Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 13.2

அவனுக்கு வாழ்த்து கூறி விலக பார்க்க அவளை கடந்த சில மாத காலங்களாக பார்க்க முடியாததால் காரணத்தை கேட்டு நின்றான். ஏதோ காரணம் கூறி தப்பித்து வந்தால் இவனோ அப்படி ஒன்று நடந்ததையே பார்க்காதது போல் இருந்தான்.

“உன் மொபைல்ல நான் சொல்ற டிஷ்க்கு ரெசிபி பாரு” என்றான் சில தூரம் சென்று.

தன்னுடைய கைபேசியை எடுத்து காட்டி, “இதுல பாக்க முடியாதே சார்” தன்னுடைய கைபேசியை எண்ணி சிறிதும் வருத்தப்படாமல் கேலியோடு அவனிடம் காட்டினாள்.

“இத மொத மாத்து நீ”



Advertisement

“காசு நீங்க தருவீங்களா?”

தன்னுடைய கைபேசியை அவளிடம் கடவுச்சொல்லை நீக்கி கொடுத்தவன், “யூட்யூப்ல Orange Saffron Chicken with Almond Rice போட்டு அதுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வீட்டுல இருக்கானு பாரு”

“சாப்பிடலையா நீங்க?” உடனே இந்த கேள்வி தான் பெண்ணிடமிருந்து வந்தது.

Advertisement

அவளை திரும்பி பார்த்தவன் உதட்டை பிதுக்கினான், “நீ செஞ்சு வச்சிட்டு போன சாப்பாடு கெட்டு போன மாதிரி இருந்துச்சு”

Advertisement

தலையில் அடித்துக்கொண்டாள், “சாரி சார் ஹாட் பாக்ஸ்ல வக்கனும்ன நினைச்சேன் மறந்துட்டேன்”

“ம்ம்ம் அதுக்கு பதிலா இதை செஞ்சு குடு” என்றான் ஒரு சூப்பர்மார்கெட் முன்பு வாகனத்தை நிறுத்தி.

வீட்டில் இல்லாதவற்றை குறித்து அவள் கீழே இறங்க அவளோடு அர்ஜுனும் வந்தான்.

Advertisement

சமையலுக்கு தேவையானவற்றை வாங்கியவளிடம், “வேற வேணும்னாலும் வாங்கிக்கோ”

அவள் தேவைக்கு அவன் கூற, பெண்ணவள் வீட்டிற்கு தேவையானவை மட்டும் வாங்கினாள். அதை கவனித்தவனும் அதிகம் வற்புறுத்தவில்லை. அனைத்திற்கும் தானே பணம் செலுத்தி அழைத்து வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் இலக்கியா உடை மாற்றி வர அவளுக்கு முன்பு இவன் சமயலறையில் இருந்தான்.

“ஏதாவது வேணுமா சார்?” தன்னுடைய நீண்ட கூந்தலை கொண்டையிட்டவாறே இவள் வந்து நிற்க, அந்த சிகப்பு நிற புடவையில் தன்னை கடந்து சென்று தனக்கு முன்பு நின்றவள் இடையில் இவன் கண் தவறாமல் பதிந்தது.

“வீட்டுல இருக்குறப்போ ஏன் சாரீ? வேற போடலாம்ல?” திருமணம் முடிந்தாலும் மனைவியை திருட்டுத்தனமாக ரசிப்பது அவனுக்கு புது அனுபவமாக, சில்லென்று தான் இருந்தது.

“இது தான் சார் எனக்கு வசதியா இருக்கும்” என்றவள் வாங்கி வந்த பொருட்களை வெளியே எடுத்து வைக்க, “என்ன என்ன கட் பண்ணனும் சொல்லு நான் பண்றேன்”

“இல்ல நானே பண்ணிடுவேன்”

அர்ஜுன், “ஏன் எனக்கு கட் பண்ண கூட தெரியாதுன்னு நினைக்கிறியா?”

