Skip to content
Post Views: 4,278
“சர்ப்ரைஸ் ப்பா” உள்ளே வந்தவள் ஆசையாக தந்தை என்ன சமைக்கிறார் என பார்க்க, உப்மா செய்துகொண்டிருந்தார், அதுவும் வருத்தல், தாளிப்பு வேலை எதுவும் நடக்கவில்லை. நேரடியாக தண்ணீரை ஊற்றி ரவையை உள்ளே தள்ளியிருந்தார்.
“என்ன ப்பா இது?” சிரிப்போடு மகள் கேட்கவும்,
“எனக்கு ரிஸ்க் எடுக்க தோணல ம்மா. அப்பா உனக்கு வேற வாங்கி வரவா கடைல?” என்றார்.
“வேணவே வேணாம். நான் சாப்பிட்டேன்” செய்தது வீணாக வேண்டாமென நினைத்தவர் உப்புமாவையே உண்ண, இலக்கியா தந்தைக்கு மதியத்திற்கும் இரவுக்கும் சமைக்கும் வேலையில் இறங்கினாள்.
Advertisement
“சௌரியமா இருக்கா ம்மா மாப்பிள்ளை வீடு?” வார்த்தையை மிகவும் யோசித்து பேச வேண்டி இருந்தது மகளிடம்.
அன்னை இருந்தால் எதுவும் தெரியாது, ஆனால் தனியொரு தந்தையாய் அவளை திருமணம் ஆன பிறகு கேள்வி கேட்கவே பயமாக இருந்தது, வேறு அர்த்தங்கள் மாறிவிடுமோ என.
“சௌரியத்துக்கு அங்க என்ன ப்பா குறை. கண்ணாடி மாதிரி இருக்கு அவரோட வீடு. எப்படி தான் இவ்ளோ சுத்தமா வச்சிருக்காங்களோ தெரியல” பிரமிப்பாக கூறிய மகளின் முகத்தை கூட அந்த தந்தைக்கு படிக்க தெரியவில்லை.
Advertisement
“ஓ சரிமா சரிமா” என பதில் கொடுத்து அடிக்கடி மகளின் முகத்தில் மகிழ்ச்சி உள்ளதா என ஆராய்ந்தார். அவளோ காயை நறுக்குவதிலே குறியாய் இருந்தாள்.
Advertisement
“நான் போய்ட்டேன்னு மாத்திரை சாப்புடுறது எல்லாம் மறந்துட கூடாது ப்பா. முக்கியமா டெய்லி ஒரு காய் வச்சு தான் சாப்பிடணும். ருசிய பத்தி கவலைப்படாம எண்ணெய குறைச்சு சாப்புடனும் சொல்லிட்டேன்”
“பண்ணிக்கிறேன் ம்மா” மகளின் அக்கரையில் நெகிழ்தவர் முகத்தில் சிரிப்பு தான்.
“ம்ம் சாப்பாடு மிச்சம் இருந்தா பழைய சோறு போட்டு சாப்புடுங்க. ரொம்ப நல்லது. அதுக்குன்னு எப்பையுமே அதையே சாப்பிட கூடாது. மோர் மிளகாய், வத்தல், வடகம் எல்லாம் ரொம்ப சாப்பிட வேணாம். நைட் ஷிபிட் ரொம்ப பாக்காதீங்க. உடம்புக்கு நல்லது இல்லை. தண்ணி நிறையா குடிங்க” அவருக்கு மருத்துவர் அவள் தான்.
Advertisement
இந்த படிப்பே படிக்காவிடினும் மகள் தன்னை இதை போலவே பார்த்திருப்பாள் என்பது அவரும் அறிந்த ஒன்றே. ஆனால் செவிலிய படிப்பு சாதாரனதும் அல்லவே? மருத்துவனை விட இவள் கொடுமை தான் அதிகம் இருக்கும்.
அந்த கடுமை கூட தந்தைக்கு இனித்தது. மதியம் தந்தையோடு அமர்ந்து தானும் உண்டு அவரையும் உண்ண வைத்து. பல கதைகள் பேசினாள், பல வருடங்கள் பேசாதது போல்.
