Skip to content
Post Views: 3,918
உங்களுக்கெல்லாம் தெரியட்டுமேன்னு தான் நம்ம ஹோட்டலில் தங்கினேன்…. அலட்டிக் கொள்ளாமல் கூறியவனை கொன்றுவிடும் வெறி வெங்கட கிருஷ்ணாவிற்கு.
வெட்கமா இல்ல இப்படி பேச… ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து ரூம் போட்டு தங்கி இருக்க… மீசையை முறுக்கிக் கொண்டு கர்ஜித்தார்.
நான் ஏன் வெட்கப்படணும்? அந்த பொண்ணோட கூடி குலாவனும்னா நம்ம ஹோட்டலுக்கு ஏன் போகப்போறேன்? அவன் பதில் அக்கினி துண்டமாய் இருந்தது.
பாபு…. விஜயதாரணி மகனிடம் பார்வையால் கெஞ்ச….
Advertisement
ம்ம்மா என்று இவன் பிடரி உலுக்கி கர்ஜிக்க….. அம்மாவா… அவரை பார்த்த பவித்ரா பேச்சிழந்து போனாள். அவர் தோற்றம் அப்படி இருந்தது.
சின்னானா உள்ளே போய் பேசலாம்… ராம் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அண்ணனுக்காக….
பவித்ராவை அதிசயம் போல் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கர்ப்பம் தாங்கிய சர்வதனி. ராம்சரணின் மனைவி.
Advertisement
ராம் இதை என்னால அனுமதிக்க முடியாது… இந்த பொண்ணு குலம் என்ன கோத்திரம் என்ன அந்தஸ்து என்ன எதுவும் தெரியாம இவன் இழுத்துட்டு வந்துட்டா நாம ஏத்துக்கணுமா? அவர் கண்கள் சிவப்பேறியது.
Advertisement
அவர்கள் தெலுங்கில் பேசிக் கொள்வது புரியதான் செய்தது பவித்ராவிற்கு.
அவ குலம் கோத்திரம் என்னவா இருந்தா நமக்கு என்ன? பொண்ணு லட்சணமா இருக்கா, படிச்சிருக்கா, அன்பா அக்கறையா இந்த கிருஷ்ணா குடும்பத்தை வழிநடத்துவா… நந்தமூரி வம்சத்து பெருமையை கட்டி காப்பாத்துவா…
பொறுமையாய் கவனமாய் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தான் பேசிக் கொண்டிருந்தான் ஹரி.
Advertisement
ச்சீ… வாயை மூடு! கையை ஓங்கி விட்டார் வெங்கட கிருஷ்ணா… நானா என்று தடுத்து பிடித்தான் தேவ் கிருஷ்ணா.
விடுடா அடிக்கட்டும்… எதிரில் போய் நெஞ்சம் நிமிர்த்தி நின்றான் ஹரி.
ஹரி நீ வேற ஏன்…. தலையில் அடித்துக் கொண்டான் ராம்.
பவித்ராவிற்கு அழுகை பீறிட்டு வந்தது. தன்னை கொண்டு சண்டை. ஹரியை அடிக்கும் அளவிற்கு கோபம் வருகிறதே இவர்களுக்கு.
நான் போயிடறேன் ப்ளீஸ் சண்டை போடாதீங்க. அவன் கரம் பற்றி இழுத்தாள். அவனை அடித்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு.
நீ ஏன்மா அழற… இதெல்லாம் பேஸ் பண்ணி தான் ஆகணும். தைரியமா இரு! இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிந்துடும். அவள் கரம் பற்றி ஆறுதல் மொழிந்தான்.
நானா என்ன ஏதுன்னு அந்த பொண்ணை பற்றி விசாரிப்போம்…. தேவ் தன் தந்தையிடம் நயமாக பேச….
செருப்பால அடிப்பேன்… நான் அவனுக்கு ராயலசீமால பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். கோடீஸ்வர குடும்பம். ஒருவகையில் நமக்கு சொந்தமும் கூட….
அப்படினா அந்த பொண்ணை தேவுக்கு பாருங்க… விட்டேற்றியாய் பேசியவனை கண்டு பொங்கி வந்தது கோபம் அவருக்கு.
ஹரி அந்த பொண்ணை கொண்டு போய் விட்டுட்டு வா! இறுதியாய் எச்சரித்தார்.
விட்டுட்டு வர கூட்டிட்டு வரல… துளி அச்சமில்லை அவன் கண்களில், செயலில், பேச்சில்.
ச்சீ நீ இந்த குடும்பத்து வாரிசா…? உள்ளம் எரிமலையாய் வெடித்தது அவருக்கு.
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்கறீங்க ?
லவ் பண்றது குற்றமா?
