Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 6.1

காலை எழுந்து குளித்து முடித்த இலக்கியாவின் புடவை பாதிக்கு மேல் நனைந்திருந்தது. காரணம் குளியல் அறையில் நின்றே ஆடை மாற்ற வேண்டிய நிலை. வரவேற்பறையில் மாற்றலாம் என நினைத்தால் எப்பொழுது அவன் எழுந்து கீழே வருவான் என தெரியவில்லை.

சரியாக அவள் எழுந்த நேரம் மேலே அர்ஜுன் எறியதிலிருந்து ஏதோ சத்தம் கேட்க எட்டிப்பார்த்த தலையை மீண்டும் உள் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். வித விதமாக வெவ்வேறு வகையாக இருந்த குழாயில் எதை தொட்டு திறக்க வேண்டுமென தெரியவில்லை.

பக்கெட்டில் தண்ணீரை திறக்க எண்ணி பக்கெட்டை தேட, அவ்வீட்டில் அது எங்கும் இல்லை. இறுதியாக சமையலறை சென்று பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து பயன்படுத்திக்கொண்டாள்.

சரி பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பலாம் என குழாயை திறந்தால் தலையில் ஒரு வாளி தண்ணீரை கொட்டியது போல் ஷவரிலிருந்து தண்ணீர் இரண்டே நொடியில் அவள் தலையை நனைத்திருந்தது.



Advertisement

பெருமூச்சோடு காற்றை விட்டு குளித்து, அதனோடே எதை திருகினால் எங்கு தண்ணீர் வருமென பார்த்துக்கொண்டு குளியலை முடித்து வெளியே வர அவன் வீடு மொத்தமும் கண்ணாடியால் ஆனது போல் சுவர் இல்லாமல் இருந்தது. சுவர் இருக்கும் பக்கம் செல்லலாமென பார்த்தால், மேல் அவன் அறை வாசலில் இருந்து பார்த்தால் கீழே நடப்பவை அனைத்தும் தெரியும்.

அவன் கண்களுக்கு சிக்காமல் போவது அந்த கண்ணாடி சுவர்கள் பக்கமும், அதனை ஒட்டி இருந்த ஒரு அறையும் தான். அந்த அறையை நெருங்கவே இலக்கியாவிற்கு பயம்.

வேறு வழியே இல்லாமல் ஈரத்திலே புடவையை உடுத்திக்கொண்டு மெல்ல சமயலறையிலிருந்த ஒவ்வொரு பொருட்களாக ஆராய்ந்தாள். பிரிட்ஜ் உள்ளே என்ன என்ன உள்ளதென அனைத்தையும் ஆராய்ந்தவள் அங்கு இருப்பதை வைத்து எளிமையான சப்பாத்தி, பண்ணீர் கிரேவி செய்து வைத்திருக்க, அர்ஜுன் சரியாக கீழே வந்தான் எட்டு மணிக்கு.

Advertisement

படிகளில் இறங்கும் பொழுதே அவன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. தலையை உயர்த்தி பார்த்தாள், எளிமையான வெள்ளை சட்டை, கருப்பு பாண்ட் தான் அணிந்திருந்தான்.

Advertisement

கைகள் மட்டும் சிகையினுள் சென்று அதனை சரி செய்துகொண்டே இருந்தது. அவன் மேல் எந்த விதமான உரிமையும் இல்லை என்ற பொழுதே அவனை ரசிக்கும் அவள் விழிகள் இன்று உரிமையோடு அவனை ரசிக்க, அர்ஜுன் பார்க்கும் முன்பு கண்களை தாழ்த்திக்கொள்ள வேண்டும் என அவனிடமிருந்து பார்வையை விலகினாள்.

அதே சமயம் தன்னுடைய பேச்சை முடித்தவன் படிகளில் இறங்காமல் மெல்லிய ஊதா நிற மிக எளிதான பூனம் புடவையில் துடைத்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டிருந்த மனைவியை பார்த்தான்.

மருத்துவமனையில் எப்பொழுதும் பார்க்கும் அந்த வெண்மை புடவையை மட்டுமே அணிபவளை பார்த்து பார்த்து இப்பொழுது மங்கி போன நிறத்தில் காட்சியளிக்கும் அவளது இந்த புடவை கூட அழகாய் தான் இருந்தது. நேற்று பூசியிருந்த ஒப்பனை கூட அவளது இந்த மெல்லிய தோற்றத்தின் முன்பு காணாமல் போனது.

