Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 5

அத்தியாயம் 5

வெள்ளை நிற டி-ஷர்ட்…அடர்நீல நிற ஷார்ட்ஸ்…கழுத்தில் மெல்லிய தங்கச் செயின்…நேர்த்தியாக வெட்டப்பட்ட முடி…

எந்த ஆடம்பரமும் இல்லாமல், இயல்பான ஒரு கம்பீரத்தோடு பிருந்தா எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அதற்கு முன்பும் அவனைப் பார்த்திருக்கிறாள். ஆனால் அன்றைய சந்திப்புதான் அவள் நினைவில் ஆழமாகப் பதியப் போகிறது என  எண்ணி இருக்க மாட்டாள்.



Advertisement

என் அண்ணன் லண்டனில் எம்பிஏ முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பியிருப்பதாக ஐஸ்வர்யா சொன்னது அவள் நினைவில் வந்து போனது.

ஒரு நொடி பிருந்தாவை நிமிர்ந்து  பார்த்தான்,பூபதி.

அவ்வளவுதான்.அதற்குப் பிறகு மேசையிலிருந்த ஆங்கில நாளிதழை எடுத்து அமைதியாகப் படிக்க ஆரம்பித்துவிட்டான்.

Advertisement

பிருந்தா அவனை பார்த்து சிரிக்க… ஒரு அலட்சிய பார்வையோடு மீண்டும் பேப்பரில் தன் கவனத்தைச் செலுத்தினான்.

Advertisement

“ஹூம்… இவ்வளவு அலட்சியமா?”என அவள் மனம் சிணுங்கியது.

அவன் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த விதத்தைப் பார்த்தால், உலகத்திலேயே முக்கியமான விஷயம் அதுதான் என்று தோன்றியது.அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குத் துளியும் இல்லை.

அதுதான் முதலில் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.”லண்டன்ல படிச்சுட்டு வந்தா… இவ்வளவு திமிரா?” என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.

Advertisement

அவனது கவனத்தை ஈர்க்க… வேண்டுமென்றே இரண்டு மூன்று முறை இருமினாள்.எந்தப் பயனும் இல்லை.அருகில் இருந்த  பேனாவை எடுத்து  கீழே போட்டாள்.அதற்கும் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அந்த நேரத்தில்…அலுவலகத்தின் கதவு படபடவெனத் திறந்தது.கோபத்துடன் ஒரு வாடிக்கையாளர் உள்ளே வந்தார்.

“ஜோதி… எங்கே?என கேட்க…
பூபதிக்கு கோபம் தலைக்கேறியது. ஏனென்றால் விஸ்வநாதனே ஜோதியை அக்கா என்று மரியாதை நிமித்தமாக அழைப்பார்.இப்படி ஒருமையில்  பேச அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அப்போதுதான் ஜோதி உள்ளே நுழைந்தாள்.அவளைப் பார்த்து…
“இது என்ன வேலை? நான் சொன்ன ஆர்டர் வேற மாதிரி போயிருக்கு. உங்களால ஒரு சின்ன வேலையைக்கூட சரியா செய்ய முடியாதா?” என்று குரலை உயர்த்தினார்.

ஜோதி பதறிப்போய்,”சார்… அது…” என்று ஏதோ சொல்ல முயன்றார்.

ஆனால் அவர் பேசவே விடவில்லை. மேலும் மேலும் ஒருமையில் உரக்க கத்த ஆரம்பித்தார்.

அடுத்த நொடி…இதுவரை அமைதியாக செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த பூபதி மெதுவாக அதை மடித்து மேசையின் மீது வைத்தான்.

நிதானமாக எழுந்து நின்றான்.அவன் முகத்தில் கோபம் இல்லை.ஆனால் அவன் கண்களில் இருந்த அழுத்தம் மட்டும் அந்த அறையின் சூழலையே மாற்றிவிட்டது.

“சார்…”அவன் குரல் மிகவும் அமைதியாக இருந்தது.

“உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு முதல்ல நான் மன்னிப்பு கேக்கறேன்.”

வாடிக்கையாளர் சற்றே அமைதியானார்.

“ஆனா…”என்று சொல்லிவிட்டு ஜோதியை ஒரு முறை திரும்பிப் பார்த்தான்.

“என்னோட ஸ்டாஃப்பை அதட்டற உரிமை உங்களுக்கு யாரு கொடுத்தது?”

