Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 14

அத்தியாயம் – 14

சின்னப்பொண்ணு நான்
ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான்
புதுத் தேன்கிண்ணம் நான்

வெல்லக்கட்டி நான்
நல்ல வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான்
நல்ல கார்காலம் நான்



Advertisement

பேருந்து முழுவதும் ஜானகி அம்மாவின் குரல் உற்சாகமாய் எதிரொலித்து பயணிகளின் கவனம் முழுவதையும் தன்வசதில் ஈர்த்து வைத்திருக்க அப்போது தான்  ஏறியிருந்த கமலினியின் கவனம் மட்டும் தன் மாமானை தேடுவதில் தான் இருந்தது.

நேற்று போல் இல்லாமல் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்க உள்ளே நகர்ந்து பிடிகம்பியை பிடித்து நின்றவளுக்கு எத்தனை அலசியும் தினகரன் கிட்டவில்லை.

‘அப்ப கோபத்தில் பேசல.. நிஜமாவே நான் வேண்டாம்னு நினைச்சுட்டாங்க போல…  சும்மா இருந்தவ மனசை ஏன் குழப்பிவிட்டு…”

Advertisement

ஏமாற்றம் அலையென தாக்க கம்பியை அழுத்தி பிடித்து தன் உணர்வுகளோடு அவள் போராடிக் கொண்டிருந்த சமயம்,

Advertisement

“ஹலோ..” என்று காதருகே மெதுவாய் ஒரு ஆண் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.

ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா

Advertisement

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா “

அவள் பின்னே இடைவெளி விட்டு நின்றிருந்த தினகரன் அப்போது வந்த பாடல் வரிகளில் சிரித்து புருவங்களை அசைத்திட திகைத்து விழி அகல பார்த்து இருந்தவள் அந்த அபிநயத்தில் சட்டென்று திரும்பிக் கொண்டாள்.

“என்னை நீ தேடவே இல்ல… நானும் அதை பார்க்கவே இல்ல…”
என்று அவன் சொல்ல தன் பேச்சை கேட்காமல் விரிய துடித்த இதழ்களை கட்டாயமாய் இழுத்துப் பிடித்து உர்ரென்று முகத்தை வைத்து இருந்தவள்,

“அதான் சந்தோஷமா இருன்னு சொல்லிட்டு போயிட்டீங்கல்ல.. இப்ப என்ன..”

பின்னே நின்றவனிடம் திரும்பாமலே கேட்க,

“நீயும் தான் ‘உன்னால நிம்மதி இருக்காது.. எனக்கு சிக்கல் இல்லாத லைஃப் வேணும்ன்னு சொன்ன..’ அப்புறமும் ஏன் இந்த சிக்கலை தேடி வந்தியாம்..”
என்றான் அவனும் அசராமல்..

“ஆங்.. அது.. அது..”

அவள் தடுமாற்றமாய் இழுக்க,

“எனக்கும் அதே அதே தான்..” என்றான் கேலியாய்…  கமலினி வருகையில் தலைகால் புரியாத சந்தோஷம்..!!   நேற்றையின் வருகைக்கு என்ன காரணம் வேண்டும் என்றாலும் சொல்லலாம்.. ஆனால் இப்போது அவள் வந்தது அவனுக்காக மட்டும் தானே..!! அவன் மனம் அத்தனை குதூகலமாய் இருந்தது.

அருகில் ஒரு இருக்கை காலியாகவும்,

“உட்கார் போ..” என்றவன் அவள் அமர்ந்ததும் பக்கத்தில் நின்றுக் கொண்டான்.

“உன்கிட்ட வீம்பா பேசிட்டு போயிட்டாலும் அப்புறம் யோசிச்சப்போ உன் நிலமை புரிஞ்சுது கமலி.. உன் பிரச்சனை நானும் உங்க அப்பாவும் எதிரும் புதிருமா இருக்கிறது தானே.. உன் அப்பாவோட ஒருவேளை நான் ராசி ஆகிட்டால்..?? அப்போ உன்னோட பதில் என்னவா இருக்கும்..”

“அதெப்படி சாத்தியம்..? உங்களுக்கு தான் என் அப்பா வில்லன் ஆச்சே..?”

