Skip to content
Post Views: 12,722
நீங்காத உறவே!…
அத்தியாயம் 23
பிரபா நேராக பத்திர பதிவு அலுவலகத்துக்கு தான் வந்தான். அதற்கு முன்பே நிறையோடு, அவன் வீட்டு ஆட்கள் காத்திருந்தார்கள். நிறை பாட்டில் கிரீன் கலர் புடவை அணிந்து விசேஷமாக கிளம்பி இருந்தாள். ஏனெனில், பிரபா உடன் வேலை பார்க்கும் ஆட்களும் வருகிறார்கள் என்று சொன்னதால், அவனுக்கு தோதாக கிளம்பி வந்திருந்தாள். முன்பென்றால் உடல் ஊதி, வயிறு உப்பி நிக்க, அவளுக்கு கைவசம் சிக்கும் உடை தான்.
நன்றாக பெரிய சிமிக்கி, தாலி கொடி, கல்யாண வளையல் என்று பார்க்க அம்சமாக இருந்தாள். அவள் எதிர்பார்த்து நிற்கும் போதே, தன் ஆட்களோடு காரில் வந்து விட்டான் பிரபா. பார்த்து ஒன்றை மாதத்திற்கு மேல் இருக்கும். முந்தைக்கு இப்போது நிறைய தாடி, மீசை வைத்திருந்தான். அது பிரபாவுக்கு அவன் உடல் உருவத்தை தாண்டி ஒரு பெரிய மனிதத் தோரணையை, ஒரு கம்பீரத்தை கொடுத்தது. அவனும் அதே பாட்டில் கிரீன் சட்டையும், ஸ்பீச் கலர் பேண்டும் போட்டு இருந்தான். அவனுக்கு பொருத்தமாக இருந்தது.
Advertisement
எல்லோரும் அவனுக்கு காத்திருந்ததால் அவன் வந்ததும் பார்வை எல்லாம் அவன் மீது இருக்க சிறு சங்கடம் அவனுக்கு… எல்லோரையும் பார்த்தாலும், நேராக மனைவி அருகில் தான் வந்து நின்றான். நிறை முகமே மாறி இருந்தது. பார்க்க பார்க்க அவனை கவர்ந்தாள்.
“எப்படி இருக்க?” என்றான். பேச்சே வரவில்லை அவளுக்கு… இன்று தான் முதல் முதலில் ஒரு ஆபீஸராக கணவனை காண்கிறாள். தன் கணவனே என்றாலும் ஒரு பெரிய மனிதனாக தோன்றியது. அவள் அமைதியாகி விட்டாள்.
மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவன்.. அவள் எதுவும் சொல்லாமல் இருக்க,
Advertisement
“அப்பா ஆரம்பிக்கலாமா?” என்றான்.
Advertisement
“சரிடா, என்னன்னு பாரு. பெரியவனே நீ முன்ன போ…” என்றார் தந்தை.
“அவங்க சொத்து வாங்குறதுக்கு நீங்க எதுக்கு தாவிக்கு போறீங்க” குத்தினாள் ரோகினி.
