Skip to content
Post Views: 5,240
“உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்”
Advertisement
மனதுள் ஸ்லோகம் சொல்லி அவன் இஷ்ட தெய்வமான லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை – அந்த சிங்க பெருமாளை வணங்கினான் யுவநிலவன்.
அது அவன் அம்மா சொல்லிக் கொடுத்த பழக்கம்.
ந்ருஸிம்ஹ பெருமாள், குழந்தை பிரகலாதன் அழைத்தவுடன் ஓடி வந்து காப்பாற்றியவர்!
Advertisement
எனவே குழந்தைகள் வணங்கினால் ஓடோடி வந்து விடுவார் என்று அவன் பயப்படும் போதெல்லாம் சொல்ல சொல்லி, சொல்லிக் கொடுத்த சின்ன வயது பழக்கம் இது!
Advertisement
வணங்கி விட்டு திரும்பிய அவன் முன் நின்று கொண்டிருந்தார் அவன் அம்மா பத்மா.
“ஆல் த பெஸ்ட்டுடா தங்கம்!” என்றபடி!
அம்மாவின் பின்னால் அவன் அப்பா தனசேகர்.
Advertisement
“சென்று வென்று வா மகனே!” என்று அந்தக்கால நாடக நடிகர் போல, இல்லாத வாளில் கீறிக் கொண்டு வெற்றித் திலகம் இட்டு வாழ்த்தினார் அவர்!
“அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா தான் பண்றீங்க!
நான் என்ன போருக்கா போறேன்? இவ்வளவு அலப்பறை பண்றீங்க?
ஜஸ்ட் ஒரு க்ளயன்ட் மீட்! அதுக்கு ஏன் இவ்வளவு..?”
“ஓ. ஜஸ்ட் ஒரு கிளயண்ட் மீட்?
அப்புறம் ஏன் கண்ணா, உன் கால் இப்படி நடுங்குது..
அப்புறம் ஏன் சிங்கப்பெருமாள துணைக்கு கூப்பிடற?
வெறும் க்ளயன்ட் மீட்டுக்கு இவ்வளவு பயப்படுற ஆளா நீ?” என்று அப்பா விடாமல் கலாய்த்தார்.
“அத விடுங்க.. அது வேற டிபார்ட்மென்ட்.
எல்லோருக்கும் உங்கள மாதிரி தைரியம் வருமா? என்ன தான் உங்க பையனா இருந்தாலும்!” அம்மாவும் சேர்ந்து வாரி விட..
“அய்யோ கொஞ்சம் நிறுத்தறீங்களா?
நிஜமாவே நான் இப்போ பிசினெஸ் மட்டும் தான் பேசப் போறேன்!
உங்க உள் மன ஆசை எல்லாத்தையும் இப்பவே என் மேல திணிக்காதீங்க!” என்றான் யுவி.
“சரி.. சரி.. ஒண்ணும் சொல்லல.. ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் கேட்டுக்கோ.
இன்னிக்கு திங்கள் கிழமை. பத்தரை டு பனிரண்டு எமகண்டம். அதான் ரொம்ப வருஷம் கழிச்சுன்னாலும், முதன் முதலா அவளை பார்க்க போறே!
அப்ப போயும் போயும் எமகண்ட நேரத்தில் பார்க்க போவாத. அதனால முன்னாடியே போய்டு” என்றார் பத்மா.
“அம்மா.. அவங்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிற டைம் பத்தரை. நான் எப்படி முன்னாடியே போக முடியும்?”
“அது தான்.. அங்க நீ வேலைக்கு சேர்த்து விட்ட மாதேஷ் தானே மானேஜர்.
நீ பத்தரைக்கு முன்னாடியே அங்க போயிட்டு, அவன் கிட்ட போய் பேசிட்டு இருந்துட்டு அப்புறமா அவளைப் போய் பாரு!” என்ற தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு
“என்னமா நீங்க.. “ என்று சலித்தவாறு கிளம்பினான் யுவி.
யாரந்த அவள்?
அவள் ரேஷ்மா.
Reshma Reva – என்னும் பெண்களுக்கான இன்டோ வெஸ்டர்ன் மாடர்ன் ட்ரெஸ் பிராண்ட் ஒன்றை உருவாக்கி அதை திறம்பட நிர்வகித்து வரும் சிங்கப் பெண்!
ஏற்கனவே அவர்களின் குடும்பத் தொழில் குழந்தைகளுக்கான உடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம்,
திருப்பூரில் ஒரு ஃபேக்டரியும் ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இருக்கின்றன.