என்ன பேசறான் பாரு . இந்த நந்தமூரி வம்சத்த கலங்க படுத்தணும்னே இப்படி பண்றான்.
தயவுசெய்து கொஞ்சம் பொறுமையா இருங்க மைத்துனனிடம் கை கூப்பினார் தாரணி.
ம்ம்மா… கொதித்து விட்டான் ஹரி. தன் கண்முன்னே தன் தாய் இன்னொருவரிடம் கை தொழுது நிற்பதா?
ஹரி நான் தான் சொன்னேனே இங்கே வர வேண்டாம்னு…. கண்ணீருடன் மகனை முறைத்தார்.
ம்ம்மா நான் ஏன் ஓடி ஒளியணும்? என்னைக்கா இருந்தாலும் இந்த பிரச்னையை பேஸ் பண்ணி தான் ஆகணும்.
எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நீங்க தானே ஆசைபட்டிங்க?
எனக்கு பிடிச்சவளை கையோட கூட்டிட்டு வந்துட்டேன்.
வாயை மூடு ஹரி… தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன்… அவர் தன் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு மிரட்டினார்.
சின்னானா எதுக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உங்க குலப் பெருமையை தூக்கி பிடித்து வாழப் போறீங்க?
இறைஞ்சுதலாய் தான் பேசினான். என்னை புரிந்து கொள்ளுங்கள் என்ற மன்றாடல் மட்டுமே அவன் பேச்சின் சாராம்சம்.
ஸார் பெரிய படிப்பு படித்து அமெரிக்கா போய் வேலை பார்த்தவரில்ல அது தான் இவ்வளவு சாதி மத நல்லிணக்கம்.
அமெரிக்க முறையில ஒரே வீட்டுல ஒன்னா தான் இருந்தீங்களோ… அது தான் லிவ்வின்னாமே… அப்புறம் எதுக்கு கல்யாணம்?
பவித்ராவை புழுவைப்போல பார்த்து நின்றார் வெங்கட கிருஷ்ணா.
சின்னானா… மிதமிஞ்சிய கோபத்தில் அவர் சட்டையை பற்றிவிட்டான்.
ஹரி… ஆவேசமாய் குறுக்கே புகுந்த சுப்ப கிருஷ்ணா மகனை தள்ளிவிட்டார்.
என்ன ஹரி பழக்கம் இது…? உச்ச ஸ்தாயியில் கத்தினார்.
உனக்கும் எனக்கும் என்ன கிடக்கு என்பது போல் அவர் முகம் பார்க்க விரும்பாது திரும்பி கொண்டான்.
சுப்ப கிருஷ்ணா மகன் முன்னே கூனி குறுகி நின்றார்.
சின்னானா நான் உங்க அண்ணன் மாதிரின்னு நினைச்சீங்களா? நான் கிருஷ்ணா இல்ல ஸ்ரீராமன். அவன் விழியில் ரௌத்திரம் கூடியது.
அவரை எதுக்குடா நடுவில் கொண்டு வர…? பல்லை கடித்தார் வெங்கட கிருஷ்ணா.
கொண்டு வராம? என் ஒழுக்கத்தை பேசின நீங்க உங்க அண்ணையா ஒழுக்கத்துக்கு என்ன பதில் சொல்வீங்க?
ஹரி…. ராம்சரண் அதட்டினான். இன்னொரு பெண்ணின் முன்னிலையில் தன் குடும்ப மானம் கப்பலேறுவதை அவன் மனம் ஏற்கவில்லை.
லிவ்வின் என்று பேசும் போதே புரிந்து விட்டது பவித்ராவிற்கு. எவ்வளவு பெரிய அருவெறுப்பான வார்த்தையை கேட்டு விட்டாள். இதெல்லாம் யோசித்து தானே அவனை விலகி இருந்தாள்.
அவமானம் ஆத்திரம் அழுகை எல்லாம் சேர்ந்து அவளை அணு அணுவாய் சிதைத்தது.
கண்ணீருடன் அவ்விடம் விட்டு ஓட முயன்றவளை கரம் பற்றி இழுத்தான் ஹரி.
என்னை விடுங்க…. திமிறினாள்.
நான் இருக்கேன்…. கோபமாய் அவளை முறைத்தான்.
நீங்க இருங்க… எனக்கு வேண்டாம்… துடைக்க துடைக்க பெருக்கெடுத்தது கண்ணீர் அருவி.
போகலாம்… ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம். அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசிட்டு வரேன்… அவள் கரத்தை விடாது பற்றிக் கொண்டான்.
அம்மா நீங்க என்ன சொல்றீங்க? தாயை பார்த்தான்.
அவர் பயத்துடன் குடும்பத்தார் அனைவரையும் பார்த்தார்.
