Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 5 1

அத்தியாயம்

காதல் ஒரு மாயம் 

என்று கண்டு கொண்டேன் 

உன்னை பிரிந்த நொடியில்!!!



Advertisement

“நல்ல பிள்ளை. நல்லா இருக்கட்டும். என்னால தான் இவளை மகளா மனசார ஏத்துக்க முடியலை. போற இடத்துலயாவது நல்லா வாழட்டும்”, என்று எண்ணிக் கொண்டாள் அமுதா.

Advertisement

வெளியே கேசவனிடம் பேசிக் கொண்டிருந்தார் மூர்த்தி. “என்ன மூர்த்தி இந்த இடத்தை முடிச்சிறலாம் தானே?”, என்று கேட்டார் கேசவன்.

Advertisement

“தாராளமா செய்யலாம் மச்சான். நல்ல பையன், நல்ல குடும்பம். பாரதி சந்தோஷமா இருப்பா. கல்யாண செலவை நினைச்சு எல்லாம் கவலைப் படாதீங்க. எப்படியும் அவங்களுக்கு தான் நிறைய செலவு இருக்கும். நம்ம பக்கம்  இருக்குற செலவை நம்ம ரெண்டு பேரும் பிரிச்சிக்கலாம்”

Advertisement

“மூர்த்தி”

“ஆமா மா, நான் ஒரு லட்சம் தந்துறேன். மேற்கொண்டு என்ன ஆனாலும் நீங்க பாத்துக்கோங்க. எங்க அக்கா இறந்ததுல இருந்தே அவ பேர்ல ஒரு சீட்டு போட்டுட்டு இருந்தேன். போன வருஷம் தான் முடிஞ்சது. அந்த பணம் எடுத்து தரேன். அப்புறம் என் பொண்டாட்டி அவளுக்குன்னு அஞ்சு பவுன் நகை எடுத்து வச்சிருக்கா. அது போக அக்கா நகையும் இருக்கு. அது மட்டுமில்லாம எங்க அம்மா அப்பா சொத்தை வித்ததுல என் அக்காவுக்கும் பங்கு கொடுக்கணும்ல? அதுல ஒரு அஞ்சு லட்சம் பாரதி பேர்ல ஏற்கனவே போட்டுட்டேன். அதுவும் அவளுக்கு தான்”, என்று மூர்த்தி சொல்ல அவரை பிரம்மிப்பாக பார்த்தார் கேசவன்.

கூடவே தான் தன்னுடைய மகளுக்கு எதுவுமே செய்ய வில்லை என்ற உண்மை அவர் முகத்தில் அறைந்து அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தந்தது.

பாரதியை அக்கா மக என்று எண்ணாமல் தன்னுடைய மகளைப் போல எண்ணி அவளை படிக்க வைத்து திருமணத்திற்கும் இவ்வளவு செய்யும் மச்சினனை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது.

“கவலைப்படாதீங்க மாமா, பாரதி கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திரலாம்”, என்று சொல்லி விட்டு சந்தோஷமாக அங்கிருந்து சென்றார் மூர்த்தி.

மூர்த்தியைப் பற்றி எண்ணிக் கொண்டே உள்ளே வந்த கேசவன் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சுங்க?”, என்று கேட்டாள் அமுதா.

“இந்த மூர்த்தி என்ன எல்லாம் பண்ணிருக்கான் தெரியுமா அமுதா?”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னார் கேசவன்.

கட்டியிருந்த சேலையை மடித்துக் கொண்டிருந்த பாரதியும் அதைக் கேட்டாள். மூர்த்தியை எண்ணி அவள் மனம் விம்மியது. “என்ன ஆனாலும் மாமாவுக்காக இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். நான் அவருக்கு செய்ற கைம்மாறு இது தான்”, என்று எண்ணிக் கொண்டாள் பாரதி.

