Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 22

நீங்காத உறவே!…

அத்தியாயம் 22

   கணவன் வெளியூர் சென்றால் என்ன? வேலைக்கு தானே செல்கிறான். உங்களை விட்டுப் பிரிந்து எல்லாம் இருக்க முடியாது வேலைக்கு போக வேண்டாம் என்றும் சொல்லும் அளவுக்கு வசதியானவர்கள் கிடையாது. ப்ரோமோஷன் நல்ல சம்பளம் என்றால் வெளியூர் வேலையை இருவருமே அங்கீகரித்தார்கள். ஆனால், பிரிவு அது வலித்தது.

தெரியும் இத்தனை மாதங்கள் தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த கணவன் தள்ளி போய் தனியாக நிற்கும் போது அவனின் நினைப்பு அதிகமாகும் என்று அறிவாள். ஆனால், இவ்வளவு தூரம் தவித்து போவோம் என்று நினைக்க வில்லை. எல்லாம் சொந்தமும் இருந்தாலும் யாரோடும் பெரிதாக ஒட்டுதல் இல்லை. அதுவும் தாய் வீட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண் என்று தாங்குவதற்கு வழி இல்லை. அங்கு ஏற்கனவே வளர் பிள்ளை பெற்று இருக்க தற்போது வந்திருக்கும் பிரச்சனையில் இவளுக்கு கரிசனம் கிடைக்காது. நிறையை நாடாமல் இருப்பதே பெரிய விஷயம்.



Advertisement

வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் ஒரு மாதிரி மன அழுத்தத்தில் தான் இருந்தாள். கணவனை கண்டதும் மனதில் அவ்வளவு நிறைவு, அழுகை, என்னென்னவோ உணர்வு.

 எவ்வளவு நேரம் வெளியில் நிற்க முடியும் இருவரும் வீட்டிற்கு உள்ளே சென்றார்கள். எப்போதும் போல வீட்டு ஆட்கள் விசாரிப்பெல்லாம் முடிந்ததும் பிரபா தன் பிரமோஷன் விஷயத்தை சொன்னான். நிறைக்கும் முகமே மலர்ந்திருந்தது. தன் கணவன் மேனேஜர்.. அவளுக்கு அவ்வளவு பெருமை.

“இனி சம்பளம் கொஞ்சம் கூட வரும் தானே. பிரைவேட் வேலைன்றதுனால கவர்மெண்ட் சம்பளம் வராது. இனி சூதானமா பிழைக்க பாரு.. உனக்கும் பிள்ளை வந்துருச்சு” என்று அறிவுரை சொன்னார் தந்தை.

Advertisement

நிறைக்கிருக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு அது ஒரு விஷயம் அவ்வளவு பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்க, நிறையின் முகம் சுருங்கிப் போனது. பிரபா முன்பே அறிவான். ஆனால், நிறைக்குத்தான் இரண்டு வார்த்தையாவது பாராட்டவில்லையே.. சந்தோஷப்பட வில்லையே என்று சுணக்கம்.

Advertisement

பிரபா தான், “மூணு மாசம் ஆச்சு.. முகத்தை ஏன் தூக்கி வச்சிருக்க.. என்ன பண்றாங்க என்னோட குட்டி பாப்பா. வேலைக்கு போகாதன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.. மழைக் காலமா வேற இருக்கு என் பிள்ளைக்கு நிறைய அலைச்சல்”

குழந்தையை பற்றி கேட்பது முகம் மலர்ந்தவள், “என்ன பண்ணிட்டாங்க உங்க பிள்ளையை.. நான்தான் வேலைக்கு போறேன் எனக்கு தான் அலைச்சல். என்னமோ நடக்க விட்டு கூட்டிட்டு போற மாதிரி பேசுறீங்க. உங்க பிள்ளை வைத்துக்குள்ள பாதுகாப்பா இருக்கு. என் மேல உள்ள அக்கறை எல்லாம் இப்ப ஆள் மாறி போச்சு” சாடவாக சொல்ல,

“ஆமா, என் பேச்சை கேக்குறியா நீ? வேலைக்கு போகாதன்னு சொல்றேன் நிறை. அஞ்சு மாசம் நெருங்க போது.. இனி வீட்டுல இரு” என்றதும், காது கேட்காதவள் போல் அறைக்கு சென்று விட்டாள்.

Advertisement

கணவன் திடீரென்று வந்ததால் பெரியதாக வீட்டில் ஒன்றும் இல்லை. அவசரமாக அவன் கொண்டு வந்த பையை ஆராய்ந்தாள். அதில் நட்ஸ், பழங்கள் இருந்தது.