அம்மா…. எனக்கு உங்க முடிவு முக்கியம். நீங்க என்ன சொல்றீங்க?அழுத்தமாய் அவரை பார்த்தான்.
அவங்களை ஏன்டா விரட்டுற…? அந்த பொண்ணு நமக்கு வேண்டாம்… வெங்கட கிருஷ்ணன் பதில் கூறினார்.
நான் எங்கம்மாட்ட பேசிட்டு இருக்கேன்.
அவங்க உங்க அம்மா ஆக முன்னே என்னோட வதின.
இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை? சலித்து விட்டது அவனுக்கு.
இந்த பொண்ணு பணத்துக்காக உன்னோட வந்திருப்பா… பேசி சரிக்கட்டி அனுப்பிடுவோம் என்றார்.
சின்னானா… அவனுக்கு ஆத்திரம் கணன்றது.
தம்பி சொல்றதுல என்ன தப்பு… பிடிச்சிருக்குன்னு பழகுறது வேற கல்யாணம் கட்டிக்கிட்டு வாழறது வேற….சுப்ப கிருஷ்ணா உணர்ச்சி மிகுதியில் பேசிவிட…
யோவ் அறிவோட தான் பேசறியா நீ…? உன் லிஸ்டில் என்னை சேர்க்க வேண்டாம் மிஸ்டர் சுப்ப கிருஷ்ணா.
பழகுறதும் படுக்குறதும் ஒருத்தி கூட மட்டும் தான்…. அவன் சொல்லி முடிக்கவில்லை
ஹரி… பெருங்குரலெடுத்து அதட்டிய தாரணி பளாரென்று அறைந்திருந்தார்.
ம்ம்ம்மா என்று வேதனையுடன் அவன் கன்னம் பற்றி நிற்க…
இப்போ ஏன் அவனை அடித்த நீ… அவன் என்ன தவறா சொல்லிட்டான். இவ்வளவு நேரம் உள் வராண்டாவில் நின்றிருந்த ஷியாமளா வெளியில் வந்தார்.
வெங்கட கிருஷ்ணாவின் மனைவி தேவ் சரணின் அன்னை.
ஷியாமளா நீ இதில் தலையிடாதே…. முடிந்தால் அந்த பெண்ணை அனுப்பி வை! மனைவியிடம் காய்ந்தார் வெங்கட கிருஷ்ணா.
இப்போ ஹரி என்ன தவறு பண்ணிட்டான்? உங்க அண்ணன் பண்ணின தவறோடையா இவன் பண்ணிட்டான். கிடைத்த வாய்ப்பை நழுவ விட அவர் தயாராக இல்லை.
பின்னி இந்நேரத்துல ஏன் எதையோ பேசறீங்க…? ராம் முகம் சுழித்தான்.
குல பெருமை பேசவேண்டிய அவசியம் இவங்களுக்கு இல்லைன்னு சொல்றேன்… ஷியாமளா அடங்குவதாய் இல்லை.
ஹரிசரணுக்குமே பின்னியின் பேச்சு செல்லும் திசை உவப்பாய் இல்லை.
நீங்க வேண்டாம் இந்த ஊர் வேண்டாம் என்று மூனு வருஷமா இருந்த மாதிரியே இனியும் இருந்துட என்னால முடியும். உங்களை ஒரேடியா தலை மூழ்கிட முடியாம தான் உங்க சம்மதம் கேட்டு வந்தேன்…. வலியுடன் எல்லோரையும் பார்த்தான்.
கோடி கோடியா பரம்பரை சொத்து இருக்கும் போது அவ்வளவு லேசில் விட்டுட்டு போயிடுவியா நீ…? எகத்தாளமாய் கேட்டார் ஷியாமளா.
எங்கண்ணன் ஏன் போகணும்? ராம்சரண் பொங்கி விட்டான்.
அவ்வளவு சப்போர்ட் பண்ற குடும்பம் உள்ளே கூப்பிட்டு ஆரத்தி எடுக்க வேண்டியது தானே…? பண்ணை ஆளுங்க இவ்வளவு பேரு வேடிக்கை பார்க்கிற அளவுக்கு ஏன் தரம் தாழ்த்திக்கணும்… அது சரி தரம் தாழ்த்திக்கிறது உங்களுக்கு புதுசா என்ன…? அப்பா புத்தி பிள்ளைக்கு….
ஷியாமளா…. ஓங்கி அறைந்திருந்தார் வெங்கட கிருஷ்ணா.
என்னை ஏன் அடிக்கிறீங்க? உண்மையை தானே சொன்னேன்… அண்ணனை சொன்னதும் பொத்துகிட்டு வருதோ…. எவ்வளவு அடித்தாலும் திரும்ப சொல்வேன் அப்பா புத்தி பிள்ளைக்கு.
