மறப்பதில்லை மதிமுகம்-25
அத்தியாயம்-25
அண்ணா சாலையின் கடுமையான போக்குவரத்து நெரிசலில், மாட்டிக்கொண்டதில் ஆதி மிகுந்த எரிச்சலில் இருக்க, பக்கத்தில் மதியோ மிகுந்த உற்சாகத்துடன் வழியெங்கும் இருந்த விதவிதமான கடைகளைப் வேடிக்கை பார்த்துக் கொண்டு,அங்கே நடமாடும் மனிதர்களைப் பற்றி அவளாகவே கதைகள் கட்டி வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாள்.
“எஃப் எம் ரேடியோ மாதிரி நிறுத்தாம பேசுறாளே கொஞ்சமாச்சும் பிரேக் விடுறாளா பாரு…’அவன் அலுத்துக்கொண்டாலும், உள்ளுக்குள் அவளது பேச்சை ரசிக்கவே செய்தான்.
Advertisement
அந்த ஒருதலைப்பட்சமான உரையாடலில், அவ்வப்போது “ம்ம்” கொட்டுவதும் “சரி, ஆமாம்” என்று, தலையசைப்பதையும் தவிர அவனுக்கு வேறு வேலை எதுவும் இருக்கவில்லை.காரின் குறுகிய இடத்திற்குள் மதியின் குரல் மட்டும்தான் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகு.. தான் தனிமையில் இல்லை என்பது போல் உணர்ந்தான் ஆதி.
சிக்னலில் கார் நிற்க,
Advertisement
“அய்யோ… நான் சாக்லேட்டை டேஸ்ட் பண்ணவே மறந்துட்டேனே…” என்று திடுமென்று நினைவு வந்தவளாக பையிலிருந்து சாக்லேட் டப்பாவை எடுத்தாள்.
Advertisement
“அதானே இன்னும் கேக்கலையேன்னு பார்த்தேன்.” என்றான் நக்கலாக,
மதி பாக்ஸைத் திறந்து,சிறிய இதய வடிவில் இருந்த சாக்லேட்டை எடுத்து ஆசையாக கடித்தவள் மறுகணம்
“அய்ய்யே… இது கசக்குது…” என்று முகத்தைச் சுளிக்க
Advertisement
அவளது முகம் போன போக்கைப் கண்டுசிரித்துக்கொண்டே,
“அது டார்க் சாக்லேட்டா இருக்கும் மதி…”என்றான்.
“என்னவோ போங்க… சாக்லேட்னாலே இனிப்பாத்தானே இருக்கணும்..?”
“எல்லா சாக்லேட்டும் அப்படி இருக்காது.”
“இந்தக் கசப்பான சாக்லேட்டை யாராவது சாப்பிடுவாங்களா?” தன் கையில் மீதமிருந்த அந்த கசப்பான பொருளை என்ன செய்வது என்று அவள் விழித்தாள்.
“அதை எனக்கு கொடு, நான் சாப்பிடறேன்”
மதி தனக்கு ஊட்டி விடுவாள் என்ற அனுமானத்தில் அவன் ‘ஆ’ என்று வாயைத் திறக்க,அவளோ அவனது கையை நோக்கி நீட்டினாள்.இருவருமே ஒருகணம் செய்வதறியாது திகைத்தனர்.
அவன் முகம் கன்றி வாயை மூடுவதற்குள், மதி சட்டென்று சாக்லேட்டை அவனது வாய்க்குள் திணித்தாள். ஆனால், அவன் அதற்குள் வாயை மூடிவிட்டிருக்க அவளது விரல் அவனுடைய உதடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டது.
இருவரும் அதிர்ந்து விழிக்க அதற்குள் சிக்னல் பச்சையாக மாறிவிட பின்னால் இருந்து பலத்த ஹார்ன் சத்தம் கேட்டது.
அவன் சட்டென்று அவளிடமிருந்து தன் பார்வையைத் திருப்பி, காரை முன்னோக்கி நகர்த்தினான்.
மதி தன் கையை பின்னுக்கு இழுத்து, ஒருவித சங்கடத்துடன் தன் கைகுட்டையால் கையில் இருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.
அவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த சிறு பதற்றத்தை தணிக்க ஆதி மியூசிக் பிளேயரை ஆன் செய்ய இருவருக்குமிடையேயான அமைதியை இதமான இசை இட்டு நிரப்பியது.
