Skip to content
Post Views: 4,125
கோலாகலமாக துவங்கிய விழாவில் அர்ஜுன் வீட்டினர் பரபரப்போடு சுற்றி வந்தனர். ஆனால் உள்ளுக்குள் பெரிய மன வருத்தம் ஒவ்வொருவரின் மனதில்.
தாங்கள் அனைவரும் மிடுக்காக மேடையில் அமர்ந்திருக்க, தங்களுக்கு பிறகு இவ்விடத்தையே ஆட்சி செய்ய போகும் வீட்டின் மூத்த மருமகள் யாரோ போல் ஊழியர்களுடன் அமர்ந்து விழாவை காண்பது பெரும் நெருடலாக இருந்தது.
அதற்கான கோவம் மொத்தமும் அர்ஜுன் பக்கமே சென்றது. அவனோ எதையும் பொருட்டாக எடுக்காமல் கீழே முதல் வரிசையில் அமர்ந்து அவனுடைய தாத்தா பேசுவதை கர்மசிரத்தையாக கேட்டுக்கொண்டிருந்தான்.
அருகிலே வருண், தர்ஷன் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டான். ஐம்பதாவது ஆண்டு விழாவோடு, தன்னுடைய பொறுப்புகளை எல்லாம் வரதராஜனிடம் ஒப்படைத்து மகனுக்கே அந்த அரங்கில் அதிர்ச்சியை கொடுத்திருந்தார் ராமகிருஷ்ணன்.
Advertisement
உடனே அதற்கான வேலைகள் தொய்வில்லாமல் நிகழ அனைத்திற்கும் கீழிருந்து செய்த மகனை பார்த்தார் வரதராஜன், ‘உனக்கும் தெரியுமா?’ என்கிற பார்வையோடு.
அவன் சிறு சிரிப்போடு தலை அசைக்க வேறு வழியில்லாமல் இவரே முன் வந்து பேசினார். அவருக்கு இந்த பொறுப்பை இருக்கும் எண்ணமே இல்லை. அர்ஜுனிடம் தான் ஒப்படைக்க ஆசை, இடையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது மகனின் சிரித்த முகமே கூறியது.
“எனக்கு இவ்ளோ பெரிய சர்ப்ரைஸ் வரும்னு யோசிச்சு கூட பாக்கல. என்ன நம்பி இந்த பெரிய பொறுப்பை குடுத்துக்கு கண்டிப்பா நான் ஜஸ்டிபிகேஷன் குடுப்பேன். என்ன பேசுறது தெரியல” என்றவர் தந்தையிடம் திரும்பி,
Advertisement
“முன்னாடியே சொல்லிருந்தா ரெண்டு லைன் யோசிச்சு எழுதிட்டு வந்துருப்பேன். இப்ப பாருங்க முழிச்சிட்டு இருக்கேன்” தந்தையிடம் விளையாட்டாக கேட்க அரங்கில் மெல்லிய சிரிப்பு சத்தம்.
Advertisement
“ஒவ்வொரு ஸ்டாப் மெம்பர்ஸ், கிளீனிங் ஸ்டாப்ஸ், மேனேஜ்மென்ட் டீம் உங்க எல்லாரோட அங்கீகாரம் இப்போ இருக்குற மாதிரி தொடர்ந்து கிடைக்கும்.
ஹாஸ்பிடலோட நார்ம்ஸ், பாரம்பர்யம் எதுவுமே கெட்டுப்போகாம இருக்க உங்களோட ஒத்துழைப்ப எதிர் பார்க்கிறேன்.
மூவிங் பார்வர்ட், ஹாஸ்பிடல்ல அட்வான்ஸ்ட் டெக்னாலஜிஸ் உங்கள சீக்கிரம் வந்து சேர என்னால முடிஞ்சா எல்லா வேலையும் நான் செய்வேன். கடைசியா ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். முக்கியமா என்னோட குடும்பத்துக்கு. என்னோட கான்ஸ்டன்ட் சப்போர்ட் சிஸ்டம் அவங்க தான். ரொம்ப தேங்க்ஸ்”
Advertisement
பின் திரும்பி மேடையில் அமர்ந்திருந்த குடும்பத்தை பார்த்தவர், பிறகு கீழ் அமர்ந்திருந்த ஆண்களை பார்த்து மறக்காமல் கூட்டத்தினுள் அமர்ந்திருக்கும் மருமகளையும் பார்த்து மெல்ல சிரிக்க, அதை பெற்றுக்கொண்டதாய் தானும் மெல்லிய புன்னகை சிந்தி பலமாக கரதோஷம் கொடுத்தாள் மருத்துவனின் மனைவி.
