Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 2 2

அவர்கள் பார்வை பரிமாற்றதைக் கண்டு கொண்ட சஹானா பாரதியிடம் “என் அண்ணனை லவ் பண்ணுறியா டி? சூப்பர் நீ தான் எனக்கு அண்ணி”, என்று பேசி பேசியே “இவன் கணவனாக வந்தால் நல்லா இருக்குமே?”, என்ற எண்ணத்தை பாரதிக்குள் விதைத்தாள்.

ஆனால் இது காதலா என்றெல்லாம் பாரதி யோசித்ததில்லை. அதுவும் அவர்கள் பெரிய பணக்கார்கள் என்று தெரிந்ததில் இருந்து அவனை திருமணம் செய்ய நினைத்த ஆசை கூட அவள் அடி மனதில் சென்று விட்டது.



Advertisement

சஹானா பிறந்த நாளுக்கு ஒரு முறை அவள் வீட்டுக்கு சென்ற போது தான் பாரதிக்கு அவர்கள் பின் புலம் தெரிந்தது. அதுவும் ரிஷி ஒரு டாக்டர் என்று தெரிந்தது. அன்றே தன்னுடைய ஆசை நிறைவேறாது என்று எண்ணிக் கொண்டாள் பாரதி. ஆனால் சஹானா அவர்களை கிண்டல் செய்வதை இப்போது வரைக்கும் விடவே இல்லை.

இருக்க சரியான இடம் இல்லாத நிலையில் கோபுரத்தில் தூங்க ஆசை வருவது போல தான் தன்னுடைய நிலை என்று எண்ணி சஹானா கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பாரதி.

Advertisement

Advertisement

தன்னுடைய வாழ்க்கையை நினைத்து அவளுக்கே வெறுப்பு வந்தது. அவள் முகத்தைப் பார்த்த சஹானாவுக்கு அவள் மனது தெளிவாக புரிந்தது. ஏனென்றால் சஹானாவுக்கு அவள் குடும்ப நிலை அனைத்தும் தெரியும். பாரதியாக எங்க அப்பா இப்படி, என் சித்தி இப்படி என்றெல்லாம் சொல்ல மாட்டாள். ஆனால் அவளை பேச வைத்து அவள் மனதில் இருப்பதை சாமர்த்தியமாக கறந்த பெருமை சஹானாவையே சாரும். அவள் மனதை மாற்ற எண்ணி “தோசையைப் பாத்ததும் எங்க அண்ணனை மறந்துட்டியா டி?”, என்று கேட்டாள் சஹானா.

“சே சே.. ரிஷி என்ன சொன்னாங்க? என்னைக் கேட்டாங்களா? என்ன கேட்டாங்க?”, என்று கேட்ட பாரதியின் குரல் சிறு ஏக்கத்துடன் வெளியே வந்தது.  மூளை அவன் உனக்கு கிடைக்க மாட்டான் என்று சொன்னாலும் மனது அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டு தான் இருந்தது. அதனால் ஆர்வமாகவே கேட்டாள்.

Advertisement

“உன்னைத் தான் எப்படி இருக்கான்னு கேட்டான். நீ ஒழுங்கா சாப்பிடணுமாம். அவளை எதுக்கும் கலங்க விடாதேன்னு சொன்னான் டி”, என்றாள் சஹானா.

“நானும் அவங்களைக் கேட்டேன்னு சொல்லு டி”

“சரி சரி பாரதி உன்னைக் கேக்குறா அண்ணா, உன்னை அவளுக்கு கொடுத்துருன்னு சொல்றேன்”, என்று சிரித்தாள் சஹானா.

“ஏய் நான் அப்படியா டி சொன்னேன்? சரி அவங்க ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் ஒழுங்கா போறாங்களா?”

“அதெல்லாம் போறான். அம்மா தினமும் விரட்டி விட்டுருவாங்க”

“அவங்க கால்ல ஒரு புண்ணு வந்துருக்குன்னு சொன்னீயே, அது சரியாகிட்டா?”, என்று கேட்டாள் பாரதி.

