Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காமல் தானே நிழல் போல நானே

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 6

நிழல் 6:

 

இசைக்கு திருமணம் ஆகிவிட்டதையே நம்ப முடியாத அன்பிற்கு, அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான் என்பதை தான் இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. அவள் வேலைக்கு சேரும் போது, இதைப் பற்றி அவள் எதுவும் குறிப்பிடவில்லை. அவளைப் பார்த்தாலும் அப்படி தெரியவில்லை. அதைப் பற்றி தீர விசாரிக்காமல் இருந்த தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி, தனக்குத் தானே நொந்து கொண்டான் அன்பு செழியன்.

“என்னாச்சு அன்பு..? ஏன் ஒரு மாதிரி இருக்க..? தூக்கம் வரலையா..?” என்றார் காதம்பரி.



Advertisement

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. சும்மாதான்..” என்றவன் மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அங்கு இசையோ, எடுத்து வைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து கொண்டிருந்தாள். உதவிக்கு யாரையும் வைத்துக் கொள்ளாமல் அவளே அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள்.

இசை வேலை செய்து கொண்டிருக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அகரன். கன்னத்தில் கைவைத்தபடி அவன் அமர்ந்திருந்த விதம், பெரிய மனிதத் தோரணையில் இருக்க, அவனைப் பார்த்தவள், மகனின் அழகில் மெய் மறந்தாள். செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவனின் அருகில் வந்தவள்,

Advertisement

“அகர் குட்டிக்கு என்ன வேணும்..? ஏன் அம்மாவையே பார்த்துட்டு இருக்கீங்க..?” என்றான் அவனைத் தூக்கி மடியில் வைத்தபடி.

Advertisement

அகரனுக்கு மூன்று வயது முடிந்து நான்கு வயது தொடங்கியிருந்தது. ஆனால், அந்த வயதிலேயே அவன் கொஞ்சம் பெரிய மனுஷனைப் போல் பேசுவான். மழலைப் பேச்சில் இருந்து அவன் தெளிவான பேச்சிற்கு மாறியிருந்தான். அவ்வப்போது சில பெரிய வார்த்தைகள் மட்டும் அவனுக்கு சொல்ல வராது. அவனைப் பார்ப்பவர்கள் அவனுக்கு ஐந்து வயதா என்பதைப் போல் கேட்டு வைப்பார்கள்.

“இதெல்லாம் எதுக்கு மம்மி..?” என்றான் கொஞ்சம் மழலை கலந்து.

“அதுவா… நாளைக்கு நாம வேற வீட்டுக்குப் போறோம். அதான் எல்லாமே எடுத்து வச்சிட்டு இருக்கேன் மம்மி..” என்றான் அவனை அணைத்தபடி.

Advertisement

“டாடிகிட்ட போறோமா..?” என்றான் பாவமாய்.

அவன் அப்படிக் கேட்டவுடன் இசைக்கு ஒரு மாதிரியாகிப் போனது. தன்னுடைய பிடிவாதத்தால் அவனுடைய சந்தோஷங்களை கெடுக்கிறோமோ..? என்று என்ன ஆரம்பித்தாள் இசை.

“இந்த டாடி..பேட் டாடி.. இல்லையா மம்மி..” என்றான், அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு.

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது அகரன். உங்க டாடி ரொம்ப நல்லவர்..! எனக்குத் தான் குடுப்பினை இல்லை..” என்றவளுக்கு கண்கள் கலங்கியது.

“நல்ல டாடி… ஆனா, என்னை பார்க்க வரல..” என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

“டாடி, சீக்கிரம் வருவாங்க. டாடிக்கு ரொம்ப வேலை போல. இனி டாடிய இப்படி பேசக் கூடாது சரியா..?”  என்றாள் இசை.

“சாரி மம்மி.. நீ அழுவாத.. அகர் சமத்து, இனி கேட்க மாட்டான்..” என்றான் பெரிய மனிதனைப் போல்.

“நீ சமத்து தான் தங்கம்…அம்மாதான் அப்படி இல்லை..” என்றவள். அவனை அணைத்து கொண்டு, அவன் அறியாமல் கண்ணீரைத் துடைத்தாள்.

