Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை – 7

அவர்கள் ஓய்வெடுக்க நினைத்த இடத்திற்கு இப்பொழுது போக முடியாது அங்கு முழுவதும் சரக்கு வாகனம் ஓட்டுபவர்களே அதிகம் வருவது,  இவளை அங்கு அழைத்துச் செல்ல இயலாது இடையில் எங்கும் தங்கும் வசதியில்லை என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தான் சேனாபதி.

“கதிர் புதுசா கட்டிட்டு இருக்க வீடு ஏதாவது இருந்தா நிறுத்து” என்றான் சேனாபதி, இருபுறமும் அந்த இருளில் கூர்ந்து பார்த்துத் தேடிக்கொண்டே சென்றனர், அருகில் அதிகம் வீடுகள் இல்லாத ஒரு இடத்தில் பாதி கட்டப்பட்ட வீடு ஒன்று  கண்ணில் பட்டது உள்ளே சென்று நிறுத்தினான் கதிர்.

சேனாபதி முதலில் இறங்கி கதிருக்குக் கண் காண்பித்தான் ‘அவளைக் கவனித்துக்கொள்’ என்பதாக, கதிர் அங்கேயே நின்றுகொள்ள அலைபேசியின் வெளிச்சத்தில் அந்த இடத்தை ஒருமுறை சுற்றிவந்தான்.

இது போன்று ஊருக்கு வெளியில் இருக்கும் இடங்களில் கட்டப்படும் கட்டிடங்களை இரவில் சில திரைமறைவு வேலைக்கு ஆட்கள் பயன்படுத்திக்கொள்வார்களே ஆகையால் நன்றாகச் சோதனை செய்துகொண்டான்.



Advertisement

உள்ளே நுழைந்து பார்க்க ஜன்னலில் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தது கதவுகள் இன்னும் வைக்கப்படவில்ல,  ஹால் இரண்டு அறைகள் என்று இருக்க வெளியில் வந்தவன் “உள்ள வாங்க” என்றான் இருவரிடமும்.

 மிகவும் களைத்து சோர்ந்திருந்தவள் இறங்காமல் அமர்ந்திருந்தாள் அருகில் வந்தவன் கதவைத் திறந்து பிடித்து “வா” என்க, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் “இவளை” என்று பல்லைக்கடித்தவன் ஒரே கையால் இடையோடு சேர்த்து தூக்கி சென்று ஒரு அறையில் விட்டான்.

உடலில் மெல்லிய சூடு இருப்பதாகத் தோன்றியது “ஒழுங்கா படுத்துத் தூங்கு” என்றவன் வெளியில் வந்து “இன்னைக்கு இங்கதான் வேறுவழியில்லை நீ வேணா ஜீப்ல படுத்துக்கோ கதிர்” என்க.

Advertisement

“வேண்டாம்ண்ணா நானும் இங்கேயே படுத்துக்குறேன்” என்று ஹாலின் ஒரு மூலையில் படுத்துக்கொண்டான் கதவுகள் இல்லை, சேனாவுக்கு அவளை நினைத்துக் கொஞ்சம் பயம் இருந்தது உண்மை, நடு இரவு… நெடுஞ்சாலை… தாங்கள் கண் அசரும் நேரம் வெளியில் சென்றுவிட்டால் என்ன செய்ய என்று யோசித்தவன் அவள் இருந்த அறையின் உள்ளே எட்டிப்பார்த்தான்.

Advertisement

உடலைக் குறுக்கி படுத்திருந்தாள் திலோத்தமா விரித்துக்கொள்ள ஒன்றும் இல்லை முழுதும் மண்ணாக இருந்தது வேறு ஒன்றும் இப்பொழுது செய்ய முடியாதே அவள் படுத்திருந்த அறையின் வாயிலைக் கால்களைத் தூக்கி வைத்துத் தடுத்து படுத்துக்கொண்டான்.

