Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 24

(பதினொன்றாம்  அத்தியாயத்தின் தொடர்ச்சி…)

ஆறு மாத மருத்துவமனை வாசத்திற்கு பிறகு வீடு வந்து சேர்ந்திருந்தாலும் வாரம் ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வருவாள் ஆரியா. அதன்படி அன்று அவள் மருத்துவமனை சென்றிருக்க,  நண்பர்கள் இருவரும் ஆரியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.



Advertisement

“ஒரே நாள்ல மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு நிக்குது தம்பி, பிள்ளை முகத்தைப் பார்க்கவே சங்கடமா இருக்கு, எப்படியிருந்த புள்ளை இப்ப அமைதியா இருக்கிறத பார்த்தா மனசு வலிக்குது…” கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கூறினார் ரத்னா.

கடந்த கால் மணி நேரமாக இதே பேச்சு தான் வேலுவின் மனைவியான ரத்னம்மாவிடம் (ஆரியின் வீட்டில் வேலை செய்யும் பெண்) அவருக்கு ஆறுதல் கூறியபடி வருத்தமான முகப் பாவனையுடன் அமர்ந்திருந்தான் காசி.

Advertisement

Advertisement

காசிக்கு அருகில் இதற்கும்,தனக்கும்  துளியும் சம்பந்தம் இல்லை என்பது போல் கையில் வைத்திருந்த பத்திரிக்கையில் ஏதோ மும்மரமாக கிறுக்கி கொண்டிருந்தான் ஏகலைவன்.

“எல்லாம் விதிங்க ம்மா, யாரு மேல குறை சொல்றது சொல்லுங்க. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு நம்ம அடுத்தடுத்து வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும். நீங்க அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருங்க… ” என காசி பேச பேச முந்தானையில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சரியென்றவர் இதற்கும்,தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தவனை பார்த்தார்.

Advertisement

வேறு யாராக இருந்தாலும் ரத்னா அழும் அழுகைக்கு நிச்சியம் ஆறுதலாவது  கூறி இருப்பார்கள் ஆனால் அவன்  இதை பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்க, அவரின் பார்வை தன்னாலேயே அவன் மேல் விழுந்தது.

ரத்னாவின் பார்வை நண்பனின் மீது படிவதை கண்ட காசியோ “மச்சி டேய்…” என்று தோளை இடித்தான். அவனோ அவன் வேலையை தொடர்ந்து கொண்டே “ம்ம், என்னடா போலாமா?..” எனக் கேட்டான்.

“அடேய், அவங்க பேச பேச எப்படி டா போக முடியும். கொஞ்சம் ஆறுதலா எதாவது சொல்லேன்…” மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான். சட்டென எழுதிக் கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு “ஒரு நிமிசம் ஆறுதல் வார்த்தை சொன்னா போதாதா? அவங்க அழற நேரமெல்லாம் ஆறுதல் சொல்லிட்டே இருக்கணுமா? …” புருவம் உயர்த்தி கேள்வியாக கேட்டான் ஏகலைவன்.

அவனை முறைத்துப் பார்த்தவன் மீண்டும் ரத்னாவின் புறம் திரும்பி கொண்டான். அதற்கு பின்னான ஒரு சில  நிமிடங்கள் கூட ரத்னாவின் அழுகையிலும், புலம்பலிலும் தான் சென்றது.

“சரிங்க மா, மேடம் வர லேட் ஆகும் போலிருக்கு. நாங்க கிளம்பறோம். எங்களுக்கு இன்னும் நிறையா இடத்தில பத்திரிக்கை வைக்க வேண்டியது இருக்கு. மேடம் வந்தா சொல்லிடுங்க…” என்றவன்

“மச்சி…” என கலையிடம் கை நீட்டினான்.

இத்தனை நேரம் எழுதிக் கொண்டிருந்த பத்திரிக்கையை காசியிடம் கொடுத்தான் கலை.  அதில் என்ன எழுதியிருந்தது என்பதைக் கூடப் படிக்காமல்  பத்திரிக்கையை ரத்னாவிடம் கொடுத்து

“மேடமும், நீங்களும் குடும்பத்தோட  வந்திடனும் மா…” என்றவன் கலையிடம் திரும்பி ‘போகலாம்…’ என்பதை போல் தலையாட்டியவன் முன்னால் நடக்க,

கலையோ ரத்னாவிடம் “சரிங்க மா வரேன்…” என முன்னால் நடந்தான். பின் என்ன நினைத்தானோ திரும்பி வந்து

“அப்புறம் ஒன்னு சொல்லணும் அந்த பொண்ணுக்கு நல்லது நடக்கனும் நினைச்சா! இப்படி வரவங்க போறாவங்க கிட்டயெல்லாம் அவங்களை பத்தி சொல்லிட்டு இருக்காதீங்க…”எனச் சொல்லவும் ரத்னா புரியாது பார்த்தார்.

