Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 3

அத்தியாயம் –3

               சுஷ்மிதா சொன்னதை ஜீரணிக்கவே மல்லிக்கு சில நிமிடங்கள் ஆனது. அப்படியும் தான் ஏதும் தவறாக புரிந்து கொண்டோமோ என்று மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள் மல்லி.

இத்தனைக்கும் சுஷ்மிதா அவளுக்கு தமிழில் தான் அனுப்பி இருந்தாள்.  பதிலேதும் போடாமல் அதையே வெறித்தபடி இருந்த மல்லிக்கு அது சொன்ன அர்த்தம் ஏற்க முடியவில்லை என்றாலும் ஏனோ அதை பொய் என்றும் ஒதுக்க முடியவில்லை.



Advertisement

சில நாட்களாக சுந்தர் நடந்து கொண்ட முறை அவளுக்கு அந்த சந்தேகத்தை கொடுத்தது. அவன் எப்போதும் போல அவளிடம் நடந்து கொண்டிருந்தால் அவள் இந்த செய்தியை நிச்சயம் பொருட்படுத்தி இருக்க மாட்டாள். ஆனால் சுந்தர் மாறி விட்டானே?

ஆனாலும் அவள் அத்தான் அப்படி கிடையாது என்று தனக்குள்ளேயே ஒரு முறை சொல்லிக் கொண்டு தன் மனதை திடப்படுத்திக் கொண்டு மல்லி அடுத்த குறுஞ்செய்தியை டைப் செய்தாள்.

              “இது அவர் தான் என்று எப்படி சொல்றீங்க?  அதை விட நீங்க சொல்றது நிஜம் தான்னு எப்படி நான் நம்பறது? நீங்க யாரு? அதை முதல்ல சொல்லுங்க….”

Advertisement

மல்லி இது பொய்யாக தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதியாக நம்பினாலும் எதோ ஒன்று அவளை அந்த உறுதியில் நிற்க விடவில்லை.

Advertisement

சுஷ்மிதா “வெயிட்…” என்று சொல்லி விட்டு மெசெஞ்ஜெரில் இருந்து மறைய மல்லியால் அந்த சில நொடிகள் தாமதத்தை தாங்க முடியவில்லை. உண்மை பயங்கரமாக அவளை வந்து தாக்கப் போவது போல ஒரு தவிப்பு. ஒரு பயம். மூச்சுத்திணறுவது போல இருக்க சுஷ்மிதா அனுப்பியிருந்த குறுஞ்செய்தியையே வெறித்தபடி இருந்தவள்  டக்கென்று அவள் படத்தை க்ளிக் செய்து சுஷ்மிதாவின் பக்கத்திற்கு போனாள்.

அதில் அவள் விவரங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருந்தாலும் அவளும் சென்னையில் வசிப்பதும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விவரமும் இருந்தது.

அதோடு அவள் புகைப்படமும் ப்ரோபைல் படமாக இருக்க அந்த முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள் மல்லி.

Advertisement

அதில் சுஷ்மிதா ஒரு பச்சை வண்ண லேஹெங்காவில் மெல்லிய ஒப்பனையோடு அழகாக சிரித்தாள். திருமணத்திலோ அல்லது ஏதும் பார்ட்டியிலோ அந்த படத்தை எடுத்திருக்க வேண்டும். சுற்றுப்புறம் அவ்வளவு ஆடம்பரமாக இருந்தது.

பார்க்கவும் கிட்டத்தட்ட அவள் வயது சொல்லலாம். இன்னும் திருமணம் ஆகாததாலோ அல்லது தன் காலில் நிற்கும் துணிவோ எதோ ஒன்று சாதாரணமாக இருந்தவளை கம்பீரமான பெண்ணாக அழகாக காட்டியது.

பார்த்தாலே படித்த பெண் என்று தெரிந்தது. என்னவோ அவள் படம் பார்க்க பார்க்க மல்லிக்கு நம்பிக்கை உடைய ஆரம்பித்தது.

அவள் உள்ளுணர்வு அத்தான் எதிர்பார்க்கும் பெண் இப்படித்தானோ என்று யோசித்தது. அவள் சுஷ்மிதாவை பார்த்த பார்வையில் இப்போது ஆராய்ச்சி இருந்தது.

