Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 16

நீங்காத உறவே!…

அத்தியாயம் 16

 தன் தாய் மாமன் முகத்தைப் பார்த்த நிறைக்கு மனது கஷ்டமாக இருந்தாலும்.. தான் சொல்வது சரியே என்று நினைத்தாள். தாய்க்குப்பின் தாய்மாமன் என்ற வார்த்தையை தன் மாமனிடம் முழுதாக நம்பினாள். சிறு வயது முதலே பெற்றவர் சரியில்லாமல் போக, தாய்மாமன் என்றாலும் தந்தையின் அரவணைப்பை அவரிடம் தான் உணர்ந்தாள். தன் தந்தையின் ஸ்தானத்தில் தான் வீரணனை வைத்துப் பார்த்தாள்.

பிறந்தது முதல் கையில் வாங்கி திருநிறைச்செல்வி என்று பெயரிட்டு, முதல் இரண்டும் ஆண்மகவாக இருக்க அடுத்து பிறந்த செல்வியை கையில் தாங்கினார் வீரணன். திருநிறை செல்விக்குப்பின் பிறந்த பிரபாகரனும் பையனாக இருக்க பெண் பிள்ளைக்கான முழு செல்லமும் நிறைக்குத்தான்.



Advertisement

அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே தாய்மாமன் சொல்வது நீதான் என் வீட்டு மருமகள் என்று… கல்யாணம் என்றால் என்னவென்று தெரியாத வயதிலே தான் மாமன் மகனை தான் கைபிடிக்கப் போகிறோம் என்று நினைத்திருக்கிறாள்.

மூத்தவன் வீரசிவாவாக இருக்க அவனுக்குத்தான் லேசு பாசாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதுவும் ஜாதகம் சொல்லி தட்டி கழிந்து போச்சு. அப்போதுதான் நிறை பள்ளி படிப்பை முடித்து இருந்ததால் பெரிதாக அவளுக்கு வீரசிவா மேல் நாட்டம் கிடையாது. ரோகினி வரவை சந்தோஷமாகத்தான் எதிர்கொண்டாள்.

ஆனால், வீரணனாகத்தான் நிறை வீட்டுக்கு வந்து வீரராகவனை மணம் முடித்து தருவதாக வாக்கு கொடுத்தது. அவளாக ராகவனை நினைத்தது கிடையாது. வீர சிவா திருமணம் முடிந்த பின், வீரராகவன் உடன் தான் உன் திருமணம் என்று வீடு தேடி வந்து பேசி முடித்தது வீரணனனும் கல்யாணியும் தான். பருவ வயதில் இருந்தவளுக்கு பச்சை மரத்து ஆணி போல் பதிந்து போக, அதற்குத் தோதாக வீரராகவனும் தன் கட்டிக் கொள்ளும் பெண் என்று உரிமையாக பேச மனதில் நிறைய நிறையவே ஆசையை வளர்த்துக் கொண்டாள் திருநிறைச்செல்வி.

Advertisement

ராகவன் படிக்கும் பொழுது அவனுக்காக சாமி கும்பிட்டு, அவனின் பரிச்சையின் பொழுது விரதம் இருந்து என்று ராகவனின் ஒவ்வொரு வெற்றியிலும் இவள் தான் பூரித்து போவாள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அவனை மனதில் நினைத்து பூஜித்தாள்.

Advertisement

தன் வேலையில் பெரிய பதவியும் அதிக சம்பளமும் வந்தவுடன் வீரராகவன் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. அதற்குத் தக்க தாய் மாமனும் வேற இடத்தில் பெண் பேசி முடித்துவிட்டார். நிறையால் தன் மாமனை நம்பவே முடியவில்லை. தன்னைத் தொட்டு தூக்கி தோளில் போட்ட வளர்த்த மாமனா அவ்வாறு நடந்து கொண்டது? எப்படி எல்லாம் பேசினார். எவ்வளவு உறுதியாக வாக்குக் கொடுத்தார். கடைசியில் பெற்ற மகன் என்று வரும்பொழுது சொந்த தங்கை மகள் அந்நியமாகி போனாள். அவர்கள் வசதிக்கு தக்க ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தது தவறில்லை. ஆனால், அதற்கு முன் இவள் மனதில் ஆசையை வளர்த்தது தவறல்லவா?…

