Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 2 3

“என்ன இப்படிக் கேக்குற? அவன் என்ன பேயா பிசாசா? என்னைக்குனாலும் நீங்க அவன் கிட்ட பேசி தானே ஆகணும்? காலம் முழுக்க ரெண்டு பேரும் பேசாமலா குடும்பம் நடத்த போறீங்க? இன்னைக்கு நீ என் அண்ணன் கிட்ட பேசியே ஆகணும். இது உறுதி”

“ஐயோ வேண்டாம் சஹி. எனக்கு பயமா இருக்கு. பிளீஸ்”



Advertisement

“இதை நான் சொல்லலை பாரதி. இன்னைக்கு என் அண்ணனே உன் கிட்ட பேசணும்னு முடிவு பண்ணிருக்கான் போல?”

Advertisement

“என்ன சொல்ற நீ?”, என்று அதிர்வாக கேட்டாள்.

Advertisement

“ஏன்னா இன்னைக்கு காலைல உனக்கு எப்ப கிளாஸ் முடியும்? கிளாஸ் முடிஞ்ச உடனே பாரதி ஹாஸ்டல் போயிருவாளான்னு கேட்டான். அதனால இன்னைக்கு உங்க காதலுக்கு முடிவு தெரிஞ்சிரும். எனக்கு என்னமோ அவன் உன் கிட்ட பேசுவான்னு தோணுது”, என்று சஹானா உறுதியாக சொன்னதும் அன்று முழுவதுமே படபடப்பாக இருந்தாள் பாரதி.

Advertisement

அவன் என்ன பேசுவானோ என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் அவளுக்குள் கிளர்ந்து எழுந்தது. அவனை எதிர்க் கொள்ள பயமாகவும் இருந்தது. தன்னுடைய உடையை கூட எப்படி இருக்கிறது என்று ஒரு முறை பார்த்துக் கொண்டாள். ஓரளவுக்கு பார்ப்பது போல இருக்கவும் “பரவாயில்ல, கொஞ்சம் நல்லா தான் இருக்கு”, என்று மனதை தேற்றியவள் மதியம் ஹாஸ்டலுக்கு சாப்பிட சென்ற போது முகம் கழுவி இன்னும் பிரஷாக வந்தாள்.

அவன் சாயங்காலம் வருவதற்குள் அவளது இந்த முகப் பொலிவு போய்விடும் தான். ஆனாலும் முகம் கழுவி கண்ணாடியில் மாறி மாறி முகத்தைப் பார்த்துக் கொண்டாள். ரிஷியை எப்படி எதிர்க் கொள்ளப் போகிறோம் என்று அவளுக்கு பயமாக இருந்தது.

மதியம் அவள் கிளாசுக்கு வந்ததும் “என்ன அண்ணியாரே இன்னைக்கு முகமெல்லாம் கழுவிருக்கீங்க போல? என் அண்ணன் பாப்பான்னு தானே? இன்னைக்கு என் அண்ணன் பிளாட் தான் போ”, என்று கிண்டல் செய்தாள் சஹானா. அவள் கையை கிள்ளிய பாரதி “சும்மா இரு டி”, என்று அடி குரலில் சீறினாள்.

அன்று மாலையும் வந்தது. இருவரும் கிளாசை விட்டு வெளியே சென்றார்கள். மரத்தடியில் அவர்களுக்காக காத்திருந்தான் ரிஷி.

எப்போதுமே அவன் இப்படி வந்து காத்திருக்க மாட்டான். இன்று நிற்கவும் கண்டிப்பாக தன்னிடம் பேச தான் நிற்கிறான் என்று புரிந்து கொண்டாள் பாரதி. கால்கள் பின்ன சஹானாவின் கைகளை பற்றிய வாறே அவனை நோக்கிச் சென்றாள் பாரதி.

“பாத்தியாடி, அவனும் இன்னைக்கு நல்லா பிரைட்டா வந்திருக்கான். அது உன்னைப் பாக்க தான்”, என்று சிரித்தாள் சஹானா.