“என் புருஷனுக்கு என்னை தவிர வேற நினைப்பு இருக்காது” என்று சந்தோசமாக அழுத்துக் கொண்டவள், அடுத்து என்ன இருக்கு என்று பார்க்க,

 நாலைந்து நைட்டி இருந்தது. பார்த்ததும் முகம் மலர்ந்து போனது. வயிறு பெருசா ஆனதும் நைட்டி டைட்டாக தான் இருந்தது. தற்போது தான் வளரின் பிரசவ செலவுகளை இவள் பார்த்திருக்க, தொடர்ந்து செலவு செய்ய விரும்பாமல் இன்னும் ரெண்டு மாதம் போகட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாள். ஆனால், கணவன் தனக்கானதை வாங்கி வந்ததும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

காபி போட்டுக் கொண்டவள், அவனிடம் கொடுத்து விட்டு கன்னத்தைக் கிள்ளி “என் சக்கரக்கட்டி” என்று கொஞ்சி செல்ல, பிரபாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

அவன் மனைவியை அறிவான். தனக்குத் தேவையானதாக இருந்தாலும் செலவுகளை அதிகம் இழுத்துக் கொள்ள மாட்டாள். ஆனால், கணவனாக எடுத்து கொடுத்தால் உடனே வாங்கி கொள்வாள். மனைவியின் சிக்கனம் அறிந்து தான் அவன் வாங்கி வந்தது.

என்ன முட்டை வாடை வருது என்ற கல்யாணி, மகனை பார்க்க.. அவன் தான் உண்டு கொண்டு இருந்தான்.

“ஏண்டி, உனக்கு முட்டை வாடை ஆகாதே..” என்றார்.

“வீட்ல வேற எதுவும் இல்ல அத்தை. இந்த நேரம் எந்த கடைக்கு போக..” என்றதும்,

“அதனால என்ன இருக்குறத சாப்டுட்டுட்டு காலையில என்ன வேணுமோ எடுத்துக்கிட்டா போச்சு. இனி நாள் பூரா நெஞ்ச தடவிக் கிடப்பையே. தேவையா?” என்று சத்தம் கொடுக்க,

 “அதுக்காக மூணு மாசம் கழிச்சு வந்த மனுஷனுக்கு இருக்குறத திங்க சொல்றீங்களா?” என்றாள் கோபமாக,

அவளை முறைத்துப் பார்த்தவர், “உன் புருஷன் தானே வந்து இருக்கான். எதுக்காக அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு கிடக்க. கொஞ்சம் அடங்கி இரு.. துள்ளிட்டு இருக்க, உன் ஒரப்படி பாக்குறாளுக”

“அதுக்கு நான் என்ன பண்ண?” முறுக்கி கொண்டு நகர்ந்து விட்டாள். மாமியார் சொல்வது ஏறவில்லை.

 பிரபா கவனித்து இருந்தான். நிறை எப்போதும் அப்படித்தான் நாசுக்கெல்லாம் பார்க்க மாட்டாள். சந்தோஷமா? அதுவும் முகத்தில் தெரிந்து விடும். அழுகையா? அதுவும் முகத்தில் தெரிந்து விடும்.

அன்றிருவு கணவனை நெருங்கி படுக்க.. பிரபாவும் அவளை அணைத்து கொண்டான். கணவனோடு மேலும் ஒன்றினால் நிறை. அவனுக்கும் மனைவி பிரிந்து மூன்று மாதத்திற்கு மேல் ஆவதால்,

“நிறை என்ன பண்ற? வயித்துல பாப்பா இருக்கு?” என்றான் சங்கடமாக, அவனை தூண்டி விடுவது போல இருந்தது அவளின் சேட்டை…

“எனக்கு வேணும்” என்றதும்

 என்ன?” என்று திகைத்தவன், “அஞ்சாவது மாசம் ஸ்கேன் பார்த்து முடிச்சுக்குவோம். அதுக்கு அப்புறம்”என்றான்.

