Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 15 2

அவர்கள் இருவரையும் கண்ட சுந்தரி வாயில் கையை வைத்துக் கொண்டாள்.

“இது என்ன டி கூத்தா இருக்கு? உனக்கு தான் முதலிரவுன்னு பாத்தா இங்க எல்லாரும் முதலிரவு கொண்டாடுவாங்க போலவே”, என்று ஏளனமாக கேட்டாள் மேகலா.



Advertisement

அவள் ஏளன பேச்சில் மணிமாறனுக்கு என்னவோ போல இருந்தது. தவறு தங்கள் பக்கம் என்பதால் அமைதியாக இருந்தான்.

Advertisement

ஆனால் மற்ற நேரம் போல பூங்கொடி அமைதியாக இருக்க வில்லை. “இங்க பாருங்க, நீங்க என்ன பேசினாலும் அமைதியா போனா ரொம்ப தான் பேசுறீங்க? அண்ணியோட அக்கான்னு பாக்குறேன். இல்லைன்னா என்ன நடக்கும் தெரியுமா? உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க? இங்க என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? வாய்க்கு வந்த படி பேசக் கூடாது சொல்லிட்டேன்”, என்று கத்தி விட்டாள்.

Advertisement

“அலங்கரிச்ச ரூமுக்குள்ள உங்களுக்கு என்ன வேலை மா?”, என்று மேகலா நக்கலாக கேட்க “இதை அலங்கரிச்சதே நாங்க தான்”, என்றாள்.

Advertisement

“நான் இல்லைங்களையே. அலங்கரிச்சு முதலிரவு கொண்டாடிட்டீங்கன்னு தானே சொன்னேன்?”, என்று மேகலா மீண்டும் சொல்ல “விடு அக்கா, எதுக்கு இப்படி பிரச்சனை பண்ணுற?”, என்று கேட்டாள் சுதா. அவளுக்கு மணிமாறன் முன்பு இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை.

“ஆமா அண்ணி விடுங்க. நமக்கு எதுக்கு பொல்லாப்பு? கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. இன்னும் அவங்களுக்கு ஆசை போகலை போல? அதான் இப்படி”, என்று சுந்தரி நக்கலாக சொல்ல “ஏய், வார்த்தையை அளந்து பேசு. இல்லை நாக்கை ஒட்ட நறுக்கிருவேன்”, என்று ஒரு விரல் நீட்டி கத்தினாள் பூங்கொடி.

அப்போது தான் இளங்கோவும் அங்கே வந்தான். தன்னுடைய மனைவியை பூங்கொடி அரட்டவும் அதைக் கண்டவன் “என்ன அதிகாரம் பண்ணிட்டு இருக்க? இந்த மிரட்டுற வேலை எல்லாம் இங்க வேண்டாம். நீ இந்த வீட்ல பிறந்த பொண்ணு தான். ஆனா இந்த வீட்டுல என் தங்கச்சிக்கு தான் உரிமை இருக்கு”, என்றான்.

அவன் மனைவியை அரட்டவும் மணிமாறனுக்கு அவனை துவைத்து தொங்கப் போட ஆசை வந்தது தான். ஆனால் முதலிரவுக்கு தயாராகி கையில் பால் செம்புடன் அவஸ்தையுடன் நின்றிருந்த சுதாவைப் பார்த்தவன் அவளுக்காக “கொடி, நாம இனி இங்க இருக்க வேண்டாம். சாக்கடையை தொட்டா நம்ம மேல தான் நாத்தம் அடிக்கும்”, என்றான்.

“டேய் யாரை சாக்கடைன்னு சொல்ற?”, என்று இளங்கோ எகிற “நான் உங்களைச் சொல்லலையே? உங்களுக்கா அப்படித் தோணுதோ என்னவோ?”, என்று பதிலடி கொடுத்தவன் மனைவியை கை பற்றி அழைத்து கொண்டு கீழே வந்தான்.

