Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedநீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 17

நீங்காத உறவே!…

அத்தியாயம் 17

    கல்யாணியை கையில் பிடிக்க முடிய வில்லை. “நிறை, நீ நிக்காத உட்கார்.. கீழ உட்காராத சேரில் உட்கார்”என்ற மாமியாரை அதிசியமாக பார்த்தாள்.

வீட்டில் ஆண்கள் நடமாடும் போது வீட்டு பெண்கள் கூடத்தில், அதுவும் சேரில் அமர கூடாது. கல்யாணியும் அமர மாட்டார். எல்லோரும் இவளையே பார்க்க, பொம்மை மாதிரி அமர்ந்து இருக்க சங்கடமாக இருந்தது.



Advertisement

கல்யாணி உடனே தன் கணவருக்கு அழைத்து சொல்லி விட்டார். கிட்டத்தட்ட எட்டு வருட தவம். மனம் படபடப்பாக இருந்தது. எல்லாம் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டார்.

நிறைக்கு ஒரு மாதிரி தலைவலியாக இருந்தது. டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற,

“அத்தை நான் டீ போடுறேன்”

Advertisement

“இனி டீ, காபி எல்லாம் குடிக்க கூடாது. பால் காய வச்சு கொண்டு வாரேன். சீனி வேணாம். கொஞ்சம் நாட்டு சக்கரை மட்டும் போட்டு தாரேன். நீ எழுந்திரிக்காத” என்று கட்டாயமாக சொன்னவர், பால் காய வைக்க எழுந்து போக,

Advertisement

ரோகினி, சினேகா இருவரும் நிறையை தான் பார்த்தார்கள். அவர்கள் பார்வை அவளுக்கு பயத்தை கொடுத்தது. ஒருவேளை வேற மாதிரி வந்தால்.. மனம் படபடுத்தது.

 வீரணன் கை நிறைய இனிப்பு, பழங்களோடு வந்தார். அவருக்கும் மனம் நிறைந்து இருந்தது. வெளியில் காட்டி கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் பெரிய தம்பதிகள் நிறைய ஏங்கி இருந்தார்கள். அடுத்து வீர சிவா வந்தான். அவனுக்கும் சந்தோசமமே…

தனக்கு இன்னும் குழந்தை இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், தங்கள் வீட்டில் ஒரு குழந்தை வர போகிறது என்பது சந்தோசத்தை கொடுத்தது. கொலு பொம்மை போல் அமர்ந்து இருந்த நிறையை பார்த்தவன்,

Advertisement

“வாழ்த்துக்கள் நிறை” என்று அருகில் வந்தவனை பார்த்து, லேசான வெட்கம், தயக்கத்தோடு நிறை எழுந்து கொள்ள பார்க்க,

“வேண்டாம், வேண்டாம் நீ உட்கார்” என்றவன்,

“நம்ம வீட்டுக்கு பாப்பா வர போகுதாம். அம்மாவ கையில பிடிக்க முடியல. ரொம்ப சந்தோசம். எங்க பிரபா?”

“அவர் இன்னும் வரலை மாமா. அவங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்” என்றவளை வியந்து பார்த்தான் வீர சிவா.

தன்னை விட இளமை என்பதால் நிறை சகட்டு மேனிக்கு டேய் போட்டு எல்லாம் போடுவாள். தற்போதைய கணவனுக்கான அவளின் மரியாதை அவர்களின் அன்னியோனியத்தை காட்டியது.

நிறை தவிப்பாக வாசலை பார்த்தாள். எல்லோரும் வந்தாச்சு. இன்னும் பிரபாவை காண வில்லை. இவர்களுக்குள் இன்னும் குழந்தையை பற்றிய பேச்சு வார்த்தை எதுவும் இல்லை. கணவன் என்ன நினைப்பானோ? எப்படி உணர்ந்து இருப்பானோ என்று தவிப்பாக இருந்தது.