இந்த தனிமை அவளை பலநாட்கள் கொல்லாமல் கொன்றிருக்கிறது. எத்தனையோ இரவுகள் அவள் கண்ணீருடன் உறங்கியிருக்கிறாள். நம்மில் பல பேரின் கண்ணீருக்கு சாட்சியே, இரவின் இருள் தானே. அதே தான் இசைக்கும். வாழ்க்கையில் இந்த இடத்தில் இப்படி ஒரு நிலையில் நிற்போம் என்று அவள் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. விதி வசத்தால் இப்போது தனிமையின் விருந்தாளியாக இருக்கிறாள் இசை. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட கதாப்பாத்திரம். அதில் அவள் முடிந்த அளவு சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தாள், அகரனுக்காக.

அவளின் அத்தனை காயங்களுக்கும் அருமருந்து அகரன் மட்டுமே. அவனின் முகத்தைப் பார்த்தாலே, அவளுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை சக்திகளும் வெளியே சென்று வேண்டும். வாழவேண்டும் என்ற உந்து சக்தியை அவளுக்கு அளித்துக் கொண்டிருந்தது அகரனும், அவனின் அன்பு மட்டுமே.

விடிவது முதல் இரவு வரை, அவனைப் பற்றி சிந்தித்து, அவனுக்காகவே ஒவ்வொன்றையும் செய்து, அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தாள் இசை.

இதில் ரோகிணியின் உதவியும் அடங்கும். அவள் மட்டும் இல்லையென்றால் இசை என்ன ஆகியிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.

பல சிந்தனைகளுடன் அகரனுக்கு பாலை காய்ச்சி, அவனுக்கு குடிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் பாலை வாங்கிக் குடிக்கும் போது அப்படியே அவளின் கணவன் நியாபகத்திற்கு வந்தான். அகரனின் ஒவ்வொரு அசைவும் அவனைப் போல் தான் இருந்தது. ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் அவன் இருக்கும் தூரம் தான் அதிகம்.

அவனின் நியாபகம் வரும் போதெல்லாம் செத்து செத்து பிழைத்தாள் இசை. உறங்கிடாத உள்ளங்களும், சொல்லப்படாத உணர்வுகளும் இங்கு நிறைய உண்டு. அதில் இசையும் அடக்கம்.

அகரன் அவளின் மடியிலேயே தூங்கிருக்க, அவனை கட்டிலில் படுக்க வைத்தவள், மீண்டும் வந்து பேக்கிங் வேலையைத் தொடங்கினாள். இல்லையென்று சொல்லாமல் அவள் வீட்டில் அனைத்தும் இருந்தது. அகரன் எதற்காகவும் ஏங்கி விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் இசை.

வீடு மாறிய பின்பு, அவனை அருகில் இருக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கான தேடலில் இறங்கினாள் இசை.

மறுநாள், அதிகாலையிலேயே அன்பின் வீட்டிற்கு சென்று விட்டாள். பொருட்கள் பின்னால் வண்டியில் வர, அதற்கு முன்பே அவள் அகரனுடன் அங்கு சென்று விட்டாள். அகரனை வைத்துக் கொண்டே வீட்டை சுத்தம் செய்தவள், கையோடு எடுத்துப் போயிருந்த சாமிப் படங்களை, அங்கு மாட்டி, பாலையும் காய்ச்சி விட்டாள்.

“என்ன இசை..? இவ்வளவு காலையிலையே பால் காய்ச்சிட்ட..?” என்றாள் ரோகிணி.

“நிறைய வேலை இருக்கு ரோகிணி..! இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ் போட்டிருக்கேன். எல்லாம் அரேஞ் பண்ண்ணனும்ல..அதான்..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தார் காதம்பரி.

“என்னமா இசை பால் காய்ச்சிட்ட போல..?” என்றார்.

“ஆமா ஆன்ட்டி..!” என்றவள் அவரிடமும் ஒரு பால் டம்ளரை கொடுத்தாள்.

“இது தான் உன் பையனாமா..?” என்றார் காதம்பரி, அகரனைப் பார்த்து.