“டாக்டர் சரின்னு தான் சொன்னாங்க” என்றாள்,

 அவனுக்கு சற்று வெட்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது,

“நிறை என்ன இது? இதெல்லாமா டாக்டர்கிட்ட கேட்பீங்க”

“நீங்க ஒரு தடவையாவது என் கூட ஹாஸ்பிடல் வாங்க. டாக்டர் எல்லாம் ஒடச்சு தான் பேசுவாங்க” என்று அவனை அனைத்து கொள்ள,

“நிறை”

“மூச், மூணு மாசம் தனியா இருந்தேன்” என்றாள் அவன் முகம் பார்த்து,

கையால் அவள் முகத்தை வருடியவன், “நானும் தனியா தான் இருந்தேன்”

“அப்படியா? பார்த்தா அப்படி ஒன்னும் எனக்காக ஏங்கின மாதிரி தெரியல” என்றதும், சிரித்தவன்,

மெல்ல அவள் வெற்று வயிற்றை தடவி கொடுத்தான்.

“பொண்ணு தானோ!”

“தெரியல. எல்லாரும் பையன்னு தான் சொல்றாங்க. உங்களுக்கு என்ன குழந்தை வேணும்?”

“எந்த குழந்தையா இருந்தா என்ன? நல்லபடியா பொறந்து நம்ம கிட்ட வந்தா போதும்”

“அவ்வளவு தானா என்றாள் ரகசிய குரலில்.

“அப்படின்னு யாரு சொன்னா?” என்றவன் மனைவியை நெருங்கினான்.

 நிறை தன் வீட்டு பிரச்சனையை கணவனிடம் சொல்லவே இல்லை. பொதுவாக குழந்தை பிறந்ததை மட்டும் சொன்னவள், கணவனோடு சென்று குழந்தையை பார்த்து வந்தாள். தற்போது பெற்றவர்கள் வாங்கி இருக்கும் தொகை அவளால் அடைக்கவே முடியாதது.

தன் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்கு எதுவும் கொண்டு வராமல் இருந்தால் போகுது.. அதற்காக பெற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தன் கணவனை கஷ்டப்படுத்த முடியாது. அதிகமாக கடன் வாங்கி செய்யாதீர்கள் நம்மால் திரும்ப கொடுக்க முடியாது என்று எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் பெருமைக்காக மகளுக்கு அவ்வளவு செலவு செய்தார்கள். தற்போது அந்த மகள் தான் நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள்.

பாவம் வளர் என்ன செய்வாள். அவள் கணவன் சரி தப்பு என்ற வாதத்திற்கு வரவில்லை. என் குடும்பம் எனக்கு வேண்டும் கடனை அடைத்து கணவனோடு என்னை சேர்த்து வையுங்கள்.. இதுதான் அவளின் வாதமாக இருந்தது. பெற்றவர்களை தான் கையப்பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள். நிறை பிடிகுடுக்கவே இல்லை. விரலுக்கு தக்க வீக்கம் இருக்க வேண்டும். இவர்கள் கடனை தான் சுமந்தால் அந்த வீக்கம் தனக்கு அதிகமாகிவிடும்.

நிறைக்கு புரியவே இல்லை. வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு நாள் முழுக்க வேலை செய்யும் இவளால் எப்படி ஐந்து லட்சம் ரூபாயை அடைக்க முடியும். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையில் இருந்தவன் ஊருக்கு கிளம்பி விட்டான். நிறை மனதில் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் தங்கள் வாழ்வாதாரத்தை உணர்ந்து நல்ல முறையில் கணவனை வழி அனுப்பி வைத்தாள்.

பிரபா மெயின் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கும் நேரம், அவனைக் காண வந்திருந்தார்கள் திலகாவும், தெய்வமும்…

“அத்தை” என்றான் புரியாமல்,

“பிரபா நாங்க ரொம்ப இக்கட்டுல இருக்கோம் பிரபா. நீ தான் சொந்தம். வேற யார்கிட்டயும் எங்களால் போய் நிற்க முடியல.. எப்படியாவது வளர அவ குடும்பத்தோட சேர்த்து வைக்கணும். பிள்ளைய வச்சுக்கிட்டு தினமும் அழுகுறா? நாங்களும் கேட்காத ஆள் இல்லை. எல்லாரும் கை விரிச்சிட்டாங்க. எனக்கும் சொந்தம்னு நீங்க தான் இருக்கீங்க. நான் எங்க போக” என்று திலகா அழுக,

“என்னாச்சு அத்தை” என்றான் பதறி போய்..

 அவரும் அழுது கொண்டே நடந்ததை சொல்ல, பிரபாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் எப்படி இதில் உதவ முடியும். தன்னால் எப்படி இவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய? புரியாமல் பார்த்தான். மனைவி தன்னிடம் சொல்லாத போதே, தான் இதில் ஈடுபடுவது அவளுக்கு விருப்பமில்லை என்று புரிந்தது.

