Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நாம் கேட்ட காலங்கள் – 12

“சொல்லு ஸ்ரீ” என்று அலைப்பேசியைக் காதில் வைத்தான் மகேந்திரன். 

“சேத்தன் ஸர் எனக்குக் கூப்பிட்டிருந்தார் டா” என்றதும் மகேந்திரனின் புருவங்கள் உயர்ந்தன. 



Advertisement

“என்னவாம் டா? எதாவது முக்கியமா?..” என்று மகேந்திரன் இழுக்க, 

“டேய் மகி, இந்த திலக்கும் கொல்கத்தாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.

Advertisement

Advertisement

“என்னடா திடீர்னு இப்படி கேட்குற?” என்று ராஜமகேந்திரன் கேட்க, கணவன் முக்கியமாக பேசுகிறான் என்று அமைதியாக அவனையே கவனித்தாள் பிரசன்னவர்தினி. என்ன பேசுகிறான் என்று கேட்கவில்லை. ஸ்ரீதர் சேத்தன் ஜீவாவுடன் நடந்த உரையாடலைப் பகிர்ந்தான்.

அதெல்லாம் மகேந்திரன் மிகத்தெளிவு. பேசும்போது குரல் உயராது. 

Advertisement

தன்னையே மனைவி விழியெடுக்காமல் பார்ப்பதில் உள்ளே உவகை பெருகினாலும், அதை கொஞ்சமும் காட்டாது பேச்சில் கவனமாக இருப்பதாகவே காட்டினான் மகேந்திரன்.

கொஞ்சம் அவன் அதையெல்லாம் வெளிப்படுத்தினால் பிரசன்னாவின் முகம் பிரகாசமாகிவிடும். காட்டாத அன்பில் என்ன கிடைத்திட போகிறது?

மகேந்திரன் யோசிக்க, ஸ்ரீதர் 

“ஏண்டா, நம்ம மச்சானுக்கும் கொல்கத்தாவுக்கும் என்ன லிங்க்னு கண்டுபிடிச்சியா?” என்று கேட்க, 

“இருடா, யோசிக்கிறேன்” என்றதும், 

“எனக்கும் கொல்கட்டாவுக்கும் உள்ள லிங்க் ரசகுல்லா, திலக் ஒருவேளை ரசகுல்லா சாப்பிட போயிருப்பானோ?” என்று நேரங்கெட்ட நேரத்தில் ஸ்ரீதர் நக்கல் செய்ய, மகேந்திரன் கடுப்பானான். 

“செருப்பை டன்சோ பண்ணி அடிப்பேன் டா ஸ்ரீ. ஒருதடவ அவன் அங்க கான்ஃபிரன்ஸுக்குப் போயிருக்கான். அது மட்டும் எனக்கு ஞாபகமிருக்கு. மத்தபடி தெரியலயே, யார்கிட்டயும் சொல்லாம போறளவு என்ன விஷயம்?” என்று மகேந்திரன் ஸ்ரீதரிடமே கேட்டு வைக்க, 

“நான் கேள்வி கேட்பேன், நீ பதில் சொல்லணும். நீ கேட்க கூடாது நண்பா” என்று சிரித்த ஸ்ரீ, 

“பரவாயில்ல, பிரசன்னா வந்ததும் கொஞ்சம் தெளிஞ்சிருக்க போலயே..” என்று ராகமாக இழுத்தான். 

“என்னடா தெளிஞ்சிருக்கேன்?” உண்மையை ஒப்புக்கொள்ளும் உயர்ந்த உள்ளம் அவனுக்கில்லை போல. 

“இல்லை, எனக்குத் தோணுது. எல்லாம் பிரசன்னாவின் பிரசன்னம்தான் காரணம். ஒத்துக்கோ மச்சி! கெத்துப் போயிடாது” என்று ஸ்ரீதர் வம்பு செய்ய, 

“டேய்! நீ சேத்தன் சார்கிட்ட அப்டேட் வாங்கி வை. அப்போ நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, ஒரு எம்.பி போஸ்ட்டை எஞ்சாய் பண்ண விடாம படுத்துறானுங்க என்னை” என்று சலித்தான் மகேந்திரன். 