“இவங்க தான் என் மம்மி..” என்றான் அகரன் பட்டென்று.

“நல்லா பேசுறானே..? தூக்கக் கலக்கத்துல இருக்கான் இசை..! நான் கூட்டிட்டு போகட்டுமா..?” என்றார் காதம்பரி.

“உங்களுக்கு எதுக்கு ஆன்ட்டி வீண் சிரமம்..? நான் பார்த்துக்கறேன்..” என்று இசை சொல்ல, அதற்கு மேல் அவர் வற்புறுத்தவில்லை. ஆனால் அகரன் அப்படியே அவரின் மனக்கண்ணில் ஒட்டிக் கொண்டான்.

அன்பு செழியன் அன்று கொஞ்சம் லேட்டாக எழுந்து வர,

“என்னம்மா..? காலையிலையே வண்டி சத்தம் கேட்குது..?” என்றான்.

“அந்த பொண்ணு காலையிலையே வந்துட்டா அன்பு. பால் கூட காய்ச்சிட்டா. பம்பரமா வேலை செய்றா, பரவாயில்லை. இப்போ பொருளை எல்லாம் ஏத்திட்டு வண்டி வந்திருக்கும் போல..” என்றார் காதம்பரி.

“அதுக்குள்ளவா..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், எதார்த்தமாய் வெளியே செல்பவனைப் போல் சென்றான்.

அன்றலர்ந்த பனிமலரைப் போல் இருந்தாள் இசை. தலைக்கு குளித்து, முடியை நுனியில் முடிச்சாய் முடிந்திருந்தாள். பொருட்களை ஏற்றி வந்த வண்டியில் இருந்து, இரண்டு பேர், அதை இறக்கிக் கொண்டிருந்தனர்.

“அவ புருஷன் பெரிய வேலையில் தான் இருப்பான் போல அன்பு. ரெண்டு பேர் மட்டும் தான்னு சொல்லவும் நான் கூட யோசிச்சேன். ஆனா, வந்து இறங்குற பொருளைப் பாரேன்… வீடு பிடிக்குமான்னு தெரியலை. இவ்வளவு இருக்கும் போது, இந்த பொண்ணு எதுக்கு வேலைக்கு வருது..?” என்று காதம்பரி அவர் போக்கில் பேசிக் கொண்டிருக்க, அன்பின் எண்ணங்களோ எங்கோ சென்றிருந்தது.

நேற்றுவரை அவளைப் பற்றி அவன் அதிகம் நினைத்ததில்லை. ஆனால், மனதின் ஒரு மூலையில் அவள் பதிந்திருந்தாள். அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்ததில் இருந்து, மனம் நிலையில்லாமல் தவித்தது. அடுத்தவனின் மனைவியைப் பற்றி இப்படி சிந்திப்பது தவறு என்று புத்திக்கு தெரிந்தாலும், மனம் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவள் பின்னே சென்ற மனதை அடக்குவதே அவனுக்கு பெரிய வேலையாய் இருந்தது. அவன் நின்றிருந்ததைப் பார்த்த இசை,

“குட்மார்னிங் சார்..!” என்றாள் லேசான புன்னகையுடன்.

“குட் மார்னிங் இசை..! இவ்வளவு சீக்கிரம் உங்களை எதிர்பார்க்கலை. நீங்களும் ஒரு வார்த்தை சொல்லலை. ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கேட்டிருக்கலாமே..?” என்றான் மனக்குறையுடன்.

“அதெல்லாம் வேண்டாம் சார்…! தேவைன்னா நானே கேட்டிருப்பேனே..? இதெல்லாம் எனக்கு பழக்கம் தான். நாளைக்கு கண்டிப்பா ஆபீஸ்க்கு வந்துடுவேன்..!” என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்க, அப்போது வெளியே வந்த சிலர் இதை வேடிக்கையாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அன்பு இப்படியெல்லாம் நின்று யாருடனும் பேச மாட்டான். அங்கு குடியிருந்தவர்களிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான். அவனுடைய இறுகிய முகத்தையே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். இப்பொழுது திடீரென்று கொஞ்சம் சிரித்த முகமாக, அதுவும் ஒரு பெண்ணுடன் நின்று பேசுவதைக் கண்ட அனைவருக்கும் வியப்பு.

