Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 11 2

அத்தியாயம் 11.2

மல்லி அன்று சமையலில் நிறைய சொதப்பினாள். மட்டன் பிரியாணியில் உப்பு கூடி விட மீன் வறுவலில் காரம் கண்ணீரை வரவழைத்தது. எப்போதுமே உணவை பார்சல் செய்வதற்கு முன் ருசியை சரி பார்ப்பாள். அதில் தான் செய்த தவறுகள் தெரிந்து மல்லிக்கு கண்களில் கண்ணீரே அரும்பி விட்டது.

கோபத்துடன் அதை துடைத்தவள் ‘நீ தானே தேவையில்லாம பழசை நினைச்சு  சமையலை கோட்டை விட்டே? இப்ப என்ன செய்வது என்று யோசி ‘என்று மூளைக்கு கட்டளை இட்டாள். இருந்தாலும் மதிய உணவை அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட பதட்டம் அதிகரித்தது.



Advertisement

இப்போது போய் என்ன செய்வது என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள்.கோபமும் அழுகையுமாக உட்கார்ந்து இருந்தவளை ராஜனின் அம்மா  சிவகாமி வந்து பார்த்தார்.

ஆரம்பத்தில் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தவரை மல்லி ஓரளவு தொழில் பழகிக்கொண்டதும் இது அவர் வயதுக்கு மீறிய வேலை என்று தடுத்து விட்டாள். டெலிவரி செய்யும் மாணவர்களையே பார்சல் செய்யவும் உபயோகித்துக் கொண்டாள்.

ஆனாலும் அவர் தினமும் உணவுப்பொட்டலங்கள் அனுப்பும் நேரம் சரியாக வந்து விடுவார். அவர் சும்மா வந்து உட்கார்ந்து வேலையை மேற்பார்வை செய்வது, சின்ன சின்ன உதவிகளை செய்வது மல்லிக்கும் உதவியாக இருக்கும் என்பதால் அவள் அதை தடுத்ததில்லை.

Advertisement

இன்றும் அது போல வந்திருக்க மல்லி அமர்ந்திருந்த நிலைமையை பார்த்து என்னவென்று விசாரித்ததில்  அதுவே மல்லிக்கு பெரிய தைரியமாக இருந்தது.

Advertisement

அவரே போய் ருசி பார்த்து விட்டு மளமளவென இரண்டு எலுமிச்சை பழங்களை வெட்டி அதன் சாறை பிரியாணியில் பிழிந்து கலந்து விட்டார். அதில் ஓரளவு உப்பு குறைந்தாலும் இன்னும் உப்பு தெரிந்தது.

மல்லிக்கு மணி வேறு ஆகிக் கொண்டிருப்பதில் பதட்டம் ஆக சிவகாமி யோசித்தபடி பக்கத்தில் இருந்த அடுக்கை திறந்து பாரத்தார். அதில் சாவித்திரி, ராஜனுக்கு கொடுத்தனுப்ப  வைத்திருந்த வெள்ளை சோறை பார்த்ததும் மளமளவென ஒரு வெங்காயத்தை வெட்டி கூட சில பூண்டு பற்கள், ஐந்து பச்சை மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி அதோடு சோறை போட்டு கலந்து அதை பிரியாணியில் கொட்டி மொத்தமாக கலந்து விட்டார்.

இப்போது பிரியாணி நெய் வாசனையோடு இன்னும் சுவையாக இருந்தது. மல்லி அடுத்து மீன் வறுவலை என்ன செய்வது என்று கவலையோடு பார்க்க சிவகாமி அதில் கொஞ்சம் வாயில் போட்டு பார்த்தவர “இந்த காரம் இருக்கட்டும் மரகதம். பிரியாணி நெய் போட்டதால காரம் கம்மியா இருக்கு. இதுல தூக்கலா இருக்கறது நல்லா தான் இருக்கும்” என்றவர் கொஞ்சம் உப்பை மட்டும் அதில் தூவி கலந்து விட்டார்.

Advertisement

அதில் இரண்டுமே உப்பு காரம் இரண்டுமே சரியாக இன்னும் ருசியாகவே இருந்தது. வந்திருந்த மாணவர்களோடு இவர்களும் பரபரவென வேலை செய்ய வழக்கமான நேரத்திற்கு எல்லாமே தயாராக இருந்தது.

புதிதாக செய்யாமல் அதையே சாவித்திரி, ராஜனுக்கும் மல்லி மதிய உணவாக அனுப்பி வைக்க அதன் பின்னரே மல்லி ஆசுவாசமாக உட்கார்ந்தாள்.

