Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 5(2)

அதனை கண்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேற நான்கே எட்டில் அவனை நெருங்கி கீழே தள்ளி இருந்தவன் கணினியை மூடி,

“கொன்றுவேன் டா நாயே.. மேனர்ஸ் இல்ல.. என் பர்மிஷன் இல்லாம என்னோடதை தொடுவியா..”
என கத்த விழுந்த வாக்கிலே சற்றும் நகராமல்,

“டேய்… ரொம்ப கத்தாத.. எல்லாம் பார்த்தாச்சு.. பார்த்தாச்சு..”

என்று நக்கலாய் கூறவும் அதிர்ச்சியில் உறைந்தவன்,



Advertisement

“என்ன.. என்ன பார்த்த..” என தடுமாறி,

“என்ன போட்டு வாங்க பார்க்கிறீயா..? உன்னால உள்ளயே போயிருக்க  முடியாது.. “

என உறுதியாய் சொல்ல,

Advertisement

“kkTheDarkKing’  என அருள் சொல்லவும் இன்னமும் அதிர்ச்சி தான்.

Advertisement

“இது தானே உன் பாஸ்வேர்ட்..”

என ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட தொனியில் பதட்டமும் கோபமும் அதிகரிக்க ஆவேசமாய் அவன் மேல பாய்ந்து சரமாரியாய் தாக்கினான்.

“ஃப்ராடு நாயே.. பரதேசி..” என்று ஆரம்பித்து கேவலமாய் திட்ட திருப்பி அடித்த அருளும்,

Advertisement

“என்ன குருநாதா… கொஞ்சம் முன்னாடி தானே உன்கிட்ட நிறைய கத்துக்கணும்னு சொன்னேன்.. அதில் முதல் பாடமே எவனும் இங்க யோக்கியன் இல்லை என்றது தான்..
நீயும் இல்ல.. நானும் இல்ல..”

என்று தெனாவெட்டாய் கூற கைகளப்பு நீடித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் இருவருக்குமே மூச்சு வாங்க
எதிரெதிரே முறைத்து அமர்ந்துவிட்டனர். போதையிலும் மயக்கத்திலும் இருவருக்குமே பார்வை சொருகியது.

உதட்டில் துளிர்த்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு,

“ரொம்ப நாளாவே உன்னை கவனிச்சுட்டு தான் வர்றேன்.. என்ன விஷயம்னு தான் கண்டுபிடிக்க முடியல.. இன்னைக்கு தொக்கா உன் லேப்டப் மாட்டும் போது விட்டு வைப்பேனா என்ன..”

என நக்கலாய் கூறிய அருள்,

“நீ ஒழுங்கு கிடையாதுன்னு தெரியும்.. ப்ளேபாய்ன்னு மட்டும் தான் நினைச்சேன்.. ஆனா நீ இவ்வளவு கேடு கெட்டவனா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல டா.. எத்தனை பொண்ணுங்க..
எத்தனை விதமான போட்டோஸ் வீடியோஸ்..!! ஹப்பாடி அரண்டு போயிட்டேன் ஒரு நிமிஷம்…!!   ஈவு இரக்கமே இல்லாம டோக்கன் நம்பர் போட்டு வைச்சு இருக்க..”
என்று சொன்னதற்கு எகத்தாளமாய் சிரித்த கரிகாலன்,

“ஈவு இரக்கம் பார்க்க அவளுகளும் ஒன்னும் ஒழுங்கு கிடையாது.. என்னை  குற்றவாளியா கைக்காட்டி செல்ல கொஞ்ச நேரம் கூட ஆகாது.. ஆனா அதை செய்ய மாட்டாள்க.. ஏன்னா என்னை காட்டி கொடுக்கும் முன்பே அங்க அவ எப்படி பட்டவன்னு உலகத்திற்கே தெரிஞ்சு இருக்கும்.. அந்த பயம்.. என்னோட ஆதாயம்..”