அவரின் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக

“அவங்களை பத்தி சொன்னதுல ஒன்னு, இரண்டு  அதிகப்படியா தோணுச்சு. துணைக்கு யாருமில்லை, சொத்தும் முழுக்க அவங்களுக்கு மட்டும் தான். சொந்தம் பந்தம் இல்லாத பொண்ணு. எக்ஸ்ட்றா.. இதெல்லாம்  சொல்றத இத்தோட நிறுத்தீக்கோங்க, நீங்க ஆதங்கத்தில சொன்னாலும் எதிர்ல கேட்டுட்டு இருக்கிறவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. இது அந்த பொண்ணுக்கு நல்லது இல்ல…” என்றான்.

அவன் கூறுவது சரியென்று தான் ரத்னாவிற்கு தோன்றியது. அதனாலயே அவன் சொற்களுக்கு மறுப்பேதும் கூறாது சரியென்று தலையாட்டினார்.

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் சரணவப்பட்டி ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தனர். “ஆமா டா, ரொம்ப நேரமா ஏதோ எழுதிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு? அப்படி என்ன எழுதிட்டு இருந்த…” வாகனத்தை ஓட்டிக் கொண்டே பின்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான் காசி.

“அதுவா, சும்மா தான் கை நிக்காம எழுதிட்டு இருந்தேன்…” எனக் கூறியவன் கண்முன்னே அவன் எழுதிய வார்த்தைகள் நினைவில் வந்தது.

அதே கணம் மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு  வந்த ஆரியின் கண்களும் டீபாயின் மீதிருந்த பத்திரிக்கையில் தான் இருந்தது.

அதில் நிறம் தந்த வானவில்லே… என்ற வரிகளை  கண்டதும் புருவங்கள் உயர்த்தி அதனை பார்த்தவள் செய்திதாளுக்கிடையில் மறைந்திருந்த பத்திரிக்கையை கையில் எடுத்தாள்.

முறுவலிக்கப் பழகிய இதழே,

நகை மறத்தல் ஆகாது!

என்ற வரிகளை படித்ததும் இதழில் ஓரத்தில் புன்னகை அரும்பியதோ…

இதழின் கடையோரத்தில் அரும்பிய புன்னகையுடன் அடுத்தடுத்த வரிகளை படித்தாள்.

துருதுருத்த அஞ்சன விழிகளே,

திரை வெறித்தல் தகாது! ..

அடிகள் பல் காணுதலால்

மனம் சோர்ந்து போதல் கூடாது!..

பணிவு கண்ட பாவையில்,

பரிதவிப்பு சேராது!…

புவி ஆழ வந்தவளே,

மெளன ராகம் இனிக்காது!..

நிறம் தந்த வானவில்லே,

நிறம் மங்குதல் ஆகாது!

இவ்வளவு நேரம் அரும்பாக, மொட்டாக, முகையாக, மலராக விரிய தொடங்கிய புன்னகை, நிறம் தந்த வானவில்லே என்ற வார்த்தையில் அலராக விரிந்தது.

இத்தனை மாதங்களில் பலர் பல விதமாக ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அவையனைத்தும் இவளின் மனதை இறுக செய்தவை தான். முதன்முதலாக இப்படியொரு ஆறுதலை அவள் எதிர் பார்க்கவே இல்லை.

ஆரியின் புன்னகையை பார்த்தபடி வந்த ரத்னாவோ “என்ன ப்பாப்பா அதையே அப்படி பார்த்திட்டு இருக்க…” அவளுக்கு முன் நின்று கேட்டார். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் “யாரோடது இது . யார் எழுதினா?…” பத்திரிகையிலிருந்த வரிகளை காட்டியபடி கேட்டாள்.

“அடடா,  இது காசி சாரோட  வந்த தம்பி  எழுதிட்டு இருந்தது மா… அவர் பேரு கூட ஏதோ நல்லப்பேரு ம்மா மறந்துட்டேன் கலைன்னு ம்ம் கலைவாணன். அந்த தம்பி தான் மா எழுதிட்டு இருந்துச்சு. போற அவசரத்துல மாத்தி குடுத்துட்டு போயிருச்சு போல…” என்றதும் சரியென்று தலையாட்டியவளுக்கு புரிந்தது மாற்றி கொடுக்கவில்லை வேண்டுமென்றே கொடுத்தது தான் என்று.