பின்னி வாயை மூடுங்க! விரல் நீட்டி எசரித்தான் ஹரி.
உங்களுக்கு ஆசை வந்துட்டா குலம் கோத்திரம் கண்ணுக்கு தெரியாதே… அவர் வெறிபிடித்து பேசிக் கொண்டே போக… சுளீரென்று அரைந்திருந்தார் தாரணி.
ஏய்… நீ…. என்னை அடிச்சுட்டியா? உன் நிலைமை இப்படி இருந்தும் உன் திமிரு குறையல பாரு… தாரணியின் முடியை பற்றி ஷியாமளா கீழே தள்ளியிருக்க…
அம்மா என்று ஹரி ஓட… நானா என்று மயங்கி சரிந்த தந்தையை தாங்கி பிடிக்க ஓடினான் ராம்.
இப்போ உனக்கு திருப்தியாம்மா… கேவலமாய் பார்த்த தேவ் ஓடி போய் பெதநானாவை தாங்கினான்.
நீ திருந்தவே மாட்டியாடி…. உயிர் குடித்தால் தான் உன் வெறி அடங்குமா…? மனைவியின் மீது கொலைவெறி உண்டாகி இருந்தாலும் அண்ணனை பார்ப்பதே இப்போது முக்கியம் என்று உயிர் துடித்து ஓடியவர்… தேவ் காரை எடு என்று மகனை விரட்டினார்.
ராம்சரணும், தேவ்சரணும் ஆளுக்கொரு புறமாய் அணைத்து தூக்கி காரில் கிடத்தினர்.
கார் அசுர வேகத்தில் கரீம்நகர் நோக்கி பறந்தது.
ஹரி சிலையாய் நின்றான். தந்தையின் உடல்நிலை அவன் கருத்தில் பதியவில்லை. தாயின் வேதனை தான் அவன் உயிரை உலுக்கியது.
சர்வதனி மாமியாரை எழுப்பி தூக்கிவிட முயன்றாள்.
தாரணி மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்
என் பேச்சை நீ கேட்கவில்லையே என்பதாய் இருந்தது அந்த பார்வை.
ஹரியை உள்ளே அழைப்பதா வேண்டாமா என்று சர்வதனி குழம்பி நின்றாள்.
ம்ம்மா என்னை இப்படி பார்க்காதீங்க…! இதுவரை இருந்தமாதிரியே கண்காணாம இருந்துடறேன்… பவித்ராவின் கரம் பற்றிக் கொண்டு நடக்க தொடங்கினான்.
நீயும் ஏன் என்னை வதைக்கிற ஹரி …? நான் பிழைத்திருக்க கூடாது அப்போவே போய் சேர்ந்திருக்கணும்… உடைந்து அழத் தொடங்கினார் தாரணி
ம்ம்ம்மா ஏன் இப்படி பேசறீங்க? எனக்கு காதல் வந்திருக்கக் கூடாது. இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் இப்போ ஒரு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்க கூடாது.
பிள்ளை விருப்பம் புரிந்து அவனுக்கு சந்தோஷமா ஒரு வாழ்க்கை அமைத்து கொடுப்போம்னு உங்களுக்கு தோணலை பாருங்க….!
ம்ம்மா எனக்கு பரம்பரை சொத்து,உங்க கௌரவம் எதுவும் வேண்டாம். என் கையில் படிப்பு இருக்கு மனசுல நம்பிக்கை இருக்கு. நான் மனசுக்கு பிடித்தவளை கல்யாணம் பண்ணிட்டு கண்காணாம எங்காவது இருந்துடறேன். கண்ணீர் மல்க தாயிடம் மண்டியிட்டான்.
ஹரி உன் காதல் தவறில்லை… நான் தான் கரீம்நகர் வீட்டில் இருங்கன்னு சொன்னேனே…
எப்படி இருந்தாலும் ஒப்புக்க மாட்டாங்கம்மா….
உங்களுக்கு தெரியாதா..? இவங்களுக்கு வறட்டு கௌரவமும் பிடிவாதமும் அதிகம்.
ஒன்னு மட்டும் சொல்றேன்.ஒரு வாழ்க்கை தான் அதில் என் மனைவி இவ தான்.
என்னால இந்த வீட்டில் சண்டை வேண்டாம். நீங்க எப்போதும் போல ஒற்றுமையா இருங்க…
பவித்ராவின் கரம் பற்றி அவன் இரண்டடி எடுத்து வைக்க….
எனக்கு கொள்ளி வச்சுட்டு போயிடு பாபு…. கேவினார் தாரணி.
error: Content is protected !!