Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 10

அத்தியாயம் 10

அவனின் குரலை இப்போதும் கேட்க முயன்றாள். எப்போதும் போலக் காதில் கேட்கும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்டது. அந்த இரைச்சல் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று அவளுக்கும் தெரியும். இருந்தும் இந்த நிமிடம் இந்த இரைச்சல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது… மீண்டுமொருமுறை செவிகளைக் கூர்மையாக்கி அவனின் குரலைக் கேட்க முயன்றாள். ஹிஹிம் கேட்க முடியவில்லை. நேற்றைய தினத்திலிருந்தே லேசான தலைவலி இருந்து கொண்டே இருந்தது. தற்போது கலையின் குரலைக் கேட்க முயன்று இன்னும் இன்னும் வலியை வாங்கிக் கொண்டாள்

அவன் குரலைக் கேட்கும் ஆர்வம் ஒரு புறம் என்றால் காதில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும் இரைச்சல் ஒரு புறம் அதற்கு மேல் தற்போதைய மண்டையைப் பிளக்கும் தலைவலி ஒருபுறம் என்று மொத்தமாகச் சேர்ந்து அவளுக்கு ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுத்தது. அந்த அழுத்தம் நேரம் செல்ல செல்ல மயக்கத்தைக் கொடுக்க அப்படியே மயங்கிச் சரிந்தாள். .



Advertisement

வேலு பேச்சு சுவாரஸ்யத்தில் பின்னால் அமர்ந்திருந்தவளைக் கவனிக்கவில்லை என்றால் கலை வேலின் சந்தேக பார்வையிலேயே பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அது அவன் வீடு வரையிலுமே தொடர்ந்தது…

“சரி அண்ணா பியூ மினிட்ஸ் வந்துடறேன்…” என்றவன் அவளிடம் சொல்லலாம் என்று திரும்பினான். கண்கள் உள்ளே சொருகி மயங்கிய நிலையிலிருக்கும் பெண்ணை தான் கண்டான்.

Advertisement

Advertisement

அந்த கணம் நின்று துடித்தது அவனின் இதயம் “மேடம்…” பதறிய குரலில் அழைத்தவன் அடுத்த நிமிடம் முன்னால் இருந்து பின்னால் சென்றிருந்தான். அந்த நிமிடம் எதுவும் தோன்றவில்லை கலைக்கு கைகளில் நடுக்கம் வரும் போல இருந்தது. காரிகையை மடியில் தாங்கிக் கொண்டவன் “ஹே ஆரியா… இங்க பாரு ஆரி டா…” என மங்கையின் கன்னத்தைத் தட்டிக் கொண்டே அழைத்தவனிடம் தண்ணீரை நீட்டினார் வேலு… அவரிடம் நீரை வாங்கியவன் அவளின் முகத்தில் தெளித்து அழுத்தித் துடைத்து விட்டு எழுப்ப இப்போதும் எழாது போகப் பயந்தே போனான் ஏகலைவன். அடுத்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காது காரிகையைக் கையில் ஏந்திக் கொள்ளப் போகும் நேரம் ஆரியிடம் மெல்லியசைவு தெரிந்தது.

விழித்து விட்டாள் என்று நினைத்தவன் தன் மடியில் கிடந்தவளைச் சீட்டில் சாய்த்து அமர்த்தி “அண்ணா மேடம் கண்ணு முழுச்சுட்டாங்க நீங்க பாத்துக்கோங்க நான் லெமன் ஜுஸ் எடுத்துட்டு வரேன்…” என்றவன் வேலின் பதிலைக் கூட எதிர்பாராது வாகனத்தை விட்டு இறங்கி ஓடினான்.

Advertisement

சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளிவந்தவன் நன்றாக நிமிர்ந்து தெளிவாக அமர்ந்தவளிடம் லெமன் ஜீஸை நீட்டினான். ஆரிக்கும் தற்போது அது தேவைப்படவும் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். முழுவதுமாக குடித்து முடிக்காமல் பாதியில் போதுமென தலையாட்டி அவனிடம் கிளாஸை நீட்டப் புருவத்தை உயர்த்தி போதுமா என்பதைப் போல் பார்த்தான். நிமிடம் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள். நீட்டிய கையை உள் இழுக்கவும் இல்லை அவன் பார்வைக்குப் பதில் பார்வையும் பார்க்கவில்லை “பிடிவாதம்…” என முணுமுணுப்புடன் டம்ப்ளரை வாங்கிக் கொண்டவன் வீட்டை நோக்கி நடக்க