 எத்தனை வலி, எவ்வளவு கஷ்டம், எத்தனை இரவு உறங்காமல் தலையணை நனைந்து இருக்கிறது. தன் தந்தைக்கு நிகராக வைத்த ஒருத்தர் பொய்த்து போனாரே!… மகனைப் பற்றி அவ்வளவு யோசித்தவர். தான் தூக்கி வளர்த்த தங்கை மகளை ஒரு கணமும் யோசிக்கவில்லையே?…

அவர்கள் எல்லாம் ஈசியாக கடந்து விட, மனதளவில் துன்பத்தை அனுபவித்தது இவள் தானே. ஒரு பெண் மனதில் ஐந்து வருடங்களாக ஆசையை வளர்த்து ஏமாற்றி விட்டோம் என்ற நினைப்பு தந்தை, மகன் இருவருக்குமே இல்லையே?… அவளால் தன் கணவனின் தந்தையாகத்தான் வீரணனை பார்க்க முடிந்தது. தன் தாய்மாமன் என்ற ரத்த சொந்தத்தோடு பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நினைப்பை மனதில் கொண்டு வந்தால் சகஜமாக மாமா, அத்தை, ராகவன் மாமா என்று பழக முடியாது.

Advertisement

தற்போது அவள் நியாயத்தைப் பேசவும் முடியாது. என்ன பேச முடியும்.. அந்த வீட்டின் கடைசி மகனுக்கு மனைவியாக வாக்கப்பட்டு வந்த பின்… பிரபாகரன், திருநிறைச்செல்வி கல்யாணம் நடந்த முறை… அவன் கொஞ்சம் முடியாதவனாக இருக்க சொந்தத்தில் பெண் கொடுக்க முன்வரவில்லை. நிறை வீட்டிலும் சீர் செய்து கல்யாணம் செய்து வைக்க வழியில்லை. இவர்கள் இருவருக்கும் இந்த பொருத்தத்தை பார்த்து அல்லவா நடந்தது திருமணம். ஆனால், அவளின் அன்பு கணவன் அதை மாற்றி தங்களின் வாழ்க்கையை நல் முறையில் கொண்டு செல்கிறான். அவளுக்கு ராகவன் தந்த வலியை விட, சொந்த தாய்மாமன் நம்பிய ஏமாற்றம் தான் பெரியதாக இருந்தது. தற்போது எல்லாம் நன்றாகிவிட்டது. மற்ற எல்லோரையும் விட நிறைக்கு திருமண வாழ்க்கை மிக மிக திருப்தி. ஆனாலும் சாதாரண மனித ஜென்மம் தானே… கடந்து வந்த வழி, அவ்வளவு எளிதாக கடக்க தெரியவில்லை.

வீரணன் தன் தங்கை மகளையே பார்த்து இருந்தார். அவருக்கு  தங்கை மகள் மேல் மிகுந்த பாசம் தான். இவ்வளவுக்கும் நிறை அவர் தூக்கி வளர்த்த பெண். தன் வீட்டின் பெண் பிள்ளையாகத்தான் அவளை நினைத்தார். ஆனால் காலம் மாற வெளியில் நாலு மனுசங்களோடு பேசும்போது, தன் மகனுக்கு நல்லதையே செய்ய மனம் நினைத்தது. படித்தவன், பெரிய உத்தியோகத்தில் இருப்பவன் அவனுக்கு ஏற்ப மனைவியை அமைத்துக் கொடுக்க நினைத்தார். என்னதான் ரத்த சொந்தமாக இருந்தாலும் சரி இல்லாத இடத்தில் மகனின் தலையை கொண்டு போய் நுழைக்க விரும்பவில்லை.

