பாறையில் மலர்ந்த தாமரையே! 23
இத்தனை வருடங்களாக ஊரார் மெச்ச கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவிட்டு திடீரென மூத்த மகன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தனி குடுத்தனம் போகப்போகிறேன் என்றதும் உறக்கத்தை தொலைத்து நிம்மதி இழந்தார் மங்கை..
வாத்சல்யனிடம் கண்ணீர் வடித்து எவ்வளவோ கெஞ்சி கதறி பார்த்துவிட்டார்..
“அம்மா யாரையும் புண்படுத்தனும்னு எனக்கு நோக்கமில்லை.. என் மனைவியோட நிம்மதியும் சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம். ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க..! நீங்க என்ன சொன்னாலும் என் முடிவு மாற போறதில்லை..!” என திட்டவட்டமாக தன் முடிவை சொல்லிவிட்டான் அவனும்.
செல்வவிநாயகம் கூட மகனிடம் பேசி பார்த்தார்.. “குடும்பம்னா சண்டை சச்சரவுன்னு வர்றது சகஜம்தானேப்பா.. புவனா பக்குவமில்லாம சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு நீ எடுத்த முடிவு சரியில்லைன்னு தோணுது.. இத்தனை வருஷம் ஒன்னா ஒரே குடும்பமா வாழ்ந்துட்டு.. திடீர்னு நீ வெளியே போறேன்னு சொன்னா.. எங்களால அந்த முடிவை சட்டுன்னு ஏத்துக்க முடியல.. உங்கம்மா அழுதுட்டே இருக்கா..! கொஞ்சம் யோசிப்பா வாசி..!”
Advertisement
“உடனே ஏத்துக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.. பொறுமையா யோசிச்சு பார்த்து என் முடிவை அக்சப்ட் பண்ணுங்கப்பா..! உங்களுக்கு உங்க சின்ன மகன்தான் முக்கியம்னு ஆனபிறகு நானும் என் பொண்டாட்டியும் இந்த வீட்டுக்கு வேண்டாத பொருள் போலத்தானே..! அதனால எங்கபிரிவு பெருசா உங்களை பாதிக்காது..!” சிரித்துக் கொண்டே ஊசி இறக்கினான்.
“என்னிக்குமே நாங்க உன்னை அந்த மாதிரி நினைச்சதில்லப்பா..! புவனா பேசினதுக்கு எங்களுக்கு தண்டனையா..?” செல்வவிநாயகத்தின் முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருந்தது.
“புவனா பேசின பேச்சுக்கு அவளை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கலையே நீங்க..! சாரிப்பா எங்களுக்கு குழந்தைதான் இல்ல.. ஆனா உணர்ச்சிகள் இருக்குது.. நாங்க இன்னும் ஜடமாகி போகல..!”
Advertisement
“குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னா சில இடங்கள்ல அனுசரிச்சு போகணும்னு நினைக்கறோம்.. புவனாவை என்ன திட்டினாலும்.. புத்தி சொன்னாலும் அவ தப்பை உணர போறதில்ல..! அழுது அமர்க்களம் பண்ணி பெட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவா.. இந்த பழியும் உங்க மேலதானடா வரும்..?”
Advertisement
“அதையேதான்ப்பா நானும் சொல்றேன்.. யாருக்கும் எங்களால எந்த பாதிப்பும் வந்துடக் கூடாதுன்னுதான்.. தனியா போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். இனி காலங்காத்தால எங்க மூஞ்சியில முழிக்கணும்னு யாருக்கும் அவசியமில்லை பாருங்க..!” என்றதும் செல்வவிநாயகத்தின் முகம் கருத்து போனது.
“நீ முடிவெடுத்துட்ட.. இனி நாங்க என்ன சொன்னாலும் கேட்டுக்க மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு..! இப்ப நீ கோவத்துல இருக்க வாசி..! பொறுமையா யோசிச்சு பாரு.. நான் சொன்னது நியாயம்னு புரியும்..! ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கறேன்.. எனக்கும் உன் அம்மாவுக்கும் நீயும் லஷ்மியும் இங்கிருந்து போறதுல சுத்தமா இஷ்டம் இல்லை..!” என்று விட்டுப் போனார் அவர்..