என்று கமலினி இடக்காய் கேட்க,

“வில்லன் தான்.. ஆனா அவரோட வில்லாதி வில்லன் என்னோட பெரியப்பா ரெண்டு பேரும் தான்.. அவங்களையே நான் ஒன்னும் பண்ணது இல்லை.. உங்க அப்பா வெறும் அம்பு தானே..? அவரோட சமாதானமாக நான் முயற்சி செய்யலாம்.. தப்பில்லை..”

என்று தோள் அசைத்து சாதாரணமாய் கூறியவனை வியப்பாக பார்த்தாள். நேற்று தன் தந்தையை பற்றி பேசவே அத்தனை கோபப்பட்டவன் இப்போது
அவரோடு பிணக்கை சரி செய்துக் கொள்ள நினைப்பதற்கு காரணம் அவளின்றி வேறென்ன இருக்க முடியும்..!!

தினகரன் கமலினி மீது எவ்வளவு தீவிரமாக இருக்கிறான் என்பதனை இதற்குமேல் தெளிவாக புரிய வைக்க இயலாதே..!! அக்கணத்தில் ஆர்பாட்டங்கள் ஏதுமின்றி அழகாய் பெண்ணவளை  வென்றிருந்தான் அவன் அறியாமலே..!!

“இப்ப இப்படி சொல்லிட்டு அப்புறம் மாத்தி பேச மாட்டீங்களே தீனா..”

என கமலினி தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டாள்.

‘தீனா..’ என்ற அழைப்பு முதல்முறையாய் அவளிடத்தில்..!!

அந்த கண்களில் தெரியும்
எதிர்பார்ப்பை உள்வாங்கி நின்றவன் ‘மாட்டேன்’ என்பதாய் கண்களை அசைத்து சமிக்ஞை செய்ய இருவரையும் வேடிக்கை பார்த்தப்படி கமலினி அருகில் அமர்ந்து இருந்த பெண்மணி,

“அதை வாயை திறந்து தான் சொல்லேன் தம்பி.. இந்த பொண்ணு சந்தோஷ படும்ல..”

என்று சொல்லிவிட சட்டென்று அவரிடம் திரும்பினர். இருவரும் பேசுவதில் கதையை தானாக யூகித்து ஆர்வமாய் கேட்டு வந்த பெண் அவன் இடைவேளை விடவும் பாவம் என தானாக எடுத்துக் கொடுத்தாள்.

தங்களை மற்றவர் கவனிப்பது அறியாமல் பேசிக்கொண்டு  இருக்கிறோமே என்பதில் கமலினி  சங்கடமாய் தலையில் கைவைத்து குனிந்துவிட தினகரனோ,

“நான் சொல்றது இருக்கட்டும்.. நீங்க எங்க இறங்கணும்…”  என்றான்.

அவர் இடம் பெயர்  சொல்லவும்,

“அது போன ஸ்டாப்பிங் ஆச்சே.. ச்ச்.. ச்ச்.. எங்களை கவனிச்சுட்டு அதை மிஸ் பண்ணிட்டீங்க பாருங்க..”

என்று மிக தீவிரமாய் சொல்ல ஒரு நொடி திடுக்கிட்டவர் ஜன்னல் வழியே வேகமாய் இடத்தை ஆராய்ந்து பொய் என புரிந்த பின்னர்,

“ஏன் தம்பி..” என்று கேட்க,

“ம்ம்ம்.. எங்க வாயே பார்த்துட்டு இருந்தால் அது தான் நடக்கும்.. இந்தா வந்திடுச்சு.. எழுந்து போ மா வேலையை பார்த்துக்கிட்டு….”

என அவன் அதட்டவும் கம்மென்று வாயை மூடிக் கொண்டு எழுந்து சென்றுவிட்டாள்.

இதனை உதட்டை மடித்து சிரிக்காமல்  பார்த்து இருந்த கமலினியிடம்,

“உனக்கு வேற தனியா சொல்லணுமா.. தள்ளி உட்கார் கமலி..”

என்று அதே தொனியில் சொல்ல,

“ஆங்..?!”
என்று  விழி உயர்த்தியவள்,

“முன்னாடி பின்னாடி எங்கேயும் காலியா இல்லம்மா..? என்னை பார்த்தால் பாவமா இல்ல..”

என்ற பிறகே இடம் விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

“தேங்க்ஸ்..” என்று தினகரன் அமர்ந்தபோது எதார்த்தமாய் உரசிய  தோள்களில் கமலினி மனம் தடுமாற பார்வையை ஜன்னல் பக்கமாய் திருப்பிக் கொண்டாள்.

