Skip to content
Post Views: 4,556
பெரியப்பாவின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் மருதவேலு தகவல் அறிந்ததும் பறந்து வந்திருந்தார் சங்கரன் வெளியிலே நின்றிருந்த மகன்களைப் பார்த்து “என்னடா என்ன விஷயம் ஏதாவது சொன்னானா” என்றார்.
Advertisement
“இல்லப்பா உங்ககிட்ட தான் பேசுவானாம்” என்றார்கள் அவர்கள்.
Advertisement
Advertisement
“ஹ்ம்ம்” என்றவர் உள்ளே சென்றார் ஜன்னல் வழி வெளியில் பார்வை பதித்து அமர்ந்திருந்தான் மருதவேலு “வா வேலு” என்றவர் அவரின் இருக்கையில் சென்று அமர்ந்தார், மொத்தமாக ஆராய்ந்தார் அவனை என்ன விஷயமாக வந்திருப்பான் என்று.
Advertisement
“கேஸ் வாபஸ் வாங்கிக்குறேன்” என்க, இப்பொழுது அவர் முகத்தில் நம்பா தன்மை “என்ன திடீர்ன்னு” என்றார் அவனை ஆழ்ந்து பார்த்து.
“சுத்தி வளச்சு பேச விரும்பல நீங்க எடுத்துக்கிட்ட எல்லா சொத்தும் நீங்களே வெச்சுக்கோங்க இப்போ நான் வீடு கட்டியிருக்குற இடத்தையும் வீட்டையும்….” என்றவன் ஒரு நொடி நிறுத்தி ஆழ மூச்செடுத்தான் “வீட்டையும் விக்கணும் நீங்களே வாங்கினாலும் சரி இல்ல வெளில குடுத்தாலும் சரி” என்றான்.
“அப்போ உனக்குச் சொத்துல பங்கு” என்றார்.
“வேண்டாம்” என்றான்.
“அது கேட்டுத்தான கேஸ் போட்ட” என்றார்.
“சும்மா இருந்த என்னைச் சொறிஞ்சு விட்டது நீங்க, சொத்து வேண்டாம்னு நாங்க தனியா போய்ட்டோம் தானே அப்புறமும் நீங்கப் பிரச்சனை செஞ்சதாலதான் நானும் நின்னேன் இப்போ அதெல்லாம் எதுக்கு எனக்கு எந்தச் சொத்தும் வேண்டாம் வீட்டை மட்டும் வித்துக்குடுங்க” என்றான்.
சில நொடிகள் யோசித்தவர் “சரி நானே எடுத்துக்குறேன்” என்றவர் ஒரு விலையைச் சொல்லச் சத்தமாகச் சிரித்துவிட்டான் மருதவேலு.
“விட்டுகுடுத்து போறதால விவரம் இல்லாதவன்னு நினைச்சுக்காதீங்க இவ்ளோ ஏமாத்தின அப்புறமும் உங்க ஆசை மட்டும் அடங்கவே மாட்டிங்குதே” என்றவன்.
“நீங்க எடுத்துக்கிட்ட குடும்ப சொத்தோட மதிப்பு என்ன அதை வெச்சு நீங்கச் சேர்த்துக்கிட்ட சொத்துக் கணக்கு என்ன தொழில் எவ்ளோ எல்லாம் எனக்குத் தெரியும் இன்னும் எத்தனை தலைமுறைக்கான சொத்தைச் சேத்து வெச்சிருக்கீங்கன்னும் எனக்குத் தெரியும், அந்தக் கருமம் எல்லாம் எனக்கு வேண்டாம்”.
“இந்த வீட்டைக் கட்ட என்னோட சொந்த காசு முப்பது லட்சம் போட்டிருக்கேன் அதோட உங்க அடிமட்ட விலை பட்டியல் படி பாத்தாலே அந்த இடம் மட்டும் அம்பது லட்சம் போகும் மொத்தம் என்பது வேணுமா வேண்டாமா அவ்ளோதான் இல்ல வெளில பாத்துக்குறேன்” என்றான்.
