Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 2 1

அத்தியாயம் 2  

புரிந்து கொள்ள முடியாத

அழகான புதிர் தான்

எந்தன் காதலி!!!



Advertisement

“சூழ்நிலை வரும்னு சொல்லலை மீனா. வரலாம்னு தான் சொன்னேன். நாளைக்கு நமக்கு பிள்ளைங்க வரும் போது உன் கவனம் பாரதி மேல முழுசா விழாது மா. அதை தப்புன்னும் யாராலயும் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் என் அக்கா மகன்னு நினைச்சு அவ மேல அதிக கவனம் எடுத்தா கூட அது உன் மனசுல சில நேரம் பொறாமையை தூண்டி விடலாம். அதனால தான் அவளை ஹாஸ்ட்டல்ல சேக்குற முடிவு எடுத்தேன். அங்கன்னா அவ உண்டு அவ படிப்பு உண்டுன்னு இருப்பா. லீவுக்கு நம்ம வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா நீ அவ மேல அதிக அன்பைக் காட்டுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அது போதும் மா. அன்பு இல்லாம வெறுப்பு உருவாகுறதுக்கு அன்பை தக்க வச்சிக்கிறது பெரிய விஷயம் தானே?”, என்று அவர் சொன்னதும் அவளும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சரி என்றாள்.

Advertisement

அனைத்தையும் தூங்குவது போல கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு மாமா தன் மேல் வைத்த பாசத்தை எண்ணி வியப்பாக இருந்தது. கூடவே அத்தையின் அன்பும் புரிந்தது. இவர்கள் பாசமாவது தனக்கு நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்றால் இவர்களை விட்டு தூரமாக தான் இருக்க வேண்டும் என்று அந்த சிறு வயதிலே எண்ணிக் கொண்டாள் பாரதி.

Advertisement

அடுத்த நாளே பாரதியிடம் “ஹாஸ்டல் போறியா டா? அங்க இருந்தா நல்லா படிக்கலாம். நானும் அத்தையும் உன்னை அடிக்கடி அங்க பாக்க வரோம்”,  என்று மூர்த்தி சொன்னதும் சந்தோஷமாக சரி என்றாள் பாரதி. அவளே சம்மதம் சொன்னதும் அடுத்த நாளே அவளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டார் மூர்த்தி.

Advertisement

அதன் பின் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருந்தாள் பாரதி. மூர்த்தி தான் அவளை அடிக்கடி காணச் செல்வார். எப்போதாவது மீனாவும் செல்வாள். அதன் பின் மீனா குழந்தை உண்டாகி இருந்ததால் மூர்த்தி மட்டும் தான் செல்வார்.

அவள் வீட்டில் இருந்து போனது நிம்மதி என்றும், தொல்லை போச்சு என்றும் தான் கேசவனும் அமுதாவும் நினைத்தார்கள். எப்போதாவது லீவுக்கு பாரதி தன்னுடைய வீட்டுக்கு சென்றாலும் அவளை வேண்டா வெறுப்பாக தான் வரவேற்பார்கள் கேசவனும் அமுதாவும். அதுவும் வா என்று கூட சொல்ல மாட்டார்கள். அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் “நீ எப்ப வந்த? எத்தனை நாள் லீவ்? எப்ப கிளம்புற? ஹாஸ்டலுக்கு எப்படி போவ? உன் மாமன் கூட தான் போகணும். என்னை எல்லாம் கூப்பிடக் கூடாது”, என்று சொல்வார் கேசவன்.

அமுதாவோ “இன்னும் நான் உனக்கும் சேத்து சமைக்கணுமா? சோறு வேணும்னா அந்த பாத்திரம் எல்லாம் கழுவு போ”, என்பாள். அவளுடைய மகளும் மகனும் டி‌வி பார்த்துக் கொண்டிருக்க பாரதி மட்டும் வரிசையாக வேலை செய்து கொண்டிருப்பாள்.

லீவ் நாட்களில் பகலில் மூர்த்தி வீட்டில் இருக்கும் பாரதி இரவுக்கு அவள் வீட்டுக்கே சென்று விடுவாள்.

