கானலானாயோ காதலே -33
விசேஷம் முடித்து மகளை உறங்க வைத்து விட்டு வந்தவள் உடல் அலுப்பு தீர குளித்தாள் நீரதி. செலவுக் கணக்குகளை எழுதிக் கொண்டிருந்த ஆழியன் அவள் வருவதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். மெல்லிய புன்னகை அவனிடத்தில் ரதியின் முறைப்பு பார்வையை நினைத்து.
அவள் குளிக்கச் சென்ற வேளையில் சமையற்கட்டிற்குள் நுழைந்து பனங்கற்கண்டு சேர்த்து பால் ஆற்றி கொண்டு வந்து வைத்தவன் மனைவியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான்.
அவள் இலகுவான உடையில் கட்டிலில் வந்து அமரவும் பாலை நீட்டினான்.
லேசான முறைப்புடன் பாலை வாங்கிக் கொண்டவள் “எதுக்கு இன்னைக்கு இத்தனை கலாட்டா பண்ணீங்க. எல்லாரும் கேட்கிற மாதிரி”என்று கேட்க
“நான் என்ன செஞ்சேன் ரதி?”என்று ஏதுமறியாதவன் போல் அருகில் வந்து அமர்ந்து விட்டான்.
“ஹப்பா நடிக்காதீங்க. ப்ப்ச் எதுக்கு இந்த வேலை?”என்றபடி பாலை அருந்தினாள்.
இயல்பு போல அவளிடத்தில் டம்ளரை வாங்கி தானும் ஒரு மிடறு அருந்தியவன்”இத்தனை நாளும் தோணாதது எல்லாம் இப்போ தோணுதே அதான். ஏதாவது நோய் வந்திருக்குமோ”என்றான் வேண்டும் என்றே.
“ஆமா ஆமா இளமை திரும்பினமேனியானு ஒரு வியாதி உங்களுக்கு அதான்”என்று சிரிக்காமல் அவள் சொல்லவும் அவனின் சிரிப்பு சத்தம் வெளியே வரைக்கும் கேட்டது. அந்த அளவிற்கு சத்தமாக சிரித்து விட்டான் ஆழியன்.
“அச்சோ… அமைதியா இருங்க”என்று அவன் வாயைப் பொத்தியதும் கண்ணிமையை சிமிட்டி வருடினான். இருவருக்கும் விழிகள் மலர்ந்து சிரித்தது.
மகனின் சிரிப்பு சத்தம் வெளியே கேட்டதில்”உங்க மவனுக்கு இப்ப தான் வயசு திரும்புது போல”கணவனிடம் நொடித்தார் வளர்மதி.
“ஏன் அதுல உனக்கு என்ன பிரச்சினை?”என்று தேசிகன் கேட்க
“எனக்கு என்ன பிரச்சினை?.”என்று நொடித்தாலும்”எங்கண்ணி வேற இருக்கு இவன் இப்படி பண்ணிட்டு இருக்கான். நீராவை அடக்கமா இருக்க சொல்லணும் பிள்ளை வயசுக்கு வந்திருச்சு இப்ப போய்”என்றார் அந்த பழைய குணம் மாறாமல்.
“போய் சொல்லித் தான் பாரேன்”என்று தேசிகன் நக்கலாய் கூற
“என்னத்துக்கு வேலியில் போறதை எடுத்து வேட்டியில் விடுவானேன். பழைய நீராவா அவ”என்றார் கடுப்பாய்.
“தெரியுதுல்ல அமைதியா இரு”என்ற தேசிகன் உறங்கி இருந்தார்.
பின்னே முன்பிருந்த நீரதி எது கூறினாலும் அமைதியாக போகும் ரகம். நிலாவின் பிரச்சினையில் இருந்து எது பேசினாலும் நேரடியாக தைரியமாகவே எதிர்த்து நிற்கிறாள்.