அடுத்து வந்த நாட்களில் மின்னல் வேகத்தில் பாரதி தமிழ் திருமண வேலைகள் நடந்தது. மற்றவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் மாப்பிள்ளையும் பெண்ணும் மட்டும் ஏண்டா இந்த கல்யாணம் நடக்குது என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். தமிழ் அவளுடைய அழகால் வந்த தடுமாற்றமும் அவளுடைய குணம் எப்படி இருக்குமோ என்ற பயத்திலும் திருமணத்தில் அவனால் முழுவதுமாக சந்தோஷம் கொள்ள முடியவில்லை. பாரதிக்கோ ரிஷியை ஏமாற்றி விட்டோமோ என்ற குற்ற உணர்வும், தமிழ் பேசிய பேச்சால் எழுந்த பயமும் சேந்து அவளை நிம்மதியாக இருக்க விட வில்லை.

மீனாவும் அமுதாவும் சென்று தான் பாரதிக்கு புடவைகள் மற்ற துணிகள் என எடுத்தார்கள். மீனா பாரதியை அழைத்ததற்கு “நான் வரலை அத்தை. நீங்களும் சித்தியுமே எடுத்துட்டு வாங்க”, என்று சொல்லி விட்டாள்.

மூர்த்தி ஒரு லட்சம் பணம் கொடுக்க “இந்த பணம் வேண்டாம் மூர்த்தி. நான் கொஞ்சமாவது என் மகளுக்கு செய்ய நினைக்கிறேன்.  அதனால கல்யாணச் செலவை நான் பாத்துக்குறேன். நீ இந்த பணத்துக்கு பாரதிக்கு நகை எடுத்துப் போட்டுரு”, என்று சொன்னார் கேசவன். அதனால மூர்த்தி அவளுக்கு மேலும் ஐந்து பவுன்நகை எடுத்து விட்டார்.

வீட்டு அலங்காரம், மறுவீடு விருந்து சாப்பாடு செலவு, சீர் வரிசை பொருள்கள் வாங்க என கேசவன் கொஞ்சம் அதிகமாக செலவு செய்தாலும் அமுதா அதை ஏன் என்று கேட்க வில்லை.

“உனக்கு இதுல வருத்தமோ கோபமோ வரலையா அமுதா?”, என்று அவளிடம் கேசவன் கேட்க “இல்லைங்க, பாரதிக்காக தான செய்றோம். நாம தான் அவளை நல்லா பாத்துக்கலை. போற இடத்துலயாவது நல்லா இருக்கட்டும்”, என்றாள் அமுதா. எப்போதும் போல் இப்போதும் கேசவனால் அவளை புரிந்து  கொள்ள முடியவில்லை. அவள் மகளை ஏதாவது கொடுமை செய்வாளோ என்று எண்ணி தான் அவர் மகளை விட்டு தள்ளி இருந்தார்.

முதல் மனைவியை போல இருந்த பாரதியைக் கண்டதும் அவருக்கு முதல் மனைவி நினைவு வரும். அவளைப் பார்த்தாலே அவர் குரல் நெகிழும். ஆனால் அப்படி நெகிழ்ச்சியைக் கட்டினால் கண்டிப்பாக அமுதா அவளை கொடுமை செய்வாள் என்று எண்ணி தான் பாரதியை விலக்கி நிறுத்தினார். அவர் செய்தது சரியா தப்பா என்று தெரியாது. ஆனால் அவர் அதை சரி என்று தான் எண்ணினார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயம் நடந்தது. தமிழும் பாரதியும் பாரதி வீட்டில் இருந்த கூடத்தில் சேரில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது வீட்டுக்கு வரும் மருமகளுக்கு கொடுக்க வேண்டிய பரம்பரை நகைகளை சபையில் வைத்து பாரதியிடம் கொடுத்தாள் கோகிலா.

அனைவரும் அதை வியந்து பார்க்க பாரதியோ அதிர்ந்து போனாள். “எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் போட்டுருக்குறது என்னோட அம்மாவோடது. இது போட்டா அம்மா என் கூடவே இருக்குற மாதிரி இருக்கு. மாமா நகையும் இருக்கு. எனக்கு அதுவே போதும். இந்த பெரிய நகை எல்லாம் எனக்கு வேண்டாமே”, என்று பாரதி அனைவர் முன்னிலையிலும் சொல்ல அனைவரும் அவளை வியப்பாக பார்த்தார்கள்.