சற்று நேரம் அமைதியாக மல்லியை கவனித்த சிவகாமி “தொழில் ஆரம்பிச்ச முதல் நாளில் இருந்து தெளிவா ஒரு நாள் கூட சமையலில் உப்பு காரம் கூடாம செய்ற பொண்ணுக்கு இன்னிக்கி என்ன ஆச்சு?” என்று கேட்க மல்லிக்கு சற்று நேரம் சாப்பாட்டை பற்றிய பதட்டத்தில் மறந்திருந்த சுந்தரும் ப்ரியாவும் நினைவுக்கு வந்தனர்.

“கொஞ்சம் மனசு சரியில்லை அம்மா!” என்று மல்லி மெல்லிய் குரலில் சொல்ல சிவகாமி அவளை பரிவாக பார்த்தார். மல்லி அவர் வீட்டுக்கு பக்கத்தில் தன் மல்லிஸ் கிச்சனை ஆரம்பித்த போது ராஜனிடம் அவளைப் பற்றி விசாரித்தார். ராஜன் சுருக்கமாக மல்லியின் நிலைமையை சொல்லியிருந்தான்.

சிவகாமி இதுவரை மல்லியிடம் அதைப்பற்றி விசாரிக்காவிட்டாலும் அதனாலேயே அவளிடம் கூடுதல் அக்கறை காட்டினார். இந்த மூன்று மாதங்களில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு இருந்தது.

அவளைத் தன் மகள் போலவே நினைத்தார் சிவகாமி. இன்று அவள் வந்த புதிதில் இருந்தது போலவே கலங்கித் தெரிவது அவருக்கு கவலையைத் தந்தது.

மெல்ல எழுந்து அவள் அருகில் போனவர் தன் கையை அவள் தலையில் வைத்தார்.

“என்ன ஓடுது இந்த குட்டி மண்டைக்குள்ள? உள்ள என்ன போட்டுட்டு உழப்பிட்டு இருக்கே புள்ள?”

என்று அவர் கேட்க மல்லி அழுதே விட்டாள்.

சின்ன வயதில் அவள் எதற்காவது பயமோ அல்லது கவலையோ பட்டாலோ அவள் அம்மா இப்படி தான் அவள் தலையில் கை வைத்து ஆட்டி “என்ன யோசனை இந்த குட்டி மண்டைக்குள்ள..?” என்று கேட்பார்.

இன்று சிவகாமி அம்மா அதே போல கேட்கவும் அம்மாவின் நினைவு வந்து விட அந்த நொடியில் அவளுக்கு அம்மாவை பார்த்தே ஆக வேண்டும் போல இருந்தது. அது முடியாது என்பது உறைக்க அழுகை உடைபெடுத்தது

அவள் அழுது முடிக்கும் வரை சிவகாமி அவள் தலையில் கையை வைத்து வருடிக்கொண்டு இருந்தார். காலையில் சுந்தரை பார்த்ததில் இருந்து அவள் உள்ளே பொங்கிக் கொண்டு இருந்த ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், ஏக்கம் எல்லாம் அந்த அழுகையில் வெளியே வழிந்ததில் அவள் மனம் சற்றே அமைதி அடைந்தது.

சிவகாமி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை குடித்தவளுக்கு சற்றே ஆசுவாசமாக இருந்தது.

“என்ன பிரச்சனைமா? இந்த அம்மா கிட்ட சொல்லலாம் னா சொல்லு!”

அவர் பரிவாக கேட்ட விதத்தில் மல்லி அவள் மனதில் இருந்த குமுறல்களை எல்லாம் கொட்டி விட்டாள்.

அவள் குடும்பப்பின்னணி, சுந்தருடன் நடந்த திருமணப்பேச்சு, அத்தை போட்ட சண்டை, அப்பாவின் கோபம், சுந்தரின் காதல், அவர்களின் திருமணம், பத்து வருட திருமண வாழ்க்கை என வெறுமையான குரலில் மல்லி சொல்ல சொல்ல சிவகாமி குறுக்கே இடையிடாமல் அமைதியாக கேட்டார்.

சுந்தர் ஆறு மாதங்களுக்கு முன் நடந்து கொண்ட முறை, அவளுக்குத் தெரியாமல் அவன் மறுமணம் செய்ய மேட்ரிமோனியில் பெண் பார்த்தது, அதை சுஷ்மிதா அவளிடம் சொன்னது , அது தெரிந்த பிறகு அவள் கேட்டதற்கு அவன் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளியது என மறுபடி அந்த நாட்களை மீண்டும் பேசப்பேச அவள் கோபமும் தனக்கு ஏன் இப்படி நடந்தது என்ற ஆதங்கமும் மகளைப் பிரிந்து அவள் படும் வேதனையும்  மறுபடி சொல்லும்போதே  மல்லி மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

  உண்மையில் சுந்தரின் வருகை சற்று ஆறி இருந்த அவள் மனக்காயத்தை கிளறி விட மீண்டும் அவளுக்கு உயிர் போகும் வாதனை. எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும் என்ற கேள்வி விடாமல் குடைந்தது.