மனைவியை நிமிர்ந்து பார்த்தவன், “நாங்க எல்லாம் வெளியூர்ல வேலை பார்த்தோம். என் தம்பி இங்கே தான் வேலை பார்த்தான். அவனுக்கு தான் இங்க ஆள் பழக்கம் அதிகம். அப்படி இருந்தும் என்னை முன்னாடி நிக்க வைக்கிறானா… நான் இந்த வீட்டுக்கு மூத்தவன், எனக்கு தந்த மரியாதை. எங்க அப்பா தான் நிக்கணும். ஆனா, எங்க அப்பாவே வீட்டுக்கு மூத்த மகனா என்னை நிக்க வைக்கிறார்”
Advertisement
“என் தம்பி லோன் போட்டு அவன் மனைவி பேர்ல இடம் வாங்கறதுக்கு நாங்க எல்லாம் முன்னாடி நிற்கிறோம். அது எங்களோட ஒற்றுமை. எங்க வீட்டோட கடைசி பையன் மூத்த பசங்கள விட்டுக் கொடுக்காமல், அவன் அண்ணன்களை முன் வைத்து வாங்குறான். என்னத்தாவது வாய்க்கு வந்ததை பேசாதே. உன் யோசனை தான் பெரிய அறிவாளி நினைப்பா? நீ இங்க இருக்கணும்னு அவசியமே கிடையாது. உனக்கு விருப்பம் இல்லைன்னா கிளம்பு” என்றான் முகத்தில் அடித்தது போல…
வீட்டுக்கு மூத்தவன் பொதுச் செலவு என்று எதுவுமே அவனுக்கு கிடையாது. இந்த மாதிரி சின்ன சின்ன பொறுப்புகள் மட்டும் தான். அதில் கூட ரோகினி ஏதவாது சொல்லி வர இவன் கத்தி விட்டான்.
ரோகினி பட்டென்று வாயை மூடி கொண்டாள். சினேகா, நிறை இருக்க, தான் மட்டும் கிளம்பி விட்டால்.. தான் என்னவோ அவளை பார்த்து பொறாமைப்படுவது போல் ஆகாதா? அப்படி என்ன பெரிய சொத்து. நாங்கள் வாங்கி போட்டதை விடவா?.
கல்யாணிக்கு எல்லாம் நிறைவாக இருந்தது. கடைசி மகன் விவரம் தெரியாமல் தன் முந்தியை பிடித்துக் கொண்டு சுற்றுவனே என்று நினைத்திருக்க… இவ்வளவு பொறுப்பாக அவனைப் பார்த்ததில்லை. பிரபாவோடு வந்தவர்கள் எல்லாம் அவனிடம் மரியாதையாக பேச, தாயிக்கு அவ்வளவு பெருமை.
“உங்க மகன் என்னைக்கு குடும்பஸ்தனானாம்?” என்றார் கணவனிடம் கல்யாணி.
“நிறைக்கு புருசனானதுக்கப்புறம்” என்றார் வீரணன் முகம் கொள்ளா சிரிப்போடு…
பிரபா வந்து எல்லோரையும் அழைத்துச் சென்றான். நிறைப்பெயரிலே பத்திரம் முடிக்கப்பட்டது. தான செட்டில்மெண்ட், வாரிசு சொத்து என்று இல்லாமல் சொத்து கை மாறுவதாகவே பத்திரம் முடித்தான். வளர்க்கு சிறு சுணக்கம். இதுவரை பணத்தை மட்டுமே நினைத்து இருந்தவள் தன் பிறந்த வீட்டு சொத்து முழுதாக அக்காவிற்கு செல்கிறதே என்று ஒரு எண்ணம். வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விட்டு தாயிடம் மட்டும் சடவாக சொல்ல,
“உனக்கு போட்ட நகையை கணக்கு பண்ணு வளர். சொத்த பங்கு பிரிக்கனும்னா நகையும் பிரிக்கணும். தேவையா?” என்றதும் அவளும் அமைதியாகி விட்டாள்.
மதியம் எல்லோருக்கும் விருந்து வாங்கி கொடுத்தான். மனைவியை தன் அருகிலே வைத்துக் கொண்டான் பிரபா. அவளுக்கு கணவனை பார்த்த பிரமிப்பு இன்னும் போகவில்லை.
“என்ன அப்ப இருந்து என்னை புதுசா பாத்துட்டு இருக்க?” என்றான் கணவன்.
“தெரியல. உண்மையை சொல்லனும்னா ஆளே மாறிட்டீங்க. பார்க்கவே ஆசையா இருக்கு” என்றதும்,
“நிறை” என்றான். அவனுக்கு லேசாக வெட்கம் கூட வந்தது.