அவளோடு நேரம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் இது தான் நடக்கும். ஆனால் அது அரிதாகியிருக்க தந்தை மகளுக்கு பேச ஆயிரம் இருக்கும். மதியம் இரண்டை தாண்டவும் தந்தை உறங்க வேண்டுமென இலக்கியா கிளம்பிவிட்டாள்.
கணவனிடம் கூறியது போல் அவளுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் அதிகமிருந்தது. முதலில் வாளி. அதோடு தனக்கு தேவையான இன்னும் சில பொருட்களை வாங்கியவள் ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள்.
அர்ஜுனின் வீட்டு கதவை பார்த்ததும் தான் லாக் பற்றி நினைவிற்கு வந்தது. தலையில் அடித்துக்கொண்டாள். அந்த தளத்தில் இருந்த இரண்டே வீடுகளில் ஒருவரின் வீட்டிற்கும் மற்றவரின் வீட்டிற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது.
என்ன செய்வதென தெரியாமல் அவன் வீட்டினர் எவருக்கேனும் அழைத்து கடவுச்சொல்லை கேட்டுவிடலாமா என யோசித்தால் எவருடைய கைபேசி எண்ணும் இலக்கியாவிடம் இல்லை.
ஏன் கணவனுடைய எண் கூட இல்லை. உன்னுடைய சோதனைக்காலம் இதுவென பூட்டியிருந்த கதவே கத்தியது ஓங்கி.
*****
காலையிலிருந்து அஞ்சு ஸ்ரீ அர்ஜுனை தனியாய் பிடித்துவிட வேண்டுமென துடித்துக்கொண்டிருக்க, அவளிடம் சிக்காமல் போராடிய அர்ஜுனுக்கு ஆத்திரமாக இருந்தது.
அதே ஆத்திரத்தோடு இரவு பத்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன், இலக்கியா கால்களை கட்டி வாசலுக்கு வெளியில் தரையில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கண் மண் தெரியாத கோவம். கதவை பெரிய சத்தம் வரும் படி திறந்து காத்திருந்தான்.
பதட்டத்தோடு எழுந்தவள் தன்னை கோவமாய் பார்க்கும் கணவனை கண்டுகொள்ளாது வீட்டினுள் நடந்து செல்ல, அவள் பின்னே வந்தவன் திறந்த பொழுது வந்த சத்தத்தை விட அதிகமாய் கதவை அடைத்தான்.
குளியலறை சென்று வாளியை வைக்கப் போன இலக்கியாவிடம், “எவ்ளோ நேரம் இப்டி உக்காந்திருக்க?” அவன் கேள்வியின் குரலே கோவத்தை தாங்கி இருந்தது.
கை கடிகாரத்தை பார்த்து அவனை தலை திருப்பி பார்த்தவள், “ஏழு மணி நேரம்” என்றாள்.
“ஒரு வார்த்தை போன் பண்ணி கேக்க கூடாது?” அர்ஜுன் கேள்விக்கு பதில் கூற அவள் அங்கில்லை, அவன் பேச பேச குளியறைக்குள்ள சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவளுக்கு அவள் அவசரம்.
‘திமிரு திமிரு மொத்தமும் திமிரு’ அர்ஜுன் அவளை திட்டிக்கொண்டிருந்த சமயம் வெளியே வந்தவள் சமையலறை பக்கம் நடந்துக்கொண்டே,
“போன் பண்ண என்கிட்ட நம்பர் குடுத்தீங்களா சார்?” சாதாரணமாக கேட்டவள் மொத்த கவனமும் இரவு உணவை வேகமாக தயாரிக்கும் நோக்கத்தில் தான். அர்ஜூனால் பேச முடியவில்லை.
“ஏன் அடுத்தவன் போதை கடத்துறான்-னு தெரிஞ்சு வச்சிருக்கவ ஒரு போன் நம்பர் கேட்டு வைக்க தெரியாதா?” கோவமாக அர்ஜுன் கேட்க,
“அவசியம் இருந்ததில்லை சார். நைட் என்ன சமைக்க உங்களுக்கு?” என்றாள்.