“அது எப்பவோ ஆறிட்டு. அவனே அதை மறந்துருப்பான். அப்புறம் பாரதி, உன் மனசுல என் அண்ணன் இருக்கான்னு எனக்கு புரியுது. நான் எங்க அண்ணன் நம்பர் தரேன், அவன் கிட்ட பேசுறியா டி? ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்களேன்”

“ஐயையோ வேண்டாம் பா”, என்று அவசரமாக மறுத்தாள் பாரதி. ஏனென்றால் அவன் வந்து தன்னிடம் காதலைச் சொன்னால் பாரதி கண்டிப்பாக அதை மறுக்க தான் செய்ய வேண்டும். அவன் காதலை ஏற்றுக் கொண்டு அவ்வளவு பணக்கார குடும்பத்தில் மருமகளாக ஆக முடியுமா? ஆனால் அவனிடம் மறுக்க அவளுக்கு மனதில்லை. இருவரும் பேசமாலே இருந்து விட்டால் அந்த வேதனை வராதே. அதனால் தான் அவனிடம் பேசுவதை தவிர்த்தாள் பாரதி.

“ஏண்டி? எப்ப கேட்டாலும் இப்படியே பண்ணுற?”, என்று கேட்டாள் சஹானா.

“அது… அது வந்து…. எனக்கு பயமா இருக்கு டி சஹி”

“நமக்கு இன்னும் காலேஜ் முடிய ஒரு மாசம் தான் இருக்கு. அப்புறம் நீ உன் ஊரைப் பாத்து கிளம்பிருவ. இத்தனை நாள் உங்க ரெண்டு பேருக்கும் இடைல நான் தூது போயிட்டு இருந்தேன். காலேஜ் முடிஞ்சதுன்னா என்ன பண்ணுவ பாரதி? அவன் கிட்ட உன் காதலையும் நீ இன்னும் சொல்லலை. அவன் கிட்டயும் நீ பாரதியை லவ் பண்ணுறியான்னு கேட்டா எதுவும் சொல்லாம சிரிச்சிட்டு போறான். ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்களேன். உங்களை விட நீங்க சேருவீங்களா இல்லையானு எனக்கு தான் டி தவிப்பு அதிகமா இருக்கு”, என்றாள் சஹானா.

“வேண்டாம் வேண்டாம். எனக்கு உங்க அண்ணன் கிட்ட பேசுற தைரியம் சத்தியமா இல்லை. நடக்குறது நடக்கட்டும். எப்பவும் போல என்னோட விதி என்னை வழி நடத்தும். மேடம் வந்துட்டாங்க. கிளாஸ் கவனி”, என்று சொல்லி விட்டு திரும்பி விட்டாள் பாரதி.

“இவளைத் திருத்தவே முடியாது”, என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள் சஹானா.

பாரதிக்கோ பாடம் மனதில் பதிய வில்லை. இன்னும் ஒரு மாதத்தில் காலேஜ் முடிந்து விடும். அதன் பின் அவள் இந்த மதுரையை விட்டு சென்று விடுவாள். அவளுக்கு இன்னும் ரிஷி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. அவள் மனதில் என்ன இருக்கிறது என்றே அவளுக்கு தெரியாது.

இது வரை பல தடவை அவனைப் பார்த்திருக்கிறாள். ஆனால் முதல் நாள் தவிர ஒரு வார்த்தை கூட அவனிடம் அவள் பேச வில்லை. அவன் பார்வை ஆர்வமாக, ரசனையாக, காதலாக, அவள் மீது படிந்த போது இவளும் அவனை ஆர்வமாக பார்த்தாள் தான். ஆனால் அதில் காதல் இருந்ததா என்று அவளுக்கே தெரியாது. ஒரு நொடி அவனை ஆர்வமாக பார்த்து விட்டு பின் தலை குனிந்து கொள்வாள். இவ்வளவு நாட்களில் அழகான கண்ணாம்பூச்சி ஆட்டம் இருவருக்கும் இடையில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் அந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் நிறைவடைந்து விடும். பாரதி ஊருக்கு பெட்டியைக் கட்டி விடுவாள். ஆனால் அதன் பின்னர் என்னவாகும்?

இது வரை சஹானாவிடம் தான் மாற்றி மாற்றி நலம் விசாரித்துக் கொள்வார்கள் பாரதியும் ரிஷியும். ஆனால் ஊருக்கு சென்ற பின் என்ன செய்ய முடியும்? இது காதலா என்று இருவருக்குமே தெரியாது.

