Skip to content
Post Views: 7,723
குழலி அன்னையின் மேல் கடுகடு என்று இருந்தாள். மாப்பிள்ளை வீட்டினர் வந்து பெண் பார்த்து சென்றிருந்தனர் குழலியை. அவர்கள் வந்து சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் அமுதினியும் வந்திருந்தாள் வீட்டிற்கு.
வந்தவள் விஷயம் அறிந்ததும் என்ன மாதிரி உணர்ந்தாள் என அவளுக்கே சொல்ல தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அறையினுள் சென்றவள் வெளியே வரவேயில்லை.
சாரதா வந்து அவளிடம் பேச முயற்சி செய்தார். அவள் எதற்கும் பதில் பேசினாள் இல்லை. “ஏன் லேட்? இவ்வளவு நேரம் என்ன பண்ண?” என்ற எந்த கேள்விக்கும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை. சாப்பிட கூப்பிட்டதுக்கும் எழுந்து செல்லாமல் படுத்திருந்தாள்.
பூபதியும் “ஏன்ம்மா… இவ்வளவு நேரம் ஆச்சு?” என்று கேட்டதற்கும் பதில் இல்லை. பூங்குழலியும், கனிமொழியும்கூட அங்கேதான் நின்றிருந்தனர்.
Advertisement
சாரதாவுக்கு அமுதினி எதற்குமே பதிலளிக்காமல் இருந்தது கோவத்தை வர வைத்தது.
மனைவி கோவப்பட்டு மகளை ஏதாவது பேசிவிட போகிறாள் என பூபதி சாரதாவின் கைப்பிடித்து வெளியே அழைத்து சென்று விட்டார்.
பூபதி சாரதாவிடம், “அவளை எதுவும் பேச கூடாது. சொல்லிட்டேன். எதுவாயிருந்தாலும் அவளே கோவம் தெளிஞ்சு வரட்டும். அவளை தொந்தரவு பண்ணாத” என எச்சரித்து இருந்தார்.
Advertisement
சாரதாவுக்கும் மனதில் குற்றவுணர்ச்சி இருந்தது. அவர் செய்தது சரி என அவர் நியாயப்படுத்த நினைக்கவில்லை. தன்னுடைய சூழ்நிலையை அமுதினிக்கு தெளிவுபடுத்த முனைந்தார். அதற்கு அவள் இடமே அளிக்கவில்லை எனதான் முறைத்து நின்றார்.
Advertisement
பூங்குழலியும் அன்னையை முறைத்துக் கொண்டு நின்றாள். அவளுக்கும் அமுதினியை நினைத்து பயம். தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ என மனதில் அச்சம் இருந்தது.
பூங்குழலியிடம் சாரதா இதைப்பற்றி சொல்லிய போது முடியவே முடியாது என மறுத்திருந்தாள். “அக்காவை வச்சிட்டு எனக்கு பார்ப்பியா? அதுவும் அவளுக்குன்னு வந்த மாப்பிள்ளையை, அவள் இல்லாததால என்னை காட்டனும்னு நினைப்பியா? நான் என்ன பொம்மையா உனக்கு? என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது, அக்கா வரலைன்னா அவங்களை போய்ட்டு இன்னொரு நாள் வந்து பார்க்க சொல்லுமா…” என கூறியிருந்தாள்.
சாரதாவுடன் சேர்ந்து மாப்பிள்ளை வீட்டுடன் வந்திருந்த சாந்தாவும் பேசி பேசியே பூங்குழலியை சம்மதிக்க வைத்திருந்தனர்.
Advertisement
அவரின் எதிரில் அன்னையை எதிர்த்து மேலும் எதுவும் பேச முடியாமல் வேறு வழியில்லாமல், மாப்பிள்ளை வீட்டின் முன் போய் நிற்க வேண்டியதாகியிருந்தது.
இப்போது அமுதினி கோவப்பட்டு, ஏதும் பேசாமல் வந்து படுத்திருந்ததை பார்த்ததும், அவளுக்கு சாரதாவை நினைத்து தான்ஆத்திரமாக வந்தது. எவ்வளவு சொன்னேன் வேணாம்னு, கேட்டாங்களா…? இவங்க என முறைத்துக் கொண்டிருந்தாள் தாயை.