பிரபாவோடு நிறைக்கு திருமணம் முடிந்து வந்த பின், முன்பு போல் மாமா என்று தன்னோடு செல்லம் கொஞ்ச வில்லை என்பதை அறிவார். ஆனால், கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று நினைத்தார் போல… அப்படி அல்லாமல் அவள் மனதில் இன்னமும் இதை பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டிருப்பாள் என்று யோசிக்கவில்லை. அவரவர் வாழ்க்கையில் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம்.

அந்த பேச்சுவார்த்தைக்கு பின் நிறை பெரும்பாலும் தன் மாமனாரிடம் ஒதுங்கிப் போனாள். ஒரே வீடாக இருந்தாலும் சம்பாத்தியம், வேலை, சமையல் எல்லாம் தனித்தனியாக இருக்க யாரோடும் அனாவாசிய பேச்சுவார்த்தைகள் இன்றி நாட்கள் கடந்தது.

நிறையும் முன்பு போல அல்லாமல் தன் பெற்றவர்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாள். அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்வதற்கு இவள் பணம் தரவில்லை. சேமிப்பு இருக்கு என்பதால் கணவனின் பணத்தையும் எடுத்துக் கொடுக்க விரும்பவில்லை. என் வருமானத்தில் என்னால் என்ன முடியுமோ அதைத்தான் செய்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள். நிறை வேலை பார்ப்பது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்பதால் மாதம் தன் வருமானத்தில் பிடித்துக் கொள்ள சொல்லி வீட்டுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்களை அனுப்பி விடுவாள். மற்றபடி அவரவர் செலவை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் அவ்வளவுதான்…

அன்று நிறை வேலை முடித்து வீட்டுக்கு பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். பிரபாவுக்கு முக்கிய வேலை இருக்க வர தாமதமாகும் என்று விட்டான். அதில் அவளுக்கு நிறைய வருத்தம். பஸ் ஸ்டாண்ட் சென்று பார்த்தால் மாலை நேரம் என்பதால் எல்லா பஸ்சும் கூட்டமாக வந்தது. அதனால ரெண்டு பஸ்ஸை தவற விட்டு விட்டாள். இதற்கு முன் கூட்டமாக ஏறியதில்லையா என்று கேட்டால் இதை விட அதிக கூட்டத்தில் எல்லாம் முண்டியடித்து ஏறி சென்று இருக்கிறாள். தற்போது என்ன?

நிறைக்கு மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கிறது. முன்பு என்றால் அதை சாதாரணமாக கடந்து இருப்பாள். ஆனால், தற்போது கணவனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்த அடுத்த மாதத்தில் மூன்று நாட்கள் தள்ளிப் போனதும் நிறைக்கு மனதில் என்னென்னவோ நினைப்பு. எப்போதும் குளிக்கும் தேதியை கவனத்தில் வைத்திருப்பதால், அந்த நாளைக் கடந்ததும் மனம் பரபரப்பாகி போனது. ஒருவேளை இருக்குமோ?.. ஒரே மாதத்தில் எல்லாம் குழந்தை தங்குமா என்ன?.. ஏன் இருக்காது. எத்தனையோ பேருக்கு திருமணம் முடிந்த அடுத்த மாதத்தில் குழந்தை தங்கவில்லையா?… ஒரு நாள் போய் ரெண்டு நாள் போய், மூன்று நாள் ஆனதும் நிறை பெரியதாக நம்பினாள். ஆனால், அவள் கணவனிடம் வாயை திறக்கவில்லை.

எல்லாம் அவளுடைய ஆசையும், எதிர்பார்ப்பு மட்டும்தான். ஒரு பத்து நாளாவது தள்ளி போகட்டும் என்று காத்திருக்கிறாள். அப்போது தானே டெஸ்ட் செய்தாலும் தெரியும். அதுவரை தன்னை ஜாக்கிரதியாக காத்துக் கொள்ள நினைத்தாள். வீட்டு வேலையில் கூட அழுத்தி செய்யவில்லை.

