Skip to content
Post Views: 4,314
“தம்பி ஒரு பத்து நிமிஷம் இரு சாப்பிடலாம்” என்ற சித்தியைப் பார்த்துச் சமர்த்தாகத் தலை அசைத்த லிங்கேஸ்வரனின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் இட்ட காமாட்சியின் கரம் அண்ணனின் மார்பில் முகம் புதைத்து ஒரு விரலை வாயில் வைத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மூன்று வயது மகனின் மீது ஆசையாகப் படிந்தது.
Advertisement
“கால் வலிக்குதா ஈஸ்வர் சித்தி தூக்கிக்கவா” என்றவளை அவசரமாகத் தடுத்தவன் “வேண்டாம் சித்திமா எனக்குக் கால் வலிக்கல” என்றான்.
Advertisement
Advertisement
“சரி” என்றவள் அவன் கையில் இரண்டு கிரீம் பிஸ்கட்டை கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்திருந்த தாயிடம் “அம்மா அவனை எவ்ளோ நேரம் மடில போட்டிருப்ப கீழதான் ஷீட் போட்டிருக்கே அதுல படுக்கவை” என்றாள் ஆறு வயதான மூத்த மகனின் தலையை வருடிக்கொண்டே.
Advertisement
“அடிக்கிற வெயில்ல பிள்ளைக அசதியா இருக்கு ஆச்சி மடிலனா ஆட்டிட்டே இருந்தா கொஞ்சம் நேரம் கண் அசரும் நாங்க பாத்துக்குறோம் நீ போ” என்றார் அன்னம்மா.
“சரி” என்றவள் “அத்தை நீங்க வந்து சாப்பிடுங்க” என்றாள் முத்துலெட்சுமியிடம்.
“ஜூஸ் நிறைய குடிச்சு வயறு மெத்துன்னு இருக்கு அப்புறம் போறோம் ஆச்சி” என்றார் அவர்.
“சரி” என்றவள் எழுந்து கணவனின் அருகில் சென்றாள் ஆசை மகள் காது குத்தியதில் வலியில் சிணுங்கி சிணுங்கி இப்பொழுதுதான் உறங்கத் தொடங்கியிருக்க அருகில் நெருங்கிய மனைவியைப் பார்த்து இதழ் விரித்தான் மருதவேலு.
“தூங்கிட்டாளா குடுங்க நீங்கக் கொஞ்ச நேரம் போய் உக்காருங்க” என்றாள் காமாட்சி.
“எனக்கு ஒண்ணுமில்ல ராணியம்மா நீங்கதான் ரொம்ப அசதியா இருக்கீங்க, கொஞ்ச நேரம் அப்படியே சாஞ்சு உக்காருங்க நான் பிள்ளைகளைப் பாத்துக்கிறேன்” என்றான் அவன்.
ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தவள் அவன் தாடியை அழுத்தமாகப் பிடித்து இழுத்து இதழில் பதித்து முத்தமிட்டாள் அவன் இதழ்கள் நன்றாகவே விரிந்தது “லவ் யூ” என்றாள் மெல்ல.
“அழகு ராணியம்மா நீங்க” என்றான் அத்தனை காதலோடு.
முக்கால்வாசி பேர் கிளம்பிவிட்டிருந்தனர் அங்கு அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த சிலரையும் பேசிச் சாப்பிடவைத்து அனுப்பிவிட்டு வந்தவள் தாய் தந்தை, மாமனார் மாமியார், அத்தை லிங்கேஸ்வரன் என்று அனைவரையும் சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு தூணில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
அருகில் வந்து அமர்ந்த மருதவேலு மகளை மடியில் கிடத்திக்கொண்டு மனைவியைத் தோளில் சாய்த்துக்கொண்டான் “நீங்கப் போய்ச் சாப்பிடலாம்ல ராணியம்மா இங்க நான் இருக்கேன்” என்றான் அவன்.
“ஹ்ம்ம்… என் புருஷன் இல்லாம எப்படி சாப்பிடுறதாம் ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என்றாள் அவள்.
நல்ல சித்திரை வெயில் அப்படியொரு வெக்கை உடல் ஓய்வுக்கு கெஞ்சியது என்றாலும் மனம் அத்தனை நிறைவாய் இருந்தது, இன்று மகளுக்கு முடி இறக்கி காது குத்தியிருந்தனர்.
