Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 1

அத்தியாயம்

எல்லாரிடத்தில் இருந்தும்

தனித்து தெரிகிறாய் எந்தன்

பார்வையில் மட்டும்!!!



Advertisement

‘பார்க்’ என்ற கலைக் கல்லூரியில் அன்று செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக தங்களின் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி வாழ்க்கையில் சந்தோசத்துக்கு குறை உண்டா என்ன? றெக்கை முளைத்து பறக்கத் துடிக்கும் பருவம் அல்லவா?

Advertisement

அனைவரின் முகங்களிலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது. இரண்டாம் வருடத்தின் கடைசி பரிட்சையை முடித்து விட்டு தோழிகளுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

Advertisement

அந்த செமஸ்டர் முடிந்ததால் அடுத்த நாளில் இருந்து அவர்களுக்கு விடுமுறை என்பதால் சந்தோஷமாக தான் இருந்தது. அதே நேரம் அனைவருக்குமே லீவ் முடிந்து எப்போது மற்றவரைப் பார்ப்போம் என்ற ஏக்கமும் இருந்தது. (pacifictiregroup.com) பிரிவு துயர் அவர்களை சிறிது வாட்டவும் செய்தது. கூடவே நான்கு செமஸ்டர் படிப்பை முடித்து விட்டோம், இன்னும் இரண்டு செமஸ்டர் தான் என்ற நிம்மதியும் வந்தது.

Advertisement

வீட்டுக்குச் போக வேண்டிய நேரம் வந்ததால் “சரி டி நான் கிளம்புறேன்”, என்றாள் பூங்கொடி.

“இன்னைக்கு எத்தனாவது நம்பர் கூப்பிட வரும்?”, என்று கேட்டாள் ரேவதி.

“ஏய் என் அண்ணனுங்களுக்கு நம்பரா வைக்கிற?”, என்று போலியாக தோழியை மிரட்டினாள்.

“சும்மா தான் டி. சரி எந்த அண்ணா இன்னைக்கு கூப்பிட வருவாங்க?”

“எங்க சின்ன அண்ணன் டி. சரி நான் ஹாஸ்டல்ல இருந்து திங்க்ஸ் எடுக்கணும்”, என்று சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு சென்றாள் பூங்கொடி. ஏற்கனவே மூட்டை கட்டி வைத்திருந்த அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வரும் போது அவளின் கடைசி அண்ணன் வரதன் அவளுக்காக காருடன் காத்திருந்தான்.

அவனைக் கண்டதும் பூங்கொடி முகம் மலர்ந்தது. அவனைச் சுற்றி பல பெண்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தாலும் அவன் கண்கள் யாரையுமே பார்க்க வில்லை.

தலை குனிந்து தன்னுடைய போனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். “வரதண்ணா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோஷமாக விசாரித்த படி அவன் அருகில் சென்றாள் பூங்கொடி. தங்கை குரல் கேட்கவும் தலை நிமிர்ந்து பார்த்தவன் அவள் கையில் இருந்த பேகை வாங்கிய படி “நல்லா இருக்கோம் டா குட்டிமா. நீ பரீட்சை எல்லாம் நல்லா பண்ணுனியா?”, என்று கேட்டான் வரதன்.

“நல்லா பண்ணிருக்கேன் அண்ணே. மூணு அண்ணனுங்க, அண்ணிங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

“நீ இல்லாதது மட்டும் தான் குறை கண்ணு. மத்த படி எல்லாரும் நல்லா இருக்கோம். குட்டீஸ் எல்லாம் உன்னைக் கூப்பிட வருவோம்னு ஒரே அடம். கடைக்கு போய்ட்டு வந்து கூட்டிட்டு போறேன்னு ஏமாத்திட்டு வந்தேன்”

“எனக்கும் அவங்களைப் பாக்கணும் போல இருக்கு. அவங்களைக் கூட்டிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்”

“அதான் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிருவோமே?”

“சரி நீ என்ன இப்படி இருக்க?”

