி, கழுத்தில் முகம் புதைத்து மனதின் பாரம் மொத்தத்தையும் இறக்கத் துவங்கினாள்.

தன்னுடைய சட்டை நனையும் அளவு அழும் மனைவியின் மனதை அறிய துடித்தவனாய், “இவ்ளோ அழுகுற அளவு என்ன? நீ சொல்றியா இல்ல, ஸ்ரீனிக்கு போன் பண்ணி கேக்கவா?” சற்று கடினத்தை குரலில் கூட்டினான்.

உடனே பார்த்திபனை விட்டு அகன்றவள் முகம் எல்லாம் சிவந்து தலையை ஆட்டி, “உங்களுக்கு சனி பெயர்ச்சி ஆரமிச்சிடுச்சாம் ன்னா…”

Advertisement

“பொண்டாட்டின்னு பாக்க மாட்டேன்டி, கடிச்சு வச்சிடுவேன். இதெல்லாம் ஒரு விசயம்னு இதுக்கு இப்டி ஒரு அழுகையா?”

Advertisement

“இல்ல, உங்களுக்கு அப்பா ரொம்ப ஜாக்கிரதையா இருக்க சொன்னார். நேக்கு பயமா இருக்கே…!”

“ஊர் உலகத்துல எனக்கு மட்டும்தான் இது வருதா? இதெல்லாம் ஏன்டி நம்புற?”

“எப்ப பார், சாமிய நம்பாத நம்பாதனு சொல்லிட்டு இருக்காதேள். அதுலையே ஊறி போனவ நான். என் நம்பிக்கையை இந்த மாதிரி சந்தர்ப்பத்தை காரணம் காட்டி உடைக்க பாக்காதேள்.”

Advertisement

பார்த்திபன், “சரி சொல்லல, ஆனா எனக்கு ஒன்னு மட்டும் கிளாரிஃபை பண்ணு. சனீஸ்வரர் பத்தி சொல்லு.”

“நீங்கதான் எதிஸ்ட் ஆச்சே, உங்களுக்கெல்லாம் சொல்ல முடியாது போங்கோ.” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்து.

அவள் இடையில் அழுத்தம் கொடுத்து, “சொல்லு ஆராமா…” என்றான் கணவன்.

“அவர் சூரியன் சாயா தேவியோட மகன். காக்கை வாகனம், அவர் கால் கொஞ்சம் ஊனம், அதால மெதுவா நடப்பார்னு ஐதீகம். அதனாலதான் ஏழு வருஷம் ஆறு மாசம் சனி பெயர்ச்சி நடக்குது. இந்த டைம்ல அவர் பார்வை யார் மேல படுதோ அவாளுக்கு கெட்ட எண்ணங்கள், குணங்கள் இருந்தா அவா பார்வைல எல்லாமே மாறிடும்னு சொல்லுவா.”

“அப்போ தப்பு பண்றவங்கள தண்டிக்கும்?” மனைவி எதுவும் பேசாது அவனை முறைத்தாள்.

“என்ன பேச்சே கானோம்? சாமி, கோவில்னு ஏறி இறங்காம இருக்கலாம். ஆனா எனக்கும் தெரியும் இதெல்லாம், நம்மளோட கர்மாக்கான பலனை அனுபவிக்க போறோம் அதுதான?

எனக்கு தெரிஞ்சு நான் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணதில்ல, இனியும் பண்ண போறதில்ல. அப்டியே நடந்தாலும் நீ பயப்படுற அளவு நடக்காது ஆராமா. பொறந்ததுல இருந்து எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்க்கை போய்ட்டா, அறுவது வயசுல வாழ்க்கையை பத்தி பேசுறப்போ, சுவாரஸ்யமா சொல்றதுக்கு ஒரு விசயம் இருக்காது.

வரட்டும், எது வேணாலும் வரட்டும், நின்னு சமாளிக்கிறேன். கூடவே என் மாமி நீ இருக்குறப்போ நான் எதுக்கு பயப்படணும்? எதுக்கு இப்டி ஒரு அழுகை? பாரு, உன்னை பாத்து குழந்தையும் அழுகுறா.”

தான் பேச பேச நிற்காமல் கண்ணீர் வடிய, தன்னையே பார்ப்பவள் விரலோடு விரல் கோர்த்து, அந்த வெண்டை விரலில் முத்தம் வைத்து மனைவியைத் தன்னோடு அருகில் ஒட்டி நிறுத்தினான்.