இதுல மாப்பிள்ளை வீட்டை கூட்டிட்டு வந்த அந்த சாந்தா அத்தை வேற இவங்களை நல்லா பிரெய்ன் வாஷ் பண்ணிட்டாங்க.
அடுத்தவங்க என்ன சொன்னாலும் இந்த அம்மா யோசிக்கவே மாட்டாங்களா…? என கோவமாக உள்ளுக்குள் வசைபாடினாள் சாரதாவை.
அமுதினி அவளை தவறாக நினைத்து கோவித்துக் கொள்வாளோ என பயந்தாள். இப்போது அவளிடம் இதுபற்றி எதுவும் பேசவும் வெகுவாக தயக்கம்.
இவர்கள் நிலை இப்படியென்றால் வந்து பார்த்து சென்ற மாப்பிள்ளை வீட்டினருக்கு பூங்குழலியை மிகவும் பிடித்திருந்தது.
முதலில் அவர்களை வரவேற்று உட்கார வைத்த சாரதா தம்பதியினருக்கு மாப்பிள்ளை வீட்டினரிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
எப்படி இன்னும் அமுதினி இன்னும் வேலையிலிருந்து வரவில்லை என்பதை சொல்வது என உதறல் உள்ளுக்குள்.
கண்டிப்பாக நல்லதாக நினைக்க மாட்டார்கள். பெண்ணுக்கு பிடிக்கவில்லையா? அவள் சம்மதம் இல்லாமல் பார்க்கிறீர்களா? இல்லை யாரையாவது காதலிக்கிறாளா… என நிறைய கேள்வி வரும். என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்பார்களா தெரியாது.
அமுதினி நேரத்திற்கு சரியாக வந்திருந்தால், இந்த பிரச்சினையே இல்லை. ஏன்…? இவள் இப்படி செய்துவிட்டாள். ஒரு போனுக்கு கூடவா வழியில்லாமல் போய்விட்டது என குமைந்தார், உள்ளுக்குள் சாரதா.
பூபதியின் தூரத்து உறவில் தங்கை முறை வரும் சாந்தா என்பவர் மூலம் இந்த சம்மந்தம் வந்திருந்தது. மாப்பிள்ளை வீட்டினரின் அடுத்த தெருவில்தான் அவரும் குடியிருக்கிறார். அவரும் தற்போது மாப்பிள்ளை வீட்டினருடன் சேர்ந்து வந்திருந்தார்.
சாரதா அவர்களுக்கு காப்பி போட என கிட்சன் வந்திருந்தார். அவரின் பின்னாலேயே சாந்தாவும் வந்திருந்தார். சாரதா தம்பதியினரின் முகம் சரியில்லாததை வைத்தே என்னவோ, என நினைத்து சாரதாவின் பின்னாலேயே வந்திருந்தார்.
சாந்தா கிட்சனுக்குள் வருவதைப் பார்த்த சாரதா “வாங்க மதினி” என்றார் சாந்தாவைப் பார்த்து.
“என்ன சாரதா? உன் முகமே வாட்டமாயிருக்கு…?”
சாரதாவுக்கு சொல்லிதானே ஆக வேண்டும் என இருந்தது. “இன்னும் அனி வேலையிலிருந்து வரலை மதினி. அதான்…” என்றார் இழுவையாக.
“என்ன…? இன்னும் வேலையிலிருந்து வரலையா…? என்ன விளையாடறியா…? அமுதினி வீட்டில இல்லைன்றதை எவ்வளவு கூலா சொல்ற… நீ?”
“ஏன்? அவளை இன்னிக்கு வேலைக்கு போக விட்ட? லீவ் போட சொல்ல வேண்டியதுதான…? அவ்வளவுதூரம் உன்கிட்ட எடுத்து சொல்லிதான…, அவங்களை கூட்டிட்டு வந்தேன்” என முறைத்து நின்றார்.
சாரதாவால் ஏதும் பேச முடியவில்லை.
“அவங்க என்ன சாதாரணமான ஆளுங்களா? எப்படிபட்ட ஆளுங்கன்னு சொல்லிதான அழைச்சிட்டு வந்தேன்”.
