Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் 3 (2)

“வாங்க மிஸ்டர் ஆதவன்.. என்ன அதிசயமா இருக்கு.. சர் இந்த பக்கமே வர மாட்டீங்களே..”

என கமலினி  கண்சிமிட்டி கேட்க,

“நான் வர்றது இருக்கட்டும்.. பாட்டி மயங்கி விழுந்துட்டாங்க.. என்னானு தெரியலைன்னு அம்மாவும் அண்ணியும் அவசரமா கிளம்பி வந்தாங்க..  நீ என்னமா.. ஜாலியா  குத்து பாட்டு கேட்டுட்டு இருக்க..”



Advertisement

என்று அவன் சொல்லவும் சாப்பிட்டு முடித்து இருந்ததால் எழுந்தவள்,

“பாட்டி தானே..  இங்க வா..”

என கூப்பிட்டு அந்த பெரிய ஹாலை கடந்து உள்ளே வந்து அந்த டைனிங் அறையை காட்ட அங்கே வட்டமாய் இருந்த மேஜையில் பாட்டியும் அவரின் மகள் மற்றும் மருமகளும் குழுமி அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். கைகளோ தன் போக்கில் மதிய விருந்திற்காக ஆளுக்கு ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தது.

Advertisement

எதற்கோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த பாட்டியை கண்டு,

Advertisement

“என்னமோ ஏதோன்னு ஓடி வந்தால்.. எல்லாம் ஊர் வம்பு பேசிக்கிட்டு இருக்கிறதை பாறேன்..”

என்று கடுப்பாய் ஆதவன் கமலியிடம் சொல்ல சிரித்தவள்,

“உனக்கு பாட்டியை தெரியாது..? கையில் கொஞ்சமா கீறினாலே கையே உடைஞ்சா மாதிரி ஊரை கூட்டிடும்.. இப்போ தலை சுத்தி போகவும் கேட்கவா வேணும்..? சும்மா பார்க்கணும் வாங்கன்னு கூப்பிட்டால் ஆயிரம் சாக்கு சொல்வீங்க..!! அதுக்கு பாட்டி யூஸ் பண்ற ட்ரிக் இதெல்லாம்..”

Advertisement

அமிர்தவள்ளியை அறிந்தவளாய் கமலினி நக்கலடிக்க அவனுக்கும் சிரிப்பு தான்..!

“வாய் டி உனக்கு.. இரு.. இரு இதை அப்படியே பாட்டி கிட்ட  சொல்றேன்..”
என போலியாய் மிரட்ட,

“சொல்லு.. நானும் சொல்லுவேன்.. கிழவிக்கு கொரானா வந்திடுச்சோ.. எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்கன்னு ஆதவன் அண்ணா சொல்றான்ணு..”

என தோளை குலுக்கி அசட்டையாய் சொல்ல, “எமகாதகி..” என வாயில் கைவைத்தான் அதிர்ச்சியாய்..

அதற்குள் அவனுக்கு குடிக்க காபி கலந்து வந்திருந்த அம்பிகா,

“ஏன் நின்னுட்டே இருக்க ஆதவா.. வா உட்கார்..” என்று கப்பை கொடுத்து அமர சொல்ல அப்போது தான் அவனை கவனித்த ஆதவனின் அன்னை பாக்கியம்,

“நீ எப்படா வந்த..”

என்று சாவகாசமாய் கேட்க அவரை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்..

பேரனை பார்த்ததும் பாட்டி அமிர்தவள்ளியின் முகம் பிரகாசமாக,

“ஆதவா.. எப்படிய்யா இருக்க.. அப்பத்தா நினைப்பு உனக்கு இப்ப தான் வந்ததா ராசா..!!”

என்று பாசமாய் கேட்க புன்னகையோடு அவர் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டவன்,

“ஏன் பாட்டி இப்படி சொல்ற… போன வாரம்  கூட தான் பார்த்தோம்..”
என்று சொல்ல,

“அப்பவும் நான் தானே வந்தேன்.. நீ வந்தியா டா…”

என்று நொடித்துக் கொள்ள, “அதுவா முக்கியம்.. விடு பாட்டி.. இப்ப எப்படி இருக்க.. மயங்கி விழுந்துட்டேன்னு அம்மா சொன்னாங்க..”
என்றான் அக்கறையாய்..