என்று திமிராக கூற அந்த அழகிய முகத்திற்கு பின்னான அரக்கனை   கட்டவிழுத்து கிழிக்க காலம் காத்து கிடந்தது.

ஒரு பக்கமாய் சரிந்த தலையை சுவற்றில் சாய்த்து போதையோடு,

“ஸீ.. தானா வந்து என்மேல விழும்போது போம்மான்னு சொல்ல நான் என்ன புத்தனா..??? அவங்களுக்கு என்ன தேவையோ அதை காட்டி எனக்கு என்ன தேவையோ அதை பிடிங்கிப்பேன்.. அவ்வளவு தான்..”

அலட்டிக் கொள்ளாமல் கரிகாலன் பேசியவற்றை கேட்டு இருந்த அருள்,

“நீ என்ன ஈயம் பூசினாலும் உன் லட்சணத்தை நான் மத்தவங்களுக்கு சொன்னால் என்ன நடக்கும்ன்னு  நான் தனியா விளக்க வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்..”

என்று கேலியாய் கேட்க அதற்கும் பெரிதாய் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

“உன் மனசுல இந்நேரம் ஏதோ திட்டம் போட்டு வைச்சு இருப்பேன்னு தெரியும்.. வளவளன்னு சுத்தாம நீ நேராவே சொல்லலாம்..”

என்று சுருக்கமாய் கேட்க கோணலாய் சிரித்த அருளும்,

“பாய்ன்ட் மச்சான்.. என்னோட குறி பணம்.. பணம் மட்டும் தான்.. நீ எவ்வளவு வாங்கிற என்ற விபரம் எல்லாம் தேவையில்லை.. ஆனா நான் தேவைன்னு கேட்கிற பணத்தை கேள்வி கேட்காம நீ கொடுக்கணும்.. ஓகே வா..?”

என தந்திரனாய் பேரம் பேச மனதில் ஆயிர கணக்குகளோடு அதற்கு சம்மதம் தெரிவித்தான் அந்த சாணக்கியன்.

****

அமிர்தவள்ளி மயக்கம் வருவதாய் சொன்னதோடு நின்ற பேச்சை மீண்டும் யாருமே எடுக்கவில்லை.

ஆளுக்கு ஒரு கருத்து இருந்தாலும் எங்கே நாம் பேச போய் மறுபடியும் சண்டை வந்துவிட்டால் என்ற எண்ணத்தில் எல்லோருமே அமைதியாய் அவரவர் வீட்டிற்கு மாலையில் கிளம்பிவிட்டனர்.

அம்பிகாவிற்கு கணவனின் செயலில் கோபம் தான். அதனை அன்று காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் பிறகு தனிமையில்,

“மாமா உங்களை திட்டியதில் தப்பே இல்லைங்க.. நீங்க செஞ்சது நியாயமே கிடையாது..”

என்று அழுத்தமாய் சொல்ல,

“என்ன நியாயம்.. ஒன்னுமே இல்லாத விஷயத்தை ஆளாளுக்கு எடுத்து பேசாதீங்க..”

தந்தையிடம் காட்ட முடியாத எரிச்சலை மனைவி மீது திருப்பினார்.

“பேச வேண்டிய விஷயம் தான்.. இப்ப கண்டுக்காமல் விட்டால் நீங்க இதையே தான் தொடர்வீங்க..
உங்களுக்கு என்ன தினகரன் மேல வெறுப்புன்னு நான் சொல்லட்டா..? அந்த பையனும் அவங்க அப்பா மாதிரியே இருந்திருந்தால் நீங்களும் அலட்சியமா உதறிட்டு போயிருப்பீங்க..

ஆனா தினகரனோட திறமையும் தொழில் முன்னேற்றமும் உங்க கண்ணை எல்லாம் உறுத்துது..  அந்த புகைச்சலோட வெளிப்பாடு தானே இதெல்லாம்…”

என அம்பிகா கூறியது சுந்தரமூர்த்தியை குறுகுறுக்க செய்தது தான். ஆனாலும்,

“அம்பிகா.. வார்த்தையை அளந்து பேசு.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்..”