கணவன் பற்றி தான் அவளுக்கு நன்றாக தெரியுமே!… ஒரு மாதிரி உடம்பெல்லாம் வலிக்குது. வேலை செய்ய முடியல என்ற பின் முக்கால்வாசி வேலைகளை அவனே பார்த்துக் கொண்டான். அதனால் அவளுக்கு பெரிதாக சிரமம் இல்லை. இதுவரை கணவனோடு வேலைக்கு சென்று வந்ததால் கஷ்டமும் தெரியவில்லை. அவர்கள் ஊர் கிராமம் என்பதால் அவ்வளவு தூரம் ஆட்டோ வராது.

கிராமத்து பஸ் மெதுவாகத்தான் செல்லும். ஆனால், இடம்தான் கிடைக்க வேண்டும். அவளுக்கு என்று ஒரு சீட்டாது கிடைக்காதா என பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டிற்க்கு செல்ல வேண்டி ராகவனும் வர, தனியாக நிற்கும் நிறையை கண்டான். அவள் வரும் பஸ்சை எல்லாம் விட்டுவிட்டு நிற்பதை கண்டும் காணாமல் செல்ல மனம் வரவில்லை.

“நிறை” என்றான்.

 குரல் ராகவனாக இருக்குமோ என்று நினைப்போடு திரும்பி பார்க்க, அவன் தான். அவள் அமைதியாக நின்றாள்.

“என்ன நீ மட்டும் நிக்கிற, பிரபா எங்க?”

“அவருக்கு முக்கியமான வேலை மாமா. வர லேட் ஆகும்னு சொல்லிட்டாரு”

“ஓ… பஸ் எதுவும் கிடைக்கலையா?”

“பஸ் வருது. ஆனா ரொம்ப கூட்டமா இருக்கு. அவ்வளவு தூரம் நின்னுட்டே போக முடியாது. அதான் கொஞ்சம் ஃப்ரீயாக பாத்துட்டு இருக்கேன் மாமா” என்றதும்,

“இனி அடுத்தடுத்து வர பஸ் எல்லாம் கூட்டமா தான் இருக்கும். நாலா பக்கமும் இருட்டு கட்டி வருது, மழை வரும். நான் வீட்டுக்கு தான் போறேன். நீ வா.. உன்னைய வீட்டுல விட்டுறேன்”என்றதும்,

அவள் கொஞ்சம் யோசித்தாள். கணவனின் அண்ணன் மட்டும் என்றால் பிரச்சனை இல்லை. இருவருக்கும் அவரவர் வாழ்க்கை தான். யார் மனதிலும் எதுவும் கிடையாது. ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்கள் மனதில் என்ன இருக்குமோ?… அவள் தயங்கி நிற்க,

“வா நிறை, லேசா தூரல் விழ ஆரம்பிச்சிருச்சு பாரு” என்றான்.

நிறை ஷேர் ஆட்டோ எதுவும் கிடைக்குமா என்று பார்த்தாள். மழையும் பெய்ய தொடங்கியது. ரோடு வேறு குண்டும் குழியுமாக இருக்க, கொஞ்சம் தயங்கினாலும் தன் கணவனை தெரியும் என்பதால் தைரியமாக ராகவனுடன் பயணித்தாள்.

லேசாக தூறல் தொடங்கியது. தன் சேலையை சுற்றி வயிற்றை அணைவாக வைத்துக் கொண்டாள். ரொம்ப ரொம்ப அக்கறை… தங்கள் ஊர் செல்லும் பாதையில் வண்டி திரும்ப,

“மாமா கொஞ்சம் மெதுவா போங்க. ரோடு பார்த்து ஓட்டுங்க” என்றாள்.

