Skip to content
Post Views: 12,930
நீங்காத உறவே!…
அத்தியாயம் 18
அதி காலையில் அரக்கப் பறக்க கிளம்பி கொண்டு இருந்தான் பிரபாகரன். இன்னும் வீட்டில் யாரும் எழுந்து கொள்ளவில்லை.
“ஐயோ! இந்த குளிரில் பச்ச தண்ணில குளிக்காதீங்க. கொஞ்சம் பொறுங்க சுடு தண்ணீர் கொண்டு வாரேன்” என்ற மனைவியின் வார்த்தையை அவன் கண்டு கொள்ளவில்லை.
Advertisement
நிறை பாவமாக நின்று இருந்தாள். எப்போதும் சீக்கிரம் எழுந்து விடுபவள் தான், மாத்திரையின் தாக்கம் தாமதமாக எழுந்து விட்டாள். உடல் உபாதை இல்லாவிட்டாலும் தற்போது நிறைய சோர்வும், உறக்கமும் வருது. பிரபா மிக அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தான். எட்டு வருடத்துக்கு மேலாக அதே கம்பெனியில் தான் வேலையில் இருக்கிறான்.
இத்தனை வருடமாக இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் மனைவி, குழந்தை வரை முன்னேற்றத்திற்கான படிநிலை. இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் நிறை வீட்டில் இருந்து கொள்ளலாம். இந்த கர்ப்ப காலத்திலும் ஓய்வு எடுக்காமல் பையை தூக்கிக் கொண்டு வேலைக்கு ஓட வேண்டிய அவஸ்தை அவளுக்கு இல்லாமல் இருக்கும் அல்லவா!…
இன்னும் பால்காரன் கூட வரவில்லை. இரவில் மிந்த சாதத்தை லேசாக சூடு செய்து தயிர் விட்டுக் கொடுத்தாள். தெருவில் ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருக்க நிறைக்கு மிகுந்த கவலை. இன்டர்வியூ மெயின் பிரான்ச் வெளியூரில்… அங்கு தாமதமாக செல்லக்கூடாது. அதற்குத்தான் இவ்வளவு அவசரம்.
Advertisement
நிறைப்பு முகம் சோர்ந்து போனது. அவர்கள் ஊரில் இந்த நேரத்தில் பஸ் வராது. அவன் அந்த ஒத்தையடி பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும். முன்பே அந்த பிளானில் தான் அவன் இருந்தான். தற்போது தாமதமாகி கொண்டிருக்க அவனுக்கு படபடப்பு தான் வந்தது. நிறை, வெளியில் வந்து தெருவை பார்த்தாள்.
Advertisement
வெளியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லாமல் கார்த்திகை மாத இருள் சூழ்ந்திருந்தது. பிரபா கொஞ்சம் பயந்து சுபாவம் என்று அவளுக்கு தெரியும். என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க,
உறக்கம் வராமல் ரோகினி எழுந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் என்னவோ ஒரு நிம்மதி நிறைக்கு…
“ரோகினி பெரிய மாமா எழுந்துட்டாங்களா?”
Advertisement
அவளை ஒரு மாதிரி பார்த்தவள், “இன்னும் இல்லை ஏன் கேக்குற?”
“உன் கொழுந்தனுக்கு என்னவோ அவசரமாம். இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு சொல்றாரு… வண்டிய எடுத்துட்டு போனா எங்க விட்டுட்டு போவாரு. வெளியூர் போகணும், பெரிய மாமாவை கொஞ்சம் எழுப்பி விடுறீங்களா… அவரை பஸ் ஸ்டாண்ட்ல போய் விட்டா போதும்.. அப்புறம் அவர் போய் பார்” என்றாள்.
அவர்களைப் பொறுத்தவரை கொழுந்தன் நல்லவர்தான். கொழுந்தன் மனைவிதான் ஆகாது. அதனால் தான் தைரியமாக கேட்டாள் நிறை.
