Skip to content
Post Views: 2,683
அவன் அருகில் இருக்க மாட்டான் என்றதும் பயந்து போனவள் “தனியாவா?”, என்று கேட்டாள்.
தன்னுடைய துணையை அவள் எதிர்பார்க்கிறாள் என்று சந்தோசமானவன் “உனக்கு துணைக்கு நான் அங்க வந்தா அங்க உள்ள பொம்பளைங்க எனக்கு டின்னு கட்டிருவாங்க. ஒரு பயமும் இல்லை. மத்தவங்க எல்லாம் நிக்குறாங்க பாரு. பயமா இருந்தா பாறையை பிடிச்சு நின்னுக்கோ”, என்றான்.
Advertisement
அப்போதும் அவள் தயங்க “நான் இங்க குளிச்சாலும் என் கண் உன்னை பாத்துட்டே தான் இருக்கும் போதுமா? அப்புறம் தண்ணிக் குள்ள கொஞ்சம் கொஞ்சமா உள்ள போ? இல்லைன்னா மூச்சு முட்டிரும்”, என்றதும் “சரி”, என்று சொல்லி விட்டு அவன் சொன்ன பக்கம் நடந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் தமிழ்.
Advertisement
அருகில் சென்ற பாரதிக்கு நீரின் வேகத்தைக் கண்டு பயமாக இருந்தது. “புதுசா இன்னைக்கு தான் வந்துருக்கியா மா? அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை. வா, நாங்க எல்லாம் இருக்கோம்ல? என் மக முதல் தடவை இப்படி தான் பயந்தா. இப்ப ஒரு மணிநேரமா இங்க நின்னுட்டு வர மாட்டிக்கா”, என்று சொன்னாள் ஒரு நாப்பது வயது மதிக்க தக்க பெண்மணி.
Advertisement
அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த பெண் அருகில் சென்று நின்று கொண்டாள். கண்ணைச் சுழற்றி அவனை தேடினாள். கூட்டத்தில் அவன் அவளுடைய கண்ணுக்கு சிக்க வில்லை. தண்ணீரடியில் போய் நின்றதும் உடல் முழுவதும் ஜில்லிப்பை அடைந்தது. ஆனால் அவன் அவளையே பார்த்துக் கொண்டு தான் நின்றான். அவள் குளிக்க போனதும் தான் அவன் சென்றான்.
Advertisement
தண்ணீரில் நின்றதும் ஒரு சிலிர்ப்பு தலை முதல் கால் வரை பரவியது பாரதிக்கு. சின்ன சின்ன கற்கள் தலையில் விழுவது போல விழுந்து கொண்டிருந்தது தண்ணீர். சிறிது நேரத்தில் அதிக ஆவலாக குளிக்க ஆரம்பித்து விட்டாள். அவள் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றாளோ தெரியாது. அவளே சிறிது நேரத்தில் போதும் என்று நினைத்து வெளியே வரும் போது அங்கே குளித்து முடித்து புன்னகையுடன் அவளையே பார்த்த படி நின்றான் தமிழ்.
அவனைக் கண்டதும் பள்ளி முடிந்து வெளியே வரும் குழந்தை தாய் தந்தையை பார்த்தால் எப்படி சந்தோஷமாக ஓடி வருமோ அப்படி அவனை நோக்கி வந்தாள் பாரதி.
“போகும் போது பயந்தது என்ன? இப்ப என்னடான்னா ரெண்டு மணி நேரம் கழிச்சு வெளிய வர”, என்று சிரித்தான் தமிழ்.
“அவ்வளவு நேரம் ஆய்ட்டா? நேரம் போனதே தெரியலைங்க. சாரி”, என்று மன்னிப்பு வேண்டும் குரலில் சொன்னாள் பாரதி.
“ஏய் எதுக்கு சாரி எல்லாம்? உனக்கு பிடிச்சிருந்ததா?”
“ரொம்ப ரொம்ப, சூப்பரா இருந்துச்சு”
“இன்னொரு ரவுண்ட் போயிட்டு வரியா?”, என்று அவன் பேருக்கு கேட்க அவளோ “நிஜமாவா?”, என்று கேட்டு கண்ணை விரித்தாள்.
“இங்க போதும், நாம வேற இடத்துக்கு போவோம் வா”, என்று சொல்லி ஐந்தருவிக்கு அழைத்துச் சென்றான். கடைசியாக செண்பகதேவி அருவிக்குச் சென்றார்கள். அந்த மலைப் பாதையை ரசித்த படி அவனுடன் நடந்தாள் பாரதி. அப்போது ஒரு கல் அவள் காலை இடர அவள் விழப் பார்த்தாள்.
“பாத்து வரக் கூடாதா?”, என்று கேட்டுக் கொண்டே அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அதன் பின் இருவர் கரமும் சேர்ந்தே இருந்தது. அவள் ஒன்றும் சொல்லாததால் அவனும் அவள் கையை விடவே இல்லை.
அங்கே இங்கே குதித்துக் கொண்டிருந்த குரங்குகளைப் பார்த்து கண்களை அகல விரித்தாள் பாரதி. அவள் சந்தோசத்தில் தமிழும் மிகவும் மகிழ்ந்து போனான்.
அங்கே சென்று மீண்டும் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று இருவரும் கடவுளை வணங்கினார்கள். அதன் பின் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
பின் காருக்கு வந்ததும் “வேற டிரஸ் வேணும்னா மாத்திக்கோ பாரதி”, என்றான் தமிழ்.
“ஓரளவு காஞ்சிருச்சுங்க. அதான் வீட்டுக்கு போயிருவோமே. அதனால இதே இருக்கட்டும்”, என்று சொல்லி காரில் ஏறிக் கொண்டாள்.
