Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 17

செந்திலையும் சதீஷையும் சொத்துப் பிரிக்க போவதாக சொல்லி வர சொல்லி விட்டார் மதுராம்பாள்.

வானதியின் காரியத்துக்கு கூட வராத அவர்களின் மனைவிமார்கள், மதுராம்பாள் கீழே விழுந்த செய்தி கேட்ட பின்னும் வராதவர்கள்,

 ஓடி வந்து விட்டார்கள் இப்போது மட்டும்!

மதுராம்பாள் கீழே விழுந்த அடுத்த நாள் இளைய மகன்கள் இருவரையுமே பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு அழைத்த போது,



Advertisement

“அய்யோ இப்ப மட்டும் போய்டாதீங்க. அப்புறம் உங்கம்மா உங்க கிட்ட சத்தியம் கித்தியம் வாங்கிட போறாங்க!

அப்புறம் காலத்துக்கும் அந்த மூணு பொம்பள பிள்ளைங்கள நம்ம தலையில் கட்டிடுவாங்க” என்று சதீஷை தடுத்தவள், இதையே சொல்லி செந்திலையும் தடுத்து விட்டாள்!

ஆனால் சதீஷ் அதெல்லாம் கேட்டு விட வில்லை!

Advertisement

அம்மா சொன்னதைக் கேட்ட பின் மனம் கேளாமல் அவன் மட்டும் வந்து பார்த்து சென்றிருந்தான்!

Advertisement

ஆனால் இப்போது மட்டும், பொண்டாட்டி சகிதம் வந்து இறங்கிய செந்திலையும் சதீஸ் கூட ஜோடிப் போட்டுக் கொண்டு வந்த சூர்யாவையும் கண்டு மனம் வெதும்பினார் அவர்.

அப்போது வராதவர்கள், இப்போது சொத்து என்றதும் பறந்து வந்து விட்டார்கள்.

வரும் போதே எதை எதை கேட்டுப் பெற வேண்டும். எப்படி பேசி அருளை மதுராம்பாளை சம்மதிக்க வைக்க வேண்டும் வழியிலேயே திட்டம் போட்டு தான் வந்திருந்தார்கள் சூர்யாவும் செந்திலும்!

Advertisement

சொத்துக்களைப் பிரிக்க ஆத்மநாதன் தான் வருவார் என்று சொன்னவுடன்,

“அவர் பெரிய மாமாவோட பிரன்ட். அவர் தன் பிரன்ட்டுக்கு தான் ஃபேவரா பண்ணுவார்” என்று சொல்லி அவரை மறுத்தாள் சூர்யா, சதீஷ் எவ்வளவோ தடுத்தும் கூட!

ஆத்மநாதன் ஒதுங்கி கொண்டு வேறு ஒருவரை சூர்யாவின் அப்பாவுக்கு தெரிந்த ஒருவரைக் கொண்டு வந்தார்கள்.

சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு காண்பிக்கப்பட்டது!

அதில் ஒன்று தான் மதுராம்பாள் பெயரில் அருள் தன் தனிப்பட்ட வருமானத்தில் வாங்கி போட்டிருந்த ஒரு வீடு

அது ஸ்ரீரங்கத்துக்கும் திருவானைக் கோவிலுக்கும் நடுவில் இருந்த பகுதியில் இருந்தது.

அம்மாவின் பெயரில் இருந்தததால் அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டனர் மற்ற இருவரும்!

ஆனால் அந்த வீடோ அருள், அவர்கள் குடும்ப வயலோடு கூடவே வெளியாட்களின் நிலங்களையும் அவனாக குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்த வருமானத்தில் வாங்கப்பட்ட  சொத்து அது!

அதில் வானதி பிறந்த வீட்டில் இருந்து அவளுக்கு கிடைத்த கொஞ்ச நிலத்தை விற்று கிடைத்த பணமும் போடப்பட்டு இருந்தது!

ஆனால் அந்த வீட்டை வாங்கும் போது அருள் வானதி பெயரில் அல்லது தன் பெயரில் வாங்கி இருக்க வேண்டும்!