“அவர் நல்லா தூங்கிட்டு இருக்கார் நிறை. இப்போ எல்லாம் எழுந்துக்க மாட்டார்”
“ஐயோ ரோகினி உங்க கொழுந்தனுக்கு சீக்கிரமா போகணுமாம். அவரை சொல்லி எழுப்பங்களேன்” என்றதும்,
“அப்படி என்ன பெரிய கவர்மெண்ட் ஆபிஸரா உன் புருஷன். அவரும் வேலை முடிஞ்சு லேட்டா தான் வந்தாரு. உங்க அவசரத்துக்கு எல்லாம் நாங்க ஓட முடியாது. அவர் தூங்கட்டும்” என்றதும்,
தொடர்ந்து வற்புறுத்த வில்லை நிறை. நேற்று இரவு மாமனார் வரும்போது நல்ல போதை தான். அவரை நம்பி அனுப்பவும் மனம் வரவில்லை. ராகவன் இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டாள். என்ன செய்யலாம்?
“நிறை, நான் என்ன குழந்தையா தனியா போறதுக்கு பயப்பட. என்னுடைய ஃபைல் மட்டும் எடுத்து கொடு”
“உங்களுக்கு லேட் ஆகுமே”
“பரவாயில்லை, இங்க இருந்து ஒரே ஓட்டம் ஓடிட்டா நேர மெயின் ரோடு தான் போய் நிப்பேன். அங்க நிறைய பஸ் வரும். வெறும் ஆறு கிலோமீட்டர் தான, ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கணவன் சமாதானம் சொல்லி தைரியம் கூறினாலும், நிறைக்கு மனதில்லை.
அவளுக்கும் பெரிய வண்டி ஓட்ட தெரியாது. எந்த நல்ல விஷயத்திற்கும் சில போராட்டம் வரத்தான் செய்யும். இது பரவாயில்லை என்று நினைத்தவள்,
“கொஞ்சம் இருங்க, ரெண்டு நிமிஷம்” என்றவள், பக்கத்து தெருவுக்கு ஓடினாள்.
“பெரியப்பா…” என்று சத்தம் கொடுக்க,
“இந்த நேரத்துல யாரு?” என்று அரை தூக்கத்தில் ஒருவர் வந்தார்,
“நான் தான் பெரியப்பா நிறை. உங்க டிவிஎஸ் 50 வேணும். உங்க மருமகனுக்கு டவுன்ல ஒரு முக்கியமான வேலை. அவசரமா போகணும் காலையில அஞ்சரை மணி பஸ் பிடிக்க… கொஞ்சம் உங்க வண்டியை கொடுத்தா, நான் போய் விட்டுட்டு வந்துடுவேன்”
“என் மகளுக்கு இல்லாததா.. ஆனா, உங்க வீட்ல தான் ஒன்னுக்கு நாலு பேர் இருக்காங்களே?” என்றார் கேள்வியாக,
“எல்லாரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருக்காங்க பெரியப்பா. நீங்க சாவியை குடுங்க, அவசரம்” என்று வாங்கி வந்தாள்.
மனைவி வண்டி ஓட்டி வருவதை பார்த்ததும் பதறிப் போனான் பிரபா.
“நிறை என்ன இது? எதுக்கு இந்த தேவையில்லாத வேலை. நீ வண்டி ஒன்னும் ஓட்ட வேணாம். உன் கூட நான் வரமாட்டேன். நான் கிளம்புறேன். நீ வண்டிய கொண்டு போய் விட்டுட்டு வா” என்று நடக்க,
“அதுக்கா இவ்வளவு சிரமா பட்டு வண்டியை தள்ளிட்டு வந்தேன். உங்களை மேனேஜராகி பாக்காம எனக்கு தூக்கம் வராது. நம்ம வாழ்க்கையில ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது.. சில பல சங்கடப்பட்ட ஒன்னும் ஆகாது. வாங்க வாங்க என் பின்னாடி உட்காருங்க” என்றாலும், பிரபா முறைத்து நிற்க,
“நம்ம குழந்தைக்காகங்க. நம்மளோட நல்ல எதிர்காலத்துக்காக தயங்காம வாங்க, லேட் ஆச்சு” என்று இழுத்து கொண்டு போனாள்.
பிரபா தன்னை தேற்றிக்கொண்டான். இன்னும் முழுதாக விடியல் தொடங்கவில்லை. நாலா பக்கமும் இருட்டாகத்தான் இருந்தது. திரும்பி நிறை தனியாக வராமல் அவள் அம்மா வீட்டிற்கு சென்று விடட்டும் என்று நினைப்போடு தான் பிரபா உடன் வந்தான்.
கணவனை பஸ் ஏற்றிவிட்டு, “நீங்க சொல்லாம இருந்தா கூட எனக்கு ஒன்னும் தோணாது. என் மனசுல ஆசைய காட்டிட்டிங்க. நீங்க அசிஸ்டன்ட் மேனேஜராக தான் வரணும்” என்றாள் முகம் பூரிக்க..