Advertisement

ஆனால் இந்த சாந்தமான, அப்பாவி முகத்தின் உள்ளே எத்தனை கபடம், நாடகம், வேஷம் உள்ளதென யோசித்த பொழுது பல நாள் தன்னுடைய கண்களுக்கு தெரியாத அழகெல்லாம் இன்று தெரிந்தும் காந்தியது அர்ஜுனுக்கு.

ஒவ்வாமையோடு சமையலறை பக்கம் வந்தவன் வரவை உணர்த்த இலக்கியாவிற்கு பதட்டம் கூடியது. உணவு மேஜை கூட இல்லை அங்கு. சமயலறையோடு ஓட்டி இடையளவு இருந்த திண்டில் அருகில் தான் இரண்டு நாற்காலி இருந்தது.

அது தான் சமையல் மேஜை போல இலக்கியா எண்ணியிருக்க அர்ஜுனும் சரியாக அங்கு தான் வந்து அமர்ந்தான். வந்தவன் எதுவும் பேசாமல் இருக்க, இலக்கியா ஒரு தட்டில் இரண்டு சப்பாத்தி ஊற்றி ஒரு சிறு பௌலில் பண்ணீர் கிரேவி வைத்து அவன் முன் வைத்தாள்.

அவளை பார்த்து அந்த உணவை பார்த்தவன், அந்த பௌளை கட்டி, “இது என்ன தெரியுமா?” என்றான் மென்மையாக.

“பௌல்” என்றவள் அவன் தீர்க்கமான பார்வையில் எச்சிலை விழுங்கி.

“குழம்பு ஊத்துறதுக்கு யூஸ் பண்ற பௌல்” என்றாள் மெதுவாக. இகழ்ச்சியாக சிரித்தவன் இரண்டையும் அவளிடம் தள்ளி வைத்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.

“இது குழம்பு ஊத்த இல்லை. சூப் குடுக்குற பௌல்… உனக்கெல்லாம் அது எங்க தெரிய போகுது” அவன் இதழின் சிரிப்பை வைத்தே எத்தனை இகழ்வாய் தன்னை பார்க்கிறான் என உணர்த்துக்கொண்டாள்.

“நான் காலைல இந்த சாப்பாடு எல்லாம் சாப்பிட மாட்டேன். புரூட்ஸ், பாயில்ட் எக் தான்”

அவன் பேசுவதை கேட்டு திரும்பியவள் வேகமாக குளிர்சாதன பெட்டியை திறந்து முட்டை இரண்டை எடுக்க, கலங்கி பார்வை மங்கலாய் தோன்றிய அவள் விழிகளின் தவறில் கையிலிருந்த ஒரு முட்டை கீழே விழுந்துவிட பயத்தில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

கீழே விழுந்து சிதறியிருந்த முட்டையின் மேல் பதிந்திருந்த அர்ஜுன் கண்கள் பீதியடைந்திருந்த அவள் முகத்தை கைகள் கட்டி பார்க்க, ‘இடியட்’ என முணுமுணுத்தது அவன் இதழ்கள்.

அவன் பார்வையின் வீச்சிலிருந்து வெளியேறி இலக்கியா அடுப்பை பற்ற வைத்து முட்டையை வேக போட்டு அதன் பிறகே கீழே இருந்த முட்டையை சுத்தம் செய்தாள்.

“இன்னும் பைவ் மினிட்ஸ்ல எனக்கு சாப்பாடு வரணும், ஐ அம் கெட்டிங் லேட்” கைக்கடிகாரத்தை பார்த்து அழுத்தமாக கூறினான்.

அவன் அவசரத்தில் முட்டை சாப்பிடாவிடினும் பரவாயில்லை என முதலில் ஆப்பிள், ஆரஞ், க்ரேப்ஸ் என கலவையாக சிறிது சிறிதாக வெட்டி இரண்டு ஸ்பூன் தேன் மேலோட்டமாக ஊற்றி அவன் முன் வைத்தாள்.

மெதுவாக அதை உண்டவன் சில நிமிடங்களில், “ஹாஸ்பிடல்க்கு எப்போ வர்ற ஐடியா?” என்றான் அவளிடம்.

முட்டையை உரிப்பதில் மும்முரம் காட்டி அவனை பார்க்காமல் தயங்கினாள், “இன்னும்… இன்னும் ரெண்டு நாள் அப்றம் அத்தை போக சொன்னாங்க” என்றவளுக்கு வேர்க்க துவங்கியது.