“இப்ப நான் போய், அவங்ககிட்ட என்னன்னு சொல்வேன்…? பொண்ணு வீட்ல இல்லையாம். இன்னும் வேலையில இருந்து திரும்பி வரலைன்னா, சொல்ல முடியும்”. “
சொன்னா…, என்னை என்னன்னு நினைப்பாங்க. முதல்ல மதிப்பாங்களா? என் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்கும்…?”
“உன் பொண்ணுக்கு மட்டும் தான் வேலையிருக்கா? நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா வந்து உட்கார்ந்து இருக்கோம். எப்படி பொறுப்பில்லாம பேசறே?”
“உன் வார்த்தையை நம்பிதான அவங்களை அழைச்சிட்டு வந்தேன். அவள் இல்லைன்றத ஒரு போன் போட்டு சொல்லமாட்டியா…? நான் ஏதாவது் அவங்ககிட்ட பேசி வரவிடாம தடுத்து இருப்பேன் இல்ல” என காச்சி எடுத்துவிட்டார் சாரதாவை.
சாரதா, “ஐயோ.., அப்படி இல்லை மதினி, கோவப்படாதீங்க. அவள் இதுவரைக்கும் இத மாதிரி வராம இருந்தது இல்லை. சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துருவா. அதான் கடைசி வரைக்கும் வந்துருவான்னு நம்பிக்கையா இருந்துட்டேன்” என்றார் கையை பிசைந்து கொண்டே புரிந்துகொள்ள மாட்டாரா என.
“பொண்ண பார்க்க வந்து, பொண்ணு வீட்ல இல்லைன்னா…, வந்தவங்க என்ன நினைப்பாங்க…? என்ன பேசுவாங்கன்னு உனக்கு தெரியாதா? அதுவும் இவங்க தொட்டதுக்கு எல்லாம் சாஸ்திரம், சம்பிரதாயம் பார்க்கிறவங்க வேற. சகுனத்தடையா எடுத்துட்டாங்கன்னா.., என்ன செய்யறது?”
“நல்ல வரனா இருக்கே. இதை எப்படியும் நம்ம அமுதினிக்கு முடிச்சிடும்னு, அவ்வளவு உன்கிட்ட பேசிதான கூட்டிட்டு வந்தேன். இப்படி வீட்டுக்கு வர வைச்சி அசிங்கப்படுத்துவன்னு.., நான் கொஞ்சம் கூட நினைக்கல” என்றார் ஆத்திரமாக.
“என்ன மதினி? பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க. எங்க நிலைமையை சொல்லியும் இப்படி பேசறீங்களே?” என்றார் ஆற்றாமையாக.
“உனக்கென்ன நிலைமை? மதிச்சு கூட்டிட்டு வந்த எனக்கில்ல பிரச்சினை. இப்ப அவங்ககிட்ட போய் என்னன்னு சொல்லுவேன்?”
“உன் பொண்ணு ஒரு போன் கூடவா பண்ணி என்னன்னு காரணம் சொல்லல? இது நம்பற மாதிரியா இருக்கு? இல்லை வேற ஏதாவது மேட்டரா? நீங்க என்கிட்ட மறைக்கிறீங்களா…” என்றார் எரிச்சலாக.
சாரதா, “அப்படிலாம் எதுவும் இல்லை மதினி. எங்களைப் பத்தி நல்லா தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா? அப்படி எதுவும் இருந்தா ஏன் உங்களை வரவைக்கனும்” என்றார் புரிய வைத்துவிடும் நோக்கத்தில்.
சாந்தாவும் என்ன செய்வது என யோசனையாக நின்றுவிட்டார். சாரதாவுக்கு மனதில் சொல்ல முடியாத அவமானமாக இருந்தது. அமுதினியின் மீது ஆத்திரம் எழுந்தது.
இதுவரைக்கும் பார்க்கும் விசேஷங்களில் எல்லாம் மரியாதையாக பேசும் சாந்தா, இன்று இப்படி பேசியது கஷ்டமாக இருந்தது. இவரிடம் எல்லாம் பணிந்து பதில் சொல்லும்படி வைத்து விட்டாளே என அமுதினியை நினைத்து எரிச்சல் கொண்டார் மனதில்.