மங்கை முடிந்த மட்டும் அவர்களை இந்த வீட்டில் நிறுத்தி வைத்துக்கொள்ள போராடினார்.
Advertisement
மருமகளிடம் வந்து மன்னிப்பு கேட்கவும் செய்தார்.
“சம்பந்தி வீட்டு ஆளுங்க முன்னாடி பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்னுதான் நான் வாயை திறக்கல..! இந்த பொண்ணு பெத்து பொழைச்சு வந்தா போதும்னு மட்டுந்தான் என் மண்டையில ஓடிக்கிட்டே இருந்துச்சு..! பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியல..! அந்த நேரத்துல ஆளாளுக்கு பேச போய் சண்டை வந்து ஆஸ்பத்திரி கலவர பூமியா மாற வேண்டாமுன்னு நினைச்சேன்.. ஆனா நான் உனக்காக நின்னுருக்கணும்.. தப்புதான்.. இந்த அத்தையை மன்னிக்கக் கூடாதா..? அதுக்காக ரெண்டு பேரும் கோவிச்சுகிட்டு தனியா போறேன்னு சொல்றது எந்த விதத்தில நியாயம்..! நீ அவன்கிட்ட பேசி கொஞ்சம் புரிய வை லஷ்மி..!” அவள் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார் மங்கை..
“அச்சோ அத்தை.. எனக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல..! சில பிரச்சனைகளை தவிர்க்கணும்னா தனியாய் போறது பெட்டர்ன்னு தோணுச்சு.. பாவம் நீங்களும் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு எத்தனை நாள் பதில் சொல்லிட்டே இருப்பீங்க..! புவனாவுக்கு என்னை பார்த்தாலே எரிச்சல். உங்களுக்கு மனசு கஷ்டம்..”
“ஐயோ அப்படியெல்லாம் இல்லம்மா லஷ்மி..!”
“இல்லத்த.. அதுதான் உண்மை..! நீங்களும் புவனாவும் ஒற்றுமையா இருக்கீங்க.. எனக்கு புரியுது.. உங்களுக்கு என்னை விட புவனாவைத்தான் பிடிக்கும்.. நல்ல விஷயந்தான். நானும் அதையேத்தான் சொல்றேன்.. தேவையில்லாம எனக்காக நீங்க அவளை பகைச்சுக்க வேண்டாம்.”
“இல்ல லக்ஷ்மி.. நான் அப்படி பாரபட்சம் பார்க்கறதே இல்லை.. எனக்கு நீயும் அவளும் ஒன்னுதான்.. எத்தனை நாள் உனக்காக அவகிட்ட சண்டை போட்டுருக்கேன் தெரியுமா..?”
லக்ஷ்மி வெறுமையாய் சிரித்தாள். மாமியார் தன் மனதை மாற்றுவதற்காக இப்படி பொய்க்கு மேல் பொய்யாக அடுக்கிக் கொண்டிருக்கிறார் என அவளுக்கு புரியாமல் இல்லை..
அந்த சிரிப்பை புரிந்து கொண்டு.. குற்ற உணர்ச்சியோடு தவித்துப் போனார் மங்கை.
“உங்கள கஷ்டப்படுத்தனும்னு நாங்க இந்த முடிவெடுக்கல அத்தை..! பிரச்சனை ஆரம்பிச்சாச்சு.. இனி ஒன்னு போட்டு ஒன்னுன்னு சண்டை வந்துட்டே இருக்கும்.. எல்லார்க்கும் தேவையில்லாத மனகஷ்டம்.. ப்ளீஸ் இதுக்கு மேல எங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க..!” தன்மையாக அதே நேரத்தில் உறுதியான த்வனியில் மறுத்துவிட்ட பிறகு இயலாமையோடு அங்கிருந்து செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவருக்கு.
அப்படியும் கூட புவனாவை அழைத்து வந்து லஷ்மியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.