அவன் ஏதேதோ பேசி வந்தான். ஒன்றும் அவள் செவியில் சேரவில்லை. அவனின் அருகாமையில் படபடப்பாக என்ன சொன்னேன் என அவன் திருப்பிக் கேட்டு இருந்தால் சத்தியமாய் அவளிடம் பதில் இருக்காது. அதிலும் அவன் இயல்பாக இருக்க தான் மட்டும் தடுமாறுவதில்,

‘நீயே உன்னை காட்டிக் கொடுத்திடாதே பக்கி..’ என மானசீகமாய் தலையில் தட்டிக் கொள்ள அதற்குள் அவனே,

“ஒய்.. இந்த உலகத்தில் தான் இருக்கியா..” என்று கேட்டான். சுதாரித்தவளாய் அவன் கேள்வியை கண்டுக் கொள்ளாது,

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் இப்பவும் புரியல.. அப்படி என்ன உங்க பெரியப்பாங்க கூட பிரச்சனை… லிங்கா மாமாவை குடும்பத்தோடு ஒதுக்கி வைச்சுட்டதாவும் அதுக்கு  காரணம் நீங்க தானும் அப்பா அடிக்கடி
சொல்வாங்க.. என்ன செஞ்சீங்க..”
என்றவள் அவன் பார்த்த பார்வையில்,

“என்ன நடந்தது..?” என கேள்வியை மாற்றினாள்.

பெருமூச்சு விட்டவன்,

“வெகுளியா இருக்கிற மனுஷங்களை இந்த உலகம் ஏமாளியாவும் அடிமையாவும் மட்டும் தான் பார்க்கும்..
என் வாழ்க்கைல நான் பார்த்த முதல் பாடம் அது தான்.. காரணம் எங்க அப்பா..!!

மனசில் கபடம் எதுவும் இல்லாம எல்லாரையும் நம்புவார்.. அதுவும் அண்ணனுங்க என்ன சொன்னாலும் கேட்டு நடப்பார்.. அதை பாசமா பார்க்காமல் கிடைச்ச அடிமை மாறி நல்லா பயன் படுத்திக்கிட்டாங்க.. அந்த உண்மையை அப்பா  புரிஞ்சுக்கவே பல வருஷம் ஆகிடுச்சு..

அதுக்குள்ள கூட்டுக் குடும்பம் என்ற பேருல நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்ல.. ஜெயந்த் சின்ன பையன்… ஆனா எனக்கும் ஸ்வர்ணாக்கும் நல்லாவே விபரம் புரியும்..!!! எங்க முன்னாடியே எங்க அப்பா அம்மாவை நடத்திய விதம் எல்லாம் உயிரோட இருக்கிற வரை மறக்க மாட்டேன்…” என்றவனுக்கு இன்னமும் அவர்கள் மீது உள்ள வெறுப்பு ஈரம் கூட காயாமல் அப்படியே இருந்தது.

‘மன்னிப்போம்.. மறப்போம்..’ என்ற கொள்கை எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாதே..!!

“நாங்க வளர வளர அம்மா எதிர்த்து பேச ஆரம்பிச்சாங்க.. சண்டை போட்டாங்க… அப்போ நான் டீனேஜ்
பையன்… பக்குவம் எதுவும் இல்லாம தொட்டதுக்கும் கோபம் தலைக்கேறிடும்..
ஒரு நாள் ஏதோ சண்டையில் அம்மாவை பெரியப்பா ரொம்ப பேசவும் ஆவேசத்தில் அவரை பிடிச்சு கீழ தள்ளிவிட்டேன்..”

என்றவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

“என்ன சொல்றீங்க…”

“ஆமா… தள்ளிவிட்டு அடிச்சும் இருப்பேன்.. அதுக்குள்ள அம்மாவும் அப்பாவும் தடுத்து இழுத்துட்டு போயிட்டாங்க… யாருக்கும் அவர் பேசினது ஒரு விஷயமா தெரியல… நான் கீழ தள்ளிவிட்டத்தை ஊதி பெருசாக்கி நான் கொல்ல பார்த்தேன்னு பெரிய பஞ்சாயத்து… உங்க அப்பாக்கும் எனக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் போனதும் அந்த பேச்சு வார்த்தை நடந்தபோது தான்..