அதிலும் “உங்க மக பேச முன்னாடி நீங்க தான் உங்க பேரன் கிட்ட என் மகளை பொண்டாட்டி னு சொன்னது. அது மட்டும் உங்க பிள்ளைக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் ஞாபகம் வச்சுக்கோங்க. வயசான காலத்துல உங்க உறவை வேண்டாம் னு என் புருஷனை சொல்ல வைக்க வேண்டாம் னு அமைதியாக இருக்கேன். இந்த மாதிரியே ஏதாவது பிரச்சினை பண்ணா நிச்சயம் அவர் கிட்ட நான் சொல்லிடுவேன் ஜாக்கிரதை. அந்த அநாகரிகமான பேச்சை ஆரம்பிச்சதே நீங்க தான்னு தெரிஞ்சா அவரோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் னு யோசிங்க”என்று எச்சரிக்கை செய்திருக்க, வளர்மதி பொட்டிப்பாம்பாய் அடங்கிப் போனார். மகள் விஷயத்தில் ஆழியன் ஆடிய ருத்ர தாண்டவத்தை தான் கண்ணார கண்டு விட்டாரே. பிறகு வாய் திறக்க முடியுமா…? எல்லாம் தெரிந்தும் இவள் ஏன் அமைதியாக இருக்கிறாள் என்ற பார்வையை நீரதியிடம் வீச அவளோ அது புரிந்தவளாய் “அவருக்கு இந்த குடும்பம், அண்ணன் தம்பி உறவு, எவ்வளவு பிடிக்கும் னு தெரிஞ்சவ நான். தன் கூட எல்லாருக்குமே இருக்கணும். ஒத்துமையா வாழ அவ்வளவு ஆசைப்பட்டார். அதனாலேயே இங்கே எது நடந்தாலும் என்னைத் தான் அமைதியாக போகச் சொல்வாரேத் தவிர உங்களை பேச அனுமதிக்க மாட்டார். என்னை வேண்டாம் னு நீங்க சொன்னதும் வெளியே போய் மேரேஜ் பண்ணிக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும். செஞ்சாரா என்ன…? அவருக்கு இங்கே இருக்கணும் எல்லாம் சேர்ந்து இருக்கணும். அத்தனை ஆசைப்பட்ட மனுஷனையே கடைசியில் தனியா குடும்பம் நடத்தற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்க.”என்றவள்
“உங்க மகளோட உறவை முறித்துக் கொள்றது என் இன்ட்டென்ஷன் கிடையாது. அவ பேச்சு பிடிக்காமல் தான் நான் அவ்வளவு பிடிவாதம் பிடிச்சேன். அண்ணன் தங்கை உறவு தான் என்னால போச்சு. அட்லீஸ்ட் அம்மா உறவாவது அவருக்கு கடைசி வரைக்கும் சரியா இருக்கட்டும் னு ஆசைப்பட்டேன் அதனால அமைதியா இருந்தேன் இருக்கேன். இதுவும் அவருக்காக மட்டும் தான். சில உறவுகளை காப்பாத்திக்க பொய் வேஷம் போட்டு தானே ஆகணும். அதைத்தான் செய்றேன் எனக்காக நின்ன அவருக்கு இதைக் கூடவா செய்ய மாட்டேன்”என்றாள்.
“ஏன் அதே வேஷத்தை என் மகளுக்காகவும் போடறது”என்று வாய் இருக்க மாட்டாமல் கேட்டு வைக்க
“நோ ஏன் செய்யணும்?”என்றவள்
,”உங்களை காட்டிக் கொடுக்காததுக்கு இன்னொரு காரணம் இருக்கு”என்றாள்.
அது என்ன என்பது போல வளர்மதி பார்க்க நீரதியின் முகம் கர்வமாய் ஜொலித்தது.
“நீங்க என்னை செலக்ட் பண்ணாத ஒரே காரணத்திற்காக தானே இவ்வளவு தூரம் பண்ணீங்க. உங்க முன்னாடி உங்க பையனோட சந்தோஷமா வாழறதைப் பார்க்கணும் இல்லையா அதுக்காக தான். இது திமிர் தான். ஆனா இந்த திமிரை காட்டியே தீருவேன் னு எனக்குள்ள ஒரு வைராக்கியம்”என்றாள்.