‘என்னிடம் இல்லாத என்ன விஷயம் அப்படி இவளிடம் இருக்கு?’

இன்னும் சுஷ்மிதா அவள் சந்தேகத்தை உறுதி செய்யவில்லை. ஆனாலும் இப்போது மல்லிக்கு இது நிஜமாக இருக்கலாம் என்ற எண்ணம் முளைத்து மடமடவென வேர் விட ஆரம்பித்தது.

அவள் மேலே யோசிப்பதற்குள் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஓசை வர சுஷ்மிதாவிடமிருந்து மடமடவென் குறுஞ்செய்திகள்.

அத்தனையும் படங்கள். சுந்தர் ‘லெட்அஸ் மேரி’ என்ற பரிவர்த்தனை தளத்தில் விண்ணப்பித்திருந்த அவன் பக்கத்தில் இருந்து எடுத்த ஸ்க்ரீன்ஷாட் படங்கள் தான் அவை.

பெயர் தொழில் விவரங்களை எல்லாம் உண்மையாக கொடுத்திருந்தவன் குடும்ப விவரம் என்பதில் மட்டும் சிங்கள் என்று கொடுத்திருந்தான். குழந்தைகள் என்று கேட்டிருந்ததற்கும் இல்லை என்று கொடுத்திருந்தான்.

அப்போதும் எப்படியும் இது பொய்யாக இருக்காதா என்று மல்லிக்கு நப்பாசை விடவில்லை.

“இதுல அவர் படமே இல்லையே? எப்படி நீங்க அவர் என் கணவர் என்று சொல்றீங்க? சுந்தர் என்கிற பேரில் தொழில் செய்யறவங்க வேற யாரும் இருக்க மாட்டாங்களா என்ன?”

உண்மையில் மல்லிக்கு இந்த அளவு எல்லாம் யோசிக்கவோ பேசவோ தெரியாது.  ஆனால் இது அவள் வாழ்க்கையையே ஆட்டம் கொள்ள வைக்கும் சூழ்நிலை அல்லவா? அதனால் இதை தீரத் தெளிந்து கொள்ளும் முடிவு அவளுக்குள் திடமாக வந்திருந்தது.

“நான் பாக்கும்போது அவர் போட்டோ போட்டிருந்தார். இப்ப பார்க்கும் போது இல்லை. அதை எடுத்திருக்கார். ஏன் என்று தெரியலயே..!”

மல்லிக்கு இப்போது சுஷ்மிதா மேல் தான் சந்தேகம் வந்தது. சுந்தர் கொஞ்ச நாளா எதோ சிந்தனையோடு கவலையோடு இருப்பதை அவளும் பார்த்தாளே? ஒரு வேளை இது அவன் தொழிலில் ஏதும் பழி வாங்க செய்யும் முயற்சியாக இருக்குமோ?

அவளுக்கு எந்த விவரமும் தெரியாது என்றாலும் அவளுக்கு புரிந்த வரை சுந்தருக்கு எதிரான சதி என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போதும் கணவனை நம்பச் சொல்லியது அந்த பேதை உள்ளம். நம்புவது தானே அவளுக்கு இருக்கும் ஒரே வழி. அந்த நம்பிக்கை பொய்த்துப் போனால்? அதை நினைக்கவே பயமாக இருந்தது.

உண்மையில் அவள் நம்பிக்கைக்கும் பயத்துக்கும் நடுவே மாறி மாறி யோசித்து கிட்டத்தட்ட பைத்தியமாக ஆகிக்கொண்டு இருந்தாள்.

“மேம் ! நான் சும்மா சொல்லல. பாருங்க! நானும் ஒரு கௌரவமான குடும்பத்த சேர்ந்த பொண்ணு தான். எனக்கு வீட்டுல பெரியவங்க யாரும் இல்ல. என்னோட பெற்றோர் சமீபத்துல இறந்து போய்ட்டாங்க. அதனால நானே மாப்பிள்ளை தேட வேண்டிய நிலைமை.