“சரி, நான் என்ன பண்ணணும் சொல்லு?” மனைவிக்காக மட்டுமே இறங்கி வந்து கேட்டான்.

“விரதம் இருக்கேளா?”

பார்த்திபன் முகத்தில் அதிருப்தி பரவியது, “அப்போ நீ விரதம் இருக்க போற, அப்டி தான?” மௌனமாக தலையை ஆட்டினாள்.

“எத்தனை வருஷம்?”

அடிக்குரலில் சீறிய கணவன் முகத்தைப் பார்க்கவே இல்லை, “நீங்க இந்த புரட்டாசி மட்டும் விரதம் இருங்கோ, அது போதும்.”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி, நீ எவ்ளோ வருஷம் இருக்க போற?” முகத்திற்கு நேராக குனிந்து முறைத்தான் பார்த்திபன்.

அவள் மௌன மொழியைக் கலைக்காமல், “நான் விரதம் இருப்பேன், ஆனா நீ விரதம் இருக்க மாட்டனு சொல்லு.”

“அது எப்படி பார்த்தி…”

வேகமாக பேசியவளை, “பேசாத… நான் சொல்றதுதான் முடிவு, எந்த சாமிய வேணும்னா வேண்டிக்கோ. எத்தனை கோவில் வேணா ஏறி இறங்கு. நான் கூட வர்றேன், ஆனா விரதம் நான் மட்டும்தான் இருப்பேன். சரின்னா மேல பேசலாம், இல்லையா நீ எதுக்கு பயப்படுறியோ அதை செஞ்சு…”

“வேணாம்… நீங்க சொல்ற மாதிரியே செய்ங்கோ, ஆனா புரட்டாசி சனிக்கிழமை மட்டும் நான் உங்க கூட விரதம் இருப்பேன், இதுக்கு மட்டும் மறுப்பு சொல்லாதேள் ப்ளீஸ்…”

மகளைப் போலவே கண்களை சுருக்கி கெஞ்சுபவளின் அந்த ஒரு வேண்டுதலுக்கு அனுமதி கொடுத்தான்.

“முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி வர்றியா? இன்னைக்கு வெளிய போகலாம்னு தான் வேகமா வந்தேன்.”

உள்ளுக்குள் நெருடல் இருந்தாலும் கணவனது முகத்திற்காக தயாராகி ஆரபி வர, அதற்குள் கீழே சென்றிருந்த பார்த்திபன் அன்னை, தந்தையிடம் மனைவியின் அமைதிக்கான காரணத்தை மேலோட்டமாக கூறினான்.

“நீங்க மட்டும் ஏன் பார்த்திபா விரதம் இருக்கணும்? ஒரு மாசம் எல்லாருமே அசைவம் சாப்பிடாம இருக்கலாம்.” என்றார் அன்னை.

“அது சரியா வராது ம்மா, அண்ணிய யோசிங்க.” என்றான் பார்த்திபன்.

“அவளுக்கு நான் வெளிய வாங்கி குடுத்துக்குறேன்டா, உனக்காக ஒரு மாசம் எங்களால வாய அடக்க முடியாதா என்ன?”

பார்த்திபன், “ண்ணா!”

“டேய் அதான் முடிவு பணியாச்சுல, விடு.” அசைவத்தை அதிகம் விரும்பி உண்ணும் வசந்த் கூட பெரியவர்களின் முடிவிற்கு உறுதுணையாக நின்று பேச, அதற்கு மேல் எதுவும் பார்த்திபனாலும் பேச முடியவில்லை.

“அப்புறம் அந்த எல்ஐசி பணத்தை என்ன பண்ணலாம்னு இருக்கீங்கப்பா?” கிரி, தந்தையிடம் கேட்க,

“உனக்கு ஏதாவது தேவையா என்ன?” என்றான் இளையவன் வேகமாக.

கிரி, “கேக்குறேன்டா, ஏன் நான் கேக்க கூடாதா?”

“சின்ன பசங்க மாதிரி இது என்ன?” அதட்டிய தந்தை, “நாப்பது லட்சம் பட்ஜெட்ல மூணு வீடு பாக்கலாம்னு நானும், உங்க அம்மாவும் யோசிச்சோம்.” மூவரிடமும் பொதுவாக கூறினார்.