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறியாச்சு.. நாப்பது வருஷம் உழைச்ச உழைப்புக்கு அர்த்தம் இல்லாம சொந்த வீட்டையும் விட்டு நிற்கதியா நின்னோம்..

அப்பாவுக்கு சரியான வேலையும் இல்லாம ரொம்ப சிரமமான காலம் தான்…  நியாயமா அப்பாவுக்கு சேரவேண்டிய சொத்தை வாங்கவே போராட வைச்சாங்க.. எங்களுக்காக பேசியது சுப்ரமணிய தாத்தா மட்டும் தான்..

அதை கொண்டே உழைச்சு எங்க மூணு
பேரையும் படிக்க வைச்சு வளர்த்திட்டாங்க…!!

அவங்க கைவிட்டதும் எங்க குடும்பம் கஷ்டத்திலே வாழ்வோம்ன்னு நினைச்சாங்க போல.. எங்க வளர்ச்சி எல்லாருக்கும் கண்ணை உறுத்துது.. என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க ஆனால் தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லுனு போகுது வாழ்க்கை..!!”

என எளிதாய் அவன் கூறி விட்டாலும் அவன் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக இல்லை என புரிந்தது.

சற்று தயங்கினாலும்,

“அப்பாவும் நிறைய பிரச்சனை கொடுத்து இருப்பாங்க இல்ல..” என்று  கேட்டாள். அவன் சொல்லாமல் விட்டாலும் தன் தந்தைக்கும் அதில் பங்கிருக்கிறது என்று புரிந்தது.

அவள் அறியாமல் நடந்த விஷயங்களுக்கு அவள் ஏன் வருந்த வேண்டும் என தோன்றிட,

“இப்படி ஒரு பொண்ணை எனக்கு கொடுக்க போறதுக்காகவே அதையெல்லாம் மறந்திடலாம்..”
என்று கண் சிமிட்டவும் கூறினான்.

அவன் நினைத்துப் போல் நாணம் மேலிட இதழோரம் புன்னகைத்தாள்.

அதன் பின்னான நிமிடங்களில் பேச்சுகள் இருவருக்குமே தடையின்றி வந்தது. அதிலும் தினகரன் நிறைய நிறைய பேசினான். அவனின் தொழில் ஆர்வம், ஈகிள் விஷன் தொடங்கியது, இப்போது புதிய ஃபேக்டரி வரை எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல அவன் முகம் பார்த்து ஊம் கொட்டி வந்தவளுக்கும் சலிக்கவே இல்லை.

“கமலி நாளைக்கு உன்னை ஃபேக்டரிக்கு கூட்டிட்டு போகவா…”

என்று அவன் திடீரென்று கேட்க அனிச்சையாய்,

“வாய்ப்பே இல்லை..” என்றுவிட்டாள்.

“ஏன்..??”

“இல்லை… வீட்டுக்கு தெரியாம இதையே தொடர வேண்டாம்னு நினைக்கிறேன் தீனா..  இங்க வரும் வரையிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்ல.. என் மனசில் கள்ளம் இல்ல.. ஆனா இப்போ…”

என்று அவள் சொல்ல முடியாமல் இழுக்கவும் அவன் கண்களில் மின்னல் ஒளிர்ந்தது.

“சொல்லு கமலி… இப்போ..?? இப்போ என்ன…”

என்று வம்பிழுக்க அவளின் நிறுத்தமும் நெருங்கி விட்டது.

“ம்ம்… இப்பவும் ஒன்னும் இல்ல…” என்றுவிட்டு அவள் எழுந்தவளை,

“ஹே… இரு..” என்று கைப்பிடித்து நிறுத்தவும் சட்டென்று சுற்றம் பார்த்து,

“தீனா…” என்று கண்களை உருட்ட,

“அட… கையை தானே மா பிடிச்சேன்.. கட்டியா பிடிச்சேன்..” என்றான் குறும்பாக…!!

கையை விடுவித்துக் கொண்டவள்,

“நினைப்பு தான்.. பிடிச்சு பாருங்க.. அப்புறம் அந்த கையே இருக்காது..”
என மிரட்டலாய் சொல்ல அவனுக்கு சிரிப்பு தான்…!!!

“யப்பா சாமி.. பயந்துட்டேன்..” என்றவன்,

“அப்போ நான் உங்க அப்பாவை கடையில் போய் பார்க்கிறேன்..”
என்று சொல்ல,

“இப்பவா…??” என்றாள் அதிர்ச்சியாய்..