ஆத்மநாதன் அப்போதே எவ்வளவோ சொன்னார் தான்! அருள்தான் கேட்கவில்லை!

முட்டாள் தனமாக அம்மா பேரில் வாங்கி இருக்க, இப்போது அது பொது சொத்தாக தெரிந்தது மற்றவர்களுக்கு!

ஆனால் வாழ்க்கையில் முதல் முறையாக அருளுக்கு ஆதரவாக அப்போது தான் பேசினார் மதுராம்பாள்!

“அது அவனோட சொந்த சம்பாத்தியம்! அதில் யாருக்கும் பங்கு கிடையாது” என்று சொல்லி விட கொதித்து எழுந்தாள் சூர்யா.

“அது எப்படி நம்ம வயல் வருமானத்தில் தானே அவர் வாங்கினார்? அது எப்படி தனிப்பட்ட சொத்தாகும்?” அவள் கேட்க அவளுக்கு ஒத்து ஊதினான் செந்திலும்!

“தனிப்பட்ட வருமானம் தான்! அதுக்கான எவிடென்ஸ், டாகுமென்ட்ஸ் என் கிட்ட இருக்கு” என்றார் ஆத்மநாதன்!

“பார்த்தீங்களா.. இதுக்கு தான் இவர உள்ளே விடக்கூடாதுன்னு சொன்னேன்!”

“நீ சும்மா இரும்மா.. இதோ பாருங்க  என் கிளையன்ட் ஒருத்தரோட லேண்ட்ஸ் எல்லாம் அருள் தான் குத்தகைக்கு எடுத்துப் பார்த்துக்கிட்டான்.

 பொதுவா கிராமத்தில் எல்லாம் வாய்மொழி ஒப்பந்த அடிப்படையில் தான் குத்தகைக்கு விடுவாங்க.

ஆனா நான் சொல்லி தான் அவங்க குத்தகை காண்ட்ராக்ட் போட்டு டாகுமென்ட் பண்ணி தான் அருள் சாகுபடி பண்ணினான் அப்போது!

 அதுக்கான எல்லா ட்ரான்ஸாக்சன்களும் பேங்க் மூலமாவே பண்ண வச்சேன்.

அதே மாதிரி வானதியோட சொத்து வித்த காசுக்கும் சரியான கணக்கு இருக்கு!

அதனால நீங்க யாரும் அந்த வீட்டுக்கு உரிமை கேக்க முடியாது! அம்மா நீங்களே சொல்லிடுங்க!” என்றார் அவர்.

அடுத்து சூர்யா அவள் அப்பாவின் துணையோடு நன்கு விலைமதிப்புள்ள நிலங்களின் சர்வே நம்பர்களை குறித்து எடுத்து வந்து அவற்றை சதீஷ் பங்காக கேட்டாள்.

செந்திலும் அப்படியே.

“அப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு பிரிக்க முடியாது சித்தி!

ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வேல்யூ இருக்கு. அதன் படி பிரிச்சா தான் சரியான பாகப்பிரிவினை ஆக இருக்கும்”  என்று மதுரா இடையிட,

“அவ சொல்றது சரி தான்! இதுக்கு எல்லாம் முதலில் கைட்லைன் வேல்யூ(Guideline Value ) மார்க்கெட் வேல்யூ (Market value)  தெரிஞ்சிக்கணும்.

எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க ரெடி பண்ணிட்டு சொல்றேன்” என்று ஆத்மநாதன் சொல்ல,

“அதுக்கு எல்லாம் எங்களுக்கு டைம் இல்ல. நாங்க கிளம்பனும்” என்று  அவசரப்படுத்தினார்கள்!

“இல்ல மாமா.. அதெல்லாம் நானே ஏற்கனவே எடுத்து வச்சுருக்கேன்” என்று மதுரா சான்றளிக்கப்பட்ட ஆவணங்களையே காட்டி விட, அதற்கு மேல் ஒன்றும் பண்ண முடியவில்லை சூர்யாவால்!