“அவசியம் இல்லாத அப்றம் ஏன்டி சமைக்கிற? போடி” வேகமாக சொல்லியவன் மாடியேறி சென்றுவிட்டான்.
அவன் இருக்கும் வரை தலை தாழ்த்தி வேலை செய்வது போல் பாசாங்கு காட்டிய இலக்கியாவின் கழுத்து வலிக்க தலையை பின்னே சாய்த்து கண்களை மூடி திறக்க அங்கு அவள் கணவன், குழப்பத்தோடு இடையில் ஒரு கையும் தலையை ஒரு கையும் கோதிய வாக்கிலே கதவை திறக்கும் எண்ணத்தில் இல்லாமல் கால்கள் நிலையில்லாமல் ஆட நின்றான். பார்த்த இலக்கியாவிற்கு குறுஞ்சிரிப்பு,
“எனக்கு இடியாப்பம் செய்ய போறேன்” அவள் தகவலில் திரும்பி கீழே பார்த்தவன் முறைத்த முறைப்பில் மனைவிக்கு இன்னும் சிரிப்பு தான் வந்தது.
அவனிடம் காட்டினால் அடி தான் விழுமென உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் அவனை பார்க்க அவனோ இவளை முறைத்து அறைக்குள் சென்றுவிட்டான்.
இதமான மனநிலையோடு இரவு உணவை முடிக்க முகத்தை தூக்கி வைத்தே அவள் கொடுத்த உணவை வயிறார புசித்த பிறகே உறங்க சென்றான் கணவன்.
இலக்கியாவிற்கு மனமே நிறைந்து படுத்த உடனே உறக்கம் தழுவியது. அவளுக்கு எங்கு தெரியும் அவள் தன்னுடைய கணவனின் தூக்கத்தை களவாடி தான் தன் வசமாக்கியிருப்பது?
விசாலமான அந்த படுக்கையறை கடந்த இரண்டு நாட்களாக அவனை அன்போடு அரவணைக்கவில்லை. எழுந்து அமர்ந்தவனுக்கு தண்ணீர் தேவைப்பட கீழே இறங்கி வந்தான்.
அவன் வீட்டின் சோபாவின் நீளத்திற்கு அவள் உடலை குறுகி படுக்கும் அவசியம் எல்லாம் இல்லை. ஆனாலும் உடல் குறுகி சுகமான உறக்கத்தில் தான் இருந்தாள்.
வந்த வேலையை மறந்து மனைவியை பார்வையிட்டே மேலேறி சென்றான். இவளை திருமணம் முடித்த பிறகு ஏதேனும் கூறி மனதை நோகடிக்க வேண்டுமென நினைத்தவன் எண்ணங்களுக்கு மாறாக தான் இருந்தது அனைத்தும்.
அவளை ஒரு வார்த்தை பேசினால் தனக்கு தான் அது வேதனை தந்தது. காதல், அவள் மேல் ஆசை என்றெல்லாம் இல்லை. அர்ஜுன் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை.
தீர்க்கமான முடிவோடு உறங்கியவன் அடுத்த ஒரு வாரம் அவள் கண்ணிலே சிக்காமல் ஒரு காகிதத்தில் வீட்டினுள் நுழைவதற்கான கடவுச்சொல்லும் அவன் கைபேசி எண்ணையும் எழுதி வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மாயமாய் மறைந்துவிட்டான்.
மூன்று வருட காலமாக அவனோடு வேலை பார்ப்பவளுக்கு ஏதேனும் மீட்டிங் அல்லது ஆபரேஷன் இருக்குமென யூகித்து எதுவும் பெரிதாக நினைக்கவில்லை.
இலக்கியா அந்த ஒரு வாரமும் வீட்டிலே இல்லை. கணவன் சென்ற அந்த நாளே தானும் மருத்துவமனை நோக்கி புறப்பட்டுவிட்டாள்.