“தேங்க்ஸ் மிஸ்டர் கலைவாணன்…” என்றாள் மெல்லிய குரலில். அது மெல்லிய குரலாக வெளிவந்ததா என்று கேட்டாள் அதுதான் இல்லை எப்போதும் போலக் கத்தலாகத் தான் வெளிவந்தது. ‘ஷ்… மயக்கம் வந்தவ பேசறது போலவா பேசறா…’ என நினைத்தவன் சட்டெனத் திரும்பி ஆரியை பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன் இமை மூடித் திறந்தான். நேற்று அவனுக்கு பட்பட்டென்று துடித்த இதயம் இன்று இவளுக்குத் துடித்ததோ?…

அடுத்த சில நிமிடங்களில் வெளிவந்தவன் ஃபார்மல் ஷுஸ் தான் அணிந்திருந்தான். எப்போதும் போல டிரைவர் சீட்டிற்கு அருகில் அமர்ந்து கொண்டான் ஆனால் இம்முறை எதுவும் பேசவில்லை அமைதியாகவே வந்தான். ஏதோ ஆழ்ந்த அமைதி அவனுள். விளையாட்டாகச் செய்த செயல் தற்போது விருட்சமாய் வளர்ந்து நின்றது போல் உணர்ந்தான். இத்தனை நாட்கள் அவளின் தனக்குத் தோன்றியது வெறும் ஈர்ப்பு தான் என்று நினைத்தான்.

‘அப்போது மட்டுமல்ல இப்போதும் மங்கையின் மேல் உனக்கிருப்பது வெறும் ஈர்ப்பு தான்…’ என்று ஒரு மதி கூறிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவனின் மனமோ மங்கையின் மேல் எழுந்த உணர்வு வெறும் ஈர்ப்பு தானென்று அடித்துக் கூற மறுக்கிறது, தயங்குகிறது தடுமாறுகிறது.

சற்று முன் பாவை மயங்கியதும் நீ தவித்த தவிப்பிற்குக் காரணம் வெறும் ஈர்ப்பா? என்ற கேள்வியைப் பலமாக எழுப்பியது அவனது மனம். அதற்கு விடை தேடி அல்லாடினான் ஆடவனும். கண்களை இறுக மூடித்திறந்தவன் ஒரு முடித்தவனாய் அமர்ந்தான்.

இங்கு ஆரியும் அதே மனநிலையில் தான் வந்தாள் சொல்லப்போனால் மாயோனின் குரலைக் கேட்க ஆசை கொள்ளுமளவிற்கு அவன் உன்னை ஈர்த்து விட்டானா? என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டுக் கொண்டாள். எப்போதும் போல அதற்குப் பதில் தான் கிடைக்கவில்லை. அப்படி என்ன அவனிடம் ஈர்த்தது என்ற ஆராய்ச்சி தோல்வியில் முடிந்தது .

சில நிமிடங்களில் இருவரும் சம்பத் சைட்டிற்கு வந்திருந்தனர் . ஒருவாறு அனைத்தும் முடிக்க மதியத்தைத் தாண்டி சென்றிருந்தது. அதற்கு மேல் மீண்டும் பயணம். என்ன முன்பிருந்த கலகலப்பு கலையிடம் இல்லை ஒரு வித இறுக்கம் அவனுள்.

கலையை வீட்டில் விட்டுவிட்டு ஆரியின் வாகனம் சென்று நின்றது என்னவோ மருத்துவமனையில் தான். ஆம் தலைவலி அவளை விட்டு நீங்காது இருந்தது.

“வா வா மா ஆர்யா எப்படி இருக்க…” என்ற மருத்துவரின் கேள்விக்குப் பதில் கொடுத்தவள்

“அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் அவரோட வாய்ஸ கேட்க ட்ரை பண்ணேன் சார். பட் என்னால முடியல.. அப்ப இருந்து தலைவலி அதிகமாகிடுச்சு அண்ட் மயக்கம் வேற வந்துருச்சு…” என்றாள் சோர்வாக

மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போலக் கூறியது அவருக்கு நினைவு வந்தது.. இரண்டு வருடங்களாக ஆரியை பார்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அவளின் குணம் தெரியும் என்பதால் அவரிடத்தில் மெல்லிய புன்னகை

“ம்ப்ச் சார், ஏன் தலை வலிக்குதுன்னு கேட்கிறேன் நீங்க சிரிக்கறீங்க…” என்றாள் அடர்ந்த குரலில்

“அவரோட குரலைக் கேட்க நினைச்சேன் சொன்னீங்களே அதுதான் சிரிச்சேன். போன டைம் சொல்லும் போது ஏதோ ஒரு ஆர்வமா இருக்கும்னு நினைச்சேன். தென் நான் எக்ஸ்பிளைன் பண்ணியும் இருந்தேன்.அதையும் மீறி அவர் வாய்ஸ கேட்க நினைச்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு. யார் அந்த லக்கி மேன் மா…” என்றார் அவளை அழுத்தமாகப் பார்த்து.