பெருமூச்சு செறிந்தவர்,

“என்ன பண்றது ஆதவா.. நாள் ஆக ஆக ஒன்னு இல்லைனா ஒன்னு எதாவது பண்ணிட்டே இருக்கு..  நாலு செவத்துக்குள்ள அடைஞ்சு கிடக்கிறதே பெரிய நோவ்வா இருக்குது.. அதிலும் இந்த கமலினி இருக்கே.. என்னையும் உன் தாத்தானையும் வீட்டு வாசலை கூட தாண்ட விட மாட்டேங்கிறாடா..?! நான் அவளுக்கு அப்பத்தாவா .. இல்லை அவ எனக்கு அப்பத்தாவா தெரிய மாட்டேங்குது..”
கவலையாய் தொடங்கி இறுதியில் பேத்தி மீது குற்றபத்திரிக்கை வாசிக்க நல்லவேளை அங்கே கமலினி இல்லை. இல்லாவிடில் பாட்டியும் பேத்தியும் மீண்டும் ஓர் உலக போரை தொடங்கி இருப்பார்கள்…

“விடு பாட்டி.. ஊர் நிலமை உனக்கு தெரியாதா..?? உங்க நல்லதுக்கு தான் சொல்றா..”
என ஆதவன் சமாதானம் கூற,

“என்னவோ போ..காலைல மாத்திரை போட கொஞ்சம் தாமதமாகவுமே தலை சுத்தி போயிடுச்சு.. ஒரு நிமிஷம் எங்க.. உங்க எல்லாரையும் பார்க்காமல் போய் சேர்ந்திடுவேனோன்னு நினைச்சேன்…”

என்றவர் சட்டென்று கண்கள் குளமாக,

“அது சரி.. வாழ வேண்டிய என் புள்ளையே போய் சேர்ந்துட்டான்.. வாழ்ந்து முடிச்ச நான் இனி இருந்து என்ன செய்ய போறேன்..”

என தழுதழுக்க சொல்ல எல்லோர் முகமும் வாடிவிட்டது.

அதே சமயம் உள்ளிருந்து,
“வள்ளி..” என சிவசுப்ரமணியத்தின் அதட்டல் குரல் கேட்டத்தில் சுதாரித்தவர் கண்களை துடைத்துக் கொண்டு
தலை குனிந்து அமைதியாகிவிட்ட பேரனின் தோளில் கைவைத்து,

“காபி ஆருது பார்.. குடி ஆதவா..”

என்றவர், “காலில் சுடு தண்ணீ ஊத்தினா மாதிரி உடனே ஓடிடாதே.. உனக்கு இன்னைக்கு ஆபிஸ் போற வேலை இல்லன்னு உன் அம்மா சொன்னாள்.. இருந்து மதியம் சாப்பிட்டு போகலாம்..”
என்றார் அன்பு கட்டளையாய்..

சிவசுப்ரமணியன் – அமிர்தவள்ளி தம்பதியருக்கு மூன்று மக்கள்.

மூத்தவர் ராமமூர்த்தி அவர் மனைவி பாக்கியம்..

அவரின் மூத்த மகன் முகிலனுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் ராமமூர்த்தி இறைவனடி சேர்ந்து விட்டார்.  இரண்டாவது புதல்வன் தான் ஆதவன். கடைக் குட்டியாய் அபூர்வா.. கல்லூரி முதல் வருடம் படிக்கிறாள். முகிலன் மாவட்ட ஆட்சியர் அழுவலகத்தில் பணி புரிகிறான். முகிலன் சிந்தியா தம்பதியருக்கு ஏழு வயதில் ஒரே மகன் அஜய்..!

அடுத்த சுந்தரமூர்த்தி – அம்பிகா தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் தான் கமலினி.. ஆங்கிலத்தில் இளங்கலை முடித்து இப்போது மூன்று வருடங்களாய் தந்தையோடு கடையை பார்க்கிறாள். இளையவள் அனன்யா கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறாள்.

கடைசியாய் பிறந்த மகள் சித்ரா.. அவரின் கணவர் கோபாலன் அரசு வங்கியில் பணி புரிக்கிறார். அவர்களின் மக்கள் வைஷ்ணவியும் சங்கவியும் இரட்டையர்கள். அவர்களும் கல்லூரி முதல் வருடம் தான்.

நான்கு பிள்ளைகளும் ஒரே வயதினர் என்பதால் உறவை தாண்டி நெருங்கிய நட்புகள் ஆவர். வெவ்வேறு துறையில் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறார்கள்.

ஒன்றுக்கு ஒன்று சளைத்தவள் இல்லை என சொல்லும் வகையில் வாயாடிகள். நான்கு பெண்களும் சேர்ந்தால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் செட்டு சேர்ந்தாலே கமலினி நழுவி சென்று விடுவாள்.