சென்னையில் தலைமை அலுவலகம்!
அவற்றோடு, இப்போது அவளாக, தானே ஆரம்பித்து இருக்கும் அவளின் தனிப்பட்ட பிராண்ட் இது.
யுவ நிலவன் ஒரு பிராண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்(Brand Strategist) .
சொந்தமாக ஒரு பிராண்ட் ஸ்ட்ரேட்டஜி கன்சல்டிங் (Brand Strategy Consulting) கம்பெனி ஆரம்பித்து நடத்திக் கொண்டு இருக்கிறான்.
அது என்ன மாதிரியான வேலை?
ஒரு வர்த்தக நிறுவனத்தின் பிராண்ட்டை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துதில்ஆரம்பித்து,
அதை பிரபலமாக்குவது, மார்க்கெட்டில் அதன் மதிப்பை, பெயரை, தனித்துவத்தை உணர்த்தி, உயர்த்தி
மக்கள் மனதில் நீங்காத இடத்தை உருவாக்குவது போன்றவை ஒரு பிராண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டின் வேலை.
அவன் அப்பா தனசேகர் அவனைத் தன்னைப் போலவே ஒரு லாயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்பட, மகனின் விருப்பம் இதில் தான்!
“ரெண்டு பேருமே வாயை வச்சு பிழைப்பு நடத்த போறீங்க!
இதுல எதுவா இருந்தா என்ன?” என்று அவன் அம்மாவின் சப்போர்ட் வேறு அவனுக்கு !
அவன் அப்பா தனசேகர், ஒரு லாயர். அம்மா ஹிந்தி பண்டிட்.
ஒரு தமிழ் பேராசிரியர் ஆக வேண்டும் என்ற தனசேகரின் ஆசை, அவர் அப்பாவால் நிராகரிக்கப்பட்டது!
எனவே அவர் அப்பாவின் ஆசைப்படி சட்டம் எடுத்துப் படித்தாலும்,
இதோ இப்போது அம்பதுகளின் நடுவில் இருக்கும் வயதில் அவரின் தமிழார்வத்தை தீர்த்துக் கொண்டு இருக்கிறார்.
கம்ப ராமாயண உரை, பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு, உள்ளூர் வெளியூர் கோவில் திருவிழாக்களில் என்று அவரைப் பேச அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
சில பள்ளிக் கூடங்களில் நடக்கும் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக, அல்லது போட்டிகளுக்கு நடுவராக செல்வதும் உண்டு.
என்ன.. வீட்டில் தான் மனைவியும் மகனும் அவரை மீண்டும் கோகிலா படத்தில் வரும் கமல் போல பாவிப்பார்கள்!
மதிக்க மாட்டார்கள்!
ஆனால் அவருக்கு என்று இருக்கும் சில அடிப் பொடிகள் சமூக வலைத் தளங்களில் அவருக்கு பாராட்டிக் கொண்டே இருப்பார்கள்!
ஆனால் அவர் பேச்சுக்கும் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்க தான் செய்கிறது!
அதனால் தான் வீட்டிலேயே ஹிந்தி டுயுஷன் எடுத்துக் கொண்டும் அவர்கள் வீட்டின் வாசலிலேயே ஒரு ஜெராக்ஸ் மற்றும் டைப்பிங் செண்டர் நடத்திக் கொண்டிருந்த பத்மா,
அங்கு அடிக்கடி ஜெராக்ஸ் மற்றும் சில டைப்பிங் வேலைகளுக்கு என்று வந்து போன அன்றைய ஜூனியர் லாயர் தனசேகரின் காதல் பேச்சில் விழுந்தார்!
பின் இரு வீட்டின் எதிர்ப்புகளுக்கு பின் வந்த சம்மதத்தோடு முடிந்த காதல் திருமணம்!
ஆனால் யுவன் பிறந்த பிறகு மீண்டும் இரு குடும்பங்களுக்கு இடையில் உரசல்!
எந்த வீட்டு வழக்கப்படி பிள்ளையை வளர்ப்பது என்று!
ஆணியே பிடுங்க வேண்டாம் என்று யுவியை ஊட்டியில் ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டனர் அவன் பெற்றோர்.
அங்கு தொடங்கிய நட்பு தான் ரேஷ்மாவின் அண்ணன் ரேவந்துடன் ஆன நட்பு!
இதோ இப்போது வரை தொடர்கிறது!
அவனோடு மற்ற பள்ளி நண்பர்களும் கூட!
வாட்ஸ்அப் க்ரூப் உபயம்!
