Skip to content
Post Views: 3,459
அவன் பேச்சில் உறைந்து போய் நின்றவள் அவன் அறையை விட்டு வெளியே போகவும் “ஏய் சாப்பிட்டு போ டா”, என்று சொல்லி விட்டு அந்த பக்கம் ஜெயா நடந்து வரவும் “சாப்பிட்டு போங்க”, என்றாள்.
அவளுடைய பேச்சைக் கேட்டு ரசித்து சிரித்தவன் “நீயும் வா சேந்து சாப்பிடலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.
Advertisement
கிரியுடன் அலுவலகம் வந்த ஸ்ரீராமுக்கு இருந்த அதிகப் படியான வேலையால் கொஞ்சம் மூச்சு திணறத் தான் செய்தது. அவன் இன்று இங்கே வந்தது ஜானகிக்காக தான். ஜானகியால் தன்னுடைய இயல்பு தொலைந்தது போல உணர்ந்தான். அவள் தன்னை ஆட்டுவிப்பது போலவே அவனுக்கு தோன்றி வைத்தது.
Advertisement
ஆனால் சிறிது நேரத்தில் அவன் அருகே வந்தான் கிரி. தம்பியின் மனநிலையை உணர்ந்தவன் அவனுக்கு ஏற்றவாறு வேலையின் நெளிவு சுழிவுகளை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
Advertisement
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும் பின் அவன் அதில் ஒன்றிப் போனான். ஏனோ அந்த நாளே பயனுள்ளதாக இருந்தது போல இருந்தது. மதிய உணவு இடைவேளையில் ஜானகியின் நினைவு வந்தது. அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது. இப்போது வரை அவனுடைய போனை அவள் அவனிடம் கொடுக்கவே இல்லை என்பதால் லேண்ட் லைனில் இருந்து அவளை தொடர்பு கொண்டான்.
Advertisement
தன்னுடைய போன் அடிக்கவும் அதை எடுத்து பேச ஆரம்பித்தாள் ஜானகி. “வேலை எல்லாம் எப்படி போச்சு டா? கஷ்டமா இருந்துச்சா?”, என்று உண்மையான அக்கறையில் அவள் கேட்க அந்த அக்கறை அவனுக்கு பிடித்திருந்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நல்லா தான் போகுது”, என்று அவளிடம் புன்னகையுடன் பேச ஆரம்பித்தான். அவன் பேசி முடித்ததும் அவள் கண்ணில் அவனுடைய போன் விழுந்தது.
இதை அவனிடம் கொடுக்க வில்லையே என்று கொஞ்சம் குற்ற உணர்வு வந்தது. அவனுடைய மற்ற நண்பர்களிடம் இருந்து அழைப்பு வரும் போது அவனிடம் கொடுப்பாள் தான். மற்ற நேரம் அது அவளிடம் தான் இருக்கும். அவனும் அதற்கு மேல் என் போனைக் கொடு என்று கேட்டு அவளை வற்புறுத்த வில்லை. அது தான் அவளுக்கு குற்ற உணர்ச்சியை கொடுத்தது.
அந்த குற்ற உணர்ச்சியை மீறி அதை அவள் அவனிடம் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த ரம்யா தான். இது வரை ரம்யா பல முறை அவனுடைய எண்ணுக்கு அழைத்து விட்டாள். அவள் அழைத்தால் அதை அப்படியே கட் பண்ணி விடுவாள் ஜானகி. ஆனாலும் அவள் அழைப்பு நின்ற பாடில்லை. இப்போது ஸ்ரீராமிடம் போனைக் கொடுத்தால் அவளிடம் பேசி விடுவானோ என்ற பயத்தில் தான் அதை இன்னும் தன் வசம் வைத்திருந்தாள்.
அந்த ரம்யாவை நினைத்து எரிச்சலாக வந்தது. “இவனே சும்மா இருந்தாலும் அவ சும்மா இருக்க மாட்டா போல? அதான் கட் பண்ணி விடுறேன்ல? அப்புறம் ஏன் திருப்பி திருப்பி கூப்பிடுறா? இதுல பேசு ஸ்ரீ பேசு ஸ்ரீன்னு மெஸ்ஸேஜ் வேற”, என்று கடுப்புடன் எண்ணிக் கொண்டாள். ரம்யா கால் பண்ணியதை இது வரை அவனிடம் அவள் சொல்ல வில்லை. அது தெரிந்தால் அவன் மீண்டும் அவளிடம் பேசுவானோ என்று வேறு பயமாக இருந்தது.
மொத்தத்தில் அந்த ரம்யாவால் தன்னுடைய சுயத்தை இழந்த ஜானகியின் மனதில் ராமின் மேல் அதிக உரிமை உணர்வும் எழுந்தது.
நாட்கள் அதன் போக்கில் அப்படியே கழிந்தது. இரண்டு ஜோடிகளும் அடிக்கடி சரவணன் மற்றும் அரசியையும் பார்க்கச் செல்வார்கள். இரண்டு மக்களின் வாழ்க்கை பெரியவர்களுக்கும் நிம்மதியைக் கொடுத்தது.