தங்கள் திருமண செய்தியை பாதி உண்மையாக பாதி பொய்யாக உலகிற்கு தெரிவிக்க விருப்பமில்லை. ஆம் திருமணம் முடிந்தது, இவன் தான் என் கணவன் என நிமிர்வோடு கூறுவதே அவளுக்கு விருப்பம்.
நீ தானே இதை ரகசிய திருமணமாகி வைக்க கூறினாய் நீயாக சொல்லும் வரை நம் திருமணம் பற்றிய செய்தி என் மூலம் வெளியே வராது என உறுதியோடு தாலி சங்கிலியை மருத்துவமனை செல்லும் நேரம் கைப்பையினுள் வைத்து சென்றிடுவாள்.
எல்லாம் நன்றாக தான் சென்றது அவள் வீட்டினர் அனைவரும் வேலை செய்யும் நேரம் அவளை கவனிக்காவிடினும், மதிய உணவு நேரம் அவளையும் தங்கள் கூட்டத்தோடு இணைத்துக்கொண்டனர்.
ஏற்கனவே அவள் தேநீரில் சொக்கி போன ராமகிருஷ்ணன் ஒரு நாள் அவள் உணவை உண்டு அதற்கும் ரசிகரானார். கையேடு அவளை தங்கள் வீட்டிற்கே அழைத்து சென்று பேரன் இல்லாத ஒரு வாரமும் தங்களோடு அவன் அறையிலே அவளை வைத்துக்கொண்டார் ராதா.
அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி அவளோடு பழக பழக, அவள் நற்குணங்கள் அமுதசுரபி போல் ஒவ்வொன்றாக வருவதை கண்டார்.
ஆக மொத்தம் அவருக்கு அவர் ஆசைப்படியே அவர் பேரனுக்கு மனைவி அமைத்துவிட்டதில் அத்தனை பெருமை. வீட்டின் முதல் மருமகள், இத்தனை பொறுமையாய், பொறுப்பாய் இருப்பது அவருக்கு தன்னை விட இந்த பெண் மேல் நம்பிக்கை.
சரியாக ஒரு வாரம் பிறகு இன்று அர்ஜுன் சென்னை வந்துவிடுவான் என்ற செய்தியில் அன்று இல்லம் சென்று வருவதாக கூறி தான் இலக்கியா மருத்துவமனை வந்ததே.
வந்தவளை வசமாக அர்ஜுனின் அறையிலே வைத்து பிடித்துக்கொண்டாள் அஞ்சு ஸ்ரீ.
அர்ஜுனின் அறையில் அர்ஜுனை எதிர்பார்த்த இலக்கியாவுக்கு கணவனுக்கு பதில் அவனது இருக்கையில் அவளை பார்த்ததும் திணறிப்போனாள்.
“வாங்க வாங்க மிஸ்ஸஸ் இலக்கியா அர்ஜுன் சக்ரவர்த்தி” எள்ளல் நிரம்பிய அவள் குரலில் மகிழ்ச்சி அதிகம் தெரிந்தது.
இலக்கியா எதுவும் பேசாமல் இருக்கவும், “என்னடா இது அர்ஜுன் இன்னைக்கு வர்றேன்னு சொன்னான் அவனை காணம்னு பாக்குறியா?” சொகுசாக நாற்காலியை ஆட்டி ஆட்டி இன்பமுற்றாள் அஞ்சு ஸ்ரீ.
“அவன் இன்னைக்கு வர்றேன்னு சொன்னது உண்மை தான். ஆனா உன்ன பாக்க இல்ல இலக்கியா. என்ன பாக்க”
கணவனின் இந்த செயலை ஒருவகையில் இலக்கியா எதிர்பார்த்திருந்தது தான், “சரி மேம். அதுக்கு நான் இப்போ என்ன பண்ண?” சாதாரணமாக கேட்ட இலக்கியாவை பார்த்து,
“சரி கோவத்தை கண்ட்ரோல் பண்றது தெரியுது. சொல்ல வந்த விசயத்த சொல்லுறேன். பெங்களூருல இருந்து வந்த…”
தலையை தினுசான வகையில் ஆட்டி, “வெயிட், அர்ஜுன் பெங்களூரு போனது உனக்கு தெரியுமா?” கேள்வி கேட்டவள் உடனே சிரித்தும்கொண்டாள்.