“ரொம்ப நல்லது மாமா.” என்றாள் கமலவல்லி வேகமாக சிரிப்போடு.

“என்னப்பா, எங்களை எல்லாம் தனியா அனுப்புற ஐடியாவா?” வசந்த் பெற்றோரை சந்தேகமாக பார்த்தான்.

“ஒரு இன்வெஸ்ட்மென்ட் தான் வசந்த். நீங்களா வெளிய போறேன்னு சொல்ற வரைக்கும், எங்க வாயில இருந்து அந்த வார்த்தை என்னைக்கும் வராது.” என்றார் அன்னை.

“ம்மா, எனக்கு வேணாம் ம்மா.” என்றான் பார்த்திபன் அமைதியான வேகத்தோடு.

“என்னப்பா சொல்ற?” அன்னைக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமாம்மா, எனக்கு வேணாம். வசந்த்துக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணணும், அதுக்கு நீங்க அந்த பணத்தை வச்சுக்கோங்க.”

“வசந்த் கல்யாணத்துக்கு செலவுக்கு யோசிக்கணும்னா அப்ப எல்லாரோட பணத்துல இருந்தும் மூணு, நாலு லட்சம் எடுத்தா போச்சு. இதுக்கு ஏன் நீ மொத்தமா வேணாம்னு சொல்ற பார்த்திபா?”

கமலவல்லி, “தம்பிதான் வேணாம்னு சொல்றாங்களே மாமா, அவருக்கு அவர் தொழில் மேல அவ்வளவு நம்பிக்கை.”

கிரி, மனைவியை முறைத்தான், “இல்ல, அவருக்கு பணமா கூட குடுத்துடுங்கனு சொல்ல வந்தேன்.” சமாளித்து அமைதியாக கணவன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

வித்யா, “எங்களுக்கு எல்லாரும் ஒன்னுதான் பார்த்திபா, உங்க கைல பணம் வந்து சேரும். அதை குப்பைல கூட போட்டுடுங்க, என்னனு கேக்க மாட்டோம் நானும் உங்க அப்பாவும்.”

முடிவு இதுதான் என அன்னை எழுந்து செல்ல, பார்த்திபனை வேதனையோடு பார்த்து அகன்றார் தந்தை ராஜேந்திரன்.

கிரி, “உனக்கு பணத்தை வாங்குறதுல என்ன தான்டா பிரச்சனை?”

வசந்த், “அம்மா, அப்பாவை யோசிச்சாவது வாங்கிக்கலாம்ல. போடா…” உன் செயலில் எனக்கு சுத்தமாக திருப்தி இல்லை என்பதை முகத்தில் காட்டி தன்னறை நோக்கி சென்றுவிட்டான்.

“அப்போ நீ மட்டும் இந்த வீட்டுக்கு காசை கொட்டிக்கிட்டே இருப்ப, இந்த வீடு உனக்கு எதுவும் செய்யக் கூடாதா?” கிரிதரன் சகோதரனின் அமைதியில் மேலும் குரலை உயர்த்தி கேட்டான்.

“ண்ணா, அப்டிலாம் ஒன்னுமில்ல. எனக்கு தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கு. எதுக்கு அம்மா, அப்பாவை தொந்தரவு செய்யணும்? இப்ப கூட அவங்களுக்குனு கொஞ்சம் கூட பணம் எடுத்து வைக்கல, நாளைக்கு வசந்த்துக்கு கல்யாணம் நடக்கும், அதுக்கு செலவு பண்ணணும்.

இந்த வீடும் நம்ம மூணு பேர் பேர்லதான் இருக்கு. நாளைக்கு அப்பாக்கோ, அம்மாக்கோ ஒரு செலவு வந்தா என்ன பண்றது? என்னை பொறுத்தவரை அவங்க எந்த காலத்துலயும் உன்னையோ, என்னையோ நம்பி இருக்க கூடாது. அதுக்குதான் சொல்றேன், அப்பா குடுக்குறப்போ வாங்கிக்கிறேன். ஆனா அந்த பணம் எனக்கு வந்து சேராது. ஆக வேண்டிய வேலைய நான் பாக்குறேன், நீ அம்மாக்கிட்ட சொல்லிடாத.”