அந்த ஒரு கேள்வியில் வாடிக்கையாளர் திகைத்தார்.

“அவங்க நான் கொடுத்த ஆர்டரை மாத்தி பண்ணிருக்காங்க…” என்று வாடிக்கையாளர் சொல்ல,

“உங்க ஆர்டர்ல தவறு இருந்தா அதை நான் கேட்கிறேன்.என்னோட ஸ்டாப்ஸை திட்டுற உரிமை உங்களுக்கு இல்லை.”

“இந்த ஃபேக்டரில வேலை செய்ற ஒவ்வொருத்தரும் எனக்கு சம்பளம் வாங்குற ஆளுங்க மட்டும் இல்ல…
என்னோட குடும்பம்.அவங்களை மரியாதையா நடத்துங்க.

அவன் குரல் உயரவில்லை.ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக விழுந்தது.

வாடிக்கையாளர் இன்னும் ஏதோ பேச முயன்றார்.

ஆனால் அவர் பேசும் எந்த வார்த்தையையும் பூபதி கேட்க தயாராக இல்லை….அருகில் இருந்த பெரிய மூலத் தோலை எடுத்துக் கொண்டு மேசையின் மீது விரித்தான்.

வாங்க சார்…உங்க ஆர்டர்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க. இப்பவே அதை சரி பண்ண பார்க்கலாம்.தவறு எங்க நடந்துச்சுன்னு கண்டுபிடிச்சு, அரை மணி நேரத்துக்குள்ள சரி பண்ணித் தர்றேன்.ஆனா… என் ஸ்டாஃப்பை மரியாதை குறைவா பேசுறதை மட்டும் நான் ஏத்துக்க மாட்டேன்.

அந்த மனிதரின் கோபம் மெதுவாகக் குறைந்தது.சாரி தம்பி… கோபத்துல பேசிட்டேன்…பிறகு அவர் ஜோதியிடம் மன்னிப்பும் கேட்டார்.

மடமடவென தோலை அளந்து… வெட்டி… தைக்கும் பிரிவுக்கு அனுப்பி வைத்தான். அவன் செயலில் அத்தனை சுறுசுறுப்பு… அதே சமயம் நிதானமும் நுணுக்கமும் மற்ற மூவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவ்வளவு நேரமும்…பிருந்தாவின் பார்வை முழுவதும் பூபதியின் மீதுதான் இருந்தது.

அவன் அழகை அவள் ரசிக்கவில்லை.
அவன் கம்பீரத்தை ரசிக்கவில்லை.
தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவரின் சுயமரியாதைக்காக, ஒரு வாடிக்கையாளரிடமே நிதானமாக நின்று பேசிய அந்த மனிதநேயம்தான்… அவள் மனதை முதன்முதலாக அவன் பக்கம் திருப்பியது.

சற்று நிமிடம் முன்பு  வரை…”லண்டனில் படித்த பணக்கார வீட்டுப் பையன்”என்று மட்டுமே பார்த்திருந்த பூபதி…

அந்த நிமிடத்திலிருந்து…”ஒரு நல்ல மனிதன்”ஆக அவள் மனதில் இடம்பிடித்தான்.

பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்ததும்.. பிருந்தா தனது கனவுப் படிப்பான மருத்துவம் படிக்கச் சென்றாள். ஐஸ்வர்யா பூபதியை போலவே பிசினஸ் மேனேஜ் செய்ய மேனேஜ்மென்ட் படிப்பை தேர்ந்தெடுத்தாள்.

தோழிகள் இருவரும் ஆளுக்கொரு திசையில் ஓடினாலும்…அவ்வப்போது சந்திப்புகள் நிகழ்ந்தனர்.

அதன்பின் வந்த நாட்களில் பிருந்தா பூபதியின் செய்கைகள் ஒவ்வொன்றாக தன் நினைவுப் பெட்டகத்தில் சேமிக்க ஆரம்பித்தாள்.

மருத்துவம் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, மகளின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, அவளின் தந்தை கொடைக்கானலில் ஒரு பிரம்மாண்டமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டினார். பல்வேறு துறைகளில் அனுபவமிக்க பிரபல மருத்துவர்களை அங்கு பணியமர்த்தினார். மருத்துவப் படிப்பை முடித்து மகப்பேறு மருத்துவராகப் பொறுப்பேற்ற பிருந்தா, அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தையும் மருத்துவ சேவையையும் திறமையாகக் கவனிக்கத் தொடங்கினாள். அதனால், மருத்துவ சேவையிலும் மருத்துவமனை நிர்வாகத்திலும் அவளுக்கு தனித்திறன் உருவாகியது.