புருவம் தூக்கி ஒரு பக்கமாக தலையை உயர்த்தி இறங்கியவன், “ஹ்ம்ம்… சரி தான். முன்னாடி அங்க வேலை பாத்தவ, இப்போ தான் அந்த ஹாஸ்பிடல்க்கு ஓனர்ல… எப்போ வேணாலும் லீவ் போடலாம். ஏன் வேலைக்கே போகாம சம்பளம் கூட வாங்கலாம்”

கைகளில் இருந்த முட்டையை விட வார்த்தைகளின் சூடு அதிகமாய் இருந்தது இலக்கியாவிற்கு. கண்ணீர் கன்னத்தில் வழிய அதை துடைக்காமல் வேலையை மும்முரமாய் பார்த்தவளிடம்,

“முட்டை உரிச்சு கண்ணீர் வந்தத இன்னைக்கு தான் நான் பாக்குறேன், ஆச்சிரியம்ல?” போலியாய் வியந்தவனை கண்ணீர் துடைத்து திரும்பி பார்த்தவள்,

“நான் இந்நேரம் டாக்டர் படிச்சிருந்தா ஆச்சிரியமா இருந்திருக்காதுல சார்?” கேள்வி எழுப்பினாள் வேதனையோடு.

அவள் கேள்வியில் கோவம் துளிர்த்தாலும் எள்ளலான புன்னகை மட்டுமே அர்ஜுனுக்கு, “ம்ம் வாய்ப்பு அதிகம் தான்” என்றான் சிரிப்போடு.

தனக்கு மனைவி கொடுத்த மூன்று முட்டைகளில் இரண்டை எடுத்து மீதம் ஒன்றை தொடவில்லை.

“முட்டை வேஸ்ட் பண்ணாத. இனிமேலாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ல?” வார்த்தைக்கு வார்த்தை அக்கனியை கொட்டி இலக்கியாவை வேதனைப்படுத்துவதையே முதல் கடமை போல் பேசினான்.

“ஏழைங்க தான் சார், ஆனா பிச்சைகாரங்க இல்லை” வெடுக்கென பதில் கூறி குளியலறையில் புகுந்து இலக்கியா மறைந்துகொண்டாள்.

மனைவி பேசியது தன்னை எதுவும் பாதிக்காதது போல் உணவை உண்டவன் அவள் வருகைக்கு மேலும் காத்திருக்க, அவளுக்கு பதில் வெளியிலிருந்து வந்தார் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்.

நாற்பது வயதை தொட்டவர் போல் இருக்காது அவர் உடை எல்லாம். கணங்களை உறுத்தாத வகையில் பாண்ட் ஷர்ட் அணிந்து தான் வேலைக்கே வருவார்.

காலை உணவு எப்பொழுதும் அர்ஜுனுக்கு எட்டு முப்பதுக்கு தான். இன்று இலக்கியாவை சீண்டவே அவளிடம் வம்பிற்கு வந்தது.

“என்னங்க அர்ஜுன் தம்பி இன்னைக்கு இவ்ளோ வேகமா சாப்டாச்சு?”

அதிசயமாய் தான் வரும் நேரம் உண்பவனை பார்த்து வியந்து போனார் அவர்.

பெயர் ஜோனா. கணவன் இல்லை. ஒரே ஒரு மகன் அவருக்கு. அவனுக்கும் உடலில் பிரச்சனை இருக்க அவனுக்காக முடிந்த மட்டும் அத்தனை வேலைகளையும் பார்ப்பார்.

அவர் மகனின் மருத்துவ செலவுகளை அர்ஜுன் செய்தாலும் இதர செலவுகளில் அவர் பங்கு தான் இருக்கும்.

“வீட்டம்மா வந்ததும் பசின்னு வயிர கத்த விட மாட்டிக்கிறாங்க ஜோனா” சிரித்தான் அவரிடம்.

“தம்பி பாப்பா இங்கையா இருக்கு?” ஆசையாக அவர் கண்கள் வீட்டை அலசியது.

ஆமாம் என தலை அசைத்தவன் எழுந்து சென்று அவள் செய்து வைத்திருந்த சப்பாத்தி ஒன்றை எடுத்து, “பண்ணீர் க்ரேவி செஞ்சிருக்கா. நீங்களும் சாப்பிடுங்களேன்” என்றான் மீண்டும் இடத்தில் அமர்ந்து உணவில் கவனத்தை செலுத்தி.