அவன் கேட்ட விலையே குறைவுதான் வெளியில் விற்க சென்றால் மீண்டும் பிரச்சனை செய்வார் அது மீண்டும் இழுத்தடிக்கும் சித்ராவின் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் ஆகையால் இவரிடமே வந்து நின்றான்.
சங்கரன் யோசிக்கவெல்லாம் இல்லை “சரி” என்றுவிட்டார்.
“சந்தோசம்… பத்திரப்பதிவு வேலை செலவு எல்லாம் நீங்கதான் செய்யணும் கைக்குக் காசு வந்ததும் இந்தப் பத்திரம் அப்புறம் சொத்து எங்களுக்கு வேண்டாம்னு ஒரு பத்திரம் ரெண்டுலயும் கையெழுத்து போடுறேன்” என்றவன் சென்றுவிட்டான்.
வருடங்களாக இழுத்தடிக்கும் கேஸ் அவனே வந்து விட்டுக்கொடுக்குறேன் என்கிறான் விடுவாரா சங்கரன் அன்றைக்கே வேலையைத் தொடங்கிவிட்டார், அவராலும் சொத்துக்களை ஒன்றும் செய்யமுடியா நிலை முடங்கிக் கிடக்கிறதே ஆகையால் புயல் வேகம்தான் இரண்டாம் நாளே அழைத்துவிட்டார் நாளைக்கே பத்திரப்பதிவு செஞ்சுக்கலாம் என்று.
ராமலிங்கம் மகனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவரால் மகனை நேர்கொண்டு பார்க்கக்கூட முடியவில்லை தன்னுடைய கையாலாகாத்தனம், மயிலம்மாவிற்கு இவ்வளவு தொகை கை வருவது சந்தோசம் என்றாலும் மகன் ஆசையாய் கட்டிய வீட்டை விற்பது வருத்தமாகவும் இருந்தது.
“கொஞ்சம் இறங்கி போனாத்தான் என்ன அவர் தான் மத்த சொத்து எல்லாம் எழுதிக்குடு இந்த இடத்தையும் கொஞ்சம் பணத்தையும் தரேன்னு அப்போவே சொன்னாரே வீம்புக்கு போய்ப் பேசிட்டு வந்திருக்கான் இப்போ ஆசையா கட்டின வீட்ல கண்ட கண்ட நாயெல்லாம் வந்து வாழப்போவுது” என்றவர் மகளிடம் “நகை என்ன என்ன வேணும்னு யோசிச்சுக்கோ காசு வந்ததும் போய் எடுத்துடலாம்” என்றார்.
கைக்குக் காசு வந்துவிட்டது நாற்பது லட்சத்தைத் தாயிடம் கொடுத்துவிட்டான் பத்து லட்சம் கடன் அடைத்துவிட்டு மீதம் அவனுடைய சொந்த உழைப்பில் கிட்டிய முப்பதை தன்னிடம் வைத்துக்கொண்டான்.
சிங்கருமாள் கோவிலில் அமர்ந்திருந்தான் மனதே சரியில்லை எத்தனை உழைப்பு எத்தனை வருட கனவு சொத்துக்களை சங்கரன் எடுத்துக்கொண்டபிறகு தங்களுக்கென்று ஒரு வீடு என்பது அவனுடைய வாழ்நாள் கனவாக இருந்தது முதல் முதலாய் ஆசையாகக் கட்டிய அந்த வீட்டைத்தான் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்.
சித்ரா வாசன் திருமணம் முடிவாகிவிட்டது அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்துச் சிறப்பாகத் திருமணம் செய்யப் போகிறார்கள், மண்டபம் சாப்பாடு அலங்காரம் அனைத்திற்கும் பணம் கொடுத்தாகிவிட்டது நான்கு நாட்களாக அம்மாவும் மகளும் நகை பட்டு என்று வாங்கி குமிக்கிறார்கள்.