ஸ்ரீராம் கிரியுடன் சேர்ந்து வேலையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தான். ஜானகியோ அந்த வீட்டில் உள்ளவர்களை சந்தோசமாக வைத்திருந்தாள். அவளுடைய சேட்டைகளை அம்பிகாவே ரசிக்க ஆரம்பித்தாள்.
வேலை முடிந்து ஸ்ரீராம் வீட்டுக்கு வந்ததும் ஆள் ஆளுக்கு ஜானகியை பாராட்டும் போது மனைவியை எண்ணி பெருமை வந்தாலும் தன்னை மட்டும் கணவனாக எண்ணாமல் தள்ளி வைக்கும் அவளை நினைத்து அவனுக்கு சில நேரம் எரிச்சலாகவும் வரும்.
ஏனெனில் அறைக்குள் இருவரும் இருக்கும் போது அவள் அவனை அதிகம் கண்டு கொள்ளவே மாட்டாள். அவன் பார்வை அவளையே தொடர்ந்தாலும் அவள் அவனை திரும்பிப் பார்க்கவே மாட்டாள். அப்படியே பேசினாலும் அதில் தோழமை மட்டுமே இருக்கும். ஆனால் அவனுக்கோ அவளுடைய அருகாமை சில நேரம் தாபத் தீயை மூட்டி அவனை எரிய வைக்கும். அதை அணைக்கும் வழி தெரியாமல் அதே நேரம் அவளிடம் அதைக் காட்டி புதுப் பிரச்சனையை இழுக்க கூடாது என்று உறுதியாக இருந்தான்.
ஒரு நாள் சரவணனும் அரசியும் மகள்களை பார்க்க வந்திருந்தார்கள்.
அவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும் போது ரகுவிடம் அந்த விஷயத்தைச் சொன்னார் சரவணன் .
“எனக்கு மூணு கடையையும் பாக்க முடியலை சம்பந்தி. என்ன தான் ஆள் வச்சு பாத்தாலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அங்க விசிட் போக வேண்டியது இருக்கு. என்ன பண்ணன்னு தெரியலை. அதான் உங்க கிட்ட ஐடியா கேக்க வந்தேன். வித்துறலாமா?”
“என்னது இத்தனை நாள் கட்டிக் காத்த தொழிலை விக்குறதா? அது தப்பு சம்பந்தி. இப்ப என்ன? உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு வேணும் அப்படி தானே? உங்களுக்கு ரெண்டு பையன்கள் இருந்தால் இந்நேரம் என்ன பண்ணிருப்பீங்க? ஆளுக்கு ஒரு கதையைக் கொடுத்து பாக்கச் சொல்லிறுப்பீங்கல்ல? இப்பவும் அதையே பண்ணுங்க”, என்றார் ரகு.
“என்ன சொல்றீங்க சம்பந்தி?”
“யமுனாவும் ஜானகியும் ஆளுக்கு ஒரு கடையை பாத்துக்கட்டும். ரெண்டு பேரும் வீட்ல நேரம் போகாம சும்மா தான் சுத்திட்டு இருக்காங்க. அவங்க பொறுப்பா பாத்துப்பாங்க. நானும் அவங்க கூட சேந்து அதைப் பாத்துக்குறேன்”, என்று ரகு சொன்னதும் சரவணன் முகம் மலர்ந்தது.
ஜானகி மற்றும் யமுனாவிடம் கேட்க அவர்களும் சரி சென்று சொன்னார்கள். கிரி மற்றும் ஸ்ரீராமிடம் கேட்க அவர்களுக்கும் அந்த ஐடியா பிடித்திருந்ததால் அடுத்த நாளில் இருந்து யமுனாவும் ஜானகியும் ஆளுக்கு ஒரு கடைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
ஸ்ரீராம் ஜானகி வாழ்க்கை மட்டும் தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் ஆஃபிஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அப்போது அவளும் கடைக்கு கிளம்ப தலையை வாரிக் கொண்டிருந்தாள். எதற்கோ திரும்பி பார்த்த ஸ்ரீராம் குளித்து முடித்து புது மலர் போல நின்றவளை ரசித்துப் பார்த்தான்.
திடீரென்று அவனுடைய பார்வையைக் கண்டு கொண்டாள். அவன் பார்வை குழப்பத்தை விளைவிக்க “என்ன லுக்கு?”, என்று முறைத்த படி கேட்டாள். அவள் முறைப்பை பார்த்தவனுக்கு “இவ்வளவு அழகான மனைவியை பக்கத்துல வச்சிக்கிட்டு கொஞ்ச முடியலையே?”, என்ற எண்ணம் எழுந்து எரிச்சலைக் கொடுத்தது.
மனதில் எழுந்த தாபத்தைக் கட்ட முடியாமல் “ஆமா இவ பெரிய ரதி. இவளை ரசிச்சு பாத்துட்டாலும்? போடி”, என்றான் அவன்.