அன்னை, தந்தையின் அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரையும் வெளியே அழைத்து வந்தவன் கிரிதரனிடம், “துருவ்வ நான் வெளிய கூட்டிட்டு போறேன் ண்ணா, நைட் சமைக்க வேணாம். வரப்போ எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்.”

ஆரபியை அழைத்து உணவகம் ஒன்றுக்கு வந்தவன், சிறுவர்கள் கேட்டவை அனைத்தையும் வாங்கி கொடுத்து, மனைவி கேட்காமலே அவளுக்கு பிடித்தவை அனைத்தையும் வாங்கி வைத்தவன், தனக்கென எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.

“உங்களுக்கும் சொல்லுங்கோ.” என்றாள் மனைவி.

“நீ எப்டியும் மிச்சம் வப்ப, அதை சாப்பிட்டு நான்வெஜ் வாங்கிக்கிறேன், அதுவரை நீ பசங்கள பாத்துக்கோ.”

ஆரபி, “அப்போ நீங்க இதுக்குத்தான் பிளான் போட்டீங்க?”

பார்த்திபன், “பிளான் உன்னை மட்டும் தனியா கூட்டிட்டு வர்றதுதான், இப்போ கூட ஒன்னுமில்ல, நைட் அவுட்டிங் போகலாமா?” கண்ணடித்து குறும்போடு மனைவியை நெருங்கி வந்து சிரித்தான்.

ஆரபி அவனை தள்ளி நிறுத்தி வெட்க சிரிப்போடு குழந்தைகளை கவனித்துக்கொண்டே உணவை உண்ண, தனக்கு தேவையானதை ஆர்டர் செய்து வீட்டினருக்கும் வாங்கிக்கொண்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் தானும் உணவு உண்டு, அந்த உணவகத்தில் இருந்த சிறிய சிறுவர் பூங்காவிற்கு வர, அங்கு தாயின் கழுத்தோடு கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுகும் மகளைப் பார்த்ததும், வேகமாக பார்த்திபன் அவர்களை நெருங்க, மனைவி அருகில் நின்றிருந்த தாமோதரனைப் பார்த்ததும் ஒரு நொடி நின்றுவிட்டான்.

உடனே மனைவியின் தேடலை உணர்ந்தவன் அவர்களை நோக்கி நகர துருவ், சகோதரியின் அழுகையை வாடிய முகத்தோடு பார்த்து நிற்க, அவன் தோளை தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தி மகள் சிகையை வருடினான், “என்ன ஆச்சுடா?” என்று.

தந்தையின் குரலை கேட்டதும் தாவி அவனிடம் வந்த பூர்வி, தந்தையின் தோள்களில் முகம் புதைத்து மேலும் மேலும் அழுக மனைவியைப் பார்த்தான்.

“என்ன ஆச்சு ஆராமா?” அழும் மனைவியையும் அருகில் இழுத்து நிறுத்தினான்.

“பாப்பா ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டாங்க தம்பி, ஒன்னுமில்ல… அடி எதுவும் படல.” என்றார் தாமோதரன் சன்னமான சிரிப்போடு.

“ஊஞ்சல்ல இருந்து எப்படி ஆரா விழுந்தா?” கோவத்தைக் காட்டாமல் மனைவியிடம் பார்த்திபன் கேட்க, அது அவளை இன்னும் அழ வைத்தது.

“நான் உங்கள பாக்க வந்தேன் ன்னா. நீங்க பில் பே பண்ணிட்டு இருந்தேளா, நான் திரும்பி வர்றதுக்குள்ள பாப்பா விழுந்திருந்தா.”

மனைவி நிலையை அறிந்தவன் உடனே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, மகளை நிற்க வைத்தவன் அவள் உடலில் ஏதேனும் அடிபட்டுள்ளதா என ஆராய்ந்து, “டேய் குட்டிம்மா அழுகாதீங்க, எங்கையாவது வலிக்கிதா?” என்றான் குழந்தையின் தலையில் ஒவ்வொரு இடமாக அழுத்தி.

அன்னையின் பதட்டத்தில் அவளுக்கு மேலும் அழுகை வர தேம்பி தேம்பி அழுதது.

“ஒன்னுமில்லடா குட்டி, அப்பா இருக்கேன்ல…”

குழந்தைக்கு சமாதானம் கூறி மனைவியைப் பார்த்தான், “குழந்தை விழுந்த அதிர்ச்சில அழுகுறா, நீ அழுகுறத பாத்து என்னமோ ஏதோனு ரொம்ப பயப்புடுறா ஆராமா. அழுகாத…” மனைவிக்கு அறிவுரை கூறி மகளிடம் திரும்பினான்.