“ஐயோ நீ வேற படுத்தாத. எனக்கே பயங்கர டென்சனா இருக்கு”, என்று தவிப்புடன் சொன்னாள் பாரதி. அவள் தவிப்பை உணர்ந்த சஹானா அதன் பின் எதையும் சொல்லி அவள் டென்சனை ஏற்ற விரும்ப வில்லை.

அவன் அருகில் சென்றதும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திணறினாள். அவனோ அவளை ஆவலாக பார்த்தான்.

“எப்ப வந்த அண்ணா?”, என்று கேட்டாள் சஹானா.

“இப்ப தான் வந்தேன். அப்புறம் சஹானா”, என்று அழைத்தான் ரிஷி.

“என்ன அண்ணா?”

“கேண்டீன் போகலாமா? நான் உன் ஃபிரண்ட் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று ரிஷி நேருக்கு நேர் சொன்னதும் சந்தோசமும் குழப்பமுமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி.

“அப்பாடி இப்ப தான் உனக்கு இது தோணுச்சா? இன்னைக்காது கடவுள் உங்களை பேச வைக்கணும்னு நினைச்சாரே. ரொம்ப சந்தோஷம். சரி ரெண்டு பேரும் வாங்க. கேண்டீன் போகலாம்”, என்று சொல்லி சிரித்தாள் சஹானா.

பதட்டத்துடன் ரிஷியைப் பார்த்தாள் பாரதி. அவளைக் கண்டு அழகாக சிரித்தான் ரிஷி. அவனது சிரிப்பை அவ்வளவு ஆவலாக ரசித்தாள் பாரதி. அவன் சிரிப்பிலே ஒரு ஆதரவை அவள் உணர்ந்தாள்.

மூவரும் கேண்டீன் சென்று அமர்ந்ததும் “தயவு செஞ்சு இப்பவாது ரெண்டு பேரும் தெளிவா எல்லாம் பேசுங்க. நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன். கூட்டம் அலை மோதுது. நான் வர கால் மணி நேரமாவது ஆகும். பேச வேண்டியது எல்லாம் பேசிருங்க”, என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்று விட்டாள் சஹானா.

அவள் சென்றதும் இருவருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை.

“பாரதி”, என்று மென்மையாக அழைத்தான் ரிஷி.

“ஆன்… என்ன… என்ன?”, என்று பதறினாள் பாரதி.

“கூல் கூல் எதுக்கு இந்த பதட்டம்? நான் தானே?”, என்று கனிவாக கேட்டான்.

“அது… அது வந்து”, என்று திணறினாள்.

“என்னை நேருக்கு நேர் பார் பாரதி”

“என்னால முடியாது…”

“ஏன்?”

“கூச்சமா இருக்கு”

“இப்ப நீ பாக்கலைன்னா நான் இங்க இருந்து போயிருவேன்”, என்று ரிஷி சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி. அவன் கண்கள் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு நொடிக்கு மேல் அவன் கண்களை சந்திக்க முடியாமல் தலை குனிந்த பாரதி “பிளீஸ்…”, என்றாள். அவளுடைய வெட்கத்தை கண்டு சிரித்துக் கொண்டான் ரிஷி.

“உன்னோட வெட்கம் ரொம்ப அழகா இருக்கு பாரதி. நீயும் தான். உன்னை ரசிச்சிட்டே இருக்க ஆசை தான். ஆனா நமக்கு கொஞ்ச நேரம் தான் டைம் இருக்கு. அதனால பேச வேண்டியதைப் பேசிறேன்”, என்றதும் அவள் ஆவல் அதிகமானது.