மூத்த மகனுக்கு ஆறு வயது இளையவனுக்கு மூன்று “ராணியம்மா இப்படி ரெண்டு பிள்ளைகளை என்னைய மாதிரியே ரௌடி பிள்ளைகளா பெத்து குத்துட்டீங்களே எனக்கு உங்களை மாதிரி ஒரு இளவரசி வேணும்” என்று அவளைக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
கெஞ்சல் மட்டுமே அடுத்த பிள்ளை வேண்டாம் இரண்டு போதும் என்ற முடிவுதான் அவனுக்கும் மனைவியின் கஷ்டங்களைப் பார்த்தவன் அல்லவா ஆனால் அவளுக்கு என்னமோ தன்னை போல ஒரு பிள்ளை வேண்டும் அவளைக் கணவன் கொஞ்சுவதை காண வேண்டும் என்று பெரும் ஆசை.
பெண் பிள்ளைகளைப் பார்க்கும்போது அவன் விழிகளில் வந்து போகும் ஆசையை இமைக்காமல் பார்த்திருப்பாள், என்னமோ இன்னும் ஒரு குழந்தை என்று முடிவாய் நின்றாள்.
அவன் பெரிதாக எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ளவில்லை மனைவியின் முன் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவும் செய்துகொண்டான் அதற்க்கு அவசியம் இல்லை அள்ளிக்கோ என்று அவனின் இளவரசியை அவன் கைகளில் சேர்பித்துவிட்டார் கடவுள்.
மூன்று பிள்ளைகள் ஆனபோதும் வேலையை மட்டும் காமாட்சி விடவில்லை மயிலம்மாவிற்கு மருமகளின் மீது தான் பிடித்தமின்மை பேரப்பிள்ளைகளை தங்கமாகத் தாங்கிக்கொண்டார், அதிகம் தூரமில்லை என்பதால் காமாட்சியின் தாயும் அடிக்கடி வந்துவிடுவார்.
மாமனார் தந்தை கணவன் என்று அனைவரும் தாங்கப் பிரசவ விடுமுறை முடிந்து பெரிதான கலக்கம் இல்லாமல் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள், வேறு அலுவலகமும் மாறிவிட்டாள் சம்பளம் முன்பயும் விடக் கூடுதல்.
அரவிந்தன் வேலை கிடைக்காமல் பெரிதாக முயற்சியும் செய்யாமல் இருந்தான் இறுதியாகத் தங்கை அண்ணனிடம் வந்து நின்றாள் “உன்கூட அவரையும் சேர்த்துகோ அண்ணா” என்று.
மருதவேலு தீர்க்கமாக மறுத்துவிட்டான் “மொதல்ல என்னோடது பெரிய தொழில் இல்ல நாளைக்கு கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை வரும் பிரென்ட் கிட்ட சொல்றேன் முயற்சி செய்யலாம்” என்றுவிட்டான்.
அதன்படி நண்பனின் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்தான் உன் சாமர்த்தியம் இதிலிருந்து பிழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டான், பெரிதாக இல்லையென்றாலும் கொஞ்சம் வருமானம் வருகிறது பணத்தின் அருமை கணவன் மனைவி இருவருக்கும் புரியத்தொடங்கியிருந்தது.
அன்று “நீங்க அப்பாவாகப் போறீங்க” என்றவளை கட்டிக்கொண்டவன் உடலெங்கும் சந்தோஷ ஊற்று, முத்தங்களால் அவளைத் திணறடித்தான் இரவு கணவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் “நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா” என்றாள் மெல்ல.
அவள் முகத்தை நிமிர்த்தியவன் “என்கிட்டே என்ன பயம் ராணியம்மாவுக்கு அப்படி என்ன செஞ்சிடுவேனாம்” என்றான் பொய்யாக முறைத்து.
“அதில்ல நீங்க ஒடனே என் மேல நம்பிக்கை இல்லையா அப்படிலாம் கேக்க கூடாது பொறுமையா கேக்கணும்” என்றாள்.
அவன் அவளையே பார்த்திருந்தான் “ஏதாவது பிரச்சனையா” என்றான் கொஞ்சம் பதட்டமாக.