சில ஆண்கள் இசையின் அழகு முகத்தை பார்த்தும் பார்க்காததைப் போல் பார்த்துக் கொண்டிருக்க, அன்பின் சிரித்த முகத்தை தவம் கிடைத்ததைப் போல் பார்த்துக் கொண்டிருந்தனர் இளம் பெண்கள். அங்கு குடியிருக்கும் வீடுகளில் கல்லூரி செல்லும் வயதில் சில பெண்கள் இருந்தனர். அதற்காகவே அன்பு அதிகம் வெளியே வர மாட்டான். அதற்கு அவனுக்கு நேரமும் இருந்ததில்லை.

இசை பேசிக் கொண்டிருக்கும் போதே, அனைத்துப் பொருட்களையும் இறக்கி வைத்திருந்தனர். அவர்களுக்கு கூலியை கணக்குப் பார்த்துக் கொடுத்தாள் இசை. அப்போது வெளியே வந்த அகரன்…

“மம்மி…பசி வந்திடுச்சு..! சோறு பசிக்குது..” என்றான்.

“செல்லத்துக்கு பசிக்குதுதா, இல்ல சோறுக்கு பசிக்குதா..?” என்றாள் இசை மென்னகையுடன்.

“எனக்கும், சோறுக்கும்..!” என்றான் அகரன் பாவமாய். அவன் பசி வந்துவிட்டால் அப்படித்தான் சொல்லுவான். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லத் தெரியாமல் சோறு பசிக்கிறது என்று சொல்லுவான்.

“மம்மி இன்னும் சமைக்கலை கண்ணா..! பால் மட்டும் தான் இருக்கு. ரோகிணி ஆன்ட்டி இப்போ டிபன் எடுத்துட்டு வருவாங்களாம்…மம்மி உங்களுக்கு ஊட்டி விடுவேனாம்..” என்றாள் இசை.

“நோ..! நான் பிக் பாய்..நானே சாப்புடுவேன்..!” என்றான்.

“அச்சோ…மம்மி மறந்து போயிட்டேனே நீங்க பிக் பாய்ன்னு..!” என்று இசை மறந்த மாதிரி நடிக்க,

“ஹய்யோ..ஹைய்யோ..” என்று அகரன் தன் பிஞ்சு விரல்களால் தலையில் அடித்துக் கொள்ள, அவனின் அந்த செய்கையில் மயங்கிப் போனான் அன்பு.

“இசை.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, குட்டி பையனை நான் கூட்டிட்டு போகவா.. அம்மா சாப்பிட வச்சுடுவாங்க.  நீங்க உங்க அரேஞ்மென்ட்ஸ் பாருங்க. உங்களுக்கும் டிபன் கொடுக்க சொல்றேன்..!” என்றான் அன்பு.

“உங்களுக்கு எதுக்கு சார் வீண் சிரமம்.. ரோகிணி எடுத்துட்டு வரேன்னு சொல்லியிருக்கா..” என்றாள் இசை.

“இதுல என்ன சிரமம்…? ஓகே.. நீங்க ரோகிணி எடுத்துட்டு வர டிபனை சாப்பிடுங்க. குட்டி பையன் என்கூட சாப்பிடட்டும்..!” என்றான் அன்பு.

“ஹெலோ.. நான் குட்டி பையன் இல்லே..” என்றான் அகரன் மழலை குரலில்.

“ஆமால்ல..! நீங்க பெரிய பையன் தான்…நான் தான் தப்பா சொல்லிட்டேன்..சாரி..” என்றான் அன்பு.

“பரவால்ல..” என்றான் பெரிய மனித தோரணையுடன்.

“பையன் ரொம்ப சமத்தா இருக்கானே..! செம்ம குயூட்..!” என்று இசையிடம் சொன்னவன்,

“போகலாமா…?” என்றான் அகரனைப் பார்த்து. அவன் உடனே இசையை நிமிர்ந்து பார்த்தான். அந்த பார்வையில் ‘போகவா’ என்று அவன் அனுமதி வேண்டி நிற்பது தெரிந்தது.

