Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 6 3

“கொடி, சில விஷயங்கள் எல்லாம் உனக்கு புரியாது. இது வேற கேஸ் மா”, என்று பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க முயன்றான் மணிமாறன்.

“பொய் சொல்றீங்க. இப்ப நீங்க அவனை வெளிய விடணும்”



Advertisement

“என்ன விளையாடுறியா?”

“உங்களால முடியுமா முடியாதா?”

Advertisement

Advertisement

“கண்டிப்பா முடியாது. நீ தேவையில்லாம இதுல தலையிடாத. அப்புறம் உண்மை தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப் படுவ”

“அப்ப நான் சொன்னதை செய்ய மாட்டீங்க, அப்படித் தானே?”

Advertisement

“ஆமா முடியாது”, என்று அவனும் உறுதியாக சொன்னான்.

“அப்படின்னா நானும் இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்க மாட்டேன்”

“பூவு என்ன வார்த்தை சொல்ற? வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படியா பேசுவ? தம்பி பேச்சைக் கேளு மா. அவன் பக்கம் கண்டிப்பா நியாயம் இருக்கும்”, என்றார் தேவகி.

“இவர் கிட்ட நியாயம் இல்லை மா. எங்க அந்த கொய்யா பழம் விக்குறவன் மேல கஞ்சா கேஸ் போடப் போறேன்னு மிரட்டிருக்கார்ல? அதை இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க பாப்போம்”, என்றாள் அவள்.

அவன் அமைதியாக இருக்க “நான் எங்க வீட்டுக்கு போறேன்”, என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“அது தான் உன் சந்தோசம்னா நீ தாராளமா போகலாம்”, என்றான் மணிமாறன். ஒரு சின்ன விசயத்துக்கு அவள் இந்த அளவுக்கு பேசுவது அவனுக்கு பிடிக்க வில்லை.

“ரொம்ப சந்தோஷம்”, என்றவள் அறைக்குள் சென்று தன்னுடைய பேகில் தனக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். தேவகியும் அவள் முடிவில் கலங்கிப் போனார்.

“என்ன டா இது?”, என்று கேட்டார் கதிரவன். “இவ ஒரு லூசு பா. முழு விஷயமும் தெரியாம பேசுறா”, என்றான்.

“எனக்கு புரியுது. சரி அவளை அவ வீட்ல விட்டுட்டு வா. உண்மை தெரிஞ்சா அவளே வருவா”

“சரிப்பா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான். அவள் அங்கே எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க “கொடி நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்”, என்றான் மணிமாறன்.

“உங்க பொய்யைக் கேக்க நான் தயாரா இல்லை. நான் போறேன்”, என்றவள் பேகைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

“சரி வா, நான் கூட்டிட்டு போய் விடுறேன்”

“ஒண்ணும் தேவை இல்லை”, என்று சொல்லி விட்டு அவள் நடக்க “பிளீஸ் டி, என்னை விட்டுப் போகாதே”, என்று கெஞ்சி விட்டான்.

“நான் சொன்னதை செய்ய மாட்டுக்கீங்க? நான் இருந்தா என்ன? செத்தா உங்களுக்கு என்ன?”, என்று அவள் கேட்டது தான் தாமதம் அவள் கன்னத்தில் ஒரு அறை வைத்தான்.

அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க “என்ன வார்த்தை டி சொல்ற? நீ செத்தா எனக்கு ஒண்ணும் இல்லையா? அவ்வளவு தான் நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டதா? இனி உன் கிட்ட பேசி எந்த பயனும் இல்லை. கிளம்பு போகலாம். உன் வீட்டுக்கு நீ என் கூட தான் வந்தாகனும்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தவன் வண்டியை எடுத்தான்.

பெரியவர்கள் முகத்தைக் கூட பார்க்காமல் வெளிய வந்தவள் “நான் உங்க கூட வண்டியில வர மாட்டேன்”, என்றாள்.

எரிச்சலுடன் அவளைப் பார்த்தவன் காரைக் கிளப்பினான். அதில் அவள் ஏறி அமர்ந்ததும் அவளுடைய வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

காரில் போகும் போது அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளது கன்னம் அவனுடைய அடியால் லேசாக சிவந்திருந்தது. அவளுடைய அடி பட்ட கன்னத்தை வருடிய படி “வலிக்குதா டி?”, என்று கேட்டான்.

“ஏன், வலிக்கலைன்னா இன்னொரு கன்னத்துலயும் அடிக்கிறதுக்கா?”, என்று அவள் கோபத்துடன் கேட்க அவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

“நீ இல்லாம வீடு வீடாவே இருக்காது கொடி. திருப்பி போகலாமா?”, என்று கேட்டான்.

“அப்படின்னா அவனை விடுவீங்களா?”

“முடியாது”

“அப்படின்னா நானும் வர மாட்டேன்”

“நீ இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கும் டி”

“என்ன கஷ்டம்? நான் ரூம்ல இருந்தா நீங்க டி‌வி ஹால்ல இருப்பீங்க? இதுல என்ன கஷ்டம் இருக்கு?”, என்று அவள் கேட்க அவன் கண்கள் மின்னியது.

தன்னைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

“கொடி இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுரு டி. ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு என்ன நடந்துச்சுன்னு நானே சொல்றேன்”

“முடியாது, நான் சொல்றதைக் கேக்க மாட்டீங்கல்ல?”