“இதுக்குதான் சொன்னேன்” என்றவள் “ஷ்… பேசக் கூடாது” என்றுவிட்டு அவனின் வலது கரத்தை எடுத்துத் தன் வயிற்றில் பதித்துக்கொண்டாள் “இப்படியே கேளுங்க” என்றவள்.
“அந்த வீடு… நீங்க முதல்ல கட்டினது…” என்றவள் கொஞ்சம் தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தாள்.
இடது கரத்தால் அவள் கன்னம் பற்றியவன் “சொல்லுங்க” என்றான்.
“வித்தப்போ கிடைச்ச காசுல கொஞ்சம் உங்ககிட்ட இருக்குல்ல” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்றான்.
“அதுக்கு வண்டி எதுவும் வாங்க போறீங்களா” என்றாள்.
அவன் யோசனையானான் “இடம் வாங்கலாம்னு யோசிச்சேன் வாங்கி போட்டா எப்போ முடியுமோ அப்போ வீடு காட்டலாமே” என்றான்.
அவள் முகத்தில் வெளிச்சம் “அப்போ நீங்க இடம் வாங்குங்க கொஞ்சம் அவுட்டரா இருந்தாலும் பரவாயில்லை அங்கன்னா இன்னும் கம்மியா இருக்கும், எனக்கு லோன் போடுற ஆப்ஷன் இருக்கு” என்றவள் தொகையைச் சொல்ல.
“அவ்ளோ குடுப்பாங்களா” என்றான் ஆச்சர்யமாக.
“நம்ம சம்பளம் எவ்ளோவோ அதுக்கு ஏத்த மாதிரி லோன் கிடைக்கும், என்னோட சம்பளம் அப்படியேதான் இருக்கு அப்பாவும் வாங்கியதில்லை நீங்களும் வாங்கறதில்லை அதுவும் அப்படியேதான் இருக்கு, நமக்காக ஒரு வீடு நானும் செய்றேன்னே” என்றாள் மன்றாடலாக.
அவள் கன்னத்தைக் காதலோடு வருடினான், அவள் ஆர்வமாக அவனைப் பார்க்க “யோசிக்கலாம் ராணியம்மா இப்போ பாப்பா வரபோகுது மறுபடியும் வேலைக்குப் போகமுடியுமா பாருங்க இன்னும் ஒரு வர்ஷம் போகட்டும், ஒரு உயிரைச் சுமக்க போறீங்க சாதாரண விஷயம் இல்ல நீங்க நல்லபடியா என்கிட்டே திரும்பி வரணும் இப்போ எனக்கு அதுமட்டும்தான்”.
“எந்த மன கஷ்டமும் இல்லாம நிம்மதியா வேலைக்குப் போங்க முடியுதான்னு முதல்ல பாக்கலாம் பாப்பா பிறந்த அப்புறம் வேலைக்குப் போறதா இருந்தா அப்போ கண்டிப்பா இதைப் பத்தி மறுபடியும் பேசலாம்” என்றான்.
அவன் இவ்வளவு யோசித்ததே போதும் என்று அவளும் விட்டுவிட்டாள், ஆனால் வேலையை விடுவதில்லை என்ற வைராக்கியம் அவளிடம் குழந்தை பிறக்கும் வரைக்கும் சென்றாள் பிறகு குழந்தை பிறந்து நான்கு மாதம் முடிந்து செல்லத் தொடங்கினாள், அடுத்த மாதமே கணவனிடம் மீண்டும் அதைப் பற்றிப் பேசினாள் அவனும் சம்மதம் சொல்லிவிட்டான்.
முதலில் இடம் வாங்கினார்கள் அதற்க்கே ஆறு மாதம் ஓடி விட்டது பிறகு லோன் கேட்டு விண்ணப்பம் கொடுத்து அது அவளுக்குக் கிடைக்க சில மாதங்கள் கடந்தது, வீட்டு வேலையும் தொடங்கியது ராமலிங்கம் மகனின் வண்டிகளின் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.