அப்போதே ரேஷ்மாவை யுவிக்கு பிடிக்கும்!
இப்போதும் தான்!
அவனும் ரேஷ்மாவின் இன்ஸ்டா ஃபாலோயர்சில் ஒருவன்! அதில் அவளைத் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறான்!
மார்கெட்டிங் அவனுக்குப் பிடித்த துறை!
எம்பிஏவில் அவன் எடுத்தும் அதை தான்!
அவன் அம்மாவின் சப்போர்ட் அவனுக்கு!
“ஏங்க உங்களுக்கு தான் ஆசைப்பட்ட ப்ரோஃபசனுக்கு போக முடியல! அவனாவது பிடிச்சத செய்யட்டுமே!
ஒருத்தருக்கு அவங்களோட பேசனே (Passion) ப்ரோபெசன்(Profession)ஆகுறது எவ்வளவு பெரிய சந்தோஷம்!
அது நம்ம பையனுக்கு கிடைக்கட்டுமே!”
“அதுக்கு இல்லடி.. அதுல அவன் ஜெயிக்கணுமே? அது தான்..” அப்பா இழுக்க..
“ஒரு அஞ்சு வருஷம் பார்க்கட்டும். அதில் ஒரு வேளை ஜெயிக்கலைன்னா கூட ஒண்ணுமே பிரச்சினை இல்ல..
அதான் நீங்க சொல்லுவீங்களே.. இருக்கவே இருக்கு.. தென்னந்தோப்பு.. கயித்துக்கட்டில்ன்னு!
வாங்க குடும்பமா போய் நம்ம ஊரில் விவசாயம் பார்க்க போய்டுவோம்” என்று சொல்லி அனுமதி வாங்கி கொடுத்து இருந்தார் பத்மா!
யுவியும் படித்து முடித்து ஒரு கம்பெனியில் மார்க்கெடிங் ஹெட் ஆக சேர்ந்தான்.
இன்டர்வியூவில் அவனைப் பற்றி சொல்லும் போது,
“ஐ கேன் செல் ஈவென் தி ஷிட், பை மை ப்ரோமொசன்ஸ் அண்ட் மார்க்கெடிங்” என்று சொல்லி இன்டர்வியூ செய்தவர்களை அதிர வைத்தான்!
அந்த குழுவில் இருந்த பெண் ஆபிசர், தலையில் லேசாக அடித்துக் கொண்டே விட்டார்.
ஆனால் கூட இருந்த அவனைப் போலவே குசும்பு பிடித்த ஒரு ஆபிசர்,
“ஹவ்?” என்று வேறு கேட்டு வைக்க, அவன் விவரிக்க,
பொறுக்க முடியாத மற்ற இரு அதிகாரிகளும்,
“யூ ஆர் அப்பாயிண்டட்” என்று சொல்லி ஆர்டர் கொடுத்து அவனைத் துரத்தினார்கள்!
மொத்தத்தில் வாய் சாமர்த்தியம் நிறைய உள்ளவன்!
அந்த கம்பெனிக்குப் பிறகு, நிறைய கார்ப்பரேட் கம்பெனிகளில் பணி புரிந்த அனுபவத்தில், இப்போது சொந்தமாக ஆரம்பித்திருக்கும் நிறுவனம் தான் இது.
பிராண்ட் ஸ்ட்ரேட்டஜி கன்சல்டிங்!
இப்போது ரேஷ்மாவின் பிராண்டிற்கு அவன் செய்யப்போவதும் அது தான்!
அதுக்கான ஒப்பந்தம் செய்ய தான் போகிறான்!
இவனை ரேஷ்மாவிற்கு அறிமுகம் செய்து, அவன் கன்சல்டிங் பெற்றுக் கொள்ள செய்ததும் ரேவந்த் தான்!
ஆனால் ரேவந்துக்கும் யுவியின் பெற்றோரைப் போலவே ரேஷ்மாவை யுவிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க இஷ்டம் தான்!
ஆனால் ரேஷ்மா சம்மதம் இல்லாமல் செய்ய மாட்டான்.
முதலில் தொழில்முறையில் அறிமுகம் ஆகட்டும்!
பின் மெதுவாக கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்றே திட்டம்!
அதை அவன் யுவியிடம் சொல்லியும் இருந்தான்.
“அவளை, அவளோட பேசனோட(Passion) ஏத்துக்கிற, அவள் பேசனை மதிக்கிற, அவள் மேல் கேரிங்கா இருக்குற தன்மை உன் பேரன்ட்ஸ்க்கும் உனக்கும் தாண்டா இருக்கு!