அவள் தலையை தடவி கொடுத்தவன், “நிச்சயமா நிறை. இந்த முயற்சியே உனக்காகத்தான் தொடங்கினேன். நிச்சயம் நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு” என்றவன்,
“நீ இப்படியே அத்தை வீட்டுக்கு போ.. நல்லா விடிஞ்ச பின்னாடி உங்க அப்பா கூட நம்ம வீட்டுக்கு போன போதும்” என்றான்.
அவனைப் பார்த்து அமைதியாக சிரித்தவள், “நேத்து காலையில எங்க அம்மா, அப்பா இரண்டு பேரும் வளர் வீட்டுக்கு போய் இருக்காங்க” என்றதும்,
பதறியவன், “நாலரை தான் ஆகுது. நீ எப்படி தனியா போவ நிறை. எனக்கு லேட் ஆனாலும் பரவாயில்லை. நான் வேலைக்கு போகல.. உன்னை தனியா எல்லாம் அனுப்ப முடியாது” என்றதும்,
“காரியத்தையே கெடுத்தீங்க போங்க… நான் பிறந்து வளர்ந்த ஊருல எனக்கு என்ன பயம். அதெல்லாம் நான் போயிப்பேன். வெண்ணை திரண்டு வரும் பொழுது பானை உடைந்த கதையா இருக்கக்கூடாது. மரியாதையா போய் நாம நினைச்ச காரியத்தை முடிச்சிட்டு வாங்க” என்று கண்டிப்பாக சொல்ல,
“ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நம்ம ஊர்ல ஒரு இழவு விழுந்துச்சு. சுடுகாட்டு பாதை தாண்டி எப்படி போக நிறை” அவனுக்கு பயமாக இருந்தது.
கணவன் வார்த்தையை கேட்டு அவளுக்கு சிரிப்பு வர, “அது நம்ம வனஜா அக்கா தான். நான் போகும் போது வந்து நின்னா, ரெண்டு பிள்ளையை விட்டுட்டு எப்படி சாக முடிஞ்சுச்சுன்னு நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு போறேன். நம்ம அக்கா தான். எனக்கொண்ணும் பயமில்லை”
“நிறை” என்று அதட்டினான் கணவன்.
“அதெல்லாம் நான் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு இப்ப நீங்க போன காரியம் நல்லபடியா நடக்கணும். அதுதான் மனசுல ஓடிட்டு இருக்கு. வேற எதையும் யோசிக்காமல் இதை நல்லபடியா முடிச்சு வாங்க. அதுதான் எனக்கு நீங்க கொடுக்கிற பெரிய நிம்மதி” என்று கணவனுக்கு ஆயிரம் தைரியம் கூறி, அவனை வழி அனுப்பி வைத்தாள்.
மனைவி என்ன சொன்னாலும் பிரபாவுக்கு மனதில்லை. நிறை அசால்ட் துணிச்சல் மிக்க பெண். பிரபா போல இருட்டை பார்த்து பயந்து ஒதுங்கும் ராகம் அல்ல.
அப்போதுதான் கல்யாணி எழுந்து வெளி வாசல் தெளித்துக் கொண்டிருந்தார். தனக்கு நேர வண்டி வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தவர். அங்கு நிறையை கண்டதும் ஆடிப் போனார்.
“என்னடி நேரம் கெட்ட நேரத்துல எங்க போயிட்டு வர.. அதுவும் வயித்துல பிள்ளைய வச்சுக்கிட்டு. என்னை துணிச்சல் உனக்கு” என்று சண்டைக்கு போக,
நிறை மறைக்கவெல்லாம் இல்லை. அண்ணன் மனைவிகள் என்று அவன் எவ்வளவு பார்த்து இருப்பான். என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் ஒரே குடும்பமாக இருக்கும் பொழுது அவரவர் சூழ்நிலை பொருத்து சின்ன உதவி செய்ய வேணாமா? அதனால் என்ன நடந்ததோ அதை மறைக்காமல் சொல்லிவிட்டாள்.