குழந்தை பிறந்த பிறகு கீர்த்தனா தன்னையும் தன் குழந்தையும் காப்பாற்றியது லஷ்மிதான் என்பதை பேச்சுக்கு நடுவே அரைகுறையாக சொல்லியிருக்க.. புத்திக்கு தெரிந்தாலும் லஷ்மி செய்த உதவியை ஏற்றுக்கொள்ள மனமில்லை புவனாவிற்கு.
ஆனால் மங்கை சராமாரியாக சாடி சண்டை போட்ட பிறகு அவருக்கு பயந்து இங்கு வந்து சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறாள் புவனா.
“பரவாயில்லை புவனா நான் அதை பெருசா எடுத்துக்கல..!” அத்தோடு லஷமி முடித்துக்கொள்ள.. சடசடவென கீழே இறங்கி சென்றுவிட்டாள் அவள்..
லஷ்மி கீழே இறங்குவதே இல்லை.. வாத்சல்யன் அலுவலகத்துக்கு போகாமல் அருகிலேயே இருந்து அவளை பார்த்துக் கொள்கிறான்..
ஒருவேளை மருமகளுக்கு தான் பணிவிடை செய்தால் மகனின் மனம் மாறலாம் என்ற நப்பாசையோடு.. அவ்வப்போது ஏதேனும் உதவி வேணுமா என்று கேட்டுக்கொண்டு மாடியேறி வரும் மங்கையை லஷ்மிக்காக எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை வாத்சல்யன்.
“வேண்டாம்மா.. எங்களுக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. இந்த வயசான காலத்துல எதுக்காக மாடியேறி வர்றீங்க..! அவளை நான் பார்த்துக்குவேன்.. உங்களுக்கு சிரமம் வேண்டாம்” என நாசுக்காகவே மறுத்து விடுகிறான்..
காபி டீ தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து அவனே போட்டுக் கொள்கிறான்.. உணவு சில நேரங்களில் வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொள்கிறார்கள்.. சில நேரங்களில் தனக்கும் தன் மனைவிக்கும் மட்டும் வாத்சல்யன் சமைத்துக் கொள்கிறான். ஒரு சில சமயங்களில் மட்டும் மீனாட்சியின் வீட்டிலிருந்து உணவு வருகிறது..
“ஒரே வீட்ல தனித்தனி சமையல் இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகுமா..! எல்லாம் உன்னாலதான்.. நீ கொஞ்சம் வாயை வச்சுட்டு சும்மா இருந்திருந்தா பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது..!” ஆத்திரத்தோடு மருமகளிடம் எரிந்து விழுந்தாள் மங்கை.
“சும்மா ஏன் என்னையே திட்டறீங்க..! நான் சொன்னதுனால ஒன்னும் அவங்க தனியா போகல.. பேலஸ் மாதிரி அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டாங்க.. சொகுசா வாழலாம்னு முடிவு பண்ணியாச்சு.. தனியா போறேன்னு சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களா..? அதான் என்னை ஒரு காரணமா இதுல இழுத்து விட்டு தனிக்குடித்தனம் போறாங்க.. இது புரியாம எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு சும்மா சும்மா என்கிட்ட சண்டைக்கு வராதீங்க..!” என வாய்க்கு வாய் பதிலடி கொடுத்து விட்டுப் போனாள் புவனா.
மீனாட்சிக்கும் தினமும் வேலைக்கு போக வேண்டியிருந்ததால் லஷ்மியோடு அமர்ந்து மனம் விட்டு பேச முடிவதில்லை.. அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு இரண்டொரு வார்த்தைகள் விசாரித்துவிட்டு புறப்பட்டு விடுவாள்.
அன்றொரு நாள் தீப்தியை அழைத்துக்கொண்டு லஷ்மியை சந்திக்க வந்திருந்தாள்..
வாத்சல்யன் அந்த அறையின் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்து மடிக்கணினியில் தனது வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்..