“எதுக்குங்க நைட் மட்டும் பாரதியை அங்க அனுப்புறீங்க? நம்ம வீட்லயே இருக்கட்டுமே? நம்ம மகனும் பாரதியை அக்கா அக்கான்னு சொல்லி அவ கிட்டயே தான் இருக்கான்”, என்றாள் மூர்த்தியின் மனைவி மீனா.

“என்ன தான் பாரதியை நாம பாத்துக்கிட்டாலும் அவ அப்பனுக்கும் மகள் இவ்வளவு பெருசா வளந்துட்டான்னு அப்ப அப்ப தெரியனும்ல? என்னைக்காவது அந்த அமுதா மேல இருக்குற மோகம் குறைஞ்சு மக மேல அவன் கவனம் வரலாம். அதுக்கு தான் பாரதியை நைட் மட்டும் அங்க அனுப்புறேன்”, என்றார் மூர்த்தி.

ஆனால் லீவுக்கு வரும் பாரதி அத்தை மாமாவுக்கு அதிகம் தொல்லைக் கொடுக்க கூடாது என்றும், அமுதா இருக்கும் வீட்டில் இருக்க பிடிக்காமலும் மீண்டும் ஹாஸ்டல் சென்று விடுவாள்.

மற்றவர்களுக்காக புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்தாலும் நத்தை எப்படி தன்னுடைய ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்ளுமோ அதே போல அவள் மனதும் சுருங்கி தான் இருந்தது.

அவளது படிப்புக்கு தேவையான பணத்தை, அவளுக்கு தேவையான உடைகளை வாங்க என அனைத்தையும் அவளுக்கு செய்வது மூர்த்தி தான். கேசவன் இது வரை அவளுக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை. மூர்த்தியிடமும் அவளாக எதுவும் கேட்க மாட்டாள்.

பள்ளியில் அவளுடைய கிளாஸ் மிஸ் அவளிடம் “நீ பெரிய பொண்ணாகிட்ட பாரதி. இனி இன்னர் எல்லாம் போடாம இருக்க கூடாது. உங்க வீட்ல சொல்லி பிரா வாங்கிப் போடு”, என்று சொல்ல அவளுக்கு அதைக் கூட யாரிடம் கேட்க என்று தெரியவில்லை. மூர்த்தியிடம் அவள் எப்படி அதைக் கேட்பாளாம்? அப்போதெல்லாம் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுத்த கடவுளை நினைத்து கண்ணீரால் தலைணையைத் தான் நினைப்பாள்.

ஆனால் அந்த வயதைக் கடந்து வந்த மீனா அவள் நிலை உணர்ந்து அடுத்த முறை மூர்த்தி அவரைக் காணச் செல்லும் போது அதையும் வாங்கி வைத்து அனுப்பினாள். அதைக் கண்டு அத்தையின் அன்பை எண்ணி பாரதியின் நெஞ்சம் சந்தோசத்தில் விம்மியதை, அந்த உணர்வை கண்டிப்பாக வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அம்மா இல்லாமல் போனாலும் யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு உறவு என்று எண்ணி அவள் நெஞ்சம் நிறைந்து போனது.

இப்படியே அவள் பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரிப் படிப்பையும் மூர்த்தி உதவியுடன் ஹாஸ்டலில் தங்கியே படித்துக் கொண்டிருந்தாள் பாரதி.

காலேஜ் முதல் வருடம் படிக்கும் போது தான் அவள் சஹானாவின் அண்ணன் ரிஷியைப் பார்த்தது. முதல் நாள் காலேஜ் என்றதும் கொஞ்சம் படபடப்பாக தான் வந்தாள் பாரதி. மூர்த்தி அவளுக்கு துணைக்கு வருகிறேன் என்று தான் சொன்னார். ஆனால் அவருக்கு வயலில் அன்று கதிர் அறுப்பு இருந்ததால் “நீங்க வயலுக்கு போங்க மாமா. நான் தனியா போய்க்குவேன்? நான் என்ன சின்ன பிள்ளையா?”, என்று கேட்டு வந்து விட்டாள்.