அடுத்து அடுத்து நிகழ்வுகள் வரிசையாக நடக்க ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
அதில் இலக்கியாவே எதிர்பாராத விதமாக நோயாளிகளின் தோழி என்னும் விருது அவளுக்கு வழங்குபடுவதாக கூற வீட்டினர் அனைவருக்கும் கூட அதிர்ச்சி தான்.
துறை சார்ந்த விருதுகள் அனைத்தும் மருத்துவர்களோடு, அல்லது நிர்வாகத்தினரோடு ஆலோசித்து வழங்கியிருக்க, செவிலியர்களுக்கான சில விருதுகள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளிடம் அபிப்ராயம் கேட்டே தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில் இலக்கியாவிற்கு வழங்கப்பட்ட விருதும் ஒன்றாகி போனது. இவள் பெயரை கேட்கவும் வேகமாக எழுந்து சென்ற வருண் வர்ணனையாளரிடம், “சுந்தர்ராஜன் சார் நிறையா கிபிட்ஸ் கொடுத்துட்டாங்க, அர்ஜுனை வர சொல்லிடுங்க” என்றான்.
அவ்வாறே அர்ஜுனும் வர கணவன் கையாலே விருதை பெரிய புன்னகையோடு வாங்கினாள்.
“ம்ம்ஹ்ம் சும்மா ஹாண்ட்ஷேக் பண்ணிக்கலாம்” மெதுவாக அவர்களுக்கு பின்னிருந்த சுந்தர்ராஜன் குரலை செருமி கூற, வீட்டினரின் அளப்பறையில் தன்னையும் மீறி அர்ஜுனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவர் கூறியதை செய்யாமல், “வீட்டுக்கு வந்து குடுக்குறேன்” விஷமமாக கூற விட்டால் போதுமென அவனை விட்டு அகன்றவள் மறக்காமல் ராதாவிற்கு வணக்கம் வைக்க, அவளை விட மனமில்லாமல் பிடித்துக்கொண்டார்.
“அம்மாடி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க” அவளின் சிரித்த முகம் அவளுக்கு இன்னும் அழகை கொடுத்தது அவர் கண்களுக்கு.
“அவர் எடுத்து குடுத்த புடவை தான் பாட்டி” நேராக நின்று அர்ஜுனை காட்டினாள் அத்தனை மகிழ்ச்சியாக.
இளஞ்சிவப்பு டிசைனர் புடவை. இதனை மனைவியை அழைத்து சென்று தான் வாங்கி வந்தான், தனக்கு தெரிந்த ஒரு ஆடை வடிவமைப்பு கடைக்கு. காட்சியறையில் வைத்து இலக்கியாவுக்கு மேலோட்டமாக அணிவித்த பொழுது மடிப்பு வைக்காமல் உடுத்தியிருந்தனர்.
அர்ஜுன் முன்பு அப்படியே வந்து நிற்க அவளுக்கு அத்தனை சங்கடம். உடலின் வளைவுகளை காட்டி அவன் முன்பு நிற்க வேண்டுமா என இவள் தயங்கி உடை மாற்றும் அறையிலே நிற்க, அங்கு வேலை செய்யும் பெண், “உள்ள போய் பாக்குறதா இருந்தா பாருங்க சார்”
இவனும் சென்று பார்க்க அசந்து தான் போனான் மருத்துவன். பெண்ணவளுக்கு தான் சங்கட்டமாக இருந்தது. புடவையை இப்படியும் அப்படியும் சரி செய்ய முன்றும் முடியாமல் போனது தான் மிச்சம்.
“உனக்கு ஓகேவா இலக்கியா?” பார்வையை அகற்றாமல் அவள் முகம் பார்த்து அவன் கேட்க மெல்ல மெல்ல சிவக்க துவங்கியது அவள் முகம்.
“வேற பாக்கலாமா?” தயங்கி தயங்கியே கேட்டாள்.
“சிங்கள் ப்ளீட் வைக்காம நார்மலா கட்டி பாரு”
“இல்ல கண்ணாடியா இருக்கே…”
“அவ்ளோ மோசம் இல்ல இலக்கியா. இதோட ப்ளௌஸ் போட்டு போட்டா சரியா இருக்கும். மல்டிபிள் ப்ளீட்ஸ் வச்சுக்கோ. இதையே வாங்கிக்கலாம்” ஆசையாக அவன் கேட்க மறுக்க முடியாமல் சரி என்க அர்ஜுன் முகம் இன்னும் விரிந்தது.