சேனாவின் கைகளில் தவழ்ந்த அந்த நங்கை அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு மஞ்சத்தில் சாய்வதை கண்டு “வேண்டாம்…” என்ற அலறலோடு எழுந்தமர்ந்தாள் திலோத்தமா, சத்தம் கேட்டு இருவருமே விழித்துக்கொண்டார்கள்.

“என்னாச்சு” என்று அவளின் அருகில் முதலில் ஓடினான் சேனா, அவனின் விழிகள் சுற்றிலும் சுழன்றது யாரவது வந்தார்களா என்று, அவனைப் பார்த்துச் சுவரோடு ஒன்றியவளின் மூளைக்கு தான் கண்டது கனவு என்பது பிடிபட சில நொடிகள் எடுத்தது.

Advertisement

கண்கள் சொருக ஒருபக்கமாகச் சரிந்தாள் திலோத்தமா, தலை கீழே அடிபடாமல் தாங்கியவன் அவள் உடன் சூட்டினை தன் கைகளில் உணர்ந்தான், நெருப்பாகத் தகித்தது “கதிர் ஜுரம் அதிகமா இருக்கு” என்றான் கொஞ்சம் டென்ஷானாக.

இது வீடல்லவே… ஹோமியோ மருந்து உடனடியாகக் கேட்க்காது, இந்த நிலையில் பொறுமையாக மருந்தைக் கொடுத்துக்கொண்டிருக்கவும்  இயலாது, மருந்து வாங்க வேண்டும் என்றாலும் மெடிக்கல் இப்பொழுது திறந்திருக்காது, எங்கே இருக்கும் என்றும் தெரியவில்லை அவனுக்குக் கோபமாக வந்தது.

கிணற்றில் குதித்து முத்தெடுத்தாளே அதனால் வந்தது இது “வண்டிய எடுறா எங்கயாவது ஹாஸ்பிடல் போய்டலாம்” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.

கதிர் விரைந்து சென்று வண்டியை எடுத்தான், சேனா பின்னில் அமர்ந்து மடியில் அவளின் தலையைத் தாங்கிக்கொள்ள நல்ல வேகத்திலே சென்றான் கதிர்.

அரைமணி நேரம் சென்று ஒரு மருத்துவமனை கண்ணில்பட நேரே அங்குச் சென்றுவிட்டனர் யாருக்கும் காத்திருக்காமல் அவனே அவளைத் தூக்கி சென்றுவிட்டான், கதிர் அவர்களிடம் விவரம்கூற உடனே அட்மிட் செய்யப்பட்டாள்.

கிணற்றில் குதித்ததில் உடலில் ஆங்காங்கே சில கீறல்கள் இருந்தது, இவர்களை அந்தச் செவிலியர் சந்தேகமாகப் பார்க்க “என் தங்கச்சி சிஸ்டர்… சாயந்திரம் குளத்துல வழுக்கி விழுந்துட்டா அப்போ ஒன்னும் தெரியல இப்போ திடீர்ன்னு காய்ச்சல் அடிக்குது” என்றவன் “நாங்க இங்கேயேதான் இருப்போம் அவளுக்கு முழிப்பு வந்ததும் நீங்களே கேளுங்க” என்றான்.

பெரிய அறையாக வாங்கிக்கொண்டார்கள் “நீங்கத் தூக்குங்கண்ணா நான் பாத்துக்குறேன்” என்றான் கதிர்.

“இல்ல நீ அந்தப் பெட்ல படுத்துக்கோ நான் இப்படியே இருக்கேன், இவளை நம்ப முடியாது முழிப்பு வந்ததும் எழுந்து ஓடிட்டா நாம ரெண்டுபேரும் கம்பி எண்ண வேண்டியதுதான்” என்றவன் பெட்டின் அருகில் சோபாவை இழுத்துப்போட்டு இன்னொரு சோபாவில் கால் வைத்து விழிமூடினான்.