 ஒரு நிலையான வசதியான வேலைக்கு பின் தான் மனைவியை நெருங்க நினைத்தவன், பிள்ளை என்றால் என்ன யோசிப்பானோ? பயமாக இருந்தது. அடுத்த அரை மணி நேரம் சென்று தான் பிரபா வீடு வந்தான்.

வெளியே கணவன் வண்டி சத்தம் கேட்டதும்.. நிறைக்கு என்னவோ படபடப்பாக, வெட்கமாக இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்ததோ.. மெல்ல தான் உள்ளே வந்தான். அமைதியாக மனைவி அருகில் வந்து நிற்க. அவளுக்கு கணவனை நிமிர்ந்து பார்க்கவே தயக்கமாக இருந்தது.

 மெல்ல அவளும் எழுந்து நிற்க போக, அவளின் தோளை தொட்டு அமர வைத்தான்.

“உட்கார்” என்றவன், அவள் தலையை தடவி கொடுத்தான். அவனுக்கு என்ன மாதிரி உணர்வை வெளிப்படுத்த என்று கூட தெரிய வில்லை. இப்போது தான் மனைவியை உணர ஆரம்பித்தான். அவளோடு ஒரு வாழ்க்கையை தொடங்கினான். அதற்குள் குழந்தை எல்லாம் அவன் நினைத்தது கூட இல்லை.

இருவருக்குமே எதிர்பாராத அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சி என்று கூட சொல்லலாம். இதுவரை இப்படி எல்லாம் திடீர் என்று ஒரு சந்தோசத்தை இருவருமே உணர்ந்தது இல்லை.

“டேய், என்னடா.. குளிக்காம அவ பக்கத்துல நிக்கிற” என்று தாய் அதட்டியதும் திரும்பியவன்,

“சரி ம்மா” என்று பிரபா உள்ளே நகர, நிறையும் எழுந்து கொண்டாள்.

“உனக்கு என்னடி” என்றதும்,

“அவரை பார்க்கணும் அத்தை” என்றாள்,

“அவன் என்ன குழந்தையா? அவனுக்கே குழந்தை வர போகுது” என்றவர்,

 “டேய், நான் சொன்னது வாங்கி வந்தையாடா” என்றார்.

குழந்தை என்ற சொல் இருவரையும் தாக்கியது. தங்களுக்கு என்று ஒரு உயிர். தங்கள் இருவரின் சாயலில்… நினைக்கும் போதே மனம் என்னவோ உணர்ந்தது. கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் தங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு குடும்பத்தை உணர்ந்ததில்லை. நிறைக்கு எப்போதும் அவள் குடும்பமே முன்னிலை வகிக்கும். அப்படி இல்லாமல் தங்களை குடும்பமாக நம்பி ஒரு உயிர். வீட்டின் கடைக்குட்டிக்கு நிறைய பொறுப்பு வந்ததாக உணர்ந்தான்.

 என்னதான் குழந்தை எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தாலும், நிறை டெஸ்ட் செய்ய போகும்போது உண்மையாக இருக்க வேண்டுமே என்று பரிதவித்தான் பிரபாகரன். அந்த நொடி குழந்தையைப் பற்றிய பெரும் ஆசை அவனுக்கும் வந்துவிட்டது.

இரு கோடுகள் விழுந்து உறுதியான கார்டை பிரபாகரன் கையில் தான் முதலில் வைத்தாள் நிறை. அதைப் பார்த்தவனின் முகம் என்னென்னவோ உணர்வை வெளிப்படுத்தியது.

“நமக்குன்னு ஒருத்தவங்க வர போறாங்க போல.. வாழ்த்துக்கள் திருநிறைச்செல்வி வீர பிரபாகரன்” என்றான் முகம் கொள்ளா சிரிப்போடு.