“வெளிய வெயிட் பண்றேன்” அர்ஜுன் நகர, கதவினை அடைக்க போனவளை தடுத்து உள்ளே வந்தவன் வேகமாக மனைவியின் கழுத்தை பிடித்து கன்னத்தில் இதழ் ஒற்றினான்.
விழி விரிய அவனது செயலை கிரகிக்க முடியாமல் தடுமாற, “வீட்டுல சிங்கள் ப்ளீட் தான்”
அவளது உடல் சூட்டை ரசித்தவாறே விழியோடு விழி கலந்தவன் மற்றுமொரு கன்னத்தில் நிதானமாக மீசை குறுகுறுக்க இரண்டு மூன்று முத்தங்களை கொடுத்தே வெளியில் சென்றான். அன்றைய நினைவில் இப்பொழுதும் பெண்ணவள் கன்னமெல்லாம் சிவந்து போனது.
“ம்ம் முக்கால்வாசி என் பேரன் விழுந்துட்டான்” கேலியாக அவர் சிரிக்க தான் கிளம்புவதாக நின்றாள்.
ஒரு பக்கம் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க இவர்கள் மேடையின் ஓரத்தில் நின்று பேசியது பெரிதாக எவர் கண்ணுக்கும் உறுத்தவில்லை.
“நானும் அவரும் இப்போ ஒரு கல்யாணத்துக்கு போகணும் இலக்கியா. உன்கிட்ட கால் பண்ணி சொல்லிட்டு போகலாம்னு நினைச்சேன், நீயே வந்துட்ட”
“ஓ சரிங்க பாட்டி, நான் வெளிய கார்கிட்ட நிக்கிறேன் வாங்க”
“வேணாம் இலக்கியா, நீ இங்க இரு”
“இல்ல பாட்டி நான் உங்களுக்கு கமர்கட்டு எடுத்துட்டு வந்தேன், அப்பா குடுத்து விட்டாங்க”
“அப்டியா?” முகம் எல்லாம் பல்லாக அவர் கேட்க, அவரின் சிரிப்பில் தானும் சிரித்தவள் தலை அசைத்து, “அவங்க ரூம்ல தான் வச்சிருந்தேன்”
“என்ன வச்சிருக்கம்மா? வா இலக்கியா வெளிய நடந்துட்டே பேசலாம்” தேவையில்லாமல் எவருடைய பார்வையும் தங்கள் மேல் படவேண்டாம் என இருவரையும் வெளிய அழைத்து சென்றிருந்தார் ராமகிருஷ்ணன்.
“பாட்டிக்கு கமர்கட்டு கொண்டு வந்தேன் தாத்தா அதை தான் சொன்னேன்”
“உன் பாட்டிக்கு புடிச்சது எல்லாம் வருது, எனக்கு மோர் மிளகாய், கத்திரி வத்தல் புடிக்கும்னு சொன்னேன், அது இன்னும் வரல” என்றார் குற்றமாய்.
“அதெல்லாம் மறக்கல தாத்தா, நம்ம வீட்டுக்கு வந்து நானே செஞ்சு தரேன், எதுக்கு வெளிய வாங்கிட்டு? இங்க செய்ய வசதியில்லை”
“சரிம்மா, சும்மா சொன்னேன். உன்ன பத்தி…”
“சார்” இவர்களுக்கு பின்னே குரல் கேட்க மூவரும் பேச்சை அப்படியே நிறுத்தி திரும்பினர்.
“ஹாய் சார்” என்றார் அந்த நடுத்தர வயதுடைய மனிதர்.
“வா வா திருமுகம். என்ன இவ்ளோ நேரம் ஆள பாக்க முடியல” ராமகிருஷ்ணன் அவருக்கு கை குலுக்கி அவர் தோளில் தட்டினார்.
“பாட்டி நான் எடுத்துட்டு வர்றேன்” ராதாவிடம் மெல்ல கூறி மருத்துவமனை கட்டிடம் நோக்கி சென்றாள்.
“வீட்டுல வீட்டம்மா பையன பாக்க சிங்கப்பூர் போய்ட்டாங்க. நான் அசதில தூங்கிட்டேன், நேரத்தை கவனிக்கல”
“நல்லா தூங்குன போ. ராதா இது திருமுகம். நம்ம ஹாஸ்பிடல்ல கிளீனிங் இவங்க கம்பெனில தான் ஒப்படைச்சிருக்கோம்”
திருமுகம் ராதாவை கை கூப்பி வணங்கி, “வணக்கம் ம்மா” என்றார்.