நான் அவர் ப்ரோபைல் பார்த்து பிடிச்சு போய் அப்ளை பண்ணதும் அவர் எனக்கு வாட்சப்ல பதில் போட்டு இருக்காரு. அவர் போட்டோவும் மறுபடி அனுப்பி இருக்காரு. இதோ பாருங்க…வர வாரத்துல என்னை சந்திக்கறதா சொல்லி இருக்காரு…”

என்று சொல்லி விட்டு வாட்சப்பில் சுந்தர் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளையும் ஸ்க்ரீன்ஷாட்களாக எடுத்து அவளுக்கு அனுப்பி வைக்க  அது அவன் செல்பேசி எண் தான்.

கண்கள் இருட்டி மயக்கம் வரும் போல இருக்க  மல்லி அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்தவள் தான்.

சுஷ்மிதாவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே மொபைலலை அணைத்து வைத்தாள். பதிலும் தான் என்ன சொல்லி விட முடியும்?

               என்ன செய்வது என்று கூட புரியாமல் இடிந்து போனாள். பத்து வருடங்களாக அவள் கட்டிய கூடு ஒரே நொடியில் தரைமட்டமாகி விட்டது. ஆக்கியவன் அவள் காதல் கணவன் சுந்தர்.

அப்போதும் இந்த முடிவுக்கு வரும் அளவுக்கு அவள் அத்தானுக்கு அவள் மேல் என்ன வெறுப்பு? அவள் பார்க்கும்படி இல்லையா? அவனையும் வீட்டையும் பொறுப்பாக பார்க்கவில்லையா? அவன் தேவைகளை பார்த்துப்பார்த்து கவனிக்கவில்லையா? இல்லை அவர்களுக்கு தான் பேர் சொல்ல வாரிசு இல்லையா? எல்லாம் இருந்தும் ஏன் அவனுக்கு இப்படி புத்தி போனது?

ஏன் ஏன் என்ற கேள்வி அவள் மூளையை வண்டாகக் குடைய உட்கார்ந்திருந்த சோபாவிலேயே மனபாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விட்டாள். ஆனால் அப்போதும் அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

தாங்க முடியாத மனவேதனையில் தலையைப்பிடித்து கொண்டு உட்கார கண்கள் அருவியாக மனதின் வேதனையை உருக்கி வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் எவ்வளவு கொட்டினாலும் உள்ளே இருக்கும் வேதனை இனி அவள் கட்டை வேகும் வரை போகாது என்பது அந்த கண்களுக்கு தெரியவில்லையே.

பத்து வருடங்களுக்கு முன்னால் அவள் பள்ளியில் இருந்து வரும்போது சுந்தர் பேசியது இந்த நேரத்தில் நினைவு வந்தது.

அன்று தான் அவள் அப்பா அவன் அம்மாவிடம் அவர்கள் திருமணம் நடக்காது என்று கோபத்தோடு சொல்லி இனி இங்கே வரவே கூடாது என்று துரத்திய நாள்.

காமாட்சி சுந்தரிடம் நடந்ததை சொல்லி “தம்பி! அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்? உன் மருமகனுக்கு உன் மல்லிக்காட எழுதி வைன்னு கேட்டேன். அதுக்கு தங்கச்சின்னு கூட பாக்காம எங்கள கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டான்..உங்கப்பாவுக்கும் வீட்டு மாப்பிளை என்று மரியாதை கொடுக்கல. உன்னையும் வருங்கால் மாப்பிள்ளயாச்சே என்று மதிக்கல!

சொந்த காலில் நின்னு உழைச்சு சம்பாதிச்சு காப்பாத்த வக்கில்லாதவனுக்கு என் பொண்ண குடுக்க மாட்டேன்னு கேவலமா பேசி துரத்திட்டான்,

 அப்படி என்ன இவன் பொண்ணு பெரிய சீமை சித்ராங்கி? அம்மாவையே அவமானப்படுத்தின அந்த குடும்பத்து பொண்ணு இனி நமக்கும் வேணாம்டா! நான் அவள விட நல்ல பொண்ணா பாத்து உனக்கு கட்டி வெக்கிறேன்?” என்று மகனிடம் ஒப்பாரி வைக்க சுந்தர் அவரிடம் தான் சண்டைக்கு போனான்.