அவனின் யோசனையான முகத்தை பார்த்தே நிலையை கவனித்தவர்கள்.

“கடன் எல்லாம் வேண்டாம் பிரபா” என்றவர், ஒரு பாத்திரத்தை எடுத்து கையில் கோட்த்தார்.

“இவங்க அப்பா வீட்டு தோட்டம். உங்க ஊரை ஒட்டி கிராமம் தான். நிலம் இருக்கு, வரண்ட பூமி. கிணத்து தண்ணி எல்லாம் கிடையாது. நாங்க யாரு விவசாயம் பாக்கல. பரம்பரை சொத்து என்றதால கையில நிக்குது. இதை எப்படியாவது வித்து கொடு பிரபா” என்றார்.

அவன் பேங்க் வேலையில் இருப்பதால் உதவியாக கேட்டார். இந்த சொத்தை கடைசி வரை காப்பாற்ற நினைக்க, முடியாமல் போனது. பிரபா ஆராய்ந்தான்,

 கிராமத்து இடம்.. நீர் வசதி இல்லாததால் இடத்திற்கு தான் மதிப்பு. பெரிதாக விலை போகாது. ஆனால், ஓரளவுக்கு கிடைக்கும். பிரபா முகம் யோசனையை காட்டியது.

“எவ்வளவு அத்தை எதிர்பாக்குறீங்க?”

“வர்ற பணத்துல வளரு கடனை அடைச்சிட்டு நிறைக்கு செய்யணும்னு இருக்கோம்” என்றதும் பிரபா ஆச்சரியமாக பார்க்க,

“வசதியில்ல பெரிய மகளுக்கு செய்ய முடியல. முன்னாடியே இடத்தை விக்கிற நினைப்பு இல்லை. இப்போ வேற வழி கிடையாது பிரபா. எவ்வளவு மிஞ்சதோ அதை நிறைக்கு செய்யணும்” என்றதும்,

தன் மாமனை பார்த்தான், “அப்பா வீட்டு தோட்டம், பேரப்பிள்ளைகளுக்கு வேணும்னு வச்சி இருந்தோம். இப்போ பெத்த பிள்ளைக்கு ரெண்டுமே கஷ்டப்படுது. வித்து கொடுத்துடு மாப்பிள்ளை” என்றார் தெய்வம்.

“சரிங்க மாமா பத்திரம் என்கிட்ட இருக்கட்டும். ரெண்டு நாள்ல தகவல் சொல்றேன்”

“வளரு” என்று இழுக்க,

“அவங்க வீட்டுக்காரர் நம்பர் குடுங்க. நான் பேசுறேன்.. பணத்துக்கு நான் பொறுப்பு” என்றான்.

எப்படியும் சொந்த அத்தை, வீட்டின் மூத்த மருமகன் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இவன் செய்ய விட்டால் இவன் மனைவி தான் செய்ய வேண்டும். ஆண் பிள்ளை இல்லா குடும்பத்தில் மூத்த மருமகனாக தன்னால் இயன்ற உதவியை செய்ய முன்வந்தான். அதன்படி வளரின் கணவர் நம்பரை வாங்கிக் கொண்டு தான் ஊருக்கு சென்றான்.

வளரின் கணவரிடம் என்ன பேசினானோ?… அடுத்த ரெண்டு நாளில் குடும்பத்தோடு பிள்ளையை பார்க்க வந்து விட்டார்கள். அதன் பிறகு தான் வலருக்கு நிம்மதியே… அவள் பக்கம் இருந்து எந்த கம்ப்ளைன்ட்டும் வரவில்லை. நல்ல முறையில் தன் குடும்பத்தோடு சேர்ந்தால் போதும் என்று நினைத்து விட்டாள். பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்களாக அவர்களும் மருமகனை இழுத்துக் கொண்டார்கள். வேற வழி என்ன?…

நிறைக்கு இது எதுவும் தெரியாது. வளரின் வீட்டு ஆட்கள் வந்து குழந்தையை பார்த்தார்கள் என்று மட்டும் தான் தெரியும். தாயும், தந்தையும் தான் சரி கட்டி இருப்பார்கள் என்று நினைத்து இருந்தாள். அத்தோடு வளரின் கணவனையும் குற்றம் சொல்ல முடியாது. ஆயிரம் இரண்டாயிரம் என்றால் தள்ளிவிடலாம், லட்ச கணக்கில் பணம் எனும் போது யார் விட்டுக் கொடுப்பார்கள்.