அவ்வளவு தான் கல்யாணிக்கு தாங்க முடியவில்லை. தன் மகனுக்கு உதவி செய்ய மறுத்தாளா? வீட்டில் எல்லோரும் வெளியே வரும் வரை காத்திருந்தவர், மற்ற மகன்கள் இருவரும் கீழே வந்த பின் ஆரம்பித்து விட்டார். அவ்வளவு பேச்சு ரோகினிக்கு விழுந்தது.
வீரசிவா கூட ரோகிணி பக்கம் நிற்கவில்லை.
“என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல. அவன் என் தம்பி, என் கூட பிறந்தவன். எவ்வளவோ நாள் நான் வெளியூர்ல வேலைக்கு போகும் போது அவன் தான் கூட்டிட்டு போயிட்டு வருவான். என் தம்பிக்கு நான் பாக்காம வேற யார் பார்ப்பா. என்னை எழுப்பி கேட்காம நீயா எப்படி நிறை கிட்ட அப்படி பேசுவ. அதுவும் மாசமா இருக்கிற பிள்ளை அலைய விட்டிருக்க. அறியவில்லை உனக்கு என்னத்த படிச்ச முட்டாள்” என்றவன்,
“கொஞ்ச நாளா உன் போக்கு எதுவும் சரியில்ல. இன்னொரு தடவை வீட்டில் பிரச்சனை உண்டாக்குற மாதிரி உன் பேச்சு அடிபட்டுச்சு, நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிறணும்” கடுமையாக சொல்லி விட, அவ்வளவு பேசும் ரோகினிக்கு அழுகை தாங்கவில்லை.
கல்யாணியும் விடவில்லை, “வீட்டுக்கு வந்த மருமகள்கள் மூன்று பேருக்கும் பெருசா ஒத்துமை இல்ல. காலம் போனா எல்லாம் ஒன்னு சேருவாங்க. நாம எதுவும் சொல்ல கூடாதுன்னு வாய மூடிட்டு இருந்தேன். என் மகன்கள் மூணு பேரையும் பிரிச்சு விட பாக்குறியா? மூத்த மருமகள் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு.. கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு. சும்மா கூட உனக்கு நாள் தள்ளி போல.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை நான் சொல்லி இருப்பேனா? இன்னொரு தடவை என் மகன்களுக்குள்ள சிண்டு முடிந்துவிடும் வேலைய பாத்த.. பிள்ளை இல்லைன்னு நானே உங்க வீட்டு ஆளுகளுக்கு சொல்லி விட்டுடுவேன்” என்று அழுத்தமாக சொன்னார்.
ரோகினிக்கு என்னவோ ஒரு வீம்பு. நிறைக்கு உதவி செய்ய அவளுக்கு மனதில்லை. அது பிரபாவை கொண்டு அல்ல. அவன் மனைவியை கொண்டு.. ஆனால், அது மற்றவர்களிடம் இப்படி ஒரு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை.
நிறை கணவனுக்கு பேசி விட்டு, உள்ளறையில் சென்று படுத்து உறங்கி விட்டாள். மிகவும் அசதியாக இருந்தது. மற்ற இரு மகன்களும் மருமகள்களும் மேல் மாடியில் இருந்தார்கள்.
ரோகிணி அழுது கொண்டே இருந்தாள்.
“அக்கா விடுங்க மாமா என்னவோ கோபத்துல பேசிட்டாரு” என்று சமாதானம் செய்தாள் சினேகா.
“அவளை சமாதானம் செய்யாத சினேகா. அவ செஞ்சது ரொம்ப தப்பு” என்றான் சிவா.
“எங்க தம்பி அவன்.. எங்களை விட வயசு சின்னவன்றதால அவனோடு சகஜமா பேச முடியல. அதுக்காக அவன் மேல பாசம் இல்லாம எப்படி இருக்கும். கூட பொறந்தவன்னு அவனுக்கு நாங்க எதுவுமே செய்யல. இவ்வளவுக்கும் நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். இதுவரைக்கும் அண்ணன்கள் நல்லா இருக்காங்கன்னு ஒரு தடவை கூட உதவி கேட்டதில்லை. அப்படி இருக்கும்போது அவனை எப்படி நாங்க தள்ளி வைப்போம்” என்றான் ராகவன்.