“நீங்க என்னை விட கொஞ்சம் கலர் வேற.. நான் உங்களை பெரிய ஆளாவே கற்பனை பண்ணவில்லையா. இன்னைக்கு உங்க பேச்சை கேட்கிற நாலு பேர பார்த்ததும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நல்லா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, பொருத்தமா இருக்கீங்க. பார்க்கவே கம்பீரமா, ஒரு மேனேஜர்னா இப்படித்தான் இருக்கணும் இல்ல”
“நிறை போதும் என்னை ரொம்ப வெட்கப்பட வைக்கிற.. நீ என் பொண்டாட்டி உன் கிட்ட நான் எப்படி வேணாலும் இருக்கலாம். நீ அடிச்சாலும், திட்டினாலும் கூட வாங்கிக்கலாம். நான் வேலை பாக்குற இடத்துல நமக்குன்னு மரியாதை இருக்கு இல்ல. அதுக்கு தகுந்த மாதிரி நடந்துப்பேன். நீ இப்படி எல்லாம் என்னை வித்தியாசமா பார்த்து வைக்காத”
“இல்லை, நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு உங்களை பிடிக்கும். அதாவது, நீங்கன்னா உங்களை மொத்தமாவே புடிக்கும். தனித்தனியா எதுவும் கிடையாது. இன்னைக்கு ரொம்ப ரசிக்கிறேன். திருஷ்டி தான் சுத்தனும்” மனதாரப் பாராட்டும் மனைவியை மன நிறைவாக பார்த்தான்.
“நான் உங்களை என்னை விட எட்டு மாசம் சின்ன பையனாவே பார்த்தேனா.. அதனால, இவருக்கு எதுவும் தெரியாது. நாம தான் சொல்லிக் கொடுக்கணும்.. இவரை விட நாம விவரமா இருக்கணும்.. அப்படி என்னமோ நெனச்சிருக்கேன். ஆனா, அதெல்லாம் தேவையே இல்லை. இவ்வளவு லட்சம் லோன் போடுற அளவுக்கு கெபாசிட்டியான ஆளு நான் கிடையாது. உங்களை வச்சு தான். உங்க பொண்டாட்டியா இருக்கிறனால தான் இந்த சொத்து கூட.. நீங்களும் சரியா முடிவெடுப்பீங்கன்னு நான் ஏன் யோசிக்காமல் போனேன்”
“ஏன்னா, வீட்டு அளவுல நீ எடுக்கிற எல்லா முடிவும் சரியா இருக்கும் நிறை. அத்தோட நான் லோன் போட்டதே நீ கூட இருக்கேன்றனால தான். உன்னுடைய சம்பாத்தியம் இல்லை. ஆனா, நம்மோட வீட்டை நீ தானே பாக்குற, கண்டிப்பா இதெல்லாம் சரி பண்ணிடுவே. எனக்கு தெரியும் என் பொண்டாட்டி கைல ஒரு ரூபா குடுத்தா பத்து ரூபாயா மாத்திடுவா” என்ற கணவனை, பெருமை பொங்க பார்த்தாள் மனைவி.
பிரபா வளர்க்கும், அவன் பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்தான். நிறைக்குரிய பணம் அவன் கையில்தான் இருந்தது. நிறை அதைப் பற்றி கேட்கவே இல்லை. மற்றவர்கள் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை.
கல்யாணிக்கு மகன் கொஞ்சம் விவரமாக பிழைத்துக் கொண்டால் நல்லது என்று தான் நினைத்தார். இல்லாமல் இந்த பணத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டாள்… நிறையின் பெற்றோரிடம் தனியாக சொல்லிவிட்டான்,
“அத்தை இதுல நிறைக்கு நகை வாங்கிடுவோம். வளைகாப்பு வீட்டில் அவள் கழுத்துல ரெண்டு நாகை இருக்கணும். அதுதான் உங்களுக்கு மரியாதை” என்றதும்,
“நீ என்ன சொல்றியோ அப்படியே செய்வோம் பிரபா” பெரிய மருமகன் பேச்சைக் கேட்டார்கள் நிறையின் பெற்றவர்கள்…
தற்போது கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது. ஏனெனில் சொந்த மருமகனிடமும் சம்பந்தம் பண்ணிய ஆட்களிடமும் வாங்கிய அவமானம் அப்படி..ஏதோ சொந்தமாக இருக்க போய் பிரபா ஒட்டி நிற்கிறான். அவனையும் தள்ளி நின்றால் கடைசி காலத்தில் எங்கு செல்வது.. ஆண் பிள்ளை இல்லை. மருமகன் போக்கிற்கு விட்டுக் கொடுத்தார்கள்.