வளருக்கும் முழு விவரம் தெரியாது. தோட்டம் விற்கப் போகிறார்கள் என்றெல்லாம் அறியாமல் பேச்சுவாக்கில் அக்காவிடம்,

“மாமா, தான் பணத்துக்கு பொறுப்பு எடுத்து என் வீட்டுக்காரர் கிட்ட பேசி இருக்காருக்கா” என்றதும்,

மனம் படபடப்பாக, “எந்த மாமா?” என்றாள். ஏனெனில் வளர் அப்படி ஒன்றும் அக்கா கணவன் என்று பிரபாவை உறவு சொல்லி பேச மாட்டாள். நிறைக்கு பிடிக்காவிட்டாலும் ஒன்றும் சொல்ல முடியாது. மாமன் மகன் என்று முன்பிருந்தே பேர் சொல்லி தான் அழைப்பாள். வளருக்கு கல்யாணம் ஆன பின், மாமன் மகன் அக்கா கணவன் ஆனாலும் உறவு கொள்ளும் அளவிற்கு சந்தர்ப்பத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. அதனால் தான் யாரைச் சொல்கிறாள் என்று புரியாமல் நிறை கேட்டது.

“உன் புருஷன் தான்” என்றதும் திகைத்து போனாள். கணவன் தன்னை தேடி வந்து விட்ட சந்தோஷத்தில் இருக்கும் தங்கையிடம் வேறு எதுவும் பேச முடியாமல் போனை வைத்து விட்டாள்.

அடுத்த நொடியே நேரத்தைக் கூட பார்க்காமல் தன் கணவனுக்கு அழைத்தாள். பிரபா முக்கியமான மீட்டிங்கில் இருக்க இரண்டு முறை கட் பண்ணி விட்டான். தொடர்ந்து நிறை விடாமல் அடிக்கவும், மனைவி ஹாஸ்பிடல் போயிருக்கிறாளோ என்னவோ என்று பயந்து போய் அட்டென்ட் செய்தான்.

“கூறுகெட்ட மனுசா, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?” என்று எடுத்தவுடன் கேட்க.

பயந்து போனான் பிரபா, “என்னாச்சு நிறை?” அவன் தான் மேனேஜர் அவனை சுற்றியும் பத்து பேர் நின்று இருந்தார்கள்.

“என்ன காரியம் பண்ணி தொலைஞ்ச நீ?.. காரியக்கார வீட்டுல சோடை கத்திரிக்காய்ன்றது சரியா தான் இருக்கு” மேலும் கத்த,

பிரபா சுற்றிலும் பார்த்துக் கொண்டான். யாருக்கும் கேட்டு விட்டதோ என்று… சுற்றி இருக்கும் எல்லோரும் அவனின் முகத்தைத்தான் பார்த்து இருந்தார்கள்.

“எங்கம்மா, அப்பா என் தங்கச்சி எனக்கு தெரியாது. நீ என்ன பெரிய காரியக்காரனா? அவ்வளவு நல்லவனா? அவ்வளவு பணம் யாரை கேட்டு நீ பொறுப்பு எடுத்துக்கிட்ட? நானே ஒதுங்கி தானே நிக்கிறேன்” விடுவதாக இல்லை நிறை.

 “எக்ஸ்க்யூஸ் மீ” என்று வெளியே வந்தவன்,

“என்னடி பிரச்சனை உனக்கு, நான் வேலையில் இருக்கேன். ஃபோனை தாண்டி பத்து பேருக்கு கேட்கிற அளவுக்கு கத்துற?”

“என்ன, மேனேஜர் ஆயிட்ட உடனே வாய் கூடுதா? சம்பாத்தியகாரர் என்கிட்ட கேட்காம முடிவு எடுக்கிற அளவுக்கு வளர்ந்தாச்சு” நிறை கத்தி கொண்டே தான் இருந்தாள்.

அவளுக்கு புரிய வைக்க முடியாது என்று உணர்ந்தவன்.. “எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறேன்” அவள் கத்திக் கொண்டிருக்கும்போதே வைத்து விட்டான்.

நிறைத்து ஒரு மாதிரியாகிவிட்டது. இப்படி எல்லாம் ஒரு நாளும் பிரபா நடந்து கொண்டதில்லை. ஒருவேளை தான் கொஞ்சம் அதிகமாக நடந்து கொண்டோமோ என்ற நினைப்பு.

“சரி விடு தன்னைத் தாண்டி எல்லாம் கணவனுக்கு போக தெரியாது. என்னமோ அவசர வேலை போல.. கொஞ்ச நேரத்தில் அவனே பேசி வருவான்” நிறை கணவனின் கோபத்தை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.