சாந்தா, “ஏன்? சாரதா நான் ஒன்னு சொன்னா நீ தப்பா நினைக்க கூடாது…” என்றார் பீடிகையாக.
“அடுத்து என்ன வரப் போகிறதோ…” என பயத்துடன் பார்த்திருந்தார் சாந்தாவை.
“அமுதினிக்கும் பூங்குழலிக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்கும்?”
சாரதா ஏன் இவரு இதை கேட்கிறார் என யோசனையாக பார்த்துகொண்டே, “ஏன் மதினி? இரண்டு வயசு” என்றார்.
“அப்புறம் என்ன சாரதா…? எப்படியிருந்தாலும் இவளுக்கு முடிச்சிட்டு அவளுக்கும் உடனே பார்க்கனும்னு தான சொன்னே. இப்பவே இந்த மாப்பிள்ளைக்கு அவளைப் பார்த்தா என்ன?”
“பெரியவ இருக்கும்போது, இவளுக்கு எப்படி பார்க்க முடியும் மதினி. ஏற்கனவே அவளுக்கு ஆறு ஏழு வரன் பார்த்தும் ஒன்னும் தகையாம தட்டிட்டே போகுதுன்னு வருத்தத்துல இருக்கோம். அது சரிவராது மதினி”, என்றார்.
“ஏன்? ஏன் சரிவராது. ஊர் உலகத்துல அக்கா இருக்கையில தங்கச்சிக்கு கல்யாணம் பண்றதில்லையா? எத்தனை வீட்டில இதுமாதிரி நடந்திருக்கு தெரியுமா?”
“ரொம்ப ஏன்? எங்க உறவு முறையில அக்காவ பொண்ணு பார்க்க வந்து ஜாதகம் ஒத்து வராததால, தங்கச்சிய பார்த்து கட்டிட்டு போயிருக்காங்க. பூபதி அண்ணனுக்கும் இது தெரியும். நீ வேணா விசாரிச்சு பாரு அண்ணன்கிட்ட”.
“அமுதினிக்கு இன்னும் கல்யாண யோகம் வரலையோ என்னவோ? அதுதான் இன்னும் அவளுக்கு அமையாம தட்டிட்டு போகுதோ என்னவோ?”
“தேடி வர நல்ல சம்மந்தத்தை வேணாம்னு சொல்லாத. நீ வலை போட்டு தேடினாலும் இத மாதிரி வரன் அமையாது பார்த்துக்கோ..,” என அவரை சிறிது சிறிதாக கரைத்துக் கொண்டிருந்தார்.
“நான் மட்டும் இதுல முடிவு பண்ண முடியுமா மதினி, அவரை கேட்கனும், குழலி சம்மதிக்கனும்” என்றார் தலையை பிடித்துக் கொண்டு.
“தாராளமா கேளு. அண்ணன்கிட்ட பேசி சம்மதிக்க வை. நானும் மாப்பிள்ளை வீட்ல பேசிப் பார்க்கறேன். முதல்ல, மாப்பிள்ளை வீட்ல இதுக்கு ஒத்துக்கனுமே. என்ன சொல்றாங்கன்னு தெரியலை…? நல்ல சம்மந்தம் மிஸ் பண்ணாதீங்க”.
சாந்தா, நான் அவங்ககிட்ட பேசறேன் வா. வந்தவங்களுக்கு முதல்ல காப்பிய குடு என அழைத்துச் சென்றார்.
சாரதாவின் மனதிலும் இதுசரியாக வருமா…? என சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அவர் பூங்குழலியை எண்ணி பயந்தார். அவள் இதற்கு சம்மதிப்பாளா என்ற அச்சம் இருந்தது. வந்த நல்ல சம்மந்தத்தை விடவும் அவருக்கு மனதில்லை. அமுதினி இடத்தில் பூங்குழலியை வைத்துப் பார்த்தார்.
இருவருக்கும் வயது வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லை. இது சரி வருமா என யோசித்தார். அக்கா இருக்க தங்கைக்கு திருமணம் என்றால் என்ன சொல்லுவார்கள். இதை வைத்து அமுதினியின் திருமணம் தள்ளிப் போனால் என்ன செய்வது என பலவாறு குழப்பிக் கொண்டிருந்தார்.
தொடரும்.
error: Content is protected !!