அவர் அப்படிக் கேட்டதும் இவளுக்குள் ஏதோ குறுகுறுப்பு. “அச்சோ அப்படியெல்லாம் இல்லை சார். ஏனோ அவரோட வாய்ஸ் கேட்க ட்ரை பண்ணேன். நீங்க கேட்கிறது போல இல்லை…” என்றவள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“செவி வழியா புரிஞ்சுக்க முயற்சி பண்ணா தலைவலி வருன்னு சொல்லி இருகேனா மா.. அதையும் மீறி அவர் குரல் உங்களுக்குக் கேட்க ட்ரை பண்ணா அந்த சமயம் உங்க தலைவலி இன்னும் அதிகமாக வாய்ப்புகள் இருக்கு… அது ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கும் அந்த அழுத்தம் தாங்க முடியாம மயக்கம் வந்து இருக்கலாம்…” என்றவர்

“எதுக்கும் நான் ஒரு இன்ஜெக்சன் போட்டு விடறேன்…” என்றவர் அதனைச் செய்தபடியே

“இப்பவும் சொல்றேன் ஆரியா இதுக்கு வழி இருக்கு நீங்க நினைச்சா முடியும். ஒரு தடவை அதுக்கு ட்ரை பண்ணி பாரு மா. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற. என் பொண்ணு மாதிரி நினைச்சு சொல்றேன். உனக்கு இப்ப கல்யாணம் வயசு ஆயிடுச்சு மா இப்படியே இருந்தா நல்லா இருக்காது மா… கொஞ்சம் யோசி டா…” எனப் பரிவாக கூறினார்

“ஒகே சார்…” என்றபடி எழுந்து கொண்டவளைச் சிரிப்போடு பார்த்தார் மருத்துவர்.

அவரின் சிரிப்பின் அர்த்தம் ஆரிக்கும் புரிய அவரை மென்னகையுடன் பார்த்தவள் “இப்ப எல்லாமே எனக்குத் தகுந்தது போல மாத்திக்கிட்டேன் சார். எனக்கு அந்த எதுவும் வேண்டாம். என்னோட வருங்காலம் அதைப்பத்தி நான் இன்னும் யோசிக்கல சார். காலம் போற போக்குல நானும் போயிட்டிருக்கேன். அதுக்கான தேவை வந்தா நிச்சியம் வருவேன் சார்…நான் குரலைக் கேட்க ஆசை படற ஆளும் என்னோட பாஸிங் கிளவுட் மாதிரி தான் இனி அதைப்பத்தி யோசிக்க மாட்டேன்…” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள். வேலு அனைத்தையும் பார்த்தபடி வந்தாரே தவிர அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

மருத்துவர் கூறியதை அசைபோட்டபடியே வந்தவளின் நினைவுகள் முழுவதும் இரண்டு வருடங்களுக்கு முன் மருத்துவமனையில் இவள் கண் விழித்த நாளை நோக்கிப் பயணித்தது…

****

“இப்ப எப்படி இருக்கீங்க ஆரியா… உங்க தலையில இன்னும் பெயின் இருக்கா…” அவளை பரிசோதித்தபடியே கேட்டார் மருத்துவர். அவரின் இதழசைவும், புன்சிரிப்பையும் பார்த்தவள்

“நீங்க என்கிட்ட ஏதாவது பேசனீங்களா சார்… நீங்க பேசறது எனக்கு புரியல. ஃபேன் ஓடற சத்தம் தான் கேட்குது.உங்க வாய்ஸ் எனக்குச் சரியா கேட்கல சத்தமா பேசுங்க…” என்றாள் அடர்ந்த குரலில்.

மருத்துவரின் புருவங்கள் நெரிந்தது உடனே அவளிடம் ‘உனது குரல் உனக்குக் கேட்கிறதா..’என்ற கேள்வி அவரிடமிருந்து எழுத்து வடிவில் வந்தது…

“என் குரல் எனக்கு கேட்காமல் போகுமா…” என்றவள் அப்போது தான் உணர்ந்தாள் அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லையென்று… சட்டென அவரைப் பார்த்தவள் இல்லையெனத் தலையாட்டினாள்.

“ஒரு பிராப்ளம் இல்லை நான் ஆடியோலஜிஸ்ட்டை வர சொல்றேன் ஆர்யா நம்ம ஒரு சில டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும் அதை பண்ணிடுவோம்…” என்றார் எழுத்து வடிவில். அடுத்த சில மணி நேரங்களில் காதிற்கான ப்யூர் டோன் ஆடியோமெட்ரி எனப்படும் செவிப்புலன் பரிசோதனையைச் செய்தனர். அதற்குப் பின் இரத்த பரிசோதனைகள், இமேஜிங் என பல சோதனைகளும் செய்தனர். சிலமணி நேரங்களுக்குப் பிறகு வந்த மருத்துவர் சோதனை முடிவை உடைத்தே கூறிவிட்டார்.