என்ற அவரின் ஆவேசத்தில் துளியும் சலனமின்றி,

“நான் உங்க மனசாட்சி மாதிரி.. என்கிட்ட நீங்க மறைக்க முடியாது..”

என்றவர், “ராஜா அண்ணாவும் பழனி அண்ணாவும் என்னவோ செய்யட்டும்.. நீங்களும் அவங்களோட துணை போக கூடாது.. அவ்வளவு தான் நான் சொல்வேன். அடுத்தவங்க பிள்ளைக்கு கேடு நினைச்சால் அது நம்ம பசங்க தலையில் தான் விடியும்..”
என்று கூறிவிட்டு சென்றுவிட மனைவியின் ஆணித்தரமான வார்த்தைகள் அவரை கொஞ்சமே யோசிக்க வைத்தது.

இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இன்றி ஓடியிருக்க வழக்கம் போல் காலையில் கடைக்கு கிளம்பி இருந்த கமலினி தன் ஸ்கூட்டியை துடைத்துக் கொண்டிருந்தபோது வந்து நின்றான் ஆதவன்.

பைக்கில் இருந்து இறங்காமலே,

“தாத்தா… தாத்தா..” என்று அழைத்து ஹார்ன் அடிக்க அங்கேயே இருந்தவளை அவன் சட்டையே செய்யவில்லை. இன்னமும் கோபமாக தான் இருக்கிறான் என்று புரிந்தது. அதற்கென தானும் பேசாமல் இருப்பதா..?? எனவே,

“முன்ன எல்லாம் நேரா வீட்டுக்கு வந்திடுவ.. போன தடவை கதவோட நின்னாச்சு.. இப்ப ரோட்டிலே நின்னாச்சு.. அடுத்த தடவை எப்படி.. தெருமுனையை தாண்டுவியா..?”

என்று வேண்டுமென்றே சீண்ட  பதிலுக்கு அவன் முறைக்கவும்,

“வேற ஒன்னும் இல்ல.. ரொம்ப கிட்ட இருந்து கூப்பிடுறீயே.. தாத்தா காது அவ்வளவு ஷார்ப்ன்னு இன்னுமா இந்த உலகம் நம்புதுன்னு யோசிச்சேன்..”
என்றாள் போலி புன்னகையோடு..

‘என்னை காலைலயே வர சொல்லிட்டு.. உள்ள என்ன பண்றார் இவரு..’
என வந்த கடுப்போடு,

“தெரியுதுல.. போய் தாத்தாகிட்ட சொல்லு போ..”

என்று விரட்ட தோளை குலுக்கி தன் துடைக்கும் பணியை தொடர்ந்தபடி,

“நான் ஏன் சொல்லணும்.. உனக்கு வேணும்னா நீயே கூப்பிடு..”

என்று சொல்ல மேலும் காண்டாகி,

“அப்போ அவர் வந்து தேடினால்  நின்னுட்டு போயிட்டான்னு சொல்லிடு..”

என்று கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் அவன் பைக்கை திருப்பவும் தன் கேலியை கைவிட்டவளாய்,

“ஆதி.. நில்லு.. நில்லு..” என அவசரமாய் வந்து தடுத்தாள். அவள் கூப்பிடவுமே நின்று விட்டாலும் நிமிர்ந்து அவளிடம் எதுவும் பேசவில்லை. அன்று அவள் பேசிய பேச்சினை அப்படியே விட ஆதவனிற்கு மனதில்லை.

கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு,

“நானே இறங்கி வந்து ஸாரி சொல்லும் வரை பேச கூடாதுன்னு பிடிவாதம்.. அப்படி தானே..”
என்ற கமலினி,

“தப்பு என் மேல தான் ஸாரி..” என்று கூற ஆதவன் புருவங்கள் உயர பார்க்கவும்,

“இப்பவும் உன் பிடிவாததிற்காக எல்லாம் சொல்லல ஆதி.. உண்மையாவே கேட்க தோணுச்சு.. அவர் எப்படி பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா அவர் கேரக்டரை விமர்சிக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது.. நான் அப்படி பேசி இருக்க கூடாது..”
என்றாள் எந்த தயக்கமும் இன்றி..