“என்னடி என் மகன் சப்போர்ட் செஞ்சுட்டான்ற ஆணவமா?!”என்று எகிற
“ஹ்ம்ம் இருக்கலாம். ஆணவமே தான் அதான் சொன்னேனே திமிர்னு… இது நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து வளர்த்த திமிர் என்னைக்காவது காட்டுவேன்னு நினைச்சேன் பட் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் னு எதிர்பார்க்கலை.”என்றவள் “நீங்க பேசினதை உங்க மகனுக கேட்டாலே போதும் உங்களை விலக்கி வைக்க… ஆனா அதை ஒரு நாளும் செய்ய மாட்டேன். ஒழுங்கா பேரன் பேத்தி னு சந்தோஷமா இருந்துட்டு போங்க”என்று முடிக்க வளர்மதி அதிலேயே அமைதி ஆகி விட்டார்.
மாமியாரிடம் பேசியது குறித்து ஜனனியிடம் கூற அவளோ “. அந்த அம்மாவை பத்தி நீ சொல்லி இருக்கணும் நீரு”என்றாள்.
“சொல்ல மாட்டேன் அண்ணி. இதுநாள் வரைக்கும் அவருக்கு தன் குடும்பம் தனக்காக தியாகம் செஞ்ஞது போல ஒரு நினைப்பு.என்னை அமைதியா போக சொல்லி அவங்க சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டி எங்க கல்யாணத்தையே பொம்மை கல்யாணம் மாதிரி ஆக்கினார் தானே… அதுக்கு காரணம் யாரு அந்த அம்மா தானே… அப்போ இப்ப அந்த மனுஷன் எல்லாம் புரிஞ்சு என் கூட சந்தோஷமா வாழறதையும் நெருக்கத்தையும் பார்த்து குமையட்டும். அதுக்காக தானே நான் மறுபடியும் இங்கே வந்தேன்”என்றிருக்க
“ஆமாம் உன் புருஷன் வெளியே உன்னோடு சேர்ந்து நின்னுட்டாலும்…அட போ நீரு”என்று சலித்த ஜனனியே ஆழியனின் மாற்றத்தில் அசந்து விட்டாள்.
“நீரு இது உன் ஹஸ்பண்ட் தானா?!”என்று கிண்டல் செய்ய
“ஆழியன் பேக் டூ ஃபார்ம் அண்ணி. காலேஜில் இருந்த ஆழி இப்போ தான் எட்டிப் பார்க்கிறார்”என்று கேலியுடன் பதில் கூறியவளுக்கு சொல்லொணா சந்தோஷமும் நிம்மதியும்.
“ஹாப்பியா இரு நீரு, இது தானே எனக்கும் உன் அண்ணனுக்கும் வேண்டும்”என்றாள் ஜனனி மனநிறைவுடன்.
பனங்கற்கண்டு பாலுடன் சேர்த்து நடந்த நிகழ்வுகளையும் விழுங்கி இருந்தாள் நீரதி.
“என்ன கனவு கண்டு முடிச்சாச்சா”என்றவனின் தோள் சாய்ந்தவள் “இது எல்லாம் நிஜம் தானே ஆழி”என்றாள் கரகரத்த குரலில்.
“ரதி என்னம்மா”என்றவனுமே உணர்வுகளின் பிடியில் தான் இருந்தான்.
“கேட்கணும் னு தோணுச்சு”என்றவளின் கரம் பற்றியவன் “நான் தான் தப்பு ரதி. உன்னை நான் அப்படி விட்டு இருக்கக் கூடாது தானே. எவ்வளவு சமாதானம் சொன்னாலும் இழந்த காலம் திரும்ப வராதே. அனுபவிக்க வேண்டிய வயசில் எதையும் அனுபவிக்காம விட்டு அவங்களோட அடிப்படை ஆசைக்கு நியாயம் செய்றதா நினைச்சு உன் உணர்வுகளை ஆசைகளை கொன்னுட்டேன் நான்.”என்றிட நீரதி மறுத்துப் பேசவில்லை. நடந்தது எதுவும் பொய் இல்லையே உண்மை தானே…
“நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கவனிச்சு சொல்ற அளவுக்கு என் லட்சணம் இருந்திருக்கு. என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு”என்று வருத்தம் கொள்ள
“விடுங்க பேசினா மட்டும் நடந்தது இல்லைனு ஆகிடுமா”என்றவள் “ஆனா உண்மைக்கும் சொல்லணும்னா நிலா விஷயத்தில் நீங்க மன்னிப்பு கேட்க சொன்னப்போ தான் நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். இன்னும் ஒரு தடவை மன்னிப்பு கேட்க சொல்லி இருந்தா கூட சத்தியமா உங்க முகத்தில் முழிச்சிருக்க மாட்டேன் நான்”என்று தீர்மானமாக உரைக்க
“நீ உறுதியா நிற்க போய் தான் ரதி யோசிச்சேன்.”என்றவன் “நிலா இப்படி எல்லாம் இல்லவே இல்லை ரதி. எப்படி இவ்வளவு மட்டமா யோசிச்சான்னே தெரியலை.”என்றான்.