ராதா, “எத்தனை வருசமா இங்க பண்றீங்க?”
திருமுகம், “ரெண்டு வருஷம் ஆச்சும்மா” அந்நேரம் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு வர, உடனே செல்லும் அவசரம், “இலக்கியா” ராதா தயங்கினார்.
“நான் சொல்லிக்கிறேன் ம்மா” என்றார் திருமுகம் அவரே முன்வந்து.
“சரி ப்பா, ஒரு அவசரம், சொல்லிடு” இருவரும் அவ்விடம் விட்டு அகலவும் ராதா பேத்திக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்க்கவில்லை.
“விடு திருமுகம் சொல்லிடுவான்” என்றுவிட்டார் ராமகிருஷ்ணன்.
அங்கு இனிப்பை எடுத்து வந்த இலக்கியா அர்ஜுனின் அலுவலகம் இருந்த தளத்தின் இறுதியை எட்டியிருந்த நேரம் மற்றொரு முனையில் இருந்த திருமுகம், “இலக்கியா” என குரல் கொடுத்தார்.
அதில் நின்று அவரை திரும்பி பார்த்த இலக்கியாவிடம், “ராமகிருஷ்ணன் சார் அவசரம்னு கெளம்பிட்டார். உன்கிட்ட சொல்ல சொன்னார்”
“ஓ சரிங்க சார். தேங்க்ஸ்” மீண்டும் இவள் படிவழியே மாடி ஏறி அர்ஜுனின் அறைக்குள் அதனை வைக்க செல்ல, “எங்க போற இலக்கியா?” மீண்டும் அந்த மனிதரே வந்து நின்றார்.
ஒருவேளை அர்ஜுன் அறைக்குள் தான் செல்வதில் சந்தேகப்பட்டு பேசுகிறாரே என்றெண்ணியவள், “அர்ஜுன் சார் ரூம்ல வச்சிட்டா அவர் எடுத்துட்டு போயிடுவார்” இவள் சொல்லி முடிக்கும் முன்பே அவர் இலக்கியா அருகே வந்திருந்தார்.
தூரத்தில் நின்ற பொழுது தெரியாத அந்த மனிதனின் எண்ணம் இப்பொழுது புரிந்தது. கண்ணில் போதை கலந்த சலனம் தென்பட்டது.
“அர்ஜுன்க்கு அப்றம் தரலாம், இப்ப எனக்கு தா”
அவரது பேச்சு முற்றிலும் தவறாய் பட, பதார்த்தத்தை கையில் எடுத்து வேகமாக மின்தூக்கி நோக்கி நகர்ந்தாள்.
மின்தூக்கியினை அழுத்தி காத்திருக்க அதற்குள் அந்த மனிதர் தன்னை நெருங்குவது உணர்ந்தவள் வேகமாக படியில் இறங்க, ஒரு முடிவோடு வந்திருந்த அந்த மனிதன் படியின் பிடியில் கை வைத்திருந்த இலக்கியாவின் கையை பற்றியிருந்தான்.
வேகமாக அவனது கையை உதறி அவள் மேலும் சில படிகள் இறங்க, பெண்ணவளின் கூந்தலை பிடித்து இழுத்ததில் தடுமாறி விலைபோனவளின் புடவை முந்தானையில் அழுத்தமாக காலை ஊன்றி அவளின் சரிவை உறுதி செய்திருந்தான் அந்த துச்சன்.
“அம்மா…” அலறலோடு கீழே விழுந்தவள் முதுகுத்தண்டில் நிச்சயம் பலமான அடி தான்.
கண்ணீர் முட்டிக்கொண்டு வர புடவை முந்தானை மார்பிலிருந்து சரிந்து காணப்பட்டதை அந்த அரக்கன் பற்கள் தெரிய சிரித்து ரசித்தான்.
அதில் துடித்து போனவள் தன்னை சரி செய்யும் முன்பு அவளின் கையை பற்ற வந்தவன், “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி”
அவளின், “ச்சீ பொறுக்கி” என்னும் வார்த்தையில் கொத்தாக இலக்கியாவின் சிகையை பிடித்திருந்தான்.