அதே அறையில் இருந்த இன்னொரு சிறிய பெட்டில் கதிர் படுத்துக்கொண்டான் அவர்களுக்கும் உடல் அசதியாக இருந்தது சிறிது நேரத்திலே இருவரும் நன்றாக உறங்கிவிட்டனர் இடையில் திலோத்தமாவை வந்து பார்த்து ட்ரிப்ஸ் முடிந்ததும் எடுத்துவிட்டு சென்றார் செவிலியர்.

காலைப் பேச்சுக் குரல்கள் சத்தத்தில் கதிர் சேனா இருவருமே விழித்துக்கொண்டனர், இருவரும் ரெப்ரெஷ் செய்து வரக் கதிர் காபி வாங்கிவந்தான், அப்பொழுதும் திலோத்தமா உறக்கத்தில் இருந்தாள்.

செவிலியர் வந்து பார்க்க “எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க” என்றான் சேனா.

“பீவர் குறைஞ்சிருக்கு ஆனா ரொம்ப வீக்கா இருக்காங்க ரெஸ்ட் வேணும்” என்றார் அவர்.

“நீங்க டிஸ்சார்ஜ் பண்ணுங்க நாங்க வீட்ல வெச்சு பாத்துக்குறோம்” என்றான் அவன், அவர்களுக்கு இன்னும் சந்தேகம் போகவில்லை சேனாவின் தோற்றமே அவர்களுக்குச் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியது.

திலோ மெல்ல விழிகளைத் திறக்க அவளின் அருகில் நெருங்கியவர் “இவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா” என்றார் சேனா கதிரைக் காண்பித்து.

“அவர் உங்க அண்ணன்னு சொல்றார்” என்க, அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தாள் திலோத்தமா, எங்கிருக்கிறோம் என்ன என்று புரிந்துகொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.

மீண்டும் கதிரைப் பார்த்தவள் “ஆமா என்னோட அண்ணா” என்றாள் மெல்ல.

“ஓஹ் சரி நீங்க நினைவே இல்லாம இருந்தீங்க, இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலையே அதான் தப்பா எடுத்துக்காதீங்க” என்றவரை பார்த்தவள் மெல்ல புன்னகைத்தாள்.

அவர் மருத்துவரை அழைக்கச் செல்ல “ஒருநிமிஷம்” என்றவள் “பாத்ரூம் போகணும்” என்க கைப்பிடித்து அழைத்துச்சென்றார் அவர்.

உடலே சுமையாகத் தெரிந்தது அவளுக்கு நடக்க முடியவில்லை இங்குதான் என்று இல்லாமல் உடல் முழுதும் வலி, ஒவ்வொரு அடியையும் வைக்கும்போது அவள் உதடு கடிப்பதையும் முகம் சுறுக்குவதையும் பார்த்திருந்தான் சேனாபதி.

அவள் ரெப்ரெஷ் செய்துவர பன்னும் ஒரு சிறிய கப்பில் தேநீரும்  கொடுத்தான்  கதிர், அதன்பறகு மருத்துவர் வந்து பார்த்துச் சில அறிவுரைகள் கூறி டிஸ்சார்ஜ் செய்தார்.

வீல் சேரில் வைத்தே அழைத்து வந்து பார்க்கிங்கில் விட்டுவிட்டனர் ஜீப்பில் ஏறியதும் அப்படியே படுத்துவிட்டாள், சேனாவிற்கு அழைப்பு வந்தது அவனுடைய மேனேஜர் அழைத்திருந்தார்.

 “சார் அவங்க டவெல்வோ கிளாக் வரேன்னு சொல்லியிருக்காங்க, நீங்க எப்போ வரீங்க” என்றார்.

நேரம் காலை எட்டுமணி கடந்திருந்தது, குன்னூர் சென்று சேர எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் “வந்துர்றேன்… லஞ்சுக்கு எல்லாம் ரெடியா” என்க.