இலக்கியா பொருட்களை அதன் அதன் இடத்தில அடுக்கி வைத்தே சிரித்துக்கொண்டாள், “உங்களோட ஸ்கில்ஸ் பத்தி அன்னைக்கு நைட் நீங்க காபி போட்டத்தை வச்சே தெரிஞ்சுக்குட்டேன்”

“ஹலோ அது ஏதோ பசில பண்ணது. அதே மாதிரி எல்லா நேரமும் இருக்காதுல” அவளை கடந்து இருந்த கத்தியை எடுத்து ஆரஞ்சை நறுக்க துவங்கினான்.

“எல்லாத்தையும் கட் பண்ணாதீங்க. ஜெஸ்ட் (jest) எடுக்குறதுக்கு ஒரு பழம் கட் பண்ணாம வைங்க” சரி என்றவன் சாற்றை பிழிந்து எடுத்தான்.

இலக்கியா பாதாம் சாதம் செய்ய சாதத்தை கழுவி கொதிக்கும் நீரில் போட இவன் பூண்டை எடுத்தான். அதில் இரண்டு உரிக்கும் முன்பே மூன்று முறை கையை கழுவிவிட்டான்.

“நான் க்ளவ்ஸ் போட்டுட்டு வரவா இப்டி பிசுபிசுன்னு இருக்கு”

“இது உங்க ஆபரேஷன் தியேட்டர் இல்ல சார், அதை வைங்க நானே கட் பண்றேன்” என்றாள். அதை உரிக்கவும் சரியாக வராததால் அவளிடமே கொடுத்துவிட்டான்.

“கார்லிக் கொஞ்சம் அதிகமா போடலாமா?” அவனுக்கு எனோ இந்த பூண்டின் சுவை அதிகம் பிடிக்கிறது.

“ம்ம், போடுறேன்” என்றாள்.

“இல்ல போடுறேன். இன்னைக்கு நான் சமைக்க போறேன்” என்றான் டீ-ஷர்ட்டை அவிழ்க்கும் முயற்சியோடு.

நல்லவேளை உள்ளே ஒரு வெள்ளை பனியன் அணிந்திருந்தான். அவனை அரண்ட விழிகளோடு பார்த்தவளுக்கு அதன் பிறகு தான் மூச்சே வந்தது.

“இல்ல பசிக்கும் உங்களுக்கு நான் வேகமா பண்ணிடுவேன்”

“இந்த பேச்சுக்கே இங்க இடமில்லை. வா இப்டி” அவள் தோளை பிடித்து லாவகரமாக ஓரம் நிறுத்தி வைத்தான், “எப்படி செய்யணும் மட்டும் சொல்லு”

கடாயை எடுத்து கைகளில் இரண்டு சுற்று சுற்றி அடுப்பில் அவளை பார்த்துக்கொண்டே வைத்தவன் புருவத்தை உயர்த்தி, ‘எப்படி?’ என கேட்க உதட்டை சுளித்து முகத்தை திரும்பினாள்.

“ஸ்டைல்ல மயங்கல?”

“பிரிட்ஜ்ல ஊற வச்சிருக்க சிக்கன்ன எடுத்து ப்பிரை பண்ணுங்க” அவன் கேட்ட கேள்வியை முற்றிலும் நிராகரித்து மற்றொரு அடுப்பில் வெந்த சாப்பாட்டை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றினாள்.

அந்நேரம் அர்ஜுனுக்கு அழைப்பு வர எடுத்தவன் இருவருக்கும் இடையே வைத்து ஸ்பீக்கரில் போட்டான்.

“சொல்லுங்க ம்மா. வீட்டுக்கு வந்தாச்சா?”

“நாங்கல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீ எங்க இருக்க?”

அர்ஜுன், “வீட்டுல ம்மா. என்ன சொல்லுங்க?”

வரதராஜன், “நாங்க சொல்றது இருக்கட்டும். நீ சொல்லுடா. எதுக்கு மருமகளை ஹாஸ்பிடல்ல வச்சு மிரட்டுன?”

இவர்களை போல அவர்களும் அழைப்பை ஸ்பீக்கரில் தான் போட்டுள்ளார் போல.