ராகவன் ஒரு நொடி புரியாமல் பார்த்தவன். புரிந்த பின் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. பொதுவாக வெளியில் பேசி வைத்த கல்யாணம் என்ன ஆயிற்று என்ற போது ஜாதகம் சரியில்லை என்றே சொல்லி வைத்தார்கள். ஆனால், உண்மை நிலவரம் ராகவன், நிறை இருவரும் அறிந்ததே. ஏன் ராகவன் கூட அவ்வாறுதான் தன் மனதில் ஏற்றி வைத்தான். வீட்டில் வேறு பேசினால் என்ன செய்வது. ஆனால் அவன் மனச்சாட்சி அறியும், நிறைக்கும் தெரியும்.

அவனுக்கு திருமணம் முடிந்த போதும் சரி, இல்லை அவன் தம்பியவே திருமணம் செய்து அந்த வீட்டிற்க்கே வாழ வந்த போதும் சரி நிறை ஒரு வார்த்தை கூட ராகவனை கேட்கவில்லை. குடும்ப கட்டாயமும் சூழ்நிலையோ எதுவும் கிடையாது. ராகவன் தெரிந்தே செய்தது. இதில் எவ்வாறு நியாயம் கேட்க முடியும். அப்படி கேட்டு தான் என்ன ஆகப்போகிறது. சரிதான் போடா! எனக்கு தக்க ஒருவனை கடவுள் காட்டாமல் போக போறார். பணம், நகை என்ன பெரியது. அவன் கண்முன்னே, அதே வீட்டிலே ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையை நிறை வாழாமல போய்விட்டாள். நிறைக்கு நிறைவான திருமண வாழ்க்கை. வேற என்ன வேண்டும்.

ராகவனோடு நிறை வண்டியில் வருவதை முதலில் பார்த்தது ரோகினி தான். அவள் அவசரமாக உள்ளே சென்று சினேகாவை கூட்டி வந்து காட்டினாள். வெளி திண்ணையில் தான் கல்யாணி அமர்ந்திருந்தார்.

“என்ன நிறை?”

“பஸ் ரொம்ப கூட்டம் அத்தை. உங்க சின்ன மகனும் வர லேட் ஆகுமாம். ராகவன் மாமா தான் நான் வீட்ல விடுறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தார்” என்றதும்,

“சரி உள்ள போ… அடுப்படியில உங்க வீட்டு பால் வச்சிருக்கேன் பாரு” என்றார் கல்யாணி.

வண்டியில் வந்தது ஒரு மாதிரி கிறக்கமாக இருக்க, உடை மாற்றிக் கொண்டு படுத்துவிட்டாள்.

எப்போதும் வேலை விட்டு வந்தால் நிறை முதலில் தேடுவது டீயை தான். “என்ன ஆச்சு இவளுக்கு வந்ததும் படுத்து தூங்குறா” என்று பார்த்தார் கல்யாணி.

மருமகளை எழுப்பும் முன் மேல் மாடியில் சத்தம் வர என்னவோ என்று அங்கே சென்றார். சினேகா தான் கணவனோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.

“என்ன சத்தம்” என்று வந்து விட்டார் கல்யாணி.

“அது வந்து அத்தை, தம்பி அந்த நிறையை கூட்டிட்டு வந்தது சினேகாவுக்கு பிடிக்கல போல, அதான் சத்தம் போடுறா” என்றாள் ரோகினி.

“ஏன்? நிறை நம்ம வீட்டுப் பிள்ளை ஒத்தையில தனியா நிக்கும் போது கூட்டிட்டு வந்தா என்ன?” சத்தம் கூடி பேசினார்.

 “அது பொண்டாட்டிக்கு பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே. அதை எப்படி சாதாரனமா எடுக்கிறது”

“வேற எப்படி சந்தேகமா எடுக்கணுமா?” என்றார் கல்யாணி பெரிய மருமகளை முறைத்துக் கொண்டு…

 “நான் சும்மா சாதாரணமாத்தான் நிறை கிட்ட கேட்டேன். நிறை தான் வாரேன்னு சொல்லுச்சு, வேற என்ன பண்ண சொல்றீங்க” என்றான் ராகவன்.