கல்யாண அலைச்சலோடு புதிய வாடகை வீட்டிற்கும் மாறிவிட்டார்கள் அங்கிருக்க பிடிக்கவில்லை, அமைதியாகத் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அருகில் யாரோ நிற்பதாகத் தோன்ற விழிகள் திறந்தான் அவனின் ராணிதான் பச்சை பட்டில் பாவாடை தாவணியில் நின்றிருந்தாள்.
மெலிதாகப் புன்னகைத்தான் “என்னாச்சு ஏதாவது பிரச்சனையா” என்றாள்.
அவளையே பார்த்திருந்தவன் “அப்படியா தெரியுது” என்றான்.
“ஹ்ம்ம் ஆமாம் கொஞ்சம் டல்லா இருக்கீங்க” என்றாள் மெதுவான குரலில்.
“பார்றா அதெல்லாம் உனக்குத் தெரியுதா” என்றவன் “ஆமா இன்னைக்கு காலேஜ் இல்லையா” என்றான்.
“இருக்கு நான் லீவ்” என்றாள்.
“ஏன்” என்க.
“இன்னைக்கு அப்பாக்கு பிறந்தநாள் அப்பாவும் நானும் எல்லா வருஷமும் இங்க வருவோம் இன்னைக்கு…” என்றவள் சில நொடிகள் தயங்கி “அப்பா வரல அங்க ஏதோ பிரச்சனை அப்பாக்காக வேண்டிக்க நான் மட்டும் வந்தேன், அவருக்கு இனிமேலாவது நிம்மதிய குடுன்னு கேட்க வந்தேன்” என்றவளுக்கு கண்ணீர் முட்டியது குரல் இடறியது.
“ஹ்ம்ம்” என்றவன் தலையை அழுந்தக் கோதிக்கொண்டான்.
“நீங்க” என்றவள் பின் தயங்கி நின்றாள், அவனிடம் கேட்டால் தவறாக எடுத்துக்கொள்வானோ உனக்கே ஆயிரம் பிரச்சனை என்னோடத தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறேன்னு கேட்டுட்டா என்று யோசித்து நிற்க.
“ஒய்” என்றான்.
அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க “இப்படி ஒக்காந்துகூட யோசிக்கலாம் நான் காசு கேட்கமாட்டேன்” என்றவன் கொஞ்சம் தள்ளி அமர அவனைக் கடந்து கொஞ்சம் உள்ளே அமர்ந்தாள்.
“எனக்கு என்ன பிரச்னைன்னுதானே யோசிக்கிற” என்றவன் கைகளைப் பின்னில் ஊன்றிக் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டு மேலே பார்த்தான்.
“சித்ராவுக்கு அதாவது என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு, எங்க மாமா பையனோட” என்றான், அவளுக்கு ஏதோ புரிவதாக அந்தத் திருமணத்தை நடந்தவேண்டித்தானே இவன் தாய் தன்னை மகனுக்குக் கட்ட சம்மதித்தார் இவன்தான் வேண்டாம் என்றுவிட்டான் என்று மனதில் நினைக்க.
அவன் சரின்னு சொல்லியிருந்தா உனக்குச் சம்மதமா என்றது “ச்சூ சும்மா இரு” என்று அதட்டினாள் அதனை ஒருவேளை வேற பொண்ணு பார்த்து முடிவு செஞ்சுட்டாங்களோ வேற வழியில்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானோ என்று எண்ணியவளுக்கு என்னமோ அந்த நினைவே சுட்டது.
‘அவன் யாரை கட்டினா உனக்கென்ன’ என்றது மனசாட்சி மீண்டும்.