 ‘உங்க பையன் அங்க மட்டுமா மிரட்டுறார். எங்கயும் எப்பவும் மிரட்டல் தான்’ இலக்கியா மானசீகமாக கணவனை போட்டுக்கொடுத்தாள்.

“ஆரம்பத்துல ஏதோ அப்டி இப்டினு கோவமா இருந்துட்டேன். அதுக்குன்னு எப்பவும் நான் தான் வில்லனா இருக்கணுமா?”

வரதராஜன், “உன்ன தவற இந்த வீட்டுல வில்லத்தனம் யாருக்கும் வராதுடா”

இலக்கியா மெல்ல சிரிக்க அவளை முறைத்தவன், “ம்ம் அப்டியே நினைச்சிட்டு இருங்க. நீங்க சப்போர்ட் பண்ற உங்க மருமக இன்னைக்கு மதியம் எனக்கு சாப்பாடே போடல” தந்தையிடம் முறையிட்டான் மனைவியை பொய் கோவத்தோடு முறைத்து.

அவரோ, “உனக்கு அந்த பொண்ணு என்ன சமைச்சு போடவா வந்திருக்கு? இத்தனை நாள் நீயா தானடா சாப்பிட்ட? மாடு மாதிரி வளந்துட்டு வீட்டுக்கு வந்த புள்ளைய குறை வேற சொல்ற”

மகனுக்கு கொஞ்சமும் அவர் துணைக்கு வரவில்லை. அன்னை பாசத்தை பிடிக்க முயன்றான், “ம்மா. நீங்களே சொல்லுங்க. அவளுக்கு மட்டும் சூடா ஹாட் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்துட்டு போய்ட்டா. எனக்கு கெட்டு போச்சு. சரி வெளிய போய் சாப்டுட்டு வர்றேன்னு சொல்றேன் அவளையும் கூட்டிட்டு போகணும்னு ஒரே அடம். அதுக்கு தான் ஹாஸ்பிடல் வந்தேன்”

பானு அமைதியாக இருப்பது அவரும் அவன் பேச்சை நம்பிவிட்டார் என்பது போல் தான் இருந்தது.

“வந்ததும் பசிக்கிதுன்னு சொல்றேன், மீட்டிங் முடிச்சிட்டு தான் வருவேன்னு நிக்கிறா. அப்பவும் நான் பொறுமையா தான் பேசுனேன், என் பாடி லாங்வேஜ் உங்களுக்கு ஹார்ஷா தெரிஞ்சிருக்கும்” என்றான் சமத்து பிள்ளையாக.

“அத்தை நான்…” கணவனை போல் அவள் அன்னையும் அவளை பேசவிடவில்லை, “அடடே இலக்கியா நீயும் இங்க தான் இருக்கியா?”

“ஆமா அத்தை”

அர்ஜுன், “இப்ப சொல்லுங்க இதுக்கா உங்க மருமகளுக்கு இவ்ளோ சப்போர்ட்”

பானு, “தப்பில்லையே இப்பவும் என் மருமக மேல. பாதிலயே அவ எந்திரிச்சு போகுறதை பாத்து எல்லாரும் இதே பண்ணினா என்ன பண்றதுனு யோசிச்சிருப்பா என்ன ம்மா?”

மகனிடம் மருமகளுக்கு அவர் பரிந்து பேச இப்பொழுது இதற்கு என்ன கூறுவது என தெரியாமல் விழித்தாள் இலக்கியா. ஒப்புக்கொண்டால் இவன் கூறியது உண்மையென ஆகிடும். பதில் பேசாமலும் இருக்க முடியாது.

“சார்…” கெஞ்சலோடு கணவனை பெண்ணவள் பார்க்க, “கேட்டிங்களா? அது ரீசன் இல்லயாம். வேணும்னே தான் வரலயாம்” அவள் ஒற்றை வார்த்தைக்கு இவன் ஒரு வாக்யத்தையே உருவாக்கி பேசி முடித்திருந்தான்.