அதை எல்லாம் விட சின்ன குழந்தையை விட்டு விட்டு இப்படி இருக்கிறோமே என்ற குற்றவுணர்வும் வேறு அவளை வாட்டியது.

அதையும் சிவகாமியிடம் அவள் பகிர்ந்து கொள்ள சிவகாமி “அது தான் அம்மா!” என்று ஒரு வார்த்தையில் முடித்தார்.

இப்போது சுந்தர் வந்து அவளை வீட்டுக்கு அழைப்பதையும் அவன் செய்த அக்கிரமத்துக்கு மன்னிப்பு கூட கேட்காமல் வீட்டுக்கு அழைப்பதையும் சொன்னவளை சிவகாமி கேள்வியாக பார்த்தார்.

“இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கே மல்லி?”

“எனக்கு மறுபடி அந்த வீட்டுக்கு போகவே விருப்பம் இல்லம்மா. எப்ப என்னை கழுத்தைப்பிடிச்சு வெளிய தள்ளினாரோ அதுல இருந்து அத்தானோட வாழவும் விருப்பம் இல்லை. அதனால பொண்ணை என் கிட்ட விட்டுட சொல்லி கேக்கப் போறேன். என் பொண்ணை என் கிட்ட கொடுத்துட்டு அவர் சுஷ்மிதாவோ, இல்ல மதுமிதாவோ கல்யாணம் பண்ணிக்கட்டும்….”

என்று அவளுக்குத் தோன்றிய முடிவை சொன்னாள்.

“மல்லி! நீ செஞ்ச சமையலில்  உப்பும் காரமும் கூடிப்போச்சே என்று அதை கொட்டவா செஞ்சே? கொட்டினா உன் பணமும் உழைப்பும் நஷ்டமாப் போகும். அதனால அதை எப்படி சரி செய்யலாம் என்று தானே யோசிச்சே? கல்யாணமும் அப்படித்தான். பத்து வருஷமா உன் உழைப்பையும்  நேரத்தையும் அதுக்குன்னு முழுசா செலவு பண்ணியிருக்கே.

  நீ கஷ்டப்பட்டு சமைச்ச கல்யாண வாழ்க்கைய சொதப்பிடுச்சு. அதுக்கு காரணமா இருந்தான்னு அவனை வேண்டாம் என்று  இப்படி அவனை உதறி  விட்டால் இவ்வளவு தூரம் நீ பட்ட கஷ்டத்துக்கும் மனவேதனைக்கும் அர்த்தமே இல்லாம போய்டும்.

இதுவரை உன் வாழ்க்கையை அவன் கையில் கொடுத்துட்டு நீ பட்ட கஷ்டங்கள் போதும். இனி உன் வாழ்க்கையை உன் கையில் எடு மல்லி… அதுக்கு அவனை கட்டுப்பட வை. …கூடவே வெச்சிருந்து அவனை கதறக்கூட வை. தைரியமா முன்னால காலை எடுத்து வை. எது உன் மகளுக்கு நல்லது என்று அவளுக்கும் சேர்த்து யோசி…”

என்றவர் மேலே பேசப்பேச மல்லியின் மனம் தெளிவடைந்தது.

அன்று முழுதும் தன் கோபம், வருத்தங்களை தள்ளி வைத்து தெளிவாகயோசித்தவள் தொலைபேசியை கையில் எடுத்து சுந்தரை அழைத்தாள்.

“காலையில நீங்க கேட்டீங்க இல்லை? அது சம்பந்தமா உங்க கிட்ட பேசணும். சாயந்திரம் அஞ்சு மணிக்கு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வர முடியுமா?”

என்று கேட்டாள்.

“ஓ! கோயிலுக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு போகலாம்னு சொல்றியா? கண்டிப்பா வரேன்…”

அவள் சொன்னதை தனக்கு ஏற்றவாறு புரிந்து கொண்ட சுந்தர் உற்சாகமாக பேசினான். காலையில் அவள் நடந்து கொண்ட முறையும் அவள் அவனிடம் காட்டிய கோபமும் இனி அவள் வரமாட்டாளோ என்ற சந்தேகத்தை அவனுள் விதைத்தது.