 “நீ என்னடா அறிவு கெட்ட தனமா பேசிட்டு இருக்க. நீ சொல்றத பார்த்தா நிறை மேல தான் தப்புன்ற மாதிரி இருக்கு. ரோட்ல தனியார் நின்னவளை பார்த்து நீ தான வண்டில வர சொல்லி இருக்க. இப்ப என்ன நான் சும்மாதான் கூப்பிட்டேன்னு சொல்ற.  உன் பொண்டாட்டிக்கு பிடிக்கலைன்னா சும்மா கூட கூப்பிடக்கூடாது. நீ பேசறது சரி கிடையாது ராகவன்” என்றார் கல்யாணி.

“அது இல்லம்மா சினேகா அழுகுறா”

 “அப்ப அவளுக்கு புத்தியில உரைக்கிற மாதிரி சொல்லு… நிறை என்ன யாரோவா? அவ உனக்கு சொந்த அத்தை மகள், உன் சொந்த தம்பி பொண்டாட்டி. தனியா நிக்கும் போது எப்படி யாரோ மாதிரி பார்த்து வர முடியும். ஒரே வீட்டில் இருந்துட்டு எப்படி ஒதுங்கியே இருக்க முடியும்” என்று கல்யாணி சொல்லி கொண்டிருக்கும் போதே நிறை வந்து விட்டாள்.

கீழே தானே படுத்திருந்தாள். அவளுக்கும் சத்தம் நன்றாக கேட்டது. என்னடா இது வம்பு என்றுதான் நினைக்க தோன்றியது. இது என்ன கள்ள உறவா? எப்படி எல்லாம் பேசி திரிகிறார்கள்.

“நான் ரொம்ப நேரமா பஸ் ஸ்டாண்ட்ல நின்டுட்டு இருந்தேன். வர பஸ் எல்லாம் கூட்டம், மழை வேற வர ஆரம்பிச்சிருச்சு. அதுதான் ராகவன் மாமா கூட்டிட்டு வந்தாங்க. இதுல வேற எதுவும் கிடையாது. நான் என்ன புருசன் இல்லாம இருக்கேனா? உங்க புருசனை அப்படியே மயக்குறத்துக்கு” பயங்கர கோபமாக கேட்டாள் நிறை.

அவளின் வார்த்தை பிரயோகங்களை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“நீயும் ஏண்டி இவளுக கூட சரிக்கு சரி பேசுற” என்றார் கல்யாணி.

“பின்ன என்ன அத்தை கேட்கிற கேள்வியே தப்பான எண்ணத்தோடு தான் கேட்கிறாங்க. நான் என்ன அப்படிப்பட்ட பொண்ணா? ஒரே குடும்பம், தனித்தனியா வாழ்ந்தாலும் சேர்ந்தே இருக்கும்னு தான் எதையும் கண்டு கொள்வதில்லை. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு தான இருக்கோம். உனக்கு புடிக்கலைன்னா உங்க வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் வச்சு எப்படியும் பேசுங்க. அது என்ன எல்லாருக்கும் கேட்கட்டும்னு கத்தி கத்தி பேசுறது. எல்லாரும் ஈஸியா ஒரு பொம்பளைய தானே தப்பு சொல்லுவாங்க. எனக்கு இந்த பேச்சு தேவையா? சினேகா கேள்வி கேட்கிறதா இருந்தா அவங்க ரூமுக்குள்ள போய் கேட்க வேண்டியதுதானே” நிறை கோபம் குறைவதாக இல்லை.

“ஏன் பிரபா தம்பிக்கும் தெரிஞ்சா சங்கடப்பட மாட்டாரா?”என்றாள் ரோகினி.