அடுத்து குடும்ப பொது சொத்துக்களின் வருமானம் மூலம் வாங்கப்பட்ட புதிய நிலங்கள் பட்டியல் எடுக்கப்பட்டது!

அதில் ரொம்ப பெருந்தன்மையாக “எல்லோருக்கும் சரி சமமா பிரிச்சிடுங்க” என்றான் செந்தில்!

“அது எப்படி சரி சமமா பிரிப்பீங்க? அதுல எங்க அப்பாவோட உழைப்பு தான் பெரும்பாலும்!

உங்க யார் உழைப்பும் இல்ல அதில! ஒரு நாள் ஒரு நாள் வயலுக்கு போய்  ஒரு சின்ன வேலையாவது செஞ்சுருப்பீங்களா நீங்க எல்லாம்?

நீங்க எல்லாம் வேற வேலைப் பார்த்து சம்பளம் வாங்கி அதை சேர்த்து வச்சு வேற வீடு பிளாட் எல்லாம் வாங்கி இருக்கீங்க இல்ல?

அப்ப உங்க உழைப்பில் வாங்குன சொத்து எல்லாம் உங்க தனிப்பட்ட சொத்து!

எங்க அப்பா உழைப்பில் வாங்கப்பட்ட சொத்து எல்லாம் பொது சொத்தா?

நல்லா இருக்கு உங்க நியாயம்?” என்றாள் மதுரா கோபமாக!

“உங்க அப்பா வேலை செஞ்சது பொது சொத்தில் தானே?”

“ஆமா இல்லன்னு சொல்லல. அதுக்கு தான் எங்கப்பாவுக்கு கூடுதல் பங்கு வேணுமின்னு சொல்றேன். சரி சமமா எல்லாம் போடக் கூடாது!

சொந்த கம்பெனியா என்றாலும் அதன் எம்.டி.க்கும் சம்பளம் உண்டு தெரியுமா? ஏன் மாமா நான் சொல்றது சரிதானே” என்றாள் ஆத்மநாதனை பார்த்து!

“ரொம்ப சரி” என்றார் அவரும்!

“அப்ப எங்கப்பாவோட இத்தனை வருஷ உழைப்புக்கெல்லாம் சம்பளம் கால்குலேட் பண்ணுங்க. அதுவே எவ்வளவு வரும் தெரியுமா?”

“ஏய்.. என்ன பேசுற? நம்ம வீட்டு நிலத்தில் வேலை செய்ய கூலி கேப்பியா?”

“ஏன் கேட்டா என்ன தப்பு? என்ன சொன்னீங்க? நம்ம வீட்டு நிலமா?

அப்போ எத்தனை நாள் நீங்க அங்க போய் வேலைபார்த்து இருக்கீங்க?

முதல்ல உங்களுக்கு நம்ம வயல் எல்லாம் எங்க இருக்குன்னாவது தெரியுமா?” மதுரா மடக்க வாயைத் திறக்க முடியவில்லை அவர்களால்.

“என்னங்க ஒரு சில்வண்டு இவ்வளவு பேசுது. நானும் செந்தில் மாமாவும் தான் பேசிட்டு இருக்கோம். நீங்க வாயே திறக்க மாட்டேன்கிறீங்க” என்று சதீஷை காதில் திட்டினாள் சூர்யா.

“ஏய்.. சும்மா இரு.. எதாச்சும் பேசின, அப்புறம் வானதி அண்ணி பண்ணின வேலைக்கு எல்லாம் சம்பளம் போட்டு கேட்டாலும் கேட்டுடுவா ஸ்வீட்டி!” என்றான் அவனும் மெல்லியக் குரலில் அவளை மடக்கும் விதமாக!

“ஏன்.. நீங்களே போய் எடுத்துக் கொடுங்களேன். உங்க அண்ணன் மகளுக்கு! அவளுக்கு பேச தெரியாது பாருங்க அதனால!

அப்பா.. என்ன வாய் இதுக்கு?”

