Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 5 (1)

அத்தியாயம் – 5

தன் அறையில் சுற்றம் மறந்து மடிக்கணினியில் ஆழ்ந்திருந்த கரிகாலன் அவன் அருகில் திடீரென தலையை மட்டும் நீட்டி,



Advertisement

“என்ன டா பார்க்கிற..”

என்று அருள் கேட்கவும் திடுக்கிட்டு மடிக்கணினியை மூடி அவனை முறைத்து

“என்ன பார்த்தால் உனக்கென்ன..”
என்று எரிந்து விழுக அவனை மேலும் கீழும் வினோதமாய் பார்த்த அருள்,

Advertisement

“என்னானு தானே மாப்ள கேட்டேன்..”
என்று கேட்டு நிற்கவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனாய்,

Advertisement

“அதை இப்படி சத்தமே இல்லாமல் கிட்ட வந்து தான் கேட்கணுமா.. நான் யாரோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..”
என்று சமாளித்தான். அதனை அப்படியே நம்ப அருள் என்ன குழந்தையா..?? இருந்தாலும்,

“வேற யாரா இருக்கும்.. இங்க நீயும் நானும் மட்டும் தான் வெட்டி ஆபிசர்… அதுக்கு ஏதோ ராணுவ ரகசியம் வைச்சு இருக்கா மாதிரி பட்டுனு மூடுற.. பார்த்துகிறேன்..”

என்றதோடு அவன் எதிரே கால் நீட்டி தன் திறன்பேசியோடு அமர்ந்து விட்டான் அருள்.

Advertisement

அவன் மேலே கேள்வி கேட்காதவரை நிம்மதி என பாதி குடித்து வைத்திருந்த பியர் பாட்டிலை சிப்பியப்படி மீண்டும் தன் கணினியை இயக்கிக் கொண்டே,

“டேய்.. வொர்க் தான்டா பார்த்துட்டு இருந்தேன்.. நீ வேற..”
சாதாரணமாய் சொல்ல,

“வொர்க்கா..?? அப்போ உனக்கு வேலை கிடைச்சுடுச்சா..!!”
என்றான் ஆச்சரியமாய்..

“இல்ல.. சும்மா ஃப்ரீலான்ஸிங் தான்..”
என்கவும் அசுவாரஸ்யமாய் தோளை குலுக்கி,

“அதானே பார்த்தேன்..”
என்று  தானும் பியரோடு திறன்பேசியில் மூழ்கிவிட்டான்.

அருளின் பொழுது முகநூல், படவரி, வலையொளி என மாறி மாறி சென்றுக் கொண்டிருக்க அந்த வரிசையில் புதிதாய் கரிகாலன் பதிவிட்டு இருந்த காணொளியும் அவன் கண்ணில் தென்பட்டது.

தலை முதல் கால்வரை அவனின் தோற்றத்தை தான் முதலில் அளவிட்டது அருளின் கண்கள்..!!

இயல்பிலே வசீகரமான கரிகாலனின் முகம் ‘ஃபில்டர்ஸ்..’ உதவியோடு இன்னும் பேரழகனாய் காட்சியளிக்க அவனுக்கு பொறாமை பற்றிக் கொண்டு வருவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. அதனை,

“வெட்டி பயலா இருந்தாலும் டிரஸ், ஃபோன், வாட்ச்ன்னு எல்லாம் பந்தாவான ப்ராண்ட் தான்..’

என பெருமூச்சோடு ஆற்றிக் கொண்டு அந்த காணொளியை ஓட விட்டான்.

பின்னணியில் ‘நதியே..’ பாடலின் இசை இனிமையாய் வழிந்தோட,

பெண்ணின் குணம் மென்மை,
அதுவே அவளின் மேன்மை என்ற பிம்பத்தின் பிடியில்..

உன் மெய்மையும் வலிமையும் அடங்கிவிடுமோ..??

ஒருவன் துணையே தூய்மை
என்ற பிம்பத்தின் பிடியில்..