“அவர் எதுக்கு சங்கடப்பட போறாரு.. நான் வரும்போது அவருக்கு, உங்க அண்ணன் கூட வாரேன்னு போன் பண்ணி சொல்லிட்டு தான் வந்தேன். என் புருஷனுக்கு என்னை நல்லா தெரியும். எனக்கு அது பிரச்சனை கிடையாது. வெளியில நாலு பேரு பாக்குற மாதிரி எம்பேரு இழுத்து எதுக்கு சண்டை போடணும். நாளைக்கு ரோகினிகோ, சினேகாகோ ஏதாவது சங்கடம் வந்தா அண்ணன் பொண்டாட்டின்னு என் புருஷன் வந்து நிக்க மாட்டாரா? அப்படித்தான் ராகவன் மாமாவும் என்கிட்ட கேட்டாரு. அவங்க நினைப்புதான் தப்பா இருக்கு. அது அவங்க பிரச்சனை எனக்கு தேவை இல்லை. ஆனால், என் பேரை இழுக்க கூடாது” மிக அழுத்தமாக சொன்னவள்,

ரோகினி புறம் திரும்பி,

“எங்க, நீங்க வேணா என் புருஷன் என்கிட்ட சொல்லி பாருங்க. அவர் என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டாரு. யார் என்ன சொன்னாலும் என் முகத்தைத்தான் பார்ப்பார் என் வீட்டுக்காரர்” அவ்வளவு நம்பிக்கையாக சொன்னாள் நிறை.

சினேகா கூட அசந்து தான் போனாள். இந்த நம்பிக்கையை ஏன் தன் கணவன் மேல் தனக்கு வரமாட்டேன் என்கிறது.

“எவ்வளவு திமிர். வாயில்லா பூச்சியை கைக்குள் போட்டுக்கொண்ட கர்வம்” என நினைத்தது ரோகினி தான்.

“விடு நிறை. என்னத்தவாவது ஆகாத பேச பேசிட்டு இருக்கா ரோகினி” என்றதும்,

“அப்படியெல்லாம் விட முடியாது அத்தை அவங்களுக்கு என்ன வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு என்னத்தையாவது பேசிட்டு போயிடுவாங்க. வெளியில யார் பேர் அடிபடும். என் வீட்டுக்காரருக்கு என்னை நல்லா தெரியும். ஆனாலும் ஒரே வீட்டில் இருக்கோம். அடுத்தடுத்து எந்த விசேஷம் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் ஒன்னாவே நிக்க வேண்டி வரும். திரும்ப இப்படி ஒரு பேச்சு வரக்கூடாது இல்ல. என்னை என்ன பேசினாலும் நான் அமைதியா போனா தப்பு என் மேலன்னு ஆகிடாது. எனக்கென்ன பயம். என்னை ஏதாவது சொன்னா நான் கேள்வி கேட்பேன். இன்னைக்கு இவங்கள பார்த்துக்கிட்டேன், நாளைக்கு நாங்களும் அப்படியே இருந்துக்கிறோம். எங்களை எதுவும் சொல்லக்கூடாது அத்தை. ஒரே குடும்பம் ஒற்றுமைன்னு பேசக்கூடாது”

சினேகா பயந்து போனாள். நிறை இப்படி எல்லாம் பேசினாள் கல்யாணியிடமிருந்து தப்ப முடியாது. அவர் அவ்வளவுதான் குடும்பத்தை உடைக்க பார்க்கிறீர்களா என்று ஒரு வழி ஆக்கி விடுவார்.

ஆனால், நிறை விட வில்லை, “நாளைக்கு நாங்க எதுக்கும் அவங்க கிட்ட நிக்க மாட்டோம். அவங்களும் அப்படியே இருந்துக்கட்டும்” என்றதும்,

“நிறை, என்னடி பேசுற”என்றவர், அடுத்து ரோகினி, சினேகா இருவரையும் ஒரு வழி ஆக்கிவிட்டார். ராகவன் தடுக்கவில்லை. தாய் கண்டிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான். கல்யாணி அவ்வளவு பேச்சு பேசி விட்டார். சினேகாவுக்கு அழுகை கூட வந்துவிட்டது.