என் தங்கச்சிக்கு உன்னை விட பெஸ்ட் மாப்பிள்ளை வேற யார் இருப்பா?
ஆனா அவ சம்மதமும் ரொம்ப முக்கியம் எனக்கு!
சின்ன வயசுல அம்மா அப்பாவை இழந்துட்டு, அன்புக்காக ஏங்குற குழந்தைடா அவ!
நீ தான் அவளை நல்ல படியா பார்த்துக்கணும்” என்று இமொசனலாக பேசியிருந்தான் ரேவந்த்!
“டேய்.. விடுடா.. அப்பா.. போதும்.. எனக்கு எங்க அப்பாயி பார்க்கிற ப்ளாக் அண்ட் ஒயிட் பட சீன் எல்லாம் நினைவுக்கு வருது!
விடு நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டான் யுவி.
ஆனால் யுவிக்குள், ஒரு வைராக்கியம்!
தான், தன் எந்த சாமர்த்தியத்தையும் ரேஷ்மாவிடம் காண்பிக்காமல் இருந்தே அவள் மனதை வெல்ல வேண்டும் என்று!
எனவே அவளிடம் பிசினஸ் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தான்!
இதோ வந்து விட்டது ரேஷ்மாவின் அலுவலகம்!
இன்றைக்குப் பார்த்து அவன் சென்ற வழியில் அவன் எதிர்பார்த்து இருந்த ட்ராஃபிக் இல்லை!
ரொம்ப சீக்கிரம் வந்துட்டோம் போல! என்று நேரத்தைப் பார்த்தான்.
மணி ஒன்பது நாற்பது!
காரை உள்ளே கொண்டு போனவன், மாதேஷை போனில் அழைத்தபடி உள்ளே சென்றான்.
ஃபிரன்ட் ஆபிசில் கூட யாரும் இன்னும் வந்திருக்க வில்லை!
“இந்த அம்மாவோட…” என்று அவன் பல்லைக் கடித்து திட்டினான் மனதுள்!
உள்ளே இருந்து ஒரு பெண்ணின் கோப குரல் கேட்டது!
“உன்னை எத்தன மணிக்கு வர சொல்லியிருந்தேன். நீ எத்தன மணிக்கு வந்து நிக்குற?
அறிவில்ல உனக்கு? சொன்னா சொன்ன டயத்துக்கு வந்திட்டா உன் கிரீடம் இறங்கிடுமா?”
யுவி அதிர்ந்தான்!
அய்யோ.. என்ன இது.. நம்மளையா திட்டுறாங்க? என்று என்று சந்தேகத்துடன் உள்ளே பார்த்தான்.
உள்ளே புடவை அணிந்து கண்ணாடி போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், ஆபிஸை கூட்டி சுத்தம் செய்யும் ஹவுஸ் கீப்பிங் பெண்ணைத் தான் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள்!
“இன்னிக்கு கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் இருக்கு.
அதில நேத்து மீட்டிங்கில் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் பிளேட்ஸ், வாட்டர் பாட்டில்ஸ் எல்லாம் அப்படி அப்படியே இருக்கு கிளீன் பண்ணாம!
ஆமா.. நேத்து ஃபுல்லா நீ என்ன தான் பண்ணின?” என்று மேலும் அவள் திட்டுவதைத் தொடர,
அப்பாடா என்று நினைத்துக் கொண்டவன் போன் லைனில் அதற்குள் அந்த மாதேஷ் வந்து விட்டான்.
“டேய்.. எங்கடா இருக்க?”
“ஆபிஸ்ல தாண்ணா!”
“டேய்.. பொய் சொல்லாத.. நானும் இப்ப உன் ஆபிசில் தான் இருக்கேன்” என்றவன் பின்னால் வந்து தோளைத் தொட்டான் அந்த மாதேஷ்.
“அண்ணா.. இருங்க ஒரு நிமிஷம்” என்று சொல்லி அட்டன்டன்ஸ் பதிவு செய்யும் அந்த பயோ மெட்ரிக் சாதனத்தில் விரல் பதித்து விட்டு அவனை, தன் கேபினுக்கு அழைத்து சென்றான் மாதேஷ்.
“என்ன அண்ணா? ஆண்ட்டி உங்கள ராகு காலம் எமகண்டம் பார்த்து சீக்கிரமா அனுப்பி வச்சுட்டாங்களா?” என்றான் கிண்டலாக!
அதற்குள் ரிசப்சன் பெண் லேட்டாக வந்தவள், வேகமாக வந்து தன் வருகையை பதிவு செய்து விட்டு தன் சேரில் உட்கார, அங்கும் வந்தாள் அந்த கோபக்கார பெண்!