ஆனால் இன்று தப்ப முடியாதபடி இவர்கள் இங்கே பேச ஆரம்பிக்கும்போதே கை கழுவி வந்த கமலினியை வைஷ்ணவியும் சங்கவியும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து  தரதரவென இழுத்துக் சென்றனர்.

வீட்டின் பின்பக்கம் தோட்டம் போல மரங்களும் செடிகளும் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் காட்சியளிக்க அங்கே தான் கிரிக்கெட் ஆட்டத்திற்கான முன்னேர்பாடுகள் செய்து வைத்து இருந்தனர்.

இவர்கள் நான்கு பேரோடு பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் சேர்த்து இருக்க சிந்தியா மாசமாக இருப்பதால் அவளை விடுத்து அவளுக்கு பதில் அஜயையும் சேர்த்து ஒன்பது பேர் இருந்தனர். பத்தாவதாக  தான் கமலினியை பிடித்துக் கொண்டது. அங்கே திண்ணையில் ஓர் புத்தகம் படித்தபடி சிவசுப்ரமணியமும் அமர்த்திருந்தார்.

“ஏய்… விடுங்க டி.. எனக்கு தான் வேலை இருக்குன்னு சொன்னேன்ல..”
என்று கமலி கையை உருவ போராடினாள்.

“ஹே ஜிமிக்கி கம்மல்.. அங்க போய் நீ ஈ தான் ஓட்ட போற தெரியும்.. அதான் சித்தப்பாவே பசங்களோட இருன்னு சொல்லிட்டு போயிட்டாங்கல்ல.. அப்புறம் ஏன் சீன் போடுற..”
என்று கூறிய அபூர்வாவை முறைத்து,

“சீன் போடுறேனா..?? உங்களை விட பெரியவனு கொஞ்சம் ஆவது மதிக்கிறீங்களா டி..”

என்று சொல்லவும்,

“மதிக்கிறதா..? யூ மீன் இந்த ‘வாங்க’ ‘போங்க’ வா..”

என முகத்தை அஷ்டகோணலாய் சுருக்கி கேட்க அனன்யாவோ,

“அதுக்கா.. அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட..”
என பாவனையாய் கூற,

“அடிங்..” என்று பல்லை கடித்தவள் பேத்திகளின் அலப்பறைகளை சிரிப்போடு பார்த்து இருந்த  தாத்தாவை நோக்கி,

“நீயும் கூட்டா தாத்தா..”
என்றாள் முறைப்போடு..

“சின்ன பிள்ளைங்க தான் ஆசை படுறாங்கள்ல.. நீயும் போயேன் கமலி..”

“உங்களுக்கு தெரியாது தாத்தா.. இவள்க விளையாடுறது பூரா அழுகுனி ஆட்டம்..!! பால் ரொம்ப தூரம் போன ஓடி போய் எடுக்க முடியாதுன்னு அவுட்ன்னு சொல்லிடுவாள்க.. மரத்தில் பட்டால் தான் சிக்ஸ்ஸாம்.. பக்கத்து கொல்லைக்கு போனால் ரன்னே
கிடையாதாம்.. முக்கியமா எங்கயாவது பால் மாட்டிகிட்டா ஹைட்டா இருக்கிற நான் தான் எடுக்கணுமாம்..

இந்த லட்சணத்தில் நான் இருக்கிற டீம் தோத்துட்டால் நான் காசு தரணுமாம்..  நான் ஜெய்த்தாலும் ட்ரீட் வைக்க நான் தான் வெளியே கூப்பிட்டு போகணுமாம்..”

என பட்டாஸாய் கமலி வெடிக்க,

“கூல் டவுன் கம்மல்.. லெஸ் டென்ஷன் மோர் ஒர்க்.. மோர் வொர்க் லெஸ் டென்சன்..”

என அவளை தட்டி கொண்டுத்த சங்கவி,

“இதென்ன ஐபிஎல் மேட்ச்சா…? நாம விளையாட்டுற கிரிக்கேட்டிற்கு நாம வைக்கிறது தான் ரூல்ஸ்.. என்ன தாத்தா நான் சொல்றது..”

என சிவசுப்ரமணியத்தையும் சப்போர்ட்டிற்கு அழைக்க,

“அவ சொல்றது சரி தான் கமலி..  எப்படி பிடிக்கிதோ அப்படியே விளையாடுறதில் என்ன இருக்கு..”

என அவரும் பெரும்பான்மை பக்கமே நிற்க இறுதியில் சில பல உடன்படிக்கைகள் கொண்டு அவர்கள் ஆட்டம் தொடங்கியது.