பிரபா அப்படித்தான் கோபத்தில் கூட வார்த்தை நிதானம் இருக்கும். அந்தக் கோபம் போனபின் முழுதாக மனைவியிடம் சரண்டராகி விடுவான்.

மனைவியின் நினைப்புக்கு தக்க மதியத்திற்கு மேல் பிரபா, நிறைக்கு அழைத்து விட்டான். அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது,

“எனக்கு தெரியாதா என்னை கட்டிகிட்டவனை பத்தி”

“என்ன நிறை எதுக்கு இவ்வளவு கோபம். வயித்துல குழந்தை இருக்குன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றான் பொறுமையாக,

“என்கிட்ட கேக்காம எவ்வளவு பெரிய முடிவு எடுத்து இருக்கீங்க. அவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது?” என்றதும், அவளிடம் விவரம் கேட்டு, நிறையின் பெற்றோர்கள் அவனிடம் கேட்டுக் கொண்டதை சொல்ல, ஒரு பெருமூச்சு விட்டாள் நிறை.

 அவர்கள் தாத்தா பாட்டி வழிவந்தது. தற்போது வளரின் வாழ்க்கைக்கு வேறு என்ன செய்ய முடியும். தோட்டம் தான் ஒரு காலத்தில், தற்போது தரிசாக கிடக்கு. உடல் உழைப்பை போட்டு தந்தை வேலை செய்ய மாட்டார்.

“தண்ணி இல்லாம கிடக்கு. நம்ம ஊரு பக்கம் விவசாயம் பண்ணத்தான் தோட்டம் வாங்குவாங்க. இதை யார் வாங்குவா?” அவளும் நிதானதுக்கு வந்தாள்.

“வேற யாரு? நாம தான்” என்றான்.

“என்ன?” என்று அதிர்ந்து போனவள். தான் சரியாகத்தான் கேட்டோமா என்று நினைத்தாள்.

“என்ன சொல்றீங்க?”

“நிஜம்தான். அதோட மதிப்பு பதினைந்து லட்சம் வரும். அதான் நாம ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டா, தோட்டத்தை நாமலே வாங்கிக் கொள்ளலாம்” என்றான்.

 “இதுக்கு அந்த கடனுக்கே கூட பொறுப்பேற்றுக் கொள்ளலாம் போலயே? இவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது? இதெல்லாம் வேணாம். நமக்கு இப்ப என்ன குறை. கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையே போதும்” நிறைக்கு மனம் ஒரு நொடி அதிர்ந்து போனது. திரும்பவும் கடன் கஷ்டம் என்று ஒரு வாழ்க்கையா?…

“நிறை நான் நல்லா யோசிச்சுட்டேன். முன்னாடி நான் பார்த்த வேலைக்கு தான் அவ்வளவு பணம் என்னால புரட்ட முடியாது. ஆனா நான் மேனேஜர் இல்லையா? எனக்கு அவ்வளவு பணம் லோன் தருவாங்க. இப்போ ஒரு அஞ்சு ஆறு மாசம் நான் வாங்குற சம்பளமும் சேவிங்க்ல தான் இருக்கு. முன்னாடி நாம என்ன வருமானத்துல வாழ்ந்தோமோ அதைவிட கொஞ்சம் அதிகமாகவே கையில நிற்கும் லோன் போக… எனக்கு இப்ப வருமானம் நாற்பத்தி ஐந்துக்கு மேல வருது நிறை”

“நீங்க என்ன சொன்னாலும் சரிங்க எனக்கு கடன் வாங்குறதுல உடன்பாடு இல்லை” என்றாள். முன்பு அவள் தந்தை வாங்கிய கடன் தானே அவள் வாழ்க்கையே திசை திருப்பியது.

“இங்க பாரு நம்மளால சமாளிக்க முடியாததுன்னு கிடையாது. நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கேன். என்னோட வேலையும் லோன் பார்க்கிறது தானா? எனக்குத் நல்லா தெரிந்த வேலை. அதனாலதான் தைரியமா இறங்கிட்டேன். இப்படியே ஏதாவது ரிஸ்க் எடுத்து நான் உங்களுக்குன்னு சேர்த்து வச்சாத்தான் நிறை. வருமானத்தை சேர்த்து வைக்கலாம் தான். பத்து வருஷம் நாம சேவ் பண்ணலாம், அப்ப இடத்தோட மதிப்பு கூடி போயிரும். அதோட உன்னோட பங்கு பணம் நமக்கு மிச்சம் ஆகும்” என்றான் மனைவியை புரிந்தவனாக…

அப்போது கொஞ்சம் நிறை சமாதானம் ஆனாள். அவளுக்கு கடன் என்றாலே பயம். அத்தோடு அவளுடைய பங்கு பணத்தை வாங்குவதில் அவளுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. தற்போது தங்கம் விற்கும் விலைக்கு நிறைக்கு கொடுக்கும் பணம் ஒரு பொருட்டே இல்லை.