“உன்னைப் பாத்த அந்த நிமிசத்துல இருந்து இப்ப வரைக்கும் நான் நானா இல்லை பாரதி. நீ என்னை ஒவ்வொரு நொடியும் கொன்னுட்டு இருக்க. உன் கிட்ட முன்னாடியே சொல்லணும்னு நினைப்பேன். ஆனா உன்னைப் பாத்தாலே எனக்கு வார்த்தை வராது. என்னைப் பாக்க முடியாம நீ தலை குனியுறதை எனக்கு ரசிக்கணும் போல தான் இருக்கும். கூடவே உன்னோட படிப்பு கெடக் கூடாதுன்னும் நினைச்சேன். ஆனா இனி சொல்லாம விட முடியாதே. உனக்கும் காலேஜ் முடியப் போகுது. அதனால தான் இன்னைக்கு நீ ஹாஸ்டல் போயிரக் கூடாதேன்னு சீக்கிரம் வந்தேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”, என்று நேரடியாக தன்னுடைய மனதில் இருப்பதைச் சொல்லியே விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் இதயம் எம்பிக் குதித்தது போல இருந்தது.  அவள் அமைதியாக இருக்கவும் “உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும் பாரதி. உன்னோட வீட்டைப் பத்தி சஹானா எனக்கு நிறைய சொல்லிருக்கா. கவலைப் படாதே நான் உனக்கு இன்னொரு அப்பாவா இருப்பேன்”, என்று சொன்னதும் அவள் சந்தோசத்தில் அழவே ஆரம்பித்து விட்டாள்.

அவன் ஐ லவ் யூ, நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லியிருந்தால் அது அவள் மனதை பாதித்திருக்காதோ என்னவோ? ஆனால் நேரடியாக கல்யாணம் பற்றி பேசியதும், இன்னொரு அப்பாவாக இருப்பேன் என்று அவன் சொன்னதும் அவள் மனதை தொட்டு விட்டது. அப்படியே அவன் பால் உருகிப் போனாள்.

“அழாத பாரதி, இனி உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரவே கூடாது. உங்க வீட்ல வந்து நான் பேசுறேன். என் அம்மா அப்பா வந்து உங்க வீட்ல பேசுவாங்க. உங்க அப்பாவும் சித்தியும் சம்மதிக்கலைன்னா உங்க மாமா கிட்ட பேசலாம் சரியா?”, என்று அவள் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு பேசினான் ரிஷி.

“நீங்க பேசுறதைக் கேட்டா சந்தோஷமா இருக்கு. ஆனா நடைமுறையை நினைச்சா எனக்கு பயமா இருக்கு”, என்றாள் பாரதி.

“பயமா ஏன்? நான் உன்னை ஏமாத்திருவேன்னு நினைக்கிறியா?”

“சே சே, நீங்க ரொம்ப பணக்காரங்கன்னு நான் சஹானாவை பாத்து தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா நான் அப்படி இல்லைல அதான்”

“எங்க வீட்ல அப்படி நினைக்க மாட்டாங்க. என் கிட்ட இருக்குறது எல்லாம் இனி நம்மளோடது பாரதி. நீ எதைப் பத்தியும் யோசிக்காத. எல்லாம் நான் பாத்துக்குறேன். சரி இப்ப நீ அடுத்து என்ன பண்ண போற? மேல படிக்க போறியா? இல்லை வேலைக்கு போக போறியா? இல்லை உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“சே சே, உடனே எல்லாம் எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க மாட்டாங்க. ஒரு ரெண்டு வருசமாவது ஆகும்.  படிக்கவா வேலைக்கு போகவான்னு நான் இன்னும் யோசிக்கலை”

“ரொம்ப நல்லதா போச்சு. எங்க அப்பா நான் மேல் படிப்பு படிக்க  என்னை ஜெர்மனி போக சொல்லி வற்புறுத்திட்டே இருக்கார். நான் போயிட்டு வரட்டுமா? நீ சொன்னா தான் போவேன்”

“அவ்வளவு தூரம்னா…..”, என்று அவள் கேள்வியாக இழுக்க அவனுக்கு அவள் தன்னை பிரிவதுக்கு கஷ்டப் படுகிறாள் என்று எண்ணி சந்தோஷமாக இருந்தது.

காதல் துளிர்க்கும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!