வந்ததும் தன் முன்பே அவள் வைத்த உணவின் மனம் இழுத்தது மருத்துவனை. வீறாப்பாக வேண்டாம் என்றவனால் இப்பொழுது விட முடியவில்லை. எடுத்து அமர்ந்துவிட்டான்.

“பாப்பா மேல இருக்கா தம்பி? ஆனா நிச்சயத்துல பாத்த நேரம் பாப்பா வேலை செய்யும்னு நான் நினைச்சு கூட பாக்கல” அவள் செய்திருந்த உணவின் மனத்தை ரசித்தவாறு வியந்தார் பெண்மணி.

“ஜோனா பொண்ணே மாறிடுச்சு” இதழ் பிரியா சிரிப்போடு அவன் எளிமையாக கூறியிருக்க ஜோனா அதிர்வாய் அவனை பார்த்தார்.

“ரெண்டு நாள் இங்க தான் க்கா இருப்பா. நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க” அர்ஜுன் மருத்துவமனை கிளம்பும் மும்முரத்தில் இருக்க அவனை கேள்வி மேல் கேள்வி கேட்கவும் விரும்பவில்லை அவர்.

இதுவே அவன் பேசும் அதிகப்படியான வார்த்தைகள் தான். அர்ஜுன் எழுந்து வந்து கையை கழுவும் சமயம் குளியலறையிலிருந்து வெளியேறிய இலக்கியா தன் முதுகில் குத்தும் பார்வையை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கு இவள் பார்ப்பதற்காக காத்திருந்த ஜோனா முகம் உடனே மலர்ந்தது.

எவர் என்று தெரியாத பெண்மணி, அவர் உடுத்தியிருக்கும் உடை என ஒரே நொடியில் அளந்த இலக்கியா அவர் வீட்டிற்கு வேலை செய்ய வந்திருப்பவர் என யோசிக்கவில்லை.

அவர் புன்னகைக்கு எளிமையான ஸ்நேக புன்னகை ஒன்று சிந்தினாள். அவளது பால் நிறத்திற்கு அழுது வீங்கிய கண்களும் சிவப்பேறிய மூக்கும் பார்த்த அர்ஜுனுக்கே நெருடியது.

அதை விட ஜோன்னாவிற்கு அதிர்ச்சி. அவள் எளிமையான உடை, தோற்றம், சிரிப்பு என அர்ஜுன் விரும்பி இவளை ஏற்றிருக்க வாய்ப்பில்லை என உறுதியாக சரியாக கணித்தார்.

இலக்கியா அவரிடம் பேசும் நிலையில் கூட இல்லை. வரவேற்பறையில் வைத்திருந்த தன்னுடைய ஹாண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு கணவனிடம் கூட சொல்லாமல் கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

இவன் தான் ஏதோ செய்துள்ளான் என ஜோனா அர்ஜுனை பார்க்க, “கோவக்காரி” என்றான் உணர்ச்சிகளற்று.

“காலைல இனிமேல் பொறுமையா வாங்க ஜோனா, அவ பாத்துக்குவா” அவரும் சரி என்க வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

பார்க்கிங் வந்து வாகனத்தை எடுத்து வெளியேறிய நேரம் இலக்கியா சாலையோரம் நடந்து சென்றாள். பஸ் ஸ்டாப் அடைவதற்கே நடந்து சென்றால் இருவது நிமிடம் ஆகும்.

அவள் எங்கு செல்கிறாள் எதற்கு செல்கிறாள் என்பதை தெரியாமல் அவளிடம் பேசவும் வீம்பு அர்ஜுனுக்கு. ஆனால் கண்ணை துடைத்து துடைத்து நடக்கும் மனைவியை பார்த்ததும் கர்வம் எல்லாம் அழிந்தது போல் அவளை நோக்கி வாகனத்தை செலுத்தியவன் அவள் வழியை மறித்து ஓரமாக வாகனத்தை நிறுத்தினான்.

இவன் வாகனம் என அறிந்த இலக்கியா அவனை பார்க்க, “ஆட்டோ புடிச்சு போ” என்றான் அதிகாரமாக.

“இல்ல சார் நடந்துப்பேன்” என்றாள் செல்லும் முனைப்போடு.

“பஸ் ஸ்டாப் ரொம்ப தூரம்” அவனை அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் போனது அர்ஜுனுக்கு.