“ரொம்ப யோசிக்காத நிறை, சரின்னு சொல்லு.. உன்னை மீறி செய்ய எனக்கு மனசு வராது. அப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் உன்னையும், குழந்தையும் சிக்கல்ல மாட்டி விடமாட்டேன்”

“ஐயோ! எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் கிடையாது. நீங்க இவ்வளவு தூரம் சொன்ன பின்னாடி எனக்கு என்ன? நீங்க சொல்றது தான்”

தற்போது அந்த இடம் தரிசு தான். பின்னாடி இவர்களுடைய வாரிசு வரும் பொழுது உபயோகமாக இருக்கும். நிறைக்கு வரும் பங்குப்பணத்தில் தான் கொஞ்சம் பணம் போட்டு மனைவிக்கு நகை எடுக்க திட்டம் போட்டு இருக்கிறான் பிரபா. அவளுக்கு என்று பெரிதாக எந்த நகைகளும் கிடையாது. இன்னும் ரெண்டு மாதத்தில் வளைகாப்பு வைக்க வேண்டும். தன் மனைவி வெறும் கழுத்தோடு இருப்பதா?

நிறை வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. எல்லாம் பிரபாவே பார்த்துக் கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டாள். மேலும் ஒரு மாதம் ஆகி இருந்தது. பிரபாவும் பணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதன் பின் தான் தன் வீட்டில் விஷயத்தை சொன்னான். வேலை அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு கூட வரவில்லை. ஃபோனில் தான் எல்லோரோடும் பேச்சு.

யாராலும் நம்ப முடியவில்லை. பிரபாவ தானாக ஒரு முடிவு எடுத்தது. இவ்வளவு பணம் லோன் போடும் அளவுக்கு அவன் வருமானம் இருக்கு… எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பிரபா தந்தையிடம் என்ன சொல்கிறார் என்று கேட்க.

மகன் முன்பே முடிவெடுத்து விட்டான் என்று தெரிந்தாலும் அவருக்கு பெரிதாக ஆட்சேபனைகள் இல்லை. நிறையின் பிறந்த வீட்டு சொத்து… அத்தோடு தோட்டமாக வாங்கி போட்டால் இடம் நிறைய கிடைக்கும். மகனின் முடிவு அவருக்கு திருப்தியே…

அதன் பின் பிரபாவே நிறை பெற்றோர்களுக்கு பேசி என்று எல்லாவற்றையும் முடிவு செய்தான். அவர்களுக்கும் நிம்மதியே… அவர்களின் பெரிய வீட்டு சொத்து யாரோ ஒருவருக்கு என்றில்லாமல் தன் மகளுக்கு தானே. அவர்களுக்கும் முழு சம்மதம். பிரபா மனைவியின் பெயரில் வாங்கத்தான் திட்டமிட்டு இருந்தான்.

“ஐயோ! என் பெயரெல்லாம் வேண்டாம். நீங்க தான் இத்தனை வருஷம் லோன் கட்டணும்.. உங்க பேர்லயே வாங்குங்க” என்று நிறையும் வற்புறுத்த,

கல்யாணி கூட, “நம்ம பக்கம் பொம்பள பிள்ளை பேர்ல சொத்து வாங்க மாட்டோமே மகனே?” என்றார்.

“இது அவ குடும்ப சொத்தும்மா, அவ பேருல இருக்கட்டும்”

“என்ன குடும்ப சொத்து. ஓசியாவா கொடுக்குறாங்க.. லோன் நீதான கட்டணம் மகனே”

 “வீட்ல சமையல் செஞ்சா கூட நிறை என்னை யோசிச்சு, நான் என்ன சாப்பிடுவேன்னு பார்த்து தான் சமையல் கூட செய்வா… ஒரு சாப்பாடு விஷயத்துல கூட புருசன்னு அவ எனக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அவளுக்கு கொடுக்கணும் தானே.. நான் சம்பாதிக்கிற பணம் என் குடும்பத்துக்காக, எனக்காக கிடையாதும்மா. நான் என் குடும்பம்னு சொல்றது என் பொண்டாட்டி பிள்ளைகளை” என்றதும் கல்யானியும் அமைதியாகி விட்டார்.