வீர சிவா நேரடியாக ரோகினி முன் போய் நின்றான், “உனக்கு என்னதான் பிரச்சனை. எதுக்கு உனக்கு நிறை, பிரபாகரனை பிடிக்கல”
ரோகினி “கல்யாணம் ஆன பொண்ணுங்க மாசமாகுறது இல்லையா? எந்நேரம் எனக்கு என்னமோ குழந்தை தள்ளி போகுது. அதுக்காக உங்க அம்மா கடைசி மருமகளை ரொம்பவும் தாங்கி, என்ன ஒதுக்கி வைக்கிறாங்க. அவளை விட நான் எந்த விதத்தில் குறைந்து போயிட்டேன்” என்று ஆதங்கமாக சொல்ல,
“எல்லா விதத்திலும் அவளை விட நீ தான் மேல இருக்க. ஏதோ ஒன்னுல அவ நிறைவான உனக்கு என்ன? அப்படி என்ன பொறாமை ரோகினி”
“அவளை பாத்து எனக்கு எதுக்கு பொறாமை. அவ என்ன என்னை விட அழகா, எனக்கு மேல படிச்சி இருக்காளா? இல்ல என் அளவுக்கு நகை போட்டு சீர் செய்து இந்த வீட்டு மருமகளா வந்தாளா?” அகங்காரமாக சொன்னாள்.
“கரெக்ட் நீ சொல்றது சரிதான். உங்க அளவுக்கு படிப்போ, வசதியோ, நகையோ நிறை கிட்ட கிடையாது. ஒரு விசேஷம்ன்னா நீங்க எப்படி போறீங்க. அந்தப் பொண்ணு என்னைக்காவது அப்படி போய் பார்த்து இருக்கீங்களா? வெறும் ஆறாயிரம் சம்பளத்துக்கு எவ்வளவு வேலை பார்க்குது. வீட்டிலேயும் வந்து வேலை இருக்கு.. அந்தப் பொண்ணு என்னைக்காவது உங்களை பாத்து பொறாமை பட்டு இருக்கா? அவங்க நல்லா இருக்காங்க. நாம அப்படி இல்லன்னு என்னைக்காவது உங்க மேல விரோதத்தை வளர்த்து இருக்கா? நிறை அது இடத்துல சரியாத்தான் இருக்கு. உங்களுக்குத்தான் எல்லாத்துலயும் தன்னைவிட கீழ இருக்குற ஒரு பொண்ணு, கொஞ்சம் மேல வரது பிடிக்கல. எப்பவுமே நீங்க தான் டாமினேட்டடா இருக்கணும்னு நினைக்கிறீங்க. அப்படி ஒரு எண்ணம் குடும்பத்துல வர்றது ரொம்ப தப்பு” என்றவன்,
“நிறை மேலையும் எங்களுக்கு அக்கறை இருக்கு ரோகினி. நிறை என் தம்பி பொண்டாட்டி என்பதையும் தாண்டி எங்க சொந்த அத்தை மகள். அது நல்லா இருக்கணும் என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கு. உனக்கு பொறுமையா எடுத்து சொல்லிட்டேன். பார்த்து நடந்துக்க. எல்லாத்துலையும் நாம தான் முன்ன நிக்கணும். நம்மளத்தான் எல்லாரும் பாக்கணும், நம்மள மட்டும் தான் பேசணும். நாம மட்டும்தான் உயர்வாய் இருக்கணும் என்ற தப்பான எண்ணத்தை விட்டு தள்ளு.. இனியும் நீ மாறல இந்த குடும்பத்தில் உனக்கான மரியாதை போயிரும்” தெளிவாக எடுத்துச் சொன்னான் வீரசிவா.
ஆனாலும் ரோகினிக்கு தன்னைப் போட்டுக் கொடுத்த நிறைமேல் கோபம் வளர்ந்தது.
அன்று மாலை பிரபா வந்ததும் ஆர்வமாக பார்த்தாள் நிறை.
“எனக்கு தெரிஞ்சு எல்லாம் நல்லா பண்ணி இருக்கேன். ரொம்ப நம்பிக்கையா இருக்கேன்” என்று மனைவிக்கும் நம்பிக்கையை கொடுக்க, அப்பொழுதுதான் அவளுக்கு முழு திருப்தி உண்டானது.