“இன்னும் பால் கூடக் காச்சல…. வீட்டை வித்துட்டேன் தங்கச்சி கல்யாணம் நடக்கணும் வேற வழி தெரியல… மனசு சங்கடப்படக் கூடாது தெரியும் ஒரு நல்ல விஷயத்துக்காக வித்துருக்கேன் என் பாட்டி சொல்லுவாங்க ஒரு விஷயத்தை மனசங்கடத்தோட செஞ்சா அதை யாருக்காகச் செய்ரோமோ அவங்களுக்கு அது பயன் படாம போய்டுமாம்”.
“ஆனாலும் என்னமோ சட்டுன்னு ஏத்துக்க முடியல என் மனசங்கடம் என் தங்கச்சி வாழ்க்கைல எதுவும் சாபமா மாறிடுமோன்னு ஒரு பயம் அதான் மனசை தேத்திக்க கொஞ்சம் அவகாசம் குடு இதுக்கும் தங்கச்சிக்கும் சம்பந்தம் இல்ல அவ வாழ்க்கை நல்ல இருக்கணும்னு வேண்டிட்டு இருக்கேன்” என்றான்.
அவன் குரலே சொன்னது எத்தனை வருந்துகிறான் என்று ஆனால் அவனுக்குத் தன்னால் என்ன ஆறுதல் சொல்ல முடியும் “சாமி கும்பிடீங்களா” என்றாள்.
“இல்லை” என்று அவன் தலை அசைந்தது “வேற எங்கயும் போகத்தோனால இங்க வந்தா கொஞ்சம் மனசு நிம்மதியாகும்” என்றான்.
மெல்ல சிரித்தவள் “எனக்குச் சாமி இருக்கான்னே நிறைய தடவ சந்தேகம் வரும் ஆனாலும் மனசு தவிக்கும்போது தன்னாலே இங்க வந்துடுவேன், அக்கா வழக்கை இவ்ளோ மோசமா ஆகியிருக்க வேண்டாம் நல்லதை சொல்லிக்கொடுத்து தான் எங்களை வளர்த்தாங்க அப்பாவும் அம்மாவும் எங்ககிட்ட எதையும் கட்டாயமா திணிச்சதில்ல”.
“மாமாவோட என் கல்யாணம் கூட மாமாவா கேட்டதால அதுவும் என்கிட்டே கேட்டுட்டுதான் ஒத்துக்கிட்டாங்க, அப்பாகிட்ட அக்கா சொல்லியிருக்கலாம் இல்ல என்கிட்டயாவது பேசியிருக்கலாம் வீட்ல பாத்து சொன்னாங்க சரி சொன்னேன் அது மாறிப்போறதுல ஒன்னும் வருத்தமில்லை”.
“ஒரு வேளை அக்காவைக் கட்டிக்க மாமா ஒத்துக்காம போயிருந்தா அப்பா என் கல்யாணத்தை மாமா கூட நடத்தவும் யோசிச்சிருப்பார், மூத்த மக விரும்புற ஒருத்தரை இன்னொரு மகளுக்கு எப்படி கட்டிவைப்பாங்க காலம் முழுக்க எங்களைப் பாக்கும்போது அக்காக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சிருப்பார்”.
“எல்லாத்துலயும் அவசரம் இப்போ யாருக்குமே நிம்மதி இல்ல பச்ச குழந்தை அவனை ஆசையா தூக்கி கொஞ்ச முடியல அவனுக்கு எதையும் செய்யமுடியல, குழந்தையை வெச்சுதான் உன்னை மிரட்டப் பாப்பான் அதுனால பிள்ளை மேல பாசத்தை வளர்த்துக்காத அவனைப் பாக்க வராதுன்னு அத்தை சொல்லிட்டாங்க”.