அந்தக் காலத்து மனுஷன் வீரணனும் சரி, தற்போது சிவா, ராகவன் என்று எல்லோரும் சொத்து வாங்கும் போது அவரவர் பெயரிலே வாங்கிக் கொண்டார்கள். யாரும் வீட்டு பொம்பளைகள் பெயரில் சொத்து வாங்க யோசித்தது கூட இல்லை. இவ்வளவுக்கும் தைரியமாக அவர்கள் நகை எடுத்து அடகு வைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனிப்பட்டு சொத்தெல்லாம் கிடையாது. கல்யாணிக்கு கூட மகனை நினைத்து பெருமையே…

அதை வெளியில் சொல்லி சொல்லி மாய்ந்து போனார். என் மகனை பார், என் வளர்ப்பைப் பார் என்று…

ரோகினியாலும் நம்ப முடியவில்லை. ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்தா இவ்வளவு லோன் போட முடியும். ஆச்சர்யமாக இருந்தது.

“அதிர்ஷ்டம் தான். நல்ல நேரம் வந்திருக்கு, கடவுள் தூக்கிக் கொடுக்கிறார்”

அதையே தான் நிறையும் கணவனிடம் சொன்னாள்.

“என்னவோ நல்ல நேரம். நம்ம அதிர்ஷ்டம் எல்லாம் நல்லதா நடக்குது. ஆனால் ஒரு பயம் திடீர்னு ஒரு நல்லது நடக்குதே, தொடர்ந்து எதுவும் கஷ்டம் வந்துடுமோன்னு…” என்றதும்,

“என்ன பேசுற நிறை. வெளி ஆட்கள் சொல்ற மாதிரி நீயும் பேசாத. ஏன் ஒரு நல்லது நடந்த ஒரு கஷ்டம் வருமா? பட்ட கஷ்டத்துக்கு ஒரு நல்லது நடக்க கூடாதா?” என்றான் ஆதங்கமாக,

“என்னங்க”

“வெறும் ஆறாயிரம் சம்பளத்துக்கு ஊர் ஊரா அலையறதுக்கு தான் உன் புருஷன் அங்க வேலைக்கே சேர்ந்தான். இன்னைக்கு மேனேஜரா இருக்கேன்னா அது அதிர்ஷ்டம் கிடையாது உன் புருஷனோட உழைப்பு. ஊர் ஊரா வீடு வீடா லோனுக்கு பேசி மக்களை சரிகட்டி இந்த பேங்க்க உயர்த்த நானும் பாடுபட்டு இருக்கேன். அதனால தான் என்னை நம்பி இவ்வளவு பணம் லோன் தராங்க. வாங்குற சம்பளம் போக்குவரத்து செலவுக்கே கூட சரியா போகும். பத்து வருஷம் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு நான் வந்து இருக்கேன். நிறை, நாம வாங்குறது கடன் தான். ஆனா, இந்த கடன் வாங்க கூட ஒரு தகுதி வேணும். அந்த தகுதியை நான் வளர்த்துக்கிட்டேன்”

நிறை கண்கள் கலங்கியது.

“இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச உழைப்பை எனக்காக தூக்கி தரீங்களா?”

“யாரோ ஒருத்தவங்களுக்கு தரல. என் பொண்டாட்டிக்கு தானே. என்ன நம்பி நீ உன் வாழ்க்கையை தரல. எதையும் யோசிக்காத, எல்லாத்தையும் நான் பாத்துப்பேன். கர்ப்ப காலத்துல நிம்மதியா இரு”

“நிம்மதியா தான் இருக்கேன். உண்மையா இப்போல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை. எப்ப பாத்தாலும் நல்லா தூங்கி தூங்கி எழுந்திருக்கிறேன்”

பிரபா வீட்டிற்கு வரவில்லை. எல்லாவற்றையும் அவன் அண்ணன்கள் மூலமாக போனில் பேசிக் கொண்டான். வேற யார் மூலமாகவும் செய்திருக்க முடியும். தனக்கு மூத்த இரண்டு அண்ணன்கள் இருக்க அவர்களை ஒதுக்கிவிட்டு செய்ய விருப்பமில்லை. தன் தம்பி தங்களை மதிக்க வில்லையோ என்ற எண்ணம் வந்து விடக்கூடாது. முடிந்த அளவுக்கு உறவுகளை கட்டினான்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!