Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 10 2

நல்ல வேளையாக விபத்து விடிகாலையில் நடந்த போது உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் இல்லை. பக்கத்தில் இருந்த மற்றொரு சிறு கம்பெனியின் வாட்ச்மேன் பார்த்து விட்டு அவன் முதலாளிக்கு சொல்லியிருக்க அவரும் தன் கம்பெனியை காப்பாற்ற உடனே தீயணைப்பு நிலையத்தில் புகார் கொடுத்ததோடு அவனுக்கும் அழைத்திருக்கிறார்.

அவன் தான் மயக்கத்தில் இருந்தானே? காலை ஒன்பது மணி வரை அவனும் வராமல் செல் அழைப்பும் எடுக்காமல் இருக்க வழக்கம் போல வேலைக்கு வந்திருந்த வேலையாட்களில் ஒருவன் தான் அவனை அழைத்தது.

அன்று நாள் முழுக்க அவனுக்கு வேலை சரியாக இருந்தது. எவ்வளவு இழப்பு, எதெல்லாம் மிச்சம் என்று கணக்கு எடுத்து போலிசின் விசாரணைக்கு பதில் சொல்லி தீ விபத்தின் காரணத்தை கண்டுபிடித்து என்று மூச்சு விடக்கூட நேரமில்லை.

ஒரு வழியாக ஆட்களின் உதவியோடு காப்பாற்ற முடிந்ததை வெளியே எடுத்து வைத்து போலீசில் தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டது என்று சான்றிதழ் வாங்கினான். இதற்கே இரண்டு நாட்கள் ஆகியிருக்க வீட்டைப்பற்றி நினைக்க கூட நேரம் இல்லை.



Advertisement

நல்லவேளையாக கம்பெனிக்கு தீ காப்பீடு செய்திருந்ததால் அவனுக்கு மொத்தமும் நட்டமாகவில்லை. அடுத்த இரண்டு நாட்களும் காப்பீடு செய்த கம்பெனிக்கு அப்ளை செய்வது, தேவையான ஆவணங்களை சேகரித்து இணைத்து என்று பல இடங்களுக்கு அலைந்து திரிந்தான்.

அதுவரை தொழில் அப்படியே நிற்க ஏற்கனவே நேர்ந்த இழப்போடு இப்போது இதுவும் சேர்ந்து கிட்டத்தட்ட ஆரம்ப நிலைக்கே வந்து விடும் சூழல்.

மின்கசிவு பக்கெட் போடும் எந்திரத்தால் ஏற்பட்டிருக்க அதற்கும் காப்பீடு செய்திருந்த போதும் மற்றவற்றுக்கு மட்டுமே இழப்பீடு வந்திருக்க வந்த வரை லாபம் என்று நினைக்க வேண்டிய நிலை.

Advertisement

மேற்கொண்டு தொழில் நடத்த மூலதனத்திற்கு என்ன செய்வது என்று தவித்தவனுக்கு வீட்டைப்பற்றி யோசிக்க ஏது நேரம்?

Advertisement

பல இடங்களில் அலைந்து திரிந்தான். அதில் கோயம்பேட்டில் ஒரு பெரிய மொத்த விற்பனை கடையில் இவனை இடைத்தரகர் போல கேட்க அவசரத் தேவைக்கு வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டான் சுந்தர்.

கிட்டத்தட்ட ஆரம்ப நிலைக்கு வந்ததில் மனம் மிகவும் வலித்தது. பத்து வருட உழைப்பும் வீண். இதில் வீடே மறந்து போய் இருக்க மல்லியை பற்றி அவன் நினைக்கக் கூட இல்லை.

உடலும் மனமும் களைத்து சுந்தர் வீட்டுக்கு வந்த போது ஒரு வாரம் ஓடியிருந்தது. அம்மா மகளையும் வீட்டையும் சமாளிப்பார் என்ற நம்பிக்கையில் வீடு வந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisement

ப்ரியா அப்பாவும் அம்மாவும் இல்லாத நிலையில் காமாட்சி சொன்னதையே கேட்காமல் பள்ளிக்கும் போக மாட்டேன் என்று அடம் பிடித்து அம்மாவை கேட்டு ஒரே பிடிவாதமும் அழுகையும் என காமாட்சியை விழி பிதுங்க வைக்க அவளை சமாளிக்க ஒரே வழியாக கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