அவன் முகம் பார்த்து மனம் நிறைந்தவள், “உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். ப்ரோமோஷன் வாங்கிட்டீங்க. இன்னும் நிறைய பிரமோஷன் வாங்க வாழ்த்துக்கள்” என்ற விசம சிரிப்போடு சொல்லி நகர,

“என்ன!.. என்ன சொல்லிக்கிட்டு போறா? என்ன அர்த்தத்துல சொன்னா நிறை” என்று குழம்பினான்.

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ரோகினிக்கு தான் எனக்கு ஏன் இந்த வரத்தை கடவுள் தரவில்லை என்று ஆதங்கமாக, கோவமாக, பொறாமையாக என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சினேகாவுக்கு பொறாமையெல்லாம் கிடையாது. இப்போது திருமணம் முடித்த நிறை கர்ப்பமாகிவிட்டதால், அடுத்து எல்லோர் பார்வையும் தன் மீது தானே திரும்பும்… தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பேசி விடுவார்களோ?.. இதுவரை குழந்தை பற்றிய நினைப்பெல்லாம் இல்லை. இரண்டு வருடம் தானே ஆகிறது என்று அஜாக்கிரதையாக தான் இருந்தாள். தற்போது மனதில் ஒரு பயம் வந்தது சினேகாவுக்கு…

அன்றைய உணவில் இருந்து எல்லாவற்றையும் கல்யாணியே பார்த்து கொண்டார். நிறையை ஒரு வேலையும் செய்ய விட வில்லை. தம்பதிகளுக்கு தனிமையும் கிடைக்க வில்லை.

அன்று இரவு உணவு முடிந்ததும் நிறை உறங்க சென்று விட, பிரபாவை.. அவன் தந்தை பிடித்து வைத்து கொண்டார். பிரபா என்னவோ வீட்டின் செல்ல மகனாக விவரமில்லாம் இருப்பது போலவும், அவனை பொறுப்பாக்க அறிவுரை வழங்கி கொண்டு இருந்தார். நல்ல மகனாக அவனும் கேட்டு கொண்டான். கணவனை எதிர்பார்த்து நிறை உறங்கியே விட்டாள். அதற்கு பின் தான் பிரபா வந்தான். உறங்கும் மனைவியை பார்த்து புன்னகை பூத்தவன், அவள் தலையை வருடி விட்டான். முகத்தை அளந்தவன் கை, மெல்ல அவள் வயிற்று பகுதிக்கு வந்தது. அவளின் வயிற்றில் தன் குழந்தை. என்ன மாதிரியான உணர்விது…

மனைவியோடு முழுமையான தாம்பத்திய வாழ்வில் கூட இப்படி ஒரு உணர்வை அனுபவித்ததில்லை. தன் குழந்தை அவள் வயிற்றில் என்னும் உணர்வு கணவன் மனைவிக்கான முக்கியத்துவத்தை, அவர்களுக்கான உறவை புரிய வைப்பதாக இருந்தது.

அவள் வெற்று வயிற்றை மெதுவாக தடவி கொடுக்க, குறுகுறுப்பில் முழித்துக் கொண்டாள் நிறை. கணவன் முகத்தையே அவள் ஆழ்ந்த பார்த்து இருக்க, செல்லமாக அவள் மூக்கை பிடித்து திருகியவன்,

“என்ன நிறை?”

“உங்களுக்கு குழந்தை வந்தது சந்தோசம் இல்லையா? நீங்க என்னவோ நினைச்சீங்க, அதுக்கு முன்ன குழந்தை உண்டாகிட்டேன்”

அவளை ஒரு பக்கமாக அணைத்து படுத்தவன்,

“அப்படி இல்லை நிறை. நான், நமக்கு ஒரு குழந்தைன்னு யோசிக்கவே இல்லை. இப்போ தானே வாழ ஆரம்பித்திருக்கோம். திடீர்னு நீ கர்ப்பம்ன்னு சொல்லவும் கொஞ்சம் அதிர்ச்சி. நிதானமாகவும் மனசுல அவ்வளவு சந்தோசம். நான் சும்மா ஒரு கற்பனையில கூட நமக்குன்னு ஒரு குழந்தையை நான் யோசிக்கல. ஆனா கடவுள் சித்தம் வேறவா இருந்திருக்கு”