“சரிங்க எம்.பி ஸார். நீங்க கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி ஆஃபிஸ் வந்தா மக்கள் பணியைப் பார்க்கலாம்” என்று சொல்லி ஸ்ரீதரன் வைத்தான். 

யோசனையோடு பிரசன்னாவை நெருங்கி என்னவென்று புருவம் உயர்த்தினான். மகேந்திரன் கையில்லாத வெள்ளைப் பனியனும், வேட்டியுமாக நின்றான். திருமணம் முடிந்த பின், அவள் காதல் பரிசாக அளித்த தங்க சங்கிலி அவன் கழுத்தோடு உறவாடியது. 

“என்ன எனக்குத் தாலியா?” என்று கண்கள் சிரிக்க அவன் கழுத்தை நீட்டியது இன்று பிரசன்னாவிற்கு நினைவில் எழ, புன்னகையோடு கணவனைப் பார்த்தாள். 

பார்த்தாள் என்பது கஞ்சத்தனமாக இருக்கும். கண்களவு செய்தாள் என்பதே சரி! திருமணமான அன்றிரவுதான் முதன்முதலாய் அவனை அப்படி அருகில் பார்த்தாள். இப்போது போல இலகுவான உடை. கையில்லாத வெள்ளைப்பனியனும், சாம்பல் நிறவேட்டியும்.

அவர்கள் இணக்கமாக வாழ்ந்த நாட்களில் அவன் அருகே இருந்தால், பிரசன்னாவின் கைகள் தானாக அவன் பனியனை இழுத்துவிடும். 

வெள்ளை சட்டை, வேட்டி, ஜீன்ஸ் என்று வெவ்வேறு உடைகளில் அவனைக் கண்டிருந்தாலும், இப்படி அவள் முன் அவன் இலகுவாக நிற்கும்போது ஒரு உரிமையும் உவகையும் பிரசன்னாவிடம் தோன்றும். 

‘என் கணவன்’ என்ற உரிமை மிக, ரகசியங்கள் இல்லாத ரசனைப்பார்வை இருக்கும். 

இன்றும் அப்படியே! காலை வேளை, அருகே காதல் கணவன் அவளுக்குப் பிடித்த தோற்றத்தில். மகேந்திரன் எதுவும் பேசாமல் நிற்க, அனிச்சையாக உட்கார்ந்தபடியே அவனின் பனியனைப் பிடித்திழுத்தாள் பிரசன்னா. 

“ஏய், பார்த்து” என்றபடி அவள் அருகே அமர்ந்தான் மகேந்திரன். பிரசன்னா பேசாமல் அவன் சங்கிலியோடு உறவாடிய சிறு முடிகளை வருடிக்கொடுத்தாள். காய்ச்சல் இல்லை என்றதும் பிரசன்னாவிடம் ஆசுவாசம். கணவன் முகம் பார்க்க அவளையே தீவிரமாக பார்த்தான் மகேந்திரன். 

கண்களில் அப்பட்டமான புன்னகை. 

“என்ன காலையிலேயே ஸ்ரீ மாமா கால் பண்ணிருக்கார்” பிரசன்னாவின் விரல்கள் இன்னும் பனியனோடு பிணைந்திருக்க, முகம் கணவனை நோக்கியது. 

“அவனுக்கென்ன வேலை, சும்மாதான்” என்றவன் பின் சிறு யோசனைக்குப் பின், 

“உனக்குத் தெரிஞ்சு திலக் எப்போ கொல்கட்டா போயிருக்கான்?” என்று கேட்டான். 

பிரசன்னா முகம் திலக்கின் பெயர் கேட்கவும் கவலையானது. 

“என்னாச்சு? எதாவது பிரச்சனையா?” என்று அதுவரை புதிதாக பூத்திருந்த உணர்வுகள் உதிர்ந்துவிட, கவலை மலர கேட்டாள். 

“இல்லை. அவன் ஆக்சிடெண்ட் ஆகுறதுக்கு முன்னாடி கொல்கட்டா போக டிசைட் பண்ணியிருக்கான். சொல்லப்போனா ஏர்ப்போர்ட் போகும்போது அப்படியாயிருக்கு. அவனோட பி.ஏவுக்குக் கூட சொல்லாம அப்படி என்ன வேலை அவனுக்கு?” என்று மகேந்திரன் கேட்க, பிரசன்னாவின் முகத்தில் குழப்பம். 