“அகர்..சமத்தா இருக்கணும்…!” என்று இசை சொல்ல, தலையை வேகமாய் ஆட்டிய அகரன், அன்பைப் பார்த்து..

“ஓகே..!” என்றான்.

“வாங்க..!” என்று அவனைத் தூக்கப் போனான் அன்பு செழியன்.

“நோ..நோ..நான் பிக் பாய்..நடந்து தான் வரணும். மம்மி சொல்லியிருக்காங்க..!” என்றவன் அன்புவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்றான். நடந்து செல்லும் அகரனையே பார்த்தபடி சில வினாடிகள் நின்றிருந்தாள் இசை. பிறகு காத்திருக்கும் வேலைகள் நினைவுக்கு வர, அதைப் பார்க்க சென்று விட்டாள்.

வீட்டிற்குள் நுழையும் போதே, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான் அகரன். புது இடத்திற்கு செல்லும் மிரட்சி அவன் கண்களில் தெரிந்து. ஏதோ இசையை விட்டு நிறைய தூரம் வந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டான் அகரன்.

“உங்க நேம் என்ன..?” என்றான் அன்பு.

“அகரன்..!” என்றான் மிரட்சியுடன்.

“பயமா இருக்கா அகர் குட்டி. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா..?” என்றான் அன்பு.

“தெரியலை..” என்பதைப் போல் உதட்டைப் பிதுக்கினான் அகர்.

“ஓகே..! என்ன சாப்பிடுறிங்க..?” என்றான் அன்பு.

“எனக்கு வேண்டாம். நான் மம்மிகிட்ட போறேன்..” என்று அவன் ஓட்டம் பிடிக்க தயாராய் இருக்க, அவனைப் பார்த்து சிரித்த அன்பு,

“பிக் பாய் எல்லாம் பயப்படமாட்டாங்க. சமத்தா சாப்பிடுவாங்க… அப்போ நீ பிக் பாய் இல்லையா..?” என்றான் அன்பு.

“நான் பிக் பாய் தான்.. சாப்பிடுறேன்..” என்றான் அகரன் போனால் போகட்டும் என்று.

“அம்மா..!” என்று காதம்பரியை அழைத்தவன்,

“இவனை சாப்பிட வைங்கம்மா..! நான் குளிச்சுட்டு வந்திடுறேன்..!” என்றான் அன்பு.

“நீ கூட்டிட்டு வந்துட்டியா அன்பு. நான் கேட்டேன், அந்த பொண்ணு மாட்டேன்னு சொல்லிடுச்சு..!” என்றவர்.. அவனைத் தூக்க,

“உங்கள எப்படி கூப்டனும்..” என்றான் கேள்வியாய், காதம்பறியைப் பார்த்து.

“பாட்டின்னு சொல்றா குட்டி..!” என்றான் காதம்பரி.

“பாத்தி..!” என்றான் வாய்க்கு வராமல்.

“என்ன அன்பு..? எல்லாம் கொஞ்சம் தெளிவா பேசுறான்.. ஆனா, பாட்டி மட்டும் வாய்ல வர மாட்டேங்குது இவனுக்கு..?” என்ற காதம்பரி சிரிக்க,

“சின்ன பையன்ம்மா.. பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெளிவாகும்..!” என்றவன் குளிக்க சென்று விட்டான். அறைக்கு சென்ற பிறகு, மனம் ஏதோ அழுத்தமானது அன்பிற்கு.

‘என்ன பண்ணிட்டு இருக்க அன்பு..? இப்படி யார் குழந்தையையாவது தூக்கிட்டு வந்திருக்கியா..? நீ இன்னைக்கு பண்றது எல்லாமே புதுசா இருக்கு. ஆனா, எதுவுமே சரியா படலை அன்பு..!’ என்றது மனசாட்சி.