“நானும் தாங்க ரொம்ப பயந்து பயந்து எதிர்பார்த்தேன். வாழ்க்கையில எதுவுமே எனக்கு ஈசியா கிடைச்சது இல்லை. எல்லாம் போராட்டம் தான். நிறைய கஷ்டபட்டு தான் எந்த ஒன்னையும் பெறனும். நானே எதிர்பார்க்காத ஒன்னு தான் நம்ம குழந்தை. எந்த கஷ்டமும் படாம, திடீர்னு கடவுள் கொடுத்த கிஃப்ட்” தன்னை மறந்த நெகிழ்ச்சியில் சொல்ல,

“அப்படியா நிறை.. எந்த கஷ்டமும் இல்லாமவா குழந்தை வந்தது” என்றான் விஷமாக,

 “சீ… பேச்சை பார். நிறைய கஷ்டத்தை பார்த்தவங்களுக்கு வாழ்க்கை மேல நம்பிக்கை இருக்காது. கல்யாணம், அதுக்கு பின்னாடி குழந்தை எல்லாம் நிறைய பேருக்கு சாதாரண நிகழ்வு. ஆனா, என்ன மாதிரி ஆட்களுக்கு அது ஒரு கனவு. எல்லா கனவும் நிறைவேறாது இல்லையா?.. என் வாழ்க்கையிலும் சில நல்ல விஷயங்கள் நடக்குது. சந்தோஷமா இருக்கு. ஆனாலும் பயமா இருக்கு” என்றவாறு திரும்பி கணவனை அணைத்து கொள்ள,

“பயம் தேவையில்லை நிறை இனி எல்லாமே நல்லதா நடக்கும் பாரு” அவனும் மனைவியை அணைத்து கொள்ள, இருவருக்கும் நிம்மதியான உறக்கம்.

அடுத்து இரண்டு நாட்கள் நிறை வீட்டில் தான் இருந்தாள். அந்த ஊரிலே இருக்கும் சின்ன அரசு மருத்துவமனையில் தன் அத்தையோடு சென்று பதிந்து வந்தாள். தற்போது வெளியில் யாருக்கும் சொல்லவில்லை. மாமியார் ரெண்டு மாதம் போகட்டும் என்று விட்டார்.

நிறைக்கு வேலைக்கு செல்ல எண்ணம் வந்தது. கர்ப்பமாகிவிட்டதால் வீட்டிலே இருக்க அவளுக்கு விருப்பமில்லை. பெரிதாக உடல் தொந்தரவு எதுவும் இல்லாதபோது எப்போதும் போல வேலைக்கு செல்லவே நினைத்தாள். கணவனை சமாளித்து விடலாம். மாமியாரை எப்படி சமாளிக்க என்று கவலையாக இருந்தது.

அவர்கள் இருவருக்கும் கணவனின் வருமானம் போதுமானது தான். ஆனால், வளர் தற்போது எட்டு மாதம். அடுத்த மாதம் வளைகாப்பு இருக்க, பிரசவ செலவுகளும் குழந்தையை பார்த்துக் கொள்ளும் செலவுகளும் தொடர்ந்து வரும். அதற்கு அடுத்து நிறை நிற்கிறாள். இவ்வளவையும் தன் பெற்றோர்களால் சமாளிக்க முடியாது என்று அறிவாள்.

தன்னுடைய செலவுகளையாவது தானே பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. பிரசவ செலவுக்கு தான் சம்பாதித்து விட்டால் போதும், வளைகாப்பு வீட்டு அளவில் சின்னதாக நடத்திக் கொள்ளலாம். பிரபா எல்லாவற்றையும் சமாளிப்பான் தான். ஆனால், அது முறையாக இருக்காது. அத்தோடு இவற்றையெல்லாம் அவன் தலையில் போடவும் விருப்பமில்லை. கணவனுக்கு தோள் கொடுப்பதோடு, பெற்றோர்கள் சுமையையும் குறைக்க வேண்டும்.