இவளைக் கண்டு அவன் முகம் மலர்வதும், அவனது கண்கள் இவளையே பார்த்த படி இருப்பதும் காதலா என்றெல்லாம் பாரதி யோசிக்க வில்லை.

ஆனால் அவனும் இவளிடம் பேச முயற்சி செய்தது இல்லை. ஏன் அவனாக வந்து காதலைச் கூட அவளிடம் சொல்ல வில்லை. அந்த பண்பு ரிஷியிடம் அவளுக்கு பிடிக்கும். கூடவே அவளுடைய வாழ்க்கை நிலையும் அவள் மனதைக் கட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அன்பே இல்லாமல், கடமைக்கு கூட தனக்கு தந்தையாக கடமை செய்யாத தந்தை, எப்போதுமே தன்னை பாரமாக கருதும் சித்தி, எதிரியை போல் பார்க்கும் சித்தியின் பிள்ளைகள், இப்படி ஒரு பிறந்த வீட்டை வைத்துக் கொண்டு ஒரு பெரிய அரசியல்வாதியின் மருமகள் என்றும், பெரிய டாக்டரின் மனைவி என்றும் சொல்ல அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அடிக்கடி எண்ணிக் கொள்வாள் பாரதி.

அவளுக்கு இருக்கும் ஆறுதல் அவளது மாமா குடும்பம் மட்டும் தான். அவள் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினால் கூட வருந்தும் தாய் மாமா, அன்னையை போலவே அன்பைக் காட்டும் அத்தை, கூட பிறந்தவன் போல தன்னை நடத்தும் மாமா மகன் என அவளது வாழ்வு ஒரு சிறிய கூட்டுக்குள் அடங்கியிருக்கிறது. அந்த கூட்டைக் கடந்து சிறகடித்து செல்ல அவளுக்கு விருப்பம் இருந்தாலும் அதை செய்ய அவளுக்கே மனதில்லை.

“நான் ஒருத்தனை காதலிக்கிறேன் மாமா”, என்று மூர்த்தியிடம் சொல்லும் தைரியம் கூட அவளுக்கு இல்லை. அதனால் சஹானா காதல் என்று சொன்னால் கூட பாரதி எப்போதும் மறுத்து விடுவாள்.

கூடவே இப்படி ஒருவன் தனக்கு கணவனாக கிடைத்தால் ஆயுள் முழுமைக்கும் தன்னை அவன் கைக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் அவளுக்கு வரும். இப்படி இரு வேறு பட்ட மன நிலையில் தத்தளித்தாள் பாரதி. எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

ஆனால் “உன் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான முடிவை நான் எடுக்கிறேன்”, என்று காத்திருந்தது விதி.

அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு பாரதி?”, என்று கேட்டாள் சஹானா.

“வாழ்க்கையை நினைச்சு பயமா இருக்கு சஹி”, என்று மறுக்காமல் உண்மையைச் சொன்னாள் பாரதி.

“என்ன பயம்? நாங்க எல்லாம் இல்லையா? நான் இருக்கேன் உனக்கு. என் அண்ணாவும் இருக்கான். அப்புறம் என்ன?”

“ஆனா எதுவும் உறுதியா தெரியாதே. காலேஜ் முடிஞ்சதும் என்னோட நிலைமை என்ன, எதுவுமே எனக்கு தெரியாது. எங்க வீட்ல ரொம்ப நாள் இருக்க முடியாது. என்னை எதிரி மாதிரி தான் பாப்பாங்க. மாமா வீட்லயும் எத்தனை நாள் இருக்க முடியும்?”

“இதுக்கு தான் என் அண்ணன் கிட்ட பேசு பேசுன்னு சொல்றேன். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. இன்னைக்கு சாயங்காலம் அண்ணன் தான் என்னைக் கூப்பிட வருவான். நீ என் கூட கேண்டீன் வா. உனக்கு பேச ஒரு மாதிரி இருந்தாலும் நீ என் கூட மட்டும் வா. அவனே உன் கிட்ட பேசுவான் பாரதி. இன்னைக்கு பேசி ஒரு முடிவுக்கு வாங்க”

“என்னது நேர்லயா?”, என்று அரண்டு போய் கேட்டாள் பாரதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!