உன் கனவும் கானலாய் கரைந்துவிடுமோ..??

பெண்மையே புனிதம்
என்ற பிம்பத்தின் பிடியில்..

உன் மேன்மையும் திறமையும்
முடங்கிவிடுமோ..?

மகுடியாய் மயக்கும் மாயைகளை அவிழ்த்தெறிந்து..
மகுடம் சூடி நிற்கும் மாதர்களுக்கு
என் மனமார்ந்த மங்கையர் தின வாழ்த்துக்கள்..!!

என்று விரிந்த புன்னகையும் பேசும் கண்களோடும் கவிதை ஒன்றை நயமாய் கரிகாலன் பேசிய பாவனையில் அருளிற்கே இரசிக்க தோன்றியது..!!

“இப்போ புரியுது டா.. ஏன் பொண்ணுங்க எல்லாம் உன் பின்னால சுத்துறாங்கன்னு..!!”

என ஆச்சரியமும் பொறாமையும் கலந்து அருள் சத்தமாகவே சொல்ல தன் பதிவை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என அறிந்திருந்த கரிகாலனும் இதழுகிடையில் சிறு புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தான்.

ஆனால் விடாது அருள்,

“நீ எப்படி எல்லாம் பச்சையா கமெண்ட் அடிப்பேன்னு எங்களுக்கு தெரியும்.. ஆனா கவிதையில் அப்படியே மாதரே மங்கையேன்னு ஓவர் உருட்டல்லால இருக்கு.. இதுக்கு என்னை மாதிரி ஓப்பனாவே பேசிட்டு போயிடலாம்..”

என்று  சொல்லவும் வாய் விட்டே சிரித்த கரிகாலன்,

“அருளு.. எல்லா மனுஷனுக்கும் ஷோசியல் மீடியா என்றொரு முகம் உண்டு.. அதற்கென்ன தனி குணமும் உண்டு.. திரையை தாண்டி வந்து நிஜத்தில் தேடினால் எவனும் இங்க யோக்கியனா இருக்க மாட்டான்..”
என நக்கலாய் தத்துவம் மொழிய அதில் கையெடுத்து பெரிய கும்பிடு போட்ட அருள்,

“சரிங்க குருநாதா.. உன்கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..”

என கூற கரிகாலனும் ஆசீர்வதிப்பது போல் ஒரு கையை வைத்து மறுக்கையில் உள்ள பாட்டிலை வாயில் முழுவதும் சரித்தான்.

அந்நேரம் அவன் எதிர்பார்த்து இருந்த அழைப்பு வந்துவிடவே கண்கள் ஒளிப்பெற நிமிர்ந்து அருளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பேசியோடு
பால்கனி சென்றுவிட கரிகாலன் தன் பார்வை வட்டத்தில் இருந்து மறையும் வரையில் கண்டும் காணாமலும் இருந்த அருளின் கவனமோ பின்பு  மடிக்கணினி மீது படிந்தது.

இங்கே கரிகாலனோ சிறிது நேரம் பேசியபின்,

“ஓகே.. ஓகே.. அங்கேயே வெய்ட் பண்ணுங்க..”

என்று அழைப்பை துண்டித்துவிட்டு உடனே மற்றொரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

மறுமுனையில் ஏற்க பெற்றதும்,

“ஹாய் ஏஞ்சல்..”

என உற்சாகமாய் விளிக்க,

“ஏஞ்சலா.. இதென்ன புதுசா..”

என்று சிரிப்பு தேங்கிய குரலில் அவள் கேட்கவும்,

“ஆமா.. நீ வந்த பின்னாடி தான் என் லைப்ல எல்லாம் சரியான ட்ராக்ல போகுது.. அப்போ நீ என் ஏஞ்சல் தானே..”

கரிகாலன் சிலாகித்து சொல்ல,
“நம்பிட்டேன்..” என அவள் கூறியதில் வெளிப்பட்ட நாணத்தை ஏளனமாய் உள்வாங்கினான்.