கணவனை சரிகட்டி அவன் மூலமே மாமியாரை சமாளித்தாள் நிறை. கல்யாணிக்கு மருமகள் வேலைக்கு போவது பிடிக்க வில்லை. ஆனாலும், மாசமாக இருக்கும் மருமகளோடு சண்டை போடவும் மனதில்லை. கொஞ்ச நாள் போகட்டும் வயிறு தெரிந்ததும் நிப்பாட்டி கொள்ளலாம் என்று நினைத்தார்.

பிரபாவுக்கு மனைவி தன்னை நம்ப வில்லையோ என்ற கவலை. மாசமாக இருக்கும் மனைவியை வீட்டில் பார்த்து கொள்ள முடியாத ஆதங்கம் நிறைந்து இருந்தது. தன் ஊதியத்தை உயர்த்த ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

நிறை எப்போதும் போல வேலைக்கு கிளம்ப, மற்ற மகன்களை பார்த்த கல்யாணி,

“நீங்க ரெண்டு பேரும் கேளுங்க. சின்னவனுக்கு வேலை நேரம் முன்ன பின்ன தான் இருக்கும். அவனால நேரத்துக்கு வந்து நிறைய கூட்டிட்டு வர முடியாது. வயித்து பிள்ளைகாரி எவ்வளவு நேரம் ரோட்ல நிப்பா… நிறை தனியா நிக்கிறது நீங்க ரெண்டு பேர்ல யார் பார்த்தாலும் உங்க கையோடு கூட்டிட்டு வாங்க. அதுக்கு யாராவது ஏதாவது சொன்னா? என்னை வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்” என்று தீர்மானமாக சொல்லி விட்டார்.

 மகன்கள் இருவரும் தாயை எதிர்த்துப் பேசவில்லை. நிறைக்கு அதில் உடன்பாடு இல்லாவிடினும் அத்தையின் வாயைப் பொறுத்து தன் வாயை மூடிக் கொண்டாள்.

 நிறை சகஜமாக வேலைக்கு போய் வர, கல்யாணி வீட்டில் நிறைய கட்டு திட்டமாக நடந்து கொண்டார். என்னைக்கு ராகவனோடு நிறை பைக்கில் வந்ததை குற்றமாக சொல்லி சண்டை வந்ததோ அன்றிலிருந்து அதிக கண்டிப்பு காட்டினார் மருமகளிடம்…

வீரணன் கூட கேட்டார், “ரொம்பவும் அதிகாரம் பண்ணாத கல்யாணி. அவங்க அவங்க வாழ்க்கைன்னு நாம பிரிச்சு விட்டாச்சு” என்றதும்,

“அதனாலதான் கண்டிப்பு காட்றேன். மூணு பேருக்கும் குடும்பம் வந்தாச்சு அவங்க பொழப்ப பாக்கணுன்னு விட்டா.. எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க. நிறை மேல அப்படி ஒரு வார்த்தையை விட்டிருக்கக் கூடாது. எனக்கும் அவ மேல சில குற்றம் குறை இருக்கு தான். ஆனா, அவ நடத்தையவே குத்தம் சொல்ற மாதிரி எப்படி பேசலாம். அவங்க விருப்பத்துக்கு விட்டாலும் அப்பப்ப பெரியவங்க நாம தான் தட்டி வைக்கணும். நீங்க பேச வேணாம். நான் பேசிக்கிறேன் விடுங்க” என்று விட்டார்.

அறுவது நாளுக்குப் பின் தான் நிறை தன் வீட்டிற்கு சொன்னாள். அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போன பெண்கள் நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்று தானே பெற்றோர்கள் ஆசைப்படுவார்கள். பணம் வசதி என்று பெரிதாக இல்லாவிடினும் குழந்தை விஷயத்தில் தன் பெண்களுக்கு கடவுள் வஞ்சகம் செய்யவில்லை என்று மகிழ்ந்து போனார்கள்.