“ஆமா… இப்ப தான்… நீ தான் இதையே தொடர வேண்டாம் சொல்றியே.. லைசன்ஸ் வாங்க அப்ளை பண்ண வேண்டாமா..”

“சீரியஸா கேட்கிறேன் தீனா..”

“நானும் ரொம்ப சீரியஸா தான் சொல்றேன்.. இங்கிருந்து நேரா உங்க அப்பாவை தான் பார்க்க போறேன்… அதில் என்ன பிரச்சனை…”

என்று கேட்க அதற்குள் பேருந்து நிறுத்தப்படவும் கமலியும் அவள் பின்னே  தினகரனும் இறங்கிவிட்டனர்.

அங்கே அநேகருக்கு அவர்களை தெரியும் என்பதால் நின்று பேச முடியாது..!! எனவே,

“அதுக்கு சொல்லல… நீங்க வீட்டில் எல்லாரோடும் வந்து பேசுவீங்கன்னு நினைச்சேன்.. அட்லீஸ்ட் நான் இருக்கும்போது பேசலாம் இல்லையா..?”

என சுற்றும் முற்றும் பார்த்தபடி அவசரமாய் சொல்ல,

“அப்பா அம்மா வந்து கேட்கும்போது உங்க வீட்டில் பதில் சம்மதமா மட்டும் தான் இருக்கணும் கமலி… என் மேல உள்ள கோபத்தில் அவங்களை எதுவும் சொல்லிவிட்டால் நானே எப்படி ரியாக்ட் செய்வேன் தெரியாது.. நான்
மட்டுமா பேசுறது தான் சரியா இருக்கும்…”
என உறுதியாய் சொல்ல ‘என்ன நடக்குமோ…?’ என்ற பதைப்பு நிறையவே இருந்தாலும் அவனிடம் ‘இப்படி பேசு… அப்படி பேசு..’ என்று எதுவும் சொல்ல விழையவில்லை.

அனைத்திலும் எண்ணி செயல்படக் கூடியவன் தன் விஷயத்தில் இன்னும் தெளிவாகவே இருப்பான் என்ற நம்பிக்கை இந்த குறுகிய நாட்களில் அவளிடம் ஆழமாய் பதிந்து இருந்தது.

விடைபெற்று செல்ல போனவளை மீண்டும் நிறுத்தவே,

“இப்ப என்னங்க..?? யாராவது பார்த்தால் நீங்க போகும் முன்னாடி நாம இப்படி நின்னு பேசிட்டு இருக்கிற விஷயம் எங்க அப்பா கிட்ட போயிடும்.. சீக்கிரம் சொல்லுங்க..”
என்றாள் அவசரமாய்..

“எல்லா உறவுகளும் ஒன்னு போல அமையாது கமலி..!! உங்க அப்பாவோட மனசார சமாதானம் ஆக தான் நினைக்கிறேன்.. ஆனா சில வருத்தங்கள் எப்பவும் மறக்காது..!! என்னால ஒட்டி உறவாட முடியுமா தெரியலை.. அப்படி இல்லைன்னா நீ  என்னை புரிஞ்சுப்ப தானே..”
என்று தன் மனதினில் உறுத்திய விஷயத்தை சொல்லிவிட அவனை ஆதூரமாய் பார்த்தாள்.

“அன்பும் நெருக்கமும் இயல்பா வர வேண்டியது தீனா.. அது வரும் போது வரட்டும்.. நீங்க எனக்காக மாத்திக்கணும்னு நினைக்கிறதே..
ஐ ஃபீல் லவ்ட்..”

என்றவளை தன் மார்போடு அணைத்துக் கொள்ள தான் கைகள் பரபரத்தது. பொது இடம் என்பதால் அடக்கி வாசித்தான்.

அவர்கள் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டதும் விடைபெற்று செல்ல அவன் எண்ணை பதிவு செய்துக் கொண்டிருந்த சமயம் வங்கி குறுஞ்செய்தி ஒன்று இடையில் வந்து குதித்தது.

எஸ். எம். எஸ் சார்ஜ் கழித்ததற்கான குறுஞ்செய்தி தான்..!! அதனை சாதாரணமாய் பார்த்தவள் அதில் குறிப்பிடப் பட்டுள்ள மீதி தொகையை கண்டு குழம்பினாள். பணம் குறைவதாக தோன்றியது.