“பெர்சனல் வேற, வேலை வேற கொடி. அதை முதல்ல புரிஞ்சிக்கோ. நீ வேற விஷயம் சொல்லு. நான் கட்டாயம் செய்றேன்”

“எனக்கு ரெண்டும் ஒண்ணு தான். இதுக்கு தான் போலீஸ்காரனைக் கட்ட கூடாதுன்னு நினைச்சேன். கடைசில நீங்களும் உங்க புத்தியைக் காமிச்சிட்டீங்க? எங்க வீட்ல நீங்க நேர்மையானவர்னு தான் உங்களை செலக்ட் பண்ணினாங்க. இல்லைன்னா வேற நல்ல மாப்பிள்ளையா பாத்துருப்பாங்க”, என்று அவள் சொன்னதும் அவனுக்கு எரிச்சல் வந்தது.

“சாரி மேடம், உங்க வாழ்க்கையை அழிச்சதுக்கு. நான் வேணும்னா உன்னை விட்டுறேன். வேற நல்ல வேலை பாக்குறவனைக் கட்டிக்கோ“, என்று எரிச்சலுடன் சொல்லியே விட்டான்.

அதைக் கேட்டு அவனை முறைத்தவள் “நீங்க என்ன எனக்கு விடுதலை கொடுக்குறது? நான் உங்களை சுதந்திரமா விடுறேன். உங்க பேச்சைக் கேட்டு மண்டை ஆட்டுறவளை நீங்க கட்டிக்கோங்க. சரியா?”, என்று அவள் சொல்ல “ஏய்”, என்று கத்தி விட்டான்.

“கோபம் வருதுள்ல? நான் கல்யாணத்துக்கு முன்னாடி நினைச்சதை தான் சொன்னேன். இப்ப ஒண்ணும் ரெண்டாம் கல்யாணம் பண்ண நினைக்கலை”

“கொடி, சாரி டி”

“உங்க சாரியும் வேண்டாம் பூரியும் வேண்டாம்”

“இப்ப உங்க வீட்ல நான் எல்லா உண்மையும் சொல்லிருவேன். கேஸ் விஷயம் கேட்டு சண்டை போடுறன்னு”

“தாராளமா சொல்லிக்கோங்க. நீங்க அப்படிச் சொன்னா எங்க வீட்ல கண்டிப்பா என்னைத் தான் திட்டுவாங்க. எனக்கு அது தெரியும். அப்படி மட்டும் நடந்தா நான் ஏதாவது செஞ்சுப்பேன்”, என்று அவள் சொல்ல அடுத்து அவன் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. தன்னையே மாய்த்துக் கொள்வேன் என்று அவள் சொன்ன பிறகு அவன் என்ன சொல்ல முடியும்?

காருக்குள் அமைதியே நிலவியது. அவனைக் காயப் படுத்தியது அவளுக்கும் வலித்தது தான். “தவறு செய்கிறேனோ? யாருக்காகவோ என்னோட வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கிறேனோ?”, என்று அவள் எண்ணும் போது அவர்கள் வீடு வந்திருந்தது.

திடீரென்று வந்து நின்றவர்களை வீட்டினர் வரவேற்றார்கள். பூங்கொடி முகம் உர்ரென்று இருக்க அனைவருக்கும் பயமாக இருந்தது.

“என்ன மாப்பிள்ளை பூங்கொடி ஒரு மாதிரி இருக்கா?”, என்று கேட்டார் கேசவன்.

“கொடி நாலஞ்சு நாள் இங்க இருக்கட்டும் மச்சான். நான் மதுரைக்கு போகணும். கொஞ்சம் வேலை இருக்கு. ஒரு கேஸ் விஷயமா பயங்கர அலைச்சல். எப்ப வீட்டுக்கு வருவேன்னு தெரியலை. கொடியும் ஒரு நாலஞ்சு நாள் உங்க கூட இருக்கணும்னு நினைச்சா. அதான் விட்டுட்டு போக வந்தேன்’, என்று பொய் சொன்னான் மணிமாறன்.

“அதுக்கென்ன மாப்பிள்ளை? தாராளமா விட்டுட்டு போங்க. இன்னைக்கு நைட் நீங்களும் இங்க தங்குங்களேன்”

“இல்லை மச்சான், எனக்கு வேலை இருக்கு. நான் வரேன்”

“சாப்பிட்டாவது போங்க”

“இல்லை வேண்டாம், இன்னொரு நாள் சாப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

“பாப்பா, மாப்பிள்ளையை வழி அனுப்பிட்டு வா”, என்று மணிவாசகம் சொல்ல அவன் பின்னேயே சென்றாள். மற்றவர்களும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.

தனக்கு பின்னால் வரும் மனைவியைப் பார்த்து நின்றான் மணிமாறன். அவன் அவளைப் பார்க்கவும் அவள் வீட்டுக்குள் செல்லப் போனாள். சட்டென்று அவள் முன்பு வந்து நின்று அவள் பாதையை மறைத்த படி நின்றான்.

திடீரென்று அவன் முன்னே வந்து நிற்பான் என்று தெரியாமல் மெல்லியதாக அவன் நெஞ்சில் மோதி பின் விலகி நின்று அவனைப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது.

என்னோடு வந்து விடேன் என்ற ஏக்கம் சுமந்த அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அவன் கண்களைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!