“நான் என்ன மா செஞ்சேன்?”

“உன்னைச் சுத்தி எத்தனை பொண்ணுங்க இருக்காங்க? வயசு பையனா அவங்களை சைட் அடிக்க வேண்டாமா?”

“ஹா ஹா, அதெல்லாம் நமக்கு செட் ஆகாது டா”

“ஏண்ணே?”

“இப்ப நீ இந்த இடத்துல நிக்குற. உன்னை எவனாவது பாத்தா எனக்கு எப்படி இருக்கும்? அதே மாதிரி தானே? நான் ஒரு பொண்ணைப் பாத்தா அந்தா பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் இருக்கும்? எனக்குன்னு ஒருத்தியை நீங்க கண்ணுல காட்டுங்க. அப்ப பாரு எப்படி சைட் அடிக்கிறேன்னு? இந்த பக்கம் அந்தா பக்கம்னு சைட்டா அடிச்சு தள்ள மாட்டேன்? என்ன அந்த பொண்ணு தெரிச்சு ஓடாம இருக்கணும்”, என்று பதில் சொன்ன அண்ணனை அவளுக்கு அவ்வளவு பிடித்தது.

“மை ஸ்வீட் அண்ணா, சரி அந்த கிழவி எப்படி இருக்கு?”

“அம்மாவை அப்படிச் சொல்லக் கூடாது டா”

“சரி சரி, அம்மா எப்படி இருக்கு?”

“நல்லா இருக்காங்க”, என்று சொல்லிக் கொண்டே அவளுடைய பைகளைக் காரில் அடுக்கியவன் அவளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பினான்.

போகும் வழியில் இயற்கையை ரசித்த படியே வரதனுடன் வம்பழந்து கொண்டே வந்தாள் பூங்கொடி.

பொள்ளாச்சி அருகில் இருந்த ‘வயல்வெளி’ என்ற கிராமம் தான் பூங்கொடியின் சொந்த ஊர். பச்சை பட்டாடை போர்த்தியது போல இருந்த வயல்வெளிகளின் அழகு அவள் மனதை மயக்கியது.

சுந்தரவேல் மணியம்மை தம்பதியினருக்கு கேசவன், மணிவாசகம், தம்பிதுரை, வரதன் என நான்கு மகன்கள். பெண் பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்து கடைசி முயற்சியாக அவர்களுக்கு பிறந்தவள் தான் பூங்கொடி. அந்த ஊரில் திருமணத்திற்கு பிறகும் அண்ணன் தம்பி பிரியாமல் கூட்டுக் குடும்பமாக இருப்பது இவர்கள் வீட்டில் மட்டும் தான். பூங்கொடிக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே சுந்தரவேல் இறந்து விட்டார்.

கணவரின் மறைவுக்கு பின் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தது மணியம்மை தான். மூத்தவன் கேசவனுக்கு அந்த வீட்டில் உள்ள அனைவரும் கட்டுப் படுவார்கள். மற்ற தம்பிகள் அவரை எதிர்த்து பேச மாட்டார்கள். கடைக்குட்டி பூங்கொடியும் அப்படித் தான். அவளுக்கு அண்ணன் சொன்னால் வேதம்.

மூத்தவன் கேசவனுக்கும் கடைக்குட்டி பூங்கொடிக்கும் கிட்டத்தட்ட பதினைந்துப் வயது வித்தியாசம். அதனால் நான்கு அண்ணன்களும் இவளுக்கு அதிகம் செல்லம் கொடுக்க ஆரம்பித்தனர். சுந்தரவேல் இறந்த பிறகும் இது தொடர “பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு செல்லம் கொடுக்க கூடாது”, என்று மணியம்மை கண்டிக்க ஆரம்பித்தார்.

அதனாலே அவளுக்கு அம்மாவை அதிகம் பிடிக்காது. அம்மாவுக்கும் மகளுக்கும் முப்பத்தைந்து வயது வித்தியாசம். அதனால் அவரை கிழவி கிழவி என்று சொல்லி தான் வம்பிழுப்பாள். மகளின் சிறுபிள்ளைத் தனங்களை ரசித்தாலும் அவளைக் கண்டிக்க யாரும் இல்லையே என்று கவலை கொள்வாள் மணியம்மை.