மகள் அவள் லட்சியப்படி டாக்டர் ஆகி விட்டாள்.ஒரு  தந்தையாக பிரம்மாண்டமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கொடைகானலில் கட்டிக் கொடுத்தாயிற்று…இனி என்ன மாப்பிள்ளை தேடும் படலம் தான்…

மாப்பிள்ளை என்ற பேச்சை எடுத்தாலே பிருந்தாவின் நினைவில் வந்து போவான் பூபதி.இப்படிப்பட்ட ஒருவன்தான் தனக்கு கணவனாக வர வேண்டும் என பிருந்தா தனக்குள் ஒரு காதல் கோட்டையை எழுப்ப ஆரம்பித்தாள்.ஆனால் இது எப்படி சாத்தியம் என்றுதான் அவளுக்கு புரிபடவில்லை.அவன் நேரே சென்று நின்றால் கூட….விலகி நடந்து சென்று விடுகிறான்….

எங்கு?எப்படி?யார் மூலம்?என்ற கேள்வியோடே நாட்களை கடந்தவளுக்கு விதி ஒரு அட்டகாசமான நாளை அவளுக்கு எழுதி இருந்தது.

விவி நேஷனல் லெதர் ஃபேக்டரியில் வழக்கம்போல வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.

பெரிய கட்டிங் மெஷின் அருகே ஒரு தொழிலாளி தோலை வெட்டிக் கொண்டிருந்தான்.திடீரென…”அய்யோ அம்மா…!” என்று அலற ஆரம்பித்தான்.

உடன் வேலை செய்த மற்ற தொழிலாளிகள் பதறி ஓடி வந்து பார்க்க… மெஷினில் கை சிக்கி, மணிக்கட்டில் ஆழமான காயம்.ரத்தம் வேறு பீறிட்டது.

விஷயம் பூபதி காதுகளுச் சென்றது. அவனும் பதறிய படி உள்ளே நுழைய….

“தம்பி… ரத்தம் நிற்கல…ஹாஸ்பிடல் கூப்பிட்டு போலாம்…ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டாச்சு…”என்றனர்.

பூபதி அடிபட்ட தொழிலாளியின் அருகில் வந்து,”அண்ணே… பயப்படாதீங்க… நான் இருக்கேன்…” என்று தன் கைக்குட்டையை கிழித்து கட்டுப்போட்டான்.

ஆம்புலன்ஸ் வந்து தொழிலாளியை ஏற்றியதும்…நேரே பிருந்தாவின் மருத்துவமனைக்கு பறந்தது.

பிருந்தா அவசர சிகிச்சை அறைக்குள் ஓடி வந்தாள்.ஒரே பார்வையில் அவரின் நிலைமையை புரிந்து கொண்டாள்.

“பிபி குறையுது…நிறைய ரத்தம் வேஸ்ட் ஆயிடுச்சு…ப்ளட் க்ரூப் செக் பண்ணுங்க…. உடனே ரத்தம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க….” என அனைவரையும் துரிதப்படுத்தினாள்.

சில நிமிடங்களில் நர்ஸ் ஓடி வந்து “மேம்… அவருக்கு ஓ நெகட்டிவ்.” என்றாள்.

அதைக் கேட்ட பிருந்தாவின் முகம் மாறியது.ரொம்ப ரேர் ஆன ப்ளட் க்ரூப் ஆச்சே… நம்ம ப்ளட் பேங்க்ல ஸ்டாக் இருக்கா?

இல்லைங்க மேம்.

வேற ஹாஸ்பிடல்?

விசாரிச்சிட்டோம் மேடம் எங்கையும் இல்ல.என்னோட ரிலேட்டிவ் ஒருத்தருக்கு இதே ப்ளேட் க்ரூப் ஆனா அவரு இப்ப கொஞ்சம் வெளியே இருக்காரு….வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்

இவர்களின் சம்பாஷனையை கேட்டிருந்த பூபதி அருகில் வந்து… “அவரு எங்கே இருக்காருனு சொல்லுங்க நானே போய் அரைமணி நேரத்துல கூட்டிட்டு வரேன்”என்றான்.