“தெரியலயே! ரஞ்சன்ட்ட கேட்கவா?” என்றாள். 

“அண்ணாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கு அது காரணமா இருக்கலாம் சொல்றீங்களா?” என்ற பிரசன்னா இப்போது கணவனிடமிருந்து தள்ளி அமர்ந்திருந்தாள். முகமெல்லாம் யோசனை. 

“மே பீ! இங்க இருக்க எல்லாரையும் விசாரிச்சுட்டாங்க. உங்க பார்வையில மெயின் அக்யுஸ்ட் நானு, என்னையும் விசாரிச்சாச்சு. இனி அடுத்தென்ன பார்க்குறப்போ அவன் லாஸ்ட்டா கொல்கட்டா போக ப்ளான் பண்ணது தெரிஞ்சிருக்கு. ஒருவேளை… நல்ல கவனி… பை சான்ஸ், இங்க இருக்க யாருக்காவது அவன் கொல்கட்டா போகக் கூடாது தோணியிருக்கலாம்.”

“ஏன் அங்க உள்ள யாருக்காவது அண்ணா வரக்கூடாதுனு நினைச்சிருக்கக் கூடாது” என்று பிரசன்னா பட்டென்று கேட்க, 

“யார் நினைப்பா?” என்று மகேந்திரன் கேட்க, 

“தெரியலயே! ஆனா அண்ணாவுக்கு சுதேந்து ராய்’னு ஒரு ப்ரண்ட் இருக்கார். ஜாதவ்பூர் எம்.பி” என்று தனக்குத் தெரிந்ததை சொன்னாள் பிரசன்னா. 

“ஒகே, நீ ரிலாக்ஸா இரு. பார்த்துக்கலாம்” என்றவன் பிரசன்னாவின் கன்னம் தட்டி எழ, 

“காஞ்சிபுரம் போகணும் ராஜா, தாத்தாவையும் ஊர்மியையும் பார்க்கணுமே” என்று பிரசன்னா நினைவுப்படுத்த, 

“ஈவினிங் போவோமா?” என்றவன் கை தலையைக் கோதியது. அதிலேயே அவன் மறுப்புப் புரிய, 

“ப்ளீஸ், இப்போ போயிட்டு வந்திடலாமே. எனக்கு அப்படியே உலகளந்த பெருமாளைப் பார்க்கணும்” என்று சொல்லிப்பார்த்தாள். 

என்ன ஆச்சரியம்? மகேந்திரன் உடனே, 

“சரி கிளம்பு” என்றான். 

“நிஜமாவா?” என்ற பிரசன்னாவின் கண்களில் மலர்ச்சி. 

“முதல்ல முடியாது சொன்னீங்க” என்று இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க, 

“முதல்ல கேட்டது முடியாது, இப்போ கேட்டது உன் ஆசை, ஸோ” என்று மகேந்திரன் இழுக்க, 

“ஸோ…” என்று பிரசன்னாவும் இழுக்க, 

“போடி” என்றான் புன்னகையோடு. 

அந்த புன்னகையில் பிரசன்னாவும் மலர்ந்துபோனாள். 

“நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள நீ வீட்ல இரத்னவேல் தாத்தா இருக்காரான்னு போன் பண்ணி கேட்டு வை. காஞ்சிபுரத்தை சுத்திட்டு வந்துடுவோம்” என்றபடி குளிக்க போனான் ராஜமகேந்திரன்.

முதலில் வேலையைக் காரணம் காட்டி மறுத்தவன் தன் ஆசைக்காக காஞ்சி அழைத்து செல்கிறான் என்றதும் பிரசன்னாவிடம் பூரிப்பு. அதே உற்சாகத்தோடு அவள் தயாராகி கீழே சென்றாள். 

வைதேகி காலைப்பணிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். 

“அத்த, நாங்க காஞ்சிப் போயிட்டு வரோம்” என்றதும் வைதேகி நிம்மதி பெருமூச்சு விட்டார். 