“ப்ளீஸ் அவ பேச்சு வேண்டாம்”என்று மறுத்தவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு “உனக்கு வேண்டாம் னா வேண்டாம் தான்”என்றான்.
“பார்றா…”என்று புன்னகைக்க
“பார்க்க மட்டும் தான் செய்றேன்”என்றான் பெருமூச்செறிந்து
“பார்றா பார்றா”என்று சிரித்தவள் “போய்யா”என்று காதோரம் கிசுகிசுக்க
“அடிப்பாவி… பாவம் வீட்டில் எல்லா வேலையும் செஞ்சு டயர்டா இருக்கவளை டிஸ்டர்ப் பண்றோமேனு விட்டு வச்சா என்னை என்ன சொல்லிட்ட நீ”என்றான் விழி விரித்து
“ஹ்ஹான் சொல்றாங்க சொரைக்காயும் சுண்டைக்காயும் ஒண்ணுனு…ஆழி சமத்து அவ்வளவு தான்”என்று அவனை வேண்டுமென்றே சீண்டி எழுந்து கொள்ள.
அவளை முறைத்து தன் பக்கம் இழுத்து வசமாக்கியவன்”ஆழி சமத்து என்னன்னு புரிஞ்சதா”விடியலில் வம்பிழுக்க
“நீரதினா தண்ணீர் நிறைந்த இடம் னு அர்த்தமாம்”என்றாள்
“அதுக்கு”
“ஆழிச்செல்வன் னா கடலில் உள்ள செல்வங்கள் நிறைந்தவனாம்”
“ஹ்ம்ம் சரி”தன்னோடு இறுக்கி கண் மூடிக் கிடக்க
“நீரதிக்குள்ள ஆழியோட செல்வம் மூழ்கி போச்சு. அதை இனி நீரதி நினைச்சா மட்டும் தான் வெளியே காட்ட முடியும்”என்று சிரிக்க
“ஆழிச்செல்வன் நீரதிக்குள்ள இருந்தா போதும். தனியா வெளிக்காட்ட வேணாம் நீரதிக்கு தெரிஞ்சா போதாது ஆழிச்செல்வன் யார் னு”என்றவனின் பதிலில் நிறைந்தவள்”போதுமே!!” என்றாள் கண்ணீருடன்.
“அப்புறம் ஏன் இந்த அழுகையாம்”
“ஹ்ம்ம் எதுவும் இல்லை. சந்தோஷத்துல வருது”என்று கூற
“நம்ம உறவு கானல் இல்லை தானே ரதி. காதல் மட்டும் தானே… பொய் இல்லை தானே அது உனக்கு புரியுதா”பரிதவிப்பு டன் கேட்க நீரதிக்கும் புரிந்தது அன்று தான் பேசியது இன்னும் அவன் மனதில் காயத்தை உண்டாக்கி இருக்கின்றது என்று.
“நம்ம காதல் கானல் தான்”என்றதும் அவன் அதிர
“கானல் நீர் னா என்ன”
“ஹ்ம்ம் வெயில் தாக்கத்தில் அலையறவனை ஏமாத்துற ஒரு மாயை “என்றான் கடுப்பாய்.