“எல்லாமே ரெடி சார் அவங்க சுத்தி பாத்துட்டு வந்ததும் லன்ச் முடிச்சுடுலாம், அப்படியே ஈவினிங் ட்ரெக்கிங் ஏற்பாடும் ரெடி” என்றார் அவர்.

“சரி நீங்க அவங்களுக்கு கம்பனி குடுங்க, நான் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவன் திலோத்தமாவை பார்த்திருந்தான் ‘என்ன செய்ய இவளை’ என்று.

“அண்ணே நான் ஒன்னு சொல்லவா…” என்றான் கதிர்.

இவன் திரும்பி அவனைப் பார்க்க “நீங்கக் குன்னூர் போங்க நான் ஒரு டாக்சி  வெச்சு திலோவை அவங்க வீட்டில விட்டுறேன்” என்க.

“சரியாவராது கதிர், இவ நம்மகூட இருந்தான்னு தெரிஞ்சா அந்த ஆள் வேற ஏதாவது தப்பா நெனைக்க வாய்ப்பிருக்கு” என்றவன் “பாக்கலாம்” என்று குன்னூர் நோக்கி வண்டியை விட்டான்.

குழந்தையைப் போல ஒரு பெண்ணைக் கையில் தூக்கி வந்தவனை பார்த்து வாயில் கை வைத்து நின்றார் பாண்டியம்மாள், குன்னூரில் இருக்கும் அவனின் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்மணி சமையல் முதல் வீட்டில் அனைத்து வேலைகளும் அவர்தான், வெளிவேலைக்கு காலை மாலை ஒரு நபர் வந்துசெல்வார்.

நேராக அவனின் அறைக்குக் கொண்டுசென்றவன் திலோத்தமாவை அவனின் படுக்கையில் கிடத்தினான், அவளால் “வேண்டாம்” என்று எதிர்க்கவோ நடக்கவோ முடியவில்லை, அவன் கரங்களில் தான்  இருப்பதை உணரமுடிந்தது, இப்படியொரு தருணத்திற்கு அவள் தவமிருந்தாள் ஆனால் இப்பொழுது இந்த நொடி அதை அவளால் ரசிக்க முடியவில்லை.

விழிகள் நிறைந்தது ‘என்னிடம் அந்த உண்மையை நீ கூறாமலே இருந்திருக்கலாம்’ என்று அழுதது மனது.

“பாண்டியம்மா” என்றவனின் அழைப்பில் ஓடிவந்தவர் “சொல்லுங்க தம்பி” என்றார்.

“கொஞ்சம் உடம்பு சரியில்ல நல்லா பாத்துக்கோ, என்ன சாப்பிட கொடுக்கலாம்னு பாத்து குடு” என்றவன் கதிரை அழைத்து “நீ வர வேண்டாம் இங்கேயே இருந்து பாத்துக்கோ, ஏதாவது தேவையா இருந்தா ஆளில்லாம கஷ்டம்” என்க “சரிண்ணே” என்றான் அவன்.

குளித்துவந்தவன் உடைமாற்றி அவளின் அருகில் சென்று நின்றான் “பைத்தியமாடி நீ காதலிக்க வேற ஆளே கிடைக்கலையா உனக்கு, இம்ச இம்ச” என்றவன் அவளின் தலைகோத துடித்த விரல்களைக் கட்டுப்படுத்தி வேகமாக வெளியேறினான்.

உடலின் சோர்வு அவளை எழவிடவில்லை விழிகளைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள், இரண்டுமணி நேரம் பொறுத்த பாண்டியம்மா அவளின் அருகில் சென்று மெல்ல அவளைத் தட்டி அழைத்தார்.