“நம்பலேனாலும் அது தான் நிஜம்.. உன்கிட்ட இருந்து  கிடைச்ச உத்வேகம் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்துச்சு.. எங்க அண்ணன் கூட இப்ப என்னை மதிகிறான் தெரியுமா..?? எல்லாம் நீ எனக்கு கொடுத்த ஹேப்பி வைப்ஸ்னால தான்…”
என்று ஒரெடியாய் உருகி தவிக்க,

‘ என்னென்ன சொல்றான் பாருங்க..’ என்று யோசிக்காமல் அப்படியே அதனை நம்பி,

“எனக்கும் அதே ஹேப்பி வைப்ஸ் தான் கேகே.. உங்க கிட்ட பேசும்போது..”
என மகிழ்ச்சியாய் மொழிந்தாள்.

“இப்ப வீட்ல தானே இருக்க… அதே ஹேப்பி வைப்ஸ் ஓட கொஞ்சம் வீட்டுக்கு வெளியே வந்து பார்..”
என குறும்பாய் சொல்ல,

“என்னது..???? ஏன்..”
என்றாள் அதிர்ச்சியாய்..

“பதறாத.. நான் உன் முன்னால வந்து நிற்கும் காலம் வர இன்னும் கொஞ்சம் காத்திருக்கணும்..”

“என்ன கேகே..”

“ஒன்னும் இல்ல மா.. இப்ப வெளியே போய் பார்.. உனக்கு சர்ப்ரைஸ்..”
என இதமாய் சொல்ல, “ம்ம்..” என்றதோடு அவள் வேகமாய் ஓடுவது தெரிந்தது.

“அங்க எதிரில் ஒரு டெலிவரி பையன் இருக்கான் பார்.. அவன்கிட்ட நீதான்
‘Uni_k_princess’ னு சொல்லு..”

என அடுத்து கரிகாலன் கூறியதை பின்பற்றி அவள் செய்ததும் அவனும் பார்சலை அவளிடம் கொடுப்பதும் அதனை பெற்று அவள் மீண்டும் ஓடி செல்வதும் என அவளின் ஒவ்வொரு அசைவையும் அனுமானித்து அமைதியாய் காத்திருந்தான்.

தன் அறைக்கு வந்து விட்டாள் போல.. வேக மூச்சுகளோடு,

“ஏன் திடீர்னு இப்படி ஹார்ட் அட்டாக் எல்லாம் கொடுக்கறீங்க.. வீட்ல யாராவது பார்த்து இருந்தால் அவ்வளவு தான்..”

என சொல்ல சிரித்த கரிகாலன்,

“பார்த்தால் என்ன..?? ஃப்ரெண்ட் கொடுத்ததுன்னு சொல்றது..”
என்றான்.

“எந்த ஃப்ரெண்ட்.. எங்க.. யார்.. எப்படின்னு என்னை துருவி துருவி கேட்பாங்க.. அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது..”

“சரி.. அதான் யாருக்கும் தெரியலையே.. விடு.. இப்ப பிரிச்சு பார்.. நான் லைன்லேயே இருக்கேன்..”

சில நிமிடங்கள் சென்று,

“ஹே.. காலேஜ் பேக்கா..? அழகா இருக்கு கே.கே!!  செம்ம ஸ்டைலிஷா இருக்கு..”
என்றவள்,

“ஆனா இப்ப எதுக்கு திடீர்னு..”
என்று சங்கடமாய் கேட்க,

“இன்னைக்கு வுமன்ஸ் டே இல்லையா..?  என்னோட முதல் மாச சேலரி இப்ப தான் வாங்கி இருக்கேன்.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பொண்ணுக்கு எதாவது ஸ்பெஷலா செய்ய தோணுச்சு… அதான் ஒரு சின்ன கிஃப்ட்..”
என அவன் சொல்லவும் நெகிழ்ந்த பெண்ணவள்,

“தேங்க்ஸ் கே. கே!! சோ ஸ்வீட் ஆஃப் யூ..” என்க அவளின் உணர்வுகளை தெளிவாய் உணர்ந்து,

“தேங்க்ஸ் நான் தான் சொல்லணும்.. நான் ரொம்ப தூரமா இருந்தாலும்.. என் இடத்தில் இந்த பேக் எப்பவும் உன் கூடவே இருக்கும் இல்லையா… ரொம்ப க்ளோஸா..”