“ஹ்ம்ம் மாயை தான் ஆனால் தேடல் உள்ள ஒருத்தனை இருக்கு இருக்குனு சொல்லி இன்னும் முன்னேற வைக்கிற ஒரு மாயை. அது அவனை சோர்ந்து போக செய்யாது. இன்னும் தேடு இன்னும் தேடு உனக்கானது இங்கே தான் இருக்குனு உந்த செய்ற ஒரு மாயை தான் கானல். அதே மாதிரி தான் நம்ம குடும்பத்தில் உள்ள எல்லோரோட கோப தாபம் எல்லாம் தாக்கினாலும் நம்ம காதல் நம்ம கிட்ட மிச்சம் இருக்கு தேடு தேடு னு விட்டு விலகாம தேட வச்ச நமக்கான மாயை தான் நம்ம காதல் அது நம்மளை விட்டு விலகவும் செய்யாது. நாமளும் விலக மாட்டோம். ஏன்னா கானல் நீரோட உந்துதல் நமக்கு தேவை. அதை தேடியே ஓடுறவன் ஏதோ ஒரு கட்டத்தில் அடைஞ்சு பூரணம் அடைஞ்சிடுறான்”
“நம்மளை மாதிரியா ரதி”
“கண்டிப்பா நம்மை மாதிரி தான். இது காதல் இல்லை கானல் தான் இது நமக்கானது இல்லைனு போறவங்க காதலை இழக்கறாங்க சீனு லேகா மாதிரி”என்றாள்.
“அப்போ தேடுவோமா”
“என்னத்த”
“கானலை… ம்ஹும் நம்ம காதலை”என்று மீண்டும் அணைக்க
“போய்யா தேடினதுக்கே ரெண்டு ஆச்சு”
“போதுமா ரதி”
“போதும் ராஜா ஆளை விடுங்க உங்க பசங்க எழுந்திருப்பாங்க”எனும் போதே கதவு தட்டப்பட்டது.
“போச்சு போச்சு”என்று அரக்க பறக்க எழுந்தவளை இழுத்துப் பிடித்தவன் “நான் பார்க்கிறேன் நீ பொறுமையா போ”என்று கதவை நோக்கி நடந்தான்.
இரண்டு பிள்ளைகளும் “ப்பா அம்மா எங்க”என்று வந்து நின்றனர்.
“அம்மா குளிக்கிறாடா…நீங்களே ஃப்ரெஷ் ஆகிட்டீங்களா”என்றதும் சுவாதி குதூகலமாக “ஆமா டாடி. அத்தை டீச் மீ தட் டே. “என்றாள்.
“குட் கேர்ள் ஸ்வீட்டிமா…நாம அம்மாக்கு டிஃபன் பண்ணுவோமா”என்றதும் இரு பிள்ளைகளும் தந்தையோடு செல்ல அதற்குள் குளித்து விட்டு வந்தவள் “போய் குளிங்க நாங்க பார்த்துப்போம்”என்று கணவனை கண்ணால் மிரட்டி போகச் சொன்னாள் நீரதி.
“ரொம்ப பண்றடி ரதி”என்று முணுமுணுக்க “ஆமாடி ரதி”என்றாள் சுவாதி துடுக்காக
“அச்சோ செத்தேன்”என்று அவன் ஓடி விட சுவாதி திருதிருவென விழித்து மழலைச் சிரிப்புடன் “சாரி மம்மி”என்று காதைப் பிடித்துக் கொண்டாள்.
“குட்டி கழுதை. ஏதாவது வாய் துடுக்கா சொல்லிட்டு அப்புறம் சிரிக்கிறது. நீ ஏதாவது சொன்னா இனி உங்க அப்பாக்கு தான் அடி”என்றதும் சுவாதி தலையை ஆட்டி “நோ டாடி பாபம்” என்றாள்.
“ஆமா ஆமா பாவம் தான்”என்று முணுமுணுத்தவள் பிள்ளைகளுக்கு பால் ஆற்றிக் கொடுத்தாள்.
“அக்கா எங்க இருக்கீங்க”என்று அவசரமாக உள்ளே வந்தாள் பவ்யா.
“வா பவி என்னாச்சு”என்று கேட்க
“அக்கா நிலா…”என்றவள் “மாமாவை கூட்டிட்டு வாங்க”எனும் போதே ஆழியன் வந்தான்.
…… தொடரும்.