“அப்பாடா! எங்க உங்க வீட்டுக்குக் கிளம்பிட்டியோனு பயந்துட்டேன்” என்றதும் பிரசன்னாவின் முகம் வாடியது. அதனைக் கண்ட வித்யாதரன், 

“வைதேகி! என்ன இது?” என்று அதட்ட, 

“பின்ன, சேர்ந்து இருக்க கட்டிவச்சா இவ என் புள்ளையைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டா.. மேடமுக்கு வேற பொசுக்குனு கோவம் வருமே, அதான் இவ ரெடியாகி வரவும் பயந்து கேட்டேங்க” என்றார் கிண்டலாக. 

அவர் முகத்தில் கோபமில்லை. சிரிப்பிருந்தாலும் மகனை விட்டுச்சென்றாய் என்ற குற்றச்சாட்டிருந்தது. 

“ஆமா ரொம்ப தவிச்சிட்டார் உங்கப்புள்ள. எம்பியா ஜாலியா சகல வசதியோட இருக்கார்” என்று பிரசன்னா முணுமுணுக்க, 

“சகலவசதியும் சம்சாரமும் ஒன்னில்லை” என்று வைதேகி சொல்ல, திடுக்கிட்டுப் பார்த்தாள் பிரசன்னா. 

“எனக்குக் காது ஷார்ப்” என்று வைதேகி சிரிக்க, 

“பாவம், பிரசன்னா மைண்ட் வாய்ஸை சத்தமா பேசிடுச்சு” என்று வித்யாதரனும் சிரிக்க, பிரசன்னா கடுப்பாகிவிட்டாள். 

இருவரையும் முறைக்க, 

“எங்களை முறைக்கிறதோட நிறுத்திக்கோ. என் புள்ளைக்கிட்ட முறைக்கக் கூடாது” என்று மீண்டும் வைதேகி சொல்ல, 

“உங்க புள்ளையே பரவாயில்லத்த” என்று மெல்ல பிரசன்னா முணுமுணுக்க, அவளின் கன்னம் பிடித்து செல்லமாகக் கிள்ளினார் வைதேகி. 

“ஒத்துகிட்டா சந்தோஷம். சாப்பிடுறியா இல்லை எம்பி சார் வந்தாதான் சாப்பிடுவியா?” என்று கேட்க, 

“உங்க புள்ள அப்படியே உங்க ஜெராக்ஸ்த்த, மாமா நீங்க ரொம்ப பாவம்” என்று வித்யாதரனிடம் சொல்ல, 

“ஏன், நான் பாவம்? வைதேகி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றார் விளையாட்டாகக் கூட மனைவியை விட்டுக்கொடுக்காது. 

இதனைப் பார்த்தபடி கீழே இறங்கினான் மகேந்திரன். 

“ஏங்க எங்கயோ கருகற வாசனை வருதே” என்று வைதேகி மாடிப்பக்கம் பார்த்து சொல்ல, 

“எனக்கொன்னும் தெரியலயே” என்றார் வித்யாதரன் அப்பாவியாக. 

“அப்பா, அம்மா என்னை சொல்றாங்க” என்றபடி வந்து மனைவியின் அருகே உட்கார்ந்தான் ராஜமகேந்திரன். 

“ஏன் அத்த?” என்று பிரசன்னாவும் புரியாமல் பார்க்க, 

“ம்ம், அவங்க லவ்வைப் பார்த்து நான் வயிறு எரியுறேனாம்” என்று அம்மாவை நக்கலாகப் பார்த்தவன், 

“லவ் இஸ் ஓவர் ரேட்டட் மா” என்றான். அம்மாவைக் கடுப்பேற்ற சொன்னவன் மனைவியை மறந்தான். 

பிரசன்னாவின் உற்சாகத்தை அப்படியே தரையிறக்கினான் மகேந்திரன்.

**********

கொல்கத்தாவின் பரபரப்பு இல்லாத சாலை அது. சுதேந்து ராய் தன் பாதுகாவலர்களோடு அவனது எஸ்யூவியில் சென்று கொண்டிருக்க, சென்னையிலிருந்து அவனுக்கு அழைப்பு சென்றது. 

அழைப்பை எடுத்துப் பேசியவன் முகம் மாறியது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!