“அங்கேயே இருந்துகிட்டு அவனைப் பாக்கமா தூக்காம எப்படி இருக்க அதோட என்னைப் பாக்கும்போதெல்லாம் அக்கா கத்துறா சண்டை போடுறா, என்னைப் பாக்கும்போதெல்லாம் அப்பா கண்ணுல அவ்ளோ வலி பயம் அவரை அப்படி பாக்கமுடியால அதான் நான் தாத்தா பாட்டிகூட வந்துட்டேன்” என்றவள்
“சாரி உங்க கஷ்டம் புரியாம நான் பாட்டுக்கு ஏதோ உளறிக்கிட்டு இருக்கேன்” என்றவள் தலையில் தட்டிக்கொண்டாள் எதற்க்காக அவனிடம் இதை எல்லாம் சொல்கிறேன் இவனிடம் எப்படி இவ்வளவு உரிமையாகப் பேசுகிறேன் என்று அவளுக்கே என்னவோ போல் ஆனது.
“குங்குமம் எடுத்துக்கோங்க” என்றவள் அவன் முன் கையை நீட்டிக்கொண்டே “எப்படின்னு எல்லாம் தெரியாது ஆனா எல்லாம் சரி ஆகிடும் இந்த வீடு உங்களுக்குச் சொந்தமில்லாம இருக்கலாம் உங்களுக்குக் கடவுள் இன்னும் பெரிய வீடா குடுக்க இப்போ இதை உங்ககிட்ட இருந்து எடுத்திருப்பார்” என்றவள் விழிகள் குங்குமத்தையே பார்த்திருக்க அவளை அத்தனை காதலோடு பார்த்துக்கொண்டே குங்குமத்தை எடுத்துக்கொண்டான்.
பொங்கலை கையிலிருந்த இன்னொரு தொன்னையில் வைத்து அவனிடம் நீட்டினாள் வாங்கிக்கொண்டவன் இதழ்களில் அழகான புன்னகை “நான் கிளம்புறேன்” என்றவள் எழ.
தன் கால்களைக் கொஞ்சம் மடக்கினான் அவனைக் கடந்து சென்றவள் பின்னலை பின்னில் தள்ளிவிடச் சூடியிருந்த பன்னீர்ரோஜா அவன் மடியில் விழுந்தது என்னவோ அவளே அவன் கைச்சேர்ந்ததுபோல் மனம் நிறைந்துவிட்டது சட்டை பையில் போட்டுக்கொண்டான்.
மனம் லேசானது அவனுக்கு மனதுக்கு பிடித்தவரக்ள் அருகில் இருந்தாலே காலநிலை மாற்றம்போல மனமும் மாறிவிடுமா என்று நினைத்துக்கொண்டான்.
“அந்த ரகு பிரச்சனை செய்றானா” என்றான்.
“இல்லை” என்பதாகத் தலை அசைத்தாள் ஆனால் விழிகள் பொய் சொல்கிறாள் என்றது.
அவன் கூர்மையாகப் பார்க்க “இல்ல நேத்துதான் வந்தார் அங்க ஊர்ல வண்டியை வழிமறிச்சு பட்டுப் புடவை குடுத்தார், இப்போ ஒழுங்கா வேலைக்குப் போறாராம் என்னை நல்லா பாத்துப்பாராம் குடிக்கிறது ரொம்ப கொறஞ்சிடுச்சாம் கோவில்ல தாலி கட்டுறேன் கொஞ்ச நாள்ல எல்லாரும் எல்லாத்தயும் மறந்து ஏத்துப்பாங்க நீ என்கூட இருந்தா அந்தப் பிள்ளையைக் கூட நாமளே வளத்துக்கலாம் சொன்னாரு” என்றாள்.
அவன் கை முஷ்டிகள் இறுகியது கைகளைப் பின்னில் மறைத்து இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டவன் அவளை ஆழ்ந்து பார்த்து “நீ என்ன சொன்ன” என்றான்.
“புடவையைத் தூக்கி கீழே போட்டுட்டேன் குழந்தையோடு வாழணும்னா அவனோட அம்மாவையே அழைச்சிட்டு போய்க் குடும்பம் நடந்ததுங்க எனக்குச் செகண்ட் ஹேண்ட் புருஷன் வேண்டாம்னு சொன்னேன்” என்றதும் இறுக்கம் தளர புன்னகையில் விரிய துடித்த இதழ்களை மடித்து பற்களால் அழுத்திக் கடித்தான்.