அவரும் அவளுக்கு தைரியம் வர வேண்டும் என்று எண்ணி அவளை தனியே அனுப்பி வைத்தார். ஆனால் இங்கே வந்ததும் அவளை அறியாமலே கொஞ்சம் பயம் வந்திருந்தது. காலையில் சீக்கிரமாவே வந்து ஹாஸ்டலில் அட்மிசன் போட்டுவிட்டு காலேஜ் வந்தாள். தன்னுடைய கிளாசை விசாரித்து அதை நோக்கி நடந்தாள். அப்போது அவள் கண்ணில் விழுந்த காட்சி என்னவென்றால் சஹானாவின் தலையை அன்புடன் வருடிக் கொண்டிருந்தான் ரிஷி.

காலேஜ் முதல் நாள் என்பதால் சஹானா கிளாசுக்கு போக மாட்டேன் என்று அழுது கொண்டிருக்க அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் ரிஷி.

அவள் அங்கே கண்டது சகோதரப் பாசம் தான். ஆனால் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த அவள் மனதில் இப்படி தன்னையும் பார்த்துக் கொள்ளும் ஒரு ஆள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணம் உருவானது. அந்த ஆள் கணவனா காதலனா நண்பனா சகோதரனா  என்றெல்லாம் அவள் ஆராயவில்லை. ஆராயும் பக்குவமும் அவளுக்கு இல்லை.

தங்களையே பார்த்த படியே நின்ற பாரதியை முதலில் பார்த்தது ரிஷி தான். அப்போதே அவளது அழகு அவன் மனதில் பதிந்து போனது. அவளிடம் பேச எண்ணி “நீயும் இந்த டிபார்ட்மெண்ட் தானா?”, என்று ரிஷி பாரதியிடம் கேட்டதும் தன்னுடைய அண்ணன் யாரிடமோ பேசவும் சஹானாவும் அவளை திரும்பி பார்த்தாள்.

“ஆமா”, என்றாள் பாரதி.

“உன் பேர் என்ன?”

“என் பேர் பாரதி”

“என் பேர் ரிஷி. இவ என்னோட தங்கை சஹானா. இவளும் இந்த கிளாஸ் தான். பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல்ல படிச்சாளா? இங்க பசங்களா இருந்ததும் உள்ள போக மாட்டேன்னு பயந்து அழுறா. நீ இவளைப் பாத்துக்குவியா?”, என்று ரிஷி கேட்டதும் புன்னகையுடன் சரி என்றாள் பாரதி.

அந்த புன்னகை ரிஷியை அவள் புறம் சாய வைக்க சஹானாவுக்கும் அந்த புன்னகை பிடித்தது.

“சஹி குட்டி, பாரதி உன் கூட தான் இருப்பா. எதுனாலும் அவ கிட்ட கேளு. பயம் எல்லாம் வேண்டாம் மா. அவ கூட போறியா?”, என்று ரிஷி அன்புடன் கேட்டுக் கொண்டிருக்க அவனையும் அவன் முகத்தில் வந்து போன பாசத்தையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி. இந்த அன்பு தனக்கு இல்லையே என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

சஹானாவும் “சரிண்ணா நான் போறேன். வா பாரதி போகலாம்”, என்று அவளையும் அழைத்தாள். பாரதியும் அவளுடன் நடந்தாள். இருவரையும் ரிஷி நின்று பார்த்துக் கொண்டே இருக்க பாரதி அவனை திரும்பி திரும்பி பார்த்த படியே சென்றாள். அந்த பார்வை அவள் மனதில் தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவனுக்குள் விதைக்க அவன் பார்வையும் ஆர்வமாக அவள் மேல் பதிந்தது.

அதன் பின் வந்த நாட்களிலெல்லாம் அவனைக் கண்டாலே அவள் பார்வையில் ஆர்வம் வந்து விடும். அவளுடைய ஆர்வமான பார்வையில் அவனுடைய இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிம்மாசனமிட்டு அமர்ந்தாள் பாரதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!