“ஆட்டோல போற அளவு என்கிட்ட காசு இருக்கு சார்” அந்த அர்த்தத்தில் பேசியிராத அர்ஜுனுக்கு எரிச்சல் வந்தது, “வண்டில ஏறு” என்றான் அழுத்தமாக.

“இல்லை சார் நான் வேற பக்கம் போகணும்” அவனோடு செல்ல விருப்பமில்லை அவளுக்கு, அளவுக்கு மீறிய காதல் இருந்தாலும் அவனிடம் அடிமேல் அடிமேல் அடி வாங்கிக்கொண்டே இருக்க அவளது வீம்பு இடம் கொடுக்கவில்லை.

அவள் நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் காரின் கதவை திறந்துவிட்டு, “உள்ள வா” என்றான் மீண்டும்.

சுற்றம் பார்த்தவள் வேறு வழியில்லாமல் உள்ளே அமர, வேகமெடுத்தது அவன் வாகனம். ஐந்து நிமிடம் பயணம் தான் என்றாலும் இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை.

இருவருக்கும் இருவர் மீதும் கோவம். மெயின் ரோட்டின் பஸ் ஸ்டாப்பில் வாகனத்தை அர்ஜுன் நிறுத்த, இறங்க போனவளை தடுத்து ஆட்டோ லாக் செய்தான்.

அவனை பார்க்காமல் கையிலிருந்த ஹாண்ட்பேக்கை மட்டுமே இலக்கியா பார்த்திருக்க, டாஷ்போர்டில் இருந்த டிஸ்யூ இரண்டு எடுத்து அவளிடம் நீட்டினான், “முகத்தை துடை” முன்னால் இருந்த கண்ணாடியை திருப்பி வைத்தான் அவள் வசத்திற்காக.

அழுத தடயம் கன்னத்தில் தெரிய அவன் கொடுத்த டிஸ்யூ வைத்து துடைத்து மீண்டும் கதவை திறக்க போக இப்பொழுதும் திறக்க முடியவில்லை. இலக்கியாவும் அவனிடம் பேசவில்லை, அவன் பக்கம் திரும்பவும் இல்லை.

கை கடிகாரத்தில் மணியை மணியை பார்த்தவள் அவன் மௌனம் கேட்ட கேள்விக்கு பதில் இருந்தும் பதில் சொல்லவில்லை. அர்ஜுனுக்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது, எதையும் ஏற்கக்கூட இல்லை. அடமாய் இருந்தான்.

“எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்” என்றாள் மெல்லிய குரலில்.

இதற்காகவே காத்திருந்தது போல் கதவு அன்லாக் சத்தம் வந்து நீ செல்லலாம் என கூற, திரும்பி அவனை ஒரு நொடி முறைத்தவள் வேகமாக இறங்கி சென்றிட, அடுத்த நொடி அர்ஜுனின் வாகனம் தார் சாலையில் பறந்தது.

“இவருகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லணுமாக்கோம்? அப்டி என்ன திமிரு? காலைல அந்த பேச்சு பேசிட்டு இப்ப என்ன அக்கறையாம்” கணவனை தாறு மாறாக திட்டிக்கொண்டே இருந்த வேளையில் பேருந்து வர தந்தையை காண பயணித்தாள்.

அங்கிருந்து இருவது நிமிட பயணத்தில் தான் இருந்தது அவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட். இலக்கியா சென்ற நேரம் அவள் தந்தைக்கு ஓய்வு நேரமாக இருக்க காலை உணவை சமைத்துக்கொண்டிருந்தார்.

“சமையல் எல்லாம் செம்மையா செய்விங்க போல வாசம் கீழ் வர வருது” என்றாள் வாசலில் சாய்ந்து நின்றவாறே. மகளின் வரவை எதிர்பாராமல் அவள் சத்தம் கேட்டதும் இன்பமாய் அதிர்ந்தவர்,

“டேய் நீ வர்ரன்னு சொல்லவே இல்ல அப்பாக்கு” ஒரு நாள் மகள் உடன் இல்லை என்றதும் அவருக்கு வேலையே ஓடவில்லை.

விருப்பமில்லாமலே நகர்ந்தது பொழுது. இரவில் மகள் கொடுத்தனுப்பும் அந்த சுவையான தேநீருக்கு முன்பு தான் போட்டது ஏதோ வெந்நீரில் சிறிது டீ தூளை கொட்டியது போல் கசந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!