“தலையில் இருக்கிற காயத்தாலும், கார் வெடிப்பு சத்தாதலையும் உள்காது எலும்புகள் பாதிப்பு அடைஞ்சு இருக்கு. இந்த பாதிப்பு டெம்ப்ரரி தான். ஆனா உங்க காது கேட்காம இருக்கிறது பெர்மொண்ட்டா கூட இருக்கலாம்…இப்ப கூட எல்லா சத்தமும் உங்களுக்குக் கேட்கும் ஆனா அது உங்களுக்கு இரைச்சலா கேட்கும் அது தெளிவா புரியாது. இது வாழ்நாள் முழுக்க தொடரலாம் ஒருத்தரோட குரலைத் தெளிவா புரிஞ்சுக்க முடியாது. இதுதான் அவங்க குரலான்னு உங்களுக்குத் தெளிவா தெரியாது….”என டாக்டர் எழுதிய அனைத்தும் அவளின் கண்களில் சூழ்ந்த நீர் மறைத்து இருந்தது. கார்வெடிச்ச சத்தம் என்ற வார்த்தையிலேயே அவளின் மனம் நின்று விட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அவளின் குடும்பத்தைப் பற்றின எண்ணம் இப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு.

“என் ஃபேமிலி…” அடுத்த வார்த்தை வரவில்லை ஆரிக்கு… அவளை அமைதியாகப் பார்த்தார் மருத்துவர். அந்தப்பார்வை காரிகைக்குத் தெளிவாகப் புரிந்தது அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்கவில்லை அமைதியானாள்.

அவளுக்குத் தனிமையை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார் மருத்துவர். இப்போது காதில் கேட்கும் ரீங்காரமும் அவளின் மனதை வருடும் தென்றலும் மட்டுமே அவளுக்குத் துணையாக இருந்தது. கத்தி அழ வேண்டும் என்ற எண்ணம் துளிக் கூட இல்லை.. மொத்த அழுகையையும் அடக்கியதால் தொண்டை வலித்தது. நெஞ்சம் விம்மித் துடித்தது. மூச்சு வாங்கியது. அழுது விடு பெண்ணே மதி கதறியது இருந்தும் அழவில்லை இயந்திரகதியில் அமர்ந்திருந்தாள்.

அந்த கணம் ஆற்றுவார், தேற்றுவார் இல்லை.. அப்படி யாராவது ஒருவர் இருந்திருந்தால் அழுது இருப்பாளோ என்னவோ. அவளின் மெளனம் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தது அதன் விளைவு அவளால் பேச முடியாத சூழ்நிலை உருவானது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மருத்துவர் ஒரு நாள் அவளிடமே பேச வந்தார்.

நேராக அவளிடம் பேசினார். அவரையே பார்த்தவள் பதில் பேசாது அமர்ந்திருந்தாள். அவரின் வார்த்தைகள் புரியவுமில்லை தனக்குப் புரியவில்லை என்று அவரிடம் கூறவும் இல்லை… அவளிடமிருந்த மௌனத்தை உடைக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது அவருக்கு…

“லிசன் ஆரியா நீங்க இப்படியே பேசாம இருந்தா உங்களால இனி எப்பவும் பேச முடியாத சூழ்நிலை உருவாகிடும். நீங்க பேசிட்டே இருந்தா மட்டும் தான் உங்களால உங்க பேச்சைத் தக்க வைச்சுக்க முடியும். இல்லைன்னா உங்களால பேச முடியாது ஆரியா. நிறையா பாத்து இருப்பீங்க காது கேட்காத ஆட்கள் பேச மாட்டாங்க அதுக்கு காரணம் இதுதான். உங்களுக்கு கேட்குதோ இல்லையோ நீங்க பேசணும். அவங்க சொல்றதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இப்ப நான் சொல்றதை கேளுங்க உங்களுக்கு இருக்கிற பிராப்ளம் ஒன்னுமில்லை இந்த உலகத்துல எத்தனையோ பேருக்கு இருக்கிற ஒன்னுல இதுவும் ஒன்னு. இதை நீங்க நினைச்சா மாத்திக்க முடியும். குணமும் படுத்த முடியும். நாங்க உங்களுக்கு இதுக்கான ட்ரீட்மென்ட் பண்றோம். ஏர் பட்ஸ் போலத் தான் இருக்கும்…பப்படமா சரின்னு சொல்லுங்க மா அதுக்கு அப்பறம் நான் பாத்துக்கிறேன்…” என எழுதியபடியே தன்னிடம் பேசியவரிடம் மாட்டேன் என்பதைப் போல் தலையாட்டினாள்.

****

? பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்?? காது பற்றிய செய்திகள் வேண்டுமானால் கூறுங்கள் அதை பற்றி அடுத்த அத்தியாயத்தில் கூறி விடுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!