இவ்வளவு நகையை வேண்டாம் என்று சொன்ன மருமகளை பார்த்து “மருமக சொக்கத் தங்கம்”, என்று என்று எண்ணினார்கள் பாண்டியனும் கோகிலாவும்.

தமிழோ அவள் சொன்னதைக் கேட்டு புருவம் உயர்த்தினான். “இவ நல்லவளா? இல்லை நல்லவ மாதிரி நடிக்கிறாளா?”, என்று எண்ணினான் தமிழ்.

“அம்மா பாசம்னு சொன்னதுனால உன்னை விடுறேன். ஆனா நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் எப்படின்னாலும் இந்த நகை எல்லாம் உனக்கு தான் மா. உனக்கு அப்புறம் இதெல்லாம் உன்னோட பிள்ளைகளுக்கு போகும். அப்புறம் இன்னொரு தடவை அம்மாவை நினைச்சு வருத்தப் படக் கூடாது. என்னை உன்னோட அம்மாவா நினைச்சிக்கோ. இப்ப இருந்து நான் உனக்கு மாமியார் இல்லை. அம்மா”, என்று கோகிலா சொன்னதும் நெகிழ்ந்து போய் கோகிலாவைப் பார்த்தாள் பாரதி.

அவளது கண்களில் இருந்த கண்ணீரைக் கண்ட தமிழுக்கு அவள் நடிப்பது போல சத்தியமாக தெரியவில்லை. “இப்ப எதுக்கு நீ என் மருமகளை அழ வச்சிட்டு இருக்க?”, என்று பாண்டியன் கோகிலாவை கடிந்து கொள்ள அவர் கண்டிப்பில் தந்தையின் அன்பை உணர்ந்தாள் பாரதி.

“இப்படி ஒரு அம்மா அப்பாவை எனக்கு கொடுக்க தான் இவன் கூட எனக்கு கடவுள் கல்யாணம் பண்ண நினைக்கிறாரா? இவங்களுக்காக இவன் எப்படிப் பட்டவனா இருந்தாலும் இவனைக் கல்யாணம் பண்ணிக்கலாமே?”, என்று எண்ணி தமிழைப் பார்த்தாள் பாரதி.

அந்நேரம் அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பார்வைக்கு அர்த்தம் தான் அவளுக்கு புரியவில்லை. எப்படியும் அவன் தன்னைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டு அதன் பின்னான சடங்குகளில் கவனத்தை செலுத்தினாள். திருமண நாளும் அழகாக விடிந்தது.

திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் முழு அலங்காரத்தில் அமர்ந்திருந்தாள் பாரதி. இன்னும் சற்று நேரத்தில் தமிழுக்கு மனைவியாகி விடுவாள். இந்த திருமணம் நடக்க வேண்டாம் என்று எவ்வளவோ வேண்டுதல்களை வைத்தாலும் கடவுள் அவளை கை விட்டு விட்டார்.

உனக்கு இவன் தான் மாப்பிள்ளை என்பது கடவுள் போட்ட முடிச்சு போல? அதை மாற்ற யாராலும் முடியாது என்று அவளுக்கு எடுத்துரைத்தது அவள் மனசாட்சி;

மனதளவில் தவித்துப் போனாள் பாரதி. பாரதியை பெண்ணழைக்க தமிழின் சொந்த பந்தம் எல்லாம் வந்து விட்டது. அவளுக்கு என்று காரை ஏற்பாடு செய்திருந்தார் பாண்டியன். அவள் காரை விட்டு இறங்கியதும் மண்டப வாசலில் அவளுக்கு ஆலம் சுற்றி வரவேற்பு நடந்தது.

தன்னுடைய அறையில் தயாராகிக் கொண்டிருந்த தமிழுக்கு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலை அரித்தது. இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது தவறோ என்று எண்ணினான். ஆனால் அவன் இப்போது பயணிப்பது ஒரு வழிப் பாதை. அவனால் இனி இதை தடுக்கவே முடியாது என்று அவனுக்கு யார் சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!