அவன் முழு நேரம் சவாரியை பார்த்தான், மாமனார் ஒரு வண்டியை வாங்கித்தருகிறேன் என்றார், மூத்த மகளுக்குப் பங்கு பணம் கொடுத்துவிட்டேன் உங்களுடையது என்னிடமே இருக்கிறதே இன்னும் ஒரு வண்டி ஓடினால் நல்லதுதானே என்றார் அவரே பார்த்து வாங்கியும் கொடுத்துவிட்டார்.
ஏறுமுகம் தான் கணவனும் மனைவியும் ஒன்றாக ஓடினார்கள் உழைத்தார்கள் சோர்வுறும் நேரங்களில் ஒற்றை அணைப்பும் இதழ் ஒற்றலும் அத்தனை வலிமையை தந்தது, அவர்கள் ஆசை பட்ட வீடு கட்டி முடித்துக் குடி போயாயிற்று.
சித்ரா நாட்டாமை செய்ய வருவதில்லை வந்தாலும் இங்கே கண்டுகொள்ள மாட்டார்கள் என்று தெளிவாக அவளுக்குப் புரிந்துவிட்டது, மயிலம்மா பெரிதாக வாயே திறப்பதில்லை பேரன்களைப் பார்த்துக்கொள்ளவே நேரம் போதவில்லை இப்பொழுது பேத்தியும் சேர்ந்துகொள்ள அவருக்கு அவரைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை.
அன்னம்மா சாப்பிட்டு வந்தவர் பேத்தியை மருமகனிடமிருந்து வாங்கிக்கொண்டார் “நீங்கப் போய்ச் சாப்பிடுங்க” என்றார்.
முத்துலெட்சுமியும் லினேஸ்வரனோடு அங்கேயே அமர்ந்துகொண்டார் காமாட்சியின் ஆண் மக்கள் இருவரும் இன்னும் நல்ல உறக்கத்தில் லிங்கேஸ்வரன் அவனின் பாட்டி முத்துலட்சுமியின் மடியில் படுத்துக்கொண்டான்.
அவர் மெல்ல அவன் தலை கோதினார் கணவனோடு வந்திருந்த மீனாவின் பக்கம் கூட அவர் விழகிகள் திரும்பவில்லை.
சாப்பிடும் இடத்தில் மாசிலாமணியும் ராமலிங்கமும் நின்றிருந்தனர் சித்ரா வாசன் அவன் குடும்பம் விழா முடிந்ததும் கிளம்பிவிட்டனர் இவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
“அப்பா நீங்கப் போங்க மாமா நீங்களும் போங்க நாங்க மட்டும்தானே பாத்துக்குறோம்” என்றான் மருதவேலு அவர்களும் அசதியாக இருக்க சென்று அமர்ந்துவிட்டனர்.
அனைவரையும் வேனில்தான் அழைத்துவந்திருந்தான் மருதவேலு, சிங்கப்பெருமாள் கோவிலில் வைத்து முடிக்காணிக்கையும் அருகிலே சிறிய மண்டபத்தில் வைத்துக் காதுகுத்து விருந்தும் நடந்தது, இனி நேரே வீட்டிற்கு.
கணவனோடு சாப்பிட அமர்ந்த காமாட்சியின் விழிகள் ஒரு ஓரத்தில் அரவிந்தனோடு அமர்ந்திருந்த மீனாவின் மீது படிந்தது மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தாள், அரவிந்தனின் பிள்ளைகள் இரண்டும் ஐ பேட் வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஒரே இலையில் உணவைப் பரிமாறியவன் மனைவிக்கு ஊட்டித் தானும் உண்டான் “பீல் பண்றா போல” என்றாள் காமாட்சி மீனாவை பார்த்துகொண்டே.
திரும்பிப் பார்த்தான் மருதவேலு, மீனாவின் விழிகள் முத்துலட்சுமியின் மடியில் படுத்திருந்த லிங்கேஸ்வரன் மீதே நிலைத்திருந்தது “சுயநலம்” என்றான் மருதவேலு.
“அவங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்திருந்தா இப்படி பாசமா இவனைப் பாத்திருப்பாங்களா” என்றான் பல்லைக் கடித்து.
“ஹ்ம்ம்” என்றவள் அமைதியாக உணவை உண்டாள்.