தீப்தியை கண்டதும் லஷ்மியின் கண்கள் ஜொலிப்பதையும்.. சோர்வு நீங்கி அவள் கலகலப்பாக உரையாடுவதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
ஆனால் தீப்திதான் லஷ்மியிடம் போகவே மாட்டேன் என அழிச்சாட்டியம் பண்ணியது..
“ஆன்ட்டிகிட்ட போ..! இங்க வா அவங்க கூப்பிடறாங்க பார்..! பதில் சொல்லு தீப்தி..!” என மீனாட்சி கட்டாயப்படுத்தி அவளோடு நெருங்க வைத்தாலும்.. முகத்தை திருப்பிக் கொண்டு அடம் பண்ணியது.
லஷ்மிக்கு இதில் வருத்தம்தான் என்றாலும்.. வெகு நாட்களுக்கு பிறகு தீப்தியை கண்ணார கண்டதே உடம்புக்குள் புது தெம்பு புகுந்து முறுக்கி விட்டார் போல் இருந்தது.
கை குணமாகி வருகிறது ஆனால் உடைந்த மனம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் திணறியது.
தனிக்குடித்தன முடிவு லஷ்மியின் நெஞ்சத்துக்கு அமைதியை தரும். உடனடியாக பழைய லஷ்மியாக மாற முடியாமல் போனாலும்.. மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்புவாள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில்.. எல்லாம் முதலுக்கே மோசமாய் போய்க்கொண்டிருக்கிறது..
தனிமை கிடைக்கும் நேரங்களில் எங்கோ.. எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள் லஷ்மி.. வாத்சல்யன் பக்கத்தில் வந்து உலுக்கிய பிறகுதான் சகஜ நிலைக்கு திரும்புகிறாள்.
கூடுமானவரை லஷ்மியை தனியாக இருக்க விடுவதில்லை அவன்.
வேணுமென்றே பேச்சு கொடுத்து அவளை கலகலப்பாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் எல்லாம் செயற்கைத்தனமாக போய்விடுகிறது.
இதைவிட மோசமான ஒன்று நிகழ்ந்த பிறகுதான் நிலைமை விபரீதமாக செல்வதை உணர்ந்து கொண்டான் வாத்சல்யன்.
அன்று மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தவன்.. பக்கத்தில் தன் அணைப்புக்குள்ளிருந்ந மனைவியை காணாமல் விழிப்பு தட்டி எழுந்தான்.
“சந்தா..!” உறக்க கலக்கத்தில் பிதற்றி விடிவெள்ளி வெளிச்சத்தில் அவளை தேடினான்.
கழிவறை பக்கம் விளக்கு எரியவில்லை கதவும் சாத்தப்பட்டிருக்க.. அவசரமாக போர்வையை விலக்கிவிட்டு.. மனைவியை பரிதவிப்புடன் தேடத் தொடங்கிய நேரத்தில் சுவற்றோடு ஒன்றி போய் நின்றிருந்தாள் அவள்.
சந்தும்மா.. அங்க என்ன பண்ற..? நெஞ்சம் திடுக்கிட பதட்டத்துடன் கேட்க.. அவளிடம் பதில் இல்லை அசைவும் இல்லை..
பக்கத்தில் போய் முகத்தை நிமிர்த்தி பார்க்க.. உறங்கிக் கொண்டிருந்த தினுசில் கண்களை மூடியிருந்தாள் சந்தான லஷ்மி.
“தூக்கத்துல நடக்கற வியாதியா..?” அதிர்ச்சியில் இதயம் வேகமாக துடித்திருக்க, அலுங்காமல் மனைவியை அழைத்து வந்து மெத்தையில் படுக்க வைத்தான் வாத்சல்யன்.
மறுநாளும் மிக ஜாக்கிரதையாக அவளை கைவளைவிலேயே வைத்திருந்தும் அசந்த நேரத்தில் பால்கனி பக்கம் போய் தலை தொங்க உறங்கிக் கொண்டிருந்தாள் சந்தான லஷ்மி.
இதை அலட்சியமாக அப்படியே விடக்கூடாதென முடிவு செய்து தன் மனைவியை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றான் வாத்சா..