என நெருக்கமாய் பேசி இன்னும் உருக வைத்தான்.

“என்ன ஃப்ளேர்ட் பண்றீங்களா..”
என்றவள் குரலே இறங்கி ஒலிக்க,

“ஆமா.. எனக்கே எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்க ஒரே பெண் நீ தான்.. உன்கிட்ட ஃப்ளேர்ட் பண்ணாமல் வேற யார்கிட்ட பண்ணுவேன் சொல்லு…”

என இரசித்து கூறவே, “ச்சீ… போங்க..”
என்றாள் நாணத்தோடு..

“ஹே.. வெட்க படுறீயா என்ன..?? வீடியோ கால் வாயேன்..”

“நோ.. நோ கேகே..!!”

“ஒரு தடவை கூட நீ வீடியோ கால் வந்ததே இல்லை.. உன்னை லவ் பண்றவன் நான்.. அஃப்டர் ஆல் ஒரு வீடியோ கால்.. அதுக்கு கூட என் மேல உனக்கு நம்பிக்கையே இல்ல.. அப்படி தானே..”

என அடிப்பட்ட குரலில் வருத்தமாய் அவன் சொல்ல,

‘ஆமா டா.. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு விட்டுடனும்.. திரும்ப திரும்ப கம்பல் பண்ற உன் மேல நம்பிக்கை இல்ல..’

என முகத்திற்கு மேல் கூறி வைத்து இருந்தாள் அப்பெண் பல பிரச்சனைகளை அங்கேயே தவிர்த்து இருக்கலாம்..!!

ஏனெனில் போலி உத்தமர்களின் முதல் வசனமே,
‘என் மீது நம்பிக்கை இல்லையா..’ என்பது தான். நேர்மை நெஞ்சங்களுக்கு நம்பிக்கையை செயலில் விதைக்க தெரியுமேயன்றி  வார்த்தைகளில் அல்ல..!!

அவனின் வருத்தம் தாங்காமல்,

“அப்படி இல்ல கேகே.. என் ரூம்மிற்கு எப்போ வேணும்னாலும் யார் வேணும்னாலும் வருவாங்க.. பார்த்தால் நான் செத்தேன்..!”
என்று சங்கடமாய் காரணம் கூறினாள்.

“அவங்க வந்தால் சட்டுன்னு தெரியாத இடத்தில் வந்து உட்கார் சிம்பிள்.. இங்க காதலில் கொஞ்சம் கொஞ்சம் கள்ளதனம் இருக்கலாம்.. அது தான் கிக்கே..”

ஏதேதோ கூறி அவளை கரைத்து காணொளி அழைப்பில் தொடர்பை ஏற்படுத்தினான்.

“பார்றா.. ஏஞ்சல் தரிசனம் ஏகபோகமா இருக்கே.. டேய் கேகே உன் காட்டில் இன்னைக்கு மழை தான்..”

என்றவன் பேச்சை ஆராயாமல் நாணி கோணி சிரித்தாள் அப்பெண்.. அப்படியே சில நிமிடங்கள் தொடர்ந்த பேச்சு யாரோ அங்கே வரவும் சட்டென்று தடைப்பட்டு போனது..!!

‘நைட் அப்புறம் பேசலாம்…’ என அதனை தொடர்ந்து வந்த குறுஞ்செய்தியில்,

“போடி.. எப்படியும் நீயா வர தான் போற..”

என அலட்சிய சிரிப்போடு திறன்பேசியை சுழற்றியப்படி உள்ளே செல்ல அங்கே அவனின் மடிக்கணினியை தீவிரமாய் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் அருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!