ப்ரியா  நாள் முழுக்க ஏகப்பட்ட சாக்லேட், குளிர்பானங்கள், சிப்ஸ் என்று நொறுக்குத்தீனி மட்டுமே  சாப்பிட்டு டிவி முன்னால் எந்நேரமும் கார்ட்டூன் பார்த்தபடி இருந்தாள். இரண்டு நாட்களில்  ப்ரியாவுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் ஒரே நேரத்தில் வாந்தி பேதியும் சுரமும் வந்திருக்க காமாட்சி சுந்தரும் இல்லாத நிலையில் பயந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் ப்ரியாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

வீட்டுக்கு வந்த சுந்தருக்கு வீடு பூட்டியிருக்க யாரைக் கேட்பது என்றே புரியவில்லை. பக்கத்தில் இருந்தவர்களும் மூவருமாக இரண்டு நாட்கள் முன்னால் வெளியே போனதை மட்டுமே பார்த்ததை சொல்ல யாருக்கும் அவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

நல்ல வேளையாக ப்ரியாவின் தோழியான பக்கத்து வீட்டு உமா  மட்டும் ப்ரியா வாந்தி எடுத்தபடி ஆட்டோவில் போனதை பார்த்ததாக சொல்ல சுந்தர் எதோ ஒரு உள்ளுணர்வில் பக்கத்தில் இருந்த நர்சிங் ஹோமில் போய் விசாரித்தான்.

காமாட்சி ப்ரியாவை அங்கே தான் சேர்த்திருந்தார். அவருக்கும் அந்த ஊர் பழக்கம் இல்லை என்பதால் ஆட்டோ காரரிடம் கேட்க ஆட்டோ காரர் தான் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது.

அடுத்த ஒரு வாரம் சுந்தரின் நிலைமை இன்னும் படு மோசமாக இருந்தது. ஒரு பக்கம் மகள் அவனை கட்டிக் கொண்டு விடவே இல்லை. மறுபக்கம் மறுபடி தொழிலை முன்னேற்ற கடுமையாக உழைக்க வேண்டிய நிலைமை.

மல்லியின் அருமை அந்த நேரம் அவனுக்கு தெரிந்தாலும் அவளைத் தேடும் நிலையில் அவன் இல்லை. எங்கேயோ அவள் நன்றாகத் தான் இருப்பாள் என்ற உள்ளுணர்வில் கையில் இருக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்தினான்.

அவனைப் பொறுத்தவரை அவன் நியாயம் இது தான். ஒரு வழியாக ப்ரியா உடல்நலம் தேறி வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆனது. வீட்டுக்கு மருத்துவமனை செலவுக்கு தொழிலை சிறிய அளவிலாவது தொடர என்று பணத்திற்கு தேவை அவன் சக்திக்கு மீறி இருந்தது.

அதுவே அவன் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமிக்க எல்லாம் ஓரளவுக்கு சமாளித்து அவன் நிதானத்திற்கு வர பத்து நாட்கள் ஆகியிருந்தன.

ஒரு வழியாக  நால்வரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டுக்கு வந்ததும் சுந்தரின் அப்பாவுக்கு மறுபடி உடல் நிலை சரியில்லாமல் போனது. அமைதியாக ஓய்வெடுக்க வேண்டியவர்  இருபது நாட்களாக காமாட்சி ஏவிய வேலைகளை செய்ய ஓடியதில் அவருக்கு முடியவே இல்லை.

ஒரே நேரத்தில் எல்லாம் கழுத்தைப்பிடிக்க சுந்தர் திண்டாடிப் போனான். மல்லி இருந்தால் தான் மேற்கொண்டு குடும்ப வண்டி ஓடும் என்று இப்போது புரிந்தது அவனுக்கு. ஆனால் அவளை எங்கே தேடுவது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு மல்லியின் போன் கண்ணில் பட்டது.

அதில் வந்திருக்கும் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகளை பார்த்தால் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியுமோ என்று எடுத்தான். அது சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டிருக்க சார்ஜ் போட்டவன் அதில் சாவித்திரி ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை பார்த்தான்.

மல்லி சாவித்திரியோடு போன மறுநாளே மல்லியின் போன் ப்ரியாவின் கையில் கிடைத்திருந்தது. அம்மாவோடு பேச வேண்டும் என்ற ஆவலில் ப்ரியா அதை எடுத்து நோண்ட வாட்சப்பில் சாவித்திரி அனுப்பியிருந்த செய்தியை பார்த்தது அவள் தான். எழுத்துக் கூட்டி அதை படித்தவள் பாட்டியிடம் காட்ட அப்போது காமாட்சி மல்லி மேல் இருந்த கோபத்தில் செல்லைப் பிடுங்கி பிரிஜ்ஜின் மேலே வைத்ததோடு சரி.