அதற்கு பின்னான நாட்களில் கவிதையை எழுதி சென்றவன் கூட அந்த கவிதையையும் அன்றைய தினத்தையும்ம் மறந்து விட்டான். ஆனால் அதை படித்தவள் அந்த கவிதையையும் அந்த வரிகளுக்கு சொந்தமானவனின் பெயரையையும் நினைவில் வைத்திருந்தாள்.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

என்ற குறளுக்கு ஏற்ப,  சரியான நேரத்தில் அவனையும் அறியாமல் அவன் செய்த சிறிய செயல் மங்கையின் மனதில் ஆழப் பதிந்து போனது. கவிதை மட்டுமா பதிந்து போனது அந்த பெயரும் தான். அதே சமயம் கவிதையின் சொந்தக்காரன் காசியின் நண்பன் என்று அறிந்தாலும் அவனைப் பற்றி காசியிடம் விசாரிக்க தோன்றவில்லை அவளுக்கு..

இந்நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு காசி தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான். இவன் தான், தான் நேசிக்கும் வரிகளுக்கான சொந்தக்காரன் என்றறிய நிமிடங்கள் தேவைப்படவில்லை பாவைக்கு… அந்நொடி மனம் பெரியதாக  ஆர்ப்பரிக்கவில்லை என்றாலும் ஏதோ ஓர் மூலையில் மெல்லிய உணர்வுச்சாரல் வீச தான் செய்தது.

அந்த மெல்லிய சாரல் தான் இரண்டு வருடங்களாக அவளுக்கு அவளே போட்டு கொண்ட அழுத்தமான மெல்லிய கோடுகளை அழித்து ஆடவனின் குரலை கேட்க முயற்சி செய்ய வைத்தது.

அந்த மெல்லிய உணர்வு தான் அவனின் கோப முகத்தை பார்க்க சலிக்காது அவனிடம் இறங்கி போய் பேச வைத்தது.

அந்த மெல்லிய உணர்வு தான் கலையின் அதிகப்பிரசங்கித்தனத்தை பொறுத்துக் கொள்ளவும் வைத்தது.

அந்த மெல்லிய உணர்வு தான் எவரிடமும் பகிராத தன் தனிப்பட்ட வாழ்க்கையை அவனிடம் பேச வைத்தது.

அதே மெல்லிய உணர்வு தான் அவன் கரங்களுக்குள் தன் கரத்தை ஒப்படைக்கவும் வைத்தது. அவன் இழுத்த இழுப்பிற்கு செல்லவும் வைத்தது.

அதே போல் நேற்று கலையின் செயலில் கோபம் வந்தது தான் என்றாலும் அவன் கேட்டது போல் காவல்நிலையம் வரை செல்லும் அளவிற்கு மனம் வரவில்லை. இருந்தும் அவனழைத்து கேட்டதும் இல்லையென்று ஒப்புக்கொள்ளாமல் முடிந்த மட்டும் வெறுபேற்றி விட்டு தான் அலைபேசியை வைத்தாள்.

உண்மையை சொல்லப்போனால் நேற்றைய இதழ் முத்தம் கூட பாவையின் மனக்காயங்களுக்கு மருந்தாக தான்  இருந்தது அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

இத்தனை கிறுக்குத்தனத்தையும் அவனுக்காக  செய்து விட்டு தற்போது ஒன்றுமே அறியாதவள் போல் அவன் கைகளுக்குள் அகபட்டுக் கிடக்கிறாள்

பேதை….

இவள் இப்படியென்றால் கலையை பற்றிக் கூறவே வேண்டாம்.

முதல்முறை மாயோளை கண்டதும் பிடித்த பித்து  நாள் போக போக அதிகமானதே தவிர குறைந்தப்பாடில்லை.

உண்மையை சொல்லப்போனால் ஆரம்பத்தில் அவளின் அதிகாரமும், அதட்டலும் சுத்தமாக பிடிக்கவில்லை என்றவன் தான் நாளடைவில் அதனை ரசித்தான்.

பிடிக்கவில்லை என்பது கூட எப்போது ரசனையாக மாறி, உரிமை உணர்வை கொடுத்தது என்று கேட்டால் அவனிடம் பதிலிருக்காது.

அந்த உரிமை உணர்வு தான்… ஜீவா அவளைப் பற்றி தவறாக கூறியதும்  இரத்தம் வர அடிக்க வைத்தது.

அந்த உரிமை உணர்வு தான்.. அசோக்கும், அவளும் ஒன்றாக சென்றதும் இரவு என்றும் பாராமல் அவளுக்கு அழைத்து பேச வைத்தது.

அந்த உரிமை உணர்வு தான்… அசோக்கின் தாய் பேசிய பேச்சை கேட்க முடியாது நேரடியாக அசோக்கை மிரட்ட வைத்தது.