அந்த தொழிலாளியின் மனைவி இவர்களை நோக்கி வந்து,”டாக்டர்… என் புருஷன காப்பாத்துங்க…”என கதற ஆரம்பித்தாள்.

பிருந்தா அடுத்த நொடியே ,”எனக்கும் ஓ நெகட்டிவ் தான் நானே கொடுக்கறே.” என முன் வந்தாள்.

நர்ஸ் தயக்கமாக,”மேம்…உங்களுக்கு ஏன் ரிஸ்க்… வெளியே ட்ரை பண்ணலாம்”என்றாள்

“ஒரு உயிர் முன்னாடி நான் டாக்டர் மட்டும் இல்ல…மனித நேயமிக்க மனிதர். நானே ரத்தம் கொடுக்கறே” என….உடனே ரத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

கண்ணாடி வழியாக அவள் ரத்தம் கொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் பூபதி.

அவனுக்கு பிருந்தா அழகாக தெரியவில்லை… மனிதாபிமானமிக்க ஒரு நல்ல டாக்டராக தெரிந்தாள்.

பணக்கார வீட்டு பெண்.தனியார் மருத்துவமனை ஓனர் என்ற எந்த மமதையும் இல்லாமல்… ஒரு சாதாரண தொழிலாளிக்காக…தன் உடம்பிலிருந்து ரத்தம் கொடுக்கிறாளா?என அவன் எண்ணியபடி உட்கார்ந்திருந்தான்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
தொழிலாளி உயிர் பிழைத்தான்.

பூபதி மெதுவாக பிருந்தா அருகே வந்து, “தேங்க்ஸ் டாக்டர்.”என்றார்.

“எதுக்கு?”

“அவர் உயிர் காப்பாத்துனதுக்கு.”

“அவரை காப்பாத்தறது என்னோட கடமை.”அவ்வளவுதான் என சொல்லி அங்கிருந்து நடந்து போய்விட்டாள்.

அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் பூபதி.

அன்று…அவளைப் பார்த்தபோது…
முதன்முறையாக…”டாக்டர் பிருந்தா”
என்ற மரியாதை…அவனுள் வந்தது.

“இந்தப் பெண் மற்ற பெண்களைப் போல இல்லை…”என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.

அந்த எண்ணம்…சில நாட்களில் ஈர்ப்பாக மாறியது.

அந்த ஈர்ப்பு…எப்போது காதலாக மாறியது என்று…பூபதிக்கே தெரியவில்லை.

அந்த ஈர்ப்புதான் பின்னாளில் “அவள் என் வாழ்க்கைத்துணை ஆகணும்…” என்ற ஆசையாக மாறியது.

அதன் பின் வந்த நாட்களில் பிருந்தாவைப் பற்றிய செய்திகள் வீட்டில் விவாதிக்கப்பட்டால்….அதை தனது நினைவுப் பெட்டகத்தில் சேமித்துக் கொள்வான்.

பிருந்தா மீது ஒரு தனி ஈர்ப்பு இருப்பதை பூபதி உணர்ந்திருந்தான். அதே சமயம் அவளும் தன் மனதில் இருப்பதை அவ்வப்போது இவனிடம் வெளிப்படுத்தியே வந்தாள்.அவளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவன் மனமும் சலனப்பட்டாலும்,அவள் தன் தங்கை ஐஸ்வர்யாவின் உயிர்த்தோழி. அந்த உறவின் எல்லைக்கோட்டை அவன் ஒருபோதும் மீற விரும்பவில்லை. அதனால் மனதில் முளைத்த உணர்வை மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டு, அவளை வேண்டுமென்றே தவிர்த்து நடந்தான்.

அன்று காலை…

விஸ்வநாதனும் விசாலாட்சியும் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன் ஏராளமான ஜாதகக் குறிப்புகளும், புகைப்படங்களும் சிதறிக் கிடந்தன.

காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு உள்ளே வந்த பூபதி, அந்தக் காட்சியைப் பார்த்து புருவத்தைச் சுருக்கினான்.

“என்ன டிஸ்கஷன் இவ்வளவு சீரியஸா?” என்று கேட்டபடியே நாற்காலியை  இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

விசாலாட்சி முகம் முழுவதும் புன்னகையுடன் முதல் புகைப்படத்தை அவன் கையில் கொடுத்தார்.

–தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!