சுந்தருக்கும் சாவித்திரியை ஞாபகம் இருந்தது. அதோடு மல்லி அவனிடம் அவளை முகநூலில் மீண்டும் சந்தித்ததை சொல்லி இருக்க இப்போது அவனுக்கு மல்லி எங்கே இருக்கிறாள் என்று தெரிந்தது.

தந்தையை மறுபடி மருத்துவமனைக்கு கூட்டிப்போய் வைத்தியம் பார்ப்பது, மகளை பள்ளிக்கு கூட்டி சென்று மெடிக்கல் சான்றிதழ் காட்டி மீண்டும் சேர்த்தது என்று ஓடிக்கொண்டிருந்தான்.

இந்த மாதிரியே இரண்டு மாதங்கள் வேகமாக ஓடி விட எல்லோர் பொறுப்பும் ஏற்க முடியாது என்று அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போய் சேர்ந்தான்.

அம்மா அப்பாவை ஏய்த்த அவன் தம்பியும் தம்பி மனைவியும் அவனை எதிர்பார்க்கவில்லை. காதலித்து வீட்டை விட்டு பத்து வருடங்கள் முன்பு ஓடிப்போன அண்ணன் மீண்டும் ஊருக்கு வருவான் என்றே நினைக்காத அவன் தம்பி வந்ததுமில்லாமல் சொத்தில் அவன் பங்கை கேட்டு பஞ்சாயத்து வைப்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை.

சுந்தரின் நிபந்தனை இது தான். ஒன்று அவன் பங்கு சொத்து வர வேண்டும். அல்லது அவர்கள் அம்மா அப்பாவை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊரார் முன்னால் பஞ்சாயத்து வைக்க கணவன் மனைவி இருவரும் எது லாபம் என்று பார்த்து அவர்களை தாங்களே பார்த்துக்கொள்வதாக சொன்னார்கள்.

சுந்தர் அவர்களை வாய் வார்த்தையாக நம்பாமல் ஊரார் முன் எழுதி வாங்கியதோடு அவர்கள் எதிரிலேயே அம்மா அப்பாவிடம் எதுவாக இருந்தாலும் தனக்கு அழைத்து சொல்ல கூறினான்.

காமாட்சிக்குமே மல்லி இல்லாமல் [பெரிய மகனின் குடும்பத்தை பார்ப்பதை விட சின்ன மகனின் வீட்டில் ஓய்வாக இருப்பது நல்ல முடிவாக தெரிய அங்கேயே இருந்து கொண்டார்.

மகளுடன் மறுபடி வீட்டுக்கு வந்த சுந்தர் அடுத்து மகளை சமாளிக்க தான் திணறிப் போனான்.

அவனுடன் இருக்கும் நேரமெல்லாம் மகள் அம்மாவையே கேட்க மல்லி இல்லாமல் அவனால் அந்த வீட்டில் இருக்க முடியாத நிலை. ப்ரியா எப்படி பேசனாலும் சமாதானம் ஆகாமல் ஒரே பிடியாக அம்மாவை கேட்டு அழுது அடம் பிடிக்க இதோ அவன் மல்லியின் முன்னால் இப்போது இருக்கிறான்.

இதற்கும் அவன் மல்லி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது. சாவித்திரி ஐடியில் சொந்தமாக தொழில் செய்வதாக கூறியதோடு கம்பெனி விவரங்களை முன்பு மல்லி சொன்னதை வைத்து அவளின் அலுவலகத்தை கண்டு பிடித்தான். முன்பே சாவித்திரிக்கு அவனை பிடிக்காது என்று சுந்தருக்கு தெரியும். அதனால் அவளிடம் மல்லியை பற்றி விசாரித்தால் சொல்ல மாட்டாள் என்று அவள் வீட்டு முகவரியை தொலைபேசி எண்ணை வைத்து கண்டுபிடித்து இங்கே வந்திருந்தான்.

அவன் நினைத்த மாதிரியே மல்லி இங்கே இருந்தாலும் அவள் அவன் கூப்பிட்டதும் வருவாளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!