“பயங்கரமான டிப்ரஷன்ல இருக்காங்க.. நீங்க வேற தனிக்குடித்தனம் போக போறதா சொல்றீங்க.. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத சூழ்நிலை இன்னும் கூட கண்டிஷனை மோசமாக்கலாம்.. எதுவானாலும் யோசிச்சு பண்ணுங்க.. அப்புறம் அவங்க ஆழ்மனசுக்குள்ள ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு.. அது நிறைவேறாம உங்க மனைவியால பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது. நான் சொல்றது உங்களுக்கு கஷ்டமா கூட இருக்கலாம்.. இந்த மாதிரியான நேரத்துல தற்கொலை எண்ணங்கள் கூட வர வாய்ப்பிருக்கு.. மெடிசன்ஸ் பிரிஸ்கிரைப் பண்றேன்.. முடிஞ்ச வரைக்கும் யாராவது ஒருத்தர் பக்கத்துலயே இருங்க..! பிரச்சனை என்னன்னு கண்டுபிடிச்சு அதை சரி செய்ய பாருங்க..!” என்றார் அவர்.
தட்டுதடுமாறி மேலே ஏற முயற்சிக்கும்போது யாரோ காலை பிடித்து இழுத்து அதள பாதாளத்தில் தள்ளுவதை போல் நொந்து போனான் வாத்சல்யன்..
“பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்க முடியாத நானெல்லாம் என்ன ஆம்பள..! ச்சே!” யாருமில்லாத நேரத்தில் ஓங்கி தன் கையை சுவற்றில் குத்திக் கொண்டான்.
சந்தான லஷ்மியின் வெறுமையான மனநிலை அவனையும் தாக்கியது.. நிம்மதி போயிற்று.
“உனக்கு என்னதான்டா வேணும்..! அம்மு உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்..! மனசுல இருக்கறதை வெளிப்படையா கொட்டி தீர்த்துரு..!” என கையைப் பிடித்துக் கொண்டு அவளுக்குள் என்னவென அறிய முற்பட்டபோது.. கணவனுக்காக சர்வ வளங்களையும் பெற்று சந்தோஷமாக வாழ்வதைப் போல் காட்டிக் கொண்டாள் லஷ்மி.. ஒருவேளை தனக்கு என்ன வேண்டுமென அவளுக்கே தெரியவில்லையோ என்னவோ..!
குழந்தை ஏக்கமா..? பத்து வருடத்தில் இல்லாத கவலையா இப்போது அவளை மன உளைச்சலை தள்ளி விடப் போகிறது.. குழப்பமும் கவலையுமாக சேர்த்து மருகினான் வாத்சல்யன்.
அன்று இரவு தூக்கத்தில் “தீப்தி..தீப்தி பாப்பா..” என அவள் புலம்புவதை கேட்ட பிறகுதான் அடுத்து என்ன செய்ய வேண்டுமென அவனுக்கு புரிந்து போனது.. அன்றைய இரவில் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்தவன் திடமான ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
கைகட்டை அவிழ்த்தாயிற்று.. பூரண குணமடைந்து விட்டாள் லஷ்மி..
குளித்து முடித்து அவளை தயாராக இருக்கச் சொல்லிவிட்டு பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என அறையை விட்டு வெளியேறி சென்றவன் தீப்தியோடு உள்ளே வந்தான்.
“ஏய்.. குட்டி..! என்ன திடீர்னு இவளை கூட்டிட்டு வந்துருக்கீங்க..!” புன்னகையோடு கணவனிடம் கேட்டபடி தீப்தியின் கன்னத்தை ஆசையாக கிள்ளி கொஞ்ச போக அதுவோ மிரண்டு பின்வாங்கியது.
“சந்தா.. என் கண்ணம்மா.. உனக்கே தெரியும் எனக்கு நீதான் முக்கியம்..! உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்னு..” மெல்ல தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தான்.
“சரி..? அடியே இப்ப சொல்றீங்க..!”புரியாமல் விழித்தாள் அவள்.