அரவிந்தனோடு மீனா வாழத் தொடங்கியிருந்தாள் எதுவும் பாதுகாப்பு ஒன்றும் செய்துகொள்ளவில்லை என்றாலும் மூன்று வருடமான பிறகும் அவள் தாய்மை அடையவில்லை.
“டாக்டர் கிட்ட போலாமா” என்றாள் மீனா அரவிந்தனிடம்.
“எதுக்கு” என்றான் அவன்.
“இல்ல இன்னும் கொழந்தை தங்கலையே” என்றாள்.
“கொழந்த பொறக்காது” என்றான் அவன் திடமாக.
“ஏன்” என்றாள் பதட்டத்தோடு மீனா, எப்படியாவது தனக்கென்று ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் தனக்கு அவனிடம் ஒரு மதிப்பும் இந்த வீட்டில் ஒரு பிடிப்பும் கிடைக்கும் என்று ஆசை பட்டாள் ஆனால் அவன் சொல்லிய பதில் அவள் நெஞ்சில் ஈட்டியை இறக்கியது.
“சின்னவன் பொறந்ததும் இனிமே பிள்ளை வேண்டாம்னு குடும்ப கட்டுபாடு செஞ்சுக்கிட்டேன், அவளுக்கு ஏற்கனவே ரெண்டு ஆபரேஷன் அதனால நானே செஞ்சுக்கிட்டேன்” என்றவனின் வார்த்தைகள் அவளுள் அமிலத்தை ஊற்றியது.
“பாவி பாவி ஏன் என்கிட்டே சொல்லல” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
“எதுக்கு சொல்லணும் உனக்குக் கொழந்தை குடுக்குறேன்னு நான் சொல்லவே இல்லையே என் பசங்களை பாத்துக்கத்தான் இந்தக் கல்யாணம், அதோட உனக்கு என்ன கொழந்தையேவா பிறக்காம இருக்கு அதான் ஒருத்தன் இருக்கானே” என்றான்.
அவளால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை அழுது புரண்டாள் சண்டை பிடித்தாள் தாய் தந்தையிடம் புகார் படித்தாள் “எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்திருக்கலாம் நீங்க, இது பெரிய நம்பிக்கை துரோகம் உங்ககிட்ட நாங்க எந்த உண்மையும் மறைக்கல” என்றார் மாசிலாமணி மருமகனிடம்.
அவன் அசையாமல் நின்றான் இனி பேசி என்ன மகளுக்கு அறிவுரை சொன்னார்கள், தாய் வீட்டில் பத்து நாட்கள் இருந்து வருகிறேன் என்று அவர்களுடனே வந்தாள்.
அத்தையின் வீடு சென்றாள் வாசலிலே நிற்க வைத்தார் முத்துலட்சுமி “ஒருதடவை அவனைக் காட்டுங்க அத்த” என்றாள்.
“உனக்குச் சம்மந்தப்பட்ட எதுவும் இங்க இல்ல நீ போலாம்” என்றார், அழுது பார்த்தாள் மிரட்டிப் பார்த்தாள் கெஞ்சி பார்த்தாள் வாசலைத் தாண்டி அவளை உள்ளே வரவிடவில்லை முத்துலட்சுமி பத்து நாட்களும் வாசலிலே தவம் கிடந்தும் லிங்கேஸ்வரனை பார்க்கக்கூட முடியவில்லை அவளால்.
மாசிலாமணியும் அன்னம்மாவும் அறிவுரை கூறி கணவனிடம் அனுப்ப பார்க்க “இனி அங்கே போகமாட்டேன் உங்ககூடவே இருக்கேன்” என்றாள்.
“எனக்கு அங்க யாருப்பா இருக்கா அவன் பசங்களுக்கு நான் வேலைக்காரியா” என்று கதறினாள், யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை அரவிந்தன் வந்துவிட்டான் வரியா இல்லையா என்ற மிரட்டலோடு.
அனைத்தையும் வெறுத்தாள் நடைப்பிணமாக அவனோடு சென்றாள் பேச்சை நிறுத்திவிட்டாள், சமைத்து போட்டாள் அணைத்து வேலைகளும் செய்தாள் அவன் மக்களைப் பார்த்துக்கொண்டாள் அந்த வீட்டிலே இருந்தாள் ஆனால் ஒட்டவில்லை தனியானாள்.