அதே உரிமை உணர்வு தான்… ஆரியை அடிக்க பாய்ந்த அசோக்கின் அன்னையை தடுத்து கை நீட்டி அடிக்கவும் வைத்தது.

அந்த உரிமை உணர்வு தான்… அவளின் மீது கோபப்படவும் வைத்தது அவளின் இதழை தீண்டவும் வைத்தது.

மெய் தீண்டலுக்கு பிறகு தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் அதீத உரிமை உணர்வு தோன்றுமாம்… ஏனோ இவனுக்குள் அது இல்லாமலே தோன்றியது தான் அதிசயம்.

சொல்லபோனால் ஆரம்பித்ததில் அவளிடம் பேசாதே! அவளை பார்க்காதே! என்று மதியும்,மனமும் மாறி மாறி பல முறை தடுத்தும், எச்சரித்தும், அவளிடம் மட்டும் தோற்றுக் கொண்டே போனான் கலை.. தோற்றது கலை மட்டுமல்ல அவனது   ஆண் என்ற கர்வமும்,எண்ணமும் தான்.  இனியும் அவளிடம் மட்டுமே அவனது ஆண் என்ற கர்வமும், எண்ணமும் தோற்று போகும் என்பது திண்ணம்.

******

இங்கு கோபியில்…

பிரபல மருத்துவமனையில் வராண்டாவில் அமர்ந்திருந்தார் சௌந்தர்யா..மனம் முழுவதும் கணவனின் நிலையை எண்ணி மட்டுமே இருந்தது… திருமணம், அதன் பிறகான பிரிவு, பிள்ளைகளை எண்ணி அவர் வருவதாய் கூறினாலும் தான் மாட்டேன் என்று விடாப்பிடியாக நின்றது என அனைத்தும் கண்முன்னே தோன்றியது.

“என்னை விட்டு போயிட்ட தானே? நீயில்லாம நான் ஏங்கி போவேன் தெரிஞ்சும் என்னை விட்டு போயிட்ட, நீ இல்லாம நான் அடுத்து என்ன பண்ணுவேன் யோசிக்காம என்னை விட்டு போயிட்ட,…” என்ற மனதின் ஏக்கத்திற்கு  “நான் இல்லாம உன்னால என்ன சாமாளிக்க முடியும்…” என்ற தியாகுவின் பேச்சு அவரின் ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

சொல்லபோனால் அந்த வார்த்தை கணவனுக்காக ஏங்கிய ஏந்திழையை   சிங்கப் பெண்ணாக மாற்றியது.

‘ஒரு பொண்ணு நீ என்ன பண்ணுவன்னு தானே போன.. சரி நான் தனியா நிண்ணு பொலச்சு காட்டுறேன்..  நீ இல்லாம சிங்கிள் மதரா இருந்து புள்ளைங்கள வளர்த்து காட்டுறேன்…’ என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவர் அதன்படியே நடந்தும் கொண்டார்.

இதற்கிடையில் முற்றும் முழுதாக தியாகுவை தவிர்க்க நினைத்தார், விலக நினைத்தார் ஆனால் இது எதற்கும் தியாகு விட்டதில்லை…

அவரின் இருப்பை காட்டிக் கொண்டு தான் இருந்தார். ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய அனைத்தும் சரியாக தான் செய்தார். அதனால் தான் என்னவோ அவரின் இரு பிள்ளைகளும் தந்தையின் மீது உயிரே வைத்திருந்தனர்.

“ம்மா…” கலையின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவர் சட்டென நிமிர்ந்து பார்த்தார். கலங்கிய கண்களுடன் நிமிர்ந்த தாயிடம்

“அப்பாவை போயி பாருங்க…” என்றான்..

“ம்…” என்ற தலையசைப்போடு உள்ளே சென்றார்.

மனைவியின் வருகையை உணர்ந்தாரோ தியாகுவும்.. மெல்ல இமைகளை திறந்தார். கதவின் அருகில் நின்ற  மனைவியை பார்த்தார். கனத்த கையை மெல்ல தூக்கி வா என்பது போல் அழைத்தார்.

அக்கணம் சிறு பிள்ளை போல் ஓடி சென்று கணவனின் கையை கட்டிக் கொண்டவர் “செத்திட்டேங்க…” என்றபடி கேவி அழுதார்.. அந்த அழுகையுடனே

“உங்களுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா? நானும் உங்களோடயே வந்திருப்பேன். நீங்க இல்லாத உலகத்தில நான் மட்டும் இருந்து என்ன பண்ண போறேன்..” எனக் கூறி அழுக, அந்த நேரத்திலும் தியாகராஜனின் இதழ்கள் புன்னகையை சிந்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!