அன்று மாலையே குட்டி குட்டி கூடைகளில் எல்லாம் பழங்களையும் அள்ளிக்கொண்டு மகளை பார்க்க வந்து விட்டார்கள். கல்யாணி கூட நல்ல முறையில் உபசரித்தார்.

“என்னவோ மதினி வசதி இல்லாட்டியும் கடவுள் எம் மக்களுக்கு பிள்ளை வரத்துல குறை வைக்கலை. இன்னும் பிள்ளை இல்லையா அப்படின்னு ஒருத்தர் கேட்பதற்கு முன்னாடியே கடவுள் வரத்தை கொடுத்துருச்சு. சின்னவளுக்கு குழந்தை பிறக்க போகுதே பெரியவ ஒன்னும் சொல்லலையே நான் மனசு சஞ்சலமாக தான் இருந்துச்சு. இன்னைக்கு தான் எனக்கு திருப்தி”

அந்தக் கூடத்தில் தான் ரோகிணியும், சினேகாவும் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சரி விடு திலகா. கடவுள் என்னவோ நல்ல வழி காட்டிட்டார்” பொதுவாக சொன்னார்.

“அப்படி இல்ல மதினி எம்புட்டு பேர் பிள்ளை இல்லாம கோயில், குளம், ஹாஸ்பிடல்ன்னு அலையிறாங்க. சம்பாத்தியத்தை எப்ப வேணாலும் பண்ணலாம் பிள்ளை தானே முக்கியம்.. எம்மக்க ரெண்டு பேருக்கும் அதுல குறை வைக்கல” அவர் பாட்டுக்கு பேசி கொண்டே செல்ல,

“அம்மா போதும் விடுங்க. சும்மா என்னத்தையாவது பேசாதீங்க. வளர்க்கு வளைகாப்பு வைக்கிறது பத்தி அவங்க வீட்ல பேச சொன்னேன்னே” என்று பேச்சை மாற்றி விட்டாள்.

 திலகா பேசும் பெருமை மற்ற இரு மருமகள்களை காயப்படுத்தி விடக் கூடாது அல்லவா… ஆனால், அவர்கள் மனம் காயப்பட்டு போனது.

“நிறை அம்மா நம்மளத்தான் குத்தி காட்டுறாங்களோ?” என்றாள் சினேகா.

“இருக்கும் அவங்க மக தான் இந்த வீட்டுக்கு வாரிசு கொண்டு வர போறான்னு ஒரே பெருமை போல… ஆனா, ஒரு விஷயம் உண்மைதான் சினேகா. அவங்களுக்கு கடவுள் தான் வழிகாட்டிடுச்சு போல.. ரெண்டு பொண்ணுங்கள வச்சுக்கிட்டு கட்டிக் கொடுக்க வழி இல்லாம கஷ்டப்பட்டு இருந்தாங்க. ஆனா, பாரு சாமி வரம் கொடுத்த மாதிரி பட்டுனு கல்யாணம் ஆயிடுச்சு, குழந்தை குடும்பம்னு செட்டில் ஆயிட்டாங்க” என்றவள்,

“நமக்கு அந்த கடவுள் வரத்தை கொடுக்கலையே. எனக்கு எட்டு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி.. நிறையை பார்க்கும்போதெல்லாம் மனசு என்னவோ பண்ணுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால நெஜமா தாங்கிக்க முடியல”

ரோகினி நிறைய மனதளவில் பாதிக்கப்பட்டாள். ஒரே வீட்டில் இருப்பதால் நிறையை தள்ளி வைக்க முடியவில்லை. தன்னுடைய ஆதங்கம் எல்லாம் நிறை மேல் பொறாமையாக மாறிக் கொண்டிருந்தது.