மகளோ அம்மா எங்கே என்று தினமும் கேட்டுக்கொண்டே இருக்க அவனால் இதற்கு மேல சமாளிக்க முடியவில்லை. எப்படியோ வீட்டில் எல்லாம் சரி செய்து விட்டு அவன் தொழிலை நிம்மதியாக கவனிக்க விட்டால் சரி என்ற நிலைமை அவனுக்கு. இந்த மூன்று மாதங்களில் மல்லியின் அருமை அவனுக்கு நன்றாகவே புரிந்து இருந்தது.

அவன் எது செய்து கொடுத்தாலும் “இது அம்மா செய்யறது போல இல்லை” என்று புலம்பும் மகள் ஒரு பக்கம் என்றால் அலுத்து களைத்து வீடு வருபவனுக்கு மறுபடி வீட்டில் மகளுக்கும் அவனுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்து, வீட்டை பார்த்து  என வேலைகள் ஒரு பக்கம் என்றால் வீட்டுக்கு வந்தால் “அத்தான் …!” என்று அழைத்துக்கொண்டு அவன் பின்னாலேயே சுற்றி வரும் மல்லியை அவனுமே இப்போது நினைத்து ஏங்கினான்.

அதே நேரம் இறங்கிப்போய் அவளிடம் மன்னிப்பு கேட்க அவனால் முடியவில்லை.

“என்ன இருந்தாலும் அவள் என் பொண்டாட்டி தானே? நான் ஏதாவது தப்பு செஞ்சாலும் அவ பொறுத்துப்போக வேண்டியவ தானே? நான் என்ன ஊரில் நடக்காத தப்பையா செஞ்சிட்டேன்? மத்தவனை பாக்கும் போது நான்லாம் சொக்கத்தங்கம்.

எவன் செய்யல இந்த காலத்துல? எதோ ஒரு நிமிஷ சபலத்துல கிறுக்குத்தனம் பண்ணிட்டேன். அத அவ என் மூட் தெரியாம கோவமா கேட்டதுக்கு லேசா ஒரு அடி வெச்சிட்டேன். இதுக்கு போய் ஒருத்தி மூணு மாசமா பெத்த பொண்ண பத்தி கூட யோசிக்காம நாங்க என்ன ஆனோம் என்று கூட பார்க்காம இருந்திருக்கா? ஞாயமா பார்த்தா நான் தான் அவளை மன்னிச்சு இப்ப வீட்டுக்கு பெருந்தன்மையோட கூப்பிடறேன்…”

அவன் நினைத்தபடி மல்லி காலையில் முறைத்துக்கொண்டாலும் இப்போது மல்லி அழைக்கவும் இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மல்லி மேலே பேசுமுன் பதில் சொல்லி போனை அதோடு வைத்து விட்டான். உற்சாகமாக அவன் வேலைகளை விரைந்து முடித்தான்.

சுந்தரிடம் பேசி விட்டு மல்லி தன் முடிவை சாவித்திரியிடம் சொல்ல சாவித்திரி அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.

“பைத்தியமாடி நீ? அன்னிக்கு நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ எப்படி இருந்தே தெரியுமா? நெத்தி முழுக்க இரத்தம். சித்தப்ரமை பிடிச்சவ மாதிரி இருந்தே! ஆஸ்பத்திரியில நீ சுயநினைவு இல்லாம படுத்துட்டு இருந்தப்போ எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா?

இப்ப தான் உன்னைப் பார்த்து கொஞ்சம் ஆறுதல் பட்டேன். பிரியா குட்டிய மட்டும் நாம கூப்பிட்டுக்கலாம்டி. எப்படியும் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்ல. அவள நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம். நீ அவசரப்படாதே வல்லி…!”

என்று கெஞ்சியவளின் அன்பில் மல்லிக்கு நெகிழ்ந்து விட்டாள்.

“நீ இதுவரைக்கும் செஞ்சதே என் உயிர் உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன் சாவி..! “ என்றவள் தன் முடிவுக்கான காரணங்களை விளக்க சாவித்திரிக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மறுக்கவும் முடியவில்லை.

“என்னவோ பண்ணுடி…! அப்புறம் உன் இஷ்டம்…” என்று வைத்து விட்டாள்.

சொன்னபடியே சுந்தர் மாலை ஐந்து மணிக்கு கபாலீஸ்வரர் கோயிலுக்கு கிளம்பியவன் மகளையும் கூடவே அழைத்துக்கொண்டு போனான். மல்லியை அவன் விருப்பத்திற்கு கட்டி இழுக்கும் அங்குசம் அவர்கள் மகள் தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!