“நான் தப்பா எதுவும் பண்ணலை. இது ஒரு சின்ன உதவி அவ்வளவு தான். இசை கல்யாணமான பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே, மனசுக்குள்ள இருந்த ஒரு சின்ன அபிப்ராயமும் இப்போ என்கிட்டே இல்லை..” என்றான் அன்பு, மனதிற்கு பதில் சொல்லுபவனாய்.

‘இப்படியே இருந்துட்டா நல்லது தான் அன்பு. இந்த மனசு எப்பவும் மாறக் கூடாது. இசைக்கு உன்மேல நிறைய மதிப்பு மரியாதை இருக்கு. உன்னோட மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்ததுன்னு தெரிஞ்சாலே அந்த பொண்ணு என்ன செய்யும்ன்னு தெரியாது.’ என்றது மனம்.

“அது எனக்கும் தெரியும். தேவையில்லாம எனக்குப் பாடம் எடுக்குறதை விட்டுட்டு, நீ முதல்ல அவளை நினைக்காம இரு..!” என்று பதிலுக்கு மனதை திட்டினான் அன்பு.

அவன் குளித்து முடித்து கீழே வருவதற்குள் அகரன் சாப்பிட்டு முடித்திருந்தான். புது இடம் என்பதால் அவன் சரியாக சாப்பிடவில்லை. அன்பு போன திசையை பார்த்துக் கொண்டே, ஏதோ சாப்பிட்டு முடித்தான். அகரன் எப்போதும் அனைவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் ரகம். எதற்கும் பிடிவாதம் கிடையாது. அநாவசியமாக அழ மாட்டான். இசைக்கு அவனால் எந்த வகையிலும் தொந்தரவு இருக்காது.

“அகரன் சார்..! சாப்பிட்டிங்களா..?” என்ற அன்பு, தன்னுடைய முழுக்கை சட்டையை மடித்து விட்டவாறு கீழே இறங்கி வந்தான். அவன் நடந்து வந்ததை இமைக்காமல் பார்த்தான் அகரன்.

“என்ன சார்..? அப்படி பார்க்குறிங்க..?” என்ற அன்பு சிரிக்க, அகரனுக்கு வெட்கமாக வந்தது.

“பாருங்கப்பா..! அகரனுக்கு வெட்கம் எல்லாம் வருது..!” என்று அவனைத் தூக்கி ஒரு சுற்று சுற்றியவன், அவன் கன்னத்தில் முத்தம் வைக்க..

“நான் சாரா… நீங்கதான் சார் மாறி இருக்கீங்க..?” என்றான் கிளுக்கி சிரித்தபடி.

“அகரன் சரியா சொல்லிட்டிங்களே..! எப்படி நான் நல்லா இருக்கேனா..?” என்றான் அவன் முகத்திற்கு நேராய் முகத்தை வைத்து.

பிறந்ததில் இருந்து தந்தை வாடையே அறியாத இளம் குருத்து அவன். அதிகம் ஆண்களின் கைகளில் தவழாத குழந்தை அவன். அன்பு இப்படி அவனுடன் சரிக்கு சரியாய் விளையாடுவது, பேசுவது அவனுக்கு புதிதாய் இருந்தது. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அகரன்.

“என்ன சார்..? என்னையவே பார்த்துட்டு இருக்கீங்க..?” என்ற அன்பு புருவத்தைத் தூக்கிக் கேட்க, அவன் தூக்கிய புருவத்தை, பிஞ்சு விரல்களால் தடவிப் பார்த்தான் அகரன். அவன் விரல் பட்ட சுகத்தில் ஆழ்ந்து போனான் அன்பு.

‘என்னாச்சு இவனுக்கு. இவனைப் பார்த்தால் நார்மலா இல்லாத மாதிரி இருக்கே..? ஏன் எல்லாத்தையும் புதுசா பார்க்குற மாதிரி பார்க்கிறான்..?” என்று அன்பு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வெளியே இசையின் குரல் கேட்டது.

“அகர்..அகர்..!” என்று அவள் அழைக்க, அன்பின் கையில் இருந்து பட்டென்று இறங்கிய அகரன், சிட்டாய் பறந்து விட்டான்.