“வாய் மட்டும் இல்லை அவங்கள எல்லாம் பொதச்சு புல்லு நட்டுட மாட்டே நீ” என்றான் அவனும் விடாமல்!

அடுத்து மதுராம்பாளின் நகைகள்.

அவர் கழுத்தில் காதில் கையில் போட்டு இருப்பவை தவிர்த்து மற்ற நகைகள் எல்லாம் ஒரு நகை ஆசாரியை வரவழைத்து நிறுக்கப்பட்டன.

அவற்றை எல்லாம் மூன்று சரி சமான பாகங்களாக பிரித்து, மூன்று பொட்டலங்களாக கட்டப்பட்டு அவர்களிடம் கொடுத்தார் மதுராம்பாள்.

“எல்லாமே சரியான அளவு பவுன் தான். நீங்களே உங்களுக்கு வேண்டிய பொட்டலங்களை எடுத்துக்கங்க” என்று சொல்ல, ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டார்கள்!

“அப்ப.. உங்க கழுத்தில் இருக்கும் அந்த ரெட்டை வட செயின், கையில் இருக்கும் காப்புகள், அப்புறம் உங்க தோடு, அது கூட வைரமாமே? அதெல்லாம் யாருக்கு?”

“இதில் என்ன சந்தேகம் அது எல்லாம் சீட்டிக்கு தான்!” என்றார் மதுராம்பாள்!

“அது என்ன நியாயம்? அவள் மட்டும் என்ன ஸ்பெசல்?”

சண்டைக்கு வந்தாள் சூர்யா.

“அவ தானே என்னைப் பாத்துக்கிறா. நான் வெளியே போனா கூட சுத்தம் செய்றா! நீ செய்வியா? அப்ப வா.. என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவ செய்ற எல்லாத்தையும் நீ செஞ்சி விடு. உனக்கே தாரேன்!”

“அதுக்கு..   ஒரு நர்ஸ் வச்சு பார்த்தா கூட போதுமே. அவங்களுக்கு கொடுக்கிற சம்பளம் வேணா இவளுக்கு கொடுங்க. அதுக்கு இவ்வளவு நகையை தூக்கிக் கொடுப்பீங்களா?” என்று சூர்யா சொல்ல கடும் கோபம் கொண்டார் மதுராம்பாள்!

“டேய்.. சதீஷ் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு இப்பவே கிளம்பு! நான் செத்தா கூட நீங்க வரக் கூடாது!

போகும் போது இப்ப கொடுத்தேன்ல அந்த பொட்டலத்தையும் கொடுத்துட்டு போ!

அது ஒண்ணும் பொது சொத்து இல்லை! என் அம்மா வீட்டில் எனக்குப் போட்டது! என்னோட தனிப்பட்ட சொத்து!

நான் யாருக்கு பார்த்து கொடுக்கிறேனோ அவங்களுக்கு தான்!

நான் என் மூணு பிள்ளைங்களும் ஒண்ணுன்னு நினைச்சதுதால தான் பிரிச்சுக் கொடுத்தேன்! பார்த்து நடந்துக்க சொல்லு” அவளை மதுராம்பாள் கத்த ஆரம்பிக்க, சதீஷ் சூர்யாவை வாயை மூடுடி என்று ஓங்கி ஒரு அறை விட்டு அடக்கினான்.

ஆனாலும் அவளுக்கு ஆசை அடங்கவே இல்லை!

அடுத்த சில மாதங்களில் எல்லாம் மதுராம்பாள் முதுமை, மன அழுத்தம் காரணமாக இறந்து விட்டார்.

அவர் காரியத்துக்கு வந்தார்கள் இரு மகன்களும் குடும்பத்தோடு!

மதுராம்பாளை குளிப்பாட்டி கோடி துணி போட்ட போது அவரின் நகைகள் எல்லாம் கழற்றி தந்தார்கள்!

மதுரா உள்ளிட்ட அனைவரும் அழுது கொண்டிருந்ததால், முந்திக் கொண்டு தானே வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் சூர்யா!