கார் திருநெல்வேலி நோக்கிச் சென்றது. இருவர் மனதிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. சந்தோஷமாக காரை ஓட்டினான் தமிழ். அவளும் சந்தோஷமாக அவனுடன் பேசிய படியே வந்தாள்.
ஒரு நாள் வெளிய கூட்டிட்டு வந்ததுக்கு இவளுக்கு இவ்வளவு சந்தோஷமா என்று எண்ணிய தமிழுக்கு அவளை நினைத்தால் வியப்பாக இருந்தது.
அது வேண்டும் இது வேண்டும் என்று அவனிடம் அவள் கேட்க வில்லை. சாப்பிட ஹோட்டலுக்கு அழைத்து சென்ற போது கூட “இவ்வளவு பணமா? இது தெரிஞ்சா நான் வீட்ல இருந்தே நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு கட்டி எடுத்துட்டு வந்துருப்பேன்”, என்று தான் சொன்னாள்.
அதை எண்ணிய படியே வந்தவன் அவள் எதுவோ கேட்கவும் அவள் புறம் திரும்பினான்.
“என்ன ஆச்சு? ஏதோ கனவு கண்டுட்டு வாரீங்க?”
“சாரி பாரதி, பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு உன்னை தப்பா பேசிட்டேன்”
“எத்தனை தடவை சாரி கேப்பீங்க? இதுல என்ன இருக்கு? உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாதுள்ள? அதனால தான் சொல்லிட்டீங்க? அதை விடுங்க”, என்று சொல்லி புன்னகைத்த மனைவியை இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
அவளது ஈர சேலை சிறிது தான் காய்ந்திருந்ததால் லேசாக அவள் உடலில் ஒட்டியிருந்தது. அவளைப் பார்த்தவனுக்கு அவளை நெருங்க ஆவல் இருந்தாலும் அவளை நெருங்கினால் அவள் வாயை மூடிக் கொள்வாள் என்பதால் விலகியே இருந்தான். ஆனாலும் இருவர் கால்களும் உரசிய படியே இருந்தது. அவனுக்கு அதுவே குதூகலமாக இருந்தது. அவளோ அதை உணரவே இல்லை.
கதை பேசிய படியே அவர்கள் வீட்டுக்குச் செல்ல இரவானது. அங்கே கோகிலா இரவு உணவை அவர்களுக்காக தயாராக வைத்திருந்தாள்.
வீட்டுக்கு சென்றதும் “அத்தை அங்க எப்படி இருந்துச்சு தெரியுமா? அவ்வளவு தண்ணீர்”, என்று சிறு குழந்தை போல கதை பேச அவளை தான் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.
“உங்க அத்தைக்கு நீ குளிச்சிட்டு வந்து கதை சொல்லு. இப்ப வந்து குளிக்க வா. குளிச்சிட்டு வந்து சாப்பிடணும். எனக்கு பசிக்குது”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான் தமிழ்.
அவர்கள் சென்றதும் “பாரதி பாவம் என்னங்க? சின்ன சின்ன சந்தோசத்துக்கு கூட ஏங்கி இருக்கா. என் கிட்ட கூட எப்படி ஒட்டிக் கிட்டா தெரியுமா? நான் கூட வர மருமக எப்படி இருப்பாளோன்னு கவலைப் பட்டேன். ஆனா இப்ப எனக்கு மக இல்லாத குறையை அவ தான் போக்குறா”, என்றாள் கோகிலா.
“ம்ம், ரொம்ப நல்ல பொண்ணு. மூர்த்தி அவளைப் பத்தி எல்லாம் சொன்னான். உன் கிட்ட கூட சொன்னேனே? இனி அவளை நம்ம மகன் நல்லா வச்சிக்குவான். நீயும் அவ கிட்ட மாமியார் முறுக்கை எல்லாம் காமிச்சிறாத. அந்த பிள்ளை தாங்காது”, என்றார் பாண்டியன்.
“பிள்ளைங்க சந்தோஸமா இருக்குறது தாங்க எனக்கு முக்கியம்? நான் என்ன சொல்லப் போறேனாம்? சரி இன்னொரு தோசை கொண்டு வரவா?”
“வேண்டாம், எனக்கு போதும். அவங்க வந்ததும் ரெண்டு பேருக்கும் கொடு”, என்று சொல்லி விட்டுக் சென்றார் பாண்டியன்.
அதன் பின் இரவு உணவு முடிந்து அறைக்கு சென்றதும் அருவிக் குளியல், வயிறு நிறைய உணவு என தமிழுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது.
ஆனால் பாரதியோ அவனிடம் இன்று நடந்ததைப் பற்றி கதை பேசிக் கொண்டே இருந்தாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் அவள் பேசுவதை ரசித்திருப்பான். ஆனால் இப்போதோ அவன் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சியது. அவள் பேசுவதற்கு ம்ம் ம்ம் என்று முனங்கிக் கொண்டிருந்தான்.
“இனி நாம என்னைக்கு அங்க போவோம்?”, என்று கேட்டாள் பாரதி.
அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய தமிழ் “ம்ம்”, என்றான்.
“என்னங்க, நான் எப்ப போவோம்னு கேட்டுட்டு இருக்கேன். நீங்க என்ன டான்னா ம்ம்னு சொல்றீங்க?”, என்று கேட்டாள் பாரதி.
“எனக்கு தூக்கம் வருது பாரதி, நாளைக்கு பேசுவோமா?”, என்று தமிழ் கேட்க “போங்க உங்க கூட சண்டை. நான் எவ்வளவு சந்தோசமா கதை பேசுறேன். உங்களுக்கு தூக்கமா முக்கியம்?”, என்று சிணுங்கினாள் பாரதி.
காதல் துளிர்க்கும்….
error: Content is protected !!