சும்மா எல்லாம் பேச்சுக்கு அளந்துவிடுமாள் தன் கணவன் அல்லவே!…
தனக்கு முன்னால் நிறை கர்ப்பமாகிவிட்டது ரோகினியை பாதித்திருக்க.. அதற்கு என்ன செய்வது என்று குழம்பினான் வீரசிவா. அவனுக்கு மனைவி மேல் கொஞ்சம் அனுதாபமும் வந்தது. குழந்தை இல்லாத ஏக்கம், குழந்தை இல்லாமல் போகுமோ என்ற பயம், ஒரே வீட்டில் தனக்கு பின் வந்தவள் கர்ப்பமாக இருப்பது என்று நிறைய உணர்வுகளால் ரோகினி அலைக்கழிக்க படுகிறாள் என்று உணர்ந்தான் வீரசிவா.
கொஞ்ச நாளைக்கு நிறையை அவள் அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுவோமா என்று தாயிடம் எதுவாக பேசி பார்க்க,
கல்யாணிக்கும் பெரிய மகள் குணம் கண்டு ஐந்து மாதம் ஆகும் வரை நிறைய தாய் வீட்டிற்கு அனுப்பும் யோசனை தோன்றியது.
கல்யாணியே வாய்விட்டு சொன்னார், “கொஞ்ச நாளைக்கு பிரபாவ கூட்டிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரியா நிறை” என்றார்.
அவளுக்கு பெரிய தர்ம சங்கடம். தாய் வீட்டிற்கு செல்ல எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது. ஆனால், சூழ்நிலை அவளுக்கு ஒத்து வரவில்லையே.
“இல்லை அத்தை, அடுத்த வாரம் வளர்க்கு வளைகாப்பு. அவளை கூட்டிட்டு வரணும். அம்மாவால எங்க ரெண்டு பேரையும் வச்சு பார்க்க முடியாது” என்றாள் தயங்கி.
அதற்கு மேல் கல்யாணியால் எப்படி பேச முடியும், “ஏன் அத்தை, நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கலையே?” என்றாள்.
ஆரம்பத்தில் தான் மாமியார் சமையல்.. தற்போது எல்லாம் கணவனின் துணையோடு எப்போதும் போல தங்களின் வீட்டிலே பார்த்துக் கொள்கிறார்கள். காலையில் வேலைக்கு சென்றால் மாலை தான் வருவது. அப்படி இருந்தும் தாய்வீடு செல் என்று சொல்லும் மாமியாரை மனவலியோடு பார்த்தாள் நிறை.
சின்ன மருமகளின் பார்வை புரிந்தாலும் அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ரோகினி மனம் வருத்தம் புரிந்தாலும் எதுவும் சொல்ல முடியாமல் வாய்மூடிக் கொண்டார்.
அன்று மாலை பிரபா சீக்கிரம் வீடு வர, நிறை வீட்டில் இல்லை. முருங்கைக் கீரை ஒடிக்க சென்று இருந்தாள்.
மனைவியை தேடி பிரபா வெளியே வர, ரோகினியும் சினேகாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து நகர நினைத்தவன் தங்கள் பேர் அடிபடவும் நின்று திரும்பிப் பார்த்தான்.
“வீட்டுக்கு சின்ன பையன் அவனுக்கு ஒரு விவரம் தெரியாதுன்னு சொன்னாங்க. எப்படி ஒரு பிள்ளைக்கு அப்பாவானான்” என்றாள் ரோகினி.
“என்ன சொல்றீங்க?” என்றாள் ரோகினி.
புறம் தானே தெரியாமல் பேசுகிறோம். யார் கேட்க போகிறார்கள் என்ற நினைப்பில்,
“ஆமா, அவன் ஒரு அப்பிராணி. நான் பார்த்து இருக்கேன். யார் என்ன சொன்னாலும் கேட்டுட்டு போவான். எதுத்து கூட பேச மாட்டான். வீட்டை தாண்டி எங்கும் போக தெரியாது. காசு, கணக்கு எல்லாம் பார்க்க தெரியாது. மூணு நேரத்துக்கு சோறு போட்டா போதும். தத்தி மாதிரி.. அவனுக்கு எப்படி இவ பிள்ளை பெற்றான்றது ஆச்சரியமா இருக்கு” என்றவள்,
“யாருக்கு தெரியும் நிறை எல்லாம் ஊரை விக்கிற ஆளு. எதுக்கும் துணிந்து நிப்பா” என்று சொல்லும் போதே, அவர்கள் அருகில் இரும்பு பலகை வந்து விழுந்தது.
இருவரும் அரண்டு போய் எழுந்து பார்க்க, முகம் கொள்ளா கோபத்தோடு நின்றிருந்தான் பிரபாகரன்.
error: Content is protected !!