“டேய்..! மெதுவா… விழுந்துடாத..” என்ற அன்பின் குரல் காற்றில் தான் கலந்தது. அதற்குள் அவன் வெளியே சென்றிருந்தான்.

“பையன் ரொம்ப அழகா இருக்கான் இல்லையாம்மா..?” என்றான் காதம்பரியிடம்.

“அவன் அம்மாவும் கொஞ்ச அழகாவா இருக்கா..? அந்த பொண்ணு அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்குப்பா..! அவ பையன், அப்பறம் எப்படி இருப்பான்..நீ வந்து சாப்பிடு அன்பு..!” என்றவர், அவனுக்கு அதை எடுத்து வைப்பதில் கவனத்தை கொண்டு போக, யோசனையுடன் சாப்பிட்டான் அன்பு.

கிளம்பி வெளியே வந்த அன்பிற்கு மீண்டும் அகரனைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, அலைபாய்ந்த மனதை அடக்கியவன், இசை இருந்த வீட்டின் பக்கம் கூட பார்வையைத் திருப்பாமல் சென்று விட்டான். அது அவனுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

கம்பெனிக்கு சென்ற அன்பு செழியனின் நினைவில் அகரனின் நினைவு தான் இருந்தது. அவன் தன்னுடைய புருவத்தை நீவி விட்டது அவனுக்கு நியாபகத்தில் வர, அவனின் நினைவில் தானும் புருவத்தை நீவினான்.

“அன்பு..! உனக்கு என்னடா ஆச்சு..? அவன் இன்னொருத்தர் பையன்.. அவனையே நினைச்சுட்டு இருந்தா, எல்லாம் வந்துடுமா.. ஆக வேண்டிய வேலையைப் பாரு..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், புது கம்பெனியின் பில்டிங் வேலை நடக்கும் இடத்திற்கு கிளம்பி சென்றான்.

இசை இல்லாத ஆபீசில் அவனால் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால், அதை அவனின் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அங்கே இசையோ, அனைத்தையும் ஓரளவிற்கு எடுத்து வைத்திருந்தாள். அகரன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழுவதற்குள் அவனுக்கு சமைக்க வேண்டும் என்று எண்ணிய இசை, வேலைகளை வேகமாக முடித்து விட்டு, அவசரத்திற்கு ஒரே சாதமாக செய்தாள்.

அகரனை எழுப்பலாம் என்று நினைக்க, அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஓய்ந்து அவனருகில் அமர்ந்தாள் இசை. செய்த வேலையினால் அவளும் களைப்படைந்து இருந்தாள்.

எல்லாமே தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டிய நிலைமையில் வைத்த கடவுளை அவளால் மனதிற்குள் திட்ட மட்டுமே முடிந்தது. வேலை செய்யும் போது மனதிற்குள் தோன்றாத எண்ணங்கள் எல்லாம், ஓய்ந்து அமரும் போது தோன்றி, தூக்கத்திற்கு ஏங்கிய அவள் கண்களை தூங்க விடாமல் செய்தது.

மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, நியாபகங்கள் பின்னோக்கி செல்ல, அதை கஷ்ட்டப்பட்டு அடக்கி வைத்தாள். அவனுக்கு அருகிலேயே படுத்த இசை.. சில நிமிடங்களில் தன்னையறியாமல் உறங்கியும் போனாள்.

ஆக்கி வைத்த சாதம் ஆறிக் கொண்டிருக்க, சில வருடங்களாக நிம்மதியான உறக்கமின்றி தவித்த இசை இப்போது உறங்கிக் கொண்டிருந்தாள். தாயின் கதகதப்பில் அந்த பிஞ்சும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. எங்கிருந்தோ வந்த தென்றல் அவர்களைத் தழுவி, தாலாட்டுப் படித்துக் கொண்டிருந்தது.

‘வைராக்கியம்’ என்ற ஒற்றை உணர்வு இல்லாவிட்டால்.. இங்கு பல மனிதர்களின் வாழ்வில் சூரிய உதயமே இருக்காது. சில மனிதர்கள் தங்கள் மனதின் ஊனத்தை சரி செய்யாத வரை, பல மனித மனங்கள் காயத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!