பதறிப்போனாள், “நிஜமா இல்ல அத்தை அவர் ஏதோ சும்மா…”

வரதராஜன், “இலக்கியா எதுக்கு பயப்பிடனும். அவன் பன்னதுக்கெல்லாம் இதுக்கும் மேல அவனை பழி வாங்கலாம்” தளர்ந்த உடலோடு கணவனை பாவமாக பார்த்தாள் இலக்கியா.

தோள்களை மெல்ல குலுக்கி சிரித்தவன், “சரி நான் வைக்கிறேன். நாங்க குக் பண்ணிட்டு இருக்கோம்” குறும்பு கூத்தாடியது மருத்துவனுக்கு.

அவள் முறைப்பதை உணர்ந்தவன், “வா வா அம்மா அப்பா எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. பயம் இல்லாம அடுத்து என்ன பண்ணனும் சொல்லு”

சில நொடிகள் அவனிடம் சமையல் அறிவுரைகளை கூறிய பொழுது, அவன் பெற்றோரிடம் பேசிய பொழுது அவனது தேக கட்டுகள் அவளையும் அறியாமல் பதிந்து போனது.

முகத்தை திருப்பி வேறு வேலையை பார்த்துக்கொண்டிருந்தவள் உடலே குப்பென சிவந்திருந்தது.

பின்னணி இசை போல சிக்கன் வறுப்பட்டு எண்ணெய் கொதிக்கும் சத்தம் கேட்க, அதற்க்கு பாடல் போல் அர்ஜுனின் மெல்லிய விசில் சத்தம்.

உல்லாச மனநிலையில் அவனிருக்க, அடுப்பை அணைத்த பிறகும் இலக்கியாவிற்கு வெப்பம் உடலை தீண்டியது.

அவன் செய்யும் உணவினை அழகுபடுத்த கொத்தமல்லி இலையை மீண்டும் மீண்டும் கொலை செய்துகொண்டிருந்தாள்.

அவள் முகமே சிவப்பேறியிருக்க, ‘கான்சண்ட்ரேட் கான்சண்ட்ரேட்’ சொல்லிக்கொண்டாலும் அவனின் பிம்பம் கண் முன்னே வந்து ஆடியது.

அப்பிம்பமே அவளது மூச்சுக்காற்றை தொண்டைக்குழியில் நிறுத்திவைக்க, இதயத்தின் துடிப்பு ஆமை வேகத்தில் ஊர்ந்தது போல் வேகத்தை குறைத்தது.

தலையை குனிந்து வதைத்த மல்லியை ஒரு கிண்ணத்தில் வைத்தவள் கீழ் அதரங்களை கடித்து விடுவித்து கொஞ்சம் தலையை தூக்கி மீண்டும் அவனை பார்த்த்தாள். ஏனோ சட்டென காற்று கூட கனமானது.

முழு உடலை காட்டி அவன் நிற்கவில்லை, உள் பனியன் அணிந்திருக்கிறான் தான். அதிலும் காதல் கொண்டவள் மனம் தடுமாறி ரசிக்க தான் செய்றது.

எளிதாக திருப்பிவிடும் கோழியை உடைத்துவிடாமல் சிரமப்பட்டு திரும்புகிறேன் என அவன் எடுக்கும் முயற்சியில் கைகளின் தசை முறுக்கி, கழுத்து நரம்புகள் புடைக்க… அப்பப்பா மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

கடலென பொங்கி எழும் உணர்வுகளை திட்டி அடக்கி தன்னை அவனின் சிறு அசைவு கூட பாதிக்கிறதென காட்ட விடாமல் சிரமப்பட்டுப்போனாள்.

“திருப்பிடவா பாரு” அவன் பேசும் வார்த்தை காதில் விழவில்லை, “ம்ம்” என்றுவிட்டாள்.

அவனும் அதனை திருப்பி போட்ட வேகத்தில் கொதிக்கும் எண்ணையானது அவள் மேல் தாராளமாகவே தெரிந்துவிட சட்டென உண்டான வலியில் அவனின் பித்திலிருந்து வெளி வந்து துடித்துப்போனாள் பெண்.

கைகளை உதறி அவள் துடித்ததில் காயம்படாத அவள் மணிக்கட்டை பிடித்து உடனே கையை குழாய் தண்ணீரில் காட்டினான்.