இடையில் எதுவும் செலவிற்காக எடுத்தோமா என்று யோசித்து பார்த்தாள். ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை.

‘பத்தாயிரம் கிட்ட குறையுதோ…’ என்று நினைத்து முந்தைய செய்திகளை எடுத்து பார்க்க மூன்று நாட்களுக்கு முன்பு வந்துள்ள குறுஞ்செய்தியில்
இப்போதைய தொகையைவிட பதினைந்தாயிரம் அதிகம் இருந்தது.

‘கண்டிப்பா இந்த மூணு நாளில் நான் எதுக்கும் பணம் எடுக்கலையே…?  எடுத்தற்கான மெசேஜ்ஜும் இல்ல… எப்படி அவ்வளவு பணம் போகும்..’ என்ற யோசனையுடன் வீடு திரும்பினாள். ஒவ்வொரு ரூபாயின்
அருமையும் உணர்ந்தவள் என்பதால் பண விஷயத்தில் அலட்சியமாகவோ கவனக் குறைவாகவோ இருக்கவே மாட்டாள். அதனாலே வித்தியாசம் உடனே கருத்தில் பதிந்தது.

இந்த வகையில் அனன்யாவின் யூகம் இரண்டுமே பொய்த்து போனது. பணம் குறைவதை மறுநாளே கண்டுக் கொண்டதுடன் அவளுக்கு முதலில் தோன்றிய நபரும் அனன்யா..!! ஏனெனில் அவளை தவிர அவள் கார்ட்டை பயன்படுத்த கூடிய ஆள் அனன்யா மட்டுமே..!!

வீட்டில் நோட்டை திறந்து வைத்துக் கொண்டு எங்கோ பார்த்து அமர்ந்திருந்த அனன்யா முன் கமலினி சொடுக்கிட கனவில் இருந்து எழுபவள் போல் மலங்க மலங்க விழித்தாள்.

“என்னடி..? படிக்க வரலைன்னா மூடி வைச்சிட்டு போய் வேற ஏதாவது பண்ணேன்…  ஏன் இப்படி உட்கார்ந்துட்டே தூங்கிற..?”

“ம்ச்.. போ கமலு… நாளைக்கு தான் லாஸ்ட் டேட்.. நான் அசைமென்ட் சப்மிட் பண்ணனும்..”

“இத்தனை நாள் எழுதாம என்ன செஞ்சியாம்..”
என்றவள்

“எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. என்கிட்ட சொல்லிட்டு பணம் எடுன்னு… திடீர்னு பார்த்தால் பக்குன்னு இருக்குல… சரி… அம்மா எடுத்துக் கேட்டாங்களா…?”
என்று இயல்பாக கேட்க அனன்யாவிற்கு பக்கென்று தூக்கி போட்டது.

கமலினி சந்தேகமாக எல்லாம் கேட்கவில்லை. நீ தான் எடுத்து இருப்பாய் என்ற முடிவோடு பேச உள்ளூர பயபந்து உருண்டது..!! அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“என்ன பணம்.. எனக்கு எதுவும் தெரியாது…”

என்று குனிந்த தலையை நிமிராமல் எழுதியபடி சொல்ல,

“விளையாடதே அனு… பதினைஞ்சாயிரம்… நீ எடுக்கலையா..”

என்று கேட்கவும் பேனாவை பட்டென்று மேசையில் வைத்து,

“அதான் தெரியல சொல்றேன்ல.. என்கிட்டவே திரும்ப திரும்ப கேட்டால் என்ன அர்த்தம்…!! நான் உன் பணத்தை திருடிட்டேன்னு சொல்றீயா..?”

கோபமாய் கத்தினாள். குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுத்தது.

“ஏன் லூசு மாதிரி பேசுற..!! என்னை தவிர நீ மட்டும் தான் யூஸ் பண்ணுவ அதான் கேட்டேன்.. நீ எடுக்கலைன்னா விடு…”

என்று சொல்லிவிட்டு கமலினி சென்றுவிட நெஞ்சை அறுக்கும் உணர்வைத் தாங்க முடியாமல் மேசையில் கையூன்றி அதில் தலையினை கவிழ்த்துக் கொண்டாள். இப்போது எல்லாம் அவளுக்கே அவளை பிடிப்பது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!