“இவ்வளவு பேசுறவ எதுக்கு அவர் கூட வண்டில வரணும்” அப்போதும் ரோகினி வாய் விட,

“இவ்வளவு நாளா எத்தனையோ தடவை அந்த ரோட்ல போய் வந்துட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு தடவையும் நாங்க என்ன ஏரியா வந்தோம். இன்னைக்கு என் சூழ்நிலை. ஆனா, அது கூட தப்புன்னு இப்பதானே தெரியுது” என்றவளுக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. முதலில் கணவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று நிறை ஆசைப்பட்டாள். வேற காரணம் சொல்ல முடியாமல்,

“அத்தை எனக்கு ஒரு மூணு நாள் தள்ளி போகுது. அதுதான் கூட்டமா இருக்குற பஸ், ஷேர் ஆட்டோ எதிலும் போகாம வெயிட் பண்ணேன். அப்பதான் மாமா வந்து மழை வருது நான்  வீட்டில் விடுகிறேன் என்று சொன்னதும், தைரியமா இருக்கலாம் என்று கிளம்பி வந்தேன்” என்று சொல்லியே விட்டாள்.

அவ்வளவுதான் இதுவரை நடந்த பிரச்சனை தலைகீழாக மாறிப்போனது. என்னது நிறை கர்ப்பமா? எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்து இருந்தார்கள். கல்யாணிக்கு ஒரு நொடி என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தை என்ற வரத்தை அவர் ரோகினி இடம் இருந்து தான் எதிர்பார்த்தார். அவள் தான் மூத்த மருமகள். அதனால் அவளுக்கு ஒரு குழந்தையை கொடுக்க வேண்டி தான் குலதெய்வ கோயில் வரை சென்று வந்தது. ஆனால், தற்போது நிறை நாள் தள்ளிப் போயிருக்கிறது என்கிறாள். கல்யாணி ஒரு மாதிரி பரபரப்பாகவும், நிறை சொல்லி விட்டாள். “அத்தை எதுக்கு இவ்வளவு பரபரப்பு. மூணு நாள் தான் தள்ளி போயிருக்கு. கொஞ்சம் அமைதியா இருங்க” என்றாலும் அவர் கேட்க வில்லை.

 நிறை அதனால்தான் சொல்லவில்லை. வீட்டில் குழந்தையை ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியும். தனக்கும் மூணு நாள் தான் தள்ளிப் போயிருக்கு. உறுதியாக தெரியாமல் சொல்ல வேண்டாம் என்று இருக்க, வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாள்.

கல்யாணி உடனே சின்ன மகனுக்கு அழைத்து விட்டார், “பிரபா அம்மா பேசுறேன்”

“சொல்லும்மா, நிறை வந்தாச்சா?”

“டேய் உன் பொண்டாட்டிக்கு நாள் தள்ளி போயிருக்காம்டா” என்றார் சந்தோசமாக. 

“என்ன நாள்? ஏதாவது சொல்லாத எனக்கு அவசர வேலை இருக்கு, போனை வை…”

“அடேய்! உன் பொண்டாட்டி மாசமா இருக்களாம்”

“என்னது” பிரபா அதிர்ந்து போய் கேட்க.

 “ஆமாடா அத டெஸ்ட் பண்றதுக்கு என்னமோ ஒன்னு இருக்காம். வீட்டுக்கு வரும்போது அதை கையோடு வாங்கி வா” இன்னமும் பரபரப்பாக இருந்தார் கல்யாணி.

அம்மா என்ன சொல்கிறார். நிறை குழந்தை உண்டாகி இருக்கிறாளா? எனக்கு எதுவும் தெரியவில்லையே.. இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தையா? மலைத்து போய் நின்றான் பிரபா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!