“புருஷன் பொண்டாட்டினா சொல்லிருக்கலாம். நீ தான் அவனை பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிட்டியே” அதற்கும் அஞ்சுவிடமிருந்து கேலி தான்.
“மேம் டாபிக் மாறிப் போறீங்க” அவசரமாக நினைவுப்படுத்தினாள் இலக்கியா.
அவளை முறைத்துக்கொண்டு, “ம்ம் பெங்களூரு போனவன் நேரா என்ன தான் பாக்க வந்தான். அப்டி என்னடி பண்ண அவனை? இதுவரை எதுக்கும் அசராம இருந்தவன் உன் கூட ஒரே வீட்டுல இருக்க அப்டி பயப்புடுறான்?” வியந்தாள்.
இலக்கியாவிற்கு மனம் உள்ளுக்குள் வேதனை பிறந்தாலும் வெளியில் சிரிப்பை காட்டியாக வேண்டிய கட்டாயம்.
“ஒரே நாள்ல நொந்து போனவன், இனிமேல் உன்கூட வாழ முடியாதுனு வந்து நிக்கிறான். பாரேன் எத்தனை சொந்தம் இருந்தாலும் என்கிட்ட தன்னோட கஷ்டத்தை சொல்ல வந்துருக்கான்” அவளது வியப்பில் போலித்தன்மை தான் தெரிந்தது.
“அப்டினா அவன் இன்னும் என்கிட்டே தானே வரணும்னு துடிக்கிறான்?”
இலக்கியாவிடம் அஞ்சு கேட்ட கேள்விக்கு, “நீங்க பேசுறதெல்லாம் அப்டியே நம்புற ஆள் நான் இல்லை மேம்”
நாற்காலியிலுருந்து துள்ளலோடு எழுந்து வந்த அஞ்சு ஸ்ரீ, “தெரியும் நீ நம்ப மாட்டன்னு அதான் இந்த செல்ஃபி எடுத்தேன்” அவள் கூறுவது சரியாக அவள் காட்டிய புகைப்படத்தில் அஞ்சு இப்பொழுது இருக்கும் அதே உடையில் தான் இருந்தாள், அருகிலே அவள் கணவன்.
வெங்காய சருகு நிறத்தில் சட்டையில் நின்றான். அஞ்சுவோடு எப்பொழுதும் தங்கள் திருமணத்திற்கு முன்பு இருக்கும் அதே சிரிப்பு இல்லாமல், மங்கி போன சிரிப்போடு கடமைக்காக அவளோடு நிற்பது போல் தெரிந்தது.
“என் ஆள ரொம்ப சைட் அடிக்காத” கைபேசியை பின்புறமாய் மறைத்துக்கொண்டு,
“எப்டியும் நீ அவனை விட்டு போனதும் நான் கல்யாணம் பண்ணிப்பேன். சோ எப்படி பாத்தாலும் அவன் என் ஹாஸ்பன்ட் தானே” இலகுவாய் கூறி அஞ்சு வெளியில் சென்றிட இலக்கியாவிற்கு மனம் எங்கும் வேதனை வியாபித்தது.
ஆதியும் அந்தமும் அவனே என வாழ்ந்தவளை இனி காக்க போவது அவனது வார்த்தைகள் தான். தான் அவனிடம் அஞ்சு பேசியதை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் தாண்டி அவன் பதில் தான் அவளை அதிகம் உறுத்தியது.
கண்கள் கலங்க பல நிமிடம் அவ்வறையிலே இருந்தவள் அவன் வரவிற்கு அந்நாள் முழுதும் மருத்துவமனையில் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. இன்று இலக்கியா வீட்டில் இருந்த சமயம் வீட்டிற்கு அவன் வரவே இல்லை.
மறுநாள் வந்தான் கையில் விவாகரத்து பத்திரத்தோடு…
error: Content is protected !!