“ஆமா நீ மட்டும் பெரிய இவனோ? சரியான குரங்கு மூஞ்சு. நல்லா கண்ணாடில போய் பாரு. உன் மூஞ்சியை பாத்து அந்த ரம்யா லூசு தானா மயங்கும். மயங்க மாட்டேன்”, என்றாள். சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். சும்மா அவனிடம் வம்பிழுக்க தான் அவள் அப்படிப் பேசினாள். ஆனால் அவளையே அறியாமல் ரம்யாவைப் பற்றி பேசி விட்டாள்.
“இப்ப எதுக்கு டி அவளைப் பத்தி பேசுற?”, என்று எரிச்சலுடன் கேட்டான். இன்னும் இவள் தன்னை புரிந்து கொள்ள வில்லையே என்று அவனுக்கு வேதனையாகவும் இருந்தது.
“சாரி”, என்று ஜானகி முணுமுணுக்க அவன் வேறு ஒன்றும் பேசாமல் வெளியே சென்று விட்டான்.
அடுத்த நாள் அவனை சமாதானப் படுத்துவதற்காக “இன்னைக்கு லீவ் தானே? எங்கயாவது வெளிய கூட்டிட்டு போயேன்”, என்றாள் ஜானகி.
“எனக்கும் ரெஸ்ட்டே இல்லாத மாதிரி தான் இருக்கு. படத்துக்கு போகலாமா?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
அவள் சரி என்றதும் பெரியவர்களிடம் விஷயத்தை சொல்லி விட்டு யமுனா கிரியை அழைக்க அவர்கள் வர வில்லை என்று சொன்னதும் இவர்கள் மட்டும் கிளம்பினார்கள். எப்போதும் போகும் நினைவில் ஏற்கனவே ரம்யா உடன் சென்றிருந்த தியேட்டருக்கு தான் அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கே வந்ததும் ஜானகிக்கு பழைய நினைவுகள் மனதுக்குள் படையெடுக்க ஆரம்பித்தது. அவனை நிமிர்ந்து பார்த்தால் அவன் சாதாரணமாக இருந்தான். பின் உள்ளே சென்று அமர்ந்த பிறகும் அவன் கவனம் படத்தில் இருக்க அவள் கவனமோ அவன் மீதே இருந்தது.
ரம்யாவைப் பற்றிய நினைவுகள் அலைகளித்ததால் அவளால் நிம்மதியாக படம் பார்க்க முடியவில்லை. வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள். படம் முடிந்து வெளியே வந்ததும் “ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாம் ஜானு”, என்று சொன்னான் ஸ்ரீராம்.
அவளும் சரி என்று சொல்ல அருகில் இருந்த ரெஸ்டாரண்ட்க்கு சென்றார்கள். அவளுக்கு பிடித்த உணவை கேட்டு அவன் ஆர்டர் செய்தான். பின் அவன் சாதாரணமாக பேச ஆரம்பிக்க ஜானகியும் கொஞ்சம் அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆனாலும் அவள் மனது குழம்பிய படியே தான் இருந்தது.
சாப்பிட்டு முடித்து பில் வந்ததும் ஸ்ரீராம் அதற்கு பணம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு பேரர் சென்றதும் “அன்னைக்கு எதுக்கு ராம் அப்படி பண்ணின? பொதுவாவே பசங்க தான் பொண்ணுங்களுக்கு செலவு செய்வாங்க. அண்ணனா இருந்தாலும் சரி பிரண்டா இருந்தாலும் சரி, காதலன் கணவன் யாரா இருந்தாலும் சரி பசங்களுக்கு பொண்ணுங்க மேல ஒரு கேர் இருக்கும். ஆனா அன்னைக்கு நீ சாப்பிட்டதுக்கு கூட பில் கொடுக்காம போனல்ல? அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா இருந்துருக்கேன் அப்படி தானே? அதனால தான அப்படி பண்ணின?”, என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி விட்டாள் ஜானகி.
அவள் அப்படிக் கேட்டதும் அவனுக்கு என்னவோ போல இருந்தது. அவன் விளையாட்டுக்கு அவளை வெறுப்பேற்ற தான் அப்படிச் செய்தான். ஆனால் அது ஜானகியை இவ்வளவு வருத்தும் என்று அவன் எதிர் பார்க்க வில்லை.
அதற்கு இப்போது அவன் விளக்கம் கொடுக்க முயலும் போது அங்கே வந்தாள் ரம்யா.
“ஸ்ரீ, எப்படி இருக்க? உன்னைப் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு? எத்தனை கால் பண்ணினேன்? நீ ஏன் எடுக்கவே இல்லை? ஒரு மெஸ்ஸேஜ்க்கு கூட நீ ரிப்ளை பண்ணலை. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? நம்ம பிரண்ட்ஸ் கிட்ட உன்னைப் பத்தி கேட்டாலும் தெளிவா பதில் வரலை. அவங்க எல்லாரும் என் கிட்ட ஸ்ரீ பேசுறானேன்னு சொல்றாங்க. நீ என்னை மட்டும் தான் அவாய்ட் பண்ணுறியா ஸ்ரீ? அந்த அளவுக்கு நான் என்ன பண்னினேன்? என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டியா?”, என்று கேட்டாள். அவள் அப்படிக் கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
error: Content is protected !!