மதுராம்பாளை குளிப்பாட்ட எடுத்து வந்த போதே அவள் கவனம் அதில் தான்!

எனவே வெடுக்கென்று யாரும் கவனிக்காத போது அவள் வாங்கிக் கொண்டாள்.

ஆனால் மணி பார்த்து விட்டாள். பார்த்ததை இரண்டு நாட்கள் கழித்து மதுராவிடம் சொல்லவும் செய்து விட்டாள்!

சூர்யாவாக கொண்டு வந்து கொடுக்க மாட்டாள் என்று அவளுக்கும் தெரியும் தான்!

எனவே தான் மதுராம்பாளின் பதினாறாம் நாள் காரியம் எல்லாம் நல்லபடியாக முடிந்து உறவினர்கள் எல்லாம் சடங்குகள் முடித்து கிளம்பும் வரை கூட மதுரா காத்திருந்தாள் சூர்யா கொண்டு வந்து கொடுக்க!

அவளோ கமுக்கமாகவே இருந்து விட, நடு சபையில் வைத்து சதீஷிடம் கேட்டே விட்டாள் மதுரா!

“சித்தப்பா, சூர்யா சித்தி கிட்ட இருக்கிற அப்பாயியோட நகைகளை வாங்கிக் கொடுங்க” என்றாள்.

“என்கிட்ட எல்லாம் இல்ல அது! கூட்டத்தில் யார் வாங்கினாங்களோ?”

“நீங்க தான் வாங்கினீங்க. நான் பார்த்தேன்” என்றாள் மணி இடையிட்டு!

மணி தீப்பாஞ்சி அம்மனுக்கு பூஜை செய்பவள்! ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்பதால், சதீஸ் பல்லைக் கடித்தான்!

“ஏய்..மரியாதையா அத எடுத்து வந்து கொடு. இல்லன்னா இங்கயே உன் அம்மா வீட்டிலேயே இருந்துக்கோ” என்றான் கடுமையாகவே!

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் அவள்!

அடுத்த நாளே எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.

ரெஜிஸ்ட்ரேசன் போது வருகிறோம் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு சொல்லு என்று அருளிடம் சொல்லி விட்டு சென்றவர்கள், மீண்டும் சொத்தைப் பிரித்து பதிவு செய்தவர்கள், வீட்டுக்கு கூட வராமல் அப்படியே ஊர் திரும்பி விட்டார்கள்!

அதன் பின் தான் மதுரா தன் குடும்பத்தை அந்த புதிய வீட்டிற்கு குடி போனதும், காலேஜ் சேர்ந்து படித்ததும்,பின் நர்சிங் ஹோமில் வேலைப் பார்த்ததும்.

அப்படி வீடு மாறிய போது, தானும் கூட இருந்து ஒத்தாசை செய்வதாக சொல்லி ஒட்டிக் கொண்டு வந்தார் சொர்ணம்!

கணவரை இழந்து, மகனின் ஆதரவும் இல்லாமல் கிழிந்த ஜாக்கெட்டும் ரேசன் புடவையுமாக வந்தார் அவர்.

பாவம் பார்த்து அவரை வீட்டில் விட்டதுக்கு பின்னாட்களில் ஏகப்பட்ட பிரச்சினை மதுரா சந்திக்க வேண்டியிருந்தது.

இனியா நன்கு படித்து வேலையில் அமர்ந்தாள்.

கடந்த சில வருடங்களில் அருளின் உடல்நிலை மிகவும் மோசமாகி தான் போயிருந்தது.

மிகவும் சிரமப்பட்டு அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தார் அவர்!

தானும் போய் விட்டால் மூன்று மகள்களின் கதி?

மதுராவுக்கு மட்டுமாவது ஒரு கல்யாணம் செய்து விட்டால் போதும். மற்ற இருவருக்கும் அவளது புகுந்த வீட்டு துணையாவது கொஞ்சம் கிடைக்குமே!

ஒருவருமே இல்லாததற்கு இவர்களாவது கிடைக்கட்டும்!

ஆனால் மதுராவோ திருமணத்திற்கு மறுத்து விட்டாள்!

நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகமாகி, அவர் உடல்நிலை மிகவும் மோசமாகியும் அவர் உயிர் மட்டும் போகவே இல்லை!

இப்படி கஷ்டபடுவதற்கு அவர் இறந்து விட்டால் கூட தேவலை என்றே தோன்றியது அவளுக்கு!

அவ்வளவு வேதனை அவருக்கு!

ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் அரை மயக்கத்தில் அனர்த்தி கொண்டு இருந்த அவரிடம் போய் அருகில் அமர்ந்து பேசினாள் மதுரா!

அன்று அம்மா வானதிக்கு நம்பிக்கை கொடுத்து இருக்க கூடாது என்று சொல்லி அழுதவள், இன்று அப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்ப நினைத்து பேசினாள்.

“அப்பா..” குரல் கமற அருளை அழைத்தவள்,

“அப்பா.. நான் பார்த்துக்கிறேன்ப்பா.. இனியாவை லக்கியை! உன்னோட இடத்தில் இருந்து நான் பார்த்துக்கிறேன்பா..

இனியாவை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, லக்கியையும் நல்லா படிக்க வச்சு அவளையும் நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்ப்பா.

நான் பார்த்துகிறேன்ப்பா.. நீ போப்பா.. ரொம்ப கஷ்டப்படாதே!

பார்க்க முடியலப்பா என்னால.. நீ படுற வேதனையை எல்லாம்!

நீ போப்பா.. அம்மா கிட்ட போய் சேரு. நான் பார்த்துக்கிறேன்.  நீ அம்மா கிட்ட போயிட்டு, நீங்க ரெண்டு பேரும் தெய்வமா இருந்து எங்கள வழி நடத்துங்க. நீ போயிடுப்பா” என்று சொல்லி கதறினாள் மதுரா.

கேட்டுக் கொண்டிருந்த அருளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதோரம் வரை சென்றது! பின் நின்று விட்டது!

கண்ணீரோடு கூடவே அவர் மூச்சும்!

கதறி அழுத தங்கைகளை தாங்கிக் கொண்டாள் தாய்ப்பறவையாக!

துக்க வீட்டிற்கு மூன்றாம் நபர்களைப் போலவே வந்து விட்டு சென்றனர் அருளின் உடன்பிறப்புக்கள்!

அதன் பின் மதுரா சென்னைக்கு வேலை வாங்கிக் கொண்டு வந்து விட்டாள்.

இனியாவுக்கு திருமணம் நடந்தது!

சதீஸ் மட்டுமே மனைவிக்கு தெரியாமல் வந்து சென்றார்.

அவர் அப்படியெல்லாம் வருவது மதுராவுக்கு பிடிக்க வில்லை. அதனால் இனியா வளைகாப்புக்கு அவரைக் கூப்பிட வில்லை அவள்!

நாட்கள் அது போக்கிற்கு சலனமில்லாமல் போய்க் கொண்டிருந்தன.

எல்லாம் இந்த ரேவந்த் வரும் வரை!

ஏண்டா.. நீ மறுபடி என்னோட வாழ்க்கையில வந்து என்னை ஆட்டம் காண வைக்குற!

 நான் என்னைப் பத்தி நினச்சுகிட்டு இருந்தத எல்லாம் பொய்யாக்கி என்னை மறுபடி அந்த பழைய ஸ்ரீரங்கத்து ஸ்வீட்டியா ஃபீல் பண்ண வைக்குறியே! இ

து எல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை! என்னோட மனசு உன் கிட்ட மட்டும் இப்படி வீக்கா இருக்கும்னு நான் கனவுல கூட நினைச்சே பார்க்கலையே!

நீ இப்படி என் லைஃபில் திரும்ப வருவன்னும் நான் நினைக்கலையே!

மீண்டும் அன்று காலையில் நடந்தவை, தான் அவன் அணைப்பில் இருந்தது எல்லாம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது அவளுக்கு!

ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டே படுத்து இருந்ததில் தலை வலித்தது.