சற்று பொறுத்து,
‘என்ன எதுவும்பேசாம இருக்கா? எதோ சரியில்லையே?’ என்று ஓரக்கண்ணால் அவளைப்பார்க்க
மதி அப்படியே அயர்ந்து தூங்கியிருந்தாள்.
“அதுக்குள்ள தூங்கிட்டாளா ஸ்லீப்பிங் பியூட்டி..?”
அவன் இதழ்களில் புன்னகையோடு காரை ஓட்டினான். கார் ஒரு கூர்மையான இடது திருப்பம் எடுத்தபோது, அவளது தலை அவன் பக்கமாகச் சரிந்து, அவனுடைய தோள் மேல் சாய்ந்தது.
அந்த எதிர்பாராத நெருக்கத்தில் ஒரு கணம் அவனது மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
அவளிடமிருந்து வந்த அந்த இனிய நறுமணம் அவனைக் கிறங்கடிக்க அவனையறியாமல் ஆழ்ந்து சுவாசித்தான்.
வீடு வந்ததும் தன் தோள்மேல் சாய்ந்து தன் உடல் முழுதும் சிலிர்க்க வைத்துக்கொண்டு, இது எதையுமே அறியாமல் சொகுசாக தூங்கும் மதியைப் பார்த்தான்.
அவள் தூங்கும் அழகை சற்று நேரம் ரசித்துப் பார்த்தவன்,
“பேபி..” என்று சிசுகிசுப்பாக அழைக்க..
அரைத்தூக்கத்தில் “ம்ம்..” என்றபடி இன்னும் அவனது தோளில் வாகாய் சாய்ந்துகொண்டாள்.
சிறு புன்னகையுடன் அவளது கன்னத்தில் லேசாகத் தட்டி, “மதி… வீட்டுக்கு வந்தாச்சு…” என்றான் சற்று உரக்க
அவள் சட்டென்று கண்ணைத் திறந்து, “ஸாரி” என்று முணுமுணுத்தபடி விலகினாள்.
வீட்டுக்குள் சென்றதும், தான் வாங்கிய ஷாப்பிங் பைகளை எல்லாம் சோபா முழுவதும் பரப்பிவிட்டு, தானும் அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.
“சரி, இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம், போய் தூங்குவோம்…” ஆதி தன் கால்களை அலுப்புடன் நீட்டினான்.
மதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“என்னது..? நாம இன்னும் டின்னரே சாப்பிடலையே…”
இப்போது அதிர்ச்சியடையும் முறை அவனுடையதாகியது.
“இதுக்கு மேல டின்னர் வேற சாப்பிடனுமா?”
“ஸாரி மதி… நான் இப்ப எதுவும் சமைக்கிற நிலைமைல இல்லை..”
“அப்ப வெளியில இருந்து ஆர்டர் பண்ணலாம்… பீட்சா ஓகேவா?”
“சரி ஓகே…”
அவன் பீட்சா ஆர்டர் செய்ய தன் ஃபோனை எடுத்தான்.
“உனக்கு என்ன வேணும்?”
“ஒரு லார்ஜ் பன்னீர் பீட்சா, வித் டபுள் சீஸ்…”
“என்னது..? டபுள் சீஸா… அதுல எவ்வளவு கேலரீஸ் இருக்கு தெரியுமா? சீரியஸ்லி மதி.. நீ ஒரு நாளைக்கு எவ்வளவு கேலரீஸ் சாப்பிடுறன்னு என்னைக்காவது கணக்கு வச்சிருக்கியா?”
“அப்படியெல்லாம் கணக்கு வைக்கணுமா?” என்று அவள் அப்பாவியாய் கேட்க
அவன் சலிப்புடன் கண்களை உருட்டினான்.
“ஆஆ…ஜஸ்ட் ஃபர்கெட் இட்…”
அவளது புலம்பலையும்,புகாரையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, அவன் சீஸ் இல்லாத ஒரு மீடியம் சைஸ் பீட்சாவை ஆர்டர் செய்தான்.
20 நிமிடங்களுக்குப் பிறகு பீட்சா டெலிவரி வந்தது. அவர்கள் அதைப் பகிர்ந்து உண்டனர்.
சாப்பிட்டு முடித்ததும், ஆதி குப்பைகளை எல்லாம் ஒரு பெரிய கேரி பேகில் சேகரித்து குப்பைத்தொட்டியில் போடுவதற்காக வெளியே செல்ல,
“நானும் வரேனே ப்ளீஸ்…” என்று அவளும் உடன் கிளம்பினாள்.