“குழந்தையோட தலையில உன் கைய வை..!” அவன் தீர்க்கமாகச் சொன்ன பிறகுதான் விபரீதத்தை உணர்ந்தாள்.
“இ.. இல்ல! வாத்சா.. நீங்க இப்படி பேசக்கூடாது.. இந்த குழந்தைக்காக எவ்வளவு சண்டை போட்டீங்க என்கிட்ட..! நா.. நாம எப்படி..?” அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன..
“குழந்தை இல்லைங்கற ஒரே ஒரு காரணத்தை வச்சுக்கிட்டு இந்த ஜனங்க நம்மள வலிக்க வலிக்க அடிக்கறாங்கள்ல.. நாம மட்டும் ஏன் மத்தவங்களுக்காக யோசிக்கணும்.. இனி சுயநலமா வாழுவோம்.. கடவுள் நமக்காக கொடுத்த ஆப்ஷன் இது.. இதுதான் உனக்கு சந்தோஷத்தை தரும்னா.. நான் இதை செய்ய தயார்.. எனக்கு நீ வேணும் சந்தா..! அவ்வளவுதான்.” என்றான் குரல் தழுதழுக்க.
“வா..த்சா..!”
“நிச்சயமா இதை வச்சு உன் மனசை நோகடிக்க மாட்டேன் அம்மு.. குழந்தை இல்லைன்னு நம்மள கேவலப்படுத்தி சிரிச்சவங்க முன்னாடி.. எங்களாலயும் முடியும்னு ஒரு குழந்தையை பெத்து காமிக்கணும்.. இப்ப எங்கடா போய் முகத்த வச்சுகுவீங்கன்னு அவங்க முன்னாடி போய் நிக்கணும்..!”
சிவந்து போயிருந்த அந்த கண்கள் கொண்டிருந்த தீவிரத்தை கண்டு கலங்கிப் போனாள் சந்தா..
“ஆனா வாத்சா..?” நா குழறியது.. பேச முடியவில்லை..
“எதுவும் பேசாத சந்தா..! பட்டதெல்லாம் போதும்.. சேர்ந்து முடிவெடுப்போம் வா..!” கைநீட்டி அழைக்க.. பக்கத்தில் வந்து அவனோடு கைகோர்த்துக் கொண்டாள் லஷ்மி.. அவன் கண்கள் கலங்கியிருந்தன இவளுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை..
வாயில் விரலை வைத்தபடி இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் தீப்தி..!
இருவரும் அந்த குழந்தையின் தலையில் கை வைத்து கண்கள் மூடி ஆத்மார்த்தமாக.. அந்த வரத்தை கேட்டனர்.
“எங்களுக்கு குழந்தை வேணும்..!”
‘கேட்ட வரம் கிடைக்கும்.. ஆறு திங்களுக்கு பிறகு ஒன்று அஸ்தமனமாகும்.. இன்னொன்று உதயமாகும்..!’
மீண்டும் அதே அசரிரி.. இருவரது கனவிலும் ஒரே நேரத்தில்..!
தொடரும்.

என்ன இப்படி பண்ணிட்டீங்க..இது மீனாட்சிக்கு பண்ற துரோகம் இல்லையா…ஒரு குழந்தைய இழந்துட்டு இன்னொன்னு வேணும்னு கேக்குறது ரொம்ப மோசம்..வாத்சா இத நான் உன்கிட்ட இருந்து சுத்தமா எதிர் பார்க்கல…😭😭😭
வாச்சா சாந்தா ரெண்டு பேரும் இப்போ தான் நல்லா முடிவோடு பேசி இருக்கீங்க இத மங்கை எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க ஆனா எவ்வளவு காலம் தான் பொறுத்து போக முடியும் 😏😏😏
இப்போ கூட தப்ப உணர்ல இந்த புவனா 🤨🤨🤨
என்னமா இப்படி சொல்லிட்டீங்க எது நடக்க கூடாது நினச்சனோ அதுவே நடந்திட்டு அடுத்து என்ன ஆகுமோ 🤧🤧🤧