எழுந்து போய் முகம் கழுவி வந்தாள்.

காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே, காபி போட்டாள். லக்கியும் கேக்குமே? என்று நினைத்து

“லக்கி உனக்கு காபி வேணுமா?” என்று கேட்டாள்.

அவள் லேப்டாப்பில் ஏதோ வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காதில் ஹெட்போன் அணிந்த படி!

கிட்டே போய் கேட்டாள் மதுரா. வேண்டாம் என்று சொல்லி விட்டு, அக்கா “நீ வெளியே வரட்டும்னு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என்று சொல்லி போனை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டாள் லக்கி!

அவள் சென்ற பின்,

மதுரா, ரேவந்த்தின் நினைவாக தான் வைத்து இருந்த பொருட்களை எடுத்துப் பார்க்க விரும்பினாள்!

எனக்கு இது போதும்! இந்த நினைவுகள் போதும்! நிஜத்தில் அவன் வேண்டாம்! அவன் இப்போது இருக்கும் நிலையே வேறு!

தான் அவனுக்கு எந்த வகையிலும் பொறுத்தமில்லை!

சீக்கிரம் இங்கே இருந்து கிளம்பி விட வேண்டும்!

படிப்பு முடித்த உடனேயே லக்கிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி விட வேண்டும்!

 இப்போதே கூட பார்க்க தொடங்கி விடலாம்!

அப்புறம் நாம் மட்டும் கிராமத்தில் இருக்கும் நம் வீட்டுக்கே போய் இருந்து கொண்டு மணி அக்காவோடு சேர்ந்து கோவில் பூஜை என்று மீதி காலத்தை கழித்து விட வேண்டியது தான்!

என்று பல திட்டங்களை மனம் வகுத்துக் கொண்டு இருக்க, கைகளோ அந்த பொக்கிஷ பேகை தேடியது!

அதை காண வில்லை!

பதறிப் போனாள் மதுரா!

எங்கே போனது? வீடு மாறிய போதும், ஊரை காலி பண்ணி வந்த போது கூட அதை பாதுகாப்பாக எடுத்து வந்திருந்தாளே?

எங்கே போனது? அவள் தேட, வெளியே போவதாக போக்கு காட்டி வெளியில் நின்று விட்டு வந்திருந்தாள் லக்கி!

“என்னக்கா தேடுற?”

“இல்ல…இங்க ஒரு பழைய பேக் ஒண்ணு வச்சுருந்தேன் இல்ல. அத காணோம்!”

“ஒரு ப்ளூ கலர் “P” லெட்டர் போட்டு இருக்குமே அந்த பேகா?”

“ஆ.. ஆமாம்.”

“அதை நான் ஒரு நாள் ட்ராஸ் பேகில் போட்டுட்டேனே? அதுல ஒண்ணுமே இல்லக்கா. ஒரே குப்பைங்க. அப்புறம் கொஞ்சம் பழைய துணிங்க இருந்துச்சு!”

“ஏய்.. யாரைக் கேட்டு அதை தூரப் போட்டே?” என்று ஆவேசமாக லக்கியை அறைந்தே விட்டாள் மதுரா!

மிகப்பெரிய அதிர்ச்சி  லக்கிக்கு! கண்கள் கலங்கி விட்டன!

நிறைய பேரை அடித்து இருக்கிறாள் தான் மதுரா! ஆனால் லக்கியை ஒருநாளும் அடித்தது கிடையாது!

ஆனா இன்னிக்கு என்ன ஆச்சு அக்காவுக்கு?

அப்போ அவ்வளவு டீப் லவ்வா ரேவந்த் டுயுட் மேலே!

அப்ப இனி அவர் தான் என்னோட பெரிய அத்தான்!

ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டவள், தன் போனை எடுத்து

“200% லவ் கன்ஃபர்ம்டு! ஸ்டார்ட் லவ் மிஷன்” என்று ரேவந்துக்கு செய்தி அனுப்பினாள் லக்கி!

லக்கியின் லக் வேலை செய்யுமா ரேவந்துக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!