“செகண்ட் மேரேஜ் நிச்சயம் தப்பில்லை கணவனையோ மனைவியையோ இழந்தவங்களுக்கு நிச்சயம் ஒரு துணை தேவை முதல் திருமணம் சரியா அமையாதவங்களுக்கு கண்டிப்பா ஒரு நல்ல இரண்டாவது வாழ்க்கை அவசியம்”.
“ஏன் மாமாவே நல்லமாதிரி இருந்து ஏதோ காரணத்தால அக்காகூட வாழமுடியாம குழந்தையோடு தனியா நின்னிருந்தா குழந்தைக்காகவும் அவருக்காகவும் நானே சம்மதம் சொல்லியிருப்பேன், ஆனா தப்பையும் செஞ்சிட்டு அதை ஏத்துக்கவும் செய்யாம அதைச் சரி பண்ணவும் முயற்சி எடுக்காம நான் நினைக்குறதுதான் நடக்கணும்னு இருந்தா அது சரியா”.
“அவர் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னே எனக்குத் தெரியல அக்கா மேலதான் தப்பு… சரி அவளை ஏத்துக்க முடியலைன்னா போகட்டும் குழந்தையை ஏன் தண்டிக்கணும் தன்னையே மறந்து நம்மளை யார் என்ன செய்றாங்கன்னு கூடத் தெரியாம கிடக்குற அளவுக்கு அப்படி என்ன போதை கேக்குது”.
“இது எதுவுமே தெரியாம இவரை நான் கல்யாணம் செஞ்சிருந்தா என் கற்புக்கும் உயிருக்கும் இவர்கிட்ட என்ன பாதுகாப்பு இருந்திருக்கும், ஒரு பொண்ணை முழு மனசா விரும்புறவனால வேற எந்தப் பொண்ணோட அருகாமையையும் ஏதுக்க முடியாது அது எந்த நிலமைல இருந்தாலும், அப்படி இல்லாம அவன் ஏத்துக்கிட்டான்னா அவனுடைய காதல் மனசு சம்மந்தப்பட்டதில்லை” என்றவள் இப்பொழுதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் அவளையே பார்த்து நிற்க “இல்ல… அது ஒரு வருஷமா சுத்தி சுத்தி இந்தப் பேச்சு… சண்டை அழுகைன்னு நானே எனக்குள்ள… நிறைய பேசிப் பேசி அது அப்படியே தெரியாம உங்ககிட்டயும்…” என்றவளிடம் நிறைய தடுமாற்றம்.
“சாரி சாரி சத்தியமா உங்ககிட்ட ஏன் இதெல்லாம் சொல்றேன் நான்…” என்றவள் மீண்டும் தலையில் தட்டிக்கொண்டு “நான் கிளம்புறேன்” என்று வேகமாக ஓடினாள்.
அவனால் அவளை முழுதாகப் புரிந்துகொள்ள முடிந்தது வீட்டில் மட்டுமில்லை நட்பு வட்டத்திடம் கூட அவளால் பகிர முடியவில்லை தன்னுள்ளே போட்டுக் குழப்பி வாதாடி என்று அவளுக்குள்ளே அனைத்தையும் அடைத்து வைத்திருக்கிறாள் இபோழுது தன்னிடம் அனைத்தையும் கொட்டி செல்கிறாள்.
“என்கிட்டே ஏன் சொல்றேன்னு இன்னுமாடி உனக்குப் புரியல” என்று கேட்டுக்கொண்டவன் தன் தலைமுடியை அழுந்தக் கோதிக்கொண்டு உப்ப் என்று காற்றை உள்ளிழுத்து வெளியேற்றினான், இதழ்கள் தன்னாலே முணுமுணுத்தது
பெண்ணென்ற ஜாதியிலே
ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும்
போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே
நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன்
மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம்
மாலையிடத் தான்
error: Content is protected !!