‘தவறு செய்துவிட்டேன் என்பதை கூட எவ்வளவு கெத்தாய் கூறுகிறாள்..’

தன் தங்கையை நினைத்து தானாய் புன்னகை பூத்தது.

“இப்பவாவது உள்ள வருவீங்களா..”
என கேட்க தானும் கோபம் விடுத்து இலகுவாய்,

“இல்ல கமலி.. நேரம் ஆகுது.. தாத்தாவோட போயிட்டு வந்து நான் அப்படியே ஆபிஸ் போகணும்.. உள்ள வந்தால் பாட்டி விட மாட்டாங்க.. நீ போய் சொல்லேன்.. ப்ளீஸ்..”

என்று கெஞ்சலோடு சொல்ல மறுக்காமல் உள்ளே சென்று சிவசுப்ரமணியத்திடம் கூறிவிட்டு மீண்டும் வந்தவள்,

“ஆமா.. அப்படி எங்க தான் போறீங்க.. தாத்தாவை கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறார்..”
என்றாள் கேள்வியாய்..

“போகும் போது எங்க போறேன்னு கேட்கலாமா..??”

“நான் கேட்பேன்.. சொல்லு ஆதி..”

“ம்ச்.. லிங்கா மாமா வீட்டிற்கு..”
என்கவும் அதிர்ந்தவள்,

“அங்க வா..?? எதுக்கு..” என்று வேகமாய் கேட்க,

“அடடா.. எத்தனை கேள்வி தான் கேட்ப நீ.. தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற..”
என்றான் அவனும் பிடி கொடுக்காமல்..
ஆனால் கமலினிக்கு தெரியவில்லை என்றால் தலை வெடித்துவிடுமே..!!

நடந்தவை அவர்களுக்கும் தெரிந்து இருக்கும்.. நிச்சயம் தங்கள் மேல் கோபத்தில் தான் இருப்பார்கள். இப்போது தாத்தா போக போய் தாத்தாவை எதுவும் பேசி விட்டால்? இல்லை எனில் அப்பாவிற்காக தாத்தா மன்னிப்பு கேட்க நினைத்து இருந்தால்..?? இரண்டுமே அவளுக்கு உவப்பாக இல்லை.

“வேற எதுவும் கேட்க மாட்டேன்.. ப்ளீஸ் இதை மட்டும் சொல்லு..”

என கமலினி நச்சரிக்கவும்,

“ம்ம்ம்.. சித்தப்பா தான் தீனாவை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறாரே.. ரொம்ப ஆசை படுறார்ல.. ஸோ தினகரனை நம்ம கமலினிக்கே பேசி முடிச்சிடலாம்ன்னு சொன்னேன்.. அதான் தாத்தாவும் உடனே கிளம்பிட்டார்..”

என்று படு நக்கலாய் சொல்ல அதில் கொலைவெறிக் கொண்டவள்,

“ப்பே.. உன்னை எல்லாம் மதிச்சு கேட்டேன் பார்.. என்னை சொல்லணும்..” என்று தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.  அவன் விளையாட்டாய் சொன்னதற்கு எந்த தேவதை ‘ததாஸ்து’ கூறியதோ அது அப்படியே நடக்கும் என்பதை பாவம் இருவருமே அக்கணம் அறிந்து இருக்கவில்லை.

அதற்குள் வந்துவிட்ட சுப்ரமணியமும்,

“என்ன டா என் பேத்தியை சொன்ன.. கோபமா போறா..”
என்று கேட்க,

“இப்படியே ரோட்டில் நின்னு கதாகாலக்ஷேபம் நடத்திட்டு இருந்தால் விடிஞ்சுடும்.. சீக்கிரம் ஏறுங்க தாத்தா..”

என்று அவரை அழைத்துக் கொண்டு பறந்துவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!