அரவிந்தனுக்கு புரிந்தது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை சமாதானம் செய்யவில்லை அவன் தேவைகளைத் தீர்த்துக்கொண்டான், இப்பொழுதெல்லாம் கண்ணீர்தான் அதிலும் லினேஸ்வரனை காணும்போதெல்லாம் நெஞ்சம் அடைத்தது.
காமாட்சியை “சித்திமா” என்றழைத்து அவள் பின்னே சுற்றும் போதும் செல்லம் கொஞ்சும்போதும் “சித்தப்பா சித்தப்பா” என்று மருதவேலுவிடம் ஒட்டிக்கொண்டு சுற்றும்போதும் உள்ளம் கதறியது.
மீனாதான் தாய் என்று லிங்கேஸ்வரனுக்கு தெரியாது அவனிடம் யாரும் சொல்லவில்லை அவனிடம் தாய் தந்தை இல்லை என்றுதான் சொல்லியிருந்தனர், அவனைப் பொறுத்தவரை மீனா என்பவள் மாசி தாத்தா மற்றும் அன்னம் பாட்டியின் ஏதோ தூரத்து சொந்தம்.
ரகு வாழ்க்கை என்னவென்றே யாருக்கும் தெரியாது சென்றவன் சென்றவன் தான் அதன்பிறகு வரவும் இல்லை அழைக்கவும் இல்லை மாசிலாமணி அன்னம்மா அவர்களோடு அரவிந்தன் குடும்பத்தையும் ஒரு வண்டியில் அனுப்பி வைத்தான் மருதவேலு.
முத்துலெட்சுமியையும் லிங்கேஸ்வரனையும் இவர்களோடு அழைத்துக்கொண்டு இவர்களின் வீட்டிற்க்கே வந்துவிட்டனர் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இங்கேயே அழைத்துவந்துவிட்டனர்.
பேரனுக்கு இங்கே வருவதில் மகிழ்ச்சி என்பதை அறிவார் முத்துலட்சுமி ஆகையால் சில சமயம் அவரும் வருவதுண்டு வீடு வந்து அனைவரும் குளித்து உடைமாற்றி அமர்ந்தனர், நல்ல அலுப்பு அனைவருக்கும் இரவுக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட பழமும் சூடாகப் பாதம் பாலும் அனைவருக்கும் எடுத்துவந்தாள் காமாட்சி.
பெரியவர்கள் உறங்கச் சென்றுவிட பிள்ளைகள் ஒரே ஆட்டம் பத்து மணிக்கு மேல் அதட்டி உருட்டி உறங்கவைத்தனர் மூன்று பேரையும், ஒரு அறையில் அண்ணன் தம்பிகள் மூவரும் உறங்கினர் தங்கள் அறைக்கு மகளைத் தூக்கி கொண்டு வந்தான் மருதவேலு.
“எல்லாரும் தூங்கியாச்சா” என்றாள் காமாட்சி லாப்டப்பை மூடி எடுத்து டேபிளில் வைத்துவிட்டு.
“ஹ்ம்ம் என் இளவரசி க்கு மட்டும் இன்னும் தூக்கம் வரல” என்றவன் மகளைக் கட்டிலில் விடக் குண்டுக் கண்களை உருட்டி உருட்டி வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தாள் மகள்.
“நாளைக்கு ஒரு அரை நாள் வேலை இருக்குங்க மதியம் வந்திடுவேன்” என்றாள் காமாட்சி.
“அதுக்கென்ன போயிட்டு வாங்க நானே கொண்டு போய் விடுறேன் முடியும்போது கூப்பிடுங்க” என்றவன் அவள் கன்னம் கிள்ளி “நானும் என் பசங்களும் எங்க ராணியம்மாவுக்காகக் காத்திட்டு இருப்போம்” என்றான்.
இன்னும் அவனை நெருங்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் “எனக்குத் தெரியும்” என்றதோடு அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள், அவனின் அணைப்பும் இறுகியது.
முகத்தைச் சுருக்கி தன்னை பார்க்கச் சொல்லிச் சிணுங்கிய மகளைப் பார்த்து இருவரும் புன்னகைத்துக்கொண்டனர்.
error: Content is protected !!