“நீங்க ஏம்மா மாமா கிட்ட மல்லிக்காட கேட்டீங்க? எனக்கு மல்லி மட்டும் போதும்மா. அவரோட சொத்துல ஒத்த பைசா வேணாம். ஏற்கனவே மாமா நமக்கு நிறைய செஞ்சிருக்காரு. அவர் கிட்ட இன்னும் நீங்க கடைசி வரைக்கும் வசூல் பண்றது நல்லா இல்ல…”

“போடா லூசுப்பயலே! உனக்காக தான் நான் பேசறேன். மாமா குடுக்கற காச வாங்கி ஜம்முனு தொழில் ஆரம்பிச்சு முதலாளியா இருப்பானா? அதை விட்டுட்டு வெட்டி ரோசப்படறான்! அப்படி ஒண்ணும் அந்த மல்லி தேவையில்ல. …”

என்று காமாட்சி பேசிக்கொண்டிருக்கும் போதே சுந்தர் பட்டென்று வெளியே கிளம்பி விட்டான்.

மல்லி பள்ளி விட்டு வரும் நேரம் அவளுக்காக அங்கே காத்திருந்தான். அவனுக்கு மல்லி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

மல்லி அவன் இருப்பதை தொலைவிலேயே பார்த்து விட்டாள். ஆனால் காலையிலேயே அவள் அப்பா சொல்லி தான் அனுப்பி இருந்தார்.

இனி அத்தை குடும்பத்துடன் எந்த பேச்சும் கூடாது. முக்கியமாக சுந்தரோடு பேசுவது அறவே கூடாது என்று கண்டித்து சொல்லி இருந்தார்.

அதனால் மல்லி சுந்தரைப் பார்த்தும் பாராதது போல போக முற்பட அவள் எதிரேயே வந்து நின்று விட்டான் சுந்தர்.

“என் முகத்தைக் கூட பார்க்க பிடிக்கலியா மல்லி…?”

சுந்தரின் ஆழ்ந்த குரல் மல்லியை அப்பாவின் உததரவை மீற வற்புறுத்தியது. அப்போதும் அப்பாவின் மேல் இருந்த பயம் அவளை மேலே நடக்க சொல்ல அவனை சுற்றிப் போக நடந்தவளை கையைப் பிடித்து நிறுத்தினான் சுந்தர்.

சின்ன வயதில் இருந்து அவர்கள் ஒருவருக்கொருவர் என்று வீட்டில் பேசி இருந்தாலும் மல்லி பெரிய பெண்ணாக ஆன பிறகு சுந்தரிடம் சாதாரணமாக பேச அவர்கள் வீட்டில் விட்டதில்லை.

இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போது கூட சுந்தர் ஒரு புன்னகை செய்வான். அவளும் ஒரு வெட்கப்புன்னகையோடு ஓடி விடுவாள். அவ்வளவுதான். இருவரும் பேசியது கூட கிடையாது.

இப்போது அவன் கையைப் பிடித்து நிறுத்தவும் மல்லிக்கு தங்களை யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் தான் முதலில் இருந்தது.

இரட்டை ஜடை பின்னலோடு பள்ளிச் சீறுடையான பாவாடை தாவணியில் வளர்ந்த குழந்தை போல தான் தெரிந்தாள் மல்லி. கண்கள் இரண்டும் பயத்தில் உருள சுற்றி முற்றி பார்த்தவள் “கையை விடுங்க அத்தான்..! யாராவது பார்த்து அப்பா கிட்ட சொன்னா அவ்வளவுதான்…” என்று தவித்தவளை “அப்ப நான் உனக்கு வேணாமா மல்லி? எனக்கு ஆனா நீ வேணும் போல இருக்கே…இன்னும் சொன்னா நீ மட்டும் தான் வேணும் போல இருக்கே…” என்று கேட்டவனை மல்லிக்கு உள்ளுக்குள் ரொம்பப் பிடித்தாலும் அப்பாவின் மேல் பயம் இருந்ததால் அவனைப் பார்த்தவள் அப்படியே ஒன்றும் சொல்லாமல் ஓடி விட்டாள்.