“அம்மாடி இங்க பாரு எழுந்துக்கோமா” என்க விழித்துப் பார்த்தவள் அவரைப் பார்த்து மிரண்டுவிட்டாள் ‘யார்’ என்று தெரியாத ஒரு பெண்மணி தன் முன்னில் நிற்கிறார்… அவன் கொண்டுவந்து கிடத்தியதெல்லாம் மறந்துவிட்டது, எங்கிருக்கிறோம் என்ன இடம் என்று விழிக்கத் தொடங்க உள்ளே நுழைந்தான் கதிர்.

“திலோ இப்போ எப்படிம்மா இருக்கு” என்றான் அருகில் நெருங்கி, அவனைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியானது.

“எங்க இருக்கோம்” என்றாள் பாண்டியம்மாவை பார்த்துக்கொண்டே.

“நம்ம வீடுதான் குன்னூர்ல இருக்கோம், இவங்க பாண்டியம்மா இங்க வேலை செய்றாங்க, காலைல ஒரு பிரட் சாப்பிட்டது ஏதாவது கொஞ்சமா சாப்பிடு” என்றான்.

பாண்டியம்மாவின் துணையோடு கொஞ்சம் ரெப்ரெஷ் செய்துகொண்டாள், நன்றாக மசித்த சாதத்தில் ரசம் சேர்த்து பிசைந்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினார், தன்னையே சாப்பிட சொல்லுவார் என்றவள் நினைத்திருக்க அவர் ஊட்டிவிடுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“நானே சாப்பிடுறேன்” என்றவள் கைநீட்ட “சும்மா இரு தம்பி சொல்லிட்டு போயிருக்கு நல்லா பாத்துக்கணும்னு, பாரு எழுந்து ஒக்காரவே தெம்பில்லை எப்படி சாப்பிடுவ நானே ஊட்டுறேன்” என்று பொறுமையாக அவளுக்கு உணவைக் கொடுத்தார்.

‘நல்லா பாத்துக்கணுமாம் எதுக்காம்?” என்று முரண்டியது மனது, பாண்டியம்மாவின் செயல் பாட்டியை நினைவுபடுத்தியது அவரின் மறைவுக்கு பிறகு யாரும் இப்படி ஊட்டி விட்டதில்லை, கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொண்டாள்.

“கொஞ்சம் நேரம் கழிச்சு சூப் வெச்சுதரேன்மா” என்றவர் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

“வாக்கொஞ்சநேரம் வெளில உக்காரலாம் நல்லா இருக்கும்” என்று அழைத்துச்சென்றான் கதிர்.

“தம்பி ரொம்ப நேரம் வெளில இருக்காதீங்க பனி பெய்யும் உடம்பு வேற சரியில்லையே” என்று நினைவுபடுத்தினார் பாண்டியம்மா.

“சரி” என்றவன் அவளை அழைத்துச்சென்றான் தோட்டத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர், அமைதியாகக் கழிந்த சில நொடிகளுக்குப் பிறகு “அண்ணாவை விரும்புரியா திலோ” என்றான் கதிர்.

தூரே விழிகள் பதித்து அமைதியாக அமர்ந்திருந்தாள் திலோத்தமா “அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவரைப் பிடிக்காம போய்டுச்சா திலோ” என்றவன் கேட்க, பெரிதாகக் கேவல் வெடித்தது அவளிடம்.

“வெறுக்க முடியலையேண்ணா” என்றவள் கால்களில் முகம் புதைத்துத் தேம்ப “திலோ அழாதமா இங்க பாரு உனக்கு அவர்மேல் இருக்குற வருத்தத்தைக் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு அவர்கிட்ட நீயே பேசிப்பாரு” என்க.

மெல்ல மெல்ல அழுகை மட்டுப்பட்டது முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் திலோ.

“அவர் சொல்ற விஷயத்தை உன்னால ஏத்துக்க முடியாம கூடப் போகலாம், பரவாயில்ல ஒருதடவை பேசிப் பாரு” என்றான் மீண்டும், அவள் விழிகள் தூரே தெரிந்த மலை முகட்டில் பதிந்தது.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!