அன்று இரவு பிரபா தாமதமாகத்தான் வந்தான். நிறை, தன் கர்ப்பத்தை அறிந்ததிலிருந்து கணவனின் அரவணைப்பை மிக எதிர்பார்க்க.. அவனுக்கு வீட்டில் இருக்கவே நேரமில்லை.

“இப்போலாம் என்ன கண்டுக்கறதே இல்லை” முகத்தை தூக்கினாள்.

 “அதான் டாக்டர் மூணு மாசம் போகட்டும்னு சொன்னாங்க இல்ல” என்றான் கணவன்.

“இந்த ஒரு விஷயம் தான் பொண்டாட்டிய தாங்கறதா? ஆளை பாரு.. முன்ன மாதிரி என் கூட ரொம்ப நேரம் இருக்க மாட்டேங்கறீங்க. சிரிச்சு பேசக்கூட நேரமில்லை. ரொம்ப பிசியா இருக்கீங்க”

“நமக்காக தான் நிறை”

“என்னத்த நமக்காக.. வயித்துல பிள்ளையோட பொண்டாட்டி நமக்காக காத்திருக்கான்னு நினைப்பில்லாம அப்படி என்னதான் வேலை பாக்குறீங்க நீங்க”

“பிரமோஷனுக்கு பார்க்கிறேன் நிறை”

“என்ன ப்ரோமோஷன் பிரைவேட் பேங்க்ல லோன் வேலைதான பாக்குறீங்க”

“பிரைவேட் பேங்கா இருந்தாலும் அதுலையும் முன்னேறலாம் நிறை. நம்ம வேலையை பொறுத்து அதே பேங்க்ல அடுத்தடுத்து முன்னேறலாம்”

“என்ன சொல்றீங்க” என்றாள் ஆச்சர்யமாக,

 “ஆமா, நிறை நான் அங்க தானே ரொம்ப வருஷமா வேலை பார்க்கிறேன். எனக்கு ப்ரமோஷனுக்கு சில எபெக்ட் போடணும். கொஞ்ச நாளா அதற்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அசிஸ்டன்ட் மேனேஜர்கான இன்டர்வியூ நாளைக்கு இருக்கு எனக்கு… அந்த வேலைக்கெல்லாம் நான் செலக்ட் ஆயிட்டேனா, மாசம் நாப்பது, ஐம்பது வாங்கலாம்” என்றதும், நிறை கண்கள் அகல விரிந்தது.

 அவளுக்கெங்கே இதெல்லாம் தெரியும். அவளை பொருத்தவரை கவர்மெண்ட் வேலை என்றால் மிக நல்லது. நல்ல சம்பளம், நிரந்தர வேலை. பிரைவேட் பேங்கில் இவ்வளவு தூரம் முன்னேற முடியும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. ஏனெனில், ஆரம்ப காலத்தில் பிரபா வேலைக்கு போகும்போது அவன் வருமானம் வெறும் ஆறாயிரம் தான்.

“ஐயோ! அவ்வளவு வருமானம் எல்லாம் வந்தா நாம விரட்டி விரட்டி அடிக்கலாம்”

“யாரை?” என்றான் புரியாமல்,

“வேற யாரை இந்த வாழ்க்கையை தான். ஆனா நீங்க சொன்னதெல்லாம் நிஜம் தானே”

“நிஜம்தான் நிறை. நான் சொன்ன மாதிரி தான் கொஞ்சம் கொஞ்சமா நாம முன்னேறலாம். பெருசா இல்லாட்டியும் சின்ன சின்னதா கூட நம்ம வாழ்க்கையில முன்னேற்றத்துக்கான அடி வைக்கணும். நாளைக்கு நான் சீக்கிரம் போகணும். மறக்காம என்னை எழுப்பி விடு” என்றதும்,

“எனக்கு எங்க தூக்கம் வரும். அதெல்லாம் டான்னு நாலு மணிக்கு எழுப்பி விடுறேன்” என்றவள் தான் அசந்து உறங்கி போனாள். அவளோடு சேர்ந்து பிரபாவும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!