வீட்டுக்கு வரும் மருமகள்களாவது அவளை கண்டிப்பார்கள் என்று எண்ணி மகன்களுக்கு வரிசையாக திருமணம் செய்து வைத்தார் மணியம்மை.

கேசவனுக்கு மனைவியாக வந்த மங்களமோ பூங்கொடியை நாத்தனாராக பார்க்காமல் மகளாக தான் பார்த்தாள். அவளுக்கு அருண் ஆகாஷ் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் இவளை தான் முதல் மகள் என்று சொல்லுவாள்.

இரண்டாவது மகனான மணிவாசகத்தின் மனைவி மைதிலிக்கும் சாரு, கிஷோர் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். மைதிலியுமே பூங்கொடி மேல் அதிக அன்பு வைத்திருந்தாள்.

மூன்றாவது மகனான தம்பிதுரையின் மனைவி தாரணி பூங்கொடியை விட ஐந்து வயது தான் மூத்தவள் என்பதால் பூங்கொடியை ஒரு தோழி போலவே நடத்துவாள். அவளுக்கு விக்கி என்ற ஒரு மகன் இருக்கிறான்.

அடுத்தது வரதன் அவனுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தங்கைக்கு பிறகு தான் திருமணம் செய்வேன் என்று அவன் சொல்ல அவளோ அவனுக்கு திருமணம் நடந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக் கொண்டிருந்தாள். ஆக மணியம்மை ஆசை நிறைவேறவே இல்லை. மூன்று மருமகள்களும் மகளைத் தாங்க அதில் மணியம்மைக்கு பெருமையே.

என்ன தான் மகளுக்கு என்று தனியே சேர்த்து வைத்திருந்தாலும் தன்னுடைய பூர்வீக நகையை மூன்று மருமகள்களுக்கும் கொடுத்து விட்டாள். வரதனுக்கு மனைவியாகப் போறவளின் நகைகள் மட்டும் இன்னும் மணியம்மையிடமே இருந்தது. மருமகள்களையும் மகள் போல் நடத்தும் மணியம்மையை மூன்று மருமகள்களுக்கும் பிடிக்கும். யார் கண் பட்டாலும் சிதையாத குடும்பம் அவர்களுடையது.

ஆண்களாவது ஒரே வயிற்றில் பிறந்த மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எனலாம். ஆனால் மங்களம், மைதிலி, தாரணி மூவரும் வேறு வீட்டில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் இது வரை அவர்களுக்குள் எந்த மனக் கசப்பும் வந்ததில்லை.

வீட்டு வேலை, சமையல் வேலை, மற்ற வேலைகள் என என்ன இருந்தாலும் மூவரும் சமமாக பிரித்து தான் செய்வார்கள். அதே போல் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றாள் மற்றவர்களே செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை இந்த வீட்டில் உண்டு.

அதே போல பிள்ளைகளுக்கு இடையேயும் எந்த பாகுபாடும் கிடையாது. யாருடைய பிள்ளைகளானாலும் சித்தப்பாவிடமோ பெரியப்பாவிடமோ தைரியமாக கேட்டு பெற்றுக் கொள்வார்கள்.

கேசவன் மளிகை கடை நடத்தினாலும் மற்ற தம்பிகளுக்கும் தனியாக தொழில்களை வைத்துக் கொடுத்து விட்டார். மணிவாசகத்துக்கு மில்லும், தம்பிதுரைக்கு செங்கல் சூளையும் வைத்துக் கொடுத்து விட்டார். வரதனுக்கு என்று தனியே பாத்திரக் கடையையைக் கூட வைத்துக் கொடுத்து விட்டார். அவர்கள் தனித் தனியே அதைப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். அது போக ஆள் வைத்து பண்ணையமும் பார்ப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!