“கொடி, நாம நம்ம வீட்டுக்கு போகலாமா? என்னால இங்க இப்போதைக்கு இருக்க முடியாது. உனக்கு புரியுதா?”, என்று கேட்டான்.

“புரியுதுங்க. வாங்க நாம போகலாம். இங்க இருந்தா நான் கண்டிப்பா அண்ணனுங்க கிட்ட சொல்லிருவேன். அது சுதா அண்ணிக்கு தான் பிரச்சனை. நாம போகலாம்”, என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

“சுதா நீ உள்ள போ”, என்று அவளை உள்ளே அனுப்பிய இளங்கோ அக்கா மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

“எங்க அண்ணி அவளையும் அவ புருசனையும் காணும்? கீழ தானே வந்தாங்க?”, என்று கேட்டாள் சுந்தரி.

“ஏதாவது ரூம்ல விட்டதை முடிக்க போயிருப்பாங்க”, என்று நக்கலாக சொன்னாள் மேகலா.

“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்? ஆமா அங்க என்ன தான் நடந்துச்சு? எதுக்கு அந்த பொண்ணு அப்படி பேசுச்சு?”, என்று இளங்கோ புரியாமல் கேட்க நடந்ததைச் சொன்னாள் சுந்தரி. அதைக் கேட்டு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் இளங்கோ. தந்தைக்கு இது தெரிந்தால் என்ன ஆகுமோ என்று எண்ணி இப்போதே தொடை நடுங்கியது.

இருவரையும் முறைத்தவன் “பொம்பளைங்களா நீங்க ரெண்டு பேரும்? சி, போய் படுங்க போங்க. இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. இனி எங்கயாவது வாயைத் திறந்தீங்க அக்கான்னும் பாக்க மாட்டேன். பொண்டாட்டின்னும் பாக்க மாட்டேன்”, என்று கத்தினான்.

அவர்களும் வாயை மூடிக் கொள்ள அவனுக்கு கொடுக்க பட்ட அறைக்குள் சென்றான். ஜன்னல் வழியே பார்த்த போது மணிமாறன் பூங்கொடியை வண்டியில் அழைத்துச் செல்வது தெரிந்தது.

“ஐயோ நான் இப்ப என்ன பண்ணுவேன்? கடவுளே இந்த விஷயம் அப்பா அம்மாவுக்கு தெரிய கூடாது”, என்று வேண்டிக் கொண்டான். அப்போது அறைக்குள் வந்த சுந்தரி அவனை அழைக்கும் பார்வை பார்க்க “ஏன் டி அவங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் கூட முடியலை. அவங்க ஆசை அடங்கலையான்னு கேட்ட. இப்ப உனக்கு கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருஷம் ஆகியும் அந்த ஆசை அடங்கலையா?”, என்று கேட்டான். அதில் அவள் முகம் கருத்தது. தான் பேசிய அதிகப் படியான பேச்சும் புரிந்தது.

“என்னை மன்னிச்சிருங்க. உங்க அக்கா பேசினாங்கன்னு…”, என்று இழுத்தாள்.

“உன்னை நான் மன்னிச்சு ஒண்ணும் ஆகப் போறது இல்லை. இந்த விஷயம் என் அப்பாவுக்கு தெரியாம இருக்கணும்னு வேண்டிக்கோ. தெரிஞ்சதோ நாம அடுத்த நிமிஷம் நடையைக் கட்ட வேண்டியது தான்”

“நீங்க தானேங்க அவர் சொத்துக்கு வாரிசு”

“ஓ உரிமை குரல் எழுப்புறீங்களோ? சொத்து எனக்கு தான்னு பேச அது ஒண்ணும் பூர்வீக சொத்து இல்லை. எங்க அப்பா சம்பாதிச்சது. உங்க வண்டவாளம் தெரியாம நான் வேற அந்த பொண்ணு கிட்ட அதிகம் பேசிட்டேனே?”, என்று நொந்து போனான். இருவருக்கும் அன்றைய தூக்கம் பறிபோனது.