அடுத்த மண்டகப்படி ரிசப்சனிஸ்ட்க்கு!
“டேய்.. யாரிந்த மதுர பாஷிணி? இந்த திட்டு திட்டுறாங்க!”
“அவங்க பேர் மதுர பாஷிணி எல்லாம் இல்ல. மதுரா மேம். முழுப்பெயர் தமிழ் மதுரா.
ரொம்ப கோபக்காரவங்க. அவங்களுக்கு எல்லாமே பர்ஃபெக்டா இருக்கணும்.
பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்!
ரொம்ப ஜென்யூன்.
யாரா இருந்தாலும் திட்டிருவாங்க.
சில சமயம் அறைஞ்சு கூட இருக்காங்க!
போன மாசம் கூட ரிசப்சனிஸ்ட் ரேவதி, டுயுட்டி நேரத்தில் சீட்டில் இல்லாம பர்சனல் கால் பேசிட்டு இருந்துச்சு.
விட்டாங்க ஒரு அறை. அதுல இருந்து அது லஞ்ச் டயத்தில் கூட போனை எடுக்கிறதே இல்ல!”
“டேய்.. உண்மைய சொல்லு.. நீ இப்படி வடிவேல் மாதிரி குஜராத்துல ஒரு சம்பவம்ன்னு சொல்றத பார்த்தா, நீ கூட அவங்க கிட்ட அடி வாங்கின மாதிரி இருக்கு?”
மாதேஷ் கொஞ்சம் அசடு வழிந்து பின் சொன்னான்.
“ஆமா.. நானும் வாங்கி இருக்கேன்!”
“ஏண்டா.. ஆபிஸ்ல வேலை செய்யறவங்கள அடிக்கறது எல்லாம் ரொம்பவே அராஜகம்!
லேபர் லா படியும் ரொம்ப தப்பு!
அஃப்பென்சிஸிவ்!(Offensive)!
நீங்க எல்லோரும் சேர்ந்து ரேஷ்மா கவனத்துக்கு கொண்டு போக வேண்டியது தானே!” என்று யுவி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, மாதேசின் கேபினுக்கு வந்தாள் அந்த சுத்தம் செய்யும் பெண்!
அந்த மதுராவைத் திட்டிக் கொண்டே!
“என்னங்க சார். ரொம்ப அராஜகம் பண்றாங்க. ரொம்ப திட்டுறாங்க. கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு ரொம்ப ஓவரா திட்டுறாங்க.
இல்ல.. நான் விடப் போறதில்ல.. நான் ரேஷ்மா அம்மா வரட்டும் அவங்க கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண தான் போறேன்!”
“ரேஷ்மா மேடத்துக்கிட்டயா? போ. போ.. போய் நல்லா கம்ப்ளையின்ட் கொடு” என்றான் மாதேஷ் அவளிடம்.
வந்தவள் இன்னும் கொஞ்ச வார்த்தைகள் மதுராவை திட்டி விட்டு, பின் அவள் வேலையைக் கவனிக்க அந்த கேபினை விட்டு சென்று விட்டாள்.
“அப்படியே போய் நீ கம்ளைன்ட் கொடுத்துட்டாலும்..” என்றான் மாதேஷ்.
“ஏண்டா.. கொடுக்க மாட்டாங்களா? நீ ஏன் பண்ணல இன்னும்?”
“அந்த பொண்ணு கொடுக்க மாட்டா. அந்த ரிசப்னிஸ்ட் பொண்ணும் கொடுக்கல. ஏன் நானுமே கொடுக்கல!”
“ஏன்டா ரேஷ்மா எதுவும் கண்டுக்க மாட்டாங்களா?”
“அப்படி எல்லாம், இல்ல. அண்ணே.. இங்க எல்லாமே வேற மாதிரி.!
ஒரு சீக்ரெட் சொல்றேன் யார் கிட்டயும் சொல்லிடாந்தீங்க!” என்றவன், மெல்லிய குரலில் ரகசியம் போல சொன்னான்.
“அண்ணே.. நானே இத ஒரு நாள் சிசிடிவி பேக்கப் எடுத்து வைக்கும் போது தான் பார்த்தேன்!”
“என்னடா அது?”
“அது.. அந்த மதுரா மேடம்.. கோபத்தில் ஒரு நாள் ரேஷ்மா மேடத்தையே அறைஞ்சுட்டாங்க!”
“என்ன?” என்று அதிர்ந்து நின்றான் யுவி!
error: Content is protected !!