கலைந்திருந்த அவள் கூந்தலை சரி செய்து, மீண்டும் கைகளில் அள்ளிக்கொண்டான், “அப்பா கேட்டா பாப்பா அன்சர் பண்ணுவீங்கள்ள?”

குழந்தை ஆமாம் என்றது பிஞ்சு கைகளை வைத்து கண்ணீரை துடைத்தபடி. “ம்ம்… சொல்லுங்க, எங்கையாவது வலிக்கிதா என் குட்டிக்கு?”

“நோ ப்பா.” என்றாள் விக்கலோடு.

“நெஜமாடா? தலைல, கால்ல எங்கையும் வலிக்கல தான?”

“நோ ப்பா… பட்… பட்தான் வதிக்குது…” சங்கோஜப்பட்டு குழந்தை நமட்டு சிரிப்பு சிரிக்க, பெற்றோருக்கு சற்று ஆசுவாசம் வந்தது.

பார்த்திபன் குழந்தையை தூக்கி காரினை நோக்கி நகர, “குழந்தையை பாத்து வச்சுக்கோங்க தம்பி.”

தாமோதரன் குரல் ஆரபிக்கு அக்கறையாக பட, “சரிங்க அங்கிள்.” என்ற நல்லெண்ணத்தோடு பதிலளித்தாள்.

பார்த்திபன் பார்வை தனக்கு பின்னால் வந்த மனைவியை தாண்டி பின்னால் ஊஞ்சலை பிடித்து நின்ற தாமோதரன் மேல் படிந்தது. ஊஞ்சலில் ஒரு பக்க சங்கிலி அறுந்து தொங்கிக் கிடக்க, அவர் முகத்தில் ஒரு எச்சரிக்கை சிரிப்பு.

வார்த்தைகளில் இருந்த அழுத்தம் எல்லாம் அவர் கண்கள் கொடுத்த செய்தியை தெளிவாக அவனிடம் கடத்தியிருக்க, உள்ளுக்குள் அடக்க முடியாத கோவம் கனன்று தீயாக எரிந்தாலும், வெளியே சளைக்காத சிரிப்பை பரிசாக கொடுத்து, உடன் குழப்பத்தையும் விடுத்தே வாகனம் ஏறினான் பார்த்திபன்.

வரும் வழி எல்லாம் பார்த்திபன் தீவிரமான யோசனையில் இருக்க, ஆரபி தன்னுடைய மடியில் உறங்கும் குழந்தையை கவலை தோய்ந்த மனதோடு பார்வையிட்டே வந்தாள். குழந்தைகள் இருவரும் வரும் வழியிலே உறங்கியிருக்க, துருவை சகோதரனிடம் ஒப்படைத்து தங்கள் அறைக்கு வந்தனர்.

பூர்வியை மெத்தையில் படுக்க வைத்து தன்னுடைய உடையை மாற்ற ஆயத்தமான மனைவியின், இடை வளைத்து இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டான் கணவன்.

ஏதோ அவள் அருகாமை அவனுக்கு தேவைப்பட்டது போல், அவள் மன சஞ்சலத்திற்கு அவன் அணைப்பு நிச்சயம் தேவை என்பதை அறிந்தே செய்தான். மனம் உடையாமல் பெரும்பாடு பட்டு நின்றவள் மேல், பார்த்திபன் கரங்கள்தான் இறுக்கமாக இருந்தது.

“நான் கண்டிப்பா நல்லா இருப்பேன் மாமி, எனக்காக இல்லனாலும் உனக்காகவும் நம்ம பொண்ணுக்காகவும் நூறு வருஷம் உங்ககூட கண்டிப்பா இருப்பேன். இது நான் உனக்கு குடுக்குற வாக்கு. ம்ம்…”

தன்னை அணைக்காமல் நிற்கும் மனையிடம் சிறிதும் விலகாமல் சத்தியம் செய்து கொடுத்தான் பார்த்திபன். இந்த ஒரு ஆறுதல் போதுமே, தன்னால் முயன்ற மட்டும் கணவனை இறுக தழுவி அவன் மார்பிலே நிம்மதி மூச்சு விட்டாள் பார்த்திபனின் மாமி.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!