தோப்பு வீட்டில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் ஆண்கள் அனைவரும். நேரம் ஆனதும் “வரதா, நீ வீட்டுக்கு போ”, என்று சொன்னார் கேசவன். அவனும் சங்கடமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டில் அமைதியே நிலவியது. அவனும் சத்தம், எழுப்பாமல் இரண்டாவது மாடிக்குச் சென்றான்.

கதவு திறந்திருந்தாலும் விளக்கு அணைக்க பட்டிருந்தது. “இருட்டுக்குள்ள என்ன செய்யுறா?”, என்று எண்ணிக் கொண்டே விளக்கைப் போட்டான். சுதா பதறி அடித்து அவனைப் பார்க்க “ஏன் டி இருட்டுக்குள்ள உக்காந்துருக்க?”, ஏற்று கேட்ட படி அவளை நெருங்கினான்.

அவளுக்கோ அவன் நெருங்க நெருங்க தொண்டைக்குள் பயப்பந்து உருண்டது. சாதாரண நேரமாக இருந்திருந்தால் அவன் நெருங்க நெருங்க அவளுக்குள் கிளர்ச்சி உருவாகி இருக்கும். அடி வயிற்றில் மத்தாப்பு பூத்திருக்கும். இப்போது அப்படியா? அவளுடைய அக்கா, அண்ணி மற்றும் அண்ணன் ஆடிய ஆட்டத்தில் பயத்தில் இருந்தாள்.

நடந்தது வரதனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று அவள் அறிந்தது தான். நடந்ததை அவனிடம் எப்படிச் சொல்ல என்று அவளுக்கு பயமாக இருந்தது. அதே நேரம் சொல்லாமல் இருப்பது தவறு என்று அவள் மூளை இடித்துரைத்தது.

“ஏய் சுதா நடந்ததை நீயே சொல்லிரு டி. அது தான் உனக்கு நல்லது. வேற எப்படியாவது தெரிஞ்சது உன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை”, என்று அவளை எச்சரித்தது அவள் மனசாட்சி.

அவளுடைய பயத்தையும் நெற்றியில் படிந்த வியர்வையையும் பார்த்தவன் அவள் முதலிரவை எண்ணி பயப்படுகிறாள் என்று தான் நினைத்தான்.

“லைட் ஆப் பண்ணிறவா?”, என்று வரதன் கிறக்கத்துடன் கேட்க “வேண்டாம், நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, என்றாள்.

“என்ன சொல்லப் போற? இன்னைக்கே நம்ம வாழ்க்கையைத் தொடங்க வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லப் போறியா?”, என்று அவன் சிரிக்க அவன் சிரிப்பில் மயங்கியவள் மற்ற நேரமாக இருந்திருந்தால் அவன் மார்பில் சாய்ந்திருப்பாள். ஆனால் சிரிக்கும் நிலையிலா அவள் இப்போது இருக்கிறாள்.

“என்ன டி சொல்லு?”

…..

“சுதா என்னன்னு சொல்லு. ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“நீங்க வரதுக்கு முன்னாடி இங்க ஒரு பிரச்சனை நடந்துச்சுங்க”

“பிரச்சனையா? என்ன?”, என்றவன் புருவம் உயர்த்தினான்.

“அது”

“என்ன நடந்துச்சு? யாருக்கும் யாருக்கும் பிரச்சனை?”

“என்னை இந்த ரூம்ல விடுறதுக்கு அக்காவும் அண்ணியும் வந்தாங்க”

“சரி”

“இந்த ரூம் பூட்டி இருந்தது. கதவை தட்டின பிறகு…”

“பிறகு…”

“உள்ள இருந்து பூங்கொடி அண்ணியும் மணிமாறன் அண்ணாவும் வந்தாங்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!