“ஆஆ…”
“ரொம்ப துள்ளாதடி, ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன், இன்னைக்கு தான் ரசிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு…” இச்சை மட்டுமே வழியும் அவனின் பேச்சை கேட்க முடியாமல் அவனை பேச விடாமல் பின்னிருந்த இரும்பு கம்பியில் அவன் சிரத்தை தள்ளிய இலக்கியாவின் உறுதியில்லாத போராட்டம் சிறிது தான் வேலை செய்தது.
இன்னும் சரி செய்யாத முந்தானை, முதுகுத்தண்டில் சுருக் சுருக்கென குத்தும் வேதனை, போதாக்குறைக்கு தன்னை நெருங்கி நிற்கும் அவன் முகம் என அருவருப்பிலே உடல் நடுங்கியது.
“உனக்கு தெம்பில்லை செல்லம், வா நான் குடுக்குறேன்”
அவள் கையை பிடித்து மீண்டும் அவன் மேலே இழுக்க, “இலக்கியா” என்னும் இரும்பு குரலில் அப்படியே அவளது கையை விட்டு கீழே ஓடிவிட்டான் அந்த அரக்கன்.
அந்த குரலே வந்திருப்பது யாரென அவளுக்கு கூறிவிட, புடவையை உடனே சரி செய்தவள் முகத்தை மூடி படியில் அமர்ந்தே கதறிவிட்டாள்.
அந்த கயவனை பின் தொடர்ந்து சென்ற நெடுஞ்செழியன் அவன் வேகத்திற்கு ஓட முடியாமல் மீண்டும் இலக்கியாவிடம் வந்தான்.
இங்கு அவளோ மனதின் வலியினை எவ்வாறு போக்குவதென அறியாமல் சுவற்றில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.
ஒரு பெண்ணிடம் எவராலும் இப்படி ஒரு நிலையில் ஆறுதல் அழித்துவிட முடியாது என்பதை அறிந்திருந்தாலும் அவளுக்கு எந்த தீங்கும் வரும் முன்பு தான் வந்ததில் அவளை விட அவனுக்கு தான் பெரும் நிம்மதி.
அவள் முன்பு தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், “இலக்கியா ஒன்னுமில்ல. அவன் போய்ட்டான்” இல்லை என தலையை ஆட்டியவள் அழுகை இன்னும் தான் அதிகரித்தது. ஜீரணிக்கவே இயலவில்லை பெண்ணவளால். வேதனை, அருவருப்பு மனதெங்கும் வியாபித்திருந்தது.
“ஒன்னுமில்ல ம்மா. பயப்புடாத. யூ ஆர் ஆல்ரைட்” அவனின் ஒவ்வொரு ஆறுதல் வார்த்தையும் சற்று முன்பு நடந்ததை நினைத்து நினைத்து பெண்ணவள் அழுக, எவரும் பார்த்தால் பிரச்சனை நேருமென அறிந்தவன் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே அழைத்து வந்து ஒரு கல் பெஞ்ச்சில் அமர வைத்தான்.
இன்னும் அந்த நினைவிலிருந்து மீளாதவள் நிமிடங்கள் பல கடந்தும் தெளிவில்லாமல் தேம்பிக்கொண்டே தான் இருந்தாள்.
அவளது கையை மெதுவாய் பற்றியவன், “உனக்கு ஒன்னுமில்ல இலக்கியா, எதுக்கு நடந்ததையே நினைச்சு நினைச்சு அழுதுட்டு இருக்க, நடந்ததை மாத்த முடியாது. இனி இதுக்கு தேவையானதை நினைச்சு கவலைப்படாம ஆக போறதை பாக்கலாமா?”
தவறான எண்ணமில்லாமல் நெடுஞ்செழியன் உண்மையான கரிசனையோடு இலக்கியாவை ஆசுவாசப்படுத்த பார்த்தான். அவளுக்கோ உடனே தன்னுடைய இருப்பிடத்தை அடைந்தே தீர வேண்டும் என்கிற வேகம் தான் வந்தது.
“நான் அவர்கிட்ட போகணும்” என்றாள் அழுகையோடு அர்ஜுனின் நினைவில்.
“யாரு?” நெடுஞ்செழியன் குழப்பமாக கேட்க, அவனுக்கு பதில் கொடுக்க கூட அவள் நிற்கவில்லை.
கூடாரத்தை நோக்கி சென்றவள் கண்களுக்கு அர்ஜுன் அதிலிருந்து வெளியேறுவதும் அவனை தொடர்ந்து அஞ்சுஸ்ரீ செல்வத்தையும் பார்த்து தானும் அவர்களை தொடர்ந்தாள்.
error: Content is protected !!