குப்பைத் தொட்டி அந்தத் தெருவின் கோடியில் இருந்தது. அதை அடைவதற்கு சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது.
அந்தச் சாலை இருபுறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்து மிக ரம்மியமாக இருந்தது. முகத்தில் மென்மையாக மோதிய குளிர்ந்த காற்று சூழலை இன்னும் இதமாக்க, இரவின் அமைதியையும் பரஸ்பரம் இருவரின் துணையையும் ரசித்தபடி மெதுவாக நடந்தனர்.
ஆனால் அமைதியாக இருப்பது மதிக்கு செட் ஆகாதே.
“ரொம்ப அழகான பிளேஸ்ல..? சிட்டிக்குள்ள இப்படி ஒரு காம்-ஆன பிளேஸை நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை…” என்று மௌனத்தைக் கலைத்தாள். அவன் லேசாக புன்னகைத்து தலையசைத்தான்.
“ஆதி சார்… இப்போ… இந்த செகண்ட், உங்க மனசுல என்ன தோணுது சொல்லுங்களேன்…”
“எதுக்கு?”
“சும்மா சொல்லுங்க ப்ளீஸ்…” என்று அவள் நச்சரித்தாள்.
“எனக்கு எங்க அம்மாவோட கையைப் புடிச்சிகிட்டு நடந்து போன என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது…”
அவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராத மதி விழிவிரித்து அவனைப்பார்த்தாள்.
ஆனால், அவளது ஆச்சரியமான பார்வையைப் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்தான்.
“அப்பலாம் அம்மா எங்க போனாலும் நானும் கூடவே போவேன்… நான் என்னமோ பெரிய ஆளுன்னும், எங்க அம்மாவைப் பத்திரமா கூட்டிட்டுப் போய் திரும்பக் கூட்டிட்டு வர்றது என்னோட கடமைன்னும் நினைச்சுப்பேன்.ஆனா உண்மையில அம்மாதான் என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க… அந்த வயசுல அதெல்லாம் தெரியாது இல்லையா? அம்மாவை நான்தான் பத்திரமா கூட்டிட்டு போறேன்னு பெருமையடிச்சிப்பேன். என் அம்மா கையை எவ்வளவு கெட்டியா பிடிச்சுப்பேன் தெரியுமா மதி, எனக்கு இன்னும் அது ஞாபகம் இருக்கு…” அந்த நாட்களை நினைவுகூர்ந்து அவன் புன்னகைத்தான்.
எப்போதும் சீரியஸாக இருக்கும் ஆதி சாருக்குள் இருக்கும் ஒரு சின்ன குழந்தையை அவள் பார்த்தாள். அவனுடைய கண்கள் பிரகாசித்த விதம், மனதிற்குள் அவன் மீண்டும் அந்தப் பொன்னான நாட்களுக்கே திரும்பிச் சென்று வாழ்வது போல இருந்தது. அதே சமயம், அவனுடைய வார்த்தைகளின் உள்ளோடிய வேதனையையும் அவளால் உணர முடிந்தது. அவள் அவனுக்கு மிக அருகில் நெருங்கி தன் விரல்களை அவனது விரல்களோடு கோர்த்துக்கொண்டாள்.
அவளது ஸ்பரிசத்தை அவன் மறுக்கவில்லை. மாறாக, இன்னும் அழுத்தமாக அவள் கையைப் பற்றினான். அவளது கரங்களின் வெதுவெதுப்பு அவன் உடல்முழுவதும் பரவி அவன் கலங்கிய மனதை அமைதிபடுத்தியது.
“என்னை கேட்டியே… உனக்கு என்ன ஞாபகம் வருது…?”
“எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது.. சின்ன வயசுல திருவிழா,கடைத்தெரு, பீச் இந்த மாதிரி ரொம்ப கூட்டமான பிளேஸ்க்கு போகும் போதுலாம்.. அப்பா அப்படியே என்னை தூக்கி தோள் மேல வச்சிப்பாரு…மொதல்ல கொஞ்சம் பயமா இருக்கும்.. அப்புறம் அவ்வளவு உயரத்துல இருந்து கீழ பார்க்கும்போது.. நான் என்னமோ பெருசா வளர்ந்திட்ட மாதிரி ரொம்ப பெருமையா இருக்கும்.என்னோட அப்பாதான் இந்த உலகத்துலேயே பெஸ்ட்னு தோணும்… ஆனா நான் வளர வளர… எங்க அப்பா என்கிட்ட இருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண ஆரம்பிச்சாரு.. படிக்கும் போதுலாம் அப்பான்னாலே டெரர்னு நினைக்கிற அளவுக்கு ஆகிட்டாரு.. ஆனா அவர விட்டு பிரிஞ்சு வந்ததுக்கு அப்புறம்.. இப்போ நினைச்சி பார்க்கும்போது அந்த டெரர் அப்பா ஞாபகம் வர்றது இல்லை.. சின்ன வயசுல தோள் மேல ஏத்தி வச்சி இந்த உலகத்தை எனக்கு சுத்தி காட்டின அந்த வேர்ல்ட்ஸ் பெஸ்ட் அப்பாதான் ஞாபகம் வராரு…”
அவளது கண்கள் உணர்ச்சிகளால் பளபளப்பதை கவனித்தபடி அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டு வந்தான்.
குப்பையைத் தொட்டியில் எறிந்தபின், அவர்கள் மீண்டும் வீட்டை நோக்கி நடந்தனர்.சிறு மௌனத்திற்கு பிறகு…
“உங்க அப்பாவை நீ ரொம்ப மிஸ் பண்றல்ல?”
கண்கள் சட்டென்று கலங்க, ஆமாம் என்று தலையசைத்தாள்.
அவன் அதைக் கவனிக்காதது போல் தொடர்ந்தான்,
“அப்ப ஏன் நீ ஒரு தடவை உன் பேரண்ட்ஸைப் போய் பார்க்கக் கூடாது? இந்த மூணு மாசத்துல நீ ஒரு தடவை கூட அவங்களைப் பார்க்கப் போன மாதிரி தெரியலையே…”
“போகனும் தான்.. அவங்களும் கூப்டுட்டேதான் இருக்காங்க.. ஆதி சார் நான் போகும்போது நீங்களும் என்னோட வர்றீங்களா? உங்களைப் பார்த்தா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாரு…“
“ஆனா எனக்கு அவங்களை அடையாளம் தெரியாதே.. அது எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்…”
அவள் ஏமாற்றத்தில் வாடிய முகத்துடன் சரி என்பது போல் தலையசைத்தாள்.
மீண்டும் அங்கு அமைதி நிலவியது.
“நீங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்க இல்ல?” என்று அவள் கேட்க, அவன் “ஆமாம்” என்று தலையசைத்தான்.
“ரொம்ப…” என்று அந்த வார்த்தைக்கு அவ்வளவு அழுத்தம் கொடுத்தான்.
“சில சமயம் எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி தோணும்.. எவ்வளவு பேர் இருந்தாலும் அம்மா இல்லைன்னா நாம அனாதை தானே…” என்று வேதனையான குரலில் கூறினான்.
“இப்படி சொல்றதால மாலா ஆன்ட்டிக்கு நீங்க எவ்வளவு பெரிய அநியாயம் பண்றீங்க தெரியுமா? உங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்க…” என்றாள் குரலில் லேசான கண்டிப்புடன்
ஒரு திடுக்கிடலுடன் அவளை ஆச்சரியமாக பார்த்தான் ஆதித்யா. ‘வெளியே பார்ப்பதற்குத் தெரிவது போல் இவள் மேலோட்டமானவள் இல்லை’
அவன் பதில் பேசும்முன், ஒரு நாயின் குரைப்புச் சத்தமும், அதைத் தொடர்ந்து மதியின் அலறல் சத்தமும் குறுக்கிட்டது,
“ஆஆஆஹ்ஹ்ஹ…” அந்த நாய் அவளைக் கடித்துவிடுவது போல் நெருங்கி வர, அவள் அவனைச் சுற்றிசுற்றி ஓடினாள், அந்த நாயும் அவளை விடாமல் துரத்தியது.
ஒரு கட்டத்தில் நாய் அவளுக்கு மிக அருகில் வந்துவிட… அவள் பயத்தில் சட்டென்று அவனுடைய இடுப்பின் மீது எகிறிக் குதித்து, அவனுடைய முதுகைத் தன் கால்களால் கவ்விக்கொண்டு கங்காரு குட்டிப்போல் அவன்மீது ஏறிக்கொண்டாள்.