சிறிது நேரத்தில் ஆதவன் சிவசுப்ரமணியத்தின்  அருகில் வந்து அமர்ந்து அவர்கள் விளையாடுவதை பார்த்து இருக்க அவன் வேலையை பற்றி விசாரித்தவர்,

“பாக்கியம் உனக்கு பொண்ணு பார்க்க ஆசை படுறா.. நீ ஏன் வேண்டாம்ன்னு பிடிவாதம் பண்ணுறீயாம்.. ஏன் டா.. யாரையும் மனசுல நினைச்சு இருக்கியா..”

என கேட்க, “அதெல்லாம் இல்லை தாத்தா.. இப்ப வேண்டான்னு தோணுது..”
என்றான் விட்டேறியாய்..

“வேற எப்போ பண்ணலாம்..”

“இப்போதைக்கு அந்த பேச்சே வேண்டாமே தாத்தா.. பிறகு பார்த்துக்கலாம்..”

“இது என்ன டா பதில்.??  உன் தங்கச்சி கமலியையும் தான் கேட்டோம்.. கடையில் சில விஷயங்கள் நான் தனிச்சையாய் செய்யணும்னு ஆசை படுறேன்.. அதனால இந்த வருஷம் முடியட்டும் தாத்தா.. அடுத்த வருஷம் பண்ணிகிறேன்னு அழகா சொன்னாள்.. அவளை மாதிரி உன்கிட்ட ஒரு தெளிவு இல்லையே டா.. உன் பேச்சை அப்புறம் எப்படி கேட்போம்..”

“ஐயோ தாத்தா.. தீனாவிற்கு கல்யாணம் முடிஞ்சதும் தான் எனக்கு பண்ணனும்னு நினைக்கிறேன்  போதுமா..”

என்று உண்மையை சொல்ல அவனை ஆச்சரியமாய் பார்த்தார் பெரியவர்.

“இதை சொன்னால் அம்மா அவன்கிட்டவே போய் சொல்வாங்க.. தெரிஞ்சா தீனாவும் கோபப்படுவான்.. அதான் அம்மாகிட்ட எந்த காரணமும் சொல்லல..”

என்றவன்,

“அவன் எனக்கு மச்சான் முறையானாலும்.. அவனையும் நான் முகிலன் அண்ணா மாதிரி தான் பார்க்கிறேன் தாத்தா.. என்னைவிட ரெண்டு வயசு பெரியவன் அவன்.. அவனுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல..”

என பளீச்சென்று சொல்ல ஏனோ தன் தங்கை பேரனின் மீது ஆதவன் கொண்டுள்ள பாசத்தை கண்டு மகிழ்ச்சியாகவே இருந்தது.

சிவசுப்ரமணியம் தாத்தாவிற்கு உடன் பிறந்தது ஒரே ஒரு தங்கை..  தங்கை தெய்வானை என்றால் அவருக்கு உயிர் தான்.. அவரை பிரிய மனமின்றி ஒரே தெருவில் தான் கட்டிக் கொடுத்தனர்.

தெய்வானைக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூன்றாவது மகன் தான் லிங்கேஷ்வரன். தங்கையை போலவே தங்கை பிள்ளைகளையும் அத்தனை பாசமாய் சிவசுப்ரமணியமும் அமிர்தவள்ளியும் சிறுவயதில் இருந்தே பார்த்திருக்க இப்போது தெய்வானையும் அவர் கணவரும் உலகில் இல்லை என்றாலும் குடும்பத்தில் பெரியவராய் தாய் மாமனை அனைத்து விஷயங்களிலும் கலந்துக் கொண்டே செயல் படுவார்கள்.

வெளியூர்களில் இல்லாமல் எல்லோரும் திருச்சியிலே இருப்பதும் உறவு விட்டு போகாமல் இருக்க ஓர் காரணமாய் இருக்கலாம்!!

“சரி டா.. அவனுக்கும் தானே வரன் பார்த்துட்டு இருக்காங்க.. என்ன செய்யிறது தினகரனுக்கு இப்ப நேரம் தோதுபட்டு வரல.. ஆனா நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் சரியா நடக்கும்.. நீ ஏன் உன் கல்யாணத்தோடு இதை முடிச்சு போடுற..”

என்று அவர் சொல்லவே சட்டென்று அவனுக்கு ஓர் கோபம் மூழ,

“நேரம் எல்லாம் சரியா தான் இருக்கு.. ஆனா உங்க மகன் மாதிரியான ஆளுங்களால தான் பிரச்சனை..”
என சொல்லிவிட்ட பின்பே தான்  உளறியதை உணர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!