மறுநாள் நிறையை கூட்டிக் கொண்டு போய் அவன் கையில் இருந்த பணத்தோடு, தான் சேவ் செய்து வைத்திருந்த பணத்தையும் போட்டு நிறைக்கு நகை எடுத்தான். முதலில் நிறை ஒத்துக் கொள்ளவே இல்லை.
“கையில் இருக்க பணத்தை போட்டு கடனை கழிங்க.. கொஞ்சம் நிம்மதியாவது இருக்கலாம். எனக்கு இப்ப நகை அவசியமில்லை”
“ஆனா, எனக்கு அவசியம் நிறை. நம்மளோட கல்யாணம் யாருக்கும் தெரியாம கோவில்ல வச்சு முடிஞ்சிருச்சு. வீட்ல வளைகாப்பு மண்டபத்தில் வைக்க போறாங்களாம்”
“என்ன?” என்றாள் அதிர்ந்து,
ஆம், முன்பே வீரணன் தம்பதிகளுக்கு அந்த யோசனை இருந்தது. மத்த ரெண்டு பசங்களுக்கும் சிறப்பாக செய்துவிட்டு பிரபாவை விட்டுக் கொடுத்தது போல் ஆகியாச்சு. வளைகாப்பு பெரிய அளவில் செய்து ஈடுகட்ட நினைத்தார்கள். பிரபாவுக்கு அதில் விருப்பமே. மனைவிக்கு நிறைவாக செய்ய நினைத்தான். எப்படியோ அவளை சரிகட்டி இருக்கும் பணத்திற்கு தக்க, குட்டி நெக்லஸ், உருண்டை உருண்டையாக டிசைன் செய்த நீளமான ஆரம், ரெண்டு வளையல் வாங்கி கொண்டான்.
பார்ப்பதற்கு பார்வையாக நன்றாக இருந்தது. நிறைக்கும் பிடித்தது. லோன் வாங்கி நகை வாங்கணுமா என்று யோசனை தானே தவிர, பெண்ணிற்கு எப்படி நகை விருப்பம் இல்லாமல் இருக்கும். திலகா ஒரு ஒரு பவுனில் இரண்டு செயின் மட்டும் எடுத்துக் கொண்டார். பேரப்பிள்ளைகளுக்கு நாளை போட்டு விட…
பிரபா சொல்லிவிட்டான், “அத்தை கையில் இருக்கிற பணத்தை எடுத்துட்டு என் பிரண்டோட பேங்குக்கு வாங்க. உங்க பேர்ல டெபாசிட் பண்ணிக்கோங்க. இன்னும் வயசு போகும், தொழில் செய்ய முடியாது. கடைசி காலத்துல யாரையும் எதிர்பார்க்காம நம்ம கைல நாலு காசு வேணும். உங்க கையில இருந்தா எப்படியும் செலவாகி போகும். என் கண்ட்ரோல்ல பேங்க்ல இருக்கட்டும்” பொறுப்பாக அறிவுரை சொல்ல,
மூத்த மருமகன் பெரிய மனிதனாக தெரிந்தான், “முன்ன மாதிரி உங்க மாமா இல்ல பிரபா. வாரத்துக்கு நாலு நாள் தான் அந்த பக்கம் எட்டி பாக்குறது. மத்தபடி வீட்டோட தான் கிடக்கு.. நீ என்ன சொல்றியோ அப்படியே செஞ்சுடுவோம்” என்று விட்டார் திலகா.
error: Content is protected !!