“சாரி சாரி இலக்கியா. தெரியாம. கவனிக்கல”

“பரவால்லங்க”

“இல்ல நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். ரொம்ப வலிக்கிதா?” வலிக்க தான் செய்கிறது, அதற்காக தெரியாமல் செய்தவனிடம் உண்மையை கூறி அவன் வாட்டத்தை பார்க்க விரும்பவில்லை அவள்.

“இல்லங்க”

“சரி கைய எடுக்காத, டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணு” அவசரமாக சென்று வந்தவன் அவள் கை பிடித்து ஆயிண்ட்மென்ட் போட்டுவிட்டான்.

“உண்மைய சொல்லுடி  வலி இல்ல தான? ஆழமா இருந்தா ஒரு இன்ஜெக்ஷன் போட்டுடலாம்”

“டாக்டர் சார்… சின்ன காயம் தான். கொஞ்ச நேரத்துல சரியாகிடும். உங்க வேலைய பாருங்க, சிக்கன் கருகிட போகுது”

“சரி நீ போய் ரெஸ்ட் எடு”

“ஏன் பெட் ரெஸ்ட் எடுக்குறேனே. சமைக்கிறவங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்”

அவள் கைகள் அங்கு அர்ஜுன் செய்து வைத்திருந்த குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தது. வறுத்த கோழிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தவன் கண்கள் தூரத்தில் சிந்தியிருந்த உணவு பண்டங்களை குனிந்து துடைக்கும் இலக்கியாவின் இடுப்பில் பதிய, “என்ன இது?” கண்கள் பார்த்ததை கைகள் தொட்டது.

அவனது அச்செயலில் நடுங்கி அர்ஜுன் கையை தட்டிவிட்டாள், “என்ன பண்றீங்க?”

“அங்க ஆயில் பட்டருக்கும்னு நினைக்கிறன்”

“அதெல்லாம் ஒன்னுமில்ல, அது வேற ஏதோவா இருக்கும்”

“இல்ல கண்டிப்பா அது காயம் தான்”

“என்…என்னமோ பாத்தா மாதிரி சொல்றிங்க” கேட்டவள் குரல் நடுங்கியது அவனின் தொடுகையை நினைத்து.

“ஆமா பாத்தேன் போதுமா?” என்றான் அவனும் குரல் குறைத்து.

‘என்னது பாத்தாறா?’ “சார்…” என்றவள் கைகள் புடவையை வைத்து இடையை மறைக்க பார்க்க, வேகமாக அவள் கையை பிடித்து, “எதுக்குடி மறைக்கிற. விடு கவர் பண்ணாத”

“இல்ல அது எண்ணெய் பட்ட காயம் இல்ல”

அவளை அப்படியே இடையோடு கை வைத்து தள்ளி வந்தவன் தண்ணீர் குழாயை திறந்து தண்ணீர் பிடித்து மெல்ல அவள் காயத்தில் ஒற்ற வர, “சார்…”

“என்ன சார் இப்ப உனக்கு பிரச்சனை? இது காயம் இல்லனு சொல்ல போறியா? கொஞ்ச நேரம் முன்னாடி நான் பாத்தேன்டி எனக்கு தெரியாதா?” மீண்டும் தண்ணீரை பிடித்தவன் ஈர விரலை அவளிடம் எடுத்து வர உடல் நடுங்கியது.

தன்னை போல் அவள் உடலை திருப்பிக்கொள்ள, மனைவியை முறைத்தவாறே மற்றொரு கையை வைத்து அவளின் இடையை வளைத்து பிடித்தான்.

“ஆடாம நில்லுடி. உன்ன சமாளிக்கிறது சின்ன புள்ளைய விட மோசமா இருக்கு”

அவனது ஈர விரல்கள் மெதுவாய் மிக மெதுவாய் அவளது காயத்தில் உரச அப்பட்டமாக நடுங்கினாள் இலக்கியா. அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் அவள் அறியாமல் சிரித்தபடியே களிம்பு போட்டு விட்டு தான் நிமிர்ந்தான்.