ஆதி நிலைகுலைந்து போனான். அவனது உடல் ரீதியான சமநிலையும், மனரீதியானக் கட்டுப்பாடும் தடம் மாறத் தொடங்கின.
“மதி என்ன இது… கீழே இறங்கு…”
“மாட்டேன்…” என்று அவள் இன்னும் அவனோடு அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள்.
‘கடவுளே… இந்த கிறுக்கி என்ன பாடாப்படுத்துறாளே?’
இதில் கொடுமை என்னவென்றால், அவளது இந்த நெருக்கம் அவனுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அவள் அறிவாளா இல்லையா என்பதும் தெரியவில்லை.. அவனது தசைகள் வில்லின் நாண் போல இறுகின,அவனது நாளங்களில் ரத்தம் அதிவேகமாகப் மின்சாரத்தைப்போல் பாய்வதை உணர்ந்தான்.
“மதி கீழே இறங்கு…” என்று தன் பற்களைக் கடித்தபடி கூறினான்.
“மாட்டேன், நாய் கடிச்சிடும்” என்றாள் அவள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு,ஆனால் உண்மையில், அவளை விட அவன் தான் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தான்.
“ஷ்ஷு…” என்று அவன் அதட்ட
அந்த நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு, ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று விசுவாசமாகத் தன் வாலை ஆட்டியது.
மதி அதை வியப்புடன் பார்த்தாள்.
‘இந்த ஹிட்லருக்கு நாய் கூட பயப்படுதா…?’
“இப்போ கீழே இறங்கு…” என்று அவன் அவளைத் தன்னிடமிருந்து கிட்டத்தட்டப் பிரித்து எடுத்தான்.
அவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட்டை வெளியே எடுத்து, அந்த நாய்க்கு ஒவ்வொன்றாகப் போடத் தொடங்கினான்.
“இது உங்க நாயா?”
“இல்ல, தெரு நாய்தான்… டெய்லி இதுக்கு நான் ஏதாவது சாப்பிடப் போடுவேன்.. அதனால நான் வந்தா என் பின்னாடியே வரும்”
மதியின் வாய் “ஓ” என்று ஆச்சரியத்தில் குவிந்தது.
“நான் போடவா?”
அவன் அவளிடம் ஒரு பிஸ்கட்டை கொடுக்க, அவள் அதை நாய்க்குப் போட்டாள்.
“ரொம்ப க்யூட்டா இருக்குல்ல?” என்றாள் நாய் பிஸ்கட் சாப்பிடுவதை ரசித்தபடி.
அவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இந்த நாயைப் பார்த்து நடுங்கிச் செத்தா.. ஆனா இப்போ என்னடான்னா க்யூட்டா இருக்குன்னு சொல்றா.. இவ நிஜமாகவே ஒரு பேபி தான்…’
“இந்த நாயோட பேரு என்ன?” என்று அவள் ஆர்வமாகக் கேட்டாள்
“பேரா? அதெல்லாம் ஒன்னும் இல்லை…”
“என்ன பேரு வைக்கலையா?” அவளது அதிர்ச்சி நிறைந்த கேள்வி, அவன் ஏதோ பெரிய பாவம் செய்துவிட்டது போல் அவனைக் குற்றம் சாட்டியது.
“தெரு நாய்க்குப் பேரு வைக்கணுமா என்ன?”
“ஆமா, அது மட்டும் பாவம் இல்லையா?” என்று வாதாடினாள்.
“சரி, என்ன பேரு வைக்கலாம்னு நீயே சொல்லு…”
“ம்ம்ம்… என்ன பேரு வைக்கலாம்…?” என்று யோசித்தவன் சட்டென்று முகம் மலர
“மோமோஸ்னு வைக்கலாமா?” என்றாள்.
“எத்தனையோ பேரு இருக்க, ஏன் மோமோஸ்…?”
“சும்மாதான் தெரு முனையில ஒரு மோமோஸ் கடைய பார்த்தேன்..” என்று அசடு வழிந்தாள்.
“ஓகே, அதுவே இருக்கட்டும்…” என்று அவன் புன்னகையுடன் கூற, அவளது முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
‘இன்னைக்கு இவரு அடிக்கடி சிரிக்கிறாரு, ஒருவேளை மழை வருமோ…’ என்று மேலே வானத்தைப் பார்த்தாள்.
இரவு தொடரும்..