சுந்தர் விடாமல் தினமும் வந்து அவளுக்காக காத்திருக்க வரும்போதெல்லாம் அவன் மனதைச் சொல்ல அவளை எவ்வளவு அவனுக்கு பிடிக்கும் என்று அவளுக்கு புரிய வைக்க மெல்ல மெல்ல மல்லியின் மனமும் அவன் பக்கம் சாய்ந்தது.

அப்பாவை அவள் குடும்பத்தை விட்டு அவனோடு கிளம்ப துணிவைத் தந்தது. இந்த பத்து வருடங்களில் அவள் வாழும் வாழ்க்கையை அவள் அத்தான் அவளை எப்படி பார்த்துக் கொள்கிறான் என்று பார்க்க அம்மா அப்பா தம்பி வரவில்லையே என்று ஏங்கி இருக்கிறாளே தவிர அவர்கள் இல்லாத குறையை உணராதபடி தான் சுந்தர் இத்தனை ஆண்டுகள் அவளை வைத்திருந்தான்.

இப்போது அதே சுந்தர் அவளை வெறுத்தது ஒரு பக்கம் உயிர்போகும் வலியைத் தந்தது என்றால் இனி தனக்கும் தன் மகளுக்கும் எதிர்காலத்தில் என்ன கதி என்று நினைத்துப்பார்க்க  கூட அவளால் முடியவில்லை.

அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு விரட்டி விடுவானோ?  அப்படி விரட்டினால் அவள் எங்கே போவாள்? அவள் குடும்பம் இந்த பத்து வருடங்களாக அவள் என்ன ஆனாள் என்று கூட பார்க்கவில்லை. அவளைப்பற்றி அக்கறையும் காட்டவில்லை. அவளும் குழந்தையும் எங்கே போவார்கள்….?

இதையெல்லாம் நினைத்து அழுது அழுது ஓய்ந்தவளுக்கு சுந்தர் வந்தால் அவனிடம் கேட்பதா வேண்டாமா என்று வாசலில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்க கண்கள் எரிய நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தாள். மணி ஒன்று.

வெளியே கதவை படபடவென தட்டும் சத்தம் கேட்க மல்லி இயந்திரகதியில் நடந்து போய் கதவைத் திறந்தாள்.

சுந்தர் வருவான் என்று வெளி கேட் பூட்டாமல் வைத்திருந்ததால் அவனே கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான். அந்த இரவு நேரத்தில் வந்தது யாராகவோ கூட இருக்கலாம். யாரென்று பாத்து கதவைத் திறக்க வேண்டும் என்ற அறிவு கூட அவளுக்கு வேலை செய்யவில்லை.

அந்த அளவு அவள் மனதோடு மூளையும் மரத்துப் போய் இருந்தது.

               வெளியே சுந்தர் கலைந்த தலையும் கசங்கிய உடையும் சிவந்த கண்களுமாக நின்றிருக்க மல்லிக்கு அந்த நேரத்தில் சுஷ்மிதா பற்றி கேட்கும் துணிவு கூட இல்லை.

               உள்ளே நுழைந்த சுந்தர் இன்னும் பட்டுப்புடவையில் நின்று கொண்டிருந்த மல்லியை மேலும் கீழும் பார்த்து விட்டு உள்ளே நடக்க மேஜை மேல் இருந்த உணவு பாத்திரங்கள் கண்ணில் பட முகத்தை சுளித்தவன் நேராக தானிருந்த அறைக்குள் போனவன் உடைகளைக் களைந்து இலகுவான இரவு உடைக்கு மாறி விட்டு திரும்ப வாசிலில் நின்றிருந்த மல்லியை பார்த்ததும் புருவம் சுளித்து “என்ன?” என்று கேட்டான்.

               துரோகம் செய்த அவன் அதட்ட மல்லிக்கு தான் பயத்தில் திக்கியது.

“வந்து…சாப்பாடு….எ..” என்று மல்லி ஆரம்பிக்கும் போதே சுந்தர் “நான் சாப்பிட்டாச்சு…நீ போய் படு…” என்று அவளை முறைத்தபடி சொன்னவன் படாரென கதவை அறைந்து சாத்தி தாழிட்டுக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!