அவன் அவளை உரசும் நெருக்கத்தில் எழுந்து நிற்க அவ்வளவு தான். சிஸ்டம் ஹாங் ஆவது போல் மொத்தமும் செயலற்று அப்படியே நின்றுவிட்டாள்.

அவன் தொடுகை, கேள்வி இதை எல்லாம் விட இதோ அவள் நாசி அவன் முடியடர்ந்த மார்பினில் உரசிவிடும் அருகே. எப்படி தான் பேச்சு வரும் அவளுக்கும்.

அவளது உறைந்த நிலையில் சிரித்துக்கொண்டவன் அவள் முன்பு கையை விசிறி மனைவியை நடப்பிற்கு கொண்டுவர வேகமாக இடையை மறைக்கும் முயற்சியாக புடவையை சரி செய்தாள்.

அவனோ அவளை முறைத்துவிட்டு, “மறைக்காதடி. காத்தோட்டமா இருக்கட்டும்”

அவனே அவள் புடவையினை கொசுவத்தின் உள்ளே அவள் இழுத்துவிட்ட புடவையை திணிக்க, தன் வயிற்றினை உரசும் அவன் விரல்களின் சூட்டில் கண் மூடி வயிற்றை உள் இழுத்துக்கொண்டாள்.

இச்செயல் அர்ஜுனுக்கு அருகே அவன் மனைவியை இன்னும் அருகே இழுத்திருந்தது, “இதுவரை ஹக், கிஸ் எதுவும் பண்ணதில்லையா?” உல்லாச மனநிலையோடு அவள் உச்சி வகுட்டில் மூக்குரச கேட்டான்.

“ஹா?” இதயத்தின் திறனை சோதிக்கும் செயலாய் அதன் வேகம் ஏறி இறங்க ஏதோ ஒரு மனநிலையில் மயங்கி நின்றவள் சிரம் உயர்த்தி அவனை பார்த்தாள்.

அவன் மூக்கின் நுனியில் அவள் வீட்டிற்கு வந்ததும் நெற்றியிலிட்ட குங்குமம் தென்பட உடலை சற்று பின்நகர்த்தி பார்த்தாள். இப்பொழுது தான் அவன் கேள்வி நினைவில் தீண்ட தலை தாழ்த்தினாள்.

பெருமூச்சோடு, “எனக்கு குடுத்துவச்சது இது தான். இதுலயும் நீ மக்கு தானா?”

சோகமாக அவன் கூற இத்தனை நேரமிருந்த இன்பமெல்லாம் பறிபோனது. வெட்கத்தில் சிவந்திருந்தவள் உடல் ரத்தம் வடிந்தது போல் வெளிறிப்போனது.

சில மணி நேரங்களுக்கு முன்பு அவள் சந்தித்து பேசிய ஆண் பற்றிய தகவல் கூட அவன் கேட்காதது அவன் தன் மேல் வைத்துள்ள நம்பிக்கை என இவள் நினைத்திருக்க அது இல்லை உன் மேல் எனக்கு சிறிதும் விருப்பமே இல்லை என காட்டியிருந்தான்.

அவள் என வந்துவிட்டால் எதிலும் அவனுக்கு வரும் அவன் சலிப்பு, அவனின் நெருக்கம் கூட அவனின் ஆசையாய் தான் தோன்றியது.

இந்த ஒரு மாதம் அவன் காட்டும் அக்கறை, நெருக்கம் எல்லாம் எதற்கென யோசித்து பார்க்கும் பொழுது காரணம் தானாய் முன்னே வந்து நின்றது.

அன்று ஏதோ மனதில் பட்டத்தை மறைக்காமல் தற்கொலை செய்யும் எண்ணம் வருவதாய் கூறியதிலிருந்து தான் இந்த மாற்றம்.

“வா சாப்பிடலாம்” அவள் தோள் தட்டி அவன் அழைக்க, “எனக்கு பசிக்கல” பதில் கொடுத்து அவனை பாராமல் மேலே சென்றுவிட்டாள் மனமெல்லாம் ரணமாக.

How is the chapter? Comment plz makkale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!